Wednesday, 1 May 2013

போகப் போகத் தெரியும் - 50





   மணியோசை காதைக் கிழித்தது. அதைத் தொடர்ந்து அம்மன் தேரை வடம் பிடித்து இழுக்கும் மக்களின் ஒன்று சேர்ந்த குரல்கள்! பலவித வாத்தியங்களின் கலவை ஓசையின் இன்பம் இதயத்தைத் திருடியது.
   மீனா அந்த இன்ப மயமான ஓசையை மட்டும் கேட்டு ரசித்தாள். ஆத்தூர் அம்மன் தேர் உலாவைப் பார்க்க அவளுக்கு இந்த வருடமும் கொடுப்பனை இல்லையே என்று ஏங்கியது மனம்!
   கடந்த மூன்று வருடமும் ஏதாவது ஒரு காரணம் தேர் ஊர்வலத்தைப் பார்க்க முடியாமல் தடுத்தது. ஆனால் .. இந்த வருடம்..?
   கர்ப்பவதிகள் தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாதாம்! காரணம் கேட்டால் விளக்கிச் சொல்ல யாரும் முன் வரவில்லை!
   மீனாவிற்கு இது நான்காம் மாதம்! வயிற்றுக்குள் எதுவோ ஓடிஓடி ஒளிவது போன்ற உணர்வு அடிக்கடி வந்து இன்பமூட்டியது.
   காலையில் தேரைப்பார்க்கப் பட்டுப்புடவையைக் கட்டிகொண்டு கிளம்பினாள். அறிவழகி தடுத்துவிட்டாள். காரணம் கேட்டதற்குப் பெரியவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமே தவிர காரணம் கேக்கக் கூடாது என்று சொல்லிவிட்டாள்!
   மீனாவே யோசித்தாள். நமது முன்னோர்கள் அதிக புத்திசாலிகள். அனுபவத்தில் தான் உணர்ந்ததைத் தான் தனது வழிமுறையினருக்கு உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். எல்லாவற்றிர்க்கும் ஒரு காரணம் இருக்கிறது தான்! ஆனால் அதைச் சரியாக விளக்கவில்லை.
   எதற்காகக் கர்ப்பிணி பெண்கள் தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது..? இப்படி இருக்கலாம்.
   காலை நிகழ்ச்சி என்பதால்.. காலைச் சூரியவொளி அவர்களின் தலையைச் சூடேற்றி மயக்கத்தை உண்டு பண்ணலாம். இல்லையென்றால்.. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நெறிச்சலால் பின்விளைவுகள் ஏற்படலாம். .. அல்லது தேர் நகர்ந்து வரும் பொழுது பார்க்கச் சற்றுப் பயமாக இருக்கும்.! கர்ப்பிணி பெண்களுக்கு பயம் கூடாது என்பதாலும் இருக்கலாம்.
   ஏதோ ஒன்று இருக்கிறது. முன் எச்சரிக்கைக்காகக் கர்ப்பிணி பெண்கள் தேர் ஊர்வலத்திற்குப் போகக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
   மக்களின் கரகோசை கேட்டது. பட்டாசுக்கள் வெடிக்கும் ஓசை! தேர் தேரடிக்கு வந்துவிட்டது! மனத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
   ;உன்னால தான் நான் இந்த வருஷம் தேர் பாக்க முடியாம போயிடுச்சி. ; தன் வயிற்றைச் செல்லமாகத் தட்டினாள்.
   'போனால் போவுது. அடுத்த வருஷம் நாம எல்லாரும் சேர்ந்து பாக்கலாம்" வயிற்றைத் தொட்டுக் கையை முத்தமிட்டாள்.
   அவளுக்கே அவளின் செய்கைகள் சிரிப்பை வரவழைத்தது. ஆனால் தவறாகத் தெரியவில்லை. இந்தக் குழந்தைக்காக.. இந்த உறவுக்காக.. அவளை வாழ்நாள் முழுவதும் தேர் ஊர்வலம் பார்க்காமலேயே இருந்துவிட வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் நிச்சயமாக அதற்குக் கட்டுபட்டு இருந்திருப்பாள்.
   அந்த அளவுக்கு இந்தக் குழந்தையின் மீது ஆசையும்.. அன்பும்.. அக்கரையும்.. இருந்தன.
   அன்று அகிலாண்டேசுவரி.. 'உனக்கு உன் வயிற்றில் இருக்கும் குழந்தை முக்கியமா..? உன் கணவரின் உயிர் முக்கியமா..?" என்று கேட்டப் பொழுது.. அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. கணவனும் வேண்டும். அதே சமயம் குழந்தையும் வேண்டும். இரண்டுமே இரண்டு கண்கள்! அதில் எதை இழப்பது?
   மாமியார் நீ அனாதைக் கிடையாது. நீ என்னோட தம்பி மகள் தான். இந்தக் கொழந்தையாலத் தான் நீ அனாத இல்லன்னு நிறுபிக்க வேண்டிய அவசியம் கெடையாது. இந்தக் கொழந்த இல்லன்னா வேற பெத்துக்கலாம். ஆனா.. உம்புருஷன் போயிட்டா என்ன பண்ணுறது..? என்ற அவர்களின் கேள்விக்குப் பதில் தெரியாமல் தவித்தாள்.
   ஆனால் என்றும் போல அன்றும் சக்திவேல் தான் அவளைக் காப்பாற்றினான்.
    அம்மா.. ஜாதகம் ஜோசியம் எல்லாம் நடக்கப் போறத முன்கூட்டியே சொன்னாலும்.. எல்லாமே விதிப்படி தானே நடக்கும்? நீ சொன்னது எல்லாமே நடந்து இருக்கலாம். இருந்தாலும் நம்மால எதையுமே மாத்த முடியலையே.. நடக்கிறது நடந்துக்கினே தான் இருக்கும். அதனால இதையும் இப்படியே விட்டுடுங்க. மீனாவுக்கு ரெண்டாவது தாலிதான் நெலைக்கும்ன்னு ஜோசியர் சொன்னது உண்மைன்னு நீங்க ஒத்துகிட்டா.. அவ தாலி பாக்கியம் என்னோட உயிர காப்பாத்துட்டும். விடுங்கம்மா. பாவம் அவ. ஏற்கனவே வயத்துல அடிபட்டு இருக்குது. இந்தப் பாவத்த வேற செஞ்சி அவ ஒடம்ப வீணாக்க வேணாம்."
   முடிவாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
   மகன் சொன்னது சரி என்று பட்டாலும்.. அகிலாண்டேசுவரி அன்றிலிருந்தே கோவில் கடவுள் விரதம் என்று பூசை அறையிலேயே காலத்தைத் தள்ளினாள்.
   மனிதனுக்கு மதியையும் படைத்து அதையும் தனது விதி என்ற கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விளையாடும் தெய்வம்.. அவனை விளையாட்டுக் கருவியாகத் தான் பயன் படுத்துகிறது!
   ஆடி முடித்துவிட்டால் கிடைக்கும் வெற்றியும் தோல்வியும் அவனுக்கே சமர்பனமாக்கப் படுகிறது!
   மீனா.. கடவுளின் உதவித் தனக்குத் தேவையில்லை என்றே நினைத்தாள். காரணம் தனக்கு என்று அவள் எந்த விருப்பத்தையும் வைத்திருந்ததில்லை!
   தெளிவான மனம் எதைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை! அதற்காக அடுத்தவர்களின் நம்பிக்கையை அலச்சியப் படுத்தியதில்லை.
   ஏதோ ஒரு சக்தி! அதன் விருப்பப்படி நாம் செல்கிறோம். நமக்கு நல்லது எது? கெட்டது எது? என அறியும் ஆற்றல் கொடுக்கப் பட்டிருக்கிறது. சில சமயங்களில் நம்மையும் அறியாமல் நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் நினைத்து மாறுபட்ட வழியில் போக நேர்ந்து விட்டால்.. அப்பொழுது கடவுள் என்ற பெயர் வழிகாட்டியாகவும்.. தடை நீக்கியாகவும்.. உதவ வேண்டும் என்று நினைக்கிறோம்.
   ஆனால் சரியான வழியில் போகும் வரை.. நமக்கு யார் உதவியும் தேவையில்லை என்பது அவள் எண்ணம்!
   இது வரை அவள் சரியான பாதையில் தான் போய்க் கொண்டு இருக்கிறோம் என்று தான் நினைத்தாள். ஆனால் மாமியாரின் வார்த்தையை மீறிக் கருத்தடை மாத்திரையையும் மீறி உண்டாகி விட்ட கருவை.. அவளின் உயிராக நினைத்தாலும்.. மாமியார் சொன்ன விசயங்கள் பயமுறுத்தத் தான் செய்தது.
   பயம் தைரியசாளியையும் கோழையாக்கி விடுகிறதே..! அதனால் தான் இன்று ஊர்வலமாக வரும் அம்மனைத் தரிசித்து  எந்த ஆபத்தமும் நிகழ்ந்து விடக்கூடாது“ என்று கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அது முடியாமல் போன வருத்தம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
   இந்த வருத்தத்தைத் தேர் பார்த்துவிட்டு வந்த கண்மணியின் வருகை மறக்கச் செய்தது.
   வெற்றிவேல் மீனாவின் விருப்பப்படி கண்மணியை ஆத்தூர்த் தேர் திருவிழாவிற்குச் செல்ல அனுமதி அளித்து இருந்ததால்.. கண்மணி அவளின் அப்பா அம்மாவுடன் வந்திருந்தாள்.
   மீனா கண்மணியைக் கேலி பண்ணினாலும்.. அதை அவள் அலச்சியப் படுத்தினாள். மீனாவிற்கு இது கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருந்தது. போகப் போகச் சரியாகிவிடும் என்று நினைத்தாள்.
   பழகிப் பார்த்தால் தான் மனிதர்களின் மனங்களைப் புரிந்து கொள்ள முடியும்! வெற்றிவேல் கண்மணியை அதிகமாக நேசிக்கிறான். ஆனால் அதை அவனுக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. கல்யாணம் ஆகிவிட்டால் புரிந்து கொள்வாள்.
   திருவிழா முடிந்ததும்.. மதியம் நடக்கும் காளையடக்கும் போட்டி முடிந்த பிறகு கண்மணியிடம் பேசி அவள் அனுமதியைப் பெற்ற பிறகு.. கல்யாணத் தேதியைக் குறித்தவிட வேண்டும் என்பது அவளின் நோக்கம்!
   அதுவரையில் கண்மணியிடம் பேசிக் குழப்பக்கூடாது என்று கல்யாணத்தைப் பற்றிப் பேசாமல் இருந்தாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

  இந்த வருடம் மைதானத்தில் அதிகக் கூட்டம்! மேடைக்கு எதிரில் சவுக்கு மரக்கட்டைகளால் மைதானத்தில் காளையை அடக்கும் இடம் கட்டப்பட்டிருந்தது. கட்டையை ஒட்டி மக்கள் இடித்துக் கொண்டும் நசுக்கிக் கொண்டும் நின்றிருந்தார்கள்.
   வெற்றிவேலுவின் அருகில் நின்றிருந்த மீனா.. மேடையைப் பார்த்தாள். சக்திவேல் கணேசன் கண்மணியின் அப்பா கண்மணி ஊர் பெரிய மனிதர்கள் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் சேகர் ஜுவா  சிவா சசிதரன் நின்றிருந்தார்கள்.
   சரவணனும் மாதவனும் இல்லாத வெறுமை மனத்தை அழுத்தியது. பெருமூச்சு விட்டுக் கொண்டாள். கண்மணியைப் பார்த்தாள். அவள் முகத்தில் எதையுமே கண்டுபிடித்து விட முடியாத உணர்ச்சி! என்ன தான் அவளுக்கு வேண்டும்?
   முடிவு இது தான் என்று தெரிந்துவிட்ட பிறகு.. அதை ஏற்றுக் கொண்டு அதன் விருப்பப்படி வாழ வேண்டியது தானே மனித வாழ்க்கை..!! இவள் எப்பொழுது அதை ஏற்பாள்?
   தன்னை நினைத்தாள். வேந்தன் இன்று உயிருடன் இருந்தால் அவனுடன் தன்னால் வாழ்ந்திருக்க முடியுமா..? பிடிக்காத ஒருவருடன் வாழும் வாழ்க்கை கம்பி இல்லாதச் சிறை ஆயிற்றே..
   என்ன மீனா.. கண்மணியையே பாத்துக்கினு இருக்கற?
   வெற்றிவேல் கேட்டான். மீனா சிரித்து வைத்தாள்.
   வெற்றிவேல் நீங்க இன்னைக்கி கண்டிப்பா காளைய அடக்கணும். நீங்கத் தான் ஜெயிப்பீங்கன்னு அவர் பத்துப் பவுன் சங்கிலிய மாட்டுக் கொம்புலக் கட்டியிருக்காரு. நீங்க ஜெயிச்சி.. அத கண்மணி கையில கொடுக்கறத நா பாத்துச் சந்தோஷப் படணும் வெற்றிவேல“ என்றாள்.
    மீனா.. கண்மணிக்காக இல்லைன்னாலும்.. நம்மோட ஃப்ரெண்சீப்புகாக நிச்சயமா அந்தக் காளைய அடக்குவேன் மீனா. போதுமா..?“ என்றான்.
   திருப்தியாக இருந்தது. பல காளைகள் வந்து போன பிறகு கடைசியாக வந்தது. ஆத்தூர் காளை! நீண்டக் கொம்பு முனையில் பித்தலை குப்பிகள். வெள்ளைக் குதிரையைப் போல் உயரமாக.. வெள்ளை முகத்தில் நீண்டக் குங்குமப் பொட்டு இட்டுக்கொண்டு;.. அந்த மைதானத்தில் தன்னை வெற்றிபெற யாரும் இல்லை.. என்று சொல்லி மார்தட்டும் வீரனைப் போல் வந்து நின்றது!
   அதை எதிர்க்க வெற்றிவேல் மைதானத்தில் இறங்கவும்.. கூட்டம் கரகோசமிட்டது. விசில் சத்தம் காதைக் கிழித்தது. மாட்டின் வாலை முறுக்கிவிட்டார்கள். மாடு மிரளப் பலவித ஓசைகள் கொடுத்தார்கள்
   அந்தக் காளையின் எதிரில் வெற்றிவேல் நின்றதும் அவனை முட்ட ஓடி வந்தது..
   வெற்றிவேல் அதனுடன் அதிக நேரம் போராடினான்! சில நேரம் அவன் மாட்டின் கொம்பைப் பிடித்ததும்.. இந்த முறை நிச்சயம் அடங்கிவிடும் என்று நினைத்தால்.. அவன் சட்டென்று வழுக்கி விழுந்தான். ஐந்தாறு முறை இவ்வாறாக நடந்தது. கூட்டம் சில நேரங்களில் அனுதாபத்தைக் காட்டியது.
   மீனா.. அவள் நின்றிருந்த இடத்தைவிட்டு அவன் மாட்டைப் பிடித்திருந்த இடத்திற்கு அருகில் போய் நின்று கொண்டு.. அவனுக்கு உற்சாக மூட்ட 'வெற்றிவேல்.. விடாதீங்க. விடாதீங்க.. நல்லா புடியுங்க.." என்று கத்தினாள்.
   ஆனால்.. பாவம் இந்த முறையும் கொம்பைப் பிடித்திருந்த அவனது கை வழுக்கி விழுந்தான். திரும்பவும் எழுந்தான்!
   கூட்டத்திலிருந்து ஒருவன் கத்தினான்.
   நல்லா வேணும். எங்கூரு காளையவா அடக்கப் போற? நல்லா கொம்பு சீவிவுட்ட காள! கொம்பு முழுசா.. இன்னிக்கி அடிச்சப் பன்னி கொழுப்பல்லத் தடவியிருக்கோம்.. உன்னால அவ்வளவு சீக்கிரம் அடக்கிட முடியுமா..? வெற்றிவேலு.. நீ இன்னைக்கி செத்த.."
   மீனா அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள். இதை அக்கூட்டத்தில் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மனத்தில் பயம் அப்பிக் கொண்டது.
   என்ன நினைத்தாளோ..? சட்டென்று வேலிக் கட்டையைத் தாண்டி.. மைதானத்தில் குதித்து வெற்றிவேலிடம் ஓடினாள்! அவன் கையை இறுக்கிப் பிடித்து.. வெற்றிவேல்.. நீ காளைய அடக்கலன்னாலும் பரவாயில்ல.. வா.. வந்துடு.. போலாம்.." இழுத்தாள்.
   அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மீனா.. உன்ன யார் இங்க வரச்சொன்னது?  மொதல்ல இந்த எடத்தவிட்டு போ.." அவள் கையை உதறிவிட்டுக் கத்தினான்.
   எதிரில் நின்றிருந்த காளை.. வெற்றிவேலுவை நோக்கி ஓடி வந்தது. மீனாவை இலேசாகத் தள்ளிவிட்டுக் காளையைப் பிடிக்க அவன் தயாராக நிற்க.. வேகமாக ஓடிவந்த காளை சட்டென்று தன் திசையை மாற்றி மீனாவைக் குத்தித் தூக்கி எறிந்தது!
   தூக்கிவீசப்பட்ட மீனா.. பத்தடித்தள்ளிப் பூமாலையைப் போல்  பொத்தென்று விழுந்தாள். அவளைச் சுற்றி இரத்த வெள்ளம்!!

                           (தொடரும்)

No comments :

Post a Comment