Wednesday, 9 May 2012

போகப் போகத் தெரியும் - 10

                                            

   ஆத்தூர் ஏரியைச் சுத்தப்படுத்திக்  கொண்டிருந்த பொழுது சின்னதம்பி கடப்பாரையால் மண்ணைக் குத்த....... 'க்ணீங்....." என்ற ஓசை கேட்டது. அங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் அந்த ஓசை வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள். சின்னதம்பி திரும்பவும் யோசனையுடன் அந்த இடத்தை மீண்டும் குத்த.... மீண்டும் அதே ஓசை!!!!
   சின்னதம்பி சொல்ல நான்கு ஆண்கள் தோண்டி எடுத்த பொழுது அது ஒரு பழுப்பேறிய செம்மண் நிற n;வங்கலப் பெட்டி! இரண்டடி நீளம். ஒருஅடி அகலம். ஓரடி உயரம் கொண்டது.
   அனைவருமே வேலையை விட்டுவிட்டு பெட்டியை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்;. பெட்டியின் நாக்கில் பெரியப் பூட்டு! இழுத்து  பார்த்தார்கள்;. திறக்கவில்லை.
   சின்னதம்பி சொன்னான்.
   'இந்தப் பொட்டிய பிறகுப் பாத்துக் கொள்ளலாம்...... தூக்கிக் கொண்டு போய் மரத்தடியில வச்சிட்டு வேலையைப் பாருங்க."  என்று.
   உடனே அவன் கட்டளை நிறைவேறியது.
   ;ஒரு சிங்கத்தின் தலைமையில் ஆடுகளைக் கொண்டப் படை ஆட்டின் தலைமையிலான சிங்கங்களின் படையைத் தோற்கடிக்கும் ; என்பது அரேபியப் பழமொழி.
   இங்கே ஒரு தலைமை சிங்கம் ஒவ்வொரு ஆட்டையும் சிங்கமாக்கிக் கொண்டிருந்தது.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


  ஏரியைச் செப்பனிட்ட வேலையனைத்தும் முடிந்து விட்டது. கசகசப்பான மாலைப் பொழுது. ஒவ்வொருவரும் குளித்து உடைமாற்றிக் கொண்டு கோவில் மரத்தடியில் வந்து குழுமியிருந்தனர்!
   ஒவ்வொருவரும் உற்சாகமாக இருந்தார்கள். இத்தனை நாட்களாகச் செய்த வேலையின் பளு முகத்தில் தெரியவில்லை. வேலை என்று நினைத்துச் செய்தால் அது உடல் வலியைக் கொடுக்கும். நமக்குத் தேவை என்பதற்காகச் செய்யப்படும் வேலை மன வலிமையை அல்லவா கொடுக்கும்?
   வேலைக்கு நடுவில் கிடைத்த பெட்டி! அதை அப்பொழுதே மறந்து விட்டு வேலையைத் தொடர்ந்தார்கள்.
   எப்பொழுதுமே ஒரு வேலையைச் சரியாகவும்.... முடிவு இது தான் எனக் குறித்தும் ஆரம்பித்து விட்டால் அந்த வேலை முடியும் வரை தொடர்ந்து கொண்டே போகத்தான் வேண்டும். இங்கே முடிவு தான் வெற்றியைக் கொடுக்குமே தவிர நடுவில் நடக்கும் தடைகள் இல்லை.
   அப்போதைய தடையும் இந்தப் பெட்டித்தான். இப்போதைய வெற்றியும் இந்தப் பெட்டித்தான்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
   எப்பொழுதுமே மூடப்பட்டிருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்! ஆனால் அதனுள்ளே உண்மையிலேயே மதிப்பு அதிகமானப் பொருள் இருந்தால்....
   பொருளின் தரத்திற்கு மட்டும் மதிப்பைக் கொடுத்து விட முடியாது. அதை அறிய ஆவலாய்க் காத்து கொண்டிருக்கும் மனித மனமும் மதிப்பு வாய்ந்தது தான்! உண்மையையும் ஏமாற்றத்தையும் ஏற்றுக் கொள்கிறதே!
   அதன் பூட்டை பலவித சாவிகள் கம்பிகளை நுழைத்துத் திறக்க முயற்சித்தும் முடியவில்லை. கடைசியில் சின்னதம்பி தான் பூட்டை உடைக்கச் சொன்னான்.
   ஏற்கனவே துருப்பிடித்திருந்த பூட்டு! அதைக் குறுக்கு வழியில் கொடுமை படுத்தித் திறக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. பூட்டைத் திறந்ததும் பெட்டியைத் திறக்க முயன்றனர். ஆனால் அதன் மூடியும் பெட்டியின் அடிப்பாகமும் நன்றாக அழுத்திக் கொண்டு திறக்கச் சிரமமாக இருக்க பிறகு மெல்லியக் கூர்மையானக் கத்தியின் உதவியால் கீறித் திறந்தார்கள்!
   அதனுள்.....! பட்டுத்துணியில் சுற்றி வைக்கப்பட்டத் தங்க நகைகள்!!! அதனுடன் ஒரு புத்தகம்.
   எந்தக் காலத்தில் மறைக்கப்பட்டப் பெட்டியோ......?
   அந்தப்பட்டு துணியைத் தொட்டவுடன் மொடமொடப்பாக உதிர்ந்தது. துணித்தான் இப்படி என்றால்.... கையால் எழுதியிருந்த அந்த காகிதச்சுவடி.......
   அதைவிட இது மோசம் என்பது போல் எரிந்து போனக் காகிதத்தைத் தொட்டால் எப்படி நொறுங்கிப் போகுமோ.... அப்படி நொறுங்கியது. நடுவில் சில வாக்கியங்கள்..... எழுத்துக்கள்.... தெளிவில்லாமல்.....
   சின்னதம்பி அதை மிகமிகப் பொறுமையாக எடுத்து மெதுவாகத் தரையில் வைத்துவிட்டான். எங்கே பிரித்தால் அதில் தெரியும் ஒரு சில வாக்கியங்களையும் படிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில்.
   சாஸ்திரிகள் அந்த இதழ்களை மிக மெதுவாக திருப்பினார். ஆனால் அவை கைப்பட்டதும் நொறுங்கியது.
   'தம்பீ.... இந்தக் காகிதத்தால நமக்கு எந்த உபயோகமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்பா....." என்றார்.
   முடியாததை முயற்சித்துத் தோல்வியடையாமல் இருப்பதும் சில நேரங்களில் நல்லதே.
   'சரி உபயோகப் படாததுக்காக நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டாம். மேற்கொண்டு என்ன செய்யலாம்?" சின்னதம்பி கேட்டான்.
   அதற்குள் பெட்டியில் இருந்த நகைகளை அங்கிருந்த சிமெண்டு தரையின் மீது பரப்பி வைத்திருந்தனர். சாஸ்த்திரி நகைகளை நோட்டமிட்டார். எல்லாம் மங்கிப் போன மஞ்சள் நிறத்தில் பளப்பளப்பான கற்கள் பதித்தத் தங்க நகைகள்!
   'தம்பீ.... இந்க நகைகளப் பாத்தால் நம்ம அகிலாண்டேசுவரி அம்மனுக்கு இப்பொழுது சாத்தியிருக்கும் கவரிங் நகைகள மாதிரியே இருக்குது. அதுவும் ஒரே அச்சாக இருக்கிறது. அம்மனுடைய தங்க நகைகள களவாட அதேமாதிறி நகைங்க செஞ்சி மாத்தி இருக்க வேணும்ன்னு நெனைக்கிறேன்." என்றார்.
   'இருக்கலாம் சாஸ்த்திரிகளே..... என்னோட தாத்தாவோட தாத்தா தணிகாசலம் அவர்கள் இந்த ஊர் அம்மனுக்கு தங்கத்தாலேயே நகைங்க செஞ்சி சாத்தினதாகவும்... அது ஒரு நாள் பொட்டியோட களவுப் போயிடுச்சின்னும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பொட்டி திருட்டுப் போனப்பிறகு அம்மன் தேர் ஊர்வலம் நின்னு போயிடுச்சின்னு என் தாத்தா சொல்லி இருக்கார். அனேகமா இந்த நகைங்கத்தான் அன்னைக்கு காணாப் போன நகைங்களாகக் கூட இருக்கலாம்." என்றான் சின்னதம்பி.
   'ஆமாம்பா.........தம்பி சொல்லுறது உண்மத்தான். நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ நடந்த நிகழ்ச்சின்னும் இதப்பத்தி அப்போ பேசாத ஆளே இல்லன்னு என் அப்பாரு எங்கிட்ட சொல்லியிருக்காரு....."
   கணேசனின் தாத்தா சொன்னார். அந்த ஊரில் வயது முதிர்ந்த மனிதர் இவர் தான்!
   இதையெல்லாம் காதில் வாங்காதவளாக மீனா அந்தக் காகிதங்களை மிகமிக மெதுவாகப் புரட்டிப்பார்த்து விட்டு எழுந்து வந்தாள். யோசனையுடன் சின்னதம்பி அவளைப் பார்த்தான்!
   'ஐயா.... இந்தப் பொட்டியோட அடியில இருக்கற தகட்டை பேத்து எடுக்கிறீங்களா....?"
   ஒருவர் முகத்தை ஒருவராகப் பார்த்து கொண்டார்கள். பிறகு சின்னதம்பி யோசனையுடன் தலையாட்ட மாதவனும் சரவணனும் அந்தப் பெட்டியின் அடியில் ஒட்டியிருந்தத் தகட்டை ஒரு கத்தியின் உதவியுடன் பெயர்த்து எடுத்தார்கள்.
   அது செப்பினால் ஆனத் தகட்டில் தமிழ் எழுத்துக்களைக் கீறி எழுதப்பட்டிருந்தது. சின்னதம்பி எடுத்துச் சத்தமாகப் படித்தான்.
   'இந்தப் பெட்டியிலிருக்கும் நகைகள் அனைத்தும் ஆத்துர் கோவில் அகிலான்டேசுவரிக்குச் சொந்தமானது. இதைப் பாதுகாக்கும் முறைகள் இதனுடன் இருக்கும் காகிதச் சுவடியில் குறிக்கப் பட்டுள்ளது. இதை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது. இவை அனைத்தும் என் சொந்த உழைப்பில் செய்து இவ்வூர் அம்மனுக்கு நான் செலுத்தினக் காணிக்கை.
                          இங்ஙனம்
                     ஸ்ரீ தணிகாசலம் செட்டியார்.
 
   அவன் படித்து முடித்ததும் திரும்பி அந்த காகிதச் சுவடியைத் தேடினான். அது காகிதத் துகள்களால் ஆனச் சின்ன குப்பை மேடு போலிருந்தது. மீனாவைத் தேடினான். அவள் அங்கிருந்தச் சின்னக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
   அவன் சற்று ஏமாற்றமாகச் சாஸ்த்திரியை நோக்கினான்.
   'சரி விடு தம்பி. போனது போகட்டும். நாம வேற வழியில இந்த நகைகளைப் பாதுகாப்பா வைக்கலாம். மொதல்ல கெடச்சது என்னன்னு எழுதி வைக்கலாம். பிறகு இதுக்கெல்லம் மெருகேத்தி அம்மன் மேலேயே போட்டுவச்சிடலாம். பாதுகாப்புக்கு இப்போ இருக்கிற மணிக்கதவுக்கு பின்னால ஒரு கடினமான கம்பிக்கதவு செஞ்சி போட்டிடலாம். முக்கியமா இந்த நகைகளைப் பத்தின விசயம் வெளியே தெரியாம பாத்துக்கணும். என்ன நான் சொல்லுறது சரியா....?" என்று கேட்டார்.
   அங்கிருந்தவர்கள் தலையை ஆட்டினார்கள். ஆனால் மீனா திடிரெனச்சிரித்தாள். சத்தமாகச் சிரித்தாள். எல்லோரும் அவளை விநோதமாகப் பார்த்தார்கள்! காரணமில்லாமல் இல்லை. அவள் எப்பொழுதுமே கலகலப்பாகச் சிரித்துப் பேசுபவள் தான். அந்தச் சிரிப்பில் செப்புக்காசுகள் கொட்டிச் சிதறினால் ஏற்படும் ஓசை நயம் இருக்கும். அந்த இனிமையானச் சிரிப்பொலியைத் திரும்பவும் கேட்க வேண்டும் என்பது போல் ஆசை வரும்.
   ஆனால் இன்று.....?
   அவள் சிரிப்பொலியில் அரக்கத்தனம் இருந்தது. அந்தச் சிரிப்போசை எங்கேயோ தூரத்தில் மோதித் திரும்பவும் வந்து கேட்பவர்களின் காது பறையைத் தாக்கியது. மேலும் மேலும் சிரித்து கொண்டே இருந்தாள்!!!
   சின்னதம்பி அவளருகில் வந்து 'மீனா" என்று கூப்பிட்டும் அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
   'மீனா... எதுக்கு இப்படி பேய்மாதிரி சிரிக்கிற?" அவளின் இரு தோள்களையும் தன் கைகளால் இறுக்கிப் பிடித்து குலுக்கினான். அவள் சிரிப்புச் சட்டென்று அடங்கியது.
   'மீனா...... கேக்கிறேன் இல்ல....? சொல்லு. எதுக்காக இப்படி சிரிச்சே.....?"
   மீனா அவன் கையை விலக்கினாள்.
   'நம்ம ஊரு அகிலாண்மேசுவரியை நெனச்சேன். சிரிப்பு வந்தது." இலேசாகச் சிரித்து கொண்டே சொன்னாள்.
   'நீ இப்படி சிரிக்கிற அளவுக்கு நம்ம ஊர் அம்மனுக்கு என்ன வந்தது?"
   'இவ்ளோ நாளா சுதந்திரமா இருந்த அகிலாண்டேசுவரி இனிமே சிறையிலிருக்கப் போறாளே.... அத நெனச்சித்தான் சிரிச்சேன்."
   'என்ன சொல்லுற நீ? புரியும் படியாச் சொல்லு....."
   'அம்மனுக்கு களவு போன நகைகள சாத்தி நகைய பாதுகாக்கிறேன்னு அவள கம்பிப் கதவு செஞ்சிப் பூட்டி வைக்கப் போறேன்னுச் சொன்னிங்களே......! அப்படின்னா அவளைச் சிறையில அடைக்கப் போறிங்கன்னுத் தானே அர்த்தம்! பாவம் அவள்! இனிமேல தங்கத்துக்காக இரும்புக் கூட்டில் அடைபடப் போகும் தங்கக் கிளி!" என்றாள்.
   அவள் சொன்னதைக் கேட்டு அவன் மற்ற அனைவரையும் பார்த்தான்.
   'சரி. அப்போ என்ன செய்யலாம்? நீயே ஒரு வழி சொல்லேன்." கணேசன் மீனாவைப் பார்த்து கேட்டான்.
   'தங்கத்துக்காக அம்மனைச் சிறையில அடைக்க வேண்டாம். வேணும்மின்னா அந்த நகைகள அதே பொட்டியில வச்சி வேற எடத்துல பாதுகாப்பா வையுங்க. ஏதாவது விஷேச நாளுல அம்மனுக்கு தங்க நகைகளப் போடுங்க." என்றாள். குரல் சற்று அழுத்தமாகவும் பார்வைச் சற்று கோபத்துடனும் இருந்தது.
   சின்னதம்பி மீனாவைப் பார்த்தான். அந்தப் பார்வைச் சிந்தனையில் ஊடுருவும் பார்வை!
   அன்று ஏரியைத் தூர்வாரத் தூண்டியது இந்த மீனா தான். அப்பொழுதே தேர் புதுப்பிக்கப் படுவதைப் பற்றி பேச்செடுத்த பொழுது... முதலில் தூர்வாருங்கள் பிறகு நம்மூர் அம்மன் வழிக்காட்டுவாள்.... என்று சொன்னதும் இந்த மீனாதான். பெட்டிக் கிடைத்ததும் அவளெதிரில் தான். பெட்டியினுல் தகடு இருப்பதைச் சொன்னதும் இவள் தான். இப்பொழுது இப்பெட்டியைப் பாதுகாக்க வழி சொல்வதும் இவள் தான். அப்படியானால் யார் இவள்? இந்தப் பெட்டிக்கும் இந்த ஊருக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் இப்படி திடிரென்று ஒரு மாதிரியாகப் பேசுகிறாள்.....?
   அவன் இப்படி யோசித்துக் கொண்டே மீனாவை வைத்தக்கண் வாங்காமல் பார்க்க.... மீனா அவன் முகத்திற்கு முன் தன் கைகளை ஆட்டினாள்.
   'என்ன இந்த உலகத்துலத் தான் இருக்கிங்களா....? இல்ல.... தங்கத்தப் பாத்ததும் புத்தித் தடுமாறிடுச்சா.....?"
   சிரித்து கொண்டே கேட்டாள். இப்பொழுது அவள் குரல் எப்பொழுதும் போல் மென்மையாக இருந்தது.
   'என்னொட புத்தி தடுமாறுற அளவுக்கு என்னோட சிந்தனைய தூண்டிவிட்டவ நீ.... என் சிந்தனை மனிதனுடைய பார்வையிலேயே இருக்குது. ஆனா... உன் பார்வை தெய்வத்தன்மையோட இருக்குதே.... அதான் யோசனை."
   'பொறுங்க..... பொறுங்க.... பொதுவா சிந்தனையில அன்பும் உண்மையையும் கலந்து எதைப்பாத்தாலும் அந்தப் பார்வையில தெய்வம் குடிக் கொண்டிருக்கும். என்னோட பார்வையில அன்பும் உண்மையும் இருந்ததால என்னோட வார்த்தையும் கொஞ்சம் உண்மையை அழுத்தமா வெளிப்படுத்துச்சி. இத வச்சி என்ன தெய்வமா ஆக்கிடாதீங்க. அதோட என்னைய யாரும் அன்பா பாக்கமாட்டாங்க. பக்தியோடப் பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. இந்த மீனாவுக்குத் தேவையானது வெறும் அன்பு மட்டும் தான். அந்த அன்பை நீங்க காணிக்கையா தந்தாலும் ஏத்துக்குவேன்..... அன்பளிப்பா தந்தாலும் ஏத்துக்குவேன்...... என்ன சரியா.......?"
   அவள் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுத் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
   ஊர் மக்கள் அனைவரும் அவள் போவதையே பார்த்து கொண்டு நின்றிருந்தார்கள்!
   தெய்வங்கள் நேரில் வந்து காட்சி கொடுப்பது இல்லை. உண்மையும் அன்பும் ஒருங்கே இருப்பவர்கள் அனைவருமே நடமாடும் தெய்வங்கள் தான்!
                               (தொடரும்)

4 comments :

  1. தெய்வங்கள் நேரில் வந்து காட்சி கொடுப்பது இல்லை. உண்மையும் அன்பும் ஒருங்கே இருப்பவர்கள் அனைவருமே நடமாடும் தெய்வங்கள் தான்!

    >>>
    நல்லவர்களுக்கு தெய்வம் நேரில் வந்து சாட்சி சொல்லாது. பிறர் வடிவில்தான் வந்து சொல்லும்ன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன், அது உங்க கதை மூலம் உண்மையென உணர்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ராஜி அவர்களே!

      Delete
  2. /////எப்பொழுதுமே மூடப்பட்டிருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்! ஆனால் அதனுள்ளே உண்மையிலேயே மதிப்பு அதிகமானப் பொருள் இருந்தால்/////

    அழுத்தமாய் பல பொருள் உறைக்க உரைத்துள்ளீர்கள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க
      நன்றிங்க ம.தி.சுதா அவர்களே!

      Delete