Wednesday, 27 February 2013

போகப் போகத் தெரியும் - 41


   மழையில் நனைந்த தாமரை மலராக மீனா குளியலறையைவிட்டு வெளியில் வந்தாள். உள் பாவாடையைத் தூக்கி மார்புக்கு மேல் கட்டிக் கொண்டு கையிலிருந்தத் துண்டால் கூந்தலை முடிந்து விட்டுக் கதவில் தொங்கிக் கொண்டிருந்தப் புடவை ஜாக்கெட் மற்றம் உள்ளாடையைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடையில்லாத நிலவு வெட்கத்துடன் மேகத்தில் மறைவது போல் சக்திவேலின் அறைக்குள் நுழைந்தாள்.
   குளிர்ந்த நீரில் குளித்ததால் உடல் மட்டுமல்லாமல் மனமும் உற்சாகத்துடன் இருந்தது. ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டே கதவை மூடி தாளிட்டாள். குளிர் சாதனம் பொருத்தப்பட்ட அறை சில்லென்று காற்று பட்டதும் உடல் சிலிர்த்தது. கையிலிருந்த துணிகளைக் கட்டிலில் போட்டுவிட்டுக் கண்ணாடி முன் வந்து நின்றாள்;.
   அவளுக்கே அவளுடலை அரைக்குரை ஆடையுடன் பார்ப்பது வெட்கமாக இருந்தது. இது என்ன இது? தன் உருவத்திற்கு அருகில் இன்னொறு உருவம்..?
   சட்டென்று திரும்பினாள். புன்சிரிப்புடன் சக்திவேல் நின்று கொண்டிருந்தான்! இவரெப்படி இங்கே..? இந்த நேரத்தில்..?
   நிச்சயமாக மாடிக்கு யாரும் வரமாட்டார்கள் என்பது நன்றாகத் தெரியும். சக்திவேலுவும் இந்த நேரத்தில் நிச்சயம் வீட்டில் இருக்கமாட்டான் என்பதும் தெரியும். அதனால் தான் பூந்துகள்களாக விழும் ஷவரில் குளிக்கலாம் என்ற ஆசையில் மாடிக்கு வந்தாள்.
   ஆனால் இவனைக் கொஞ்சமும் அவள் எதிர் பார்க்கவில்லை. எப்படி எப்போது வந்திருப்பான்? அவனிடம் கேட்கப் பயம். இது அவனுடைய அறை. என்ன செய்வது? அசடாகப் பார்த்தாள்!
   அவன் கண்களில் ஆசையுடன் ஏக்கப் பார்வை உடலை ஊடுருவிப் பார்த்தது. அருகில் இருந்த புடவையைக் கையில் எடுத்தாள்.
   'நா பொடவ கட்டணும். நீங்க கொஞ்சம் வெளியில போங்க." மெதுவாகச் சொன்னாள்.
   'நா போவணுமா..?" கையிலிருந்த ஃபைலை மேசையின் மீது வைத்துவிட்டு அவளருகில் வந்தான். கண்களில் ஏக்கம். அவனின் பார்வை புரிந்தவளாக 'நா போறேன்." என்று சொல்லிவிட்டு நகரப் போனவளைச் சட்டென்று பிடித்திழுத்து மார்போடு அணைத்தான்.
   கைகள் அவளுடலைத் தழுவ.. அவனுடைய மூச்சுக்காற்று கழுத்தில் சூடாகப் பட்டது. மீனா மரம் போல் நின்றிருந்தாள். அவனது உதடுகள் இவளுதடுகளைத் தேட முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
   ஏக்கத்துடன் 'என்ன மீனா..?" என்றான்.
   'நமக்குள்ள இதெல்லாம் வேண்டாங்க."
   'நமக்குள்ள வேணாம்ன்னா எப்டி..? இதெல்லாம் வேற எங்க போயி தேட முடியும்.? " அவளை மேலும் இறுக்கினான்.
   'ஏன் இதுக்கெல்லாம் அந்த பெங்களூர்காரி நிருஜா இருக்காளே.. அவப் போதாதா உங்களுக்கு..?"
   அவள் சொன்னது தான் தாமதம். சட்டென்று நெருப்பைத் தெட்டவன் போல விலக்கினான்.
   'என்ன சொன்ன நீ..?" புரியாமல் கெட்டான்.
   'புரியாத மாதிரி நடிக்காதீங்க. எனக்கு எல்லாம் தெரியும்." அலட்சியமாகச் சொன்னாள்.
   'என்ன எல்லாம் தெரியும்.? என்னன்னு தெரிஞ்சி வச்சிருக்கிற நீ நிருஜாவ பத்தி..?"
   'சரியாத்தான் புரிஞ்சிக்கினு இருக்கேன். நீங்க அவள விரும்பி இருக்கிறீங்க. ஊருக்காக நீங்க என்னை கல்யாணம் பண்ணினாலும் உங்களால அவள மறக்க முடியல. அதனால தான் என்ன வெளியூருக்கு அனுப்பிட்டு எந்த நேரமும் அவக்கூடவே இருக்கிறீங்க. பரவாயில்ல. என்னால உங்க மனச புரிஞ்சிக்க முடியுது. நா உங்க மனசுக்குத் தடையா இருக்கமாட்டேன். நீங்க எப்படி வேணா இருங்க."
   'சீ வாய மூடு. நிருஜா என்னோட பெஸ்ட் பிரண்டு. அவளுக்குக் கல்யாணம் ஆயி ஒரு கொழந்த கூட இருக்குது."
   'கல்யாணம் ஆன பொண்ணையா உங்களால பாக்காம இருக்க முடியல?"
   அவள் அப்படி சொல்ல கன்னம் எரிந்தது அவன் விட்ட அறையில்! கன்னத்தில் கைவைத்து கொண்டாள்.
   'ஏன் உங்களுக்கு இவ்ளோ கோவம்? உண்ம தெரிஞ்சி போச்சேன்னா..?"
   'மீனா.." அவன் கத்திய வேகத்தில் அடங்கினாள்.
   'வேணா. இதுக்கு மேல பேசாத. ஏற்கனவே நா ரொம்ப நொந்து போயிருக்கிறேன். என்ன மேல மேல சீண்டாத. எனக்கு நிருஜாத்தான் வேணும்ன்னா.. உன்ன எதுக்காக இவ்வளவு எதிர்ப்பு இருந்தும் கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும்? எதுக்காக உன்ன பிரிஞ்சி கஷ்டப்படணும்?"
   'ஐயோ.. ரொம்ப கஷ்டப்பட்டீங்களே..! அதனால தான் வந்த அன்னைக்கே.. எப்போ திரும்பிப் போறன்னு கேட்டீங்களா..? இல்ல.. தோ மூனு நாளா நானும் வீட்டுல தான இருக்கறேன். ஒரு வார்த்த அன்பா பேசி இருப்பீங்களா..? ஏதோ இன்னைக்கி தற்செயலா அரகொர டிhரஸ்சுல பாத்துட்டதால எங்கிட்ட வந்தீங்க. இத வச்சி நீங்க எம்மேல அன்பா இருக்கிறீங்கன்னா நெனச்சிட முடியும்? வேண்டாங்க இந்த நடிப்பு. நானே இங்கிருந்து கூடிய சீக்கிரம் போயிடுறேன். நீங்க நிம்மதியா இருங்க."
   மீனா வார்த்தையால் நெருப்பைக் கக்கினாள். அவனுக்குச் சுட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே வெந்து போய் இருந்த உள்ளம். வேதனையில் துடித்தது.
   'வேணாம்மா.. நீ இந்த மாதிரியெல்லாம் பேசாத. ஏற்கனவே நா எழந்தது போதும். இப்போ உன்னையும் எழந்துடுவேனோன்னு பயமா இருக்குது. அதுக்குத்தான் நீ மேல படிக்கப்போன்னு சொன்னேன். வேற எந்தக் காரணமும் கெடையாது." என்றான். குரல் உடைந்து இருந்தது. அழுகையின் சாயல் குரலில். கண்கள் கலங்கிவிட்டிருந்தன!
   மீனா இது போல் அவனை எந்த நேரத்திலும் பார்த்தது கிடையாது! எதற்காக இப்படி பேசுகிறான்? எதை இழந்தான்? யாரை இழந்தான்? புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையில் கேள்வி இருந்தது. ஆனால் அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
   'இதுக்கு மேல என்ன ஏதையும் கேக்காதம்மா. உனக்குப் பதில் சொல்லுற சக்தி எனக்கு கெடையாது." சொல்லிவிட்டு அவளைத் தாண்டி நடந்தான்.
   மீனா ஒன்றும் விளங்காதவளாக நின்றிருந்தாள். அவன் பேசியதில் எதுவோ ஒன்று இருக்கிறது. என்ன..? மனது கணக்குப் போட அவசர அவசரமாக ஆடையை உடுத்திக் கொண்டு கீழிறங்கி வந்தாள்.
   சோபாவில் சக்திவேல் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தான். அவனிடம் வந்தவள் அதிகாரமாகக் கேட்டாள். 'சொல்லுங்க..? என்ன நடந்துச்சி..? எங்கிட்ட எதையும் மறைக்காதீங்க."
   நிமிர்ந்தவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவளுக்கு இதயம் வேகமாக அடித்து கொண்டது. ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது. என்ன அது?
   சேகரிடம் வந்தாள். 'என்ன நடந்துச்சி..?" அழுத்தமாகக் கேட்டாள்.
   'அது வந்து மீனா.." தயங்கினான். எச்சிலை கூட்டி விழுங்கினான்.
   'சொல்லு"
   'நம்ம மாதவனையும் சரவணனையும் தேனப்பன் ஆளுங்க அடிச்சி.. அடிச்சி.."
   'அடிச்சி.."
   'சாகடிச்சிட்டாங்க மீனா.." அழுகையை அடக்க வாயில் கையை வைத்து கொண்டான்.
   'சாகடிச்சிட்டாங்களா..?" மீனா உடலில் ஓடிய இரத்தம் முழுவதும் உச்சந் தலைக்கு ஏற..  மயங்கிச் சரிந்தாள்.

                            (தொடரும்)

2 comments :

  1. அருமை. படிக்கப் படிக்க காட்சிகள் கண் முன் விரிகின்றன.

    ReplyDelete
  2. பாவம் சக்திவேல்.விறுவிறுப்பு அருமை.
    தொடருங்கள்

    ReplyDelete