Sunday, 3 February 2013

போகப் போகத் தெரியும் - 36

   கதிரவன் தன் கண்ணை மூடி அதிக நேரம் ஆகியிருக்காது. இருந்த வெளிச்சத்தில் ஒருவர் முகம் மற்றவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.
   பெட்டர்மாஸ் விளக்கொளியில் பஞ்சாயத்துக் கூடி இருந்தது. மீனா கைகளை முன் புறமாகக் கட்டி கொண்டு வெள்ளைப்புடவையில்.. நீதிதேவதை குற்றவாளிக் கூண்டில் நிற்பது போல் நின்றிருந்தாள்.
   அவளைச் சுற்றி வேலை செய்து ஓய்ந்து போன அழுக்கடைந்த மனிதர்கள்! சில பெரிய மனிதர்கள் வெள்ளை வேட்டிச் சட்டையில் பஞ்சாயத்து மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
   பஞ்சாயத்து கூடி இருந்த இந்தக் கொஞ்ச நேரத்திற் கெல்லாம் இவ்வளவு பேர் சேர்ந்துவிட்டது.. வம்பு எங்கே கிடைக்கும் எனநினைத்து அழுக்கு மனம் படைத்து இருப்பதாலா..?
   டாடா சுமோவில் வந்திறங்கினான் வெற்றிவேல். மீனாவை அந்த இடத்தில் பார்த்ததும் அவன் கண்கள் தாமாகவே அதிர்ச்சியில் விரிந்தன. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
   'என்ன நடந்துச்சி..?" கோபமாகக் கேட்டான்.
   'இந்த பொண்ணும் இன்னொருத்தியும் வெளியூர்லர்ந்து வந்து நம்ம ஊருல அவுசாரம் பண்ணுதுங்க. இன்னிக்கி தோட்டத்து வூட்டுல கையுங்களவுமா மாட்டிகிட்டா. இன்னொறுத்தி தப்பிச்சி ஓடிட்டா."
   அவளைப் பிடித்து வந்தப் பெண்களில் ஒருத்தி நேரில் பார்த்தது போல் கத்திச் சொன்னாள்.
   'உண்மையா..?" மீனாவை வெற்றிவேல் கேட்க அவள் அவனைப் பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கிவிடுவது போல் பார்த்தாள்!
   'அவ எப்டி வாயத்தொறந்து சொல்லுவா..? இந்த விசயம் ரொம்பநாளா நம்மூர்ல நடக்குது." இன்னொருத்தியின் சாட்சி இது.
   மீனாவைப் பார்த்தான். கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தவள் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. 'தோ பாருமா. நீ வாயத்தொறந்து பேசாத வரைக்கும்.. உண்மைய ஒத்துக்கினேன்னு தான் அர்த்தம்" என்றான் வெற்றிவேல். குரலில் இலேசான அனுதாபம் தெரிந்தது.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
 
   சக்திவேலின் கைபோன் பாடலுடன் அழைக்க எடுத்தான். மறுமுனையில் ஒரு பெண் குரல்.
   'சத்திவேலா..?"
   'ஆமா. சொல்லுங்க."
   'சத்திவேல்.. ஓன்வூர்க்கார பொண்ணு ஒருத்திய ஓடத்தூருல விபச்சாரம் பண்ணினதா குற்றஞ்சொல்லி பஞ்சாயத்தல நிக்க வச்சி கேள்வி கேக்கராங்க. உண்ம என்னன்னு தெரியல. வச்சிற்றேன்."
   இணைப்பு உடனே அறுந்தது. சக்திவேல் சற்று யோசித்தவன்.. கைபோனில் வெற்றிவேலின் எண்களை அழுத்தினான்.

   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   அலறியக் கைபோனை எடுத்து பார்த்து அதில் சக்திவேல் பெயரைப் பார்த்ததும் மீனாவை அலட்ச்சியமாகப் பார்த்தபடி பட்டனை அழுத்தி பேசத் துவங்கினான் வெற்றிவேல்.
   'ஏன்டா..? உங்க ஊருல ஆம்பளைங்களே இல்லியா..? ஒன்வூர்க்கார பொண்ணுங்க ரெண்டுபேர்.. இங்க வந்து அவுசாரம பண்ணி மாட்டிக்கிட்டாளுங்க. மாட்டிக்கிட்டவ ஒருத்தி. இன்னொருத்தி தப்பிச்சி ஓடிட்டா. மாட்டிகிட்டவ வாயத்தொறந்து பேசாமலேயே உண்மைய ஒத்துக்கிட்டா. அவகிட்டு பேசுறீயா..? இந்தா பேசு.." மீனாவிடம் போனை நீட்டினான்.
   அவளும் உடனே வாங்கிக் கொண்டாள். வெற்றிவேல் பேசினதிலிருந்தே அது சக்திவேலுவிடம் தான் என்பதைப் புரிந்து கொண்டு விட்டிருந்தாள்.
   'அலோ.." என்றாள். அவன் இந்த ஒரு வார்த்தையிலேயே கண்டுபிடித்து விட்டான்.
   'மீனாவா..? நீ எப்படி அங்க..? என்ன ஆச்சி?" குரலில் அதிர்ச்சி இருந்தாலும் காரியத்தில் கண்ணாகக் கேட்டான்.
   'சக்திவேல் சந்தர்ப்பம் சூழ்நில என்ன இங்க நிக்கவச்சிடுச்சி. ஆனா இதுக்கும் உங்க ஊருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீங்க எந்த காரணம் கொண்டும் இங்க வரக்கூடாது." என்றாள் அழுத்தமாக.
   அவன் கோபத்துடன் யோசித்திருப்பான். கோபமூச்சுக் காற்றின் உஷ்ணம் தெரியாவிட்டாலும் சத்தம் கேட்டது. 'சரி நா ஒனக்காக வரல. இன்னொறு பொண்ணு யாரு..?" கேட்டான்.
   'சொல்ல மாட்டேன்."
   'அப்படியே இரு. எங்கூருக்கார பொண்ணுக்கு ஏதாவது அவமானம்ன்னு வந்துச்சி.. உன்னைய சும்மாவுட மாட்டேன்." என்றான் கோபமாக.
   'சரி" இணைப்பைத் துண்டித்துவிட்டு வெற்றிவேலிடம் போனை நீட்டினாள். அவன் கோபமாக முறைத்து கொண்டே வாங்கினான்.
   'ஏய் மீனா.. மரியாதையா உண்மைய சொல்லு. யாரு அந்த பொண்ணு? எதுக்காக தோட்டத்து வீட்டுக்கு வந்தீக..?"
   அவன் அவளை மீனா என்றதும் கூட்டத்தில் சலசலப்பு.
   'வெற்றிவேல்.. அந்த பொண்ணு யார்ன்னு நா சொன்னா.. அவளுக்குச் சரியான நியாயம் கெடைக்குமா..? நீ நியாயமா.. நடந்துக்குவியா..?"
   'தோ பாரும்மா.. மரியாதையா பேசு."
   வெற்றிவேலின் பெயரைச் சொன்னதற்காக ஒரு பெரியவர் கோபப்பட்டார். அவரைக் கண்களால் அடக்கிய வெற்றிவேல் மீனாவைப் பார்த்தான்.
   'நியாயமா நடந்துக்கிறேன். யார்ன்னு மொதல்ல சொல்லு." என்றான்.
   'ஓன்தம்பி லட்சுமணன கூப்பிடு. அவன் யார விரும்புறானோ.. அந்த பொண்ணு தான் அவ. அவ யாருன்னு அவனையே கேளு." கையைக் கட்டிக் கொண்டு அழுத்தமாகச் சொன்னாள்.
   சற்று நேரத்திற்கெல்லாம் லட்சுமணன் வந்து விட்டான். கேள்விகள் கேட்கப் பட்டன.
   'மீனா சொன்னது உண்மத்தான். நா அந்தப் பொண்ணத்தான் விரும்பறன். ஊர் பிரச்சனையில நாங்க சேரமுடியாம போயிடுச்சி. அவ புருஷன் செத்தபெறகு நாங்க தனியா சந்திக்கறது தான். ஆனா மீனா அங்க எப்போ எதுக்கு வந்துச்சின்னு தெரியாது." என்றான் தெளிவாக.
   'இப்போ என்னப்பண்ணப் போற வெற்றிவேல்? உன்னோட ஊரு. ஒன்னோட மனசுக்கு புடிச்ச பொண்ணு மட்டும் தான் ஒனக்கு முக்கியம். அதுக்காக எதுன்னாலும் செய்வ. ஆனா உன்னோட தம்பி. ஊருக்காக காதலிச்ச பொண்ண யாருக்கும் தெரியாம சந்திச்சிக்கினு தான் வாழ்ணுமா..? அவனுக்குன்னு மனசு இல்லயா..? ஒன்னோட சந்தோஷத்த மட்டும் பாக்காத. மத்தவங்களோட நியாயமான ஆசகளையும் நிறைவேத்தரவன் தான் உண்மையான தலைவனா இருக்க முடியும்." என்றாள் கோபமாக.
   'அப்டி நெனச்சிதான் உன்ன வேந்தனுக்கு கட்டிவச்சேன். உன்னால அவன கண்டிப்பா திருத்தமுடிம்ன்னு நெனச்சேன். முடிஞ்சிதா..?" குரலில் கவலையின் சாயல்! தனாடாவிட்டாலும் தன் சதையாடும் இல்லையா..?
   மீனா உடனே பதில் சொல்லவில்லை என்றாலும் சற்றுப் பொருத்துச் சொன்னாள். 'அவர நா கொஞ்சமும் விரும்பல." என்று.
   வெற்றிவேல் ஒரு பெருமூச்சுடன் யோசித்தான். அவனுக்குத் தெரியும் லட்சுமணன் எந்தப் பெண்ணை விரும்புகிறான் என்று. சக்திவேலுடன் தொடர்பு கொண்டான்.
   'சக்திவேல்.. உன்னோட ஊருல சதாசிவத்தோட பொண்ணு ராதிகாவ நாளைக்கி காலையில கூட்டிக்கினு வா. அவளுக்கும் எந்தம்பி லட்சுமணனுக்கும் மொதோ முகூர்த்தத்துல கல்யாணம்." என்றான்.
   அவன் கேள்வி எதுவும் கேட்காமல் 'சரி" என்றதும் போனை நிறுத்திவிட்டு மீனாவைப் பார்த்தான். மீனா 'தேங்ஸ் வெற்றிவேல்" என்றாள். தான் கொண்டு வந்தப் பையிலிருந்து பிளாஷ்டிக் பட்டைவாரை அட்டையுடன் எடுத்து வெற்றிவேலிடம் நீட்டினாள்.
   'இத டாக்டர் உங்க அப்பாகிட்ட குடுக்கச் சொன்னாரு. இதுக்காகத் தான் நா இந்த ஊருக்கு வந்தேன். அதுக்குள்ள இங்க இன்னான்னமோ நடந்து போச்சி. இத ஒங்க அப்பாகிட்ட குடுத்துடுங்க."
   பெட்டியை வெற்றிவேலிடம் நீட்டவும்.. தேனப்பனின் ஆட்கள் திபுதிபுவென ஓடிவரவும் சரியாக இருந்தது. அவர்கள் வந்த வேகத்தில் அவளைத் தாக்கியிருப்பார்கள். ஆனால் வெற்றிவேல் கையைக் காட்டி கண்களால் வேண்டாம் என்றுச் சொல்லவும் தயங்கி நின்றுவிட்டார்கள்!
   ஆனால் தேனப்பன்..?
   ஒரு கையால் கட்டையை ஊன்றிக் கொண்டு வந்தவன்.. மீனாவை ஓங்கி அறைந்தான். அவன் அறைந்த வேகத்தில் மீனா தடுமாறி கீழேவிழ.. நெற்றி எதிலோ பட்டு இரத்தம் கசிய ஆரம்பித்தது. வலி சுளீர் என்று வலித்தது.
   அதற்குள் தேனப்பனை நிறையப் பேர்கள் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் அவன் ஒரு கை ஒரு காலை வைத்துக் கொண்டே திமிறி மீனாவின் முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான். 'ஒனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா.. நீ இந்த ஊருக்கு வந்திருப்ப. உன்ன சும்மாவுட மாட்டேன்டீ.."
   கத்திக் கொண்டே.. திரும்பவும் அவளை அறைய ஓங்கியவனின் கை நின்று விட்டது. அப்பொழுது தான் அவன் அவளின் முகத்தைப் பார்த்தான். அதிர்ச்சியில் முகம் கருகியது.
   'நீயா மீனா..? சீ.. ஒந்தயவுலயா நா இவ்ளோ நாளா இருந்தன்? சே என்ன பாபம் பண்ணினேனோ..? டேய் பசங்களா இவள கண்டந்துண்டமா வெட்டி போடுங்கடா.." தொண்டைக் கிழியக் கத்தினான்.
   அவர்கள் வெற்றிவேலுவின் முகத்தைப் பார்த்து கொண்டு தயங்கி நிற்க.. வெற்றிவேல் தேனப்பனின் எதிரில் வந்து நின்றான்!
   தந்தை என்ற மதிப்பை மனத்தில் வைத்திருந்தாலும்.. தன் தாய் இறந்த இரண்டாவது மாதத்திலேயே சுகுணாவதியை அவர் திருமணம் செய்து கொண்டதிலிருந்தே அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டவன்! ஒரே கிராமத்தில் வாழ்ந்தாலும் தனித்தனி வீட்டில் வசித்தவர்கள்!
   சிறுவயதிலிருந்தே கோபத்துடன் இருந்த மகன்.. தன் எதிரில்.. இராமனைக் கண்ட தசரதனாக.. தேனப்பன்!
   'நாளைக்காலையில லட்சுமணனுக்கும் ஆத்தூர் ராதிகாவுக்கும் கல்யாணம் வச்சிறுக்கேன். அது முடியட்டும். அப்புறமா இவள பாத்துக்கலாம். டேய் இவள புடிச்சி மரத்துல கட்டுங்கடா.." கட்டளையிட்டான்.
   மகனின் வார்த்தைக்குச் செவிமடுத்தான் தேனப்பன். இருந்தாலும் தன் மகனுக்கு ஆத்தூர் பொண்ணா..? மனம் ஒப்பாமல் லட்சுமணனை முறைத்தான். அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
   'அவன் விருப்பப்பட்ட பொண்ணு தான் அவ. கல்யாணம் ஆயிட்டா நம்மஊருல வந்து நம்ம ஊருக்காரியா இருக்கவேண்டியது தான..? நீங்க போங்க. நா பாத்துக்கறேன்." வெற்றிவேல் தணிவாகச் சொல்ல..
   'எப்டியாவது போங்க. அந்த ஊருல எல்லாருமே எனக்கு எதிரித்தான். ஒறவாட போறீயா..? போ. ஆனா நா அந்த மீனாவ சாவடிக்காம வுடமாட்டேன்." கத்திக் கொண்டே போய்விட்டான்.
   மழை பெய்ந்துவிட்டது போல் இருந்தது. 'வெற்றிவேல்.. நா எங்கையும் போவ மாட்டேன். என்ன எதுக்காக கட்டிபோடணும்? அவுத்துவுட சொல்லு."
   மீனா சொல்ல வெற்றிவேலைக் கேட்காமலேயே ஒருவன் அவளின் கட்டை அவிழ்த்து விட்டான். வெற்றிவேல் சிரித்துக் கொண்டான்.
   'லட்சுமணா.. இவள எங்கையாவது ஒரு ரூமுல தள்ளி அடச்சிவையீ.."
   வெற்றிவேல் உத்தரவிட லட்சுமணன் அவளைப் பார்க்க அவள் அவனுடன் சென்றாள்.
   ஒரு வீட்டில் நுழைந்து.. ஓர் அறையைத்திறந்து.. 'உள்ளே போ" என்றான் சத்தமாக. 'உள்ளப் போனதும் கதவ தாப்பா போட்டுக்கோ" என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படி!
   மீனாவும் அதன் படி செய்து.. மனத்தில் இனம் புரியாத பயத்துடன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.     

                             (தொடரும்)            

3 comments :

  1. அசத்தல்,

    எதிர்பாராத திருப்பங்களோடு யுகிக்கவே முடியாதபடி கதை செல்கிறது.


    அடுத்து என்ன நடக்ககூடும் என அடுத்த தொடர் வரை ஆவலோடு காத்திருக்கணும்.

    ReplyDelete
  2. தொடரைத் தொடர்ந்து எழுதுங்க.வாழ்த்துக்கள்

    ReplyDelete