Sunday, 20 May 2012

போகப் போகத் தெரியும் - 11

  
   ஜீன்சு பேண்ட். அதன் மேல் இறுக்கமான பனியன். பனியனின் மேல் மெல்லியத் துணியால் ஆன காலர் வைத்தச் சட்டை. பட்டன் போடாமல் திறந்து விட்டு கொண்டு... மீனா பேஷன் ஷொ பெண் போல நடந்து வந்து கொண்டிருந்தாள்.
   அவளைப் பார்த்த ஆண்களின் கண்களுக்குத் திருப்தியையும் பெண்களுக்கு அவளைப் போல் நாமில்லையே.... என்ற அதிருப்தியையும் கொடுத்தது.
   தன் குட்டையான சுருட்டை முடியைப் பின்னாமல் விரித்திருந்தது அவளுடைய அழகை மேலும் உயர்த்திக் காட்டியது.
   மேலைநாட்டு உடை தான் என்றாலும் நம்மூர் பெண்கள் அதை அணியும் பொழுது சில சமயங்களில் அந்த ஆடைக்கே அழகு கூடிவிடுவதும் உண்டு.
   பள்ளியை விட்டு வெளியே வந்தவளை அங்கே இருந்த அனைத்து ஜோடிக் கண்களும் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தன. அதில் ஒரு ஜோடிக்குரிய கண்கள் சின்னதம்பியுடையது. அந்தக் கண்களில் ஆர்வமட்டுமல்லாமல் அதிசயமும் கலந்து இருந்தது.
   தன் மோட்டார் வண்டியை நிறுத்தி அதன் மீது கம்பீரமாகச் சாய்ந்து கொண்டிருந்தவனை இளம் பெண்கள் ஓரக்கண்களால் பார்த்தாலும்..... அவனுடையப் பார்வை மீனாவின் மீது பதிந்து இருந்தது. ஆனால் இவள் அவனைப் பார்க்கவில்லை. அவள் எப்போழுதும் போலவே தன் தோல்பையை மார்புக்குக் குறுக்காக மாட்டிக் கொண்டு கையில் இருந்த புத்தகத்தைத் தூக்கிப் போட்டு பிடித்து கொண்டே நடந்தாள்.
   'மீனா" சின்னதம்பி கூப்பிட்டான்.
   நின்று திரும்பியவள் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்!
   'என்ன..... நீங்களா......? காலேஜ் தொடங்கிடுச்சே.....! போவலையா? ரொம்ப நல்லாயிருக்குது." என்றாள் குரலில் சற்று ஏளனமாக.
   'தொடங்கட்டுமே...... கொஞ்ச நாள் கழிச்சிப் போனாலும் என்னால பாடத்தைப் புரிஞ்சிக்க முடியும். அந்த தன்நம்பிக்கை எனக்கு நெறைய இருக்கு." என்றான்.
   தன்னை நன்றாக அறிந்து கொண்டவனே தன்னம்பிக்கை உள்ளவன். அவன் மற்றவர்களையும் அல்லவா புரிந்து கொள்கிறான்!
   'ஓ.... அப்பச்சரி. ஆமா... இங்க  எங்க.....?"
   'உன்னைப் பாக்கத்தான்."
   முகம் பூவாக மலர்ந்தது. 'என்ன பாக்கவா.... ரொம்ப சந்தோஷங்க. என்னைப் பாக்க யாரும் வந்ததேயில்ல. ரொம்ப தாங்ஸ். என்ன விசயம்?"
  'சக்திவேல் இந்த செல்போனையும் இந்தத் தாளையும் உங்கிட்ட குடுக்கச் சொன்னார்."
   'எதுக்கு....?" யோசனையுடன் வாங்கி கொண்டாள்.
   'நம்ம ஊருல இந்த வருஷம் தேர் திருவிழாவ நல்லா சிறப்பா கொண்டாடலாம்ன்னு இருக்கோம். இந்த நேரத்துல ஊரைவிட்டு வெளியே போய்ப் படிக்கிற எல்லார் கூடவும் பேசணுமின்னா இது உதவியா இருக்கும். அந்த பேப்பர்ல நம்ம ஊர் எல்லாருடைய போன் நம்பரும் இருக்குது." என்றான்.
   காகிதத்தைப் பிரித்து பார்த்தாள். அதில் சக்திவேல்  சின்னதம்பி கணேசன் ஆறு நண்பர்கள் இன்னும் இரண்டு பெயர்களுடன் டெலிபோன் எண்களும் வரிசையாக எழுதியிருந்தது.
   'ஏதாவது அவசியம்ன்னா மட்டும் நீயா போன் செஞ்சிப் பேசு. மத்தபடி அவரே ஒனக்குப் பண்ணுவார்."
   'நான் இன்னைக்கே அவர்கிட்ட கொஞ்சம் பேசணும். ஒரு முக்கியமான விசயத்தை அவர்கிட்ட சொல்லணும். என்ன செய்யலாம்?"
   'மீனா.... எந்த விசயமா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. நான் நாளைக்கி பெங்களுர் கௌம்பிடுவேன். நானே அவர்கிட்ட சொல்லிடுறேன்."
   'இல்லைங்க. நானே அவர்கிட்ட நேரா சொல்லணும். ரொம்ப ரகசியமான விசயம். அன்னைக்கி நகைக்கெடைச்ச அன்னைக்கே சொல்லி இருக்கணும். ஆனா அவரை எப்படி காண்டெக்ட் பண்ணுறதுன்னுத் தெரியாம தவிச்சிக்கினு இருந்தேன். சரியன நேரத்துல தெய்வமே நேருல வந்த மாதிரி நீங்க வந்திருக்கீங்க." என்றாள்.
   சின்னதம்பி சற்று நேரம் யோசித்தான்.
   'சரி. நான் கௌம்புறேன். அவர்கிட்ட சொல்லி டெலிபோன் பண்ணச் சொல்லுறேன். அனேகமாக இன்னைக்கு போன் பண்ணுவாரு." சொல்லி கொண்டே வண்டியைக் கிளப்பினான்.
   சற்று தூரம் போனவன் அரை வட்டமடித்துத் திரும்பி அவளிடம் வந்து நிறுத்தினான். மீனா என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள்.
   'மீனா..... இந்த டிரஷ்சுல நீ ரொம்ப அழகா இருக்கிற!"
   அவன் அவளை அழுத்தமான காதல் கலந்த பார்வையுடன் சொன்னதும் மீனாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
   தன்னையுமறியாமல் தலைகுனிந்தாள்.
                          


   மீனாவுடைய உடையைப் பற்றிப் சின்னதம்பி பெருமையாகப் பேசினாலும் அவன் கண்களில் தெரிந்த காதல் போதை அவளை வெட்கத்தால் தலை குனிய வைத்தது.
   அவளின மனத்தில் மகிழ்ச்சி கொப்பளித்தது.  இது சற்று நேரம் தான். உடனே தன் மனத்தை மாற்றிக் கொண்டாள்.
   'உங்களுக்குப் பாவாடை சட்டைப் போட்டாலே பிடிக்காது. ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்ட்டுமாப் புடிக்கும்? ஆச்சர்யமா இருக்குது....." என்றாள்.
   'உன்னை மாதிரி தேவதைங்க பாவாடை சட்டையில் இருக்கிறத விட ஜீன்ஸ் பேண்டுல ரொம்ப அழகாத் தெரியிறாங்க. அதுக்கேத்த ஒடம்பும் ஒனக்கு இருக்குது. மீனா.... சாதாரணமா ஒரு பொண்ணு போடுற டிரெஸ் அவள் பெண்ணுன்னு காட்ட கொஞ்சம் இறுக்கமாகவும் அவளுடைய பெண்மையை வெளிப்படுத்த கொஞ்சம் தளர்வாகவும் போடணும். நீ அன்னைக்கி போட்டிருந்த சட்டை உன்னோட பெண்மையை ரொம்ப வெளிப்படுத்துச்சி. அதனாலத்தான் நான் அப்படி சொன்னேன். நீயும் அன்னையிலேர்ந்து தாவணித்தான் கட்டுறே. அழகு போட்டிருக்கிற உடையில இல்ல. அதைப் போட்டிருக்கிற விதத்துலத்தான் இருக்குது. புடைவையைக் கூட கவர்ச்சியா உடுத்தலாம்..... சரி மீனா நான் கௌம்புறேன்......" போய்விட்டான்.
   மீனாவும் அங்கிருந்து கிளம்பினாலும் மனம் அவனையும் அவன் சொன்ன வார்த்தைகளையும் சுற்றியே வந்தது. அவன் சொன்னது போல் அவள் அன்றிலிருந்து வீட்டிலே பாவாடை சட்டைப் போட்டு கொண்டாலும் வெளியில் வரும்பொழுது தாவணியில் தான். ஆனால் அவள் இதை நினைக்கவில்லை.
   அவன் எந்த அளவில் தன்னைப் பார்வையால் அளந்து இருக்கிறான் என்பதை நினைத்து வெட்கப்பட்டாள்.

   அவள் நாகரீக உடையில் நடமாடும் நங்கை தான். அதற்குக் காரணம் உண்மையில் அவளின் வறுமை தான்! சிறுவயதிலிருந்தே மாமா பையன்களுக்குச் சிறியதாகிப் போன துணிகளைப் போட்டே வளர்ந்தாள். அதனால் அவளுக்குப் பெரிய பெண்ணாகிவிட்ட பிறகும் பேண்ட் பிடித்திருந்தது. ஆனால் 'நீ இந்த ஊரில் இந்த மாதிரியெல்லாம் உடை உடுத்தக் கூடாது" என்று அறிவழகி சொல்லிவிட்டதால் ஊருக்குள் வரும்பொழுது பாவாடை சட்டைத்தான்!
   அதன்பிறகு சின்னதம்பி அவளைப்பார்த்துக் கேலியாகச் சிரித்ததும் அவளுக்குத் தாவணி அவசியமாகப் பட்டது.
   பார்வைகளே பல விசயங்களைச் சொல்லிவிடுமே......!
   அன்று அவன் மேல் கோபம் தான்! ஆனால் இன்று இப்படி பேசிவிட்டுப் போனது.... நமது நன்மைக்குத்தானே என்று நினைக்கவும் அவள் உள்ளூர மகிழ்ந்தாள்.
   அழகு போட்டிருக்கிற உடையில் இல்லை. அதைப் போட்டிருக்கிற விதத்துலத்தான் இருக்கிறது என்று அவன் சொன்னது அவனது கண்ணியமான மனத்தை எடுத்துக் காட்டியது.
   ஆபாசமாகப் பார்க்கும் பேசும் ஆண்களைவிட கண்ணியமாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்ளும் ஆண்களைத்தான் பெண்களுக்கு அதிகமாகப் பிடிக்கும். அந்த வகையில் அவளுக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இது தான் காதலா.......?


   அன்று இரவு கைபோன் செல்லமாகச் சிணுங்க எடுத்துப் பேசினாள்.
   'அலோ......"
   'மீனா... நான் சக்திவேல் பேசுறேன்"
   அவன் குரலைக் கேட்டதும் அவள் முகம் மத்தாப்பூவாகப் பூத்தது.
   'நீங்களா... எப்படி இருக்கீங்க?"
   'ம்;..... ரொம்ப நல்லா இருக்கேன்மா.... சொல்லுமா என்ன முக்கியமான விசயம்? " அவர் நேரடியாக விசயத்தைத் துவங்கினார்.
   'சக்திவேல்.... உங்களால என்னை நேருல வந்து ஆசிரமத்துல சந்திக்க முடியுமா.....? கோயில் நகைகளைப் பத்தின விசயம் ஒன்னு சொல்லணும்....."
   மறுமுனை சற்று அமைதியில் கரைந்தது. இவளும் பேசாமல் இருந்தாள்.
   'என்ன விசயம்? போன்னுலேயே சொல்லலாமே.....?"
   'இல்லைங்க. இது ரகசியம் நேராகத்தான் சொல்லமுடியும்."
   'அப்போ ஒன்னு செய்யலாம். நா இப்போ நேரா வர முடியாது. தம்பி இருப்பான். நாளைக்கி அவனை நேரா வந்து உன்ன பாக்கச் சொல்லுறேன். எந்த மாதிரியான ரகசியமா இருந்தாலும் நீ தயங்காம அவன்கிட்ட சொல்லலாம். இங்கே நான் தான் அவன். அவன் தான் நான். நீ பயப்படாம சொல்லு என்ன....?"
   மீனாவிற்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. இதற்காகவாவது அவரை நேராடியாகப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தாள். அவளுக்கு இலேசான கோபம் கூட வந்தது.
   'எல்லாவிசயமும் அவரே செய்யிறார். நீங்க ஏன் எதிலுமே நேரிடையாக செய்யிறது கெடையாது......?"
   கேள்வியிலும் சற்று கோபம் கலந்திருந்தது.
   'செய்வேன் மீனா.... இன்னும் மூனு மாசம் தான். படிப்பு முடிஞ்சதும் நம்முடைய ஊர்தானே நமக்கு வாழ்வு! அதன் பிறகு நான்தானே எல்லாத்தையும் நேரடியாக செய்யணும்? அதுவரைக்கும் என்னோட எண்ணங்கள்ல தடை வராம இருக்கத்தான் தற்காலியமா நான் உன்னைவிட்டு விலகியிருக்கிறேன்.' என்றார்.
   மீனா அவன் பேசியதை உன்னிப்பாகக் கேட்டாள். புரிந்தது போல் இருந்தாலும் புரியவில்லை. பேசாமல் இருந்தாள்.
   'மீனா...."
   'ம்....."
   'நம்ம ஊர் நல்லதுக்காக நீ ரொம்ப அக்கரை காட்டுறது மிகவும் பாராட்ட கூடிய விசயம்மா.... ரொம்ப நன்றி. தேவைப்படும் போது நானே உன்னைக் கூப்பிடுறேன். நாளைக்கி சின்னதம்பி கிட்ட விசயத்தை சொல்லிடு. என்கிட்ட இருக்கிற எல்லா உரிமையையும் நீ அவன்கிட்டக் காட்டலாம். பிறகு பேசுறேன். என்ன.....?"
   தொடர்பு துண்டிக்கப் பட்டது. மீனா குழப்பமான மனத்துடன் போனை நிறுத்தினாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   உறங்கப் போகும் ஆதவன் தன் களைப்பு நீங்க மஞ்சள் குளித்து விட்டு ஊரையே மஞ்சள் நிறமாக்கி விட்டிருந்தான். ஆண் மஞ்சள் குளித்தால் அவமானம் எனநினைத்து மேகத் துண்டுகளில் துடைத்துவிட்டு போய்விட்டானோ........!
   ஊர் பெரியகுளம் கூட மஞ்சள் கரைத்த தண்ணீர் போல் இருந்தது. குலக்கரையில் சின்னதம்பி அமர்ந்து கொண்டு பாவாடையை முட்டிவரை தூக்கிப் பிடித்து கொண்டு தந்தம் போன்ற கால்களைத் தண்ணீரில் நனைத்து விளையாடிக்கொண்டிருந்த மீனாவை அன்புடனும் ஆசையுடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.
   விளையாடி முடித்துப் பாவாடையைத் தொங்கவிட்டுத் தாவணியைச் சரி செய்து கொண்டே அவன் எதிரில் வந்து மீனா பூவாகச் சிரித்தாள்.
   பெண்களின் சிரிப்புத்தான் எத்தனை வகை? எத்தனையான அர்த்தங்கள்? யார் தான் அதற்குச் சரியான அர்த்தம் கண்டுபிடித்து சொல்லிவிட முடியும்? அர்த்தம் கண்டுபிடிக்கவும் முடியுமா......? அதுவும் மீனாவின் இந்தப் புன்சிரிப்பு........ எதைச் சொல்கிறது......? அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவனும் இலேசாகச் சிரித்து வைத்தான்.
   'உட்கார் மீனா....." அவன் சொல்ல அவன் அமர்ந்திருந்த படிக்குக் கீழ் படியில் அவன் காலுக்கு மிக அருகாமையில் அமர்ந்தாள்.
   'சொல்லு மீனா என்ன விசயம்.....?"
   அவள் சுற்றிலும் பார்த்தாள். குளக்கரையில் யாரும் இல்லை. இரண்டு பெண்கள் பூசை பொருட்களுடன் கோவிலுக்குள் போய்க் கொண்டிருந்தார்கள். யாருமில்லை என்று தெரிந்ததும் பேச்சைத் துவங்கினாள்.
   'அன்னைக்கி.... நகைப் பெட்டியைத் தொறந்ததும் நான் அந்த காகிதங்களைத்தான் பொருமையாப் புரட்டிப் படிச்சேன். அதுல நகையைப் பாதுகாக்கிறது எப்படின்னு விளக்கமா படிச்சிப் புரிஞ்சிக்கினேன். நல்ல வேலையா அந்த பக்க எழுத்தெல்லாம் அலைஞ்சிடாம இருந்துச்சி. அந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம்ன்னுத்தான் அப்போ சொல்லல. அதுக்கேத்தமாதிரி அந்த தாளுங்களும் தூள் தூளாயிடுச்சி." என்றாள்.
   'சரி எப்படின்னு சொல்லு?"
   மீனாசுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னாள்.
   'நம்முடைய அம்மன்சிலைக்கு பக்கத்துல இருக்கற கல் மேடைக்கு கீழ இருக்கிற கல்லை நகர்த்தினா அங்க ஒரு பொய்யிடம் இருக்குதாம்......"
   'பொய்யிடமா.....? அப்படியின்னா.....?"
   'பொய்யிடம்ன்னா அங்க ஒரு பள்ளம் இருக்கும். அதை யாருமே அவ்வளவு சீக்கிறத்துல கண்டுப்பிடிக்க முடியாது. அந்த பள்ளத்துல இப்போ கெடைச்ச மாதிரியே போலி நகைங்க இருக்குதாம். இந்த உண்மையான தங்க நகைங்கள பொய்யிடத்துல வச்சிட்டு போலிநகைங்களை அந்த பொட்டியில வச்சி பாதுகாக்கணுமாம்." கிசுகிசுப்பாகச் சொன்னாள்.
   அவன் சற்று யோசித்தவன் சிரித்தான்.
   'பாதுகாக்கத்தான் இந்த நகைங்களா......?" என்றான்.
   'நீங்க கேக்குறது எனக்குப்புரியுது. இப்போ ஒரு கப்பலை எடுத்துக்கோங்க. அது துறைமுகத்துல இருந்தா பாதுகாப்பாத்தான் இருக்கும். ஆனா கப்பல் பாதுகாக்க மட்டும் செய்யிறதில்லையே...... இருந்தாலும் சாதாரண நேரங்கள்ல பாதுகாக்க இது ஒரு வழி. இதுவே சரியான வழியாவும் தெரியுது.
   இந்த விசயத்தை நான் இதோட மறந்துடறேன். நீங்க நம்ம அர்ச்சகர்கிட்ட சொல்லிக் காரியத்தை முடிச்சிடுங்க. நல்ல நாள்கிழமையில பொட்டிய கொண்டாந்து கல்மேடையில வச்சிட்டுப் பொய்யிடத்துல இருக்கிற நகைகள அம்மனுக்குச்த் சாத்தி திரும்பவும் கழற்றும் போது அந்த நகைகளைப் பொய்யிடத்துலேயே வச்சிட்டு பெட்டியைப் பாதுகாப்பா வக்கச்சொல்லுங்க." என்றாள்.
   சின்னதம்பி தலையாட்டினான். அவள் எழுந்து கிளம்ப தயாரானதும் அவனும் எழுந்து கொண்டான்.
   'மீனா......" மெதுவாக கூப்பிட்டான்.
   தாவணியில் ஒட்டியிருந்த மண்ணைத்தட்டியவள் அவனை நிமிர்ந்து கேள்வியாகப் பார்த்தாள்.
   'மீனா.... உனக்கு உண்மையிலேயே என் மேல எந்த ஒரு ஈடுபாடும் இல்லைய......? கேட்டான்.
   அவனையே சற்று நேரம் பார்த்தாள். பிறகு 'இல்லை" என்று தலையை மட்டும் ஆட்டினாள். வார்த்தையால் சொல்ல முடியவில்லை.
   அவளுடைய எண்ணங்கள் சக்திவேல் நேற்றுச் சொன்னதை எண்ணிப்பார்த்தது. அதன் அர்த்தம் அவளுக்கு விலங்கவில்லை. இவனிடம் கேட்கலாமா......? நினைத்தவள் அவனிடமே கேட்டாள்.
   'ஆமா.... நேத்துச் சக்திவேல் பேசும் போது ; என் எண்ணங்களில் தடை வராம இருக்கத்தான் தற்காலியமா விலகியிருக்கேன்னு சொன்னார். அதுக்கு அர்த்தம் என்ன.....? அவருக்குகூட தடைவருமா என்ன....?"
   அவன் இவளையே சற்று நேரம் பார்த்தான். அவள் அவனது கேள்விக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்ற அர்த்தத்தில் தலையாட்டியது அவனை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருந்தது. ஆனால் அவள் அதைச் சற்றும் இலட்சியம் செய்யாமல் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கவும் அவனுக்குக் கோபம் அதிகமாகியிருக்க வேண்டும்.
   'ம்..... சில சமயங்களில் சிங்கம் கூட ஈக்களிடமிருந்து தன்னை  காப்பாத்திகொள்ள வேண்டியிருக்கிறதே......." என்றான் அவளை ஏளனமாகப் பார்த்தபடி!
   அவன் சொன்னவிதமும் பார்த்த பார்வையும் தன்னைத்தான் ஈ என்று அர்ப்பமானதாக சொன்னான் என்பது புரிந்தது. அந்த சொல் கொண்டு கிழித்த வலி கண்களைக் கலக்கியது. அதை அவனும் கவனித்தான்.
   'மீனா ஆறுதல் கிடைக்கிற இடத்துல அழுதால்தான் நம் கண்ணீருக்குக் கூட மதிப்பிருக்கும். அன்பை நேசிக்கிறவங்களிடம் உன் அன்பைக் காட்டு. அப்போதுத்தான் உன் உண்மையான அன்பிற்கும் மதிப்பிருக்கும்."
   'அப்போ.... சக்திவேலிடம் என்மேல மதிப்பிருக்காதுன்னு சொல்லுறீங்களா.....?"
   'உன்னோட அன்புக்கு வேணா மதிப்பிருக்கும். ஆனா அது காதல் கிடையாது.  அவர் மனசுல நீ பத்தோடு பதினொன்னு தான். ஆனால் என் மனசுல நீ அப்படியில்ல. அதுல முழுக்க முழுக்க நீ மட்டும் தான் இருக்கிற. இதை நீ எப்பத்தான் புரிஞ்சிக்கப் போறே......?"
   அவன் குரலில் கனிவும் காதலும் ததும்பியது. நிமிர்ந்து அவன் கண்களை நோக்கினாள். அதில் ஏக்கம் காதல் மட்டுமில்லை உன்னையே வென்றுவிட்டேனடி என்ற வெற்றி போதையும் ஓர் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. மனத்தை திடப்படுத்தினாள்.
   'இதோ பாருங்க. சக்திவேல் என்னை விரும்பலேன்னாலும் பரவாயில்லை. எனக்குன்னு ஒரு மனசு இருக்குது. அதுல நீங்க கொஞ்சம் கூட இல்லை." என்றாள் அழுத்தமாக.
   அவளின் பொய்பேசும் விழிகளைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பித் தன் மோட்டார் வண்டியை நோக்கி நடந்தான். மீனா அவனை யோசனையுடன் பின் தொடர்ந்தாள்.  அவன் தன்னை அலட்சியப் படுத்துகிறானோ என்று தோன்றியது.
   இது தானே பேதை மனம்! முன்னே போனால் இடிக்கும். பின்னே வந்தால் தடுக்கும். ஆக எப்படியாவது போய்த்தான் ஆகவேண்டும்.
   அவன் கிளப்பின வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் வண்டி கிளம்பியது. அவனின் கோபம் வண்டியின் வேகத்தில் தெரிந்தது.

                         (தொடரும்)   

4 comments :

 1. சிறுகதை சுவாரஸ்யமாக இருக்கு நண்பா.. தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் நீங்கள் என்னை இப்படியெல்லாம் கலாய்க்கக் கூடாது நண்பரே...

   Delete
 2. அட அந்த பெண்ணோட அறிமுகத்த வாசிச்சப்பவே....ஹன்சிக்கா கண்முன்னே வந்து போனா...சூப்பர்..தொடர்ந்து முந்தைய தொடர்களை படிச்சிட்டு வாரன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க விட்டுக்குருவி.

   Delete