Tuesday, 23 October 2012

போகப் போகத் தெரியும் - 27



   நேற்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டபடி மீனா தன் உடமைகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்;. நேற்றைய நிகழ்ச்சிகள் இன்று ஞாபகாத்தங்களாகி விடுகிறது.  இப்பொழுது என்பதும் அந்த நொடியிலேயே ஓடி விடுகிறது. அப்படியானால் காலத்திற்குத் தான் எத்தனை கால்கள்?
   மீனா அனைத்தையும் அடுக்கிவிட்டு நிமிர்ந்தாள். அப்பொழுது அங்கே சக்திவேல் இல்லை. அவளுக்குத் தெரியும்! இந்த நேரத்தில் நிச்சயமாக அவன் வீட்டில் இருக்கமாட்டான் என்று!
   கமலா தான் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மீனா எதையோ தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தாள். சிறிது நேரம் கழித்து மாடிக்குப் போனாள்.
   அவள் இப்பொழுது இங்கே வந்தது இதற்குத்தானே..!
   எப்படியாவது சக்திவேலின் ஒரு புகைப்படத்தையாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே அவளது எண்ணம்!
   மாடியில் தொலைக்காட்சிப் பெட்டியின் மீது அவனது படம் இருந்ததைப்  பார்த்திருக்கிறாள்.  அது தான் இப்பொழுது அவளுக்கு வேண்டும்.
   சட்டத்திலிருந்து மெதுவாக அவன் படத்தை உருவினாள்.
   என்ன அதிசயம்!!
   படத்திற்குள் படம்! அதுவும் மீனாவுடையப் படம். கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்திருக்க வேண்டும். சிகப்புச் சராரா உடையில் இருந்தாள். அவளின் படத்தை அங்கே பார்த்ததும் மனம் படபடப்பாகியது. சட்டத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு அருகில் இருந்த புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை உருவி அதனுள் எடுத்தப் படத்தை வைத்து கொண்டு கீழிறங்கினாள்.
   மனம் பட்டாம்பூச்சியாகப் பறந்தது. சந்தோஷம் முகத்தில் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. மறைக்க முயன்றாள். முடியவில்லை. கமலா தன்னை வினோதமாகப் பார்ப்பதை போல் உணர்ந்தாள். அவள் தன் முகத்தைப் பார்க்காதவாறு திருப்பிக் கொண்டாள்.
   தனது பெட்டியைத் தூக்கிக் கொண்டு அகிலாண்டேசுவரி அம்மாள் எதிரில் வந்து நின்றாள்.
   'சக்தியம்மா.. நா கௌம்புறேன்;.." அவளின் முகத்தை பார்த்து மெதுவாகச் சொன்னாள்.
   'ம்..ம்.. சரி சரி போ. திரும்பி அடிக்கடி வராத. எம்மகன ஒன்னோட அழகக் காட்டி மயக்கிடலாம்ன்னு மட்டும் நெனைக்காத. அவன் ஒன்னமாதிரி அனாதைய கட்டிக்க மாட்டான். அவனோட மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கிறா.. அத நல்லா மனசுல பதிய வச்சிக்கோ. பணம் காசு ஏதாவது தேவன்னா.. சொல்லு. தர்றன். பணத்துகாகச் சக்திவேலுதான் ஏம்புருஷன்னு இனிமே யார்கிட்டயும் சொல்லாத. ம்.. கௌம்பு."
   ஏதோ எழுதிவைத்ததை மனப்பாடம் செய்து சொல்வது போல் சொன்னாள். பார்வையும் சுவர்றைப் பார்த்தபடி இருந்தது.
   இதைக்கேட்ட மீனா சிலையாக நின்றுவிட்டாள்! அவளால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பிருந்த மகிழ்ச்சி காய்ந்து தீய்ந்து போய்விட்டது.
   அவர் சொன்ன வார்த்தைகள் உண்மைதானா..? அவளால் இப்படியான கசப்பான வாரத்தைகளைக் கூட துப்பமுடியுமா..?
   அதுவும் துப்பியது தன் முகத்தில் அல்லவா..? புண் ஆறினாலும் வடு மறையாதே..! மீனாவால் இதை ஜுரணிக்க முடியவில்லை. திரும்பவும் அவர் சொன்ன வார்த்தைகளைப் பின் நோக்கிக் கேட்டாள். வெறுத்த மனது விதியை நொந்தது.
   கையிலிருந்த பெட்டியை வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று அந்த பிளாஸ்டிக் பொட்டலத்தைக் கொண்டுவந்து அந்த அம்மாள் முன் நீட்டினாள்.
   'என்ன இது?"
   'ஒங்க புள்ளகிட்ட இருக்கிற பணத்துக்கோ அழகுக்கோ நா அவர விரும்பல. அவர் கிட்ட இருக்கிற  நல்ல மனசும் சுத்தமான எண்ணமும் இத மட்டும் தான் நா ஆசப்பட்டது. இது தப்பா கூட இருக்கலாம். அதனால எனக்கு உங்க மகனும் வேணாம். அவர் வாங்கித்தந்த பொருளும் வேணாம். இந்தாங்க."
   அவர் அருகில் வைத்துவிட்டு அதன் மீது அவன் கொடுத்த கைபோனையும் வைத்தாள்.
   'நா கௌம்புறன்." கிளம்பினாள்.
   'நில்லுடி" அதிகாரக் குரல் அவளை நிற்க வைத்தது.
   'அவன் தந்த எல்லா பொருளையும் தந்துட்ட. ஆனா.. அவன் போட்ட மேதிரம் மட்டும் வெல அதிகமானதுன்னு தர்ற மனசு வரலையா..?"
   அவர் மோதிரத்தைக் கேட்கவும் மீனாவின் மனம் மட்டுமல்ல முகமும் இருண்டது.
   'இந்த மோதரம ;மூவாயிரம் நாலாயிரம் இருக்குமா..? பணத்த குடுத்துடுறன்."
   'மூவாயிரம் நாலாயிரமா..? ஒருலட்ச ரூவாடி.."
   'என்னது? ஒரு லட்சமா..?"
   'ஆமா. அதுல இருக்கற ஆறு கல்லும் வைரம். கயற்றி குடுத்துட்டு போ."
   மீனா சற்று யோசித்தாள். பிறகு தன் பெட்டியைத் திறந்து அதனுள் இருந்த நகைபெட்டியில் இருந்த நெக்லசை எடுத்தாள். அந்த அம்மாள் கையில் திணித்தாள்.
   'வைரம் தான வேணும்? இதுவும் வைரநெக்லஸ் தான்! இத வாங்க எங்க ஊருல ஆளே இல்ல. இவ்ளோ நாளா என்னோட அம்மா இத பாதுகாப்பா வைக்க சொன்னாங்க. ஆனா இது எனக்கு தேவயில்ல. இந்த மோதரத்துக்குப் பதில் இந்த நெக்லச எடுத்துகோங்க போதுமா..? நா கிளம்புறேன்.."
   கோபமாகக் கிளம்பிப்போனாள்.
   சற்று நேரம் கையில் இருந்த நெக்லசையே பார்த்துக் கொண்டிருந்த அகிலாண்டேசுவரி 'ஐயோ.. மீனா என்ன மன்னிச்சிடுமா.." என்று சொல்லியபடி கைகளால் முகத்தை மூடியபடி அழுதாள்!
   அருகில் நின்றிருந்த கமலா அதிசயமாக அந்த அம்மாளைப் பார்த்தாள்!


  ²²²   ²²²  ²²²   ²²²   ²²²   ²²²²   ²²²


   இனி இந்த ஊருக்கே வரக்கூடாது. என்று தான் மீனா முடிவெடுத்திருந்தாள்.
   முடிவெடுப்பது என்பது சில நேரங்களில் முன்னுக்கு வரும் முயற்சிக்குக் கூட முட்டுக்கட்டையாகி விடுகிறது. முடிவு என்பது எப்பொழுதுமே ஏதோ ஒன்றின் துவக்கம் தான்!
   அவளுடைய முடிவு சக்திவேல் தொலைபேசியில் ~இன்று நடக்கும் ஊர்ப் பொதுக் கூட்டத்திற்கு நீ அவசியம் வர வேண்டும் ;  என்று சொன்ன பொழுதே அதன் இறுக்கம் தளர்ந்து போய் விட்டது.
   அவனும் அதிகமாக எதையும் பேசவில்லை. நலம் விசாரித்துவிட்டு இந்த ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்து கொண்டான். அவளின் பதிலைக் கூட எதிர் பார்க்கவில்லை.
   இது தான் அதிகாரம் என்பதோ?
   அவளுக்கு அவனது அலட்சியம் மனத்தை இலேசாக புண்படுத்தினாலும் அவனுடன் பேசிய இந்த வார்த்தைகளை எண்ணி மகிழ்ந்திருந்தாள்.
   இது தானே பெண் மனது? தனக்குப் பிடித்தவர்கள் அடித்தலும் அது ஆசையின் அடையாளம் என்று நினைத்து விடுவது!
   ஆனாலும் அவள் அப்பொழுதும் அந்த ஊருக்குப் போகக்கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து மணியளவில் மாதவன் தனது சுசுகியுடன் வந்து அழைக்கவும் அவளால் மறுப்புச் சொல்ல முடியவில்லை.
   சக்திவேலின் வீட்டில் நுழையும் பொழுது மனது படபடப்பாகத் தான் இருந்தது. அந்த அம்மாள் என்ன சொல்வாளோ..?
   அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் முள்ளாகக் குத்தின மனத்தில்! அவள் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள்.  ஆனால் தன் முகத்தைப் பார்க்காமல் நிலைக் கண்ணாடியைத் துடைப்பது சாத்தியமாகாதே..!
   வேறு வழி..? மனத்தை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். அலுவலக அறையி;ல் யாரோ ஓர் ஊர்க்காரருடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேல் இவளைப் பார்த்ததும் முகம் மலர 'வா மீனா" என்றான்.
   மீனா இலேசாக முறுவளித்து விட்டுச் சென்றாள். நேராக அகிலாண்டேசுவரி அம்மாள் இருந்த அறைக்குள் சென்றாள். அவளைக் கண்டதும் அவரின் கண்களில் சந்தோஷ பூ பூத்தது! ஒரு சில விநாடிகள் தான். உடனே சட்டென்று வாடிவிட்டது!
   'என்ன விசயம்?" குரலில் கடுமை.
   'இன்னைக்கி இந்த ஊருல கூட்டமாம். என்னையும் உங்க புள்ள வரச் சொல்லி அழச்சிருந்தாரு." மெதுவாகச் சொன்னாள்.
   'ஏன்? நீ வரலன்னா கூட்டம் நடக்காதா..?"
   'நானும் அதத்தான் கேட்டன். ஆனா நா வந்தே ஆகணும்ன்னு சொல்லி ஆளு அனுப்பி அழச்சிக்கினு வந்தாங்க."
   'ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. தான் நெனச்சத சாதிச்சிடணும்ன்னு நடந்துக்கு வாங்க. ஆனா பொண்ணுங்க தான் புரிஞ்சி நடந்துக்கணும். ஒன்னோட தகுதி என்னான்னு நா ஏற்கனவே சொல்லி தான் இருக்கேன். அதையும் மீறி வந்திருக்கே. கூட்டம் முடிஞ்சதும் கௌம்புற வழியப் பாரு. என்னா..?" வார்த்தை நனைந்த நெருப்புத் துண்டாக வந்தது.
   'இல்ல சக்தியம்மா. இத சொல்லத்தான் வந்தேன். கூட்டம் முடிய மணி எப்படியும் எட்டாயிடும். அப்புறம் பஸ்ச புடிச்சி போவணுமின்னா.. ரொம்ப கஷ்டம். அதனால இன்னைக்கி ராத்திரி மட்டும் இங்க தங்கிட்டு நாளைக்கி காலையிலேயே போயிடுறேன்." கெஞ்சலாகக் கேட்டாள். வேந்தனை மனத்தில் நினைத்துக் கொண்டு.
   'சரிசரி. இங்க நாம பேசனது யாருக்கும் தெரிய வேணாம். போ."
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
   'மீனா.. ஒன்ன தம்பி கூப்பிடுது." கமலா வந்து சொல்ல அலுவலக அறைக்கு வந்தாள்.
   'வா மீனா. உக்காரு." அவன் சொல்ல அமர்ந்தாள்.
   'இப்போ சொல்லு. நா உங்கிட்ட என்ன சொன்னேன்? நீ ஏன் இப்படி நடந்துகிற..?"
   புரியாமல் நிமிர்ந்தாள்.
   'புரியலயா..? எக்ஸாம் முடிஞ்சதும் ஊருக்கு வந்திடணும்ன்னு தான சொன்னேன். ஏன் வரல? ஊருல எல்லாரும் நீ வரலைன்னதால என்ன தான் கேட்குறாங்க தெரியுமா..?"
   'எனக்கு ஒரு முதியோர் இல்லத்துல வேல கெடச்சியிறுக்கு. இந்த லீவுல வேல செஞ்சாக்கா எனக்கு அந்த பணம் ஒதவியா இருக்கும். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் பணம் கட்டினாலும் எனக்குன்னு சில தேவைங்க இருக்கில்லையா..? அதுக்கெல்லாம் இந்தப் பணம் தேவைப்படும்." என்றாள் மிக மெதுவாக.
   'ஏன்? எங்கிட்ட கேட்டா நா செய்யமாட்டேனா..?"
   'வேணாம். எனக்கு யாரோட ஒதவியும் வேணாம். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் செய்யிற ஒதவியே அதிகம். இது போதும்."
   நிமிராமல் பதில் சொன்னாள். அவன் சற்று நேரம் அவளை உற்று பார்த்தான்.
   'சரி உன்னிஸ்டம். ஆமா.. என்னோட ரூமுல இருந்து ஒரு டைரிய எடுத்துக்கினு போனியே.. அத படிச்சியா..?"
   அவன் அப்படி கேட்க அவள் முகம் சிவந்தது. அன்று அவள் அதை டைரி என்று நினைத்து எடுக்கவில்லை. அவசரத்தில் அவனுடைய புகைப்படத்தை மறைப்பதற்காகத் தான் அந்தப் புத்தக அலமாரியில் இருந்து ஏதோ ஒரு புத்தகம் என்று நினைத்துத் தான் எடுத்துக் கொண்டு போனாள்!
   மறுநாள் அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் அதைத் திறந்த பொழுது தான் அது ஒரு டைரி என்று அவளுக்குத் தெரிந்தது.
   அதில் அனைத்தும் கைபட எழுதியதுதான். ஆனால் என்ன பயன்? அது அவளுக்குத் தெரிந்த தமிழோ ஆங்கிலமோ இல்லை! அனைத்தும் கன்னட எழுத்துக்கள். அதில் ஓர் எழுத்துக் கூட அவளுக்குப் படிக்கத்தெரியாது.
   யாரிடமாவது கேட்கலாம் என்று நினைத்தால்.. அவன் எழுதியதில் என்ன விசயம் ஒளிந்திருக்குமோ.. பேசாமல் மூடி வைத்துவிட்டாள். இப்பொழுது அந்த டைரியைத் தான் அவன் கேட்கிறான். நல்ல வேலை. கையுடன் கொண்டு வந்திருந்தாள். எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் இலேசான சிரிப்புடன் சொன்னான்.
   'நா டைரிய கேக்கல. படிச்சியான்னுத் தான் கேட்டேன்?"
   'இல்ல. எனக்குக் கன்னடம் தெரியாது.."
   'நா வேணா அர்த்தம் சொல்லட்டுமா..?"
   'வேணாம். அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆசயில்ல."
   'தெரிஞ்சாத் தானே நிஜம் என்னன்னு ஒனக்கு புரியும்!"
   'வேணா.." தலையை ஆட்டினாள். 'வேணாம். எனக்கு நிஜம் வேணாம். நெழலே போதும். அதுல வில்லனோ வில்லியோ இல்ல. இப்படியே இருந்துடறேன்."
   அவன் அவளை யோசனையுடன் சற்று நேரம் பார்த்து விட்டு 'மீனா.. நிழல்.. .." எதுவோ சொல்ல வருவதற்குள்.. கைபோன் அழைக்க எடுத்துப் பேசியவன் முடித்துத் திரும்பினான்.
   'மீனா.. வா போலாம்.. நமக்காகக் காத்துக்கினு இருக்காங்களாம்.." எழுந்தான்.
   'நீங்க போங்க. நா பின்னாலேயே வந்திடுறேன்."
   அப்படிச் சொன்னவளை முறைத்துவிட்டுக் கிளம்பினாள்.                          


                                       (தொடரும்)       

2 comments :

  1. முந்தைய பகுதியை படித்து விட்டு வந்தேன்... (மறந்து விட்டதால்)

    சுவாரஸ்யம்... தொடர்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. Kadhai suvarasyamagath thodargiradhu. Naanum thodargiren.

    ReplyDelete