Thursday, 6 September 2012

போகப் போகத் தெரியும் - 24


   மீனா வந்ததிலிருந்து சக்திவேல் மீனா என்றொரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல் நடந்து கொண்டதால் மீனா யோசித்தாள்.
   அவள் சனிக்கிழமைகளில் கல்லூரியிலிருந்து வரும் பொழுதும் திங்கள் கிழமைகளில் காலையில் கல்லூரிக்குத் திரும்பிப் போகும் பொழுதும் அவன் தன் நண்பர்களுடன் ஊர் பள்ளிக்கூடத்தின் திண்ணையில் இருந்து கொண்டு இவளைப் பார்ப்பான். இவளும் அவனை ஓரக்கண்களால் பார்த்துச் சிரித்துக் கொள்வாள். அவ்வளவு தான்.
    வீட்டில் அது கூடக் கிடையாது. சில நாட்களில் அவன் வீட்டிலேயே இருக்க மாட்டான்.
    யாரிடமாவது விசாரித்தால் அவன் பெங்களுர் போய் இருப்பதாய் பதில் கிடைக்கும்.
    வீட்டில் இருக்கும் பொழுது நிறைய தொலைபேசி அழைப்பு வரும். அதில் ஒரு பெண் குரல் தான் சக்திவேலைக் கேட்க்கும். அவன் அந்தக் குரலுடன் பேச ஆரம்பித்து விட்டால் பொழுது கரைந்து விடும். சிரித்துப் பேசுவான். இவளுக்குப் புரியாது. காரணம்... அவன் கன்னடத்தில் அல்லவா பேசுகிறான்...!
    இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவளுக்குத் தொடக்கத்தில் கோபமாகத் தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? உண்மையில் அவன் அவளுக்கு என்ன உறவு? காதலி என்று சொல்லலாமா...?
    எந்த உறவும் இல்லாமலேயே உறவைக் கொண்டாட வருவது தானே காதல்!!
    ஆனால் இது காதல்தான் என்று சொல்லிக்கொள்ள எந்த பதிலும் அவனிடமிருந்து வரவில்லையே! அன்று சின்னத்தம்பியாக இருந்த பொழுது தன்னைக் காதலிப்பதாகச் சொன்னவன்... அவனே பின்பு சக்திவேலாகி என் மனத்தில் வேறோரு பெண் இருக்கிறாள் என்று சொன்னவனும் இவன் தானே...!
    அன்று வெற்றி பெற்றதின் பரிசாகத் தன் நண்பர்களின் எதிரிலேயே முத்தம் கேட்டு பேச்சால் அவளைச் சீண்டியவன்... அதன் பிறகு தனிமையில் எதையும் பேசினதில்லையே...!!
      ஒரு சமயம் முறையுள்ளவர்களைக் கேலி கிண்டல் செய்து விளையாடுவது போல் விளையாடினானோ...! அதைத் தான் நாம் காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டோமா...? இருக்கலாம்...
    அப்படியென்றால் அவன் தன்னைக் காதலிக்கவில்லை என்பது உண்மை தான்! அவனுக்கு எப்படி தன் மீது காதல் வரும்? சொந்தத்தில் தான் பெண் அமையும் என்று ஜாதகம் சொல்கிறது. பணக்காரன். படித்தவன். பண்பாளன். இவனுக்குப் பெண் கொடுக்க பணக்காரர்கள் நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்க... அனாதையான தனக்கா அவன் தாலி கட்டுவான்...
    சரி தனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவன் காதலிக்கும் பெண்ணுடனாவது நன்றாக வாழட்டும். மனதார வாழ்த்தினாள்.
    இது தானே உண்மையான காதல்!
    அப்படியானால் தனக்குப் பிடித்தவனை அடுத்தவருக்கு விட்டுக் கொடுப்பது தான் காதலா...?
    ஆமாம். இதுவும் ஒருவகை காதல் தான். தனக்கு எட்டாத பழம் சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று நினைக்காமல் நம்மைவிட வலிமையானவர்கள் ருசிக்கட்டுமே என்று தகுதி உள்ளவர்களுக்குத் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவர்களை விட்டு நகர்ந்து விடுவதும் ஒரு வகையில் காதல் தான்...
    ஏமாற்றம் அடைந்தவன் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளமல் அடுத்தவனால் தான் வந்தது என்று தன்னைச் சமாதானம் செய்து கொள்வது இல்லையா...?
    அதிலும் இங்கே வெற்றிவேலும் வேந்தனும் இவளுடைய தகுதி என்னவென்று அவளிடமே சொல்லித் தானே இருந்தார்கள்?
    ஒரு புத்திசாளி தன்னுடைய எதிரிகளிடமிருந்து நிறைய விசயங்கள் கற்றுக் கொள்கிறான். இதோ மீனாவும் தன்னுடைய தகுதியை எடைபோட்டுக் கொண்டாள். தனக்குச் சக்திவேலை அடைய எந்தத் தகுதியும் இல்லை என்று.
    ஆனால் தகுதியைப் பார்த்து வருவதா காதல்?
    இருந்தாலும் அவனுக்கு எல்லாவித்த்திலும் பொருந்திய அந்தப் பெங்களுர்ப் பெண் நிருஜாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.
    எப்படிப் பார்ப்பது? சக்திவேல் ஏதாவது புகைப்படம் வைத்திருப்பானா...? அப்படி வைத்திருந்தாலும் மாடியில் அவன் அறையில் தான் வைத்திருப்பான்!
    இதுவரை அவள் மாடிக்குப் போனது கிடையாது. அவள் மட்டுமல்ல. கமலாவைத் தவிர யாருமே மாடிக்குப் போகக்கூடாது. கமலா கூட அறையைச் சுத்தம் செய்ய, அழுக்கு உடைகளைக் கொண்டுவர என்று மட்டும் தான் போவாள்.
    கமலாவிடம் நிருஜா விசயத்தைக் கேட்கலாமா என்று நினைத்தாலும் எந்த அளவிற்கு இவர்களுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பது தெரியாது. அவள் நிச்சயமாக நெருங்கின சொந்தமாக இருக்க முடியாது!
    கிணறு தோண்டப் பூதம் கிளம்பின கதையாக மாறி விட்டால்...? வேண்டாம். பேசாமல் இருந்து விட்டாள்.
    ஒரு நாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமலாவே மாடி அறையைச் சுத்தம் செய்ய மீனாவை அனுப்பினாள். அன்று சக்திவேல் ஊரில் இல்லை.
    அறை நாகரிகப் பாணியில் குளிர் சாதனவசதி செய்யப்பட்டு பெரியதாக இருந்தன. அவளின் கைகள் வேலை செய்து கொண்டே இருந்தாலும் கண்கள் ஏதேனும் புகைப்படம் கிடைக்குமா என்று தேடிய வண்ணமாகவே இருந்தது. ஏமாற்றம் தான் கண்களுக்கு!
    கட்டிலைச் சரிசெய்து போர்வையை உதறிய பொழுது கீழே விழுந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். அது ஒரு கன்னட புத்தகம்!
    முதல் பக்கத்தைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி! அதில் அவளுடைய புகைப்படம் இருந்தது! எப்பொழுது எடுத்தது? அதுவும் பாவாடை சட்டையில்! மனத்தில் இலேசான சந்தோசம் ஒட்டிக்கொண்டது.
    மேலும் மேலும் சில பக்கங்களைத் திருப்ப மேலும் சிலபடங்கள்!
    ஆனால் இப்பொழுது மனம் சந்தோஷம் கொள்ளவில்லை. சஞ்சலம் தான் அடைந்தது. காரணம் அதில் ஒரு படம் தான் அவளுடையது. மற்ற நான்கும் வேறு ஒரு பெண்ணுடையது. படத்தில் இருந்த பெண் மிக அழகாக இருந்தாள். அனேகமாக இவள் தான் நிருஜாவாக இருக்கும். அவளே முடிவுக்கு வந்து விட்டாள்.
    அவளைப் பார்க்க இவளுக்குப் பொறாமை கூட வந்தது. பெருமூச்சு விட்டுவிட்டு அப்புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டுத் தன்னுடைய படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கீழிறங்கினாள்.
    ஒன்றைவிட நான்குக்குத் தானே மதிப்பதிகம்! நான்கு படத்தில் இருக்கும் மதிப்புத் தன்னுடைய ஒரு படத்திற்கு இருக்காது என்பது அவளது எண்ணம்.
    ஆனால் சக்திவேல் எதற்காகத் தன்னுடைய ஒரு புகைப்படத்தை வைத்திருக்கிறான் என்பதை அவள் யோசிக்கவில்லை.
    சில நேரங்களில் கவலைகள் சிந்தனை செய்ய விடுவதில்லை! தான் கண்டது தான் காட்சி என்றாகி விடுகிறது. காரணம்... தான் கண்ட காட்சியைத் தன்னுள்ளே நினைத்துப்பார்க்க வெளிச்சம் தேவையில்லை என்கிறதே மனம்!!
    இந்த விசயத்தை அவளால் எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. யாரிடம் தன் வேதனையைப் பங்கு போட்டுக்கொள்ள முடியும்?
    ஊமை கண்ட கனவுதான் தனது காதல்! முடிவு எடுத்தாள். தன் காதலை மனத்திலேயே விழுங்கி இதயத்தில் நினைவுசின்னமாக்கி விடுவது என்று!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
    
    கவலைகள் வந்தால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். காரணம் முதல் கவலை இன்னும் ஜீரணம் ஆகாமல் இருந்ததால் அடுத்தது வரும் சாதாரண விசயம் கூட மிகப் பெரிய கவலையாகத் தெரியும். பெரிய கோட்டின் பக்கத்தில் சிறிய கொடு தத்துவம் தான்.
    ஒருநாள் காலையில் அகிலாண்டேசுவரியும் சேகரின் அம்மாவும் எங்கோ சென்றுவிட்டுப் பொழுது சாய்ந்தபிறகு தான் வந்தார்கள்.
    மீனாவிற்கு இது அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் என்னவென்றால்... அன்றைய நாளில் இருந்து அந்த அம்மாள் மீனாவைப் பார்க்கும் பார்வையில் வெறுப்பு கலந்திருந்தது தான்!
    காரணம் தெரியவில்லை என்றாலும் மீனா எப்பொழுதும் போலத்தான் நடந்து கொண்டாள். ஆனால் அவர் அதை விரும்பாதது அவளுக்கு மிக நன்றாகப் புரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே...
    அவள் மனத்தில் வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வந்தது... எந்த உறவுமே உலகத்தில் நிரந்தரம் இல்லையா...? உலகமே நிரந்தரம் அற்றது என்னும் பொழுது உறவுக்குள் நிரந்தரமா...
    மீனா தன்னை நினைத்தாள். அவளுக்கு எந்த உரிமையான உறவும் நீடித்ததில்லை. அறிவழகியின் அன்பைத் தவிர! அதுவும் அறுந்து விட்டால்...?
    அன்பு அறுந்து போகுமா...? வெறுப்பு வந்தால் அறுந்து விடுவது தான் அன்பு. அப்படியானால் உண்மையான தூய்மையான அன்பு என்று எதுவும் இல்லையா...?
    இல்லை தான். தேனோ, பாலோ, மலர்களோ ஏன் நீரும் கூட தூய்மையானது இல்லை என்னும் பொழுது அழுக்கடைந்த மனித மனம் மட்டும் தூய்மையானதாக இருக்கும் என்றா எதிர்பார்க்க முடியும்...?
    காய்ந்த மனத்தில் மலர்ந்த சிரிப்பு வெறுப்பு கலந்து உதிர்ந்தது அவளின் முகத்தில். மனத்திற்கு நீர்வார்க்க எந்த மனிதனால் முடியும்? யார் தனக்காக இருக்கிறார்கள்?
    தன்னைவிட்டு ஒதுங்க நினைப்பவர்களை விட்டு நாமே ஒதுங்கி இருந்துவிட்டால்... அதனால் அவள் நாசுக்காக ஒதுங்கியே இருந்தாள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

   மறுநாள் கல்லூரியில் கலைநிகழ்ச்சி. அதில் மீனாவும் கண்மணியும் நடனம் ஆட ஒத்திகைப் பார்த்துத் தயாராக இருந்தார்கள்.
    ஒரு விசயத்தில் தயாராக இருப்பது என்பது பாதிக்கிணறு தாண்டியதைப் போன்றது என்பார்கள்...
    மீனா அதற்காகத்தான் அன்று மஞ்சள் சாயம் ஏறிப்போன தன் சராரா உடையைத் துவைத்துக் கொண்டிருந்தாள். என்ன போட்டும் என்ன கசக்கியும் அதில் இருந்த கரை போகவில்லை. எல்லாம் வாழைமட்டை சாற்றுடன் கலந்த மஞ்சள் நீர் சாயம் என்பதால் அந்த உடையில் பட்டைப் பட்டையாகவும் சில இடங்களில் திட்டுத் திட்டாகவும் கரை அழுத்தமாகத் தெரிந்தது.
   அவள் அதிக முயற்சி எடுத்துக் கசக்கினாள். ஊஹீம்... கரை போகவில்லை...! அங்கே வந்த கமலாவிடம் விசயத்தைச் சொன்னாள்.
    அவள் “மீனா... இந்த இடத்தில் நானா இருந்தா... நேரா அவருகிட்ட போயி உன்னால தான் என் டிரஸ் இப்படி ஆச்சி. எனக்கு இதே மாதிரி ஒரு டிரஸ் வாங்கிக் குடுன்னு கேட்டிருப்பேன்என்றாள்.
    இவள் உசுப்பிவிட்ட வேகம்... ஏற்கனவே எவ்வளவு துவைத்தும் கரை போகவில்லை என்ற ஆத்திரம்... மீனா சக்திவேலிடம் வந்தாள். அவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்.
    “சக்திவேல்...“ அதிகாரமாகக் கூப்பிட்டாள்!
    அவன் அதிர்ச்சியுடன் இவளை நிமிர்ந்து பார்க்க அவள் கோபமெல்லாம் கரைந்து விட்டது!
    “என்ன...?“ அவன் குரலும் சற்றுக் கடுமையாக வந்தது.
    “வந்து... வந்து... நாளைக்கி சாய்ந்தரம் காலேஜில ஒரு புரோகிராம்! நானும் கண்மணியும் சேர்ந்து ஒரு டான்சு ஆடப் போறோம். என்னோட டிரஸ்சை நீங்க மஞ்ச தண்ணி ஊத்தி சாயமாக்கிட்டீங்க. அதனால எனக்கு அதே மாதிரி ஒரு டிரெஸ் வேணும்...மென்று விழுங்கிச் சொன்னாள்.
    “டிரெஸ்சா...? அதெல்லாம் என்னால வாங்கித்தர முடியாது. படிக்க பணம் கட்டுறேன். சாப்பாடு, துணிமணி இவ்வளவு தான் என்னால முடியும். நீ கேக்கிற காஸ்ட்லி ஐட்டமெல்லாம் என்னால வாங்கித் தர முடியாது.“
    தொலைக்காட்சியில் இருந்து கண்களை எடுக்காமல் சொன்னான்.
    மீனா சற்று நேரம் நின்றிருந்தவள் நகர்ந்தாள். மனம் வலித்தது.
    தன் நிலையறிந்து தானம் கேட்பது முறையில்லை தானே... என்றது மனம்.
    வலிக்கும் மனத்திற்கு ஆறுதல் மொழிதான் மருந்து. ஆனால் அந்த மருந்தை அவளுக்குப் போட்டுவிடத்தான் யாருமில்லை. மீன் போல் அழுதாள்.

                 (தொடரும்)
   

  

10 comments :

 1. வித்தியாசமாக.... காதல் அங்கங்கே மாறுகிறது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் ஐயா.

   Delete
 2. இதற்க்கு முன்பு ஒரு முறை "வலைச்சரத்தில்" இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கு ஏற்கனவே வந்திருக்கிறேன்! இருப்பினும் பதிவுகளை வாசிக்க முயற்சிக்கவில்லை (அப்போது நேரமின்மை ஒரு காரணமாக இருந்தது) இப்போது இரண்டாம் முறையாக இங்கு வருகை.. இம்முறை இயன்ற அளவு முந்தைய பாகத்தை கட்டாயம் வாசிப்பேன்! :)

  ReplyDelete
  Replies
  1. நண்பரே... நேரமிருந்தால் நிச்சயம் வாசியுங்கள்.

   நான் எழுதிய நாவல்களில் எனக்கு பிடித்த இரண்டாவது நாவல் இது.
   நன்றாகத் தான் இருக்கும்.

   நன்றி நண்பரே.

   Delete
 3. தொடர்கதையில் நமக்கு அவ்வளவு நாட்டமில்லை என்னவென்றே தெரியாமல் 24 வது பகுதியை படிப்பதில் விருப்பமில்லை கதைசுருக்கத்தை ஒவ்வொரு பகுதிக்கு முன்பும் போடலாமே ரத்தின சுருக்கமாக ...

  ReplyDelete
  Replies
  1. பாஸ்.... எனக்குக் கூட காத்திருந்து காத்திருந்து தொடர்கதை படிக்கப் பிடிக்காது.

   இந்தக் கதையின் முதல் 20 அத்தியாயங்கள் அறிமுகத்திற்கும் ஜாலியாக படிப்பதற்கும் தான் இருக்கும்.
   இனி வரும் கதை தான் சுவரசியமானது. இருப்பினும் அடுத்தத் தொடருக்கு முன் கதைச் சுறுக்கம் போடுகிறேன். முடிந்தால் படித்து மறக்காமல் கதையைப் பற்றிய உங்களின் மன ஓட்டத்தை எழுதுங்கள்.
   மிக்க நன்றி பாஸ்.

   Delete
 4. மிகவும் அருமை நன்றி தோழரே

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழி.

   Delete
 5. Mannikkavum. Neenda naatkalukkup pin varugiren. Kadhai arumaiyagap pogiradhu. Viruviruppu kuraiyamal alagaga selgiradhu. Indhak kadhaiyai etkanave eludhi mudiththu vittergalaa? Pls visit my site.

  ReplyDelete
 6. Kadhai arumaiyagap pogiradhu. Ikkadhaiyai etkanave mulumaiyaga eludhi mudithu vittergalaa? Pls visit my site. Romba naal vara iyalavillai. Mannikkavum.

  ReplyDelete