Monday 3 June 2013

போகப் போகத் தெரியும் – 57





   இரவு வெகுநேரம் கழித்துவிட்டு வீடு வந்த கணவனை மீனா ஆவலுடன் வரவேற்றாள். கையலம்பிவிட்டுச் சாப்பிட வாங்க.." என்றாள். அவன் வருவதற்குள் தட்டில் இட்டிலிகளை வைத்துப் பக்கத்தில் தக்காளிச் சட்டினியை ஊற்றினாள்.
   அவன் இவள் செய்கையை ஆச்சர்யமாகப் பார்த்தபடி அவளெதிரில் அமர்ந்தான். இட்டிலியைப் பிட்டுச் சட்டினியில் தொட்டு வாயில் வைத்தான்.
   கொழந்தையப் பாத்தீங்களா..? எப்படி இருக்கான்..? யாரோட ஜாடை..?
   அவளுடைய செய்கைகளின் காரணம் புரிந்தது. அவன் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
   கேக்கறனில்ல..? கொழந்த எப்டி இருக்குது..?
   நல்லாத்தான் இருப்பான்.."
   இருப்.. பானா..? அப்போ.. நீங்க கொழந்தையப் பாக்கலையா..?
   இல்ல."
   ஏன்..?
   நீ பாக்க விரும்பாத ஒன்ன எனக்கும் பாக்க இஷ்டமில்ல."
   என்னங்க இப்டி பேசுறீங்க..? கண்மணி உங்கள பத்தி என்ன நினைப்பா..?"
   எதாவது நெனைச்சிக்கட்டும். எனக்குக் கவல இல்ல."
   எழுந்து போய் கையலம்பிவிட்டு அவளது அறைக்குள் நுழைந்து விட்டான். இவள் அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.
   என்ன இப்படி பேசுகிறார்..? இது சரியாகப் படவில்லையே.. என்னவாக இருக்கும்..? ஏதாவது சண்டை போட்டுக் கொண்டார்களா..? என்ன சண்டையாக இருந்தாலும் குழந்தை பிறந்திருக்கும் போழுது சண்டையையா பெரிசு படுத்துவார்கள்.? முடியாதே.. ஒரு சமயம் நாம் இங்கே வந்ததால் குழப்பமா..? அதனால் அவர்களுக்குள் பிரச்சனை பெரியதாகி இருக்குமோ..!
   இருக்கலாம். தன்னால் தான் அவர்களுக்குள் பிரச்சனை. அன்று கண்மணியின் அம்மா.. தன் மருமகனைப் பொருமையாகப் பேசினார்கள். அப்பொழுது அவர்கள் சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும். நாம் இந்த ஊருக்குள் வந்ததும்.. ஏன் இப்போ வந்த..? எதுக்கு வந்தே?ன்னு தான் ஒவ்வொருத்தரும் கேட்டார்கள். யாரும் முகம் கொடுத்துக் கூடப் பேசவில்லை. நண்பர்கள் கூட ஏதோ பேசவேண்டுமே என்ற கட்டாயத்தில் பேசினார்கள். சேகர் இன்னமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை!
   நாம் வந்திருக்க வில்லையென்றால் அவர்கள் எப்பொழுதும் போல இருந்திருப்பார்கள். இப்பொழுது அனைவருக்குமே பிரச்சனை! நாம் இங்கே வந்திருக்கவே கூடாது. கிளம்பிவிட வேண்டும்.
   ஏய் மீனா.. இன்னும் அங்க என்ன பண்ணுற? வா இங்க.." சக்திவேல் அதிகாரமாகக் கூப்பிட்டான்.
   ஆண்களுக்கே குரல் அதிகாரமாகத் தான் வருமா..? அல்லது அதிகாரமாகக் கூப்பிடுவது போல் நடிக்கிறார்களா..? இல்லை.. பயமுறுத்துகிறார்களா..?
   மீனா விளக்கை அணைத்துவிட்டு அறையில் நுழைந்த போழுது அவன் கட்டிலில் ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் மடித்து வைத்தான்.
   என்ன.. மகாராணியை அழைத்தால் தான் வருவீங்களோ..?" சிரித்துக் கொண்டே கேட்டான்.
   அவள் பேசாமல் நின்றிருந்தாள். தான் மிகப் பெரிய தவற்றைச் செய்து விட்டோமோ என்று மனது உருத்தியது. அவன் அவள் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைத்தான்.
   கேட்டு விடலாமா..? கேட்டாள்.
   ஏங்க.. உங்களுக்கும் கண்மணிக்கும் ஏதாவது சண்டையா..?"
   அவன் அவளை யோசனையுடன் பார்த்தான்.
   அப்படி எந்தச் சண்டையும் கெடையாது. மூனுருக்காரங்களும் எந்த சண்டையுமில்லாம தான் இருக்கோம். தேனப்பன் தான் இன்னும் மொறண்டு புடிச்சிக்கினு.. சரி. அதவிடு. மத்தபடி சமாதானமாத்தான் இருக்கோம். போதுமா.."
   நா அதுக்குக் கேக்கலங்க. நா வந்ததால.. ஏதாவது கொழப்பமான்னு தான் கேட்டேன்."
   நீ வந்ததால கொழப்பமா..? சேச்சே.. எல்லாருக்குமே சந்தோஷமா இருக்குது. ஆனா.. உன்னோட ப்ரெண்சு தான் கோவமா இருக்காணுங்க." பேச்சின் திசை மாறியது.
   ஆமாங்க. சேகர் இன்னும் ஒரு வார்த்தக் கூட எங்கிட்ட பேசல. காலையில கூட வந்தான். அம்மாகிட்ட மட்டும் பேசினான். போயிட்டான்." கவலையாகச் சொன்னாள்.
   போறான் வுடு. காலையில போயி கொஞ்சம் சமாதானமா பேசேன். ஒடனே பேசிடுவான். அவனப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஆனா சரவணனும் மாதவனும் தான் இல்ல. இருந்திருந்தா.. மாதவன் கட்டாயமா.. உன்ன தனியா இருந்திருக்கவே விட்டிருக்க மாட்டான். ப்ச்சி.. அவனுங்க கூட இருக்க எனக்குக் கொடுத்து வக்கல."
   முகமும் குரலும் சோகமாக இருந்தது. பெற முடியாத ஒன்றை இழந்து விட்டால்.. அந்த இழப்பைச் சாகும் வரையில் வேறு ஒன்றால் ஈடுசெய்யவே முடியாது.
   மீனா பெருமூச்சுடன் தன் அடிவயிற்றைத் தடவிக் கொண்டாள். அங்கே அமைதி நிலவியது. ஒவ்வொரு மனமும் அதனுடனேயே பேசிக் கொண்டது. தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள ஒரே வழி தான் இது.
   ஆனால் அடுத்தவரையும் சமாதானப் படுத்த வேண்டுமே.. எழுந்து போய்க் கதவைத் தாழ்பாள் போட்டுவிட்டு விடிவிளக்கைப் போட்டுவிட்டுக் கொட்டாவி விட்டுக் கொண்டே.. அவனருகில் வந்து படுத்தாள்.
   என்ன.. அம்மணிக்கு அதுக்காட்டியும் தூக்கம் வந்துடுச்சா..? எனக்கு வரலப்பா.."
   அவளை இழுத்து தன் மார்போடு அணைத்தான். விடி விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தைக் கண் இமைக்காமல் பார்த்தான். அவளுக்கு வெட்கமாகிப் போக முகத்தைத் திருப்பினாள்.
   மீனா.. நீ முகத்தைத் திருப்பினதும்.. இந்த இடமே இருண்டு போனது போல இருக்குது." என்றான்.
   அவள்  களுக்“ கென்று சிரித்தாள். அவன் அவளின் பற்களைப் பார்த்துச் சொன்னான்.
   ஒன்னோட பல்லெல்லாம் வானத்து நட்சத்திரங்கள கொண்டு வந்து சொறுகி வச்சது மாதிரி மின்னுது. வைரத்தூளால பல்லு வெளக்குவியா என்ன..?
   அவள் அவன் விரலைக் கடித்தாள். அவன்  ஆய்“ என்று கையை உதரினான்.
   இந்த வெளிச்சத்துல பல்லு மட்டும் தான் தெரியும். இதுக்காக வைரத்த போட்டு பல்லு வெளக்கணுமா..?
   ஏன்..? இந்தப் பல்லு மட்டுமா தெரியுது..? இந்தக் கண்கள்..? கவிஞர்கள் மீன், கருவண்டு, நாவல்பழம், கருதிராச்சைன்னு எல்லாம் வர்ணிச்சி இருக்காங்க. ஆனா.. உன்னோட கண்ணை எதுக்கு ஒப்பிட்டு சொல்லுறதுன்னே தெரியல. வர்ணம் கொண்டு எழுதாத ஓவியம்ன்னு சொல்லலாம். இந்த உதடு.."
   என்ன..? திடீர்ன்னு கவிஞனா ஆயிட்டீங்க..?"
   அழகான பொண்டாட்டி அமைஞ்ச எல்லா ஆண்களுமே கவிஞர்கள் தான். அவர்களோட மன ஏட்டில் எண்ணமுடியாத அளவுக்குக் கவிதைகள் குவிஞ்சி இருக்குது. ஆனா.. வெளிய சொல்லத் தெரியாது."
   ஆனா.. எனக்கு இது அதிகப்படியா தெரியுது."
   உப்புக்கல்லை வைரம்ன்னு சொன்னர் அது அதிகப்படி.. ஆனா ஜொலிக்கிற வைரத்தை புகழலாம் இல்லையா..?"
   ஐயோ.. வேண்டாமே.."
   சரி. புகழல. ஆனா.. அணிந்து அனுபவிக்கிறேன்." சொல்லிக் கொண்டே இறுக்கி அணைத்துத் தழுவினான்.

-----------------------------------------------------------
   மீனா தலைகுளித்து ஈரம் காயாத கூந்தலைத் துண்டுடன் சேர்த்து கொண்டையாகக் கட்டிக் கொண்டு பூஜைக்குரிய புது மலராக வந்து கணவனிடம் காபியை நீட்டினாள்.
   அவன் பார்வை உடலைத் தழுவியதால் நெளிந்தாள். அவன் காபியை வாங்காமல் கையைப்பிடித்து இழுத்தான்.
   என்ன இது.. காலையில? நா இப்பத்தான் குளிச்சேன்." சிணுங்கினாள்.
   அதனால தான் ஆசையா இருக்குது." அவனுடைய கைகள் அவளுடலில் விளையாடின. அந்த விளையாட்டு அவளுக்கும் பிடித்திருந்தது. ரசித்தாள். அனுபவித்தாள்.

  ----------------------------------------------------------

   யாரிடம் இருந்து யார் பெறுவது காமச்சுகம்? புரியாத கேள்விக்கு விடைத்தெரியாத பதில் தான் காமம்!
   ஆனால்.. இந்தக் காமச்சுகத்திற்கு விலை உண்டு. அர்த்தம் உண்டு. பரிசு உண்டு! அந்தப் பரிசு தானாகக் கிடைக்கிறதா..? அல்லது விருப்பப்பட்டு வாங்கிக் கொள்வதா..? அல்லது கொடுக்கப் பட்டதா..?
   அது எதுவாக இருந்தாலும் தனக்கு அந்தப் பரிசு கிடைக்கப் போவதில்லை.
   ஒரு பெண்ணிற்கு அழகு அறிவு குணம் இருந்து என்ன பயன்..? குழந்தை இல்லாதது முழுமை பெறாத வாழ்க்கை தானே..! ஏக்கத்துடன் தலை துவட்டினாள்.
   சக்திவேல் இவள் எண்ணத்தை உணராமல் பின்புறமாக வந்து கட்டியணைத்தான். என்ன.. திரும்பவும் குளிச்சியா..? இந்த மாதிரி ஒவ்வொரு முறையும் குளிக்கணுமின்னா.. நீ ஒரு நாளைக்கி பல முறை குளிக்க வேண்டி இருக்கும்." என்றான்.
   அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தது. பெருமூச்சுடன் சிரித்துக் கொண்டாள். தொலைபேசி அழைத்தது. போய்ப் பேசிவிட்டு வந்தான். உடனே மீனாவிற்கு நேற்றைய ஞாபகம்! யாரோ ஆனந்தி டெலிபோன் செய்தாளே..  கணவனிடம் சொன்னாள். அவன் கண்களில் ஆயிரம் மின்னல்கள்!
   எப்போ பேசினாங்க..?"
   நேத்து காலையில. நா தான் சொல்ல மறந்துட்டேன்."
   என்னம்மா நீ.." சொல்லிக் கொண்டே அவசரமாகப் போனான். அவனையே அவள் பின் தொடர்ந்தாள்.
    தொலைபேசியில் பேசிய அவனது வார்த்தைகள் அனைத்தும் ஆச்சர்யத்தைக் காட்டியது.
   அப்படியா.. எப்போ.. நேத்து காலையில.. இன்னைக்கேவா.. ஏன்.. ஓகே.. ஒடனே வர்றேன்.
   இதைத் தான் பேசினான். தொலைபேசியை வைத்து விட்டு வந்தவன் சந்தோஷத்தில் மீனாவைத் தூக்கி இரண்டு சுற்றுச் சுற்றிவிட்டு கீழே இறக்கினான்.
   அவளது மாமியார், அறிவழகி, சேகர் அனைவரும் இருந்தார்கள். மீனாவின் முகம் வெட்கத்தால் சிவந்து விட்டது.
   மீனா.. நீ எங்கிட்ட இருந்தாலே.. எனக்கு எல்லா சந்தோஷமும் நிம்மதியும் கெடைச்சிடுதுடா. நீ எனக்கு அதிஷ்ட தேவதை. மீனா.. நா ஒனக்கு ஒரு பரிசு தரப்போறேன். அந்தப் பரிச நீ உயிருள்ள வரைக்கும் மறக்க மாட்ட." என்றான்.
   மீனாவிற்கும் அவன் வார்த்தைகள் சந்தோஷமாகத் தான் இருந்தது.
   எப்போ தருவீங்க? எதைத் தரதுன்னாலும் இன்னைக்கி பன்னென்டு மணிக்குள்ள தந்துடுங்க. அப்புறம் மணியாயிடும்."
   ஏன்..? ஏதாவது கெட்ட நேரம் வந்திடுமா..?"
   இல்லங்க. கெட்ட நேரம் போயிடும். எனக்கு ரெண்டு மணிக்கு ட்ரெய்ன். நா பன்னென்டுக்கெல்லாம் கிளம்பினால் தான் ட்ராப்பிக்குல போய் சேர சரியா இருக்கும்."
   அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்!!

                              (தொடரும்)

No comments :

Post a Comment