Friday, 24 May 2013

போகப் போகத் தெரியும் – 55
   இன்று மஞ்சவிரட்டு! ஆனால் இந்த விளையாட்டை இந்த ஊர் இரண்டு வருஷமாக நடத்தவில்லையாம். காலம் காலமாக நடந்து வந்த வீர விளையாட்டு! ஆனால் ஏதோ ஒரு காளை விதி வசத்தால் அவளைக் குத்திவிட அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது.. அவளுக்கு வேதனையாக இருந்தது.
   இது தவறான கண்ணோட்டமாக மீனாவிற்குத் தெரிந்தது. சாலையில் பேரூந்து விபத்து ஏற்பட்டது என்பதற்காகச் சாலையில் பேரூந்தே போகக்கூடாது என்று சொல்ல முடியுமா..?
   ஆனால் இங்கே பேரூந்தை ஓட்டுகிறவர் ஆறறிவு படைத்த மனிதர்! ஆனால் காளை விலங்கு  தானே..!
   விலங்கு செய்வது தவறு. மனிதன் செய்வது விபத்து. இப்படி தானே சமுதாயம் சொல்கிறது. மிருக குணம் படைத்தவன் தவறு செய்கிறான் என்கிறது. ஆனால் எங்கோ உண்மை ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.
   வேறு ஏதோ சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் இருக்கிறது என்று அறிவழகி சொன்னாள். ஆனால் மீனாவிற்குப் போக மனம் இல்லை. யாரையும் பார்க்க விரும்பவில்லை. அவள் யாரைப் பார்க்க இங்கே வந்தாளோ.. அவளைப் பார்க்க முடியாமலேயே போய் விட்டதே.. என்று ஆதங்கப்பட்டாள்.
   ஏமாற்றம் மனதை இருளச் செய்தது. சூன்யமான இருள். எங்கே..? எதைத் தேடுகிறோம்..? எதைக் காண்கிறோம்..? எதைக் காணப் போகிறோம்..? என்று அறிய முடியாத இருள்! புரியாத குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள். நேரம் போனதே தெரியவில்லை.
   இரவு உணவிற்கு அறிவழகி தோசையையும் பொடியை நல்லெண்ணையில் குழைத்தும் கொடுத்தாள். அகிலாண்டேசுவரி அம்மாளும் அறிவழகியும் சாப்பிட்டுப் படுத்துவிட்டார்கள்.
   மீனா தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு விளக்கை அணைத்து விட்டு தன் அறைக்குள் நுழையவும்.. கதவைத் தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது. போய் கதவைத் திறந்தாள். அரங்கத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சி காதைக  கிழித்தது! சக்திவேல் இலேசான சிரிப்புடன் மீனாவைப் பார்த்தான்.
   என்ன மீனா.. அதுக்காட்டியும் எல்லாரும் படுத்துட்டாங்களா..? ப்ரோகிராம் நடக்குதே. யாரும் பாக்கலையா..?
   அவனிடமிருந்து இலேசான மதுவின் வாடை வீசியது. என்ன இது புதுப் பழக்கம்?  கேட்க நினைத்தாள். ஆனால் கேட்கவில்லை.
   இன்னைக்கி தேர் ஊர்வலம் வந்துச்சியில்ல.. அதனால ப்ரெண்ஸ்களோட ஒரு சின்ன பார்ட்டி." என்றான்.
   குடிப்பதற்கு ஏதாவது காரணம் வேண்டும்.
   மீனா.. நீ சாப்டியா..?
   ம்.." என்று நிறுத்தியவள் நீங்க சாப்டீங்களா..?கேட்டாள்.
   இல்ல. ஆனா பசியில்ல." என்றான்.
   நா போடுறேன். கொஞ்சம் சாப்பிட்டு படுங்க." என்றாள்.
   அவன் கையலம்பிவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். மீனா தட்டில் தோசையை வைத்தாள். மற்றக் கிண்ணங்களைத் திறந்து பார்த்தாள். தொட்டு கொள்ளப் பொடி மட்டும் தான் இருந்தது. அவனுக்குப் பொடிப் பிடிக்காது. இருந்தாலும் ஒரு கிண்ணத்தில் எண்ணையுடன் குழைத்து வைத்துவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
   அவன் ஒரு வாய் சாப்பிட்டான். மீனாவைப் பார்த்தான்.
   இப்ப சொல்லு மீனா.. நீ செஞ்சது சரியா..? அவன் கேட்க வேண்டும் என்று எதிர் பார்த்திருந்தாள்.
   நா செஞ்சது தப்புன்னு எனக்கு இன்னமும் தோனலைங்க."
   எனக்குப் புரியுது மீனா. உன்னோட நல்ல மனசுத்தான் நீ என்ன விட்டு போவக் காரணம்ன்னு எனக்கு நல்லா புரிஞ்சி தான் இருந்துச்சி. ஆனா.. அதை என் மனசால ஏத்துக்க முடியல. எவ்வளவு வேதனப் பட்டேன்னு தெரியுமா..? ஒடம்பு சரியா கூட ஆகாம.. காசு பணம் கையில இல்லாம.. எங்க போயி என்ன செய்யிறன்னே தெரியாம.. நா அலைஞ்ச அலைச்சல் இருக்கே.. வார்த்தையால சொல்ல முடியாத வேதனை.
   அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சி தான் தெரிஞ்சது. நீ கல்கத்தாவுல அன்னைத் தெரேசா ஊனமுற்றோருக்கான உதவி நிலையத்துல இருக்கிற விசயம். ஏதோ நீ உயிரோட நல்லா இருக்கிறியேன்னு நிம்மதி வந்துச்சி. நம்ப பசங்க சொன்னாங்க. நாங்க போயி பேசிச் சமாதானப்படுத்தி கூட்டிக்கினு வர்றோம்ன்னு சொன்னாங்க. நான் தான் வேணாம்ன்னுட்டன்."
   மீனா ஆச்சர்யமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   ஆமா மீனா.. நா தான் வேணாம்ன்னுட்டேன். அவளே மனசு மாறி வந்தா வரட்டும். நாம கட்டாயப் படுத்திக் கூப்பிட வேணாம்ன்னு சொல்லிட்டேன். நீயும் இப்போ வந்திருக்க. ஆனா ரொம்ப காலம் கழிச்சி வந்திருக்க." என்றான்.
   அவன் சொன்னது அவளுக்குப் புரிந்தது.
   இப்போ சந்தோஷமா தானே இருக்கிறீங்க?
   ம்.. இருக்கேன். அம்மாவோட நச்சரிப்புத் தான் தாங்கல. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாங்க. ப்ச்சு.." பெருமூச்சுடன் எழுந்தான்.
   இன்னொரு தோசை வச்சிக்கங்க."
   வேணாம்மா. பசியில்ல. நீ போடுறேன்னதால தான். ஒங்கையால சாட்டு எத்தன நாளாச்சி.."
   கையைக் கழுவி விட்டுத் துண்டில் துடைத்தான். மீனா மீதியை மூடி வைத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள். அவன் மாடிப்படி ஏறப்போனவன் கோபமாகக் கேட்டான்.
   மீனா.. எங்க போற?
   ஏன்..? என்னோட ரூமுக்கு. படுக்க போறேன்."
   'ஏய்.. மாடிக்கி வா." அவன் கொஞ்சளாகக் கூப்பிட..
   மாடிக்கா..? எ.. எதுக்கு..?அவனின் குரல் அவளை உறுத்தச் சற்றுப் பயத்தடன் கேட்டாள். அவன் கோபமாக முறைத்தான்.
   ம்.. வா. கொஞ்சம் பேசணும்."
   எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம். நா மாடிக்கெல்லாம் வரமாட்டேன்." சொல்லிவிட்டுச் சட்டென்று தனதறையில் நுழைந்து கட்டிலில் அமர்ந்தாள். மார்பு படபடவென அடித்து கொண்டது.
   ஆனால் அவன் கூடத்து விளக்கை அணைத்துவிட்டு அவள் அறையில் நுழைந்து கதவைச் சாத்தித் தாழ்பாள் போட்டான்.
   ஒனக்கு மேல வரப்புடிக்கலன்னா  என்ன? நா ஒங்கூட இங்க இருந்துடுறேன். எனக்கொன்னும் இதுல அவமானம் கெடையாது." அவளருகில் அமர்ந்தான். அவள் சட்டென்று எழுந்து கொண்டாள்.
   என்ன மீனா..?அவன் அருகில் வந்தான்.
   வேண்டாங்க. இதெல்லாம் தப்பு. யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க..? குரல் மெதுவாக வந்தது.
   ஏய்.. நீ என்னோட பொண்டாட்டி. நீ இன்னும் பத்து வருஷம் கழிச்சி வந்தாலும் என்னோட பொண்டாட்டி தான். இதப் போயி யாரு தப்பா நெனைப்பங்க..?
   அதுக்கில்லைங்க.. கண்மணி.. கண்மணி.. எங்க..?
   கண்மணியா..? இப்ப எதுக்கு அவ? எப்பபாரு. கண்மணி.. கண்மணின்னுட்டு.. இங்க நா ஒருத்தன் ஒனக்காக தவியா தவிக்கிறேனே.. இது ஒனக்கு தெரியலையா..? ஒனக்கு என்னைவிட அவதான் முக்கியமா..? நானும் வந்ததிலேர்ந்து பாக்குறேன். எப்பப்பாரு அவள பத்தியே பேசிக்கினு இருக்கே.. எனக்குன்னு ஆச பாசம் இருக்காதா..?
   கத்தினான்!!
   மீனா மிரண்டு விட்டாள். அவன் கோபத்திற்கு என்ன பதில் பேசுவது என்றே அவளுக்குத் தெரியவில்லை. அவளின் மிரண்ட விழிகளைப் பார்த்ததும்.. அவன் தன்னை நிதானப் படுத்தினான்.
   மீனா.. கண்மணி அவ அம்மா வீட்டுல சந்தோஷமா நிம்மதியா இருக்கிறா. போதுமா..? இப்ப எனக்கு அவள பத்தின நெனப்பு எதுவும் கொஞ்சம் கூட  இல்ல. எனக்கு வேண்டியது எல்லாம் இப்ப நீதான். நீ மட்டும் தான். என்ன புரிஞ்சிக்கோம்மா.. நா ஒம்மேல எவ்வளவு ஆச வச்சிறுக்கேன் தெரியுமா..?
   அவளை இழுத்து மார்போடு அணைத்துத் தழுவினான். மீனா அவனை விட்டு விலக நினைத்தாள். நினைத்தாள். நினைத்துக் கொண்டே இருந்தாள்.
   ஆனால் அவளால் அவனைவிட்டு விலக முடியவில்லை! இப்பொழுது அவளுடைய உணர்வுகளுக்கும் அவன் தேவை.
   காமத்தீ எதில் துவங்கி எங்கே முடிவது என்று யாருக்கும் தெரியாமல் அணைந்து போவது தானே!!

                           (தொடரும்)

No comments :

Post a Comment