Tuesday, 9 April 2013

போகப் போகத் தெரியும் - 47




   தேனடையில் தேனீக்கள் மொய்க்கும் கூட்டமாக மருத்துவ மனையில் கூட்டம் வழிந்தது. அப்பாய்மெண்ட்டோட இருந்ததால்.. உடனே டாக்டரைப் பார்க்க முடிந்தது. ரசிதைக் கொடுத்து மருந்தகத்தில் மாத்திரையை வாங்கிக் கொண்டாள். கடிகாரம் பத்தடிக்க சில நிமிடங்களைக் காட்டியது.
   வெளியே வந்தாள். பேரூந்து நிறுத்துமிடத்தில் வந்து மறைவாக நின்று கொண்டாள். பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி இருக்கிறது. பதினைந்து நிமிடத்தில் கொண்டு போய்க் கொட்டிவிடும். மனத்தில் கணக்குப் போட்டுக் கொண்டாள். இந்த நேரம் பார்த்தா வண்டி இவ்வளவு தாமதமாக வர வேண்டும்? ஒரு பஸ்.. ஆரன் சப்தம் காதைக் கிழித்துக் கொண்டு வந்தது. அவள் ஊருக்கு எதிர்புறமாகப் போகும் வண்டி! மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.
   அவளுக்கு இது தேவையில்லை. தேவையானது இன்னும் வரவில்லை. நெடுஞ்சாலை ஆனதால் பஸ் மிகமிக வேகமாக.. அப்பொழுது தான் அவள் அந்த முதியவரைக் கவனித்தாள். ஒரு காலைச் சற்று ஊன்றினார் போலச் சாலையைக் கடந்து கொண்டிருந்தார்.
   எதிர் புறத்தில் பேரூந்து மிகமிக வேகமாக.. அவருக்கு மிக அருகில்.. மீனா நொடிப்பொழுதில் ஓடிப் போய் அவரைத் தள்ளிவிட்டு அவளும் அவர் மேலேயே விழுந்தாள்.
   தார் சாலையை அழுத்தித் தேய்த்து நின்ற வண்டியிலிருந்து ஓட்டுநர் கத்தினார்.
   'ஏன்யா.. பஸ் வருதுன்னு தெரியுதில்ல.. கொஞ்சம் காத்திருந்து ரோட்டக் க்ராஸ் பண்றது தான..? அந்தப் பொண்ணு மட்டும் வரலன்னா.. நீ இந்நேரம் கூழுயிருப்ப."
   'யோவ்.. நீ இவ்ளோ வேகமா வந்துட்டு.. எதுத்து வேற பேசுறியா..?" மீனாவும் கத்தினாள்.
   அவள் கத்தியதை யாரும் கேட்பதற்கு நிற்க வில்லை.  வண்டி கிளம்பிப் போய்க் கொண்டே இருந்தது.
   மீனா அந்தப் பெரியவரைக் கை பிடித்து தூக்கினாள். அவரால் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள் அவர்களைச் சுற்றி நிறையப் பேர்! இரண்டு பேர் அவரைத் தூக்கி விட்டார்கள். அவர் மேல் இருந்து விழுந்த ஓர் அடி நீண்ட பொருளை எடுத்து அவரிடம் கொடுத்து.. 'அப்படி என்ன அவசரம் உங்களுக்கு..? கொஞ்சம் பொருமையா நிதானமா நடக்கலாமே.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டா என்ன ஆயிருக்கும்..? " என்றாள்.
   'செத்து தொளஞ்சி இருப்பேன். உன்னால உயிர் பொழச்சத விட என்னோட உசிறு போயிருந்தா.. நிம்மதியா இருந்திருக்கும்."
   குரல் வக்கிரத்தின் உச்சில் இருந்து வந்தது. மீனா அதிர்ச்சியுடன் அந்தப் பெரியவரை உற்றுப் பார்த்தாள். உடல் பாதியாக இளைத்து இரண்டு வருடத்தில் பத்து வயது அதிகமானத் தோற்றத்தைப் பெற்றவிட்ட தேனப்பன் தான் அந்தப் பெரியவர்!!
   குரல் தான் தேனப்பன் என்பதை அவளுக்குத் தெரியப் படுத்தியது.
   அவள் தன்னைச் சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தாள். எல்லாருமே ஓடத்தூர் காரர்கள்! தேனப்பனின் ஆட்கள்! அவர்களுடன் வெற்றிவேலுவும் ஒருவன்.
   மீனா தன்னை ஒரு நிமிடத்தில் சுதாரித்து கொண்டாள். அதற்குள் அவளுடையக் கார் ஓட்டுநர் துளசி ஓடி வந்தார். 'மீனாம்மா.. வா போவலாம்.." அவளுடைய கையைப்பிடித்து இழுத்தார்.
   அவள் எதுவும் பேசுவதற்கு முன் வெற்றிவேலுவின் ஆட்கள் அவனை இழுத்துக் கொண்டு போனார்கள். கைபோனை பிடுங்கிக் கொண்டார்கள்.
   மீனா தேனப்பனை அமைதியாகப் பார்த்தாள். அவளைப் பொருத்தவரையில் தேடிப்போனத் தெய்வம் எதிரில் வந்து நின்றிருந்தது.
   'ஐயா.. எம்மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம்?" பொறுமையாகவும் நிதானமாகவும் கேட்டாள்.
   'கோவமா..? இல்ல. வெறி! உன்ன அப்படியே வெட்டி போட்டாத்தான் என்னோட மனத்தீ அடங்கும்." குரல் அழுத்தமாக வெளிவந்தது.
   'சரி. அப்படியே செய்யுங்க."
   முன்புறமாகக் கையைக் கட்டிகொண்டு சொன்னாள். அவள் நின்றிருந்த விதம் என்னை எப்படியாவது செய்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் என்பது போல் இருந்தது.
   எரிகிறத்தீயில் எண்ணையை ஊற்றினால் மேலும் ஆங்காரமாக எரியும். தண்ணீரை ஊற்றினால்.. ?
   தேனப்பன் கோபத்துடன் இருந்தாலும் சற்று நேரம் பேசாமல் நின்றிருந்தான் தான்.! 'ஏன் பேசாம இருக்கிறீங்க? என்னச் சாகடிக்க வேண்டியது தான..?" சொல்லிவிட்டுத் தன்னைச் சுற்றி இருந்தவர்களை நோக்கினாள். 'இங்க யாராவது கத்தி வச்சிருக்கிங்களா..? நீங்கள்லாம் இடுப்புலேயே கத்தி வச்சிருபீங்களே.. யாராவது தாங்க." கை நீட்டிக் கோட்டாள்.
   யாரும் கொடுக்கவில்லை. ஆனால் எல்லோரிடமும் கத்தி இருந்தது தான்! திரும்பித் தேனப்பனைப் பார்த்தாள். இவன் கையில் பட்டாக்கத்தி பளபளத்தது.
   ஓ.. உங்கக்கிட்டேயே இருக்குதா..? நல்லதா போச்சி. சரி. குத்துங்க. நா உங்கக் கவலையப் போக்கச் சாவத்தயாரா இருக்கேன். குத்துங்க. ஆனா.. எதுக்குச் சாவப் போறேன்ற காரணம் தான் தெரியல." என்றவளின் குரலில் ஒரு துளி வருத்தமும் இல்லை!
   காரணம் தெரியாதா..? பாவி. உன்னால தான எம்பையன் வேந்தன் செத்தான். உன்னால தான லட்சுமணன் செத்தான். அது மட்டுமா.. இன்னைக்கி ரெண்டு பேரு உசிறுக்கு போராடிக்கினு இருக்கானுங்க. அவனுங்கள பாத்துட்டு தான் வர்றேன். என்னோட ரெண்டு பையனுங்கள பலி குடுத்துட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் காரணம் நீ. உம்புருஷன். அந்தப் பசங்க. எல்லாரையும் போட்டு தள்ளணும். அது வரைக்கும் என்னோட மனசு ஆறாது." தேனப்பனின் குரல் கரகரத்தது. பிள்ளைகளை இழந்த தந்தையின் துயர் தெரிந்தது.
   மீனாவின் கண்களும் கலங்கியது. ஐயா நீங்க சொல்லுறதும் சரி தான்." பெருமூச்சுடன் அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில் போய் அமர்ந்தாள். தேனப்பன் கோபத்துடன் அவளைப் பார்த்தான்.
   ஐயா.. எனக்கு எல்லாரிடமும் அன்பா நடந்துக்கணும்ன்னு தான் ஆசை. லட்சியம். எனக்கு விரோதின்னு ஒருத்தர் கூட இருக்கக் கூடாதுன்னு நெனைக்கிறவ நான். வேந்தன கூட விரோதியா நெனைக்கல. அதுக்காக அவர என்னோட புருஷனா ஏத்துக்க மனசு வரல. அதுக்காகத் தான் அவர் கட்டுனக் கட்டாயத் தாலிய கழற்றி போட்டேன். ஆனா அவர் சாகணும்ன்னு கொஞ்சம் கூட நெனைக்கல. இதோ.. இன்னைக்கி நீங்க யாருன்னு தெரியாமத் தான் காப்பாத்தினேன். அது போலத்தான் ஒரு நாள் லட்சுமணன் வெற்றிவேல் சக்திவேல்.. இப்படி எந்த உயிருக்கும் ஆபத்து வரக்கூடாதுன்னு தான் மனசால உதவி செஞ்சேன். அவங்கக்கிட்ட எந்த ஒரு எதிர்பாப்பும் கெடையாது.
   அது மட்டுமில்ல.. அன்னைக்கி வேந்தனை கொலை செஞ்சது சக்திவேல் கெடையாது. எனக்கு யார் கொலை செஞ்சாங்கன்னு நல்லா தெரியும். அதே மாதிரி லட்சுமணனுக்கும் சரவணனுக்கும் மாதவனுக்கும் என்ன எதனால சண்டை வந்துச்சின்னு தெரியாது. மூனு பேருமே செத்து போய் இருக்காங்க. இருந்தாலும் நீங்க உங்க மகனுங்கள எழந்து இருக்கிறீங்க. உங்க மனசுல நான் தான் காரணம்ன்னு நல்லா பதிவாயிடுச்சி. அதனால தயவு செஞ்சி என்ன சாகடிச்சி உங்க ஆத்திரத்தைத் தீத்துக்கங்க.." கண்கலங்கச் சொன்னாள்.
   அங்கே அமைதி நிலவியது. தேனப்பன் கத்தியின் பிடியை அழுத்திப் பிடித்திருந்தான். ம்.. குத்துங்க." மீனா சொல்ல அவன் பேசாமல் நின்றிருந்தான். அவள் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அவர் கையைப் பிடித்துத் தன் அருகில் அமரவைத்தாள்.
   ஐயா நீங்க என்ன சாகடிக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். நீங்க மட்டுமில்ல. உங்க அடியாளுங்க.. உங்க மகன்.. யாருக்குமே என்னைக் கொலை பண்ண மனசு வராது. ஏன்னா.. உங்க எல்லாருக்குமே நா ஏதோ ஒரு விதத்துல ஒதவி பண்ணிருக்கேன். அதனால தான். ஆனா.. நா சாகணும். உண்மையச் சொன்னா எனக்கே நா வாழுறது புடிக்கல. என் ஒருத்தியால எத்தன பேருக்குப் பிரச்சனைன்னு பாருங்க. உங்களுக்குச் சக்திவேலுவுக்கு அவர் ஊர்காரங்களுக்கு.. இப்டி நெறையப் பேருக்கு பிரச்சனை. அதனால நா சாகணும்.."
   கை பையைத் திறந்து ஓர் அட்டைத் தூக்க மாத்திரையை எடுத்தாள். ஒரு காகிதத்தைப் பிரித்து மடியில் விரித்து மாத்திரைகளை ஒவ்வொன்றாகப் பிரித்துப் போட்டாள். அனைவரும் அவள் செய்கையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!
   ஐயா.. எனக்கு விரோதியே இருக்கக் கூடாதுன்னு இருந்தேன். ஆனா எப்படியோ.. எதிர்பாக்காம விரோதம் வளந்துடுச்சி. உங்கக் கோவத்துக்குக் காரணம் நான் மட்டுமாகத் தான் இருக்கணும். அது தான் உண்மையுங்கூட. இதோ இதெல்லாம் தூக்க மாத்திரைங்க. நீங்க என்ன சாகடிக்க வேணாம். நானே செத்துப் போறேன். ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்! என்னோட சாவுக்குபிறகு நீங்க ஆத்தூர் காரங்க மேல இருக்கிற விரோதத்த மறந்திடணும். அவுங்கள எதுவும் செய்யக்கூடாது."
   சொல்லிக் கொண்டே தாளில் இருந்த மாத்திரைகளைக் கையில் கொட்டி உடனே வாயில் போட்டு கொண்டாள்!!

                         (தொடரும்)
 

No comments :

Post a Comment