Wednesday 15 May 2013

போகப் போகத் தெரியும் - 53





   மீனா.. உனக்கு நல்ல அதிஷ்டம். எங்க யாருக்கும் கெடைக்கல. உன்னோட சேவையைப் பார்த்து கனடாவுல இருக்கிற ஊனமுற்றோருக்கான உதவி மையத்துல இருந்து உனக்கு அழைப்பு வந்திருக்கிறது. நீ அங்க போயி கொஞ்ச நாள் கழிச்சி.. உனக்கு விருப்பம்ன்னா.. அங்கையே இருந்திடலாம். உனக்குப் போக சம்மதம் தான..?"
   ஷார்மி கேட்டாள். மீனா பெருமூச்சு விட்டாள்.
   ஷார்மி.. உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்யிறோம். இத இங்க இருக்கிறவர்களுக்குச் செய்தால் என்ன? அங்கே போய்ச் செய்தால் என்ன? எல்லாமே எனக்கு ஒன்னு தான். இதுல சம்மதம், விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை." என்றாள் மீனா.
   உண்மை தான் மீனா.. ஆனால் நீ இந்த ரெண்டு வருஷமா சேவாவுல சேர்ந்து வேலை செய்யிற.. உனக்கு ஒரு மாற்றம் வேண்டும். அதற்காகத்தான் மதர் கிட்ட நா பேசி இந்த அழைப்பு உனக்கு கிடைக்கும் படி செய்தேன். நீ போ. உதவி செய்யிறவங்க ஒன்றும் செக்கு மாடு கிடையாது. ஒரே இடத்துல சுத்தி சுத்தி வருவதற்கு. உனக்கு நிச்சயமா மாற்றம் வேண்டும். அவசியம் நீ போய் வா. நான் மதர்கிட்ட போய்.. நீ சரின்னு சொல்லிட்டேன்னு சொல்லிடுறேன்."
   மீனா பதில் சொல்லவில்லை. அவள் கனடா போக வேண்டிய ஏற்பாடுகளை ஷார்மி கவனித்துக் கொண்டாள்.

   டிக்கெட் விசாவுடன் கூடிய பாஸ் போர்டைக் கொண்டு வந்து ஒரே மாதத்தில் நீட்டினாள். கிளம்புவதற்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது.
   ஷார்மி.. நா கனடாவுலேயே தங்கிடலாம்ன்னு இருக்கேன். உனக்குச் சரின்னு படுதா..?
   போய் பாரு. அங்கத்தியச் சூழ்நிலை உனக்கு பிடிச்சிருந்தா.. அங்கேயே தங்கிடு. உனக்கு அங்க இருக்கிற சேவா நிலையம் எல்லா உதவியையும் செய்யும். பயப்படாத." என்றாள்.
   அப்போ.. நா கடைசியா.. சக்திவேலுவையும் கண்மணியையும் ஒருமுறை போய்ப் பாத்துட்டு வந்திடட்டுமா..?"
   குரல் ஏக்கம் கலந்து வந்தது. ஷார்மி யோசித்தாள்.
   கர்த்தருடைய ஆசை அது தான் என்றால்.. போயிட்டு வா. மீனா நாளைக்கே நீ உன்னோட ஊருக்குப் போக ஏற்பாடு செய்யுறேன். ஆனால் அவசியம் தானான்னு நீ இன்னைக்கி இரவுக்குள்ள முடிவு பண்ணிடு." என்றாள் யோசனையுடன்.

   இரவு இரயில் டிக்கட்டைக் கொடுக்க வந்தவளிடம் சொன்னாள்.
   ஷார்மி.. நா போறது சரியான்னு எனக்குத் தெரியல. ஆனா.. போகணும். அவரோட சந்தோஷத்த பாக்கணும். அந்தக் காட்சியை அப்படியே கண்ணுக்குள்ள வச்சிக்கினு காலமெல்லாம் அதுக்காகவே வாழணும். ஆனால்.. அவர பாக்காமலேயே போய்விட்டால்.. காலமெல்லாம் ஏக்கத்தோட வாழ வேண்டியிருக்கும். நான் போய் அவர், கண்மணி, என்னோட பிரண்ஸ், எல்லாரையும் பாத்துட்டு வந்திடுறேன்." என்றாள்.
   ஷார்மி எதுவும் சொல்லாமல் டிக்கெட்டை நீட்டினாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   மேடாம்.. ஊருக்குள்ள திருவிழா. வண்டி இதுக்கு மேல போவமுடியாதுங்க.." டாக்சி ஓட்டுநர் சொன்னார். மீனா கண்களை மூடிக் கொண்டு நடந்தவைகளை அசை போட்டபடி வந்தவள்.. இதை கேட்டதும் கண்களைத் திறந்தாள். வண்டி ஆத்தூர் கோவிலுக்கு அருகில் நின்றிருந்தது.
   மிட்டாய்க் கடைகள் பொறிகடலை வண்டிகள் அல்வா கடை வண்டிகள்.. என்று பாதையை அடைத்திருந்தன. கோவிலுக்கு அருகில் பெரிய இராட்டிணம் சுற்றி கொண்டிருந்தது. குழந்தைகளுடன் பெரியவர்களும் சந்தோஷமாக விளையாடினார்கள்.
   மீனாவிற்கு இந்த மாதம் தான் என்ற எண்ணமில்லை. ஆனால் அவள் வந்த நேரம் திருவிழா நேரம்! மனம் சந்தோஷப் பட்டுக் கொண்டது. டாக்சிக் காரருக்குப் பேசிய பணத்தைக் கொடுத்துவிட்டுத் தனது தோள் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு சக்திவேல் வீட்டை நோக்கி நடந்தாள்.
   சூரியன் தனது வேலையை முடித்துவிட்டு இளைப்பாருவதற்காக மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தான். மீனா தனக்கு முன் விழுந்த நிழலை மிதிக்க முயற்சித்துத் தோற்றுப் போனாள். அவளுக்குத் தெரியும்! இது முடியாத காரியம் என்று! இருந்தாலும் அப்படிச் செய்து கொண்டே நடந்தாள். காரணம் நிமிர்ந்தால் யாராவது தெரிந்தவர்கள் முகத்தில் விழிக்க நேரிடும். அது இப்போழுது வேண்டாம் என்ற எண்ணம் அவளை அப்படி நடக்கச் செய்தது.
   சக்திவேலுவின் வீட்டினுள் நுழைந்தாள். அலுவலக அறையில் நடுநயமாக சக்திவேல் அமர்ந்திருக்க அவனைச் சுற்றி நிறைய ஆண்கள்.
   மீனாவைக் கண்டதும்.. எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி! ஆச்சர்யம் கண்களில் கேள்வியாக வந்து நின்றது. யாரும் அவளை வா" என்று அழைக்கவில்லை. அவள் இதை எதிர்பார்த்து தான் இருந்தாள். முகத்தில் புன்முறுவலுடன் சக்திவேல் எதிரில் போய் நின்றாள்.
   எப்படி இருக்கிறீங்க..?" அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். அவன் கண்களில் தெரிவது கோபமா..? கவலையா..? அதிர்ச்சியா..? ஆனந்தமா..? எதையுமே இனம் கண்டுபிடித்துவிட முடியவில்லை அவளால்.
   ஞானிகளின் முகத்தைப் போல் இருந்தது. அவர்கள் தான் உடலை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு மனத்தால் தன் மனத்துடன் பேசுபவர்கள்.
   ஆனால்.. தன் மனத்தை மாற்றிக் கொள்ளாமல் உலகத்தை மாற்ற விரும்புவார்கள்!
   என்ன அப்படியே பாக்குறீங்க..? கண்மணி எப்படி இருக்கா..? அவளைப் பாக்கத்தான் வந்தேன்." என்றாள்.
   அவன் கண்களில் கேள்வியுடன் ஆச்சர்யம்! அடுத்தது கோபம். சட்டென்று எழுந்து எதுவும் சொல்லாமல் வெளியே போய் விட்டான். அவள் இதை எதிர் பார்த்தது தான். இருந்தாலும் அவனுடைய அலட்சியம் அவளைக் காயப்படுத்தியது. திரும்பித் தன் நண்பர்களைப் பார்த்தாள்.
   எப்படி இருக்கிறீங்க? ஆமா.. சசிதரன் எங்க..?" கண்கள் தேடியது. அவர்கள் எதுவும் பதில் சொல்லவில்லை. அவர்களின் செயல் அவளைப் பயமுறுத்தியது. கோபமாகக் கேட்டாள்.
   சசி எங்கன்னு தானே கேட்டேன்..?"
   உள்ளத்தான் இருக்கான். வருவான்." அவளின் பயத்தை உணர்ந்த சிவா சொன்னான். மனம் கொஞ்சம் அமைதியானது. சற்று நேரத்தில் சசிதரன் வந்தான். மீனாவைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.
   நீயா..? எதுக்கு இப்போ வந்த..? நாங்க சந்தோஷமா இருக்கறது ஒனக்கு புடிக்கலையா..? சே."
   அவனுடைய வார்த்தைகள் திராவகமாகச் சுட்டது.
   மீனா அவனைச் சற்று நேரம் பார்த்தாள். சசி பயப்படாத. நா யாரோட சந்தோஷத்தையும் கலைக்க வரல. எனக்குக் கனடாவுல வேல கெடச்சிருக்குது. நா போயி அங்கேயே செட்டிலாயிடுவேன். அதுக்கு முன்னாடி உங்க எல்லாரையும் பாத்துட்டுப் போலாம்ன்னு தான் வந்தேன்." என்றாள்.
   அப்போ.. இப்பவும் திரும்பிப் போற எண்ணத்துல தான் வந்திருக்கிற இல்ல..? அதுக்கு ஏன் வந்து தொலைஞ்ச..? வராமலேயே இருந்திருக்கலாம் இல்ல..? சே. உன்னோட முகத்துல முழிக்கவே புடிக்கல. போ எப்படியாவது."
   கோபமாக வெளியேறினான். அவன் பின்னாலேயே அனைவரும் வெளியேறினார்கள். மீனா ஒரு நிமிடம் கண்களை மூடினாள். பிறகு அகிலாண்டேசுவரியின் அறையை நோக்கி நடந்தாள். அவர் என்னவென்று திட்டு வாங்களோ..? பேசுவாங்களா..? மாட்டாங்களா..? எதுவா இருந்தாலும் பார்க்கலாம். முடிவுடன் சென்றாள்.
   நம்பிக்கையை இழந்து விடுவதைவிட எதிர்பார்ப்புடன் இருப்பது நல்லது தானே..!
   அவள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அவர் ஆசையுடன் தன் மருமகளை அழைத்து அருகில் அமர வைத்தாள்.
   நீ வருவேன்னு நா நிச்சயமா எதிர் பாத்துக்கினே இருந்தேன். என் வேண்டுதல் வீண் போகல." முகத்தை வழித்து நெட்டி முறித்தாள்.
   கண்மணி எங்க..?"
   கண்மணியா.. காலையில இங்க தான் இருந்தா. மத்தியானத்துக்கு மேலத்தான் அவ அப்பா வந்து அழைச்சிக்கினு போனாரு."
   திருவிழா நேரத்துல எதுக்கு அப்பா வீட்டுக்கு போவணும்..?"
   அவளுக்கு பேறு காலம்மா.. இன்னும் மூனு நாலு நாள்ல கொழந்த பொறந்திடும். ஏற்கனவே வளைகாப்பு முடிஞ்சி அம்மா வீட்டுல தான் இருக்கா. என்ன அவளுக்கு இங்க இருக்கத்தான் புடிக்குது. ஆனா நாளைக்கி தேர் ஊர்வலம் இல்லையா..? கர்ப்பினி பொண்ணு தேர் பாக்கக் கூடாதுன்னுட்டு அவ அப்பா வந்து கூட்டிக்கினு போயிட்டாரு."
   அகிலாண்டேசுவரி சொன்னதைக் கேட்க மனதுக்கு இதமாக இருந்தது. தன்னுடைய தியாகம் எதுவும் வீண்போகவில்லை. உண்மையான தியாகங்கள் எப்போழுதும் வீண் போவதில்லைத் தானே.. எதையாவது ஒன்றைப் பெற எதையாவது ஒன்றை இழக்கத்தான் வேண்டி உள்ளது.
   மீனா.. மனத்தால் கடவுளுக்கு நன்றி சொன்னாள். கடவுள் நல்லவர்களைச் சோதிப்பார்.  கைவிட மாட்டாரே..!!

                          (தொடரும்)

1 comment :