Tuesday, 31 July 2012

போகப் போகத் தெரியும் - 19


 
   மீனா கண்விழித்த பொழுது மணி மாலை மூன்று. ஊரில் ஒரு சத்தமும் இல்லை.
   டாக்டர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டுப் படுத்தவள் தான். இப்பொழுது தான் கண்விழித்தாள். ஆனால் காலையில் தேர் ஊர்வலத்திற்குப் பிறகு மக்கள் கூட்டம் திருவிழா ஒலிப் பெருக்கியில் ஒலித்த பாடல்கள் ஒயிலாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் என்று ஒலித்த வாத்தியங்களின் ஓசை.. எதுவும் இப்பொழுது இல்லை!
   அறிவழகியிடம் கேட்டாள்.
   'எல்;லாரும் மாடுபுடிக்கிற வெள்ளாட்டு வெளையாட ஊரு எல்ல ஐயனார் கோயில்கிட்ட போய் இருக்காங்க." என்றாள் அவள்.
   'அப்ப நானும் போய்ப் பாக்கறேன்மா."
   மீனா கெஞ்சலாகக் கேட்டதும் 'சரி போ" என்றாள். வருடத்திற்கு ஒரு முறை வருவது தானே திருவிழா.. என்ற எண்ணத்தில்.
   மீனா சக்திவேல் வாங்கித்தந்த சற்றுப் பெரியதாக இருந்த சுரிதாரை அணிந்து கொண்டு மறக்காமல் கையில் கட்டுத் தெரியாதவாறு துப்பட்டாவைத் தொங்கவிட்டுக் கொண்டு பின் குத்திக் கொண்டாள். அறிவழகி அவள் தலையை ஒதுக்கிவிட்டு முகத்தை துடைத்துப் பொட்டு வைத்துவிட்டாள்.
   'அம்மாடி.. கைய ரொம்ப ஆட்டாத. தையல் போட்டிருக்கு. தனியா ஒரு எடமா பாத்து நின்னுக்கோ.. இன்னா.."
   மகளை வாசல்வரை வந்து அனுப்பி வைத்தாள். அவளுக்கு ஆஸ்துமா தொல்லை இல்லையென்றால் அவளும் கூட வந்திருப்பாள். ஆனால் விளையாட்டு மைதானத்தில் துர்சு பறக்கும். அதன் தொல்லையால் இவள் தொல்லையடைய வேண்டி வரும். தன் நிலையறிந்தவள் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.
   மீனா ஊர் கோவிலைத்தாண்டி மண்சாலையில் நடந்தாள். விளையாட்டு மைதானத்தில் ஒலிப் பெருக்கியில் பேசுவது காற்றுவாக்கில் விட்டுவிட்டுக் கேட்டது.
   'இதோ வந்துவிட்டது. ஆத்தூர் வீரக்காளை! இதை அடக்கபவர்க்குச் சக்திவேல் ஐயா கொடுக்கும் பத்தாயிரம் ரூபாய் பணமும் மாட்டின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளிக் கொலுசுவும் சொந்தம்! அடக்குபவர் அடக்கலாம்."
   இரண்டாவது முறை அறிவிப்பு மிக நன்றாகவே கேட்டது. மக்களின் கை தட்டலும் விசில் சத்தமும் ஆர்பாட்டமும் தெளிவாகக் கேட்டது. மீனா உற்சாகத்துடன் நடையை எட்டிப்போட்டாள்.
   ஏதோ ஓர் உள் உணர்வு! தன்னை யாரோ பின் தொடர்வது போல்..
   திரும்பிப் பார்த்தாள். அவள் யூகம் சரியாகவே இருந்தது.
   வேந்தனும் அவன் அடியாட்களும் தான்! அவளுக்கு உடம்பில் ஓடின இரத்தம் எல்லாம் தலைக்கு ஏறிவிட்ட அதிர்ச்சி!
   இவனிடம் சிக்கிக் கொள்ள கூடாது. இன்னும் சற்றுத் தூரத்தில் தான் மைதானம்! அங்கே நிறையப் பேர் இருப்பார்கள். கூட்டத்தில் கலந்து விட்டால் இவனிடமிருந்து தப்பித்து விடலாம்.
   முடிவெடுத்ததும் ஓடத்துவங்கினாள். இவள் ஓட ஆரம்பித்ததும் வேந்தனும் விரட்டத் துவங்கினான். மீனா புயல்காற்றையும் தோற்கடிக்கும்படி ஓடினாள்! கூட்டம் சற்றுதொலைவில் தென்பட்டது. இன்னும் அதிகமாக வேகமெடுத்தாள். கண்மண் தெரியாமல் ஓடியவள் யாரோ ஒருவர் மீது மோதி பிறகு தான் நின்றாள்.
   மனது அப்பாடா என்றது. ஓடிவந்ததில் மூச்சிறைத்தது. நன்கு மூச்சைவாங்கி வெளிவிட்டுக் கொண்டு பிறகுதான் தான் யார் மீது மோதினோம் என்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சி!
   வெற்றிவேல்!!!
   அவனும் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான்.
   'ஆமா.. நீ.. மீனாயில்ல? ஏன் இப்படி ஓடியாந்தே..?"
   அவள் திரும்பித் தன்னைத் துரத்தியவர்களைத் தேடினாள். அங்கே வேந்தனும் அவனது அடியாட்களும் வெற்றிவேலுவைப் பார்த்ததும் கூட்டத்தில் ஒருவராக நழுவி மறைந்தார்கள்!
   மீனாவிற்கு இப்பொழுது தான் மூச்சியைச் சரியாக விட முடிந்தது. வெற்றிவேலுவைப் பார்த்தாள். அவன் இவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
   இவனைப் பார்த்ததும் அவர்கள் ஓடிவிட்டார்கள் என்றால் அவர்கள் இவனுக்குப் பயப்படுகிறார்கள்! மனது கணக்கு போட்டது.
   'வெற்றிவேல்.. நான் உங்கக்கூடவே இருக்கட்டுமா..?"
   'ஓ.. இறேன்! நா வேணாம்ன்னு சொல்லமாட்டேன். குளுகுளுன்னு ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தா மனசு வேணாம்ன்னா சொல்லும்?"
   அவன் சிரித்தான். அதில் இலேசான குரோதம் தெரிந்தது. அவளுக்கு அவன் அப்படி சிரித்துப் பேசியவிதம் பிடிக்க வில்லை தான். ஆனால் வேற வழி???
   'ஐயே.. அசடு வழியிது. தொடச்சிகங்க." என்றாள் இவளும் சிரிப்பை வரவழித்து கொண்டு.
   'சரி. வா." அவன் சொல்லிவிட்டு முன்னால் நடக்க இவள் பின் தொடர 'வெற்றிவேல் ஐயா.. வெற்றிவேல் ஐயா.." என்று சொல்லிக் கூட்டம் அவனுக்கு வழிவிட்டது.
   அங்கே மேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த சவுக்கு மரக்கட்டை வேலியின் அருகில் நின்றான் வெற்றிவேல். அவனுடன்  மீனாவும்!
   மீனா கண்களால் சக்திவேலைத் தேடினாள். சக்திவேலும் அவன் நண்பர்களும் இன்னும் இரண்டு ஊர் பெரியவர்கள் கண்மணியின் அப்பா சண்முகம்.. அனைவரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
   சக்திவேலுவும் அவள் நண்பர்களும் தன்னைக் கோபமாக முறைப்பது நன்றாகப் புரிந்தது மீனாவிற்கு. அவர்களுக்கு இவள் வெற்றிவேலின் அருகில் இருப்பது பிடிக்காது! அவளுக்கும் தான் பிடிக்கவில்லை! ஆனால் என்ன செய்வது? அவனை விட்டு நகர்ந்தால் வேந்தனிடம் அகப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.
   அவளால் அப்பொழுது ஒரு பெருமூச்சி மட்டுமே விட முடிந்தது.
   'இதுவரை ஆறு பேரைத் தூக்கி எறிந்து விட்டது எங்களூர் வீரக் காளை! எங்களூர்க்; காளையை அடக்க வீரன் எவனும் இல்லையா..?"
   சசிதரன் தான் ஒலிபெருக்கியில் காளையைப் பற்றிப்பெருமையாகக் கத்திப் பேசினான். சத்தம் காதைக் கிழித்தது.
   'வெற்றிவேல்.." காளையைப் பார்த்துக் கொண்டிருந்தவனை மீனா கூப்பிட்டாள்.
   'என்ன..?"
   'நீங்க எதுக்கு மேடையில போய் ஒக்காரல? நீங்களும் ஊர் பெரிய மனுஷன் தான?"
   'என்னப் பொருத்த வரைக்கும் மீனா.. மேடையில ஒக்காந்து வேடிக்க பாக்குறவங்க தைரியமில்லாதவங்கன்னு நெனைக்கிறவன் நான்." என்றான் அலட்சியமாக.
   அவனுடைய பதில் அவளைச் சிரிக்கத் தூண்டியது. இருந்தாலும் சிந்திக்கவும் தூண்டியது. சிரித்துக் கொண்டே சிந்தித்தாள்.
   'ஏன் சிரிக்கிற?" சற்றுக் கோபமாகக் கேட்டான்.
   'தோ ஒரு நிமிஷம் இருங்க.." சொல்லிவிட்டு மேடைமீது மைக்முன் பேசிக் கொண்டிருந்த சசிதரனைக் கை தட்டிக் கூப்பிட்டாள். அவன் பார்த்ததும் சைகையால் மைக்கைக் கேட்டாள். உடனே கொடுத்தான்.
   'இங்கிருக்கிற எல்லாருக்கும் ஒன்னு சொல்லுறேன். நமது வெற்றிவேல் ஐயா.. மேடையில உட்கார்ந்து விளையாட்டை ரசிக்கிறவங்க தைரியமில்லாதவங்கன்னு சொன்னார். அதை பொய் என்று நிறுபிக்க நமது சக்திவேல் அவர்கள் ஆறு பேரை தூக்கி எறிந்த இந்தக் காளையை அடக்கி அதோட கொம்புல இருக்கிற கொலுசுவை எனக்கு பரிசாக தரும்படி கேட்டு கொள்கிறேன்." என்றாள் சத்தமாக.
   அங்கே ஒரே அமைதி! அனைவரின் கண்களும் மீனாவையே பார்த்தன! மேடையிலிருந்து எழுந்து வந்த சேகர்..
   'மீனா ஒனக்கு அறிவிருக்குதா..? எங்கையாவது நம்ம ஊர் காளைய நாமலே அடக்கலாமா..? முண்டம் மாதிரி பேசாத. உம்பேச்ச ஒடனே வாப்பஸ் வாங்கு." என்றான் கோபமாக.
   'நம்ம ஊர்க் காளையா இருந்தால் என்ன? அதை அடக்கத்தான் இங்கே யாரும் இல்லையே..? இந்தக் காளையைச் சக்திவேல் அடக்கத்தான் வேண்டும்." என்றாள் குரலை உயர்த்தி!
   இப்பொழுது அனைவரும் சக்திவேலைப் பார்த்தார்கள். அவன் கண்கள் சிவக்க அமர்ந்தே இருந்தான்.
   மீனாவும் அவனைப் பார்த்தாள். பிறகு சொன்னாள்.
   'சக்திவேல் மட்டும் இந்தக் காளையை அடக்கி அதன் தலையில் இருக்கும் கொலுசுவை எனக்குப் பரிசாகத் தரவில்லை என்றால் இனி என் வாழ்நாளில் கொலுசே போடமாட்டேன்னு இந்தக் கூட்டத்தில் சபதமாக சொல்கிறேன்." என்றாள்.
   இப்பொழுது சக்திவேல் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு எழுந்தான். வேட்டியை மடித்துக் கீழ்பாய்ச்சியாகக் கட்டினான். கூட்டம் கை தட்டிச் சந்தோச ஆரவாரம் செய்தது.
   அவன் மைதானத்தில் இறங்கியதும் மாடு மிரளப் பலப்பல ஓசைகளை எழுப்பினார்கள். மாட்டின் வாலைப்பிடித்து முறுக்கி விட்டார்கள். காளையும் கோபத்துடன் காலால் மண்ணைத் தோண்டியது! கோபத்துடன் சக்திவேலுவின் எதிரில் அவனைக் குத்த வருவது போல் மிக வேகமாக வந்தது.
   சக்திவேலுவும் மாட்டை அடக்கத் தயாராக இருந்தான். அவன் கண்களும் கைகளும் கோபத்துடன் காத்திருந்தது. ஆனால் காளை..
   அவனெதிரில் வந்ததும் பேசாமல் நின்று விட்டது!
   சக்திவேல் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மாட்டின் அருகில் வந்து அதன் தலையில் இருந்த கொலுசுவை எடுத்து கொண்டு வந்து மீனாவின் முன் கோபமாக நீட்டினான்.
   மீனா அதை வாங்கவில்லை. அவள் காளை இப்படி செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. அவள் மட்டுமல்ல. அனைவரும் தான்! அதனால் பேசாமல் நின்றிருந்தாள். அவனே அவள் கையைப் பிடித்து அந்த கொலுசுவைத் திணித்தான். மீனா சட்டென்று அவன் கையைப் பற்றினாள்! ஆனால் அவன் அவள் கையை உதறிவிட்டு நடந்தான். அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
   வெற்றிவேல் அவளைக் கேலியாகப் பார்த்துவிட்டு சொன்னான்.
   'என்ன மீனா நீ? புலிவேட்டைக்கி போறவனைப் போய் முயல் புடிக்க அனுப்பி அவனோட வீரத்துக்கு இழுக்கு வர்ற மாதிறி செஞ்சிட்டியே.. ஒனக்கு கொலுசு வேணும்ன்னு அவன்கிட்ட தனிமையில கேட்டிருந்தா அவன் தங்கத்துல கொலுசு செஞ்சி போட்டிருப்பான். நீ என்னன்னா.. இப்படி அவுமானப் படுத்திட்டியே..!" என்றான். அவன் குரலிலும் வருத்தம் தெரிந்தது.
   அவள் ஒரு நிமிடம் யோசித்தாள். பின்பு மைக்கில் சொன்னாள்.
   'நமது சக்திவேலுவின் அன்புக்கு மனிதர்கள் மட்டுமல்ல. விலங்குகளும் கட்டுப்படும் என்பதை நிறுபித்துக் காட்டி விட்டார். அவருடைய வீரம் நாம் அனைவரும் அறிந்தது தான்! இருந்தாலும் வீரத்ததைவிட விவேகம் சிறந்தது. விவேகத்தைவிட அன்பு சிறந்தது. அன்பு கொடுக்கும் தண்டனை அடிபணிவது தானே.. இதோ இந்த காளை.. அவருடைய அன்புக்கும் வீரத்திற்கும் விவேகத்திற்கும் அடிபணிந்து விட்டது. இதுவே மிகப்பெரிய சாட்சி!" என்றாள்.
   கூட்டம் கைதட்டி சந்தோஷ ஆரவாரம் செய்தது.
   அடுத்ததாக அங்கே நுழைந்தது மாந்தூர்க் காங்கேயன் காளை!
   'இத அடக்கறவன் வீரன் மீனா.." என்றான் வெற்றிவேல்.
   'நீங்க இத அடக்குறீங்களா..?" மீனா கேட்டாள்.
   'நானா..?"
   'ஏன் முடியாதா..? பயமா..?"
   'பயமெல்லாமில்ல.. ஆனா வேணாம்."
   'இல்ல வெற்றிவேல். நீங்க இந்தக் காளைய அடக்கணும். நீங்க இத அடக்கினாத்தான் வெற்றிவேல். இல்லைன்னா வெறும் வேல் தான்!" என்றாள் அலட்சியமாக!
   அவன் இவளை கோபமாக முறைத்துவிட்டுச் 'சரி. அடக்கிக் காட்டுறேன்." என்றான்.
   அரைமணி நேரத்திற்கும் அதிகமாகவே ஆனது. காங்கேயன் காளை சரியான முரட்டுத்தனமாக வளர்க்கப்பட்ட காளை போலும்! வெற்றிவேலுவையே இரண்டு முறை தூக்கி எறிந்தது. மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்துநின்று பார்த்தார்கள்.
   மிகவும் கடினப்பட்டு அடக்கினான் வெற்றிவேல்! அதன் தலையில் இருந்த சங்கிலியைக் கொண்டுவந்து மீனாவிடம் நீட்டினான். மீனா அதிர்ச்சியாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் மட்டுமா..? அனைவரும் தான்!
   'இந்தா மீனா. இந்தச் செயினை நீயே வச்சிக்கோ. நீ தான இந்தக் காளைய அடக்கசொன்னே..? அடக்கிட்டேன். போதுமா..? இந்தா."
   அவள் கையைப்பிடித்து திணித்தான். மீனா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். அவன் மீசையை முறுக்கினான். அதில் குரோதம் இருந்தது. இவள் ஒரு நிமிடம் யோசித்தாள்.
   'வெற்றிவேல். இந்த செயினைக் கண்மணிகிட்ட கொடுங்க. நிங்க வெற்றி பெற்றதின் வெற்றியின் சின்னமாக நான் கொடுத்தனுப்பியதாக கண்மணியிடம் சொல்லி குடுங்க."
   அவன் கையைப்பிடித்து கையில் வைத்தாள். அவனும் எதுவும் எதிர்ப்புச் சொல்லாமல் வாங்கிக்கொண்டான். இலேசாக இருளத் துவங்கியது.
   வெற்றிவேலுவை அவன் ஊர்க்காரர்கள் ஆரவாரத்துடன் தூக்கிக்கொண்டு போனார்கள். கூட்டம் கலைந்தது. மீனா மேடையை பார்த்தாள். ஆடாத அரங்கம் யாருமில்லாமல் அமைதியாக இருந்தது. கண்கள் ஏமாற்றத்துடன் சக்திவேலைத் தேடின. கண்கள் மட்டுமல்ல மனதும் ஏமார்ந்தது.
   அவள் அங்கிருந்த ஊர்க் காரர்களுடன் சேர்ந்து நடந்தாள்.
   ஊர் துவக்கத்தில் கோவில் வந்ததும் தான் அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அன்று திருவிழாவிற்காக ஒரு மெல்லிசை கச்சேரி ஏற்பாடு செய்திருந்ததால் அனைவரும் கச்சேரித் திடலை நோக்கி முண்டியடித்துக் கொண்டு நடந்தனர்.
   மீனா அங்கிருந்த திருவிழா கடைகளைப் பார்த்தபடி நடந்தாள். பொய் சூரியன்கள் தன்னைச் சுற்றிமட்டும் வெளிச்சத்தைத் தெளித்து கொண்டதால் மற்ற இடங்கள் கறுமையைப் பூசிக் கொண்டிருந்தது.
   ஓர் இருள் சூழ்ந்த இடம்! அவள் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு முரட்டு கை அவள் வாயை அழுத்தி போர்த்தி மறுகையால் அவளை இழுத்து ஓரிடத்தில் தள்ளியது! அவள் விழுந்த வேகத்தில் கையில் இருந்த காயத்தின் தையல் பிரிந்திருக்க வேண்டும்! அப்படி ஒரு வலி! ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தாமல் விழுந்த வேகத்தில் எழுந்து நின்றாள்.
   அங்கே நான்கு ஆண்கள்! அதில் ஒருவன் வேந்தன்! அந்த இருட்டான இடத்திலும் அவனின் உருவமும் உடல் அமைப்பும் அவளாள் உடனே கண்டுபிடிக்க முடிந்தது.
   அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள்! அவள் அவனை நினைத்தே பயந்து இருந்ததால் அவளால் அந்த இருட்டில் கூட அவனைக் கண்டுபிடித்து விட முடிந்தது.
   இப்பொழுது அவள் அவனைப்பார்த்து பயப்படவில்லை! குலைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். ஆனால் இவன் நாய் இல்லையே..
   'ஏண்டி.. சத்திவேலு கொலுசு குடுத்தா வாங்கிக்கி;வே.. ஆனா வெற்றிவேலு செயினு குடுத்தா வாங்கிக்க மாட்டியா..?" வேந்தன் கர்ஜுத்தான்.
   'சக்திவேல நா விரும்புறன். அதனால அவரு தந்த கொலுச வாங்கிகினேன்." தைரியமாகச் சொன்னாள்.
   அவனுக்குக் கோபம் வந்திருக்கவேண்டும்! அதனால் தான் அவன் இப்படி கோபமாகச் சொன்னான்.
   'ஏய்.. இன்னொறு வாட்டி சத்திவேல விரும்பறேன்னு சொல்லாத."
   'ஏன்.. நா அவரத்தான் விரும்பறேன். அவரத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்." என்றாள்.
   இதை கேட்டதும் அவன் சத்தமாக கைகொட்டிச் சிரித்தான். அவனுடன் மற்றவர்களும் சிரித்தார்கள்! மீனா அவர்களின் செய்கையை கோபமாகப் பார்த்தாள். அவன் சிரிப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னான்.
  'ஏய் மீனா.. சக்திவேல் உன்ன கட்டிக்குவான்னு பகல் கனவு காணாத. அவனாவது உன்ன கல்யாணம் கட்டிக்கிறதாவது? தோ பார். அவன் உன்ன மாதிரி அனாதைய எல்லாம் கட்டிக்க மாட்டான். அவனோட அம்மா அவனுக்குச் சொந்தத்துல தான் பொண்ணு அமையும்ன்னு ஊர்ஊரா வலவீசி தேடுறாங்க. அவனோட அந்தஸ்துக்கு நீயெல்லாம் எந்த மூல? போயிம் போயிம் ஒரு அனாதய்யா கட்டிக்குவான்? ஒனக்கு இப்டில்லாம் ஆச வரலாமா? ஒன்னோட தகுதி என்னன்னு ஒனக்குத் தெரியாதா..? ஆச படவும் ஒரு அளவு வேணாம்?"
   'நா ஒன்னும் அவரோட பணம் காச பாத்து ஆசப்படல."
   'வேற எதுக்கு ஆசபட்டியாம்? அவனோட அழகையும் வீரத்தையும் பாத்தா ஆசபட்ட? அப்டி பாத்தா அவன எத்தனையோ பொண்ணுங்க விரும்புறாங்க. அவனால எல்லாரையும் கட்டிக்க முடியுமா..? அவனுக்கு எல்லாப் பொண்ணையும் போலத்தான் நீயும். இல்லாட்டி நீ போடவந்த மாலைய கழுத்துல வாங்காம கையில வாங்குவானா ஒரு ஆம்பள..? "
   அவன் அப்படிக் கேட்க மீனா யோசித்தாள். இதுதான் நல்ல தருணம் என்று வேந்தன் அவள் இடக்கையைப் பற்றினான்.
   'ஏய்.. தோபாரு. எனக்கு உன்னைய ரொம்ப புடிக்குது. உன்ன வற்புருத்தி அடையணுமின்னு எனக்கு ஆசயில்ல. நீ சம்மதிச்சா நீ இப்பவே எங்கூட வந்துடு. என்னோட ஆத்தா அப்பன்கிட்ட சொல்லி நா நாளைக்கே உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றான் சற்றுக் தணிவானக் குரலில்.
   அவன் கையை உதறினாள். 'என்ன வுடு. நா சக்திவேலத் தவர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்." சத்தமாகச் சொன்னாள்.
   அவள் அப்படிச் சொன்னதும் அவள் கன்னங்களில் மாறிமாறி அறைந்தான். அவளுக்குக் கன்னங்கள் எறிந்தன.
   'இவ்ளோ பொறுமையா சொல்றேன். நி சம்மதிக்க மாட்டே.. உன்னையெல்லாம்.."
   அவன் சொல்லிக் கொண்டே அவள் கையை இறுக்க.. இலேசான கசகசப்பை உணர்ந்தான். உடனே அவள் கையை விட்டுவிட்டு தன் கையைப் பார்த்தான். அவன் கையெல்லாம் இரத்தம்! மீனாவின் காயத்திலிருந்து கட்டையும் மீறி வழிந்த இரத்தம்! அதைக் கண்டதும் அவளுடைய துப்பட்டாவை விலக்கிப் பார்த்தான். கண்களிள் அதிர்ச்சி!
   'என்னடி இது..?" கோபமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்டான்.
   'அண்ணே.. காலையில சத்திவேலு என்ன தொரத்திக்கினு வந்தான். அப்போ ஒரு பொண்ணு காப்பாத்துச்சின்னு சொன்னயில்ல? அது இந்த பொண்ணுதான்! அப்போபட்ட காயம் தான் இது." என்றான் அவனருகில் இருந்தவன்.
   மீனாவும் அவனை அப்பொழுது தான் பார்த்தாள். வேந்தன் அவளை யோசனையாகப் பார்த்துவிட்டு சொன்னான்.
   'ஏய் மீனா.. இப்ப உன்னைய உடுறேன். ஆனா என்னைக்கி இருந்தாலும் நீதான் எனக்கு பொண்டாட்டி. இன்னொறு வாட்டி சத்திவேலத் தான் கட்டிக்குவேன் யார்கிட்டயும் சொல்லாத. அப்புறம் கொன்னுபுடுவேன்.. அவன் உன்ன மாதிரி அனாதைய ஏறெடுத்துக்கூடப் பாக்கமாட்டான். போ.." அந்த இடத்தைவிட்டுப் பிடித்துத் தள்ளினான்.
   மீனா வெளியில் வந்து விழுந்தாள். யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று கண்கள் தேடின! அந்த இடமும் அனாதையாக இருந்தது!
   அவள் துப்பட்டாவை தன் காயத்தின் மீது சுற்றிக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். காயத்தை விட மனது அதிகமாக வலித்தது. ஊருக்குள் ஜன சந்தடி இருந்த இடத்தில் ஒரு சிறுவன் அவளிடம் வந்து சொன்னான்.
   'மீனா அக்கா.. உன்னைய உன் பிரன்ஸ்ங்க வரசொல்லிச் சொல்லச் சொன்னாங்க."
   மீனா அவனிடம் 'சரி" என்று சொல்லிவிட்டு ஊர்ப் பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
   வகுப்பறையில் அவளுடைய ஆறு நண்பர்களுடன் சக்திவேலுவும் இருந்தான். ஒவ்வொருவர் முகத்திலும் கோபக்கனல் வீசியது.
   மீனா பேசாமல் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
   'ஏன் மீனா.. எங்களயெல்லாம் அவமானப் படுத்தணும்ன்னே நீ இன்னைக்கி இப்படியெல்லாம் நடந்துக்கினியா..?" சேகர் கோபமாகக் கேட்டான்.
   'ஏன்.. இப்போ என்ன ஆயிடுச்சி..?" மீனா மெதுவாகக் கேட்டாள்.
   'என்ன ஆச்சா..? அந்த வெற்றிவேலுக்கும் நம்மூர் காரங்களுக்கும் ஆகாதுன்னு தெரியுமில்ல..? அப்டி இருக்கும் போது நீ ஏன் அவன்கூட போய் நின்னே..?"
   'சேகர் மொதல்ல நா உன்ன ஒன்னு கேக்கறேன். பதில் சொல்லு. என்னோட எடத்துல ஓன் தங்கையோ.. இல்ல.. ஒனக்கு வேண்டிய பொண்ணோ இருந்திருந்தா என்ன செஞ்சியிருப்ப?"
   'போயி ஒரு அற அறைஞ்சி கையோட அவள இழுத்துகினு வந்திருப்பேன்." என்றான் கோபமாக.
   'நீ என்ன செஞ்சிறுப்ப சரண்..?"
   'அவனமாதிரி அடிக்கலன்னாலும்.. போய்க் கையோடக் கூட்டிக்கினு வந்திருப்பேன்." என்றான் சரண் என்றழைக்கும் சரவணன்.
   'அப்போ நீங்க யாரும் ஏன் என்ன அப்படி வந்து கூப்பிடலை..?" மீனா மெதுவாகக் கேட்டாள்.
   அவர்கள் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு அவளே தொடர்ந்தாள்.
   'எனக்கு தெரியும். உங்க தங்கச்சியோ.. உங்களுக்கு வேண்டிய பொண்ணோ இருந்திருந்தா.. கண்டிப்பா உரிமையா அவள காப்பாத்தி இருப்பிங்க. இந்த மீனா யாரு? அவ நமக்கு என்ன ஒறவா? ஏதோ ஒரு அனாத பொண்ணுதானே.. அவ எப்படி போனா நமக்கென்னன்னு தான என்ன எல்லாரும் சேந்து விட்டுட்டீங்க? ஆனா நா உங்கள அப்படி நெனைக்கல. ஒரு கழுகுகிட்டர்ந்து தப்பிச்சி வந்து நல்ல பாம்புகிட்ட சிக்கி அதுக்கு மகூடம் வாசிச்சி கொண்டிருந்தேனே.. ஐயோ என்ன யாராவது வந்து அழைச்சிக்கினு போவமாட்டீங்களான்னு ஏங்கிகினு இருந்தேனே..
   பரவாயில்ல. என்னோட தகுதி என்னன்னு உங்களோட எதிரி எனக்கு நல்லா பாடம் சொல்லி குடுத்திட்டான்;. நானும் நல்லா புரிஞ்சிகினேன். ஏதோ.. இவ்ளோ சீக்கிறம் உங்கள எல்லாம் புரிஞ்சிகினேனே. இதுவே போதும். நா கௌம்புறேன்." எழுந்து கொண்டாள்.

                             (தொடரும்)

   
  

13 comments :

 1. விறுவிறுப்பாக செல்கிறது... தொடருங்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு மிக்க
   நன்றிங்க தனபாலன் ஐயா.

   Delete
 2. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றிச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.நேரமிருந்தால் பாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.
   என்னை உங்கள் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
   நீங்களெல்லாம் என் தொடர்கதைப் படிக்கிறீர்கள் எனும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றிங்க.

   Delete
 3. வலைச்சரத்தில் அறிமுகமானதற்க்கு உங்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ!

  Followers widget வைக்கவில்லையா சகோ! பின்தொடர்வதிலுள்ள சிரமத்தை தவிர்க்க இத்தகைய widget-கள் உதவும்! நான் உங்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்ந்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்! ஓய்வு நேரங்களில் பதிவுகளை வாசித்துவிட்டு கருத்திடுகிறேன்!

  மிக்க நன்றி என் தளத்திற்கு வருகை தந்தமைக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும்!

  ReplyDelete
 4. கருத்துரை சொல் சரிபார்ப்பையும் நீக்குங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோ.

   நீங்கள் http://arouna-selvame.blogspot.com
   இதிலிருந்து தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு கணினி இயக்க முறையெல்லாம் சரியாக தெரியவில்லை நண்பரே.

   Delete
 5. Replies
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க பிரதாப் சிங் அவர்களே.

   Delete
 6. வாழ்த்துக்கள்.முன்னைய சில பகுதிகளை வாசிக்கக்கிடைகவில்லை.நேரமுள்ள வேளை வாசிக்கிறேன்.சந்திப்போம் சொந்தமே!

  எனக்கொரு பதில்!!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க அதிசயா அவர்களே.

   Delete
 7. அருமையான கதை. தொடருங்கள்.... followers widget வைக்க உங்கள் வலைப்பதிவின் வடிவமைப்பு பகுதியில் உள்ள "மொழி" என்பதில் ஆங்கிலத்தை தெரிவு செய்யுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி பாரதி.

   நீங்கள் சொன்னது போல் செய்தேன். ஆனாலும் வரவில்லை.
   நீங்கள் http://arouna-selvame.blogspot.com
   இதிலிருந்து தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு கணினி இயக்க முறையெல்லாம் சரியாக தெரியவில்லை நட்பே.

   Delete