Sunday, 10 February 2013

போகப் போகத் தெரியும் - 38

   ஆரத்தி எடுத்தார்கள். குங்குமக் குழம்பானக் குளத்தில்.. மிதக்கும் இலைக்கு நடுவில் நெருப்புத் தாமரையாகக் கற்பூரம் எறிந்தது. நீர்திலகமிட்ட பின்பு 'உள்ள வா மீனா.." சொல்லிக் கொண்டே சக்திவேல் வீட்டினுள் நுழைந்தான்.
   மீனா வாசல்படிக்கு அடுத்தப் பக்கமாக நின்று கொண்டே இருந்தாள். 'வலதுகால எடுத்துவச்சி உள்ள வாம்மா.." மாதவனின் தாய் அழைத்தாள். மீனா நின்று கொண்டே இருந்தாள்! உள்ளே போன சக்திவேல் திரும்பி அவளைப் பார்த்தான். கண்களில் கேள்வியுடன்.
   'கூப்பிட வேண்டியவங்க வந்து கூப்பிடட்டும்." அழுத்தமாகச் சொன்னாள். அவள் யாரைச் சொல்கிறாள் என்று புரியாதவனாகப் பார்த்தான்.
   'அதான் ஒன்னழக காட்டி எம்புள்ள கையால தாலி கட்டிக்கினியே.. இன்னும் இன்னா வேணுமாம்..? அவளையே உள்ளாற வரச் சொல்லு." அகிலமண்டேசுவரியின் குரல் மட்டும் வந்தது.
   மீனா பேசாமல் நின்றிருந்தாள். முகத்தில் எள்ளைப்போட்டால் வெடித்துவிடும் அளவு சூடேறிச் சிவந்து இருந்தது.
   'மீனா புடிவாதம் புடிக்காத. உள்ள போ. ஒன்ன யாரும் கூப்ட வேண்டிய அவசியம் இல்ல. இது ஒன்னோட வூடுமா இனிமே.." கூட்டத்தில் ஒரு பெண் சொன்னாள்.
   'இன்னும் ரெண்டு நிமிஷம் இங்க நிக்கிறேன். அவங்க வந்து என்ன கூப்பிடலன்னா.. நா இப்படியே போயிடுறேன்."
   இரண்டு நிமிடம் சீக்கிரத்தில் கரைந்து போனது. மீனா திரும்பிப் படியில் இறங்கப்  போக..
   'மீனா.. உள்ள வா.." அகிலாண்டேசுவரி அம்மாள் கையில் ஆரத்தியுடன்! சக்திவேல் அவளருகில் வந்து நிற்கச் சுற்றினாள்.
   'ஒனக்காக இல்லடீ. எம்புள்ளைக்காகத் தான். உள்ள வா." சுற்றிய நீரைத் தொட்டு நெற்றியிலிட்டாள்.
   மீனா உள்ளே வரவும் தொலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. எடுத்து பேசிய மாதவன் மீனாவிடம் கொடுத்தான்.
   'ஆமாம் டாக்டர். நேத்து ஒரு சின்ன ப்ராபளம். அதனாலத் தான் டெலிபோன் பண்ண முடியல. இல்ல டாக்டர். இன்னம் கொஞ்ச நேரத்துல நா வந்துடுறேன். ஓ கே டாக்டர். ம்.. பாக்கலாம்.."
   பேசிமுடித்தவள் தொலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு திரும்பிச் சக்திவேலுவைப் பார்த்தாள்.
   இப்பொழுது அனைவரின் பார்வையும் அவள் மேல் தான்!
   'என்ன அழைச்சிக்கினு போய் க்ளீனிக்குல விட்டுடுறீங்களா..?"
   'எதுக்கு..?"
   'என்ன இது கேள்வி? நா அங்க வேல செய்யிறன்;."
   'ஆமா.. வேல செஞ்சத்தான். அது வேற விசயம்;. ஆனா இப்போ நீ என்னோட  பொண்டாட்டி. என்னோட பொண்டாட்டிய என்னால இனிமே வேலைக்கி அனுப்ப முடியாது."
   'சக்திவேல்.. நீங்க எனக்குத் தாலிய கட்டிட்டதால என்ன அடிமை படுத்த முடியாது. ஆமா.. உங்கள யாரு எனக்குத் தாலி கட்ட சொன்னது..? நீங்களும் அந்த வேந்தன போலத் தான நடந்துக்கினீங்க..!
   அவள் சொல்ல அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான் சக்திவேல்!!
----------------------------------------------------------------------------------------------------------------        

   வார்த்தைகள் வெளியில் வந்தால் தான் நியாயமான உண்மைகளை விளங்கச் செய்ய முடியும்!
   வேந்தன் மீனாவிற்கு கைகளைக் கட்டி இரண்டு பேர் பிடித்து கொள்ளத் தாலியைக் கட்டினான். சக்திவேல் இப்படியெல்லாம் வற்புருத்தாமல் தாலியைக் கட்டினாலும் அவளைக் கேட்காமலேயே செய்தான். தவறு தானே?
   தவறு தான்! அவன் அவளிடம் மட்டுமா கேட்காமல் தாலியைக் கட்டினான்? 'என் மகன் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கிறா. இத மனசுல வச்சிக்கோ. பணத்துக்காக எம்மவன் தான் உம்புருஷன்னு சொல்லிகிட்டுத் திரியாத." என்று சொல்லிய அகிலாண்டேசுவரியின் ஆணையை மீறி.. அதிலும் இன்னும் இரண்டு வருடம் கழித்துத் தான் திருமணம் நடத்த வேண்டும் என்று ஜாதகம் சொல்லியதால்.. ஜோசியர் வாக்கு தான் தெய்வ வாக்கு என நினைத்து வாழும் அவன் அன்னையையும் அல்லவா மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறான்!
   இது மிகப் பெரிய தவறு இல்லையா..? இங்கே அவள் சொல்லித் திட்டியதை வெளிச்சம் போட்டா காட்ட முடியும்? நடந்தது நடந்து விட்டது என்று சாதாரணமாக எண்ணிக்கொள்ள நினைத்தாலும் அந்த அம்மாள் வாயில் விழுந்து அரையப் போவது அவள் தானே..!
   அதனால் வந்த பயம். மனத்தில் இருந்த ஆசைகளையும் மீறி ஆவேசமாக வந்து விழுந்த வார்த்தைகள்!
   'நீங்களும் அந்த வேந்தனை போலத் தானே நடந்துக்கினீங்க?"
   சக்திவேல் அவள் நினைத்தது போல் அதிர்ச்சியடையவில்லை. நிதானமாகக் கேட்டான்.
   'நானும் அந்த வேந்தனும் ஒன்னா..?"
   'ஆமாம். எனக்குன்னு எவ்வளவோ லட்சியங்க எதிர்பார்ப்புகள் இருக்குது. உங்க குடும்பத்துலேயும் நெறைய எதிர்ப்பு இருக்குது. அப்டி இருக்கும் போது நீங்க எதுக்காக என்ன கேக்காம எங்கழுத்துல தாலிய கட்டினீங்க?"
   'உன்னோட லச்சியம் என்ன? படிக்கிறதுதான..! படி. எதிர்பார்ப்பு என்ன..? மத்தவங்களுக்கு சேவை செய்யறது தான..? அத இந்த ஊர்காரங்களுக்குச் செய்யி. என்னோட குடும்பத்துல எனக்கு எதிரா யாரும் நடந்துக்க மாட்டாங்க. போதுமா..? உனக்கு வேற என்ன வேணும்..?" நிதானமாகக் கேட்டான்.
   ஆடுகிற மாட்டை ஆடித்தான் கரக்க வேண்டும். ஆனால் ஆவேசம் வந்தவளை.. அமைதியாகவே அடக்கலாம்.
   'எனக்குச் சுதந்திரம் வேணும். இந்த மாதிரி தாலிக்கெல்லாம் என்னால அடிமையா வாழ முடியாது. நா எப்போதும் போல வேலைக்கி போவணும்." வார்த்தைகள் நெருப்புத் துண்டுகளாக..
   சக்திவேல் யோசனையுடன் அவளைப் பார்த்தான். 'அவ இப்டிபட்ட திடிர் கல்யாணத்துக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டா.. பின்னாடி ஏதாவது பிரச்சன வரப்போவுது.." என்று சொன்ன நண்பர்களின் பேச்சையும் மீறித்தான் தன் தாயின் அனுமதியுடன் அவளுக்குத் தாலிக் கட்டினான்!
   அவள் எப்பொழுது ஓடத்தூரில் மாட்டிக் கொண்டாளோ.. இனி அவள் தன்னுடன் இருப்பது தான் பாதுகாப்பு.. என்ற எண்ணத்துடனும் அதே சமயம் அவள் தன் மனைவியாகிவிட்டால் தன்னுடனே இருந்து தன் பேச்சைக் கேட்டு நடப்பாள் என்றும் நினைத்து தான் அவன் அவளை கேட்காமல் தாலியைக் கட்டினான். ஆனால்..?
   ஒரு பெருமூச்சுடன் அவளருகில் வந்தான்.
   'மீனா.. நா ஒனக்குத் தாலி கட்டனது நீ எனக்கு உரிமையானவளா இருக்கணும்ன்னு நெனச்சித்தான் கட்டினேன். ஆனா அதை நீ அடிமைச் சின்னம்ன்னு நெனச்சா.. தயவு செஞ்சி கயட்டி குடுத்துடு. நீ தான் தாலியைக் கழற்றி எறிஞ்ச புரட்சி பெண்ணாச்சே.. ஒனக்கு இது பெரிசா படாது. நாங்களும் யாரும் தப்பா நெனச்சிக்க மாட்டோம். குடு." அவளெதிரில் கையை நீட்டினான். மீனா பேசாமல் நின்றிருந்தாள்.
   'என்ன மீனா..? தயக்கமா இருக்குதா..? சரி. நான் தான் உன்னோட விருப்பம் தெரிஞ்சிக்காம தாலி கட்டிட்டேன். அது என்னோட தப்புத்தான். நா உன்ன விரும்புன மாதிரியே நீயும் என்ன விரும்புனன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன். மன்னிச்சிடு. நீ இங்கிருந்து போனபிறகு என்னன்ன மாற்றங்கள் நடந்திருக்கும்ன்னு நான் யோசிக்கல. என்னோட தப்புதான். அதனால நாங்கட்டிய தாலிய நானே கழுற்றிடுறேன். நீ எப்பவும் போல இருந்துக்கோ."
   சொல்லிக் கொண்டே அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தத் தாலியைக் கயற்றுடன் பிடித்தான்! மீனா சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
   இந்திய நாட்டில் கற்பு  ஒழுக்கம்  காதல்  காமம்  என அனைத்துமே பண்பாடு கலாச்சாரக் கடலில் கலந்திருக்கும் உப்பு போன்றது. காய்ச்சினால் வரும் நீராவி கூட உப்பு கரிக்கும்!!
   அவன் காலில் விழுந்தாள்.
   'என்ன மன்னிச்சிடுங்க. உங்க அம்மாவோட விருப்பம் இல்லாம எனக்கு தாலி கட்டிட்டீங்களேன்னு தான் இப்டி கோவமா பேசிட்டேன். சாரி.."
   சக்திவேல் அவளைத் தூக்கிவிட்டான்.
   'மீனா.. தாலி அடிமை சின்னம் கிடையாது. அது ஒரு அடையாளச் சின்னம். தாலிய கட்டிக்கினே தப்பு செய்ய முடியாதா என்ன..? இல்ல.. சுதந்திரமா இருக்க முடியாதா..? மீனா.. நம்மோட பண்பாடும் கலாச்சாரமும் கை வெலங்கு கெடையாது. அது நம்மோட மனசுக்கு நமக்கு நாமே போட்டு கொள்ளுற கட்டுப்பாடு. அத மீறி நடந்துக்கறது நாகரீகம் கெடையாது."
   அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
   'போ.. போயி முகம் கழுவிட்டு டிரெஸ் மாத்திக்கினு வா.. எதையும் மனசுல வச்சிக்காத." என்றான்.
   மீனா அவனை நிமிர்ந்து பெருமையுடன் பார்த்தாள். மனசு இலேசானது போல் இருந்தது. 'ம்.. போம்மா.." என்றான்.
   மீனா உள்ளே போனதும் தான்.. மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது. இவ்வளவு நேரம் ஏதோ நெருப்பின் மீது நின்று கொண்டிருந்தது போல் இருந்தார்கள்!


   உலகத்தில் யாருமே அனாதையாகப் பிறப்பது இல்லை. அதே போல் அனாதையாகவே சாகறதும் இல்லை. ஆனால் இடைப்பட்ட வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்!
   யாரையும் உறவு முறை சொல்லி அழைக்கக் கூடாது என்று நினைத்தவளுக்கு இன்று திடிரென்று எத்தனை உறவுகள் முளைத்து விட்டன..?
   சேகரிடம் 'ரிஷன்ட் கடிதத்தை டாக்டர்கிட்ட குடுத்துடுறியா..?" என்று கெட்டதற்கு அவன் 'சரிங்க அண்ணி" என்று சிரித்து கொண்டே தலையாட்டியப் போது.. ஏதோ கேலிப்பண்ணுவது போல் இருந்தாலும் அது தானே உறவு என்பது! புரிந்து கொண்டதும் மனம் இன்பத்தில் மூழ்கியது. கண்கள் கலங்கச் சொன்னாள்.
   'சேகர்.. ஒங்கண்ணன் எனக்கு தாலி கட்டுனதுல இந்த ஒரு சந்தோஷம் தான் ரொம்ப திருப்தியா இருக்குது. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். ஒரே ஒருத்தர மட்டும் நா மொற சொல்லி கூப்ட மாட்டேன்;" என்றாள் மாமியாரை ஓரக்கண்களால் பார்த்தபடி.
   'நீ கூப்பிடலன்னா.. போயேன். எம்மவன் இன்னும் பத்து பொண்ணுங்கள கூட்டிக்கினு வருவான். அவளுங்க கூப்புட போறாளுங்க."
   'இன்னும் ஆயிரம் பேரவேணா கூட்டிக்கினு வரட்டும். ஆனா நாதான் அவரோட மனசுல இருக்கறவளாக்கும்."
   'தெரியுமில்ல. பின்ன ஏன்டி.. எதுவும் தெரியாதவ மாதிரி நடிச்ச..?"
   'ம்.. இலவு காத்த கிளியா ஆயிடகூடாதில்ல. அதுக்குத்தான்."
   'இப்பவும் நீ எலவு காத்த கிளி தான். இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் காத்துகெடக்க வேண்டியது தான்."
   அகிலாண்டேசுவரி சொன்னதின் அர்த்தம் அனைவருக்கும் புரிந்தது. மீனா தன் கணவனைப் பார்த்தாள். அவனும் அதே நேரம் அவளைப் பார்த்து கொண்டுதான் இருந்தான். மீனாவின் கன்னங்கள் செந்தூரமாகச் சிவந்தன.
   அதே நேரம் டெலிபோன் அழைக்க மீனா போய் எடுத்தாள். எதிர் முனையில் தேனப்பன்.
   'ஏய் மீனா.. இன்னிக்கி தப்பிச்சிட்டன்னு ரொம்ப கர்வபட்டுக்காத. எம்பையனுங்க ரெண்டு பேருமே என்ன நல்லா ஏமாத்திட்டணுங்க. ஆனா.. நா ஒன்ன சும்மா வுட மாட்டேன்டீ.." கோபத்தின் உச்சம் அவளையும் தாண்டி மற்றவர்களுக்கும் கேட்டது.
   'தோ.. பாருங்க. நா நேத்து ராத்திரி பூரா உங்க ஊருல தான் இருந்தேன். அப்பவே ஏதாவது செஞ்சிருக்க வேண்டியது தான..? சரி. இப்பவும் எதுவும் ஆயிடல. எங்க வரணும்ன்னு சொல்லுங்க? நானே வர்றேன். உங்க இஷ்டம் போல என்ன எது வேணுமின்னாலும் பண்ணிக்கங்க. ஆனா எந்தக் காரணத்த கொண்டும் என்னோட ஊர்க்காரங்க மேல கைய வக்கக்கூடாது. சொல்லுங்க எங்க வரணும்..?" கோபமாகக் கேட்டாள்.
   'ஏன்டீ.. என்ன என்ன கையாலாகாதவன்னு நெனச்சிட்டியா..? உன்ன என்னோட எதுருல வான்னு சொல்லி கூப்ட..? நானே வர்றேன்டீ.. வந்து வெட்றன். உன்ன எங்கையால சாவடிச்சாத்தான் என்னோட ஆத்தரம் அடங்கும். வர்றேன்டீ.."
   'வந்து அதையாவது சீக்கிரமா செஞ்சி தொல. நிம்மதியாவது சாவுறேன்."
   தொலைபேசியைக் கோபமாக அதனிடத்தில் வைத்தாள்.
   'சே.. எனக்குன்னு ஏன்தான் இப்படியெல்லாம் வருதோ..?" கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டே போனவளை அங்கிருந்த அனைவரும் கவலையுடன் பார்த்தார்கள்!

                              (தொடரும்)

6 comments :

 1. விறுவிறுப்பான தொடருக்கு வாழ்த்துக்கள்.தாலிய கட்டியபின் மீனாவுக்கு எத்தனை சோதனைகள் விரைவில் சரியாகி வாழட்டும்

  ReplyDelete


 2. இன்றுதான் கண்டேன் புதிவலை! வாழ்க! வளர்க!

  ReplyDelete
 3. மீனாவுக்கு இன்னும் பிரச்சனைகள் தொடர்கிறதா..

  சக்திவேலின் தாய் மினாவை நிஜமாகவே வெறுக்கிறாளா.. வெறுப்பது போல் நடிக்கிறாளா என்பதும் போகப்போக புரியும் போலும்...

  ReplyDelete
 4. கவியாழி ஐயா....

  வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

  ReplyDelete
 6. பெயரில்லதவருக்கு....

  போகப் போக நிச்சயம் புரியும்.
  நன்றி.

  ReplyDelete