Wednesday, 30 May 2012

போகப் போகத் தெரியும. - 12


  அவளுடைய செல்போன் மூன்று மாதத்திற்குப் பிறகு நான் இன்னும்  உயிருடன்தான் இருக்கிறேன்  என்பதை சங்கீத மொழியில் சிணுங்கிக் காட்டியது.
   அன்று சின்னதம்பி அவளை ஆசிரமத்தில் விட்டுவிட்டுப் போனதுடன் சரி. அவனோ இல்லை அதற்கு முன்தினம் டெலிபோனில் பேசிய சக்திவேலோ இதுவரை அவளைத் தொடர்;பு கொள்ளவில்லை.
   ஆனால் இந்த மூன்று மாதத்திற்குப் பிறகு இன்று அதுவும் கடைசிப்பரிட்சையை முடித்து இன்றுடன் பள்ளி வாழ்க்கை முற்றுபெற்றது என்ற எண்ணத்தில் இலேசாக சந்தோச வானிலே பறந்த மீனாவின் இதயத்தில் கைபோன் சிணுங்கவும் மேலும் மகிழ்ந்தாள்.
   யாராக இருக்கும் என்று நினைக்கும் பொழுதே.... சின்னதம்பி அவள் மனக்கண்முன் வந்து சிரித்தான்.
   அதை அழிக்கமுயன்று தோற்று போன மீனா... போனின் பட்டனை அழுத்திக் காதுகொடுத்தாள்.
   'அலோ......"
   'அலோ மீனா நான் சக்திவேல் பேசுறேன்."
   மீனாவின் முகத்தில் இலேசான வாட்டம்! ஆனாலும் மனத்தில் சந்தோசம் வரத்தான் செய்தது.
   'நீங்களா....? சக்திவேல் எப்படி இரக்கிறீங்க? எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதியிருக்கிறீங்க.....?"
   'ம் நல்லா எழுதியிருக்கேன். உனக்கெப்படி....?"
   'ப்ஸ்ட் கிளாசுல பாஸ் பண்ணிடுவேன்."
   'அப்படியா நல்லது மீனா.... இந்த வருஷம் நம்ம ஊருல தேர்திருவிழாம்மா..... அதுல நீ அவசியம் கலந்துக்கணும். இந்த லீவு முழுசும் நீ நம்ம ஊருலத்தான் இருக்கணும். அதனால வேலை எதுவும் தேடாத. என்ன......?"
   'சரிங்க. ஆனா எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்குது. முடிஞ்சதும் வந்துடறேன். ஆமா இப்போ நீங்க எங்க இருக்கிறீங்க?"
   'ஏன்.....? நம்ம ஊருலத்தான்."
   'ஏன் சக்திவேல் தமிழ்நாட்டுல நெறைய காலேஜிங்க இருக்கும் போது எதுக்குப் பெங்களூர் போயப்; படிக்கணும்?"
   ரொம்பநாளாகக் கேட்க வேண்டும் என நினைத்த கேள்வி!
   'நம்ம ஊருல படிச்சா வேறமொழிய சகஜமா பேசி கத்துக்க முடியாது. நான் அங்க படிச்சதால இப்போ சரளமா கன்னடமும் பேசுவேன்." என்றார்.
   'அப்போ காசு பணம் இருந்தா.... எந்த ஆசையையும் நெறவேத்திக்கலாம் இல்லையா......?"
   குரலில் சற்று கவலையின் சாரல்!!!
   'ஏன்....? ஒனக்கு ஏதாவது ஆசையா இருக்குதா....? இருந்தா சொல்லு. உன்னை அமெரிக்காவுக்கு வேண்டுமானாலும் அணுப்பிப் படிக்கவைக்கிறேன்;" என்றார்.
   அமெரிக்காவிற்குப் போயப்; படித்தால் மட்டும் என்ன? அடுத்தவர் எழுதிவைத்ததைத் தானே படிக்கப் போறோம்? அதை இங்கேயே படித்தால் ஏறாதா.....? நம் முன்னோர்கள் முட்டாள்களில்லையே......!
   ஆழமாக உழாமல் அகலமாக உழுதால் செடி பயிர் மட்டுமா நஷ்டமடைகிறது......? பயிரிட்டவனும் தானே நஷ்டமடைகிறான்? பணம் பாதாளம் வரை பாயலாம் தான். ஆனால் படிப்பையோ அறிவையோ வாங்கிவிட முடியாதே......
   'என்ன மீனா மௌனமாயிட்ட? ஆனா மீனா..... நான் உன்னை அமெரிக்காவுக்கு அனுப்பினா...... நம்ம ஊர் காரங்க என்னைத் திட்டியே தீத்துடுவாங்க. அந்த அளவுக்கு நீ அவங்களோட மனசுல பதிஞ்சிபோயிட்ட!" என்றார்.
   'ஏன்.....? உங்க மனசுல நான் பதிவாகலையா......?"
   கேட்டுவிட்டு நாக்கைக் கடித்து கொண்டாள்.
   எதிர்முனையில் சற்று நேரம் மௌனமே பதிலாகக் கிடைத்தது. மீனாவும் பேசாமல் இருந்தாள். மனம் யோசித்தது.
   ஏதாவது தவறாகக் கேட்டுவிட்டோமோ......? ஏற்கனவே கண்மணிக்கும் சக்திவேலுவுக்கும் தான் கல்யாணம் ஆகும் என்று ஊர்காரர்கள் பேசிக் கொண்டதை அறிவழகி அவளிடம் சொல்லி இருக்கிறாள் தான்!
   இருந்தாலும் அவள் மனத்தின் ஓரத்தில் மிக இலேசான ஆசை!!!! அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அறிய அவளுக்கு ஆவலாக இருந்தது.
   சின்னதம்பி வேறு தன்னைச் சிங்கத்தைச் சுற்றிவரும் ஈ என்று சொல்லி அவமானப் படுத்தி இருக்கிறான். அதுவே ஒரு சமயம் உண்மையோ என்று கூட அவள் பலமுறை யோசித்ததுண்டு. சக்திவேலின் மீது அவள் காட்டுகிற அக்கரைக்கு அவனிடமிருந்து எந்தப் பதிலும் எதிர்பார்பபும் இல்லாமல் இருப்பது அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது.
   அதனால் தான் அவனை அப்படிக் கேட்டாள்.
   ஆனால் அவள் கேட்ட அதே கேள்வியை அவன் அவளிடம் திருப்பிக் கேட்க அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணருவோம் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை!
                      
   தொலைபேசியில் மீனாவிடம் பேசிய சக்திவேல்  உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பினால் ஊர்க்காரர்கள் என்னைத் திட்டியே தீத்துடுவாங்க. அந்த அளவுக்கு நீ அவங்க மனசுல பதிஞ்சிப் போயிருக்கிற ; என்று சொன்னவுடன்
   'ஏன் உங்க மனசுல நான் இல்லையா.....?" என்று மீனா கேட்டுவிட்டுச் சிறிது நேரம் ஆகியும் அவன் பதில் சொல்லாமல் இருந்தது மீனாவைச் சிந்திக்க வைத்திருந்தது.
   அவனைச் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டோமோ என்ற பயம் வந்தது. அதனால் அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.
   'சக்திவேல்.... உங்களுக்கு முப்பது வயசுக்கு மேல ஆவுதுன்னு நம்ம கணேசன் சார் சொன்னார். ஏன் நீங்க இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல?"
   பேச்சை மாற்றிப் பேசினாலும் விசயம் ஒன்றாகவே இருக்கும் படியாகத்தான் இருந்தது.
   'என் ஜாதகத்துல எனக்கு இன்னும் மூனுவருஷம் கழிச்சித்தான் கல்யாணம் செய்யணுமாம். அதுவும் நெருங்கின சொந்தத்துல தான் பொண்ணு அமையுமாம். என்னோட அம்மாவுக்கு ஜாதகம் ஜோசியம் மேல அதிக நம்பிக்கை. ஆனா எனக்கு அதெல்லாம் நம்பிக்கை கெடையாது. ஆனா..... எனக்கு என்னோட அம்மா சொன்னதுதான் வேதவாக்கு. அவங்கள மீறி நான் இதுவரையில எதையும் செஞ்சதில்ல. எப்போ கல்யாணம் நடக்கணுமோ அப்போ நடக்கட்டும்." என்றார்.
   இப்பொழுது மீனா மௌனம் சாதித்தாள். தன் தாயின் மீது கொண்ட பாசத்தால் தனக்கென்று ஆசைகள் எதுவும் இல்லாமல் வாழும் மனிதனை நாம் மனத்தால் தொந்தரவு செய்திருக்கிறோமே..... என்று மனம் உறுத்தியது!
   'என்ன மீனா பேச்சையே காணோம்.....?"
   'என்னை மன்னிச்சிடுங்க சக்திவேல்! உங்க நெலமைத் தெரியாம நான் அன்னைக்கி உங்கள விரும்புவதாகச் சொன்னது எவ்வளவு பெரிய தப்பு. என்னோட முட்டாள் தனத்தை நெனச்சி நானே வெட்கப்படுறேன் சக்திவேல்....." என்றாள். அவள் குரல் உடைந்திருந்தது.
   'அப்படின்னா உன் மனசுல நான் இல்லையா......?"
   அவன் சட்டென்று அதிர்ச்சியாக அவள் கேட்ட அதே கேள்வியை இப்பொழுது அவளிடம் கேட்டான்.
   அவளால் இதற்கு உடனே பதில் சொல்லத் தெரியவில்லை. சற்று யோசித்தாள்.
   'இருக்கிறீங்க சக்திவேல். நீங்க என்னோட மனசுல தெய்வத்துக்கு நிகரான இடத்துல இருக்கிறீங்க."
   உள்ளத்தால் உயர்ந்தவர்கள் தெய்வத்திற்கு நிகர் தானே....... ஆனால் அவனோ....
   ' வேணாம் மீனா...... என்னைத் தெய்வமாக்கிடாத. தெய்வத்திடம் பக்திதான் வரும். எனக்கு உன்னுடைய அன்புதான் வேணும். அதுவும் நிரந்தரமா என்கிட்ட மட்டும் இருக்கவேணும் மீனா......"
   அவன் பேச்சை நிறுத்தியதும் டெலிபோன் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மீனா ஏமாற்றமாகப் பட்டனை அழுத்தி மீண்டும் மீண்டும் ;அலோ.....அலோ..... ;என்று கூப்பிட்டுப் பார்த்தாள். தொடர்பு துண்டிக்கப்பட்ட கைபோன் ஊமையின் வாயாக இருந்தது.
   அவளுக்குக் கோபம்! பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே இணைப்புத் துண்டிக்கப்பட்டது சக்திவேலுவுடைய வேலையா.....? அல்லது இணைப்பு கோளாரா.....? சற்று நேரம் யோசித்தவள் பதில் தெரியாமல் அசைபோடும் மாட்டின் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
   ஒன்றுமட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது. சக்திவேலுவை விரும்புவதற்குத் தனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது மனத்தை அழுத்தியது. ஆனால் சக்திவேலுவின் பேச்சும் அவளைக் குழப்பியது.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   வெள்ளை நிறத்தில் கண்ணாடிக் கற்களும் வெள்ளை முத்துக்களும் பதித்த ஷராரா உடையும் கழுத்தை ஒட்டின முத்துமாலையும் காதுகளில் முத்து பதித்த கம்மலும் மீனாவின் அழகுக்கு மேலும் அழகைச் சேர்த்தது.
   அதிலும் அவளுடைய குட்டையான சுருட்டை முடியைச் சுருள் சீப்புக் கொண்டு சுருள்சுருளாகச் செய்யப்பட்ட தலையலங்காரம் பார்ப்பவர்களை ஏதோ பழையகாலப் படங்களில் வரும் இராஜக்குமாரிகளைத் தான் ஞாபகப்படுத்தும்.
   சலசலப்பாக ஓடும் தண்ணீரில் தரையில் புரளும் பாவாடை துணியை இலேசகத் தூக்கிவிட்டுக்; கொண்டு புல்லின் மேல் அவள் அமர்ந்திருந்த அழகு ஆண்கள் என்றில்லை பதினெட்டு வயது இன்று தான் முடிந்திருக்கும் கண்மணியையும் வியக்கவைத்தது.
   அவளுக்கு வியப்பு மட்டுமல்ல! மீனாவின் அழகு அவளை பொறாமை கொள்ளக்கூடச் செய்தது. ஆனால் அவள் பொறாமை படவேண்டிய அவசியம் இல்லை தான்! மீனா வெள்ளை அன்னம் என்றால்..... இவள் அழகில் மயிலுக்கு ஒப்பாக இருந்தாள்.
   இருந்தாலும் மனிதனின் மனம் தன்னிடம் இருக்கும் நல்லவைகளைக் கூட அடுத்தவர்களின் ஆலோசனையை வைத்துத் தானே எடை போடுகிறது.
   மீனா கண்மணி தன்னையே உற்றுப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு அவளிடம் பேச்சு கொடுத்தாள்.
   'என்ன கண்மணி..... என்னையே.... உத்துப்பாக்கிற...?"
   'மீனா.... நீ இந்த டிரெஸ்ல ஒரு இளவரசி மாதிரி இருக்கிற."
   மீனா சிரித்தாள்.
   'கண்மணி..... நான்வேணா அழகுல இளவரசி மாதிரி இருக்கலாம். ஆனா நீPP...... உண்மையிலேயே இந்த ஊருக்கே இளவரசியாச்சே....." என்றாள்.

   மீனா இந்த மூன்று நாட்களில் கண்மணிக்கு அந்த ஊரில் இருக்கும் செல்வாக்கை  நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். பணத்தில் மட்டுமல்ல குணத்திலும் கண்மணி உயர்ந்தவள் தான். இல்லை என்றால் வெறும் பள்ளியில் நடந்த கலைநிகழ்ச்சியில் சந்தித்துப் பழகிய மீனா.... ;நானும் உன் ஊருக்குவந்து ரெண்டு மூனு நாள் உன்கூட தங்கிக்கிறேனே.... ; என்று கேட்டதும் அவளைத் தன்னுடன் அழைத்துவந்து இந்த முன்று நாட்களும் அவள் கவனித்த கவனிப்புக்கு எந்த கைமாறும் செய்ய முடியாது.
   அதிலும் கண்மணிக்கு இன்று பிறந்த நாள். தன்னுடைய உடையைப் போலவே மீனாவிற்கும் வாங்கிக் கொடுத்து இன்று அணிந்து கொள்ள வைத்துவிட்டாள். அவளும் அதே மாதிரியான உடையில்! ஆனால் அவளை அலங்கரித்ததோ.... தங்கங்கள்! அவள் பட்டு நிலத்தில் வளரும் பவளக்கொடி!
   அதனால் தான் மீனா கண்மணியைப் பார்த்து அப்படிச் சொன்னாள். ஆனால் கண்மணியின் முகமோ வாடிவிட்டது.
   'ப்ச்சி..... ஊருக்கு இளவரசியா இருந்து என்ன பயன்? இளவரசி மாதிரி சுயவரம் வச்சா புடிச்சவனுக்கு மாலை போடவக்கிறாங்க? ஊருக்குத் தலைவனா இருந்தா ஊர் நல்லதுக்காக நம்முடைய சந்தோசங்களை மண்தோண்டி பொதைக்க வேண்டியதாகவும் தானே இருக்குது.....?" குரலில் கவலையாகச் சொன்னாள்.
   மீனா அவளை யோசனையுடன் கூர்ந்து பார்த்தாள். கண்மணியின் கண்மணிகள் கலங்கி இருந்தன. இவள் என்ன சொல்ல வருகிறாள்.....? இவளுக்கும் சக்திவேலுவுக்கும் தானே திருமணம் பேசி இருந்ததாக அம்மா சொன்னாங்க.....? சக்திவேலைக் கட்டிக்க இவளுக்குக் கசக்குதா.....?
   கண்மணியும் மீனாவும் தோழிகள்தான். என்றாலும் மீனா கண்மணியிடம் அவளின் திருமணத்தைப் பற்றி இதுவரை பேசியதில்லை.
காரணம் அது அநாகரீகமானதா....? அல்லது சக்திவேல் தனக்குக் கிடைக்கவில்லை என்ற பொறாமையா.....? என்று அவள் யோசித்ததில்லை. அவள் இந்த ஊருக்கு வந்த காரணமே வேறு!!
   ஆனால்..... கண்மணி இப்பொழுது சொன்ன வார்த்தைகள் அவளை யோசிக்கவைத்தது. அப்படியானால் இவளுக்குச் சக்திவேலுவைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசையில்லையா......?
   கேட்டுவிடலாமா......?  கேட்டால் உனக்கு எப்படி சக்திவேலுவைத் தெரியும்? என்று கேட்கலாம். மீனா தன்னுடைய ஊர் ஆத்தூர் என்று இதுவரை சொன்னதில்லை. சொல்ல வேண்டிய அவசியமும் இதுவரை ஏற்பட்டதில்லை. என்ன செய்யலாம்.....? ஆனால் ஏதாவது செய்யவேண்டும்.....!
   'கண்மணி.... நீ எந்தச் சந்தோசத்தை மண்ணுதோண்டி புதச்சே...... எங்கிட்ட சொல்லு. நான் தோண்டி எடுத்து உனக்குத் தந்திடுறேன்." என்றாள்.
   'உன்னால முடியாது மீனா. அது மக்கிபோயிடுச்சி. நீ வேணும்ன்னா வேற வெதையத் தூவி வேற சந்தோசத்தை வளரசெய்யலாம்....."
   மீனா புரியாமல் அவள் முகத்தைப் பார்த்தாள்.
   'என்ன மீனா.... புரியலையா....? நானே சரியா சொல்லுறேன். எனக்கு ஒரு அத்தை மகன். ஒரு மாமன் மகன். ரெண்டு பேருமே வசதியானவங்க. எனக்கு மாமன் மகனைத்தான் புடிச்சியிருந்துச்சி.  ஆனால் இங்க என்னோட விருப்பத்துக்கெல்லாம் எடமில்லை. ஏன்னா ரெண்டு பேருமே அவங்கஅவங்க ஊருக்கு தலைவர்க மாதிரி! யாராவது விட்டுக் கொடுத்தா தான் உண்டு. இல்லைன்னா ஊருல கலவரம் தான் வரும். பணக்காரங்க சண்டை போட்டா ஏழைங்களுக்குத் தானே இழப்பு வரும்? அத புரிஞ்சிக்கினு என் மாமன் மகன் அத்தைமகனுக்கே என்னை விட்டுக் கொடுத்திட்டார். எனக்கும் என்னோட அத்தை மகனுக்கும் நிச்சயத்தார்த்தம் முடிஞ்சிடுச்சி. நான் படிப்பை முடிச்சப் பிறகு தான் கல்யாணம்ன்னு முடிவா சொல்லிட்டேன்." என்றாள்.
   'ஏன்...... உன்னோட மாமா மகனை உன்னால மறக்க முடியலையா....?" மீனா ஆதங்கமாகக் கேட்டாள். கல்யாணம் கட்டாயமாக்கப்படும் பொழுது அது வாழ்க்கை முழுவதும் தண்டனையாகி விடுகிறதே! மனம் விரும்பாமல் ஏற்றுக் கொள்ளும் சந்தோசம் வெறும் நடிப்புத்தான்!
   'சீச்சீ.... அவர் எப்போ என்னை எல்லார் முன்னாடியும் வேண்டாம்ன்னு சொன்னாரோ..... அப்பவே நான் அவர மறந்துட்டேன். ஆனா மீனா.... பெண்களுக்கு முதல்ல தோனுற காதல் நிறைவேறலைன்னா அது காலம் பூரா நினைவு சின்னமாகத்தான் மனசுல அழிக்க முடியாத அளவுக்குப் பதிஞ்சிப் போயிடும். என்னோடக் காதலும் அப்படித்தான். ஆனா புடிச்சது கெடைக்கலன்னா கெடச்சதை புடிச்சிக்கணும் இல்லையா.....? அதத்தான் நானும் எவ்வளவோ முயற்சி பண்ணுறேன். ஆனா முடியலை மீனா.... அவரப் பாத்தாலே எனக்கு பயமா இருக்குது. அவருக்கு அன்பா பாத்து பேசக்கூடத் தெரியலை..... என்ன செய்யலாம்..... நீயே ஒரு வழி சொல்லு......"

   மீனா கண்மணியின் புத்திசாலித்தனமான பேச்சைக் கேட்டு மெய் மறந்து இருந்தாள். பழைய காதல் நினைவுச்சின்னம் என்றது எவ்வளவு உண்மையான வெளிப்பாடு. தன் மனத்திலும் முகம் பார்க்காத அந்தச் சக்திவேல் என்ற பெயர் வெறும் நினைவுச்சின்னம் தானா.....?
   பரவாயில்லை. பழைய நினைவுகள் வாழ்க்கையின் பாடங்கள். அதிலும் தோல்வியால் ஏற்பட்ட நினைவுகள் இனித் தோல்வி ஏற்படாமல் இருக்கக் கற்பிக்கப் பட்ட முன்னேற்றப் பாதைகள். அதில் இருக்கும் கவலை என்ற தடைகல்லைத் தூக்கி எறிந்து விட்டால்.... அதுவே வெற்றிக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு!
   கண்மணியின் கேள்வி மனத்தில் எழுந்தது. ஒருவன் அன்பை வெளிக்காட்ட என்ன செய்ய வேண்டும்? ஒரே வழி.... மனம் திறந்து பேசவேண்டும்! பேசக் கூச்சப்படுபவர்களிடம்......?
   உடனே மனம் சக்திவேலுவை நினைத்தது. பெண்களின் முகம் பார்க்கவே கூச்சப்படுபவர்! அவர் எப்படி இவளிடம் மனம் திறந்து பேசுவார்......? வேண்டுமானால் இவளே அவரிடம் போய் பேசிப் பழகலாம். சம்மதிப்பாளா......?
   படித்த பெண்களுக்கும் வெட்கம் வரத்தானே செய்கிறது!
   அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே கண்மணியின் வீட்டு வேலையாள் அங்கே வந்து 'பாப்பா..... உன்ன பாக்க சத்திவேலு ஐயா வந்திருக்காருமா....." என்றார்.
   அவர் சொன்னது தான் தாமதம். கண்மணியின் முகத்தில் வந்த சந்தோசத்தை அளவிட்டுச் சொல்லவே முடியாது. 'வாடி போகலாம்....." சொல்லிக் கோண்டே வீட்டைவிட்டு ஓடினாள்.
   அவள் ஓடின வேகத்தைப் பார்த்த மீனாவிற்கு ஆச்சர்யம்! இவ்வளவு ஆசையுடன் இருப்பவளைச் சக்திவேலால் புரிந்து கொள்ள முடியவில்லையா......? எழுந்து மண்ணைத் தட்டிவிட்டு நடந்தாள்;;. அவளுக்கும் சந்தோசம். தானும் முதல்முறையாக சக்திவேலுவை நேராகப் பார்க்கப் போகிறேமே என்ற எண்ணம்!
   கற்பனையில் எண்ணங்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சிறகடித்துப் பறக்கச்செய்யலாம்...... ஆனால் நடைமுறையில் நடப்பது எதுவும் கற்பனையில் பறந்த பறவையாக இருப்பதில்லையே......!!

                        (தொடரும்)

No comments :

Post a Comment