Friday 9 March 2012

போகப் போகத் தெரியும் -1


     
            தொடர் கதை பாகம் 1

    அந்தி சாயும் நேரம்! ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதால் அந்த ஊரையும் மஞ்சள் குளிக்க வைத்திருந்தான்.
    பொன்னிற பமி! மாலை மயங்கும் நேரம்! இந்த அழகு சூழ்ந்த வேலையில் மீனாவின் மனம் மட்டும் மிரண்டு போய் இருந்தது.
    அந்த மண் சாலையில் அவளைத்தவிர யாருமில்லை. ஒரு காலைத் தாங்கித்தாங்கி நடந்து கொண்டிருந்தாள். ஓடி வந்த பொழுது காலில் கல் இடித்துவிட்டதினால் கட்டை விரல் நகம் பெயர்ந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.
    காயம் பட்ட இடத்தில் வெறும் காலுடன் நடந்ததால் மண் அப்பிக்கொண்டு மேலும் எரிச்சலை அதிகமாக்கியது. ஆனால் அவள் அதை லட்சியப்படுத்த வில்லை மனத்தில் பயத்தின் அழுத்தம் இன்னும் முழுமையாக வெளியேறாததால் காயத்தின் வலி அதிகமாகத் தெரியவில்லை.
    தன்னை யாராவது தொடர்ந்து வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள். யாரும் இல்லை!
    தன்னை யாரும் பின் தொடரவில்லை என்று நினைத்த பொழுது மனம் சற்று மகிழ்ந்தது. மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளிவிட்டுத் தன்னைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தாள். இம்முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றதும் தனக்குச் சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட எண்ணியது மனம்.
    அதிலும் அந்தப்பெண் (?) 'அவளை விட்டுடு. அவள் சக்திவேல் கட்டிக்கப் போற முறைப்பெண்" என்று சொன்னதும் தன்னைப் பிடித்திருந்தவனின் கை நெருப்பைத் தொட்டது போலச் சட்டென்று விட்டதே.......!
    எப்படி இது சாத்தியம்........?
    சக்திவேல் என்ற பெயருக்கு அப்படி என்ன ஒரு பயம்? மறியாதை.....?
    யார் அந்தப் பெண்? யார் அந்த முரட்டு ஆண்? மனம் அங்கே நடந்ததை நினைத்து வட்டமிட்டடது.

            0         0        0        0

    பள்ளி இறுதியாண்டுப் படிக்கும் மீனா அரையாண்டுத் தேர்வு இன்றோடு முடிந்ததும் ஆசிரமத்தில் வைத்திருந்த தன்னுடைய உடமைகளை எடுத்து; கொண்டு தன் அம்மாவைப் பார்க்கக் கிராமத்திற்குக் கிளம்பினாள்.
    பேரூந்தில் ஏகக்கூட்டம்! புளி மூட்டையைப் போல் உள்ளே ஒன்றொடு ஒன்று இடித்து நசுக்கிக்கொண்டு........ நிற்கக்கூட முடியாததால் தன் ஊருக்கு முன் நிறுத்தத்திலேயே இறங்கி விட்டாள்.
    அவள் அப்படி இறங்கியிருக்கவில்லை என்றால் நிச்சயம் இப்படியானதொரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் சிக்கியிருக்க மாட்டாள். ஆனாலும் அவளுக்கு ஒரு சந்தோசம்! ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பாற்றினோமே என்று!
    அவள் பேரூந்திலிருந்து இறங்கி நெடுஞ்சாலை வழியாகப் போகாமல் சற்று விரைவாக ஊர் போய்ச் சேரலாம் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் தானாக ஒரு பாதையை ஏற்படுத்திக்கொண்டு நடக்க....
    ஓரிடத்திலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல்! யாரிடமோ கெஞ்சலாகக் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
    மீனா குரல் வந்த திசையைக் கூர்ந்து கவனித்தாள். அங்கே ஊர்காக்கும் ஐயனார் சிலைக்குச் சற்றுத் தள்ளி ஒரு கிணறு. கிணற்றின் சுற்றுச்சுவர் மூன்றடிக்கு மேல் இருக்கும்.
    கிணற்றின் மறுபக்கத்தில் இருந்துதான் அந்தக்குரல் கேட்டது. மீனா யோசனையுடன் அந்த இடத்தை நோக்கிக் கிணற்றைச் சுற்றிக்கொண்டு நடந்தாள். சற்று அடர்வான செடிகள் வளர்ந்து மற்றவர்களின் பார்வையில் சட்டென்று கவனிக்க முடியாத ஒரு பகுதியில் ஒரு முரட்டு ஆண் ஒரு பெண்ணைப் பலவந்தப்படுத்த முரட்டுத்தனமாக முயற்சித்துக் கொண்டிருந்தான்.
    அவள் 'தொ பாருயா....என்னைய வுட்டுடு. எம்புருஷன் கிட்ட சொன்னாக்க உன்னைய உண்டு இல்லன்னு பண்ணிப்புடும். மறியாதையா என்னைய வுட்டுடு" என்றாள்.
    கெஞ்சலிலும் கொஞ்சம் அதிகாரம் கலந்திருந்தது அவள் குரலில்.
ஆனால் அவன் அவள் பேசியதைக் கேட்பவனாக இல்லை. அவனின் காம வெறியைத் தீர்த்துக் கொள்ள மிருகக்குணத்துடன் அவள் போட்டிருந்த முந்தானையை விலக்கி அவளைக் கட்டியணைக்க முயன்றான்.
    அந்தப் பெண் முரட்டுத்தனமாக இறுக்கியிருந்த அவனின் கைகளை விலக்க முயற்சித்து முடியாமல் தோற்றுக்கொண்டிருந்தாள்.
    இந்த நேரத்தில் தான் மீனா அவர்களைப் பார்த்தாள். என்ன செய்யலாம் என்று யோசித்தவளின் காலடியில் ஒரு பெரிய கல்!
    சட்டென்று குனிந்து எடுத்தவள்......அவன் தலையில் தன் பலம் கொண்டமட்டும் அடிக்க முயன்றாள்.
    ஆனால் முடியவில்லை!
    அவன் தலையை அந்தக்கல் இலேசாகத்தான் மோதியது. அவளுக்கு எப்படி மனம் வரும்? ஒருவனைத் துன்புறுத்த நிச்சயமாக அவள் மனம் சம்மதிக்காது.
    காரணம்....! அவள் மனம் முழுவதும் அன்பு இரக்கம் நிறைந்தது. தனக்குக்கிடைக்காத அந்த அன்பை அவள் மனம் முழுவதும் நிரப்பி வைத்திருந்தாள். அந்த அன்பு உள்ளம் அடுத்தவன் செய்யும் தவறுக்குக் கூடத் தண்டணை தர மறுத்தது.
    மனத்தில் எதை நினைத்துக் கொண்டு வளர்கிறார்களோ அதைக் கொண்டு தான் மனமும் வளர்கிறது. விரோதத்தைத் தன்னுள் அடக்கிய மனம் விரோதத்தன்மையுடன் வளர்கிறது. கவலைகளைச் சுமர்ந்த மனம் எதை நினைத்தும் கவகை கொள்கிறது.
    மீனாவின் மனம் முழுவதும் அன்புக்காகவே ஏங்கி வளர்ந்துள்ளது. அதனால் அவளும் அன்பு கனிவு பாசம் பண்பு என்பதை மனம் முழுவதும் நிரப்பி வைத்திருந்தாள். அந்தத் தங்க மனம் சட்டென்று துறுப்பிடிக்குமா.....?
    கை அவன் செய்கையை நினைத்து அழுத்தமாக ஓங்கினாலும் மனம் அதை மென்மையாக்கி விட்டது.
    தன் தலையில் அடிப்பட்டதும் அவன் திரும்பி இவளைப் பார்த்தான். அவன் கண்களில் ஆச்சர்யம்!! முயல் பிடிக்க வைத்த வலையில் புள்ளிமான் சிக்கிக்கொண்டால் வேடனுக்கு எவ்வளவு சந்தோசமோ..... அந்த அளவு சந்தோசம் அவனின்  சிறு சிறு கண்களில் தெரிந்தது.
    அந்தப்பெண்ணை விட்டுவிட்டு இவள் கையைச் சட்டென்று பற்றினான். ஆறடிக்குக் குறையாத நல்ல வாட்டசாட்டமான உடம்பு. தலைமுடி கழுத்துவரை நீண்டு வளர்ந்திருந்தது. முகத்தில் லேசான தாடி. அவன் அதைச் சொரிந்துக்கொண்டே மீனாவைப் பார்த்தான்.
    மீனா மிரட்சியாக அவனைப்பார்த்தாள். அவன் அழுத்தமாக இறுக்கிக் கையைப் பிடித்திருந்ததால் கை வலித்தது. அவனிடமிருந்து கையை விடுவிக்க முயன்றாள். முடியவில்லை.
    அப்பொழுது தான் அந்தப்பெண் சொன்னாள்.
    'அவளை விட்டுவிடு. அவள் சக்திவேல் கட்டிக்கப் போற முறைப்பெண்" என்று.
    அப்பா...... அந்த வார்த்தைக்குத்தான் எவ்வளவு சக்தி! ஏதோ மின்சாரத்தைத் தொட்டவன் போல் சட்டென்று அவள் கையை விட்டான்.
    அந்தப்பெண் நொடிப்பொழுதுக்குள் தரையில் இருந்த மண்ணை அள்ளி அவன் முகத்தை நோக்கி வீச...... அவன் கண்களில் மண்பட்ட அதிர்ச்சியால் கண்களை மூட......
    'இந்தாம்மா....... நீ ஓடிப்போயிடு......" என்று அவள் இவளிடம் சொல்லிக்கொண்டே ஒரு பக்கமாக ஓடினாள்.
    மீனாவும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடத்தொடங்கினாள். அவன் தன்னைப் பின்னால் தொடர்கிறானா என்று திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை. தலைத்தெறிக்க ஓடினாள்.
    அப்படி ஓடிய பொழுது தான் கால் ஒரு கல்லில் இடறி நகம் பெயர்ந்தது. செருப்பும் அறுந்துவிட்டது. அறுந்த செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு அவசரமாக எழுந்து மீண்டும் ஓடினாள்.
    இதோ தன் ஊருக்குள் போகும் பாதையைத் தொட்டதும் சற்று நிம்மதி பிறந்திருந்தது. மனம் நிம்மதியடைந்ததும் அடிப்பட்ட இடத்தின் வலி தெரிய ஆரம்பித்தது.
    மெதுவாகத் தாங்கித்தாங்கி நடந்தாள்.
    அவளைத்தாண்டி ஒரு மோட்டார் சைக்களில் ஒரு வாலிபன் மின்னல் வேகத்தில் போனான்.
    அவன் போன வேகத்தில் பாதை புழுதியை வாரி இறைத்தது. முகத்தில் அடித்த புழுதிக்காற்றைக் கையால் ஆட்டித் தடுத்துக் கொண்டே நடந்தாள்.
    சற்றுத் தூரத்தில் சென்ற வண்டி சட்டென்று நின்று அரை வட்டமடித்துத் திரும்பி அவளை நோக்கி வந்தது. மீனாவும் யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
    வந்தவன் இவளருகில் வண்டியை நிறுத்தினான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
    நல்ல அழகான வாலிபன். இருபத்தைந்து வயது இருக்கும். சிவந்த நிறம். தூக்கிவாரிய தலைமுடி. கண்களில் குளிர்க்கண்ணாடி. நல்ல உயரம். நீலத்தில் கோடுபோட்ட சட்டையை அழுத்தமான நீலக்கலர் பேண்டில் செறுகிப் பெல்ட் அணிந்திருந்தான். அவன் முதுகு பின்னால் ஒரு தோல் பை. அது அவனின் இரண்டு தோள்களிலும் மாட்டிப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தது.
    'யாராக இருக்கும்?" மீனா சிந்திப்பதற்குள் அவன் கேட்டான்.
    'யாரம்மா நீ........? எங்கே போகனும்........?"
    குரலும் கம்பீரமாக இருந்தது.
    அவள் இப்பொழுது தான் ஒருவனிடமிருந்து தப்பித்து வந்து கொண்டிருக்கிறாள். திரும்பவும் ஒருவனா? ஆனால் இவனைப்பார்த்தால் தவறான எண்ணம் உடையவன் போல் தெரியவில்லையே.......
    இருந்தாலும் மனத்தில் சற்றுப்பயம். ஒருவன் தன் தெரிந்தவர்களி
டமிருந்து கற்றுக்கொள்வதை விட எதிரியிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறான் என்பதற்கு மீனா விதிவிளக்கா என்ன.......?
    சட்டென்று சொன்னாள்.
    'நான் சக்திவேலுவுக்கு வேண்டியப் பெண்"  என்று.
    இப்பொழுது அவன் முகத்தில் அதிர்ச்சி! போட்டிருந்த குளிர்க் கண்ணாடியைக் கழற்றிவிட்டு அவளை நோக்கினான்.
   
-    தொடரும் -

4 comments :

 1. # மனத்தில் எதை நினைத்துக் கொண்டு வளர்கிறார்களோ அதைக் கொண்டு தான் மனமும் வளர்கிறது. விரோதத்தைத் தன்னுள் அடக்கிய மனம் விரோதத்தன்மையுடன் வளர்கிறது. கவலைகளைச் சுமர்ந்த மனம் எதை நினைத்தும் கவகை கொள்கிறது.#
  அருமை. மொபைல் மூலம் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது தளம்:http://newsigaram.blogspot.com/

  ReplyDelete
 2. கதையை நன்றாகத்துவக்கி நயமாக எடுத்துச் செல்கிறீகள்.
  பணிவான பாராட்டுக்கள்...
  மனம் எனகிறப் பணியாளனை, எப்படி வளர்க்கிறோமோ அப்படித்தான் என்பதை அழகாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்.
  இப்போது அனைத்துப் பாகங்களையும் படித்துவிட வேண்டும் என்கிற பூத்துவிட்டது என்னுள்.

  ReplyDelete
 3. அன்பின் அருணா செல்வம் - தவக்கம் அருமை - ஒரு பெண்ணின் மன நிலை அழகாகச் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. ஒரு பெண்ணைக் காப்பாற்றும் விதமாக மீனா கல்லெடுத்து அடிக்க, அவ்வாபத்து இவள் மீது பாய - அப்பெண்ணே மீனாவைக் காப்பாற்ற, இரு பெண்களும் இரு பக்கங்களீல் செல்ல, மீனாவினை இங்கும் ஒருவன் தொடர - மீனா அப்பெண் கூறீய ம்ந்திரத்தையே பயன் படுத்த - இத்தொடர் முடிகிறது. சஸ்பென்ஸ் தொடர்கிறது. தொடரும் வாலிபந்தான் அம்மந்திரச் சொல் குறிக்கும் வாலிபனா ? அடுத்த தொடரினைப் படிப்போம். சஸ்பென்ஸ் விலகும்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. ஒரு பெண்ணின் மன நிலை அழகாகச் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. அருமை

  ReplyDelete