Wednesday, 2 March 2016

மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து ! – 5    ‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ?‘‘
    ‘‘ஆறாவதுக்கா….‘‘
    ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே….
    ‘‘ஆமக்கா…. என் அம்மாவுக்கு ஓரளவு எழுதப் படிக்கத் தெரியும். நான் ஒரே பொண்ணுன்னதால என்னை நல்லா படிக்க வைக்கனும்மின்னு நெனச்சாங்க. அப்பா வயல்ல கூலி வேல செய்றவரு. எப்படியோ ஆறாவது பாஸ் பண்ணினேன். அப்போ மஞ்சா காமாலையால அம்மா செத்துட்டாங்க. அதோட அப்பா குடிக்க ஆரமிச்சிட்டாரு. காரியத்துக்கு வந்த சொந்தக்காரு வீட்டு வேலைக்கு ஆள் வேணும், மரிக்கொழுந்த அனுப்பறியான்னதும் என் அப்பா ஒடனே அனுப்பிட்டாரு.
    அந்த சொந்தக்காரர் தான் என்னை ஒரு வீட்டுல வேலைக்கி விட்டாரு. பத்து வருஷமா அங்கேயே இருந்தேன். போன வருஷம் அப்பா சாவக் கெடக்கிறார்ன்னு ஊருலேர்ந்து தெரிஞ்சவர் ஒருத்தர் வந்து கூப்பிட்டாரு.
    என்னதான் கோபம் இருந்தாலும் அப்பா என்ற பாசம் விடுமா ? கிராமத்துக்கு வந்து, நான் வேலைசெஞ்ச வீட்டு மொதலாளி அம்மா கொடுத்த பணத்துல அப்பாவுக்கு வைத்தியம் பாத்தேன். பொழச்சிக்கிட்டாரு. அப்புறம் ஒழுங்கா வேலைக்குப் போச்சி. என்னைத் திரும்பவும் வேலைக்கி அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரு. அப்புறம் தான் மாமா வந்து பொண்ணு கேட்டாரு. யாரு எவருன்னு தெரியாம கட்டிக் கொடுத்திட்டாரு என் அப்பா…..‘‘
    தன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கிச் சொன்னாள் மரிக்கொழுந்து.
    சுயசரிதை எழுத வேண்டியவங்களுக்குத் தான் வாழ்ந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பற்றிய கவலை இருக்கும். 
    ‘‘யாரு எவருன்னு தெரியாம ஒண்ணும் உன்னைக் கட்டிவக்கல. தெரிஞ்சி தான் கட்டிவச்சாரு…‘‘
    ‘‘எப்படி ?‘‘
    ‘‘உனக்கு சின்னய்யாவைத் தெரியுமோ இல்லையோ… உன் அப்பாவுக்கு நல்லா தெரியும். உன் கிராமத்துல சின்னய்யா அவரோட நண்பரைப் பார்க்க வந்த போது தான் திருவிழாவுல உன்ன பார்த்தாராம். நீ வேற மூக்கும் முழியுமா நல்ல நெறமா லட்சணமா இருந்தியா…. சரி வேலுவுக்குக் கேட்டுப் பார்க்கலாமேன்னு உன் அப்பாகிட்ட கேட்டிருக்காரு. சின்னய்யா என்றதும் உன் அப்பா மறுபேச்சு பேசலையாம். ஒடனே ஒத்துக்கிட்டார்.‘‘
    ‘‘ஓ…. அப்படியா…. ?‘‘
    அப்போது தான் அவளின் கல்யாணத்தின் ரகசியமே புரிந்தது. வேலு வந்ததும் இவர்தான் மாப்பிள்ளைன்னு ஊருக்குச் சொல்லிவிட்டு மறுநாளே கல்யாணம் செய்து ஊர் உறவுகளுக்குச் சாப்பாடு போட்டு, எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று நினைத்திருந்தாள். ஓ ! இங்கிருந்து வந்தது தானா அது…. !

    ஆச்சரியமும் அதிசயமுமாகக் கண்களை விரித்துச், சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் கணவனிடம் கேட்டாள் மரிக்கொழுந்து.
    ‘‘ஆமா. எல்லாம் சின்னய்யா தான் செஞ்சாரு. இல்லைன்னா இந்த அனாதைக்குக் கல்யாணமா காட்சியா ?‘‘ என்றான் வேலு.
    எங்கே பிறந்தவளுக்கு எங்கே வாழ்க்கைப் படணும்ன்னு இருக்கிறது…. எப்படியோ நல்லவனாக அமைஞ்சதில் மகிழ்ச்சி தான் என்று எண்ணியபடி பரிமாறினாள்.
   
     அன்றிலிருந்து வேலு சாப்பிடும்போது கோபமாகவே பேசியதில்லை. ஏன் ? எந்த சண்டையும் வந்ததில்லை என்றே சொல்லலாம். எப்படி வரும் ? எந்தத் தவற்றையும் உடனுக்குடன் திருத்தும் ஆசிரியை கூடவே உள்ளவரை.
     அவள் படிப்பாள் என்ற விசயம் ஊருக்கேத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் டவுனில் வளர்ந்ததால் கிராமத்துக்கே உரிய நடை உடை பாவனையில் இருந்து மாறுபட்டவளாகத் தெரிந்தாள் மரிக்கொழுந்து.
    அதனாலோ என்னவோ அந்த ஊர் மக்கள் அனைவருமே அவளிடம் நல்லவிதத்தில் பழகினார்கள்.
    அவள் எங்கேயாவது வெளியில் போகும் போது, ‘‘மரிக்கொழுந்து இந்தக் கடிதாசியைக் கொஞ்சம் படிச்சிக் காட்டேன். என்மகன் வெளிநாட்டிலேர்ந்து எழுதி இருக்கான்….‘‘
    ‘‘மரிக்கொழுந்து இந்த மளிகைக் கணக்கைக் கொஞ்சம் சரி பாரேன். சரியா போட்டிருக்கானான்னு….‘ இப்படிச் சொல்லி மளிகை கணக்குத் தாளை நீட்டவார்கள்.
    ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாகவே பழகினார்கள். ‘இந்தா மரிக்கொழுந்து மல்லாட்டை அவிச்சேன். உனக்கு எடுத்து வச்சேன். சாப்பிடு‘‘ என்பார்கள்.
    இப்படி ஏதோ ஒரு விதத்தில் எல்லோருமே அன்பாக இருப்பதாகப் பட்டது அவளுக்கு.
    அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருமே நல்லவர்கள் தான் என்று நினைத்தாள், குமாரசாமியைப் பார்க்கும் வரை.
    குட்டை மீசையும், தொப்பை வயிற்றையும் வைத்துக்கொண்டு மார்பு தெரிய பட்டுஜிப்பா போட்டுக்கொண்டு திரியும் குமாரசாமியை நினைக்கும்போது மரிக்கொழுந்துக்குப் பயமாக இருந்தது.

    பகல் மூன்று மணியளவில் எந்த வேலையும் இருக்காது. அந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் கொஞ்சம் கண்ணயர்வது வழக்கம்.
    அப்படிப்பட்ட நேரங்களில் மரிக்கொழுந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது புத்தகம் படிப்பதோ, பூக்கட்டுவதோ, சிறுசிறு கற்களைப் பொறுக்கி சுங்கரங்காய் விளையாட்டு விளையாடுவதோ…. என்று பொழுதைப் போக்குவாள்.
    அப்படி ஒருநாள் தனியாக உட்கார்ந்து கொண்டு கற்களைத் தூக்கிப் போட்டு பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தவள், ஊர் பெண்கள் ஐந்தாறு பேர்கள் துணி மூட்டையைத் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்து ‘‘எங்கே போகிறீர்கள் ?‘‘ என்று கேட்டாள்.
    ‘‘மரிக்கொழுந்து நாங்கள் எல்லாம் ஆத்துக்குப் போறோம். போய் துணி துவச்சிட்டு அப்படியே குளிச்சிட்டு வருவோம். நீயும் வரியா… ?‘‘
    அவர்களில் ஒருத்தி இப்படிக் கேட்டதும், மரிக்கொழுந்துவிற்கு மனம் குதூகலமானது. உடனே அவர்களுடன் கிளம்பிவிட்டாள்.
    எப்போதோ அம்மாவுடன் ஆற்றில் குளித்தது ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் அம்மா கரையில் உட்கார்ந்து கொண்டு துணிதுவைத்துக் கொண்டிருப்பாள். இவள் தண்ணீரில் நன்றாக ஆட்டம் போட்டுக் குளிப்பாள்.
    அந்த நாட்களில் சகவயது தோழிகள் நீச்சல் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் இவள் நன்றாக நீச்சல் அடிப்பாள். அதன் பிறகு அம்மா இறந்த பிறகு இவள் ஆற்றில் குளிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. நகரத்தில் எங்கே ஆறு இருக்கிறது ?
    ஏதாவது படங்களில் ஆற்றைக் காட்டினால் ஆசையாகத் தான் இருக்கும். குதித்து நன்றாக நீச்சல் அடிக்க வேண்டும் என்று, முடியுமா என்ன ?
   மனத்தில் பூட்டி வைத்த ஆசைகள்…. சந்தர்ப்பம் கிடைத்ததும் நன்றாக நிறைவேற்றிக் கொண்டாள். தண்ணீரை விட்டு வேளியே வர மனம் வரவில்லை.
    அவளுடன் வந்தவர்கள் எல்லோரும் துணி துவைத்துக் காயவைத்து அவர்களும் குளித்து முடித்து, மீண்டும் காய்ந்த துணிகளை உடுத்திக்கொண்டு, மற்றதை மடித்து மூட்டையாகக் கட்டிக்கொண்டார்கள்.
    அதுவரையிலும் தண்ணீரை விட்டு மரிக்கொழுந்து வெளியே வராததால் ஆத்திரம் அடைந்த மல்லிகா சற்றுக் கோபமாகவே கூப்பிட்டாள்.
    ‘‘யேய் மரிக்கொழுந்து , வரப்போறியா இல்லையா ? நாங்க போறோம். வீட்டுல எங்க ஆத்தா தேடும்.‘
    ‘‘நீங்க வேணா போங்க. எனக்கு வழி தெரியும். நான் அப்புறமா வர்றேன்…‘‘ என்று சொல்லிவிட்டு தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனாள்.
    அவர்களெல்லாம் கிளம்பிப்போய் சூரியன் மறையத் தொடங்கி இலேசான குளிர் காற்று வீசத்தொடங்கிய போது தான் மரிக்கொழுந்துவிற்கு வீட்டுக்குப் போகணும் என்ற எண்ணம் வந்தது.
    வழியை வரும் போது பார்த்துக் கொண்டு தான் வந்தாள். திரும்பவும் சரியான வழிதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.
    ஆற்றின் கரையைக் கடந்தால் ஒரு கற்றாழைக் காடு வரும். அதைத் தாண்டினால் கொஞ்சம் தூரம் வயல் இருக்கும். அதற்கு நடுவில் ஒரு வாழைத்தோப்பு. வாழைத் தோப்புக்குள் நுழைந்து வெளியேறினால் திரும்பவும் வயல்காடு. அதையும் தாண்டினால் ஊர் வந்துவிடும்.
    மனத்தில் எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஈர உடையுடன் இருந்ததால் இலேசாகக் குளிர ஆரம்பித்தது. கற்றழைக் காட்டையும் வயலையும் தாண்டும் போதே ஈர உடையும் தலைமுடியும் ஓரளவிற்கு காய்ந்து விட்டிருந்தது.
    வாழைத்தோப்பில் நுழைந்ததும் ஒருவித மகிழ்ச்சி மனத்துள் வந்து புகுந்துக்கொண்டது.
    அந்த மகிழ்ச்சியில் ஏதோ ஒரு சினிமா பாடலைப் பாடியபடியே போனவளை, ‘‘இந்தா புள்ள நில்லு‘‘ என்று வந்த ஆண் குரலைக் கேட்டு சட்டென்று நின்றாள்.
    அந்தக் குரலுக்குரியவனைப் பார்த்த போது கிராமத்துப் பண்ணையார் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்று கற்பனை செய்து வைத்திருந்தாளோ அத்தனை லட்சணங்களையும் கொண்டிருந்தான் குமாரசாமி.


(தொடரும்)

Thursday, 25 February 2016

மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து ! – 4
    குழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத் தூக்கி கொஞ்சியவனைத் திலகவதி நச்சரித்தாள்.
    ‘‘என்னங்க, பார்த்தீங்களா… ? அந்தக் கண்கள பாத்தீங்களா…. ? சூரியன் மாதிரி பளிச் பளிச்ன்னு இருக்குது இல்ல…. ? அந்தக் கண்ணுல அப்படி ஒரு ஒளி தெரியுது பாருங்களேன்…‘‘
    உற்று பார்த்துகிட்டு சொன்னான் முரளீதரன்.
    ‘‘எனக்கு ஒண்ணும் தெரியலையே திலகவதி…‘‘
    ‘‘போங்க. உங்களுக்குக் கலைகண்ணே கிடையாது. எனக்கென்னமோ இந்த கண்கள் சூரியனை மாதிரி தான் பளீச்சினு தெரியுது….‘‘
    ‘‘எனக்கு கலைக்கண் இல்லைன்னு நீ சொல்லுறியா…. ? எனக்கு கலைக்கண் இல்லைன்னா முப்பது நாப்பது பொண்ணுங்க போட்டோவுல உன்னை எப்படி தேர்ந்தெடுத்தேன் ? மரிக்கொழுந்த எப்படி வேலுவுக்கு கட்டி வச்சேன்… ?‘‘
    ‘‘உக்கும். இதுல ஒண்ணும் கொறைச்சலில்ல‘‘ முகவாய் கட்டையைத் தோளோடு இடித்து அழகு காட்டினாள்.
    ‘‘கொழந்தைய பாருங்கன்னா… பொண்ணுங்கள எப்படி தேர்ந்தெடுத்தேன்னு சொல்லுறீங்களே….‘‘
    ‘‘அதுக்கென்ன பண்ணுறது…. ஒனக்கு தெரிஞ்ச சூரியன் எனக்கு தெரியலையே….. டேய் பையா… கண்ண முழிச்சி பாருடா…..‘‘ என்று சொல்லிவிட்டு லேசாக ஒரு தட்டு தட்டினான்.
    குழந்தை உடம்பை நன்றாக முறுக்கிவிட்டு சற்று நேரம் கழித்து ‘ங்ஙே‘ என்று அழுகத் தொடங்கியது.
    அவன் அடித்ததையும் குழந்தையின் அழுகையையும் பொறுக்காத திலகவதி குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
     கையைக் கட்டிக்கொண்டு அருகில் நின்றிருந்த வேலுவிடம் கேட்டான் முரளீதரன்.
     ‘‘வேலு, கொழந்தைக்கி என்ன பேரு வச்ச… ?‘‘
    ‘‘உங்க வாயாலே நல்ல பேரா வைய்யிங்க சின்னய்யா…‘‘
    வேலு தலையைச் சொரிந்தபடி சொன்னான்.
    ‘‘என் வாயாலேயா…. ? அதுதான் சொல்லிட்டாளே உன் சின்னம்மா. சூரியன் மாதிரி கண் இருக்குதுன்னு. அதனால சூரியான்னு வச்சிடலாம்‘‘ என்று சொல்லிவிட்டு கையிலிருந்த செயினைக் குழந்தைக்குப் போட்டுவிட்டு அதைத் தூக்கி அதன் காதில் சொன்னான் ‘‘சூரியா சூரியா‘‘ என்று.
    திலகவதி தன் கணவனைப் பெருமையுடன் பார்த்தாள்.
    குடிசையை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தபடியே வெளியில் நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த மரிக்கொழுந்துவிற்கு ‘சூரியா‘ என்ற பெயர் மிகவும் பிடித்திருந்தது.
    வேலைக்காரன் பிள்ளை தானே என்று எண்ணாமல் சுப்பைய்யா, கருப்பைய்யா என்று பெயர் வைக்காமல் தன் குழந்தைக்கு நிகரான பெயர் வைத்திருக்கிறாரே…. என்று எண்ணும் போது மரிக்கொழுந்துவின் மனம் மகிழ்ந்தது.
   தகுதி அறியாமல் தாழ்த்தும் போது மனம் வலிக்கும்.
   தகுதியை எண்ணாமல் தனதானது எதுவும் என்று எண்ணும் மனம் தன்னளவிலேயே எதையும் உயர்த்தும்.
   அவர்களின் குழந்தையின் பெயர் சத்தியா.
   இந்தக் குழந்தைக்குப் பெயர் சூரியா.
    அதன் பிறகு வந்த நாட்களிலும் ஒரு நாள் தவறாமல் காலையும் மாலையும் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வருவாள் திலகவதி.
    ‘‘எனக்கென்னமோ தெரியலை மரிக்கொழுந்து. இந்த குழந்தையோட கண்களைப் பார்க்க ஆசையா இருக்குது‘‘ என்று குழந்தையைத் தூக்கி வைத்திருப்பாள்.
   
    மரிக்கொழுந்து தன் குழந்தையின் கண்களை உற்று உற்று பார்த்தாள். எந்த ஒரு சூரியனும் தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டாள்.
    ‘அந்த ஒளியெல்லாம் இந்த ஒளி பொருந்தின கண்களுக்குத்தான் தெரியுமோ….‘ என்ற எண்ணம் வந்தது.
    இனி அந்த ஒளி பொருந்தின கண்களை என்றைக்குப் பார்க்கப் போகிறோம் ? என்ற ஏக்கம் வந்தது. ஏக்கம் அழுகையாக மாறி கண்களிலிருந்து வழிந்தக் கண்ணீரையும் துடைக்காமல் உட்கார்ந்திருந்தாள், காமாட்சி வந்ததைக் கூட அறியாமல்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து… இந்த மாதிரி அழுதுகினே இருந்தா செத்தவ வந்திடவா போறா…. கொஞ்சம் மனச தேத்திக்கோம்மா…. இந்த இதைச் சாப்பிடு…‘‘
    ஒரு தட்டில் வெண்பொங்கலும் வடையும் வைத்து வாழை இலையால் மூடி இருந்தது.
    மரிக்கொழுந்துவிற்கு பசித்தது தான். ஆனால் மனது சாப்பாட்டை வெறுத்தது.
    பேசாமல் தட்டைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள்.
    ‘‘மரிக்கொழுந்து, சாப்பிடு ஆத்தா…. ஒனக்காக இல்லன்னாலும் இந்த கொழந்தைகளுக்காவது சாப்பிட்டுத்தான் ஆகணும். சாப்பிடு மரிக்கொழுந்து…‘‘
    காமாட்சி கொஞ்சும் குரலில் சொன்னாள்.
    ‘‘சரி ஆத்தா…. நா கொஞ்ச நேரங் கழிச்சி சாப்பிடுறேன். மாமா எங்க ஆத்தா…. ?‘‘
    சாப்பாட்டைப் பார்த்ததும் கணவனின் ஞாபகம் வர கேட்டாள். நேற்று முன்தினம் பார்த்தது. சாப்பிட்டாரோ இல்லையோ…. தெரியவில்லை….
    தாய்தான் குழந்தையின் பசி அறிவாள் என்றில்லை. மனைவியும் அறிவாள்…. பெண்மை என்பதே தாய்மை தானே.
    ‘‘வேலுவா… ? நான்தான் முரளீ கூடவே இருக்கச் சொன்னேன். நா பாத்தா சொல்லி அனுப்புறேன். நீ சாப்பிடு. கொஞ்ச நேரத்துல வர்றேன்.‘‘ என்று சொல்லிவிட்டு காமாட்சி ஆத்தா போய்விட்டாள்.
    ஆத்தா போனதும் மரிக்கொழுந்து தட்டைப் பார்த்தாள். உடனே வேலுவின் ஞாபகம் வந்தது. அன்று திலகவதி சொன்னதிலிருந்து, வேலு சாப்பிட்டானா என்று கவனிக்காமல் அவள் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தாள்.
    திரும்பவும் பழைய நாட்களே மனத்தில் குடியேறியது.
    அன்று மூன்றறை மணியளவில் டவுனுக்குப் போய் விட்டு பசியுடன் வந்தான் வேலு.
    மரிக்கொழுந்து அவனிடம் இரண்டு மாத இதழ்களை வாங்கி வரச் சொல்லி இருந்தாள்.
    வேலு வந்ததும் ஆவலாகப் போய் கேட்டாள்.
    ‘‘நீ இன்னமோ பேர் சொன்னியே…. அத கடையில போயி மறந்துட்டேன் மரிக்கொழுந்து. வேற எந்த புக்கையாவது வாங்கினா நீ படிப்பியோ மாட்டியோன்னு வாங்காம வந்திட்டேன் மரிக்கொழுந்து….‘‘ என்றான்.
    மரிக்கொழுந்துவிற்கு ஏமாற்றமாக இருந்தது. எதிர்பார்க்கும் மனதுக்குக் கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றம் வரும் தான் !
    கோபமாக அவனைப் பார்த்தாள்.
    ‘‘சரி சரி… அடுத்த முறை போனா ஒழுங்கா வாங்கியாறேன். பசிக்குது, சாப்பாடு எடுத்துவை…‘‘ என்று சொன்னவன் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு போய் திலகவதியிடம் நீட்டினான்.
    ‘‘வேலு, மணி மூனறைக்கு மேலாவுது…. கையில தான் பணம் இருந்ததே.. ஓட்டலில் சாப்பிட்டு வந்திருக்கலாம் இல்லையா…‘‘
    வேலு, ‘‘எதுக்கு சின்னம்மா வீண் செலவு….‘‘ தலையைச் சொரிந்தபடி நின்றான்.
    ‘‘ம்…. பொண்டாட்டி கையால சாப்பிடணும். அதனால தானே சாப்பிடாமல் வந்தே…. ?‘‘
    ‘‘போங்க சின்னம்மா… அப்படியெல்லாம் இல்ல. உங்க கை பக்குவத்துல சாப்பிட்டு ஓட்டல் சாப்பாடு பிடிக்க மாட்டுது…‘‘
    ‘‘ஐஸ்ஸா… சரி சரி போய் சாப்பிடு. மணியாவுது.‘‘
    அவள் சொல்லித் துரத்தினாலும் சாப்பாடு போட்டால் தானே சாப்பிவதற்கு !
    மரிக்கொழுந்து வேண்டுமென்றே கவனிக்காதவள் போல கூடத்தில் உட்கார்ந்து பூக்கட்டிக்கொண்டு இருந்தாள்.
    இரண்டு முறை இவன் இவளைக் கூப்பிட்டும் எழுந்து வரவில்லை. அவனுடைய குரலைக் கேட்ட திலகவதி தான் வந்து அதட்டினாள்.
    ‘‘மரிக்கொழுந்து, எழுந்து போய் வேலுவுக்கு சாப்பாடு போட்டுட்டு வந்து இதைச் செய்‘‘ என்றாள்.
    மரிக்கொழுந்து வேண்டா வெறுப்பாக எழுந்தாள், திலகவதி சொல்லி விட்டாளே என்று.
    கணவனுக்குச் சாப்பாடு போட்டுவிட்டு பேசாமல் அருகில் நின்றாள்.
    வேலுவுக்கோ அதிகப் பசி.
    அவசர அவசரமாக சோற்றைப் பிசைந்து ஒரு உருண்டையை வாயருகே கொண்டு போகவும் மாடியிலிருந்து ‘வேலு‘ என்று சின்னய்யா கூப்பிடவும் சரியாக இருந்தது.
    கையிலிருந்த கவளச் சோற்றை அப்படியே தட்டில் போட்டுவிட்டு அவசர அவசரமாக கையைக் கழுவிவிட்டு மாடிக்கு ஓடினான்.
    அவன் சற்று நேரம் பொறுத்து வருவான் என்று காத்திருந்தாள்.
    அதே மாதிரி வந்தான். வந்தவன், ‘‘மரிக்கொழுந்து நான் அப்புறம் வந்து சாப்பிடுறேன். எடுத்து வை‘‘ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே போய்விட்டான்.
    மரிக்கொழுந்துவிற்குக் கவலையாக இருந்தது. எவ்வளவு ஆசையாகச் சாப்பிட உட்கார்ந்தான். சாப்பிடாமலேயே போய்விட்டானே… தட்டின் மீது ஓர் இலையை எடுத்து அதை மூடிவிட்டு கூடத்திற்கு வந்தாள். கூடத்தில் திலகவதி உட்கார்ந்திருந்தாள்.
    மரிக்கொழுந்து அங்கே வந்ததும் தன் கிட்டே வரும்படி அழைத்தாள்.
    அவள் அருகில் சென்ற மரிக்கொழுந்து ‘‘என்னக்கா….‘‘ என்றாள்.
    ‘‘மரிக்கொழுந்து, மனிதன் போதும் என்று சொல்லுற ஒரே பொருள் என்னன்னு தெரியுமா ?‘‘
    மரிக்கொழுந்து யோசித்தாள். மனிதன் போதும் என்று சொல்லக்கூடிய பொருள் கூட உலகில் உண்டா ? எந்தப் பொருளை இலவசமாகக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வான் தான். அப்படி போதும் என்று சொல்லக்கூடிய பொருள் எதுவாக இருக்கும்…. என்று யோசித்த படியே திலகவதியைப் பார்த்தாள்.
    ‘‘என்ன தெரியலையா ?‘‘
    ‘‘இல்லக்கா…‘‘
    ‘‘மனுசன் போதும் என்று சொல்லுற ஒரே பொருள் சாப்பாடு தான். ஒருத்தர்க்கிட்ட எந்தப் பொருளையும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி வைத்துக்கொள்வான். ஆனால் எவ்வளவு பெறிய பெருந்தீனிக்காரராக இருந்தாலும் அவரால ஒரு அளவுக்குத் தான் சாப்பிட முடியும். வயிறு ரொம்பியதும் போதும் என்று சொல்லித்தான் ஆகணும். புரியுதா… ?‘‘
    ‘‘புரியுதுக்கா…‘‘ தலையாட்டினாள்.
    ‘‘மனுசன் போதும் என்று சொல்லும் இந்த சாப்பாட்டை நாம் மனநிறைவோட போடணும். இப்ப பாரு வேலுவ. வயிறு நிறைய பசி இருந்தது. தட்டு நிறைய சோறு இருந்தது. மனசு நிறைய ஆசை இருந்தது. ஆனா சாப்பிட முடிஞ்சிதா ? இல்லையே…. இவ்வளவும் இருந்து என்ன ? சாப்பிடாம தானே வெளிய போச்சி. அதனாலதான் சொல்லுறேன். எவ்வளவு கோவம் இருந்தாலும் சாப்பாடு போடும் போது அதையெல்லாம் தள்ளி வச்சிட்டு சந்தோஷமா போடனும். என்ன… ?‘‘
    ‘‘சரிக்கா….‘‘
    ‘‘அதுக்காக கோபப்படாம இருக்கணும்ன்னு நான் சொல்லவரலை. சாப்பிட்ட பிறகு கேளு. நம்முடைய உரிமையை நாம எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. சாப்பிட்டப் பிறகு பொறுமையா கேட்டால் அவங்க தப்பை உணருவாங்க. அதை விட்டுட்டு தொடக்கத்திலேயே கேட்டால் பசி, போய்வந்த அலுப்பு, எல்லாம் சேர்ந்து அவர்களை எரிச்சலூட்டி விடும். என்ன மரிக்கொழுந்து நான் சொல்லுறது புரியுதில்ல…. இப்ப மட்டுமில்லை. எப்பவுமே நீ இப்படித்தான் நடக்கணும் என்ன…. ?‘‘
    அவள் சொன்னதின் உண்மையையும் சொல்லிய விதத்தின் தன்மையையும் புரிந்துக்கொண்டு ‘‘சரிக்கா‘‘ என்று தலையாட்டினாள் மரிக்கொழுந்து.
   ஆனால்… அந்தச் சாப்பாடு அவளுக்கே கிடைக்காத அளவிற்கு அவள் வாழ்வில் விதி விளையாடும் என்பதை அவள் அறியவில்லை.


(தொடரும்)

Thursday, 11 February 2016

மாற்றான் தொட்டத்து மரிக்கொழுந்து ! – 3
    முரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா !‘ என்று தோன்றியது.
    ஆறடிக்குக் குறையாத உயரமும், அதற்கேற்ற மாதிரி உடலமைப்பும், தூக்கி வாரின முடியும், எதையும் உன்னிப்பாய்ப் பார்க்கும் கண்களும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லும் முகமும் அமைந்த முரளிதரனைப் பார்த்த பொழுது, பண்ணையார் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்ததற்கு மாறான உருவ அமைப்பு இருந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
    இவன் இப்படி இருக்க திலகவதி… ?
    இப்படி ஓர் அழகா… ! இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே ! எங்கே ? சற்று நேரத்திற்கு பிறகு ஞாபகத்தில் வந்தது, தன் வீட்டில் தேதி கிழிக்கும் காலண்டரில் உள்ள லட்சுமியின் முகம். ஆமாம்… அதில் இருக்கிற தெய்வீக முக அமைப்பு அப்படியே…
    அவளுடைய முகத்தில் பிரகாசிக்கும் ஒளி ? அவள் இரு பக்க மூக்கிலும் அணிந்திருக்கும் மூன்று மூன்று வைரக்கல் பதித்த மூக்குத்தியினால் வந்த ஒளியா… ?
    இல்லைஎன்றால் தானாகவே முகம் இப்படி ஜொலிக்கிறதா… ? என்னவென்றே சொல்ல முடியாத நினைக்க முடியாத ஓர் உன்னத அமைப்பு அவளிடம் இருந்தது.
    இந்த அழகு, அவளைப் பார்த்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றும் காந்தர்வ அழகு கிடையாது. அவளைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் உன்னதமான தெய்வீக அழகு !
    இந்த அழகைக் கண்டு மறிக்கொழுந்து மயங்கிவிட்டாலும் அவளுடைய அன்பைக் கண்டு, அவளுக்குப் பணிவிடை செய்வதே பெருமை என நினைக்க ஆரம்பித்தாள்.
   அன்புக்கு அடிபணிவது ஆனந்தமாயிற்றே!
   அப்படி ஓர் அழகும் குணமும் வாய்த்த ஒரு பெண்ணை இனி எப்போது பார்ப்போம்…. ?
    மரிக்கொழுந்தின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.
    ‘‘க்ரீச்…க்ரீச்…‘‘
    கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்.
    பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. பெரிய வீட்டின் கொள்ளைப்புரத்துக் கிணற்றில் இருந்து தண்ணீர் இழுக்கும் சத்தம்தான் அது. எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.
    பெரிய வீட்டின் அதாவது மூரளீதரன் வீட்டிற்கும் அவளுடைய குடிசைக்கும் இடையே ஒன்பது தென்னை மரம், ஆறு வாழை மரம், ஒரு சில பூஞ்செடிகள் தான் இருக்கும்.
    மரிக்கொழுந்து கல்யாணமாகி வந்த சில நாட்களில் சின்னய்யா தன்னுடைய வீட்டின் தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அதில்  வேலுவையும் மரிக்கொழுந்துவையும் குடித்தனம் வைத்தான்.
    குடிசையிலிருந்து பெரிய வீட்டின் தோட்டத்தைப் பார்த்தால் மரங்களுக்கும் வாழைகளுக்கும் நடுவில் அவ்வளவாக எதுவும் தெரியாது.
    இருந்தாலும் அங்கிருந்து வரும் சத்தமும் அடுப்பின் புகையையும் வைத்து எல்லோரும் எழுந்து விட்டார்கள் என்பதை யூகித்துக்கொண்டாள்.
    மரிக்கொழுந்து எழுந்து போய் பல்விளக்கி முகம் கழுவி தலைவாரி பின்னி தன் குடிசையில் இருந்த சின்ன கண்ணாடியை எடுத்து பார்த்துப் பொட்டு வைக்கும் போது சின்னம்மா திலகவதியின் ஞாபகம் வந்தது.

    ல்யாணமாகி வந்த மறுநாள் விடியகாலை…
    ‘‘ஏய் மரிக்கொழுந்து இன்னுமா தூங்குற… எழுந்திரு, சின்னம்மா இந்நேரம் எழுந்திருப்பாங்க. சீக்கிரம் எழுந்து போய் அவுங்க இன்னா வேல செய்ய சொல்றாங்களோ அத செய்யி ?‘‘
    வேலு அவளை உலுக்கி எழுப்பினான்.
    மரிக்கொழுந்து அவசர அவசரமாக எழுந்து சடையைத் தூக்கி கொண்டையாகப் போட்டுக்கொண்டு சேலையைச் சரிசெய்து கொண்டு ஓடினாள்.
    அதற்குள் திலகவதி எழுந்துவிட்டிருந்தாள். அவள் முன்னால் போய் நின்று ‘‘நா என்ன செய்யணும் சின்னம்மா… ?‘‘ என்று கேட்டாள்.
    அவள் இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு…
    ‘‘மரிக்கொழுந்து நீ போயி பல்லை வெளக்கி மொகத்த கழுவி பொட்டு இட்டுக்குனு, தலைவாரி பின்னிக்கினு, பொடவைய ஒழுங்கா கட்டிக்கினு வா. அப்புறம் சொல்லுறேன் நீ இன்னா வேல செய்யனுங்கிறத.‘‘
    மரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் அவள் சொன்னதைத் தட்டாமல், உடனே கொள்ளைப்புரம் நோக்கிப் போனாள்.
    போகும் போது தான் வேலைசெய்த வீட்டின் ஞாபகம் வந்தது.
    என்றாவது ஒருநாள் நேரமிருந்தால் தலைவாரி சடை பின்னி முகத்தில் பெளடர் பூசி பொட்டு வைத்துக்கொண்டால் போதும், அன்று முதலாளியின் மகளுக்குப் பொறுக்காது.
    ‘‘ஏண்டி காலையிலேயே ஒனக்கு என்ன மேக்கப் வேண்டி கெடக்குது. ஒரு காபிய ஒழுங்கா போடத் தெரியல, மேக்கப் போட்டுக்கினா… அதுவும் காலையில….‘‘
    பத்து மணியளவில் தூங்கி எழுந்து வந்தவள் இந்த வார்த்தையை சொல்லுவாள். அன்றைக்கு என்று பார்த்து இஸ்திரி மடிப்பு கலையாத துணிகளைக் கொண்டுவந்து போடுவாள்.
    ‘‘இதெல்லாம் ஒழுங்கா தொவைக்கல. நல்லா தொவச்சி அயன் பண்ணி வை‘‘
    இப்படி ஏதாவது ஒரு வேலையை வேண்டுமென்றே அதிகப் படுத்தி விடுவாள்.
    இதையெல்லாம் நினைத்துக்கொண்டே திலகவதி சொன்னது போல் செய்து முடித்து அவள் எதிரில் வந்து நின்றாள்.
    ‘‘இதோ பாரு மரிக்கொழுந்து… இன்னைக்கு மட்டுமில்லை. என்னைக்குமே நீ இதுமாதிரி தான் வரணும். புரியுதா… ?‘‘ என்றாள்.
    ‘‘சரிங்க சின்னம்மா‘‘
    ‘‘என்ன சொன்னே ?‘‘
    ‘‘சரிங்க சின்னம்மான்னுதாங்க…‘‘
    ‘‘ம்…. இதையும் மாத்தணும் நீ. ஒனக்கு நா சின்னம்மாவா… ?‘‘
    புரியாமல் விழித்தாள். மாமா அப்படித்தானே சொன்னது…. வேற என்னன்னு கூப்பிடணும் ? மனதுக்குள்ளேயே எண்ணிப் பார்த்தாள். கேட்க வாய் வரவில்லை. பேசாமல் அவளைப் பார்த்தாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து பயந்துட்டியா… ?‘‘
    இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள்.
    ‘‘பின்னே… ?‘‘
    ‘‘சின்னம்மான்னு இல்லையின்னா… வேற என்னன்னு கூப்பிடறது ?‘‘
    ‘‘ம்… அப்படி கேளு. எல்லாரும் என்னை சின்னம்மான்னு தான் கூப்பிடுறாங்க. ஆனா நீ அப்படி கூப்பிடாத. நீ இனிமே என்னை அக்கான்னு தான் கூப்பிடணும். என்ன சரியா… ?‘‘
    தலையாட்டினாள்.
    ‘‘வாயைத் தொறந்து சொல்லு‘‘
    ‘‘சரிக்கா !‘‘
    ‘‘ம்… போயி வாசல தெளிச்சி கோலம் போடு…‘‘  இப்படி அன்பாக வேலை வங்கினாள். அதுவும் முழுநேர வேலை கிடையாது.
    காலையில் வாசல் தெளித்துக் கோலம் போடணும். இரவு போட்ட பாத்திரங்களைக் கழுவி வைக்கணும், எப்போதாவது கடைக்குப் போய் காய்கறி வாங்கணும், வீட்டைப் பெருக்கணும். மாவை மசினில் அரைக்கணும், இவை எல்லாவற்றையும் விட நான்கு வயது சத்தியாவைக் கவனிக்கணும்.
    இதுதான் வேலை. இதெல்லாம் வேலை என்பது போல் தெரியாமல் ஒரு பொழுது போக்கு போல் இருந்தது மரிக்கொழுந்துவிற்கு.
    எவ்வளவு சந்தோசமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது !
    இத்தனை நாட்களிலும் மரிக்கொழுந்து திலகவதி சொன்னதை மறக்கவில்லை. அன்றாடும் முகம் கழுவி பொட்டு வைத்த பின்னரே பெரிய வீட்டிற்குள் நுழைவாள்.
    மரிக்கொழுந்துவிற்கு மனது வெம்பியது. சத்தம் போட்டு அழுதால் குழந்தைகள் எங்கே விழித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் கவலையை அப்படியே விழுங்கினாள். அடுத்தவர் நலனுக்காக அழுகையை அடக்குவதில் இருக்கும் வலி…. பெரிய பாத்திரத்தில் பொங்கி வர முடியாத பாலைப் போன்று உள்ளேயே கொதிப்பது. அதைவிட அழுது விடலாம்.
    கையில் இருந்த சாந்து குமிழில் ஒரு குச்சால் ஒரு புள்ளியளவு பொட்டு வைத்துக்கொண்டு குடிசையின் கதவை மெதுவாக சாத்திவிட்டு, பெரிய வீட்டின் கொள்ளைப் புரத்தை நோக்கி நடந்தாள்.
    ஏதோ வேலையாக இருந்த காமாட்சி அவளைக் கவனித்துவிட்டாள்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து… ? நீ எதுக்கு இங்க வந்த ?‘‘
    ‘‘ஏதாவது வேல இருந்தா செய்யலாம்ன்னு வந்தேன் ஆத்தா…‘‘
    ‘‘வேலையா ? அதெல்லாம் ஒன்னும் வேணாம். இங்க சொந்தக்காரங்க எல்லாம் இருக்கிறாங்க இல்ல ? அவங்க செஞ்சிக்குவாங்க. நீ போயி கொழந்தைகள கவனிச்சிக்கோ. அது போதும். போ‘‘
    அதிகாரம் நிறைந்த குரலில் சொன்னாள் காமாட்சி. அவளுடைய சொல்லுக்கு மறுப்பேது… ?
    ‘‘சரி ஆத்தா….‘‘ என்று சொல்லிவிட்டு திரும்பவும் வந்த வழியிலேயே நடந்தாள்.
    குடிசையின் அருகில் நெருங்கிய போது தான் குழந்தையின் அழுகை ஒலி காதில் விழுந்தது.
    அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.
    அவளுடைய குழந்தைதான் அழுதுகொண்டிருந்தது. படுக்கையை ஈரமாக்கி வைத்திருந்தான்.
    குழந்தையைத் தூக்கி படுக்கையைச் சரிபடுத்தி விட்டு அதனை பசியாற்றி விட்டு கிடத்தினாள்.
    பசி போனதும் தூங்காமல் நன்றாக விழித்துக்கொண்டு கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டிருந்தான்.
    கண்கள் இரண்டும் மொச்சைக் கொட்டைகள் போல் இருந்தது.
    அந்தக் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தாள். அவளுக்குச் சாதாரண குழந்தையின் கண்களாகத்தான் தெரிந்தது. திலகவதி சொன்னது போல எந்த ஒளியும் அதில் தெரியவில்லை.


(தொடரும்)

Monday, 1 February 2016

மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து ! - 2
     கல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் முதலாளியைப் பற்றியது தான் !
    ‘மரிக்கொழுந்து, நீ என்னை மதிச்சாலும் மதிக்கலைன்னாலும் பரவாயில்லை. ஆனா, நான் தெய்வமா மதிக்கிற சின்னைய்யாவையும் சின்னம்மாவையும் தான் நீ மதிக்கணும். அதமட்டும் ஒழுங்கா செஞ்சா நமக்குள்ளாற பிரட்சனையே வராது‘ என்றான் வேலு.
    அவனைப் பயத்துடன் பார்த்தாள் மரிக்கொழுந்து.
    ‘இன்னா பயப்படுற ?‘ என்று கேட்டுவிட்டு அவள் கையைப் பிடித்துத் தன் அருகே உட்கார வைத்தவன் தொடர்ந்து தன் சின்னய்யாவைப் பற்றியே தொடர்ந்து பேசினான்.
    மரிக்கொழுந்துவிற்கு பயம் போய் எரிச்சலாக வந்தது.
    ‘என்ன மனுஷன் இவர் ? மொதோ ராத்திரியில் பேச வேண்டிய பேச்சா இது… ? ஏதோ பேசலாம். தன் மொதலாளியைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு விட்டுவிட்டால் பரவாயில்லை. அதையே சொல்லி அறுத்தால் என்ன செய்வது… ?
    நடுஇரவு ஆகியும் அவன் சின்னய்யா பற்றிய பேச்சை நிறுத்தாததால்…
‘மாமா… எனக்கு தூக்கம் வருது‘ என்று சொல்லியபடியே கொட்டாவி விட்டாள்.
    அதன் பிறகு தான் சின்னய்யாவின் பேச்சைவிட்டு அவளைக் கவனிக்க ஆரம்பித்தான் வேலு.

    தன் பிறகு வந்த இரண்டு நாட்களிலும் அவன் தன் சின்னய்யாவைப் பற்றியே பேசினான். இன்றைய புதிய இன்பங்கள் உடம்பிலும் உள்ளத்திலும் நிறைந்திருக்கும் போது அடுத்தவரைப் பற்றிய பேச்சு அதிக இன்பத்தைத் தராது. அதனால் இவள் அதைக் காதில் வாங்கியவளாகத் தெரியவில்லை.
    மூன்றாம் நாள் தன் அப்பா கொடுத்த ஒரு புதுப்பாய், இரண்டு தலையணை, ஒரு டிரங்கு பெட்டியில் அவளுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு, அப்பாவிடம் கண்ணீர் மல்க விடைபெற்றுக் கொண்டு, கணவன் வீட்டுக்குச் செல்வதற்கு பேரூந்துக்காக காத்திருக்கும் போது தான் அந்த பயம் வந்தது.
    கணவனுக்கு ஏதும் குடும்பம் என்று எதுவும் கிடையாது. தனி ஆள். ஒரு வீட்டில் வேலை செய்கிறான் என்பது மட்டுமே மரிக்கொழுந்து அறிந்திருந்தாள்.
   ஆனால் அங்கே போனால் எங்கே தங்குவது ? இருக்க ஏதாவது இடம் உண்டா ? அவர் வேலை செய்கிற இடத்தின் முதலாளி எப்படிப்பட்டவராக இருப்பார்… ? நமக்கும் வேலை எதையாவது கொடுப்பாரா ? அந்த வீட்டு முதலாளி அம்மா எப்படிப்பட்டவங்க ? அவங்க எப்படி என்னிடத்தில் நடந்துக் கொள்வார்கள் ?
    இப்படிப்பட்ட பல கேள்விகள் முதன்முதலில் மனத்தில் தோன்றியது.
    பேரூந்தை விட்டு இறங்கி கயிற்றால் கட்டிய பாய் தலையணையைக் கையில்பிடித்துக் கொண்டு கணவனின் பின்னால் நடந்துச் சென்றவளின் மனது மெதுவாகப் படபடக்கத் துவங்கியது.
    பேரூந்தில் ஏறும் போது வந்த பயம் ஊர்வந்து இறங்கி நடக்கும் போதும் பின் தொடர்ந்து வந்தது.
    கணவன் தன் முதலாளியைப் பற்றி நல்லதாகவே சொல்லி இருந்தாலும் மனது அதை ஏற்க மறுத்தது.
    எத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறாள்… எத்தனை புத்தகத்தில் படித்திருக்கிறாள் ! முதலாளி என்றால், அதுவும் கிராமத்து முதலாளி என்றால் எப்படி இருப்பார்கள் என்பது தெரியாதா… ?
    பெரிய தொப்பை வைத்துக்கொண்டு, கத்தையாக மீசை வைத்துக்கொண்டு, கழுத்து மார்பு தெரிகிற மாதிரி சட்டை போட்டுக்கொண்டு… அதில் தங்கச் சங்கிலி தெரிகிற மாதிரி தானே இருப்பார்கள்…
    நம்ம கிராமத்து பண்ணையார் கூட இப்படி தானே இருந்தார். எப்போதும் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்துக்கொண்டு… !
    எப்போதோ அவள் கிராமத்துப் பண்ணையாரைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு யார் பண்ணையார் என்பதை அவள் அறிந்து வைத்திருக்கவில்லை.
    இருந்தாலும் பண்ணையார் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்ற எண்ணம் மனத்தில் நன்றாகப் பதிந்து விட்டது.
    பண்ணையார் எப்படி இருந்தால் என்ன ? நாம என்ன அவரிடமா வேலை செய்யப் போகிறோம் ?
    வேலு சொன்னது ஞாபத்திற்கு வந்தது.
    ‘சின்னம்மாவிற்கு நீ தான் ஒதவியா இருக்கனும். அவங்களுக்கு ஒத்தாசைக்கி ஆளில்லைன்னு சொன்ன பெறகு தான் நான் ஒன்ன கட்டிக்கிட்டேன்‘ என்றான்.
    அதனால பண்ணையார் எப்படி இருந்தா நமக்கென்ன ? நமக்குத் தேவை மொதலாளி அம்மா தான்…
    சரி…. அவங்க எப்படி இருப்பாங்க… ?
    அதே மாதிரி …. சினிமாவுல வார்ற மாதிரி… கொசுவத்த பின்னால வச்சி சேல கட்டிக்கினு…. சைடா கொண்டை போட்டு, அத சுத்தி நிறைய பூ வச்சிக்கினு… நிறைய நகை போட்டுக்கினு… வாய் நிறைய வெத்தலையைப் போட்டு கொதப்பிக்கினு தானே இருப்பாங்க.
    அவங்க முகம் எப்படி இருக்கும்… ? முகம் எப்படி இருந்தால் என்ன ? குணம் எப்படி இருக்கும் ?
    தான் வேலை செய்த வீட்டின் முதலாளி அம்மா நினைப்பு வந்தது மரிக்கொழுந்துவிற்கு.
    அவங்க சந்தோசமாக  இருக்கும் போது சந்தோசமாக நடத்துவார்கள். கோபமாக இருந்தால் அதிகாரமாக வேலை வாங்குவார்கள். ஆக மொத்தம் எந்த வேலையையும் செய்யாமல் விட மாட்டார்கள்.
     எல்லா வேலையையும் செய்து முடித்தால் தானே மாலையில் ஒன்னரை மணிநேரம் தொலைக்காட்சி பார்க்க விடுவார்கள்.
    அதே மாதிரி இந்த மொதலாளி அம்மாவிற்கும் கொணம் இருந்தால் கூட போதும். எப்போதும் அவங்க திட்டினாலும் எப்போதாவது அன்பாக பேசுவார்கள்.
    அன்புக்கு ஏங்கும் இதயங்களுக்கு மிகக் கொஞ்சமான அன்பு கிடைத்தாலும் அதை நினைத்தே ஆயுலைக் கடத்தி விடுவார்கள். என்ன செய்வது…. ?
    இவையெல்லாவற்றையும் நினைத்துக்கொண்டே வேலு நுழைந்த கோவிலுக்குள் நுழைந்தாள் மரிக்கொழுந்து.
    அம்மனை அன்று அழகாக அலங்கரித்து இருந்தார்கள்.
    வேலு அவள் அருகில் வந்து சொன்னான்.
    ‘மரிக்கொழுந்து…. இது தான் நம்ம ஊர் எல்லை காத்தாள் கோயிலு. சக்தி வாய்ந்த அம்மன். நல்லா வேண்டிக்கோ….‘ என்று சொல்லிவிட்டு, திரும்பி சாமியைப் பார்த்து, ‘‘ஆத்தா…. என்  சின்னய்யாவ நல்லபடியா வை ஆத்தா….‘‘ என்று வாய்விட்டு கும்பிட்டு தரையில் விழுந்து கும்பிட்டான்.
    அதைக் கேட்டதும் மரிக்கொழுந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. கல்யாணமாகி முதன்முதலில் மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான்… அம்மனிடம் தனக்கென எதுவும் கேட்காமல், வேண்டுதலும் தன் சின்னய்யாவுக்கா….. ?!
    அப்படி ஒரு விசுவாசமா…. ?
    இல்லையென்றால் குருட்டுத்தனமான பாசமா… ?
    அம்மன் மடியில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியிலும் மாங்கல்யத்திலும் வைத்துக்கொண்டாள்.
    அதற்குள் பெட்டியைத் துாக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் வேலு. பேசாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.
    திரும்பவும் பழைய கேள்விகளே மனத்தில் வந்து குழப்பின.
    எந்த கேள்விகளுக்கும் சரியான பதிலோ, சமாதானமாகக் கூடிய பதிலோ கிடைக்காத வரையில் அந்தக்கேள்விகள்  திரும்பத் திரும்ப மனத்தில் சுற்றிச் சுற்றி வந்து நம்மை கேட்டுக் கொண்டே தான் இருக்கும்.
    மரிக்கொழுந்தின் மனத்திலும் இந்தக் கேள்விகள் வந்து அழுத்திக் கொண்டே தான் இருந்தது. பதில் தெரிய வேண்டும்.
    பதில் தெரிந்துக் கொள்ளும் ஆசையில் முன்னால் விறுவிறுவென்று நடந்துச் சென்றுகொண்டிருந்த வேலுவின் முன்னால் ஓடிவந்து நின்று கேட்டாள்….
    ‘மாமா, சின்னம்மா பாக்கறதுக்கு எப்படி இருப்பாங்க…. ?‘ சற்று மூச்சு வாங்கினாள்.
    அவன், நின்று நிதானமாக அவளைப் பார்த்துவிட்டு,
    ‘‘இப்போ கோயில்ல பாத்தியே அம்மன். அந்த அம்மனைப் போலதான் சின்னம்மாவும் இருப்பாங்க.‘‘
    சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு நடந்தான்.
    அப்போது வேலு சொன்னது பிரமிப்பாக இருந்தாலும் திலகவதியை முதன்முதலில் பார்க்கும் பொழுது அவன் சொன்னது சற்றுக் குறைச்சலாகவே பட்டது மரிக்கொழுந்துவிற்கு.

(தொடரும்)

    

Thursday, 21 January 2016

மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து ! (1)

    ஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘
    அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமுமாக இருந்த மரிக்கொழுந்திடம் குழந்தையை நீட்டினாள் காமாட்சி.
    அவளை மிரட்சியுடன் பார்த்தாள் மரிக்கொழுந்து.
    ‘இந்தா மரிக்கொழுந்து, பச்ச கொழந்த. லப்பர வாயில வக்கமாட்டுது. வேறன்னு நெனக்காத. ஒங்கொழந்தையா நெனச்சி கொஞ்சம் பாலு கொடு ஆத்தா….‘
    காமாட்சி ஆத்தா கெஞ்சும் குரலில் கேட்டாள். இதுவரை யாரிடமும் கெஞ்சிப் பழகாத காமாட்சி மரிக்கொழுந்துவிடம் இப்படிக் கெஞ்சும் குரலில் கேட்ட போது மரிக்கொழுந்து கலங்கிப் போய்விட்டாள்.
    ‘என்ன ஆத்தா….. இப்படி கேட்டுட்ட. கொஞ்சம் பாலக் குடுடின்னா, குடுத்துட்டு போறேன். இதுக்குப் போயி……‘
    ‘இல்ல மரிக்கொழுந்து, இதெல்லாம் கட்டாயப் படுத்துனா கெடைக்கிறது கெடையாது. அவங்களுக்கா அந்த ஒணர்வு வரணும். இந்த ஊருல இப்ப கைப்புள்ள காரி நீதான். அதனால தான். இந்தா ஆத்தா…..‘
    திரும்பவும் குழந்தையை நீட்டினாள் காமாட்சி ஆத்தா. குழந்தையைக் கையில் வாங்காமலேயே இருந்தாள் மரிக்கொழுந்து.
    ‘என்னடி… இன்னா யோசன பண்ணுற …. ?‘
    ‘இல்ல ஆத்தா…. கொழந்தைக்கு பால் குடுக்குறதுல கஷ்டம் ஒன்னும் இல்ல ஆத்தா…. ஆனா, நான் போயி…..‘ இதுக்கும் மேல் பேச முடியாமல் காமாட்சி ஆத்தாவைப் பார்த்தாள்.
    காமாட்சி, மரிக்கொழுந்து என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள். ஒரு வேலைக்காரி எஜமானியின் குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா என்ற தயக்கம்.
    ‘ஏன் மரிக்கொழுந்து….. நீ வேலைக்காரின்னு தயங்குறியா ? ஒன் நெஞ்சில கையவச்சி சொல்லு , எம் மருமவ உன்ன வேலக்காரி மாதிரியா வச்சிருந்தா…. ?‘
    இந்த வார்த்தையைக் கேட்டதும் தலையில் ஓர் இடி விழுந்தது போல ஓ வென கத்தி அழுதாள் மரிக்கொழுந்து. அவளையும் தாங்க முடியாத அளவிற்கு மீறிய துயரம். உண்மையாய் வெடித்தழுவும் நெஞ்சம் வெளியுலகைப் பற்றி அக்கரைக் கொள்வதில்லை. ஆத்தா கேட்டது போல் எஜமானியம்மா, அதுதான் ஆத்தாவுடைய மருமகள் திலகவதி, தன்னை ஒரு வேலைக்காரி மாதிரியாகவா நடத்தியிருந்தாள். அப்படிப்பட்ட எஜமானி கிடைப்பாளா…. ? அவளைப் போய் இழந்து விட்டோமே… என்று நினைத்த போது மரிக்கொழுந்தால் அழுகையை அடக்க முடியவில்லை.
    தேம்பத் தேம்பி அழுத மரிக்கொழுந்துவைப் பார்க்க மேலும் கவலையாக இருந்தது காமாட்சி ஆத்தாவுக்கு.
    ‘அழுவாத மரிக்கொழுந்து. புள்ள பெத்து பத்துநாளு தான் ஆவுது. பச்ச ஒடம்பு. இப்புடி அழுதா ஒடம்பு என்னத்துக்கு ஆவுறது ? அழுவாத மரிக்கொழுந்து. ஏதாவது சாப்டியா…. ?‘
    அவள் எதுவும் பதில் சொல்லாமல் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, ‘நீ எங்க சாப்டிருக்கப் போறே…. இரு தோ வரேன்‘ என்று சொல்லிவிட்டு குடிசையை விட்டு வெளியேறினாள்.
    மரிக்கொழுந்துவிற்கு அழுகையின் ஊடே ஆத்திரமும் வந்தது. ‘சே… கடவுள் ஏன் நல்லவங்களைச் சீக்கிரமாக அழைத்துக் கொள்கிறார். நல்லவங்களே இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்றா…. எதுக்காக இப்படி நடந்தது ? இந்த ஊருல எத்தனை வயசான கெழடுகள் இருக்குது. அதுல ஒண்ண இட்டுக்கக்கூடாதா ? எத்தனபேரு நோயால அவஸ்த்தை படுறாங்க… அவங்கள்ல ஒருத்தர்… இல்லாட்டி நாங்கூடதானே பத்து நாளைக்கி முன்னால புள்ள பெத்தேன். என்ன எடுத்துக்குனு இருக்கக்கூடாதா…. ?
    இதை எல்லாத்தையும் விட்டுபோட்டு அந்த அன்பு தெய்வத்தையா இட்டுக்கணும்….‘
    நினைக்க நினைக்க மரிக்கொழுந்தால் தாங்க முடியவில்லை. தரையில் உட்கார்ந்து இருந்தவள் தன் இரு கால்களையும் கட்டிக்கொண்டு அழுதாள். காமாட்சி ஆத்தா உள்ளே வந்தது கூட தெரியாமல் அழுதாள்.
    ‘இந்தா மரிக்கொழுந்து, இந்த பாலை குடி மொதல்ல….‘
    செம்பில் இருந்த பாலை டம்ளரில் ஊற்றி மரிக்கொழுந்திடம் நீட்டினாள். குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு.
    ‘வேணா ஆத்தா…. எனக்குப் பசியில்லை‘
    ‘இது ஒனக்கில்லை, கொழந்தைக்கு. நீ குடிச்சாதான் கொழந்தைக்கு பால் கெடைக்கும். இந்தா குடி. மொதோ மாதிரி ஒரு கொழந்தை கெடையாது. இப்போ ரெண்டு கொழந்தை. குடி மரிக்கொழுந்து….‘ குரலில் கொஞ்சம் அதிகாரமும் கலந்திருந்தது.
    ‘ஆமாம். ஒரு கொழந்தையில்லை. ரெண்டு கொழந்தை. நமக்காக இல்லை என்றாலும் குழந்தைகளுக்காகச் சாப்பிடத் தான் வேண்டும்… என்று எண்ணியபடியே பாலை வாங்கி மடக் மடக்கென்று குடித்தாள்.
    குடித்து முடித்ததும் காமாட்சி ஆத்தா நீட்டின குழந்தையைக் கையில் வாங்கினாள். பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளங் குழந்தை.
    அந்தக் குழந்தையை ஆசையுடன் பார்த்தாள். குழந்தை நல்ல சிகப்பு நிறத்தில் அவளுடைய எஜமானி அம்மாவை உரித்து வைத்தது போல் இருந்தது.
    தூக்கி மார்போடணைத்துப் பால் கொடுக்கத் தொடங்கினாள்.
    ‘மரிக்கொழுந்து…. கொழந்தைய இங்கேயே வச்சிரு. நா போயி ஆகவேண்டிய காரியத்தைப் போய் பாக்குறேன்…‘
    சொல்லிவிட்டு அங்கிருந்து தளர்ந்த நடையுடன் போனாள் காமாட்சி ஆத்தா. மனத்தில் கவலை பிடித்ததால் நடையில் நோய் பிடித்ததோ.
    கிட்டத்தட்ட அறுபது வயதுக்கு மேலான காமாட்சி பெத்தது என்னவோ முரளீதரனை மட்டும் தான். ஆனால் இந்த கிராமத்துக்கே அவள் அம்மா மாதிரி அவளை எல்லோரும் ‘ஆத்தா‘ என்று தான் கூப்பிட்டார்கள்.
    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் காமாட்சி ஆத்தாதான். ஒரு சில பெரியவர்கள் பேசும் போது மட்டும் ‘பெரிய வீட்டம்மா‘ என்பார்கள்.
    ஆகமட்டும் எல்லோருக்கும் அவள் ஆத்தா தான் !
பால் கொடுத்துவிட்டு எழுந்து போய் பெட்டியைத் திறந்து ஒரு சுத்தமான வாயில் புடவையை எடுத்துக் கொண்டு வந்து தன் குழந்தையின் அருகே விரித்து அதில் கிடத்தினாள்.
    நன்றாக விடிந்து விட்டதால் குடிசைக்குள், புரியாத புதிருக்குப் பொருள் விளங்கத் துவங்கும் மனம் போல வெளிச்சம் பரவலாக பரவத் துவங்கியது.
    மரிக்கொழுந்து அந்த வெளிச்சத்தில் குழந்தையைப் பார்த்தாள்.
    பெற்ற தாய் யார் என்றே தெரியாத குழந்தை நன்றாகத் துாங்கிக்கொண்டிருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் குழந்தையை உற்றுப் பார்த்தாள்.
    நிறத்திலும் முகவெட்டிலும் தன் எஜமானி திலகவதியை ஞாபகப்படுத்தியது குழந்தை.
    மரிக்கொழுந்துவிற்கு தன் முதலாளியம்மாளின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.
    அவளுக்குத் தான் எத்தனை வசீகர முகம் ! அந்த கண்களில் எப்போதும் குடிகொண்டிருக்கும் அமைதி, கருணை. அந்த உதட்டில் எப்போதுமே அமர்ந்திருக்கும் புன்னகை, மொத்தத்தில் அவள் முகத்தில் குறையே சொல்ல முடியாத அழகு.
    அழகில் மட்டுமா… ?
    எல்லோரிடத்திலும் காட்டும் அன்பில், பெரியோர் இடத்தில் காட்டும் பணிவில், எதைச் செய்யும் போதும் அவசரப்படாத நிதானத்தில், இப்படி பண்பிலும் குறைகாண முடியாத மனித தெய்வம் !
    அந்த தெய்வீக அம்சங்கள் நிறைந்த தன் முதலாளியம்மா திலகவதி அக்காவை இனி எப்போது காணப்போகிறோம்…
    நேற்று பொழுது போன பிறகும் மனம் வராமல் செய்து தானே ஆகவேண்டும் என்ற கடமையில் கட்டாயத்தில் அந்த அன்பு உருவத்தைச் சுடுகாட்டில் தீக்கிரையாக்கியாயிற்று.
    இனி அந்த முகத்தை எப்போது காணப் போகிறோம் ? எப்படி காண முடியும் ?
    இன்று காணத்துடிக்கும் அந்த முகத்தை முதன் முதலில் பார்ப்பதற்கு எவ்வளவு பயந்தாள் என்பதை நினைத்துப் பார்த்தாள் மரிக்கொழுந்து.
     அந்த நிகழ்ச்சி இப்போது நடந்தது போல் தான் இருந்தது. அதற்குள் இப்படியா ?
    ஒரு வருடம் இருக்குமா ?
     இல்லை. அடுத்த மாதம் வந்தால் தான் ஒரு வருடம். இன்னும் முழுமையாக ஒரு வருடம் கூட ஆகவில்லை.
    மரிக்கொழுந்தின் மனம் முதன் முதலில் திலகவதியைச் சந்தித்ததை எண்ணிப் பார்க்க ஆவல் கொண்டது.

(தொடரும்)

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இது என் பழைய நாவல் தான். இங்கே புதுப்பித்துள்ளேன். நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
    நிச்சயம் தொடர்கதைகள் படிப்பவர்களை இந்த கதை ஏமாற்றாது என்று உறுதி கூறுகிறேன்.

நன்றியுடன் 
அருணா செல்வம்.