நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல்
சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என்ற சந்தேகத்தில் மேகங்களில்
மறைந்தான்.
மீனா
பட்டுப்புடவை சரசரக்கத் தங்க நகைகள் ஜொலிஜொலிக்கப் பலவித பூக்களைத் தலை கொள்ள
முடியாத அளவுக்குச் சுமந்து கொண்டு துலக்கிவைத்த குத்துவிளக்காகப் பிரகாசித்தாள்.
சுமங்கலி பெண்கள் அவளுக்கு தாலிக்கயிற்றை மாற்றித் தங்கச் சரடு போட்டு
விட்டார்கள்.
விருந்து சமைக்கும்
மனம் ஊரெங்கும் பரவி இருந்தது. சக்திவேல் அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல்
வழியாகக் கூடத்தில் தோழிகளுடன் அமர்ந்து கொண்டிருந்த மீனாவை அடிக்கடி பார்த்துக்
கொண்டிருந்தான். அவன் கண்களில் ஆசையுடன் கவலையும் கலந்திருந்தது.
'எதுக்கு
இனிமே இப்டி திருட்டுத்தனமா பாக்கணும்? நேரா போய்ப் பேச வேண்டியது தான..?" மாதவன் சொல்லச் சக்திவேல்
சிரித்துக் கொண்டான். மாதவனே எழுந்து மீனாவிடம் வந்தான்.
'மீனா..
சக்திவேல் அண்ணன் ஒங்கூடக் கொஞ்சம் பேசணுமாம். வா.." என்றான்.
மீனா
தோழிகள் கேலியாகப் பார்த்துச் சிரிக்கவும் அதைப் பெரிசு படுத்தாமல் எழுந்து
வந்தாள். வெற்றிலையின் காம்பைக் கிள்ளி ஈரத்தை புடவையில் தேய்த்துக் கொண்டே
அகிலாண்டேசுவரியும் இவள் போவதைப் பார்த்தாள்.
'கூப்டீங்களா..?"
'ஆமா.
உங்கூடக் கொஞ்சம் பேசணும். சாப்பாட்டு வேல முடிஞ்சதும் மாடிக்கு வா."
என்றான்.
'பேசணுமா..?" அவள் மெதுவாகக் கேட்க அவன்
தலையாட்டினான். திரும்பி மாமியாரைப் பார்த்தாள். அவர் வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத்
தடவிக் கொண்டிருந்தாள்.
'இந்தாங்க..
உங்க புள்ள எங்கிட்ட எதுவோ பேசணுமாம். என்ன மா..டி." அவள் சத்தமாகச் சொல்லி
முடிப்பதற்குள் சக்திவேல் அவள் வாயில் கை வைத்து அழுத்தி மூடினான். மாதவன் தலையில்
கையை வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.
மாமியார்
எழுந்து வந்தார்.
'இன்னாப்பா
சக்தி.. இந்த அழகிகிட்ட பேசணுமா..? பேசேன். யார் வேணான்னது. மாடிக்கி கூட்டிக்கினு போய்ப்
பேசு. தோட்டத்துக்கு இட்டுக்கினு போய்ப் பேசு. நம்ம ஊரு கோயிலுக்குக் கூட்டிக்கினு
போ. ஒன்ன யாரு தடுக்கறது? ஆனா பேச்சி மட்டும் தான்.
மத்ததெல்லாம் அப்பறம் தான்." என்றாள் வாயில் வெற்றிலையை மென்று கொண்டே..
மீனாவைச்
சக்திவேல் சிரித்துக் கொண்டே பார்க்க அவள் குனிந்தவள் நிமிரவேயில்லை.
'ஆசயா
கூட்டதுக்கு.. ஊர கூட்டுறாளாக்கும்." மருமகளின் கன்னத்தில் இலேசாகக்
குத்தினாள்.
'அம்மா..
நீங்க வெற வெளையாடாதீங்க. அவ படிக்கறதுக்கு வெளிநாடு ஏதாவது போறாளா..? இல்ல உள்நாட்டுலயே
படிக்கிறாளா..ன்னு கெக்கறதுக்குத்தான் கூட்டேன்." என்றான் சாதாரணமாக.
'என்ன..?"
மீனா நிமிர்ந்து
பார்த்தாள்.
'ஆமா மீனா..
உம்படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷம் இருக்குதே.. இனிமேல நீ இங்க எங்கையும்
படிக்க முடியாது. பேசாம தூரமா போனத்தான் நல்லது. தேனப்பன் சாதாரண ஆள் கெடையாது.
அவங்கிட்ட நீ தனியா ஆப்ட.. உன்ன என்ன வெணுமின்னாலும் பண்ணுவான். நீ இப்போ கண்கணாம
இருந்தா கொஞ்சம் கொஞ்சமா கோவம் அடங்கும். நம்ம பசங்களுக்கும் படிப்பு பிரச்சன
இல்லாம முடியும்." என்றான். மீனாவின் முகத்தைப் பார்க்காமலேயே.
'முடியாது.
நா போவ மாட்டேன். எனக்கு இப்போத்தான் புதுசுபுதுசா ஒறவெல்லாம் கெடச்சிது. இவங்கள
எல்லாம் உட்டுட்டு நா போவ மாட்டன். தேனப்பன் என்ன என்னவேணா பண்ணட்டும். நா
உங்களயெல்லாம் உட்டுட்டு போவ மாட்டேன்." அழுவாதக் குறையாகச் சொன்னாள்.
'வேணாம்
மீனா.. புடிவாதம் புடிக்காத. நீ இங்க இருந்தா பிரச்சன பெரிசாகுமே தவர கொறையாது.
புரிஞ்சிக்கோ. எங்களுக்கு மட்டும் உன்ன பிரிஞ்சிருக்கணும்ன்னு ஆசையாவா இருக்கு..?
உன்னோட பிரண்சும்
இதத்தான் சொல்லுறாங்க."
நிமிர்ந்து
அவர்களைப் பார்த்தாள். அவர்கள் எதுவும் பதில் பேசவில்லை. மௌனம் சம்மதமா..? சில நேரங்களில் இல்லை
என்பதை சொல்வதற்குப் பயந்து கூட மௌனமாக இருக்கிறார்களே..!
'ஆமாம்பா..
இவள அதுமாதிரி எங்கையாவது அனுப்பு. நானும் ரெண்டு வரஷத்துக்கு பயமில்லாம
இருப்பேன்."
இப்படி
சொன்ன அகிலாண்டேசுவரியை முறைத்தாள். அவரின் கவலை அவருக்கு!
'சொல்லுமா..
எங்க போற..?" சக்திவேல் அவசரப்பட்டான்.
'ம்..
செத்தப்பிறகு எந்தச் சுடுகாட்டுல எரிச்சா பொணத்துக்கு தெரியவா போவுது..? இல்ல வலிக்கத்தான்
போவுதா..? இது
உங்க விருப்பம் தானே.. எது சரியோ அது மாதிரி செய்யிங்க. எனக்குச் சொந்த பந்தங்களோட
இருக்கற பாக்கியமே இல்ல போல."
கண்ணீருடன்
உள்ளே போனவளை மற்றவர்கள் கவலையுடன் பார்த்தார்கள்.
நாளையச்
சந்தோசத்துக்காக இன்றைய இன்பங்களை இழப்பது சரியா..? காயைப் பறித்து உண்பதைவிடக் கனிந்தபின் சுவைப்பது இன்பம்
தானே!
²²² ²²² ²²²
²²² ²²² ²²²
²²²
இந்தியாவின் முகத்தில் பொட்டு வைத்தது போல் தலைநகர் டெல்லி!
எவ்வளவுப்
பெரிய நெடுஞ்சாலைகள். எத்தனைப் பெரிய உயர்ந்த மாடி கட்டிடங்கள். இந்தியா கேட்.
பாராளுமன்றம். வெள்ளை மாளிகை. உச்ச நீதி மன்றம். இன்னும் எத்தனை எத்தனை பெரிய
பெரிய விசயங்கள் உள்ளன!
எத்தனை
முறை சினிமாவிலும் தொலைக் காட்சியிலும் பார்த்து ரசித்திருக்கிறாள்! ஆனால்
இங்கிருந்த இந்த ஒன்னரை வருடத்தில்.. ஒரு முறைக் கூட இவள் நேரில் சென்று
பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆசையும் வந்ததில்லை.
ஆவல் கொண்ட
மனம் தான் ஏங்கும்! மீனாவிற்கு ஏக்கம் இருந்தது உண்மை தான். ஆனால் அது அன்புக்காக
ஏங்கிய ஏக்கம்! தன்னைக் காப்பாற்ற அடுத்தவருக்குத் துன்பம் வந்துவிடக் கூடாதே..
என்ற எண்ணத்தில் தலையசைத்ததால் அடுத்த இரண்டாம் நாளே யாருக்கும் தெரியாமல்
ரகசியமாக அவசரமாக இரயில் ஏற்றிவிட்டு கிளம்பும் போது திருப்தியுடன் கையசைத்தான்
சக்திவேல்.
இறங்கியதும் ஆஸ்டலிலிருந்தே டாக்சி வந்திருந்தது. வார்டன் அன்புடன் அவளை
அழைத்துக் கொண்டு போய் அவள் அறையைக் காட்ட.. பஞ்சாப் கல்கத்தாவிலிருந்து வந்த
இரண்டு தோழிகளுடன் சேர்ந்திருக்கும் வாய்ப்பு!
மொழியும்
உடையும் மூவருக்கும் வேறுபட்டாலும் அன்பு கண்களில் இருந்தும் உணர்ச்சி
உள்ளத்திலிருந்தும் உண்மையாக வெளிபட்டது.
பல மொழியாளர்களின்
உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள ஆங்கிலம் பயன் பட்டது. ஆங்கிலம் அயலவருக்குச்
சொந்தமானது தான்! ஆனால் இந்தியாவில் அதிய நாட்கள் தங்கிவிட்ட விருந்தாளியாதலால்
மற்ற மொழிகளுடன் நட்புறவு கொண்டுவிட்டது.
நல்ல
எண்ணங்களுடன் வளர்ந்துவிட்ட நட்பைப் பிரிக்க முடியாது. ஆனால் குடும்பத்தில் உறவு
முக்கியமா நட்பு முக்கியமா..? என்ற நிலை வரும் போது.. ஒதுங்கிக் கொண்டு வெளி ஆதரவு
கொடுக்கப் போவது யார்..?
பஞ்சாப்
அர்சனா! காதல் ததும்பும் பார்வையுடன் இருக்கும் இடத்தில் உடலை வைத்துவிட்டு
நினைவலையாலே மேகத்தில் மிதப்பவள். கனவில் நிச்சயம் அவளின் காதலன் நரேஷ{ம் இருப்பான். சில
நேரங்களில் அவனை நினைத்து கொண்டே தூக்கத்தில் மீனாவைக் கட்டிப்பிடிப்பதும் உண்டு.
மீனா
தலையில் அடித்து கொண்டாலும் அவளின் எண்ணத்தை ரசனையுடன் ரசித்துச் சிரித்துக்
கொள்வாள்.
ஆனால்
கல்கத்தாவில் இருந்து வந்த ஷார்மி இவளுக்கு எதிர் பதம்! அர்சனாவின் செய்கைகள்
எதுவும் பிடிக்காததால் ஒரு முறை அவளைக் கன்னத்தில் அறைந்துவிட்டாள். அதிலிருந்து
அர்ச்சனா ஷார்மி பக்கம் திரும்புவதே இல்லை!
ஷார்மியுடைய கவனம் முழுவதும் படிப்பது.. படிப்பது.. படிப்பது. இது மட்டும் தான்! தனது தாய் காது
கேக்காத வாய் பேசாத ஊனம் உள்ளவள். அவளை எந்தக் காமுகனோ கற்பழித்ததால் வந்து
பிறந்துவிட்ட சமுதாயத்தின் பார்வையில் விழுந்த கரை என்று தன்னை நொந்து கொள்வாள்.
தனது
வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றோர்க்கான இல்லத்தில் சேர்ந்து அவர்களுக்காக உழைக்க
வேண்டும் என்பதே அவளுடைய இலட்சியம்!
மிகச்
சிறந்த இலட்சியமாகப் பட்டது மீனாவிற்கு. மனிதன் அடுத்தவனுக்காக வாழும் பொழுது
தெய்வமாகி விடுகிறான். இப்படியான மனிதர்கள் பிறக்கிறார்களா..? அல்லது உருவாக்கப்
படுகிறார்களா..?
ஷார்மி தன்
தாயைக் கற்பழித்ததால் சமுதாயத்தின் மீது விழுந்த அவநம்பிக்கையால் தொண்டு செய்ய
வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாள். மீனா.. தான் ஓர் அனாதை என்பதால் நமக்கு
கிடைக்காத அன்பை நாமாவது பிறருக்குக் கொடுப்போமே என்ற எண்ணத்தில் சேவை செய்ய
வேண்டும் என்று நினைக்கிறாள்.
அப்படியானால்.. உருவாக்கப் படுவது தான் சமூகத்தில் அனைத்துமே!
தனக்குச்
சக்திவேல் கிடைத்தது போல் ஷார்மிக்கும் நல்ல வாழ்க்கைத் துணைவர்
கிடைத்துவிட்டால்.. சேவையாவது? தொண்டாவது? கணவனுக்குத் தொண்டு செய்வதே மனைவியின் சேவை என வள்ளுவர்
வழியில் போக வேண்டியது தான்!
தானே
யோசித்துத் தானே சிரித்துக் கொள்வாள் மீனா! ஆனால் அவளுக்குச் சிரிப்பு என்பது
உதட்டளவில் வருவது தான்! உள்ளத்திலிருந்து வந்து அதிக நாட்களாகி விட்டது.
துவக்கத்தில் அன்றாடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியச் சக்திவேல்..
பிறகு ஞாயற்றுக் கிழமைகளில் மட்டும் பேசினான். அதிலும் பேசத் துவங்கினால்.. போனை
வைக்கவே மனமில்லாமல் பேசுவான். ஆஸ்டல் போன் என்பதால் மற்றவர்கள் பேச
காத்திருப்பார்கள். அவளுக்கே சற்றுக் கூச்சமாக இருக்கும்.
அப்படி
பேசியவன் தான்.. அதன் பிறகு மாதம் ஒரு முறை! அதிலும் நல்லா இருக்கியா..? நல்லா படிக்கிறியா..?
என்ற இரண்டு மூன்று
கேள்விகள் தான். இவளே மற்றவர்களைப் பற்றிக் கேட்டாலும்.. ஆமாம் இல்லை என்ற ஒற்றைச்
சொற்களே பதிலாக வரும்.
பிறகெப்படி
சிரிப்பு வரும்? முதலில் அவன் சொன்னதைப் போல படிப்பை முடித்துவிட வேண்டும். அதில் மட்டுமே
கவனத்தைச் செலுத்த வேண்டும். இந்த எண்ணம் மனத்தில் பச்சைக் குத்திக் கொண்டதால்..
படித்தாள்.. படித்தாள்.
இதோ
இன்றுடன் தேர்வு முடிந்துவிட்டது. தேர்வின் முடிவு அவளுக்கே தெரியும். நிச்சயம்
நல்ல மதிப்பென்கள்; கிடைக்கும். இனி இந்த ஊரில் அவளுக்கென்ன வேலை..?
பெட்டியைக்
கட்டிக்கொண்டு தோழிகளிடம் விடைபெற்று கொண்டு உற்சாகத்துடன் ஊர் போய் சேர இரயில்
ஏறினாள். ஊரே உற்சாகமாகத் தன்னை வரவேற்கும்! சக்திவேல் தன்னை கண்களாலேயே
வரவேற்பான்..!
திறந்த
விழிகளில் கனவுகள் மிதக்க கற்பனை வீதியில் நடந்து சென்றாள்.
உண்மைப்
பாதை கல்லும் முள்ளும் மட்டும் அல்லாமல் நெருப்புத் துண்டுகளும் சிதறிக்
கிடக்கிறது என்றறியாமல் சென்றாள்.
(தொடரும்)
அருமையான் கதை ஓட்டம். ஆனால் இவ்வளவு சஸ்பென்ஸ் தேவையா.. தாங்கவே முடியல்லை.. அடுத்து.............???????????????
ReplyDelete