Thursday 6 June 2013

போகப் போகத் தெரியும் - 58





   சக்திவேல் மருத்துவமனைக்குள் நுழைந்தான். துளையிடப் பட்டப் பாலாபழத்தில் மொய்க்கும் ஈக்களின் கூட்டமாக மக்கள் கூட்டம்.
   மருத்துவமனை நோயாளிகளின் கோவில்! ஆனால் இங்கே அமைதி இல்லை. மக்கள் கடவுளைத் தரிசித்து அருளைப் பெற ஆவலுடன் இருப்பது போல நோயாளிகள் மருத்துவரைச் சந்திக்க வரிசையாகக் காத்திருந்தார்கள்.
   அவர்களைத் தாண்டி நடந்தான். டாக்டர் ஆனந்தி. மகளீர் மருத்துவப் பிரிவு. என்ற குறியிடப்பட்ட பலகைக்குக் கீழ் இருந்த அறைக்கு முன் அதிக கூட்டம் இருந்தது. அவர்களைத் தாண்டி உள்ளே போகலாமா என்று நினைத்தான். ஆனால் தயக்கமாக இருந்தது.
   மகளீருக்கான பிரிவில் அவன் தயங்கி நிற்பது அவனுக்கே சற்று சங்கடமாக இருந்தது. அங்கிருந்த பெண்கள் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவர்கள் இவனை ஒரு நோயாளி என்று பார்த்திருந்தாலும் பரவாயில்லை. தானும் ஒரு நோயாளித் தான்!
   தான் நேசிப்பதை வைத்து வாழ முடியாமல் வெறுப்பதை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனும் நோயாளியைப் போல் தானே..! ஆனால் அதற்காகப் பெண்கள் பிரிவில் நிற்க வேண்டி இருக்கிறதே..! தன்மானம் சுட நகரப் போனவனைக் கவனித்துவிட்ட ஒரு நர்ஸ் அவனருகில் வந்தாள்.
   சார்.. டாக்டர் ஆப்ரேஷன் ரூமுல இருக்காங்க. ஒரு அர்ஜண்டு கேஸ். நீங்க வந்தா கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணச் சொன்னாங்க."
   வெள்ளைப் புறாவாகத் தூது சொல்லிவிட்டுச் சென்றாள்.
   சக்திவேல் யோசனையுடன் கண்மணி இருந்த அறையைத் தேடிக் கொண்டு வந்தான். கண்மணி குழந்தைக்குப் புட்டிபால் கொடுத்துக் கொண்டு இருந்தாள். இவனைப் பார்த்தும் முகமலர எழப்போனவளை ஒடம்ப அலட்டிக்காத கண்மணி.. இப்போ ஒடம்பு எப்படி இருக்குது?" கேட்டான்.
   அவள் சரியாக அமர்ந்து கொண்டு பரவாயில்ல மாமா." என்றாள். முகத்திலும் குரலிலும் கவலை ஒட்டியிருந்தது.  சக்திவேல் தன் பாக்கெட்டிலிருந்த சங்கிலியை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டுவிட்டான். குழந்தை இளவம் பஞ்சு மூட்டையைப் போல் மென்மையாக இருந்தது. கறுப்பு உதட்டைச் சுழித்து காட்டியது. அதை ரசித்து கொண்டிருந்தவனிடம் கண்மணி கேட்டாள்.
   மீனாவ அழைச்சிக்கினு வரலையா..?"
   அவன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்!
   அவ வந்திருக்கறது உனக்கெப்படி தெரியும்?"
   அம்மா சொன்னாங்க. டெலிபோன் பண்ணினாளாம். அதனால தான் நீங்க நேத்துலர்ந்து வரலையா..?"
   ம்.. நா மீனாவ கூப்பிட்டேன். வரலைன்னு சொல்லிட்டா. எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான். தான் வந்து கொழந்தைய பாத்தா கொழந்தைக்கு ஏதாவது வந்திடுமாம். பயப்படுறா."
   அந்த மாதிரியெல்லாம் யாரும் நெனைக்க மாட்டாங்க. நீயா மனச கொழப்பிக்காதேன்னு சொல்ல வேண்டியது தானே.."
   எல்லாம் சொல்லிப் பாத்தாச்சி. அவளால அந்த விசயத்த சாதாரணமா எடுத்துக்க முடியல. சட்டுன்னு அழுதிடுறா."
   நா வேணும்ன்னா.. பேசிப் பாக்குட்டா.. எங்கிட்ட பேசினா கொஞ்சம் சமாதானமா ஆகலாம் இல்லையா..?"
   தெரியல. ஆனா.. பேசிப்பாரு. அவ வந்ததுலேர்ந்து உன்னையே கேட்டுக்கினு இருந்தா. மணி பதினொன்னு ஆவுது. பன்னென்டுக்குள்ள பேசிடு. கல்கத்தாவுக்குக் கௌம்புறாளாம். இன்னும் ரெண்டு நாளுல கனடா போயிட போறாளாம். அங்கையே செட்டிலாயிட போறாளாம்."
   அவள் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
   நீங்க இதுக்கு ஒத்துக்கினீங்களா..?"
   வேற என்ன செய்யறதாம்..?"
   ரெண்டு அற குடுத்து ரூமுல போட்டுப் பூட்டுங்க. அவ சொல்லுறத நீங்க என்ன கேக்கறது? நீங்க சொல்லுறத அவள கேக்கவையுங்க. இல்லாட்டி நா பேசுறேன் அவளோட.."
   இல்ல கண்மணி. அவள வருப்புறுத்தி நம்ம கூடத் தங்க வைக்கிறதுல எனக்கு இஷ்டமில்ல. அவளா மனசுமாறித் தங்கட்டும். நாம வேணாம்ன்னு நெனச்சா பிரிஞ்சி போவட்டும். என் மனசு வெறுத்து போயிடுச்சிம்மா."
   ஒரு நர்ஸ் கதவை தட்டிவிட்டு வந்தாள்.
   டாக்டர் உங்கள கூப்பிட்டாங்க." சொல்லிவிட்டு சென்றாள். சக்திவேல் அப்புறம் வர்றேன் கண்மணி". கிளம்பினான்.

  ----------------------------------------------------------

   சக்திவேல் டாக்டர் ஆனந்தியின் அறைக்குள் நுழைந்த பொழுது அவர் இரண்டு பெண்கள் இரண்டு ஆண்களுமாக நின்றிருந்தவர்களிடம் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.
   நிறைமாத கர்ப்பிணி! ஜாக்கறதையா பாத்துகறதில்ல? பாருங்க. வழுக்கிவிழுந்ததால இடுப்பெலும்புல பலமா அடிபட்டு எலும்புல வீரல் விழுந்திருக்குது. குழந்தைக்கு ஆபத்து இல்லைன்னாலும் இப்போ என்னால எதையும் உறுதியா சொல்ல முடியாது. பெரிய டாக்டர் ரெண்டு பேர வரச்சொல்லி இருக்கேன். அவங்க வரட்டும். அதுவரைக்கும் என்னால முடிஞ்சத பாக்குறேன்." என்றார்.
   அதற்குள் அங்கே ஓர் இளம் பெண் வந்தாள்.
   டாக்டர் ஏழாம் நம்பர் ரூமுல இருந்தாங்களே.. நேத்து காலையில கொழந்த பொறந்துச்சே.. அந்த பொண்ணை அதுக்காட்டியுமா டிச்சார்ஜ் பண்ணிட்டீங்க?"
   டாக்டர் யோசனையுடன் இல்லையே" என்றார்.
   அந்த பொண்ணு.. டாக்சியில கொழந்தையோட கௌம்பினா. நா இப்பத்தான் டூட்டிக்கி நுழைஞ்சேன். கேட்டதுக்கு “நா ஆத்தூருக்கு போறேன். என்னை தேடி யார் வந்தாலும் நா ஆத்தூருக்கு போயிட்டதா சொல்லுங்க“ ன்னு சொல்லிட்டு அவசரமா போயிட்டா. எனக்கு ஒன்னும் புரியலை." என்றாள்.
   ஆத்தூருக்கா..?" சக்திவேல் யோசனையுடன் டாக்டரைப் பார்க்க.. டாக்டர் சக்திவேல் நீங்க ஆத்தூரு தான?" யோசனையுடன் கேட்டாள். அவன் ஆமாம்“ என்று தலையாட்டினான்.
   அதற்குள் ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.
   டாக்டர்.. இப்ப பாத்துக்கினு இருந்தீங்களே.. அந்த பொண்ணுக்கு பிக்ஸ் வந்திடுச்சி. சீக்கிரம் வாங்க.." பதட்டத்துடன் கூப்பிட்டாள்.
   ஓ.. காட்.." தலையில் கை வைத்தவள் உடனே சுதாரித்து கொண்டு சக்திவேல்.. கண்மணி உங்க கொழந்தைய தூக்கிக்கினு ஏன் இவ்வளவு அவசரமா ஆத்தூருக்கு போனாள்ன்னு தெரியல. நீங்களே போய் பாருங்க. நா அப்புறமா உங்கள காண்டெக்ட் பண்ணுறேன்.."
   சொல்லிக் கொண்டே அவசரப் பிரிவை நோக்கி நடந்தாள். சக்திவேல் யோசனையுடன் கிளம்பினான்.

  ----------------------------------------------------------

   மீனா தான் கொண்டு வந்த துணிகளைக் கைப்பையில் அடுக்கிக் கொண்டாள். மனத்திலே ஓர் ஆசை துளிர் விட்டது. கண்மணியும் சக்திவேலுவும் சேர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தையாவது தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அது!
   அவளை நேராகத் தான் பார்க்க முடியவில்லை. புகைப் படத்திலாவது அவர்கள் சேர்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டே காலத்தைக் கழித்து விடலாமே என்றது அவளது மனம்.
   கீழ் வீட்டில் அப்படி எந்தப் படமும் இல்லை. ஒரு சமயம் மாடியில் அவனறையில் இருக்கலாம்.
   மாடிக்குப் போனாள். அறையில் எந்த மாற்றமும் இல்லை. தேடினாள். ஒன்றும் கிடைக்கவில்லை. தொலைகாட்சியின் மீதிருந்த அவனுடையப் புகைப்படத்தைக் கையில் எடுத்து பார்த்தாள்.
   கண்கள் கலங்கியது. இந்த இரண்டு நாட்களும் அவன் காட்டிய அன்பு.. அவன் அவளிடம் செய்த குறும்பான விளையாட்டுக்கள்(?) கண்முன் தோன்றி அவளைக் கவலையடைய வைத்தது.
   சந்தோஷமானவைகள் இனிக் கிடைக்காது. அவை அனைத்தும் ஞாபகார்த்தங்களாகி விடுவதால்.. ஏக்கங்கள் அதிகமாகி விடுகிறதே.. அவளுக்கு அந்த ஏக்கங்கள் மனத்தில் வந்து அழுத்தியது.
   நாம் அவரை விட்டுப் போனது தவறோ..? போய் இருக்கக் கூடாதோ..?  இப்படியானதொரு கேள்வி முதல் முறையாக எழுந்தது! 
   சேச்சே.. என்ன இது அர்த்தமில்லாத கேள்விகள்?  நாம் போனதால் தான் அவருக்கு நல்ல வாழ்க்கை வாரிசு கிடைத்தது. நாம் அவருடன் சேர்ந்திருந்தால் கண்டிப்பாக இது சாத்தியமாகி இருக்காதே..
   ஏதோ தியாகம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு தவறாக நடந்து கொண்டோமா..?  இப்பொழுது எப்படி அவரைப் பிரிந்து போவது? முடியுமா..? அந்த முகத்தைப் பார்த்துவிட்டு அந்தக் கண்களைத் தாண்டிப் போய் விட முடியுமா..?
   கடவுளே.. எனக்கு அந்த தைரியத்தை கொடு. அவரை நான் மறக்க முடியாது. ஆனால் பிரிந்து போகிற உள்ளத்தைக் கோடு. நான் போகாமலேயே இருந்திருக்க வேண்டும். ஆனால் பிரிந்து போய் விட்டேன். இப்பொழுது அவருக்கென்று ஒரு வாழ்க்கை. ஒரு குழந்தையும் ஏற்பட்டு விட்டது!
   இனி நாம் இங்கே இருக்கக் கூடாது. யார் நல்லா இருக்கணும்ன்னு நெனைச்சேனோ.. அவருடைய சந்தோசத்திற்கு நாமே தடையாக இருக்கக் கூடாது. போயிடணும். போயிடணும்..
   கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டு புகைப்படத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பினாள்.
   எதிரில் கண்மணி குழந்தையுடன் நின்றிருந்தாள்!!

              (தொடரும்)

1 comment :

  1. Hi Aruna Selvam,
    I liked very much your story".Poga Poga theriyum". Very interesting story. If there is any story written by you or any other serial stories, kindly give me the link to read. Thanks a lot.
    gomathy

    ReplyDelete