கருநீல நிற
வானம் ஆரஞ்சு வண்ணத்தைப் பூசத் தொடங்கியது. காலை நேர மண் வாசனை மனத்;திற்கு மதுரமாக இனித்தது.
மீனா கிணற்றடியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தாள். இரவு சரியான உறக்கம் இல்லை
என்றதால் கண்கள் இலேசாகச் சிவந்து இருந்தது. சரியாகத் தூங்கினாலும்
தூங்காவிட்டாலும் காலையிலேயே எழுந்துவிடுவது அவள் வழக்கம்.
காலைக்
காட்சிகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதுமையைக் கொண்டு
வருகிறது. ஆனால் நல்லவற்றை மனம் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறது. கவலைகள்
வந்துவிட்டால்.. இந்த நாள் ஏன்தான் வந்ததோ.. என ஏசுகிறது. நல்லவைகளையும்
கெட்டவைகளையும் ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்ள நாம் என்ன ஞானிகளா..? என்ற மனத்தை அடக்கினாள்.
ஞானிகளும் மனிதர்கள் தானே..? என்ன.. அவர்கள் அனைத்தையும் உணர்ந்தும் உதறியும்
விட்டவர்கள்!
'மீனா.."
யாரோ கூப்பித் திரும்பினாள். எதிரில் ராதிகா! என்ன இது ராதிகா தானா..? ஏன் இப்படி வெறுமையான
நெற்றி! ஒன்றுமணியாத கழுத்து! ஏன்..? என்னவாயிற்று..? சரியாக விடியாதப் பொழுது! அவள்
தானா இவள்..? சந்தேகம்!
'நீ
ராதிகா.. தானே..?"
'ஆமா..
லட்சுமணனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்களே.. அதே ராதிகா தான்."
மீனா
அதிர்ச்சியுடன் நிமிர்ந்து 'என்ன.. இப்படி..?" சரியாக வார்த்தை வரவில்லை
அதிர்ச்சியில்!
'மீனா.. நா
ஒங்கூட கொஞ்சம் தனியா பேசணும். வா.."
அவள்
இவளின் பதிலை எதிர்பார்க்காமல் தோட்டத்து வேலி தட்டையை எடுத்துவிட்டு நடந்தாள்.
மீனா அவசரமாக வாயைக் கொப்பளித்து விட்டு அவளைப் பின் தொடர்ந்தாள்.
யாருமில்லாத மறைவான இடத்தில் போய் ராதிகா நின்றாள். கற்றாழை ஆட்களை விட
உயர்ந்து வளர்ந்திருந்தது. மீனா அவளெதிரில் வந்ததும் யாராவது பார்க்கிறார்களா
என்று பார்வையால் அலைந்த வண்ணம் தொடங்கினாள்.
'மீனா.. நா
உங்கிட்ட எதையும் சொல்ல கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டிருக்காங்க. அதையும் மீறி நா
சொல்றேன்னா நீ நல்லா இருக்கணும்ன்னு தான். மீனா சரவணனையும் மாதவனையும் கொன்னது
எம்புருஷன்தான்."
'என்னது..?"
'ஆமா மீனா..
கேள்வி எதுவும் கேக்காத. வெளக்கமா நடந்தத சொல்லிபுடுறேன். நேரங் கெடையாது. எனக்கு
கல்யாணம் நடக்கக்குள்ள தேனப்பன் தடுக்கல. வெற்றிவேலு நல்ல எண்ணத்துல தான் கல்யாணம்
செஞ்சி வச்சாரு. ஆனா தேனப்பன் தனக்கு இங்க நடக்கிற விசயங்கள தெரிஞ்சிக்க நல்ல ஆள்
கெடைச்சிதுன்னு நெனச்சாரு. மாமியார் பாவம்! அப்பாவி. ஒரு மாசம் நல்லா தான்
குடும்பம் நடந்துச்சி. அதுக்கப்பறம் தான் நீ ஊருல இல்லன்னுறதும் ஒன்ன யாருக்கும்
தெரியாம வெளியூருக்கு அனுப்பிட்ட விசயம் தேனப்பனுக்குத் தெரிஞ்சிது.
என்னைய நீ
எங்க இருக்கிறன்னு தெரிஞ்சிக்கினு வரச் சொல்லி அம்மா வூட்டுக்கு அனுப்பிட்டாங்க.
தெரிஞ்சிக்கினு வந்து சொன்னா தான் வீட்டுல சேப்போம்ன்னு சொல்லிட்டாங்க. நானும்
வந்துட்டேன். சத்திவேலு அண்ணங்கிட்ட சொல்லிடலரம்ன்னு தான் மொதல்ல நெனச்சேன். ஆனா
இதனால ரெண்டூருக்கும் சண்ட வருமோன்னு பயமா இருந்துச்சி. இதுக்கு நடுவுல எம்புருஷன்
யாருக்கும் தெரியாம என்ன வந்து பாத்துட்டு போச்சி. நாங்க அடிக்கடி தெக்கல இருக்கற
கெணறு பக்கத்துல பம்பு கொட்டையான்ட சந்திச்சிக்கினோம்.
ஒரு நாளு
நா அவருக்காக காத்துக்கினு இருந்தப்போ.. சரவணனும் மாதவனும் வந்தாங்க. அவங்க ரெண்டு
பேரும் அங்க வந்து சிகரெட் புடிக்கிறது வழுக்கம் போல. என்னைய அங்க பாத்ததும் வேற
வழியில போயிட்டாங்க. இவங்க போனத எம்புருஷன் பார்த்திருக்காரு. மறுநாளும் நா அங்க
இருக்கும் போது அவங்க வந்தாங்க. 'என்னா ராதிகா..? உம்புருஷன் ஒருநாள் கூடப் பிரிஞ்சிறுக்க மாட்டான் போல
இருக்குது. எதுக்கு அம்மா வீட்டுக்கு அனுப்பணும்..? கூடவே வச்சிருக்க வேண்டியது தான..?"ன்னு சொல்லிக் கேலி
பண்ணாரு சரவணன்.
எனக்கு
என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியாம சிரிச்சிக்கிட்டேன். இத எம்புருஷன் தூரத்துல
இருந்து பாத்திருக்காரு. அப்புறம் ரெண்டு மூனு நாளா நா போய் அவருக்காக
காத்துக்கினு இருந்தேன். அவரு வரல. அப்ப சரவணன் மட்டும் தனியா வந்தாரு. என்ன
கேலியா பத்து சிரிச்சிட்டு.. 'கால் செருப்பு அறுந்துடுச்சி. நீ போறப்ப எனனோட வீட்டுல
போட்டுட்டு போயிடு."ன்னு சொல்லிட்டு வெறுங்காலோட நடந்து போயிட்டாரு. நா அந்த
செருப்ப மறந்துட்டன். ஆனா அன்னைக்கி வந்த எம்புருஷன் அங்கக் கெடந்தச் செருப்பப்
பாத்துட்டு சந்தேகத்தோட என்னையும் சரவணனையும் சேத்து வச்சி பேசி திட்டிட்டான்.
நா அது
மாதிரி எதுவுமில்லன்னு சொல்லி அழுதன். கேக்கல. கோவமா போயிட்டு நாளுநாள்
கழிச்சித்தான் வந்தான். நறைய குடிச்சிட்டு என்னையும் சரவணனையும் சேத்து வச்சி
கன்னாபின்னான்னு திட்டிக் கத்தினான். என்ன அசிங்கமான வார்த்தைங்க.. சே. சொல்லவே
வாய் கூசுது. அவரோட அன்புக்காக நா இருந்தத வச்சி.. இப்ப புருஷங்கூட இல்லாததால
ஒடம்பு சொகத்துக்கு நாயிமாதிரி அலஞ்சி திரியரன்னு.. ரொம்ப.. என்னன்னவோ சொல்லித்
திட்டினான். அந்த நேரம் பாத்தா மாதவனும் சரவணனும் வரணும்?
என்ன
திட்டிக்கினு இருந்த மனுஷன் சட்டுனு சரவணனோட சட்டையப் புடிச்சி அசிங்கமா
திட்டினான். ரெண்டு பேருக்கும் ஒன்னம் புரியல. இந்த ஆளு வாய் பேச்சி வாயோட
இருக்கும் போதே.. இடுப்புல இருந்த கத்திய எடுத்து.. சட்டுன்னு சரவணனோட கழுத்த
அறுத்துட்டான். பாவி. எங்க ரெண்டு பேருக்கும் என்ன நடந்துச்சின்னு யோசிக்கறதுக்கு
முன்னாடி.. மாதவனோட வயத்துல கத்தியால குத்திட்டான். மாதவன் பலங்கொண்ட மட்டும் அந்த
ஆள புடிச்சி தள்ள.. கீழ விழுந்தவன் மண்டை கெணத்து செவுத்துல மோதிக்கிச்சி.
அந்த
ஆத்தரதோட எழுந்து மாதவன மேல மேல கத்தியால குத்தினான். எனக்கு என்ன செய்யறதுன்னே
தெரியல. அங்கக் கெடந்த பெரிய கல்லத் தூக்கி அந்த ஆளு தலையிலப் போட்டேன். மயக்கமாயி
கெணத்துல வுழுந்துட்டான். நா கல்லையும் கெணத்துகுள்ளப் போட்டுட்டு.. இவங்க ரெண்டு
பேரையும் காப்பாத்த ஊருக்குள்ள ஓடியாந்தேன். சாய்ந்தர நேரம். வயலுல யாருமில்ல.
நடந்த
எல்லாத்தையும் சொல்லாம.. மூனு பேரும் மட்டும் அடிச்சிக்கிறாங்கன்னு சொல்லி
ஆம்பளைங்கள கூட்டிக்கினு போய் பாத்தா.. மூனு பேருமே செத்து போய் இருந்தாங்க. ஊருல
காரணம் கேட்டாங்க. ;எனக்குத் தெரியாது. நா போவக்குள்ள மாதவன எம்புருஷன் கத்தியாலக் குத்தினான்.
மாதவன் எம்புருஷன கெணத்துல தள்ளிட்டாருன்னு சொல்லிட்டேன். போலிசு வந்துச்சி. இதையே
தான் சொன்னேன். இந்த விசயத்த நா மொதோ மொதோ ஒங்கிட்ட தான் சொல்றேன். சத்திவேலு
கிட்டக்கூட சொல்லல.
என்னால
தான் மூனு கொல நடந்துச்சி. காரணம் தெரியாம இருந்துட்டா பரவாயில்ல. தெரிஞ்சா ரெண்டு
ஊருக்கும் சண்ட வரும்ன்னு நெனச்சி தான் சொல்லல. ஆனா முடியாது போல. ரெண்டு
ஊருக்காரங்களும் காரணம் தெரியாமலேயே சண்ட போட்டுக்குவாங்க போல இருக்குது.
உன்ன
காலையில எங்கையாவது அனுப்பிட போறாங்களாம். தேனப்பனும் அவன் ஆளுங்களும் இன்னைக்கி
நம்ம ஊருக்கே வந்து எல்லாரையும் சாகடிப்பேன்னு சொல்லி சவால் வுட்டு இருக்கானாம்.
மீனா.. நீ தயவுசெஞ்சி எங்கையும் போவாத. எப்டியாவது சண்டைய நிறுத்து. என்னோட நெலம
மத்தப் பொண்ணுங்களுக்கு வரவேணாம். நா போறன்."
கண்களில்
வழிந்த கண்ணீரையும் மூக்கையும் துடைத்தபடி அந்தப் பெண் போனாள். மீனா
அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. நடக்கப்
போவது என்னவென்று அறியாமல் காகங்கள் கரைந்தன.
²²² ²²² ²²²
²²² ²²² ²²²
²²²
இரவு போன
கணவன் இன்னும் வீடு திரும்பவில்லை. தேடிப்போக நினைத்தவளுக்கு வெளியே போக அனுமதியில்லை.
மணி எட்டு
முப்பது. அவள் யோசனையுடன் அமர்ந்திருந்தாள். அவள் எண்ணம் முழுவதும் லட்சுமணனை
நினைத்திருந்தது. அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிறந்தவன் அவன் என்று
நினைத்திருந்தாள். அவனுமா இப்படி..?
ஒரே
குட்டையில் ஊறிய மட்டைகள்! அதில் ஒன்றிற்கு மட்டும் தனித்தன்மை வந்து விடுமா..?
'மீனா.. நீ
இன்னுமா கௌம்பள..?"
அகிலாண்டேசுவரி கோபமாகக் கேட்டாள்.
'நா
இன்னைக்கி போவல. நாளைக்கிப் பாத்துக்கலாம்." அலட்சியமாகச் சொன்னாள்.
'ஏன்..
என்னாச்சி..?"
'எனக்கு
மனசு சரியில்ல."
'மனசாவது. .
மண்ணாங் கட்டியாவது? மொதல்ல நீ கௌம்பிப் போ. எல்லாம் உன்னாலத் தான் வந்துச்சி. தோ.. ஒன்ற வருஷமா
எதுவுமில்லாம நிம்மதியா இருந்துச்சி ஊரு. நீ வந்தியா..? எல்லாந் தொடங்கிடுச்சி. நீ இந்த
நேரத்துல இந்த ஊருல இருக்கறத விட வெளிய இருந்தா எல்லாரும் எல்லா இருப்பாங்க. போ.
மொதல்ல."
'எல்லாம்
என்னாலையா..?"
'ஆமா..
இன்னிக்கி நடக்கப் போற கலவரம் உன்னாலத் தான். ஒன்னச் சாவடிக்கத்தான் தேனப்பன்
இன்னைக்கி ஆளுங்களோட வர்றேன்னு சொல்லி இருக்கான்.. கௌம்பு.."
அவள்
கத்திக் கொண்டிருக்கும் பொழுதே சக்திவேல் வந்தான்.
'மீனா.. நீ
இன்னுமா ரெடியாவுல? ஒம்பதரைக்கி அப்பாய்ட்மெண்ட். சீக்கிரம் கௌம்பு." என்றான்.
'நீங்க
எங்கூட வர்றீங்கத் தான..?"
'ம்..
வர்றேன். கௌம்பு. மணியாவுது." என்றான்.
இவள்
யோசனையுடன் உள்ளே சென்றவள் சுரிதாரில் வெளியே வந்தாள். 'நான் ரெடி. போவலாமா..?"
அவனை நேருக்கு
நேராகப் பார்த்துக் கேட்டாள். அவளின் பார்வை அவனை வேறு பக்கமாகப் பார்க்க வைத்தது.
'மீனா.. நா
வர முடியாது. நீ மட்டும் போ. வண்டிய நம்ம தொளசி அண்ணன் ஓட்டுவாரு. நீ டாக்டர
பாத்துட்டு அப்படியே உன்னோட ப்ரெண்ஸ் எல்லாரையும் பாத்துட்டு மெதுவா நாங்க யாராவது
போன் பண்ண பிறகு வந்தா போதும்." என்றான்.
'எப்டி..?
இங்க யார்
யாரெல்லாம் செத்து கெடக்கறாங்கன்னு போலிசுக்கு அடையாளம் காட்ட நா வரணுமா..?"
கையை முன்பக்கமாகக்
கட்டிக்கொண்டு கேட்டாள். அவன் அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டான்.
'உனக்கு
விசயம் தெரிஞ்சிருக்கு. பரவாயில்ல. நீ கௌம்பு. விட்டு கொடுக்கறதுக்கும் தணிஞ்சி
போவதுக்கும் ஒரு அளவு இருக்குது. தணிஞ்சி
போறவன முட்டாள் அடிமைன்னு யாரும் நெனச்சிடக் கூடாது இல்லையா..? நானு முட்டாளுங்
கெடையாது. அடிமையும் கெடையாது. இந்த நாள நா ரெண்டு வருஷமா எதிர் பாத்துக்கினு
இருந்தேன். இன்னிக்கி நானு.. இல்ல அவன். முடிவு தெரிஞ்சிடும். நீ என்ன மதிக்கறது
உண்மன்னா.. எந்த மறுபேச்சும் பேசாம கௌம்பு." என்றான். வார்த்தைகள் உஷ்ணத்தில்
கலந்த அழுத்தம்!
கண்கள்
சிகப்பேறிக் கன்னங்கள் துடித்தது. மீனா சட்டென்று தன் கை பையை எடுத்துக் கொண்டு
கிளம்பினாள்.
அவளுக்குத்
தெரியும்! அவள் இப்பொழுது போகவில்லை என்றால்.. வேறு ஏதாவது முயற்சி செய்து அவளை
ஊரைவிட்டு அனுப்பி விடுவான். அல்லது ஏதாவது ஓர் அறையில் பிடித்து அடைத்து
விடுவான். அப்படி செய்யக் கூடியவன் தான் அவன்!
அதனால்
தான் பேசாமல் கிளம்பிவிட்டாள். துளசி அண்ணனை எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும்!!
(தொடரும்)
No comments :
Post a Comment