Tuesday 21 May 2013

போகப் போகத் தெரியும் – 54





   ஒரு கண்ணாடியை உடைக்கப் பயன்படுத்தும் சுத்தியைக் கொண்டே.. இரும்புக்கு உருவம் கொடுத்துவிட முடியும். ஆனால் சுத்திக் கடினமானதாக இருக்கவேண்டும்.
   மீனா தன் மனத்தைக் கடினமானதாக மாற்றிக் கொண்டு விட்டாள். அதனால் தான் அவளால் தன் கணவனைவிட்டுப் பிரிந்து போக முடிந்தது. அவள் போனதால் தான் அவளுடைய கணவனின் வாழ்க்கை சீர் படுத்தப்பட்டு அர்த்தம் கிடைத்தது.
   மீனா உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தாள். தான் இங்கே வராமலேயே கனடா போய் இருந்தால்.. இந்த வார்த்தைகள் அவள் மனத்தில் கேள்விக் குறியாகத் தான் இருந்திருக்கும். அவளுக்குக் கண்மணியிடம் பேச வேண்டும் என்று ஆவலாக இருந்தது.
   காபி கொண்டு வந்த அறிவழகி மீனாவைக் கண்டதும் முகம் சுருக்கினாள். மீனாவிற்கு அறிவழகியைப் பார்த்தது சந்தோஷம். ஆனால் அவள்.. எதுக்குடி இங்க வந்த..? நாங்க இருக்கோமா..? செத்துட்டோமான்னு பாத்துட்டுப் போவ வந்தியா..? கோபமாகக் கேட்டாள்.
   மீனா சிரித்துக் கொண்டாள். காரணம் தெரியாத கோபம். யாருக்கும் நன்மை பயக்காது. கொஞ்சம் தணியட்டும். காரணத்தை விளக்கி சொன்னால்.. புரிந்து கொள்வாள்.." எனறு நினைத்தபடி எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.
   அவள் போன பொழுது அந்த அறையை எப்படி விட்டுச் சென்றாளோ.. அதே போல் அந்தந்தப் பொருட்களும் அந்தந்த இடத்திலேயே இருந்தன. அறையைச் சுத்தப்படுத்திவிட்டு அந்தந்தப் பொருட்களை அப்படியே வைத்துவிடுவார்கள் என்பது நன்றாகப் புரிந்தது. குளித்துவிட்டு வேறு உடையை உடுத்திக் கொண்டாள்.
   இத்தனை நாட்களாக வெள்ளையில் நீல கரை வைத்த நூல் சேலையைத் தான் கட்ட வேண்டும். அது அங்கே அவளுக்குப் பிடித்தும் இருந்தது. அந்தச் சேலையுடன் தான் இங்கே வந்தாள். ஆனால்.. இங்கே ஏனோ அதைக் கட்டிக் கொள்ள விருப்பம் இல்லை.
   வெள்ளை மனத்தைச் சுத்தமாக வைத்திருந்ததைப் போல் இருந்தது. வண்ணப் புடவை இலேசான மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்கிறது. ஏதோ நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த மகிழ்ச்சி புடவையால் மட்டும் இல்லை என்பதையும் அவள் உணர்ந்து தான் இருந்தாள்.
   தொலைபேசியை எடுத்துக் கண்மணியின் அப்பா வீட்டிற்கு எண்களை அழுத்தினாள். எதிர் முனையில் கண்மணியின் அம்மா..
   யாரு மீனாவா..? ஆத்தூர் மீனா தான..? எப்படிமா இருக்க..?
   ம்.. கண்மணி இல்லையா..?
   இங்க தாம்மா இருந்தா. இப்பத்தான் அவ புருஷன் வந்து வெளிய கூட்டிக்கினு போனாரு. பேறு கால நேரம். இந்த மாதிரி நேரங்கெட்ட நேரத்துல வெளிய போவக் கூடாதுன்னா.. எங்க கேக்குதுங்க? ஒன்ன விட எம்புருஷன் நல்லா பாத்துக்குவாருன்னு சொல்லுறா. எங்க போனாங்கன்னு தெரியல. வந்தா சொல்லுறேன்." என்றாள்.
   மீனா தொலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தாள். எங்க கூட்டிக்கினு போய் இருப்பார்? ஒரு சமயம் கண்மணியைப் பத்தி கேட்டதால.. இங்க தான் அழைச்சிக்கினு வருவாரோ..? அப்படி தான் இருக்கும். அவளே பதிலைத் தேடிக் கொண்டாள்.
   விழாவிற்காகப் போடப்பட்ட பாடலில் இசை தான் அதிகமாக இருந்தது. அதில் பாடகியின் குரலோ.. பொருளோ.. விளங்கவில்லை. முந்திரி அல்வாவில் முந்திரியைத் தேடுவது போல் இருந்தது.
   மீனா கண்மணியின் வருகைக்காகக் காத்திருந்தாள். பெரிய பிள்ளையார் வயிற்றுடன் வரும் அழகை ரசிக்க வேண்டும். தன்னைப் பார்த்ததும் எப்படி வெட்கப்படுவாள்..? வெட்கப்படுவாளா..? கோபப் படுவாளா..? இல்லை.. பயப்படுவாளா..? எப்படி இருக்கும் அவள் நிலை?
   அக்கா.." யாரோ கூப்பிடத் திரும்பினாள். முகத்தில் ஆச்சர்யம்! மாதவனா..? அவனைப்போலவே.. ஆனால் அவனைவிட இவன் சிறியவன். முகத்தில் இலேசான முடி. மீசை சற்றுக் கருகருப்பாக.. ஆனால் உயரம் உடலமைப்பு எல்லாம் மாதவனைப் போலவே..
   அக்கா.. சக்திவேலு அண்ணன் இன்னைக்கி தோட்டத்து வீட்டுல தங்கிடுவாராம். சாப்பாடு குடுத்துவிட வேணாம்ன்னு அறிவழகி அம்மாகிட்ட சொல்லிட சொன்னாரு. நீங்க சொல்லிடுங்க."
   அவன் போய்விட்டான். மீனா ஏமாற்றத்துடன் நின்றிருந்தாள். கண்மணிய அழைச்சிக்கினு போய்த் தோட்டத்து வீட்டுலத் தங்குகிறார். எதுக்காக..? நான் பார்க்கக் கூடாது என்று நினைத்துவிட்டாரா..?  மீனா யோசித்தாள்.
   இருக்கலாம். நிறைமாதக் கர்ப்பிணி. என்னைப் பார்த்தால் நான் ஏதோ அவள் வாழ்க்கையைப் பறிக்க வந்துவிட்டேன்னு நினைத்துப் பயந்துவிடப் போகிறாள்.. என்று நினைத்து இருக்கலாம். அல்லது இவள் குழந்தையே பெத்துக்க முடியாத மலடி. இவள் கண்பட்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்று நினைத்தும் இருக்கலாம்.
   இதுவும் நல்லது தான். நாம் தான் அதையெல்லாம் யோசனை செய்து பார்க்கவில்லை. அவ நல்லா இருக்கட்டும். முடிந்த அளவுக்கு நாம் சீக்கிரமாக ஊருக்கு கிளம்பிவிட வேண்டும். தனக்குத் தானே முடிவெடுத்தாள்.
*************************************************************************

   தேர் ஆடி ஆடி அசைந்து வந்தது. அது வரும் பொழுது எங்கே விழுந்துவிடுமோ என்ற பயமும் வந்தது. தேருக்கு முன்பு பெரிய வாசுகி பாம்பைப் போன்ற கயிற்றை மக்கள் இழுத்துக் கொண்டு ஓடினார்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது கிடைத்த அமிர்தம் போல் தேரில் அகிலாண்டேசுவரி அம்மன் சிரித்தாள். உடலை மூடிய நகைகள். முகம் பொற்றாமரையாகப் பூத்து இருந்தது.
   தேர் தேரடியில் வந்து நிற்கவும்.. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீனா தேருக்கு முன் சென்று  சக்திவேல் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்  என்று பிராத்தித்துச் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
   வடம் பிடித்து இழுத்தவர்கள் ஆற்றை நோக்கி ஓடினார்கள். அவர்கள் குளித்துவிட்டு வந்து கடவுளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்!
   மீனா நிழலான ஓர் இடத்தில் நின்று கொண்டாள். தம்பதியாகச் சாமி கும்பிட்டுவிட்டுக்  கணேசனும் கமலாவும் போனார்கள். கணேசன் மீனாவைப் பார்த்துவிட்டுக் கமலாவிடம் சொல்ல.. அவள் மீனாவிடம் ஓடி வந்தாள்.
   மீனா நல்லா இருக்கியா..? அன்னைக்கி நா தூங்கினு இருக்கும் போது போயிட்டியே.. எனக்கு எவ்ளோ திட்டுக் கெடைச்சது தெரியுமா..? ஆமா.. இப்ப எப்டி இருக்க..?
   நல்லா இருக்கேன். உங்க புருஷன் உங்கள நல்லா கவனிச்சிக்கிறாரா..? கணேசனைப் பார்த்தபடி கேட்டாள்.
   ம்.. அதெல்லாம் நல்லா கவனிச்சிக்கிறாரு. ஆனா முன் கோவம் ஜாஸ்த்தி. இருந்தாலும் நீ என்னைத் தான் கல்யாணம் செஞ்சிக்கணும்ன்னு சொன்னதால.. எனக்கு ஒரு நல்ல வாழ்க்க கெடைச்சிது. அவரோட தாத்தாவும் பாட்டியும் செத்துட்டாங்க. அம்மா மட்டும் தான். ரொம்ப நல்லவங்க. அவங்களும் என்ன முழுமனசா ஏத்துக்கனாங்க. ஒரு கொழந்த இருக்குது மீனா. ரெண்டு மாசமாவுது. வெயில்ல வேணான்னுட்டு வீட்டுல அத்தகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன். வாயேன். வந்து பாத்துட்டுப் போயேன்." என்றாள்.
   இவள் எதுவும் சொல்வதற்கு முன்.. கமலா.. அவங்களே அந்த வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்காங்க. அவங்க ஒறவு நமக்கு வேணாம். நீ வா. நாம போலாம்." அவள் தோள்பட்டையைப் பிடித்து இழுத்தது போல் அழைத்துக் கொண்டு போனான்.
   சற்று நேரத்தில் ருக்மணி அவள் கணவர் குழந்தையுடனும்.. மாலதி அவள் இரண்டு குழந்தைகளுடனும்.. இவளைப் பார்த்துக் கொண்டே எதுவும் பேசாமல் சென்றார்கள்.
   வடம் பிடித்துவிட்டுச் சென்ற கும்பலில் சக்திவேல், ஜுவா, சிவா, சேகர், சசி ஒரு கூட்டமாகச் சென்றார்கள். சிவா தான் அவளருகில் வந்தான். ஏன் இங்க தனியா நிக்குற..? வெய்யிலா இருக்குது. வீட்டுக்கு போ." என்றான்.
   மீனாவிற்குத் திருப்தியாக இருந்தது. ஏதோ இவன் ஒருவனாவது அக்கரையாகச் சொன்னானே..
   சிவா.. நீ காலேஜுல படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணியே.. கல்யாணம் பண்ணிக்கிட்டியா..? கேட்டாள்.
   அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவளுக்கு நல்ல பெரிய வரன் கெடைச்சது. என்னைக் கட்டிக்கிறதை விட அவனைக் கட்டிக்கிட்டா நல்லா இருப்பான்னு நானே விட்டுக் கொடுத்துட்டேன். இப்போ வீட்டுல வரன் தேடுறாங்க. எந்தப் பொண்ணைக் காட்டுறாங்களோ.. அவள கட்டிக்க வேண்டியது தான்." என்றான்.
   மீனா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். அப்படீன்னா.. காதல் வாலிபத்தின் பசின்னு சொல்லுறியா..?
   இல்ல மீனா. இளமைக்கு மனவிருந்து. அவ்வளவு தான். நமக்குப் பிடிச்சவங்க நல்லா இருக்கணும்ன்னு தானே ஆசப்படவோம். அதனால தான். அவளோட நல்ல வாழ்க்கைக்குத் தடை கல்லா நா இருக்கவிரும்பல. என்ன..... துவக்கத்துல அழுதாள். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கினாள்."
   நீ செய்தால் சரி. அதையே நான் செய்தால் தப்பா..?
   நீ செய்தது தப்பு தான் மீனா. நாங்க ரெண்டு பேரும் சேந்து பேசி முடிவெடுத்தோம். ஆனா நீ..? ஏமாத்திட்ட."
   மீனா பேசாமல் தலை குனிந்தாள். மற்ற நால்வரும் அங்கே வந்தார்கள். சிவா நிலைமை சமாளிக்க.. மீனா.. நம்ம ஜுவாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி." என்றான்.
   அப்படியா..? எங்க உன் வொய்ப்..?
   கன்சீவாயி இருக்கா. தேர் பாக்கக் கூடாது. வீட்டுல இருக்கா." ஜுவானந்தம் சொன்னான்.
   ஓ.. கங்கராஜுலேஷன். ஏய்.. எல்லாத்துக்கும் நீ தான காரணம். ஆனா.. நீ மட்டும் தேர் வடம் புடிக்க வரலாமா..?
   அவன் பதில் சொல்லத் தெரியாமல் சிரித்தான்.
   மீனா.. பாலுக்கும் தண்ணீக்கும் தோஷமில்லன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி ஆண்களுக்கும் எதிலும் தோஷமில்லை." என்றான் சக்திவேல். அவன் அவளிடம் பேசியது சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் இது தவறோ..? பேசாமல் நின்றாள். அவன் அவளைப் பார்த்தான்.
   மீனா.. வெய்யிலா இருக்குது. வீட்டுக்கு போ. நாங்க குளிச்சிட்டு வந்து மத்த வேலைகள பாக்கணும்." அவளிடம் சொல்லிவிட்டு வாங்க போவலாம்" முன்னே நடந்தான்.
   மீனா அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் தன்னுடையக் கணவன்! இன்று வேறு யாரோ ஒருவர் போல் செல்கிறான்.
   ஒரு பொருள் நம் கையில் இருக்கும் வரை அந்தப் பொருளின் மதிப்புத் தெரியாது. ஆனால் இன்று அதை இழந்துவிட்டு நிற்கிறாள். இல்லையில்லை விற்றுவிட்டாள். வேறு ஒருவர் அன்பை விலையாகக் கொடுத்து அவனை வாங்கிவிட்டார்கள்! அன்பிற்காகவே அவனை விற்றவள். அதன் பிறகு அன்பிற்காக ஏங்கக் கூடாது.
   ஆனால் அன்பு வாங்கவும் விற்கவும் கூடிய பொருள் ஆகாதே.. உடலுடன் சேர்ந்தது தானே மனம்! உடல் யாருக்குச் சொந்தமோ.. மனமும் அவர்களுக்குத் தானே சொந்தம்.
   அப்படியில்லை என்றால்.. கண்மணியை அவளிடம் அழைத்து வந்திருக்கலாமே.. நாம் பார்த்தால் அவளுக்கு ஏதாவது உடம்புக்கு வந்துவிட போகிறது என்று அவளை மறைப்பாரா..? மனிதர்களின் மனம் எப்படியெல்லாம் மாறி விடுகிறது?
   கண்களில் வரத் துடித்த கண்ணீரை அடக்கினாள். நாம் இங்கே வந்திருக்கவே கூடாது. தவறு செய்து விட்டோம் என்று மனது அவளுக்கு உருத்தியது.
   மீனாவாம்மா.. எப்படி இருக்கிற..? யோகி ரத்தினம் கேட்டுக் கொண்டே வந்தார். மீனா அவரைப் பார்த்துச் சிரித்தாள். கண்கள் கலங்கியிருந்ததைக் கவனித்து விட்டார். கண்களால் கேள்வி கேட்டார்.
   ஐயா.. காய்ச்ச மரம் கல்லடி படும். காய்க்காத மரம் சொல்லடிப்படும். சொல்லால அடிச்சிட்டாலும் பரவாயில்ல. அதன் காற்றைச் சுவாசிப்பது கூடத் தோஷம்ன்னு விலகிப் போற சமுதாயத்துல என்னால சந்தோஷமா வாழ முடியும்ன்னா நெனைக்கிறீங்க?
   மீனா.. நீ யார சொல்லுறன்னு எனக்குத் தெரியாது. உன்னைக் கோபத்துலக் கூடத் திட்ட விரும்பாதவங்க நம்ம ஊர் ஜனங்க. அவங்களோட கோபத்தை எப்படிக் காட்டுறதுன்னு தெரியாம விலகிப் போய் இருக்கலாம். அத நீ தப்பா புரிஞ்சிக்கினு இருக்கிற. அது மட்டுமில்ல. நீ செஞ்சது சரியா..? தப்பான்னு முடிவுக்கு வரத்தெரியாம நடுநிலையில இருக்கிறதால உங்கிட்ட என்ன பேசறதுன்னு தெரியாம போய் இருப்பாங்க. நீ யாரையும் தப்பா நெனைக்காதம்மா. உன்னோட நெலம எல்லாருக்கும் தெரியும். புரியும். அதனால கவல படாத. போ. வெய்யிலுல நிக்காத."
   அவர் கிளம்பத் தானும் நகர்ந்தாள்.


                                                                    (தொடரும்)

No comments :

Post a Comment