'தம்பீ..
மீனா நேத்துலேர்ந்து ஒன்னும் சாப்டல. தூங்கவும் இல்ல. பிரம்மபுடிச்சவ மாதிரி
உக்காந்துக்கினே இருக்குது. அப்பிடியெல்லாம் இருக்கக் கூடாதுப்பா. அழுதுட்டா கூடப்
பரவாயில்ல. எனக்குப் பயமா இருக்குதுப்பா. "
கமலா
கவலையுடன் சொன்னாள். சோகம் மனத்திலேயே தங்கி விடக் கூடாது. அது வெடித்து வெளியே
வந்துவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் அது நீருபூத்த நெருப்புத்தான்! கழன்று
கொண்டே இருந்து கொண்டு மனிதனைத் தின்றுவிடும்.
சக்திவேல்
ஒரு டம்ளரில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு மீனா இருந்த அறைக்குள்
நுழைந்தான். அவள் தரையில் அமர்ந்து கொண்டு சுவற்றை வெரிக்கப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
இரண்டு
மூன்று முறை அவளைக் கூப்பிட்டான். அவளின் காதில் விழுந்ததாகக் கூடத் தெரியவில்லை.
டம்ளரை தரையில் வைத்துவிட்டு அவள் தோளைப்பிடித்து உலுக்கினான். அவனை நிமிர்ந்து
பார்த்தாள். பார்த்து கொண்டே இருந்தவள் சட்டென்று அவன் சட்டையைப் பிடித்துக்
கொண்டாள்.
'சக்திவேல்..
சரணையும் மாதவனையும் சாகடிச்சப்போ நீ என்ன பண்ணிக்கினு இருந்த? எப்டி அவனுங்க சாகறதுக்கு
விட்ட.. சொல்லு.. சொல்லு." அவனை
உலுக்கினாள்.
சக்திவேல்
அவள் கையைச் சட்டையிலிருந்து எடுத்துவிட்டான்.
'எனக்கு
எதுவும் தெரியாதுமா. எல்லாம் முடிஞ்ச பெறகுதான் தகவல் தெரிஞ்சது. நா ஊருல இல்ல.
பெங்களூருல இருந்தேன்."
'பெங்களூருலயா..?
அந்த நிருஜா கூட
சுத்திக்கினு இருந்தியா..? ஊருல இவ்ளோ கலவரம் இருக்கறப்ப ஒனக்கு அவதான் முக்கியமா
தெரிஞ்சாளா..? அநியாயமா ரெண்டு பேர சாவடிச்சிட்டீயே.. பாவி..!"
முகத்தைப்
பொத்திக் கொண்டு அழுதாள். தேம்பித் தேம்பி அழுதாள். 'இதுக்குத்தான் என்ன அவசர அவசரமா
படிக்க அனுப்பி வச்சியா..? எனக்கு என்னோட ப்ரென்ஸ் தான் முக்கியம்ன்னு நெனச்சேனே..
அநியாயமா செத்துப் போயிட்டாங்களே..
அழுதாள். அழுதாள். அழுது கொண்டே இருந்தாள்.
தொண்டை
வரண்டுவிட்டது. கண்கள் காய்ந்து சோர்ந்தன. என்ன நடந்தது.? ஏன்? எதனால்? எதுவும் புரியவில்லை.
பகல்
பொழுதில் சேகர் வந்தான். ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு அவளருகில்
அமர்ந்தான். மீனா குடித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
'மீனா
கவலபடாத. நீ போன ரெண்டாவது மாசத்துலேயே நடந்து முடிஞ்சிபோன விசயம் இது. கிட்டதட்ட
ஒன்ற வருஷமாயிடுச்சி. நாங்க ஓரளவு மனச தேத்திக்கிட்டோம். நீயும் மனச தேத்திக்கோ.
ஆனா.. பாவம் ருக்மணி. அவளுக்கு அண்ணனும் போயிட்டான். சரணும் கெடைக்காம போயிட்டான்.
அவளுக்கு இன்னைக்கி நிச்சயதார்த்தம். நாளைக் காலையில கல்யாணம். அவள இந்தக்
கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்க ரொம்ப கஷ்ட பட்டுட்டோம். அவளும் முழு மனசா
சம்மதிக்கல. என்ன செய்யிறது. பொறந்துட்டா வாழ்ந்தாகனுமே.. மீனா.. நாம தான் இந்தக்
கல்யாணத்த நடத்தி வக்கணும். இதுநம்ம பிரண்ஷ{ப்புக்காக. எழுந்து சாட்டு கௌம்பு
மீனா.. நம்மோட துக்கம் நம்மோட போவட்டும்." சொல்லிவிட்டு போய்விட்டான்.
உச்சி
சாயும் பொழுது மாதவனின் தாய் வச்சலாவும் சரவணனின் தாய் தேவகியும் வந்தார்கள்.
தேவகிக்குச் சரவணன் ஒரே பிள்ளை! விதவை. இன்று அவனும் இல்லை. அவளைப் பார்த்ததும்
மீனா துக்கம் மேலிட அவள் மடியில் தலை சாய்ந்து அழுதாள்.
'போவுது
வுடுமா. எல்லாருக்கும் சாவு வரத்தான் போவுது. என்ன அவனுங்களுக்குக் கொஞ்சம்
சீக்கிரமா வந்துடுச்சி. வுடு. ஆறிப்போன காயத்த கீறிப் பாக்கக் கூடாது."
தேவகி
தைரியமாகப் பேசினாள். வேறு என்ன செய்யமுடியும் அவளால்? இறந்தவன் இனி வரப்போவது இல்லை.
கிடைக்காது என்று மனசுக்குத் தெளிவாகப் புரிந்தவுடன் அதை ஒதுக்கிவிடுவது
ஒருவகையில் ஆறுதல் தானே..
'மீனாம்மா..
சத்திவேலு தம்பி எந்த தப்பும் பண்ணல. அன்னைக்கி அந்தப் பொண்ணு நிருஜா
கல்யாணத்துக்குத் தான் போயிருந்துச்சி. ஆனா என்ன காரணம்ன்னே தெரியல. தேனப்பன்
ஆளுங்க இப்டி நடந்துகிட்டாங்க. போலிசு கேசுன்னு நடந்துச்சி. என்ன நடந்து என்ன
புரோஜனம்? எம்புள்ள
போயி சேந்துட்டான்."
கண்களையும்
மூக்கையும் முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
'அம்மாடி.
நீ மனச தேத்திக்கோ. கல்யாணத்துக்கு வா. எங்களுக்கும் மனசு கொஞ்சம் ஆறுதலா
இருக்கும். வந்துடுமா. மாப்ளவூட்டுக்காரங்க வந்துடுவாங்க. நா போறேன்."
இருவரும் கிளம்பிப் போனார்கள்.
ஆறிப்போன
சோறு பழைய சோறு. சாப்பிடப் பிடிக்காது. நல்லது நடக்க இருக்கக் கெட்டதையா
பேசுவார்கள்? ;கனியிருக்கக் காய் கவர்ந்தற்று ;தானே..!
அவர்களுக்கு இது பழைய விசயம். ஏற்கனவே அனலில் வெந்து கொதித்துப் பிறகு
மற்றவர்களால் ஆற்றி.. அதன் பிறகு தானாகவே ஆறிப்போன காயமாக இருக்கலாம். ஆனால் அதன்
வடு மனத்தினுள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
மீனாவிற்கு
இது.. கொதித்துக் கொண்டிருந்த பாலை அப்படியே இறக்கி அவள் இதயத்தில் கொட்டிவிட்ட
வலி. வேதனை. துடித்தாள். தன்னிடம் உடனே சொல்லவில்லையே என்ற கோபம். சொல்லி
இருந்தால் அவர்களின் முகத்தையாவது கடைசியாகப் பார்த்து இருக்கலாமே என்ற
ஏக்கம். இவை அனைத்தையும் இவ்வளவு நாட்களாக
மறைத்துவிட்ட ஆத்திரம்..
'இன்னும்
கௌம்பலையா..?" பொறுமையாகக் கேட்ட சக்திவேலிடம் எரிந்து விழுந்தாள்.
'நீங்க
போங்க. நா வரல."
'இல்லம்மா.
உன்னோட ப்ரெண்ஸ்க்காகத்தான். நீ வரணும். அப்பத்தான் எல்லாருக்குமே ஆறுதலா
இருக்கும்."
'அவனுங்களே
போயிட்டாங்க. அப்பறம் என்ன இருக்கு? எனக்கு இஷ்டமில்ல. நீங்க போங்க. நா வரல. என்னால
சந்தோஷமா இருக்கற மாதிரி நடிக்க முடியாது."
ஆத்திரத்தை
வார்த்தைகளாகத் துப்பியவள் மறுநாள் திருமணத்திற்குக் கிளம்பி வந்துவிட்டாள்.
நடிப்புத்தான் வாழ்க்கை. மற்றவர்களை மகிழ்விக்க.. நம்முடைய துக்கங்களைச்
சில நேரங்களில் புதைத்துவிட வேண்டும்.
துக்கம்
மக்கிப் போகாத குப்பையாகி மனத்தில் தங்கிவிடுகிறது. மனமே ஒரு குப்பைத் தொட்டி
தானே..! அதில் நல்லவைகளும் போடப்படும். கெட்டவைகளும் வந்த விழுந்துவிடும்.
நல்லவைகள் எளிதில் ஜுரணமாகி விடுகிறது. கெட்டவைகள் ஜுரணமும் ஆகாமல் மக்கியும்
போகாமல் தங்கிவிடுகிறதே..
மக்கிப்போகாத குப்பைகள் மனத்தைக் கவலை என்ற அழுக்கால் நாற்றமடித்துவிட
வைக்கிறது.
மீனா
துக்கத்தை மறைத்து முகத்தில் சந்தோஷத்தைப் பூசிக்; கொண்டாள். முகத்தை அரிதாரம் பூசி
மறைக்கலாம். ஆனால் உணர்ச்சிகளை மறைக்க முடியுமா..? எங்கே தன்னிடம் யாராவது வந்து
பேச்சுக் கொடுத்தால்.. முகம் காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற பயத்தால் யாரிடமும்
ஒட்டாமல் தனியாக இருந்து கொண்டாள்.
ஆனாலும்
அவள் அங்கே வந்தது மற்றவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
கோவிலில்
கல்யாணம். வீட்டில் தெருவடைக்கப் பந்தல் போடப்பட்டு விருந்து நடைபெற்றது. அங்கே
மாப்பிள்ளை வீட்டாரைத் தவிர யார் முகத்திலும் உண்மையான சந்தோஷம் இல்லை.
கல்யாணம்
முடிந்து மதிய உணவு முடிந்ததும் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டார்
வழக்கப்படி பெண்ணை அன்றே மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதாக முடிவு!
மணமகள் ருக்மணி ஒவ்வொருவரிடமும் விடைபெற்று வந்தாள். கடைசியாக மீனாவின் எதிரில்
வந்து நின்றாள்!
மீனாவிற்கு
அவளை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் போனது. ஆனால்.. நிமிர்ந்து
பார்த்ததும்.. துக்கம் வெடித்துவிட.. இரண்டு பெண்களும் கட்டிப்பிடித்து அழுத
அழுகையை அடக்க யாருமே முன் வரவில்லை.
அவர்களின்
அழுகைக்கான அர்த்தம் அனைவருக்கும் புரிந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார்
அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
'அது
ஒன்னுமில்லப்பா.. சின்னதுலேர்ந்து ஒன்னாவே வளந்த புள்ளைங்க. கல்யாணம் ஆனதும்
பிரிஞ்சி போறாளேன்னு துக்கம். பாவம் சின்ன புள்ளைங்க இல்லையா..?" கணேசனின் தாத்தா
நிலைமையைச் சமாளித்தார். கிழவரின் கண்களிலும் கண்ணீர்!
'இவ்வளவு
அன்பா இருக்கிற புள்ளைய ஊருக்குள்ளயே கட்டி வச்சியிருக்கலாமே.. எதுக்கு வெளியூர்ல
கொடுக்கணும்..?" மாப்பிள்ளையில் அப்பா நல்ல எண்ணத்தில் தான் சொன்னார்.
'என்னப்பா
செய்ய முடியும்? யாராருக்கு என்னன்னு அவங்கவங்க தலையில எழுதி இருக்கே.. அத நம்மால மாத்தவா
முடியும்..?"
'நீங்க சொல்றதும்
வாஸ்த்தவம் தான். என்ன? எல்லாரும் வானத்துக்கு கீழ தான இருக்கோம். நெனச்சா ரெண்டு
மணிநேர பிரயாணம் தான். வந்து வந்து பாத்துட்டுப் போனா போவுது. கௌம்பும்மா. நல்ல
நேரம் போயிடப் போவுது.."
மீனா
ருக்மணியின் கண்களைத் துடைத்துவிட்டாள். இருக்கும் நிலையைப் புரிந்து கொண்டாள்.
மாப்பிள்ளை என்ன செய்வது என்றறியாமல் நின்றிருந்தான். சிறந்த உழைப்பாளி என்பதைக்
கட்டான உடல் தெரிவித்தது. ருக்மணியின் கையைப்பிடித்து அவனருகில் அழைத்துக் கொண்டு
போனாள்.
அவன்
மீனாவைப் பார்த்ததும் சினேகிதமாகச் சிரித்தான். இவள் சிரிப்பைக் கண்களில்
வரவழித்தாள்.
'இந்தாங்க
உங்க பொண்டாட்டி. இவ அன்புக்கு மட்டும் தான் கட்டுப்படுவா. இனிமேல நீங்க உங்க
அன்பால இவள கட்டிப் போட்டு வச்சுக்கங்க." அவள் கையைப்பிடித்து அவன் கையில்
கொடுத்தாள்.
அவன்
பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டே தலையாட்டினான். ருக்மணி கடைசியாகப்
பேரூந்துவில் ஏறப் புறப்பட்டது. அனைவரும் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள்.
மீனா
கோவில் குளத்தை நோக்கி நடந்தாள்.
(தொடரும்)
படிக்கப் படிக்க மனம் கனக்கிறது
ReplyDelete