Tuesday, 7 May 2013

போகப் போகத் தெரியும். - 51
 
   மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதியின் செயல் என்று சும்மாவாகவும் இருந்துவிட முடியாது.
   'மீனா.. காயம் நல்லா ஆறிடுச்சி. இன்னும் ரெண்டு நாள்ள டிசார்ஜ் ஆயிடலாம். நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. எல்லாம் சரியாயிடும் என்ன..? "
   இன்று தான் தையல் பிரித்தக் காயத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் டாக்டர் ஆனந்தி. மீனா பேசாமல் படுத்திருந்தாள். டாக்டரின் கேள்விக்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை!
   டாக்டர் மீனாவைப் பார்த்துப் புன்முறுவலுடன்  சென்றாள். மீனா மெதுவாக எழுந்து உடையைச் சரிசெய்து கொண்டாள். கண்ணாடி ஜன்னல் வழியாகச் சுறுசுறுப்பான உலகத்தை எந்த வித நோக்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
   டாக்டர் போன கொஞ்ச நேரத்தில் சக்திவேல் நுழைந்தான். 'மீனா.. காயம் நல்லா ஆறிடுச்சாம்.. இன்னும் ரெண்டு நாள்ல டிச்சார்ஜ் பண்ணிடுறேன்னு டாக்டர் சொன்னாங்க. மீனா.. எனக்கு இப்பத்தாம்மா நிம்மதியா இருக்குது. உன்னத் தூக்கிக்கினு வந்து இங்கச் சேத்தப்போ.. என்னோட உயிர் போயிடக் கூடாதான்னு இருந்துச்சி. நல்ல வேல. எப்படியோ கடவுள் அருளாலப் பொழச்சிட்ட. இதுவே எனக்குப் போதும்டா.."
   குரல் தழுத்தழுக்கச் சொன்னான். கடவுள் அருளால் உயிர் பிழைத்துவிட்டால் போதுமா..? வாழ்வதற்கு ஓர் அர்த்தம் வேண்டாமா..? அடி வயிற்றைக் கையால் தொட்டு ஏக்கத்துடன் தன் கணவனைப் பார்த்தாள். அவளின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டான்.
   'மீனா.. கொழந்த தானே.. அதுக்கு உன்னோட வயித்துல வளர கொடுத்து வக்கல. போனா போகட்டும்டா.. நீ நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும்டா.." அவளை அணைத்தவாறு அழைத்துக் கொண்டு போய் கட்டிலில் அமர வைத்தான்.
   'மீனா.. இன்னும் எத்தன நாளைக்கித் தான் இப்படி யார் கூடயும் போசாம இருப்ப? மனசுவிட்டு பேசுமா.."
   அவள் பேசாமல் இருந்தாள். அளவிற்கு அதிகமான துக்கங்கள்.. சில நேரங்களில் மனிதர்களை மௌனிகளாக்கி விடுகின்றன.
   கதவைத் தட்டிவிட்டு வெற்றிவேல் வந்தான். அவனைப் பார்த்ததும் அவள் கண்கள் கலங்கியது.
   இத்தனை நாட்களும் அவள் யாரிடமும் பேசவில்லை. வயிற்றைக் கிழித்த காளை அவளை ஊமையாக்கி விட்டதோ..? அல்லது பைத்தியமாக்கி விட்டதோ.. என்று பயந்தார்கள். ஆனால் ஒன்றுமில்லை. அதிர்ச்சி தான். போகப் போகச் சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னது திருப்தியாக இருந்தது. ஆனாலும் அவள் இது நாள் வரையில் யாரிடமும் பேசவில்லை.
   மனத்தின் அழுகைக் கூட மௌனமாகத் தான் வெளிவந்தது. வெற்றிவேல் அவள் அருகில் வந்து அமர்ந்தான். மீனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் தேங்கிய நீர் கன்னத்தில் கோடு போட்டது.
   'வெற்றிவேல்.. என்ன மன்னிச்சிடுவீங்களா..?"
   அவன் புரியாமல் சக்திவேலுவைப் பார்த்தான். அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் இத்தனை நாள் கழித்துப் பேசினாளே.. என்ற திருப்தி இருவர் முகத்திலும் வந்தது.
   'என்ன மீனா.. சொல்லுற..? நா எதுக்கு உன்ன மன்னிக்கணும்? எல்லாருக்குமே உதவணும்ன்னு நெனைக்கிற நீ என்ன பாவம் செஞ்ச?"
   'இல்ல வெற்றிவேல்.. நா தான் காளைய அடக்கச்சொல்லி உன்ன அழச்சேன். அந்தக் காள மட்டும் உன்ன குத்தியிருந்தா.. கடவுளே.. என்னால நெனச்சிக்கூடப் பாக்க முடியல. மனுசங்க சுயநலவாதியா இருந்தா கூடப் பரவாயில்ல. ஆனா சந்தர்ப்ப வாதியாவும் பழிவாங்குற உணர்ச்சியோடு.. சே.. ஏன் இப்படி..? எப்போ திருந்துவாங்க? அவங்கள நினைக்கவே எனக்கு வாழப்புடிக்கல. அந்த ஊருக்குத் திரும்பவும் போற ஆசையே போயிடுச்சி வெற்றிவேல்.." என்றாள் குரல் கடுமையாக வந்தது.
   'அப்படி சொல்ல கூடாது மீனா. ஒவ்வொருத்தர் மனசுலேயும் ஒரு காயம். மனக்காயமெல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல ஆறாது. ஏன்.. இப்ப என்னையே எடுத்துக்கோயேன். இந்த நிகழ்ச்சி என்னோட மனசுல பெரிய காயமாத்தான் ஆயிடுச்சி. அந்த மாடு என்ன குத்தியிருந்தா கூட நா இவ்வளவு கவலப்பட்டு இருக்க மாட்டேன். உன்ன போயி.. சே.. நா அந்த நிமிஷமே பாதிச் செத்துட்டேன் மீனா. என்னால தான் ஒனக்கு இப்படி ஆச்சி. நா சந்தோஷமா இருக்கப் போற ஒவ்வொரு நொடியும் எம்மனசுல இந்த வலி வந்து உருத்தும் மீனா.."
   கலங்கிய விழிகளை மறைக்க முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.
   'வெற்றிவேல் இது உங்க தப்பு இல்ல. என்னோட தப்பு தான்! நா நடுவுல வந்து இருக்கக் கூடாது. எங்க அந்த மாடு உங்கள குத்திடுமோன்னு ஓடியாந்தேன். உங்க மேல தப்பு இல்ல. நீங்க அந்த நிகழ்ச்சியை மறந்திடனும். நானும் மறக்க பாக்குறேன். ஆனா.. நம்ம ப்ரெண்ஷ{ப் மட்டும் கடைசி வரைக்கும் மாறக்கூடாது என்ன.."
   'மாறாதும்மா.." அவள் கையைப்பிடித்துக் குலுக்கிவிட்டுச் சென்றான். அவன் போனதும் சக்திவேல் கேட்டான்.
   'மீனா.. ஊருக்கு வரப் பிடிக்கலன்னு சொன்னீயே.. ஏன்.. பிரச்சனைகள சமாளிக்க முடியாதுன்னு பயந்துட்டியா..?"
   'பயம் இல்ல. வெறுப்பு. நமக்கு எதிரியா வெற்றிவேல் தான் இருப்பாருன்னு நெனச்சேன். ஆனா.. அது தப்புன்னு அவரோட நல்ல குணம் உணர்த்திடுச்சி. இனிமேல நமக்குப் பகையே கெடையாதுன்னு ரொம்பச் சந்தோஷப்பட்டேன். ஆனா.. நம்மூர் குள்ளேயே பகையா..? மனசு ரொம்ப வலிக்குதுங்க."
   'கவலப்படாத மீனா. பொதுவா களைவிரட்டுல கொம்பச் சீவிவுட்டு.. கொழுப்பு தடவுறது எல்லாம் சாதாரணமா நடக்கறது தான். நீ தான் தப்பா புரிஞ்சிக்கிட்ட. போவுது வுடு. இனிமே கவலப்பட்டு ஒரு புரோஜனமும் இல்லை. " என்றான் தேய்ந்து போனக் குரலில்.
   அதே நேரம் அகிலாண்டேசுவரி அம்மாள் வந்தாள்.
   'அம்மாடி கவலப்படாதடா.. நா ஜோசியர்கிட்ட கேட்டேன். நிச்சியமா நம்ம குடும்பத்துல சக்திவேலுவுக்கு வாரிசு இருக்குதுன்னு அடிச்சி சொன்னாரு. இந்தப் புள்ள போனா என்ன..? வேறபுள்ள பொறக்கப் போவுது. நா பாக்குற ஜோசியம் பொய்க்காது. எனக்கு நம்பிக்கை இருக்குது." என்றாள்.
   மீனா கணவனைப் பார்த்தாள்.
   'நேத்து அம்மா ஜோசியம் பாக்கப் போனாங்க. அதான் இப்டி பேசுறாங்க. அவங்களுக்கு எதையாவது சொல்லிக் கொழப்பறதே வேலையா போயிடுச்சி." என்றான்.
   கதவைத் தட்டிவிட்டு ஒரு நர்ஸ் சாப்பாட்டு டிரேயைக் கொண்டு வந்து வைத்தாள்.
   அகிலாண்டேசுவரி மகனை முறைத்துவிட்டு மருமகளிடம் திரும்பினாள்.
   'நா சொல்லுறது சத்தியம் மீனா. சக்திவேலுவுக்கு வாரிசு இருக்குதுன்னு ஜோசியர் சொன்னாரு. அவர் சொன்னது எல்லாம் நடந்திருக்குது. அதனால நிச்சயமா ஒனக்குக் கோழந்தப் பொறக்கும்; நீ கவலப் படாதம்மா.." என்றாள்.
   நர்ஸ் அந்த அம்மாளை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி சென்றாள்.
   சக்திவேலுவுக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அது இனிமேல் என் வயிற்றில் வந்து பிறக்க முடியாது. குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று டாக்டர் சக்திவேலுவிடம் சொன்னது எனக்கும் தெரிந்துவிட்டதே.. என்றது அவளின் வெந்து போன உள்ளம்!!
   சக்திவேலுவுக்குக் குழந்தை பாக்கியம் இருக்கிறது.. ..அவள் மனத்தில் ஒரு முடிவெடுத்து கொண்டு  விட்டாள்.

   இரவு. ஓய்விற்காக ஒதுக்கப் பட்ட நேரம். மீனா அப்பொழுது தான் உழைத்தாள்.

   சக்திவேலுவுக்கு!
      எனக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லை என்று டாக்டர் உங்களிடம் பேசியது எனக்குத் தெரியும். ஆனால் என்னிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்து விடலாம் என்று நினைத்து வாழும் உங்கள் அன்பு உள்ளம் எனக்குப் புரிகிறது. ஆனால் வேண்டாம். உங்கள் அம்மாவின் நம்பிக்கை நிச்சயம் உங்களுக்குக் குழந்தைப் பிறக்கும் என்பதே..!
   ஆனால் நான் உங்களுடன் இருக்கும் வரையில் இது சாத்தியப்படாது. அதனால் நான் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் சந்தோஷப்படும் முதல் இதயம் எனதாகத் தான் இருக்கும்.
               
                            அன்புடன்
                      மீனாட்சி சக்திவேல்
                      
   கடிதத்தை மடித்து கட்டிலின் மேல் வைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மருத்துவ மனையைவிட்டு வெளியேறினாள்!!

                           (தொடரும்)

1 comment :