Tuesday, 1 May 2012

போகப் போகத் தெரியும் - 9



   எந்த ஒரு காரியத்திற்கும் ஒரு தொடக்கம் வேண்டும். பிரயாணத்திற்கு முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது போல. ஆனால் அந்த முதல் அடிதான் மனத்தில் சவாலாக அமைந்துவிடும்.
   மீனா சவாலாகத் துவங்கிவிட்டாள். ஊர் தேரைப்புதுப்பிக்கத் தேவைப்படும் பணத்தை ஊர்க்காரர்களிடம் வசூலிக்கலாம் என்று கணேசன் சொன்னதற்குத் தேவையில்லை என்றும் காரணம் கேட்ட சின்னதம்பிக்குத்  தேவைப்படாது என்றும் பதிலளித்தாள்;.
   சின்னதம்பி அவளைச் சற்று யோசனையுடன் உற்றுப் பார்த்தான். அவள் முகம் சிவந்து வியர்த்துப் போய் இருந்தது. இவள் என்ன சொல்ல வருகிறாள்.....? ஒரு சமயம் பயப்படுகிறாளா.....?
   'மீனா நீ ஏதாவது சொல்ல வேண்டுமானால் உன் கருத்தைத் தைரியமாகச் சொல்லலாம். நம்முடைய ஊர் நலனுக்காகக் கூட்டப்படும் கூட்டம். ஓருத்தர் சொல்லும் கருத்தை மற்றவர்களும் கலந்து பேசிக் சரியானதுத்தான்னா முடிவாகப் போகிறது. இல்லைன்னா அவங்களோட மனம் நோகாம நிகாரிக்கப் படப் போவுது. நீ யோசிக்காதே. தைரியமா சொல்லு." என்றான்.
   மீனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். 'நான் சொல்ல வருவது கொஞ்சம் கஷ்டமான வேலை. அதான் முடியுமான்னு யோசிக்கிறேன்....."
   'மீனா... எல்லா விசயமும் பாக்க கஷ்ட்டமாத்தான்  தெரியும். காரணம் அந்த வேலை ரொம்பக் கஷ்டமா இருக்கும்ன்னு நெனச்சே சில காரியங்களைத் துணிஞ்சி செய்யாமலேயே விட்டுடுறோம். நாம் முயற்சி செஞ்சி துணிஞ்சி செய்யாததாலத்தான் அந்தக் காரியம் கஷ்டம் போலவே தெரியுது. அது என்னன்னு சொல்லு. சரியானதுன்னா மேற்கொண்டு பேசலாம்." என்றான்.
   மீனாவிற்கு அவனுடைய வார்த்தைகள் சற்று தைரியத்தை ஊட்டியது. அவள் தன் கருத்தைச் சொல்லத் துவங்கினாள்.
   'நம்ம ஊருல ஒரு சின்ன ஏரி இருக்குது இல்லையா...? அது ரொம்ப வருஷமா துர்ர் வாராம எதுக்கும் உதவாம இருக்குது. அதை நாமெல்லாம் சேர்ந்து துர்ர் வாரணும். அப்படி சுத்தப்படுத்தினா போன நாலு வருஷமா பெய்யாத மழை இந்த வருஷம் அதிகமா பெய்ய வாய்ப்பு இருக்குதுன்னு வானிலை ஆராட்சியாளர்கள் பேட்டிக் குடுத்து இருக்காங்க. இப்போ தூர் வாரினா நிச்சயம் இந்த வருஷம் ஏரி நிறையும். நமக்கு நல்ல பலன் கெடைக்கும்." என்றாள்.
   மீனா சொன்னதை அனைவரும் கூர்ந்து கவனித்தார்கள். அவள் சொன்ன விசயம் சரியானதுதான். ஆனால் இது முடியிறக்காரியமா.....? எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் யாரும் கேள்வியைக் கேட்கவில்லை.
   'மீனா உன்னுடைய எண்ணம் எங்களுக்குப் புரியுது. நாங்களும் நம்மூர் ஏரிய தூர்வார அரசாங்கத்துக் கிட்ட மனு போட்டுக்கினுத் தான் இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் எந்த உதவியையும் செய்யலையே...." கணேசன் சொன்னான்.
   'இதெதுக்கு நாம அரசாங்கத்தோட உதவியைக் கேக்கணும்? நம்ம ஊர் இது. நம்முடைய ஏரி. இதைச் சுத்தப்படுத்தினா நாமத்தான் அதிகமா பயனடைவோம். ஏன் அதை நாமே செய்யக்கூடா?. நமக்கு நம்முடைய சக்தி தெரியும். அதுல உழைப்பு ஊரிப்போய் இருக்குது. ஒருவன் கைத்தட்டினால் கொஞ்சம் சத்தம் வரும். ஊரே சேர்ந்து கை தட்டினா நாடே நம்மைத் திரும்பிப் பார்க்கும்;. அடுத்தவர் கல்ல நிக்க நாம ஒன்னும் ஊனமாயில்லையே......"
   அவள் வார்த்தைகளில் அனல் பறந்தது.
   அங்கே அமைதி நிலவியது. அனைவருமே இந்த விசயத்தைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மீனா அவர்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அமர்ந்திருந்தாள்.
   சின்னதம்பி அமைதியைக் கலைத்தான்.
   'மீனா சொன்னதிலும் நியாயம் இருக்குத் தான். அரசாங்கம் உதவி செய்யலைன்னா என்ன....? நாமே ஏன் இதை செய்திருக்கக் கூடாது? இதுக்குப் பணம் பொருளை விட உழைப்புத் தான் தேவை. நம்ம ஊர் ஏரி ரொம்ப சின்னது தான். எப்பவோ தூர் வாரி இருக்கலாம். இந்த வகையில நாம யோசிச்சதே இல்லை. இதுக்காக நாம மீனாவுக்கு நன்றி சொல்லணும்." என்றான் மீனாவை நன்றியுடன் பார்த்தபடி.
   மீனா எழுந்து நின்றாள்.
   'இதுக்காக நன்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. எப்போதுமே நேர்பார்வையில பாக்கிறவங்க பக்கவாட்டில் என்ன நடக்கிறதுன்னு பாக்கத் தவறிடுறாங்க. ஒரு சமயம் சக்திவேல் படிக்கிறதுக்காக பெங்களுர் போவலைன்னா எப்பவோ அவர் இதை இந்தக் கோணத்துல யோசிச்சிப் பாத்திருப்பார்." என்றாள் அவனை அலட்சியமாகப் பார்த்தபடி.
   அங்கே இருந்த அனைவரும் மீனாவைப் புன்னகையுடன் நோக்கினார்கள். சின்னதம்பி நிலைமையைச் சமாளித்தான்.
   'அந்த வானிலை ஆராட்சியாளர்கள் சொன்னது உண்மையாகக் கூட ஆகலாம். அதனால நாம எல்லாரும் சேர்ந்து ஏரிய தூர் வாரணும். அதுவும் கூடிய சீக்கிரமாக இருக்க வேண்டும். வேலைக்குப் போறவங்க படிக்கிறவங்க பொண்ணுங்கன்னு எல்லாருமே சேந்து ஒழைக்கணும். இதுக்கு நீங்க எல்லாரும் ஒத்தொழைப்புக் குடுப்பீங்களா....?"
   சத்தமாகக் கேட்டான். எல்லாரும் 'சரி" என்று தலையாட்டிக் கொண்டே சொன்னார்கள்!
   'மீனா இது இருக்கட்டும். எதுக்காக தேரை புதுப்பிக்க ஊருல தண்டல் பண்ணலாம்ன்னு சொன்னதுக்கு ;தேவையில்லை ; ;தேவைப்படாது ;ன்னு எதுக்காக சொன்னே....?"
   கணேசன் கேட்டான். அவன் சட்டம் படிப்பவன் இல்லையா...
   'ஏரிய மொதல்ல தூர் வாரலாம். நம்மூர் அகிலாண்டேசுவரி அதுக்கு வழி சொல்வாள்;" என்றாள். அவள் பார்வையில் வினோதமான அழுத்தம் பளிச்சிட்டது.
   அதன் பிறகு அவள் பேசவில்லை. மற்றவர்கள் கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவது என்று அலசிக் கொண்டிருந்தார்கள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   எழுச்சிக்கு முன் ஆர்வமாக எழுச்சியில் இதமாக உச்சத்தில் எரிச்சலாக இருப்பவனைக் கூடப் பெண்கள் இலட்சியம் செய்யாமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
   மீனா ஏரிக்கரையில் இருந்த மரத்திற்குக் கீழ் நின்று கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். கண்கள் அங்கே வேலை செய்து கொண்டு இருந்தவர்களைப் பார்த்து கொண்டிருந்தது.
   ஒவ்வொருவருடைய கால்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் ஊன்றி இருக்க வேண்டும். ஆனால் கண்கள் மற்ற அனைத்தையும் ஆராய வேண்டும்! அப்படித் தான் அவள் கண்களும் ஆராய முற்பட்டது. ஆனால் சிந்தனை வேறு இடத்தில் இருந்ததால் அவளுடையப் பார்வையில் விழுந்த காட்சிகள் மனத்தில் பதிவாகவில்லை.
   ஏரியைத் தூர்வாரிச் சுத்தப்படுத்தியாயிற்று. சின்னதம்பி ஏரியைத் தூர் வார மூன்று இயந்திரங்களை வாடகைக்கு எடுத்திருந்ததால் வேலை எதிர் பார்த்ததை விட சீக்கிரத்தில் முடிந்திருந்தது. ஏரியின் பக்கவாட்டுச் சுவர் பழுதாகி இருந்ததால் அதனையும் செப்பனிட்டு முடித்தாயிற்று.
   என்னத்தான் ஓர் இயந்திரம் பல பேர்கள் செய்யும் வேலையைச் செய்தாலும் ஓர் அசாதரணமான இடத்தில் ஒரு மனிதன் செய்யும் வேலையை எந்த ஒர் இயந்திரத்தாலும் செய்ய முடியாது! ஆமாம். அப்படித்தான் ஏரியின் ஒரு மூலையில் மரங்கள் சூழ்ந்திருந்தப் பகுதியில் அதனுடைய வேலையை அதனால் செய்ய முடியவில்லை. அந்த மூலையில் சேர்ந்து சரிந்திருந்த மண்ணைத் தான் இன்று வாரிக் கொண்டிருந்தார்கள்.
   ஆண்கள் மண்ணை வாரி வாரிக் கொடுக்க பெண்கள் அதைக் கொண்டு போய் ஏரிக்கரைக்கு முட்டுக் கொடுப்பது போல் கொட்டிக் கொண்டிருந்தார்கள். சில ஆண்கள் கடப்பாரையால் மண்ணைக் குத்திப் பிளந்து தோண்டி மிருதுவாக்கிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஊர் மக்கள் அனைவருமே ஒன்று கூடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
   அனேகமாகச் இன்று சூரியன் கண்ணை மூடுவதற்குள் வேலை முடிந்துவிடும்!
   சின்னதம்பி மண்ணை அள்ளிப் போட்டு கொண்டே சிந்தனையுடன் இருந்த மீனாவைப் பார்த்தான். பிறகு அவன் பார்வை கடப்பாரையால் மண்ணைக் குத்தித் தோண்டி கொண்டிருந்த சேகரின் மேல் பதிந்தது. அவன் உடனே புரிந்து கொண்டான்.
   அதை வைதேகி கவனித்து விட்டாள்;! தெம்மாங்குப் பாடுவதில் அந்த ஊரில் அவளுக்கு நிகர் அவளே! குரல் வெங்களம் போல் ஒலிக்கும். ஆனால் படிக்காதவள். எந்தக் காரணத்தைக் கொண்டும் பாடுவாள். இதைப்பார்த்ததும் பாடாமல் விடுவாளா.....?
   கணீரென்ற குரலில் துவங்கினாள்.
  
ஆத்தூரு ஏரியிருக்க
ஏரிநிறைய தூர் இருக்க
தூரை வாரிக்கொண்டே மச்சன்
தூது சொல்லக் கூப்பிடுறானே.....
   அவள் இப்படித் தொடங்கியதும் மற்றப் பெண்கள் ஆர்வத்துடன் ராகம் பாடினார்கள்.
தானே தனே தந்தானேனே
தானே தானே தானே தந்தானேனே
தானே தனே தந்தானேனே தனே
தானே தனே தந்தானனே.....

ஆலம் மரமிருக்க
அதனருகில் மான் இருக்க
மானைப் பாத்துக் கொண்டே மச்சான்
மண்ணை அள்ளிப் போடுறானே.....

தானே தனே தந்தானேனே
தானே தானே தானே தந்தானேனே
தானே தனே தந்தானேனே தனே
தானே தனே தந்தானனே.....   

மஞ்சள் முகம் இருக்க
மருதாணி சிவந்திருக்க
மாலையிட மனம் கொண்டே மச்சான்
மீனாச்சிய பாக்குறானே......

தானே தனே தந்தானேனே
தானே தானே தானே தந்தானேனே
தானே தனே தந்தானேனே தனே
தானே தனே தந்தானனே.....   

கூட குலமிருக்க
கூட்டு சேர்ந்து நாமுழைக்க
கூடி நல்லா பேசிடுவோம்
கொஞ்சும் கிளி உனக்குத் தானே....

தானே தனே தந்தானேனே
தானே தானே தானே தந்தானேனே
தானே தனே தந்தானேனே தனே
தானே தனே தந்தானனே.....   


   சின்னதம்பி பாட்டைக் கேட்டு இலேசாகச் சிரித்துக் கொண்டான். ஆனால் மீனா....? அவள் மனம் இங்கே இல்லை. இதே வேறு நாளாக இருந்திருந்தால்..... வைதேகி பாடியதற்கு.....

சக்தீ வேலு எனக்கிருக்க
சாதி சனமும் சேர்ந்திருக்க
சம்மதிச்ச மனசுடனே மீனா
சங்கமமாக ஆயிடுவாளே.....
  
   என்று எதிர் பாட்டு பாடியிருப்பாள். ஆனால் இப்பொழுது அவள் வைதேகி பாடியதையே கேட்கவில்லையே......! பிறகு எப்படி எதிர் பாட்டு பாடுவாள்?
   காலையில் அவள் வேலைக்குக் கிளம்பம் பொழுதே சேகர் வந்தான்.
   'மீனா.... இன்னைக்கி நீ வேலைக்குப் போவவேணாம். நாம ஏரிய தூர் வாரின நிகழ்ச்சிய பேட்டிக்கான பத்திரிக்கையிலிருந்து நிருபர்கள் பத்துமணிக்கு வர்ரோம்ன்னு சொல்லி டெலிபோன் செஞ்சாங்க. அதனால அவுங்க வரும்போது நீயும் இருக்கணும்." என்றான்.
   மீனாவிற்கும் ஆசையாகத்தான் இருந்தது. தன் வேலைக்கு விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு ஊர் வேலையை அவர்களுடன் செய்தாள். இன்றுடன் விடுப்பு முடிந்து விட்டது. ஏற்கனவே முன் அறிவிப்பு கொடுக்காமலேயே விடுப்பு எடுத்து விட்டதால் இன்று அவசியம் வேலைக்குப் போயே ஆக வேண்டும். அல்லது நேராகச் சென்று நிலைமையை எடுத்து சொல்லிவிட்டாவது வர வேண்டும். அதுதான் சரியானது என்று எண்ணினாள்.
   அவள் படிப்பதற்காக உதவி செய்து வந்த தொழில்! மற்றும் நல்ல உள்ளம் கொண்ட டாக்டர். இவர்களை அலட்சியப் படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் 'பத்து மணிக்கெல்லாம் வந்து விடுறேன்." என்று அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
   அதே போல் ஒன்பதரை மணிக்கெல்லாம் டாக்டரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டுக் கிளம்பிவிட்டாள்.
   ஆனால்.....!
   பேரூந்துக்காகக் காத்திருந்து வந்த வண்டியில் ஏறினாள். நிறையக் கூட்டம்! உள்ளே கூடச் சரியாக நுழைய முடியவில்லை. கண்டெக்டர் விசில் கொடுக்க வண்டிக் கிளம்பிவிட்டது. ஓர் ஐம்பது மீட்டர் தான் சென்றிருக்கும். ஒருவன் தடத்தடவென ஓடிவந்து வண்டியில் ஏறினான்.
   அவன் ஏறிய வேகம்..... வண்டி சற்று அதிக வேகமெடுக்க ஆரம்பித்து இருந்ததால்...... சட்டென்று அவன் கால் தடுக்கித் தரையோடுத் தேய்ந்தான். ஒரு கை பேரூந்தைப் பிடித்திருந்தது. அப்பொழுது படியிலேயே நின்றிருந்த மீனா சட்டென்று அவன் கையை அழுத்திப் பிடித்துத் தூக்கினாள். அவள் இழுத்த வேகமும் அதே சமயத்தில் அவன் வண்டியில் ஏற முயற்சித்த வேகமும் ஒரே நேரத்தில் நடந்ததால்..... அவள் இழுத்த வேகத்தில் அவன் தலை வண்டியின் விளிம்பில் அழுத்தமாக இடித்து விட்டது. தலையிலிருந்து இரத்தம் கொட்டியது.
   ஆனால் மீனா அவன் கையைப் பிடித்திருக்காமல் விட்டிருந்தால் ஓடும் வண்டியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி இரத்தமும் சதையும் கலந்த சேறாகியிருப்பான்.
   இதெல்லாம் ஒருசில வினாடிகளுக்குள் நடந்து முடிந்திருந்தது. அவன் தலையில் வழிந்த இரத்தத்தைப் பார்த்து கத்தியவர்களின் குரலைக் கேட்டதும் ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார்.
   அவன் தலை மீனாவின் மீது மோதியதால் அவள் தாவணியில் இரத்தக்கரை படிந்து விட்டது. அடிப்பட்டவன் கொஞ்சம் கொஞ்சமாகச் சுயநினைவை இழந்து கொண்டிருந்தான்.
   வண்டி அருகில் இருந்த மீனா வேலை செய்யும் மருத்துவமனையில் நின்றது. மருத்துவமனை ஊழியர்கள் வந்து அவனைக் தூக்கிச் செல்ல மீனாவும் அங்கேயே இறங்கிக் கொண்டான். பிறகு அவளே அவனுடன் இருந்து உதவி செய்தாள்.
   அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களுக்குத் தன்னுடைய அவசியமான சந்தோசங்கள் கூட அனாவசியமாகப் படும்.
   அவனுக்குத் தலையில் தையல் போட்டு கட்டுப் போடப் பட்டது. அவள் அங்கேயே தன் தாவணியைக் கசக்கிப் பிழிந்து மீண்டும் கட்டிக் கொண்டாள்.
   அவன் பதினொரு மணியளவில் கண்விழித்தான் அ;வன்  கொடுத்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொன்னாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவனைச் சேர்ந்தவர்கள் அங்கே வந்து விட்டார்கள்!
   ஏழு ஆண்கள்! அதன் தலைவனாக மீனா முதல் நாள் சந்தித்தாளே.... ஒரு மனித மிருகம்....... அவன் தான்!!!
   அன்று அவனது காம வெறிக்குப் பயந்து ஓடியதை இன்று நினைத்தாலும் உடம்பு ஆடியது.
   வந்தவன் கட்டிலில் படுத்திருந்தசனைப் பார்த்தானோ இல்லையோ.... இவளைப் பார்த்ததும் ஆச்சர்யத்துடன் முறைத்தான். அவனுடைய பார்வைக்கு அஞ்சியவளாக நகரப் போனவளைச் சட்டென்று கையைப் பிடித்துக் கொண்டான்.
   'டேய்.... லட்சுமணா... ஒனக்கு அடிபட்டதுக்கு இவள் தான் காரணமா சொல்லு.....? சொல்லுடா.... " கட்டுடன் படுத்திருந்தவனைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான்.
   இவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.
   'ஐயையோ.... இவயில்ல..... இவ என்னைய காப்பாத்தினவ." என்றான் அவசரமாக.
   'யாரு....? இவளா.....? ஆடு பக! குட்டி ஒறவு கொண்டாட வருதா....?"
   தாடியைச் சொரிந்து கொண்டே ஏளனமாகக் கேட்டான்;.
   'தோப்பாரு.... நா ஆடுமில்ல. ஒனக்கு பகையுமில்ல. ஒதவி செய்ய வந்ததால நா ஒனக்கு ஒறவாயிட முடியாது. கையை உடு. நா சக்திவேலுவுக்கு வேண்டியப் பொண்ணு" என்றாள்.
   எங்கே யார் பெயரைச் சொன்னால் காரியம் நடக்கும் என்று நினைத்தவளாக. ஆனால் அவள் நினைப்புத் தவறானது. அவன் முன்; போல இவள் கையை விட வில்லை. மாறாகச் சிரித்தான் குரூரமாக!
   'ஏய்.... ஒனக்கும் சக்திவேலுக்கும் என்ன ஒறவுன்னு எனக்கு தெரியும்டீ.... அனாத நாயே..... அன்னைக்கி சத்திவேலுப் பேரச் சொல்லித்தான எங்கிட்டருந்து தப்பிச்ச? இன்னிக்கி நீயாவே மாட்டிக்கினப் பாத்தியா....? இந்த வேந்தன் எந்த மானையும் உட்டுவச்சதில்ல. என்னோட வேட்டைக்கி இன்னிக்கி நீ தான் பலி......." பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.
   அதற்குள் கட்டுடன் படுத்திருந்தவன் இறங்கி வந்து அவன் கையைத் தட்டி விட்டான்.
   'என்ன நீ..... நா அடுத்தவன் கிட்ட அடிவாங்கினு ஓடியாந்து இப்டி அடிபட்டு கெடக்குறன். நீ என்னையப் பாக்காம மான் வேட்டைக்கிப் போறியா.....? உடு அவளை. இந்தம்மாப் பொண்ணு.... நீ போ." என்றான் குரலில் சற்று அழுத்தமாக.
   அவன் அப்படிச் சொன்னதும் இவன் அவள் கையை விட்டதுதான் தாமதம்...... மீனா சட்டென்று அந்த இடத்தைவிட்டு ஓடி வந்து விட்டாள். இப்பொழுதும் அதை நினைத்துக் கொண்டு தான் குழம்பிப்போய் இருந்தாள். அதனால் தான் அவளுக்கு மற்றவர்கள் செய்து கொண்டிருந்த வேலையில் மனம் லாயிக்கவில்லை.
   'மீனா...." சேகர் கூப்பிட்டான். 'ஏன் என்னவோ மாதிரி இருக்கிற? " கேட்டான்.
   'ஒன்னுமில்ல." பொய்யாகச் சொன்னாள். நிஜத்தைச் சொன்னால் ;வேலைக்குப் போற இடத்துல பிரச்சனைங்க வரும்தான். நீ இனிமேல் வேலைக்கு போக வேண்டாம்; ; என்று கட்டளைப் போட்டாலும் போடுவான். அன்புடன் பழகினால் நம்மீது இருக்கும் அக்கரையில் சற்று உரிமையும் ஏற்படுத்திக் கொண்டு விட முடியுமே......
   'நீ ஒன்னுமில்லன்னாலும்...... ஏதோ ஒன்று இருக்குதுன்னு தான் அர்த்தம். சொல்லு என்ன ஆச்சி? காலையில பத்துமணிக்கெல்லாம் வந்துடுறேன்னு சொல்லிட்டு போனே..... ஆனா இப்போத்தான் வந்தே.... வந்ததுலேர்ந்து ஒரே சோகமாவேற இருக்கிற. என்னதான் நடந்துச்சி?"
   'ஒன்னுமில்ல சேகர்" சிரிப்பைக் கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு சொன்னாள்.
   'அப்போ வா.... வந்து நீயும் மண்ணு அள்ளு...." அவன் கூப்பிட பின்னால் சென்றாள்.
   வேலையில் மூழ்கியதும் மனம் இலேசாகியது. நடந்து போன கசப்பான நிகழ்ச்சியை நினைத்தே...... தற்போதைய இன்பத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கே புரிந்தது.
   'க்ணீங்"
   காது சவ்வுக் கிழிவது போன்ற ஓர் ஒலி!!!
   அனைவரும் ஓசை வந்த திசையை நோக்கினார்கள். சேகர் போட்டுவிட்டுச் சென்ற கடப்பாரையால் சின்னதம்பி மண்ணை ஓங்கிக் குத்த அங்கிருந்து வந்தது தான் இந்த ஓசை!!!!!!

                            (தொடரும்)

No comments :

Post a Comment