Thursday 22 March 2012

போகப் போகத் தெரியும் - 3


 

தோடர்கதை பாகம் – 3


'மீனா........" டாக்டர் அழைத்தார்.
    'என்ன டாக்டர்?"
    'மீனா..... நானும் உனக்கு நன்றி சொல்லனும்மா..... நான் செய்யாத தப்புக்காக ஜெயிலுக்குப் போனேன். என் மீது தப்பு இல்லைன்னு தெரிஞ்சதும் விடுதலையானேன். ஆனால் என் மனசு வெறுத்துடுச்சி. வெளியே வந்த நான் இனி மருத்துவம் என்ற பேரில் யாருக்கும் உதவி செய்யக்கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். ஆனால் என் மனசைமாற்றி நோயாளிகளுக்கு உதவி செய்வது கடவுளுக்கு நேரடியாகப் பாதப+ஜை செய்வதற்குச் சமம்ன்னு தெரியப்படுத்தி என் மனதைத் தெளிவுப்படுத்தி நீ எழுதின கடிதத்தைப் பார்த்த பிறகு தான் நான் இந்த ஊருக்கு மருத்துவம் செய்ய வந்தேன்.
    நோய் என்பது பணக்காரனுக்கு மட்டுமில்லை. ஏழைக்கும் அழையாத விருந்தாளி தானே..... இருப்பவனிடம் பணத்திற்காக உழைப்பதை விட இல்லாதவனிடம் அன்புக்காக உதவி செய்வது எவ்வளவு உயர்வான இன்பம்ன்னு புரிஞ்சிக்கினேன். இங்க வந்திலிருந்து உண்மையாகவே நான் சந்தோசமா இருக்கிறேன்.
    நான் ஜெயில்ல இருந்து வெளியே வந்த இந்த நான்கு வருஷத்துல இப்போதுத்தான் உண்மையா சந்தோசமா இருக்கிறேன். இதுக்கு முக்கியக் காரணம் நீ தான். அதனால உனக்கு ரொம்ப நன்றிம்மா....."
    கை கூப்பிக் கும்பிட்டார்.
    மீனாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இவளும் அவரைப் பார்த்து நன்றியுடன் கும்பிட்டாள். ஒருவருக்குச் செய்யும் உதவிக்கூட உண்மையான மனமகிழ்ச்சியுடன் செய்தால் தான் அந்த உதவியின் பலன் அவர்களைப் போய் அடையும். டாக்டர் மகேந்திரனைப் பார்த்தும் புரிந்து போனது.
    மீனா வீட்டை நோக்கி நடந்தாள். இருள் வெளிச்சத்தை விரட்டி விட்டிருந்தது. இருளில் அவளுக்குப் பயமில்லை. அவள்   மனம் டாக்டரை நினைத்து அசைபோட்டது.
    இந்த ஆத்தூரில் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளில் படித்த அனைவரையும் கூப்பிட்டு ஒரு கூட்டமாகக் கூடி தங்களின் கிராமவளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று பேசுவது வழக்கம்! அந்தக் கூட்டத்தில் படித்த பெரியவர்கள் மட்டுமல்லாமல் படித்துக்கொண்டிருக்கும் மாணவ மாணவியரும் கலந்துகொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களுக்கு ஏதேனும் விருப்பமிருந்தால் அதை எழுதி அங்கே படித்துக் காட்ட கொடுத்துவிடலாம்.
    ஒன்னரை வருடத்திற்கு முன் இந்த ஊருக்கு வந்த மீனாவிற்கு இப்படியான ஒரு கூட்டம் கூட இருப்பது  அதிசயமாகப் பட்டது. ஆனால் எவ்வளவு முக்கியமான  செய்தி இதில் அடங்கி இருக்கிறது என்று நினைத்து வியப்படைந்தாள்! 
   
       
    அவள் அப்போழுது ஒரு முதியோர் இல்லத்தில் பள்ளி விடுமுறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் தன்னுடைய விருப்பமான 'இந்த ஊருக்கு ஒரு டாக்டர் தேவை. அதிலும் உண்மையான சேவை மனப்பான்மை உள்ளவராக இருக்க வேண்டும். அது தற்பொழுது விலாசம் குறிப்பிட்டு அந்த விலாசத்தில் இருக்கும் டாக்டர் மகேந்திரனிடம் போய்க் கேட்டுப்பாருங்கள் ; என்று ஒரு பெரியக்கடிதமாக எழுதித் தன் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி வசிக்கும் சட்டக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் கணேசனிடம் கொடுத்துவிட்டுப் போனாள்.
    கடிதம் கூட்டத்தில் படிக்கப்பட்டது. அப்பொழுதே யார் இந்த மீனா? என்றக் கேள்வி எல்லோருடைய மனத்திலும் எழுந்தது. இருந்தாலும் ஊர் பெரிய மனிதர்கள் நிறையப் பேராகச்சென்று டாக்டர் மகேந்திரனிடம் பேசிப்பார்த்தும் அவர் வர மறுத்துவிட்டார்.
    திருவிழாவிற்கு ஊரக்கு வந்த மீனாவிற்கு டாக்டர் வர மறுத்தது தெரிந்ததும் அவளே அவருக்குத் தன் கைப்பட கடிதம் எழுதிப்போட்டாள்.
    கடிதம் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதில் உள்ள வார்த்தைகளின் உண்மைச் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். உண்மையில் அவள் அப்படியான சக்திவாய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியே கடிதம் எழுதினாள்.        இதோ...... எழுத்துக்களின் சக்தியை    விட எழுதியவரின் சேவை உள்ளம் புரிந்து தன்னுடைய வைராக்கியத்திலிருந்து விலகி உண்மை புரிந்து வந்துவிட்டார். தவறான சபதங்கள் வெறும் காற்று மட்டும் தான்.
    மீனாவும் இன்று தான் அவரைப்பார்த்தாள். ஒவ்வருக்கும் கடவுள் நேரடியாக வந்து உதவி செய்ய முடியாது என்பதற்காகத் தான் தாயைப்படைத்தார் என்பதைப் போல ஒவ்வொரு நோயாளிக்கும் உதவி என்ற பெயரில் ஆறுதல் அளிக்க கடவுள் மருத்துவர்களைக் கனிவுள்ளம் கொண்டவர்களாகப் படைத்துள்ளார் போலும்!
    இதோ டாக்டர் மகேந்திரன் ஓர் அத்தாட்சி.
    மீனா நன்றியுடன் டாக்டரை நினைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள். சாலை விளக்குகள் திட்டுத்திட்டாக வெளிச்சப் ப+க்களைத் தூவி இருந்தது.



      0       0      0      0      0      0

    ஒரு பெண் கதறி அழும் ஓசை! மீனாவிற்குச் சட்டென்று விழிப்பு வந்து விட்டது. விளக்கைப் போட்டு மணியைப் பார்த்தாள். அதிகாலை ஐந்தடிக்க சில நிமிடங்கள்!
    'ஐயோ....... அம்மா......வலி தாங்க முடியலையே....."
    கதறிய சப்தம் தன் வீட்டிற்குப் பின் புறத்திலிருந்துத்தான் வந்தது. மாடியில் படுத்திருந்த அவள் பின் பக்க வீட்டைப் பார்த்தாள். அவள் வீட்டிற்கும் பக்கத்துத் தெரு வீட்டிற்கும் நடுவில் சிறு முள் வேலி. வேண்டுமானால் முள்வேலியை         நகர்த்திவிட்டு அந்த வீட்டிற்குப் போகலாம்.

    அந்த வீட்டில் தான் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஒரு சிலரின் பேச்சிக்குரலும் கேட்டது.
    என்னவாக இருக்கும்......?
    மாடியைவிட்டு இறங்கினாள். தன் தாய் அறிவழகி படுத்திருந்த பாய் வெறுமையாக இருந்தது. எங்கே போய் இருப்பாள்....? கதவு தாழ் போடாமல் மூடப்பட்டிருந்தது.
    நிச்சயமாகப் பின்புறம் உள்ள வீட்டிற்குத்தான் போய் இருப்பாள். சரி நாமும் போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் வீட்டை விட்டு இறங்கி நடந்தாள்.
    சற்றுத் தொலைவிலேயே தெரிந்து விட்டது. அந்த விட்டில் ஏதோ விபரீதம் என்று! நான்கு ஆண்கள் நின்றிருக்க அவள் தாய் அறிவழகி தெருவாசலில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
    மீனா தன் தாயிடம் சென்று கேட்டாள்.
    'என்னம்மா ஆச்சி.......?"
    'நம்ம மாலதிக்குப் பிரசவ நேரம். அதான் துடிக்கிறா பாவம்புள்ள..."
    கன்னத்தில் கை வைத்தபடி அறிவழகி கண்கலங்கிச் சொல்ல மீனா தன் வளர்ப்புத்தாயை நிமிர்ந்து பார்த்தாள்.
    மாலதியின் குரலைக் கேட்ட இன்னும் இரண்டு பெண்கள் வீட்டினுள் போனார்கள். அறிவழகி வெளியிலேயே அமர்ந்து இருந்தாள். மீனாவிற்குத் தெரியும். அறிவழகி திருமணம் செய்து கொள்ளாதவள். தனக்கு ஆற்றங்கரையில் கிடைத்த இந்த அனாதைக்காகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாமனுஷி என்று.
    வீட்டிலிருந்து ஒரு பெண் அவசரமாக வெளியே வந்தாள். வந்தவள் நான்கு ஆண்கள் நின்றிருந்த இடத்தில் போய்த்; 'தம்பி கொழந்த தலப்பொரண்ட மாதிறி இருக்குதாம். எதுக்கும் வண்டிய தயாரா வக்கச்சொல்லி நர்சம்மா சொல்ல சொன்னாங்க." என்றாள்.
    'ஜீவா சேகர் நீங்க ரெண்டுபேரும் போய் வண்டியக் கொண்டாங்க."
    அவன் உத்தரவு இட அந்த ஜீவாவும் சேகரும் ஓடினார்கள்!
    அப்பொழுது தான் மீனா அவனைக் கவனித்தாள். நேற்றுத் தன்னை மோட்டார் வண்டியில் இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போனவன்! கைலியின் மேல் சட்டை அணிந்திருந்தான்.
    இப்பொழுதாவது அவனுக்கு நன்றி சொல்லி விட வேண்டும். இல்லை என்றால் அவள் அவனுக்குக் கடன்காரித்தான் என்றது மனம். எழுந்து அவனருகில் வந்து நின்றாள்.
    அதற்குள் மாலதியின் அலறல் அங்கிருந்தவர்களை ஆட்டிப் படைத்தது. அந்தச் சத்தத்தின் அழுத்தம் வலியின் உச்சத்தை வெளிப்படுத்தியது. அந்த வேதனையின் ஒலி எப்படிப்பட்ட கடின மனம் படைத்தவரையும் கலங்கச் செய்து விடும்.
   

    மீனா கவலை தாங்காமல் தனக்கே அந்த வேதனை ஏற்பட்டது போல் அருகிலிருந்த மரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்.
    பெண்களுக்கு மகிழ்ச்சியான தண்டனை பிள்ளை பெறுவது தான் என்று ஷேக்ஷ்பியர் சொல்லி இருந்தாலும் தண்டனையை அனுபவிக்கும் பொழுதுதான் அது எப்படிப்பட்ட வேதனை என்பது புலப்படும்.
    இதோ மாலதி வேதனையின் உச்சத்திலிருந்தாள். அவள் வலியின் வேகத்தில் கத்திய வார்த்தைகள் மீனாவின் இதயத்தைக் கிழித்தது.
    இப்படித்தானே தன்னைப் பெறுவதற்காகத் தன் தாயும் துடித்திருப்பாள். துன்பப்பட்டு அடைந்த பொருள்தானே மிகவும் உயர்ந்தது. அப்படியிருக்கத் துன்பப்பட்டுப் பெற்ற குழந்தையை எப்படி அனாதையாக ஆற்றங்கரையில் போட்டுவிட்டுப் போக மனம் வந்தது?
    மூளை தான் நிற்கும் இடம் தெரியாமல் யோசித்தாலும் காதுகளில் மாலதியின் கதறல் ஒலிதான் அதிகக் கவலையைக் கொடுத்தது. தான் பிடித்திருந்த மரத்தை மேலும் இறுக்கிப் பிடித்தாள்.
    ;க்குவா..... க்குவா...... க்குவா.....;
    புதிய குழந்தையின் அழுகுரல் அங்கே இருந்தவர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்தியது.
    மீனாவிற்கு மனது ;அப்பாடா ; என்றது. கருநீல வானம் இளநீலமாக மாறத்துவங்கியது. காலை வேலை கதிரவனைப்    பார்க்கத் தனது கறுப்பு நிற போர்வையைக் கொஞ்சம்     கொஞ்சமாக விலக்க ஆரம்பித்தது.
    அவள் கண்களில் தேங்கி வழியப் போன கண்ணீரைக் துடைத்து விட்டு பார்த்தாள். அப்பொழுது தான் தான் ஓர் ஆடவன் கையையும் மரத்துடன் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் வேறு யாருமில்லை. மோட்டார் வண்டிக்காரன் தான். சட்டென்று கையை எடுத்து விட்டு அவன் முகத்தைக் பார்த்தாள். அவன் முகத்திலும் வியர்வைத் துளிகள். கண்கள் கலங்கிச் சிவந்து இருந்தன. ஆனால் அவன் இவளைப் பார்க்கவில்லை. வீட்டின் வாயற்படியையே நோக்கி இருந்தது அவனது பார்வை.
    ஒரு சமயம் இவன் தான் அந்தக் குழந்தையின் தந்தையோ.........இருக்கலாம்....... அவனை விட்டுச் சற்று விலகி நின்றாள். அவன் அப்பொழுது அவளைப் பார்த்தான். முகத்தில் எந்த ஓர் உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல்!
    வீட்டினுள் இருந்து ஒரு பெண் வந்தாள்.
    'பொம்பளக் கொழந்த பொறந்திருக்குத் தம்பீ" என்றாள்.
    'மாலதி எப்படி இருக்குது?"
    இவன் கேட்க 'மயக்கமாயிட்டாப்பா.... மயக்கம் தெளிய கொஞ்ச நேரமாகும்" என்றாள்.
    இன்னொரு பெண் சின்னஞ்சிறு குழந்தையைத் துணியில் சுற்றி வெளியே வந்து இவனிடம் நீட்டினாள்.
   
  
    'பாருப்பா.... நல்லா மகாலஷ்மியாட்டம் இருக்குது."
    குழந்தையைப் பார்த்தான். அவன் முகத்தில் இப்பொழுது மகிழ்ச்சி தெரிந்தது. தன் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு இருந்தப் பணத்தை அப்படியே எடுத்துக் துழந்தையின் கையில் திணித்தான்.
    அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை மீனாவும் பார்த்து ரசித்தாள். துன்பப்படாமல் இவ்வுலகத்தில் இன்பமில்லை தான்! இருந்;தாலும் குழந்தையைப் பெறுவது மிகப் பெரிய துன்பம். ஆனால் அதற்குப் பரிசாக மிகப் பெரி;ய இன்பம் அல்லவா கிடைத்து விட்டது!
    மீனா குழந்தையின் கன்னத்தை மெதுவாக தொட்டாள். அது மென்மையான இளவம்பஞ்சைத் தொடுவது போலிருந்தது.
    'பனி பெய்யுது. குழந்தையை உள்ள கொண்டு போங்க".
    இவன் சொல்ல அந்தப்பெண் உடனே குழந்தையுடன் உள்ளேப் போனாள்.

   0       0       0       0       0       0


    மீனா மாலதியின் குழந்தையைப் பார்த்து விட்டுத் தெருவில் விளையாடும் பிள்ளைகளின் விளையாட்டை ரசித்தபடி வந்து கொண்டிருந்தாள். சூரியன் சோர்வாக இருந்தான். அதனால் அவனை அலட்சியப்hடுத்தி விட்டு மண் தரையில் கட்டங்கள் வரைந்து கோட்டிப்புல்லும் பம்பரமும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
    நேற்று இதே நேரத்தில் ஊருக்குள் வந்த பொழுது நடந்த நிகழ்ச்சி மனத்தில் வந்து போனது. நேற்று இந்நேரம் எவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தோம்! நேற்றைய தினங்கள் இன்று ஞாபகார்த்தங்களாகி விடுகின்றன! முடிந்து போனதை மறந்து விட்டு இன்று காலையில் பிறந்த குழந்தையைப் பார்த்தது மனத்திற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!
    நடுத்தெருவில் ஒருவர் தன் மகனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். மீனா அவசரஅவசரமாகப் போய்த் தடுத்தாள்.
    'நீ விடுமா...... இவன நாலு சாத்து சாத்தினாத் தான் திமிரு அடங்கும். என்னா பேச்சி பேசுறான். நல்ல வேலை. நம்ம ஊருல போலிஸ் ஸ்டேஷன் கெடையாது. இருந்தா இந்த மாதிரி புள்ளைங்கள ஜெயில்ல போடச் சொல்லி இருப்பேன்".
    அவள் கையைத் தடுத்துத் திரும்பவும் அடிக்கப்போனார்.
    ஆனால் மீனா தடுத்துக் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தவனைத் தூக்கிவிட்டாள். அவனுக்குப் பத்து இல்லை பதினொன்று வயது இருக்கும்.
    'டேய் நீ என்னடா பண்ணினே........?"
    'நியே கேளு மீனா. அந்தக்காலத்துல தந்தைக்கு மந்திரம் சொன்ன முருகனைக் கும்பிடுறீங்க. இந்தக் காலத்துல அப்பாவுக்கு புத்தி சொன்னா போட்டு அடிக்கிறாரு" என்றான் அவன் கண்களைத் துடைத்துக் கொண்டே.
    'நீ அப்பாவுக்குப் புத்தி சொன்னியா.....? அப்படி என்னடா சொன்னே.....?"
    'ம்.....பீடிப்புடிச்சா ஒடம்புக்கு கெடுதி. நுரையீரல் புத்து நோய் வந்திடும். வீணா காசைப்போட்டு நோயை வாங்காதேன்னு தான் சொன்னேன். இது தப்பா.....?"
    'சரியாத்தானேடா சொன்னே..... அதுக்காகவா அடிச்சாரு? சரி விடுடா.... அவரோட அப்பா அவர அடிச்சிருப்பாரு. இவர் இப்போ ஒனக்குத் திருப்பித் தந்தார்ன்னு நெனச்சிக்கோ."
    'அதுக்கில்ல மீனா.... என்ன ஜெயில்ல போட்டிடுவாராம்". அவன் அழுதான். 
    'டேய் அழுவாதடா..... அப்படியெல்லாம் ஜெயில்லுல போட முடியாதுடா..... நீ அழுவாத."
    கண்களைத் துடைத்து விட்டாள். அவன் அழுது கொண்டே இருந்தான். அதே சமயத்தில் அந்த வழியாகப் போன கணேசன் அவள் கண்களில் பட்டான்.
    'டேய் அழுவாத. அதோ போரார் பாரு. நம்ம தத்துவஞானி! அவர் தான் லா படிக்கிறார். அவர் கிட்ட கேட்டுப்பாக்கலாம்."
    இவனிடம் சொல்லி விட்டு 'அலோ... தத்துவஞானி;;;....." என்று கணேசனைக் கைதட்டிக் கூப்பிட்டாள்.
    அவன் திரும்பி இவளை முறைத்தான்.
   
                 
                                (தொடரும்)

6 comments :

  1. வலைவழி உம்மைக் கண்டேனே-இங்கே
    வரவிற்கு நன்றி விண்டேனே
    இலைநிகர் என்றிட என்நெஞ்சம்-மரபில்
    எழுதிய கவிதையில் தமிழ்கொஞ்சும்

    நிலைபெறும் நம்மிடை நட்பாகும்-இனி
    நீங்கா வகையில் பொட்பாகும்
    அலைவழி அதுவும் வளர்ந்திடுமே-கடல்
    அலையென ஓயா நிலைபெறுமே

    வருவீர் நாளும் வலைநாடி-நானும்
    வருவேன் உமது வலைதேடி
    தருவீர் உரிய உம்கருத்தை-வந்து
    தருவேன் அறிய எம்கருத்தை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. விடாம வாசிக்கிறேன். இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் சொந்தமே!! அருமை...தொடருங்கள்.தொடர்கிறேன்ஃ!

    ReplyDelete
    Replies
    1. தொடருங்கள் அதிசயா...

      நானும் தொடர்கிறேன்.
      நன்றிங்க சொந்தமே!

      Delete