Friday, 20 April 2012

போகப் போகத் தெரியும் - 8


                                              

   அன்று ஞாயற்றுக்கிழமை. இந்த வாரம் மீனாவிற்கு ஓய்வு. அவள் விடுமுறை நாட்களில் அந்த ஊர் சிறுப்பிள்ளைகளோடு ஏதாவது விளையாடுவது வழக்கம். ஆனால் இன்று இளைஞர்கள் பன்னிரண்டு பேராகச் சேர்ந்து அணிக்கு ஆறு ஆறுபேராகப் பிரிந்து கபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
   ஆனால் அதில் அதிசயமாகச் சின்னதம்பி விளையாடவில்லை. அவர்களின் விளையாட்டை ஊர் மக்களுடன் அவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மீனாவும் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் சின்னதம்பியுடைய கைபோன் கதறவும்..... அதில் பேசிக் கொண்டே தன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான்.
   அவன் போனதும் விளையாட்டை மும்முரமாகக் கவனித்தாள். ஒருவர் ஒரு அணியில் தோல்வியுற்றால் இன்னொரு அணியில் ஒருவர் தோற்றதும் இந்த அணியில் தோற்றவர் திரும்பவும் விளையாட வந்து விடுகிறார். இப்படி விளையாட்டு நீண்டு கொண்டே போனது.
   மீனா சேகர் இருந்த அணிக்குச் சென்றாள். சேகரிடம் 'சேகர் உன் குருப்புலயிருந்து ரெண்டு பேரை எடுத்திட்டு என்னை சேத்துக்கோ. நான் நிச்சயம் ஜெயிச்சிக் காட்டுறேன். என்றாள்.
   சேகர் சிரித்தான். 'என்ன மீனா வெளையாடுறீயா....? இங்க ஒவ்வொருத்தனும் நல்லா கடோர்கஜன் மாதிரி இருக்கானுங்க. நீ அவங்களுக்கு ஒரு தூசு மாதிரி." என்றான்.
   'நீ என்னை சேத்துப் பாரு. அப்புறம் எப்படி ஜெயிச்சிக் காட்டுறேன்னு ஒனக்கே தெரியும்." என்றாள் சவாலாக.
   ஒவ்வொருத்தருடைய சொந்த எண்ணத்தை வைத்துத் தான் வெற்றி எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அளக்க முடியும். இங்கே மீனா தன்னை நன்றாக அளந்து வைத்திருந்தாள்.
   சேகர் யோசனையுடன் 'சரி" என்று சொல்ல அவன் அணியிலிருந்து இரண்டு பேர் விலகினார்கள். மீனா சேகர் அணியில் சேர்ந்தாள். எதிரணியில் இவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். மீனா இப்பொழுது போக வேண்டிய முறை!
   அவள் நடுக்கோட்டின் அருகில் வந்து நின்று கொண்டாள். குரலைக் கணைத்துவிட்டுச் சொன்னாள்.
   'இதோ பாருங்க. இந்த ஊருல யாருக்கு சக்திவேலோட பொண்டாட்டிக் கையைப் புடிச்சி இழுக்கிற தைரியம் இருக்குது. அவங்களை நானும் பாக்குறேன்....." என்று சொல்லிவிட்டுக் கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே முன்னே நடந்தாள்.
   அங்கே அந்த அணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் கூடி இருந்தவர்களும் இவள் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போய் நின்றிருந்தார்கள்.


   புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லை. வெற்றிப்பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...... என்ற கண்ணதாசனின் வார்த்தைகளைப் பொய்யாக்க முயற்சித்தாள் மீனா. முடியுமா....?
   மீனா சேகர் அணியில் சேர்ந்துவிட்டு ‘இந்த ஊரில் சக்திவேல் பொண்டாட்டிக் கையைப் பிடிச்சி இழுக்கிற தைரியம் யாருக்கு இருக்குது பாக்கலாம்’ என்று சொல்லிவிட்டு விளையாடத் துவங்கினாள்.
   முதல் சுற்றில் இரண்டு பேரைத் தொட்டுவிட்டு ஓடி வந்தாள். இரண்டாவது சுற்றிலும் அவளே போய் இன்னும் இரண்டு பேரைத் தோற்கடித்தாள். எதிரணியில் உள்ளவர்கள் அவளைப் பிடித்து இழுக்கவில்லை என்றாலும் அவள் கை தங்கள் மீது படாதவாறு நகர்ந்து ஓடினார்கள்.
   இன்னும் எதிரணியில் இரண்டு பேர் தான்!
   பலமானவர்களைக் கூடப் புத்திசாலித் தனத்தால் தோற்கடித்து விடலாம். ஆனால் அந்த பலமானவர்களின் பின்னால் ஒரு புத்திசாலி இருந்தால்.....
   மூன்றாவது சுற்றில் மீனா போவதற்கு முயற்சிப்பதற்குள் அந்த இருவரையும் விலக்கிவிட்டு ஒருவனாக வந்து நின்றான் சின்னதம்பி!!!
   மீனாவிற்கு அதிர்ச்சி! இவன் இருந்தால் ஏதாவது பிரட்சனைப் பண்ணுவான் என்று நினைத்தே..... அவன் வெளியே போய் விட்டான் என்று நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் விளையாட முன் வந்தாள்! ஆனால்..... இவன் எப்படி இங்கே....?
   அவன் வந்ததும் கூட்டம் கை தட்டியது. அவளுக்கு என்னவோ போல் இருந்தது. போகலாமா....? வேண்டாமா....? ஆனால் போகாமல் இருக்க முடியாது.
   ‘ஏன் இவனும் இந்த ஊர்க்காரன் தானே? இவனுக்கு மட்டும் சக்திவேல் மீது மரியாதை இருக்காதா...?”
   பேசாமல் போய்விட்டு அவனைத் தொடாமலேயே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே எதிரணியில் நுழைந்தாள். அவள் உள்ளே நுழைந்தது தான் தாமதம். அவன் சட்டென்று தாவி அவள் கையைப் பிடித்துக் கொண்டான்!
   அவள் தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க எவ்வளவோ முயற்சித்தாள். நடுக்கோட்டை எப்படியாவது தொட்டுவிட வேண்டும்.... ம்..... எந்த முயற்சியும் பலிக்கவில்லை. அவன் அவள் கையைப் பிடித்தது தான். அவனிடம் எந்த ஓர் அசைவுமில்லை. கை இரும்புப் பிடியாகப் பிடித்திருந்தது.
   அவளுக்கு ஓர் அளவுக்கு மேல் மூச்சுப் பிடிக்க முடியவில்லை. அவன் முன் தோற்று நின்றாள்! அதன் பிறகு தான் அவன் அவள் கையை விட்டான். அவன் பிடித்திருந்த கை மணிக்கட்டு சிவந்து வலித்தது. கையை உதறிக்கொண்டாள். அவன் எதுவும் பேசாமலேயே அவளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். மீனாவிற்கு ஆத்திரமாக வந்தது.
   'ஏன்... உனக்கு மட்டும் சக்திவேல் மேல மறியாதை இல்லையா....?" கோபமாக அவனை முறைத்தபடி கேட்டாள்.
   'ஏனில்ல? நிறைய இருக்குது. ஆனால் அவரை மதிக்காதவங்களை நானும் மதிக்க மாட்டேன்." பொறுமையாகப் பதில் சொன்னான்.
   'நான் எப்போ அவரை மதிக்காம இருந்தேன்.....? "
   'சக்திவேலைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு அன்னைக்கி நீ என்னைக் கட்டிப்புடிக்கல...? அவருக்கு நீ துரோகம் செய்யல.....?"
   அவன் அப்படிச் சொன்னதும் கூட்டத்திலிருந்தவர்கள் இவளை விசமமாகப் பார்த்தார்கள். சேகர் 'ஓ......" என்று ஆச்சர்யக் குரல் எழுப்பினான். மீனாவிற்கு முகமெல்லாம் சிவந்து போய் விட்டது. கோபத்தில்! என்ன மனுஷன் இவன்.....?
   'அது....அது.... பாம்பைப் பாத்ததால பயந்து.... அப்படி....."
   வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. பயமா....? வெட்கமா....?
   'நீ பாம்பைப் பாத்து பயந்து அந்தக் கல்லுன்னு நெனச்சி என்னைக் கட்டிப்புடிச்சே... இன்னைக்கி என்னோட பிரண்சை தோக்கடிக்க வந்த எதிரின்னு நெனச்சி நான் உன் கையைப் புடிச்சி இழுத்தேன். அவ்வளவுத் தான்."
   அவன் சிரித்து கொண்டே சொன்னான். மீனா அவனை முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். கணேசனின் தாத்தா மீனாவைப் பார்த்து கேட்டார்.
   'ஏன் மீனா.... பாம்பை பாத்துத்தான் தம்பியக் கட்டிப்புடிச்சியா....? இதே நான் அங்க இருந்திருந்தா என்னை கட்டிப்புடிச்சி இருப்பியா....?"
   பல் இல்லாத கிழவருக்கு இன்னும் குசும்பு புத்தி போகவில்லை. அங்கே எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.
   'இந்த மீனா வீரனைத்தான் கட்டிப்புடிப்பா. உன்ன மாதிரி வெலவெலத்தவனை இல்ல."
   கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்று கூட யோசிக்காமல் மனத்தில் தோன்றியதை வார்த்தையால் கொட்டிவிட்டு நடந்தாள். பிறகு பலமுறை யோசித்தாள். எப்படி அப்படியானதொரு வார்த்தை வந்தது என்று.....
   ;இது தவறு இல்லையே..... ஒரு வீரனைத்தானே வீரன் என்று சொன்னோம். ஆனால் கட்டிப்பிடிப்பேன்னு சொல்லியிருக்கக்கூடாது...... ; மனத்தைத் தேற்றமுடியாமல் தவித்தாள்.
  
    ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

  
   இன்னும் சரியாக இருட்டவில்லை. பூமி பொன்வண்ண உடையைக் கலைந்து சாம்பல் நிற உடையை அணிந்து கொண்டாள்.
   ஆத்தூர்ப் பள்ளிக்கூட வகுப்பறை ஒன்றில் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. அப்படி இருந்தால் அவ்வூர் இளைஞர்கள் அங்கே தான் இருப்பார்கள் என்பதை மீனா முன்பே அறிந்திருந்தாள்.
   வகுப்பறையில் நுழைந்தாள். அங்கே அந்த ஆறு பேருடன் சின்னதம்பியும் இருந்தான். இவள் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
   'உங்கக் குருப்புல என்னையும் ஒரு சினேகிதியா சேத்துக்குவிங்களா....?" கேட்டுவிட்டுச் சினேகிதமாகச் சிரித்தாள்.
   'ஏன் ஒனக்குத்தான் ஊருல நெறைய சின்னப்பசங்க...... ஸ்கூல்ல நெறைய பாய்ஸ்ன்னு இருக்கிறாங்களே......" சின்னதம்பி தான் சொன்னான்.
   'அவங்கல்லாம் படிக்கவும் வெளையாடவும் மட்டும் தான். நான் இந்த ஊருலேயே இருக்கப்போறவ. இந்த ஊரு முன்னேத்தத்துக்கு நானும் உங்கக்கூடச் சேர்ந்து ஒதவுணும். அதனால தான் உங்க கூட என்னையும் ஒருத்தியா ஏத்துக்கோங்க." கெஞ்சலாகக் கேட்டாள். 
   சின்னதம்பி தலையாட்ட சேகர் 'சரி மீனா" என்றான். மீனா முகமலர்ந்தாள்.
   'என்னைப் பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி உங்க ஆறு பேரையும் எனக்கு ஓரளவு தெரியும். நீங்கல்லாம் காலேஜில வேறவேற கோர்ஸ் படிக்கிற ஸ்டூடண்டு. இதே ஊருல பொறந்து வளந்தவங்க. சக்திவேல் கூடச் சேர்ந்து ஊர் முன்னேத்தத்துக்கு ஒழைக்கிறவங்க. போதுமா.....?" கேட்டாள்.
   'ம்..... எங்கள பத்தி நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கிறே.... ஆச்சர்யமா இருக்குது." சேகர் சொன்னான்.
   'இதுல ஆச்சர்யப் பட என்ன இருக்குது. உங்க ஆறு பேரையும் இந்த ஊரே பேசுதே... ஆனா.... இவரைப்பத்தித்தான் யாருமே எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க....." சின்னதம்பியைப் பார்த்து சொன்னாள்.
   'என்ன தெரிஞ்சிக்கணும் ஒனக்கு....?"
   அவன் கோபமாகக் கேட்கவும் 'ஒன்னும் வேண்டாம்" என்று அவனிடம் முறைப்பாகச் சொல்லிவிட்டுச் சேகரிடம் திரும்பினாள்.
   'சேகர் இனிமே நாம எல்லோரும் ப்ரெண்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. நல்ல நட்பு என்பது பாத்துப் பேசிப் பழகிய பின் வருவது மட்டும் கிடையாது. பாத்தவுடனே மனசால நல்ல அபிப்பிராயம் வந்தாலும் அதுவும் நல்ல நட்புத்தானே..... உங்கள நான் ப்ரெண்ஸா அடஞ்சதுல ரொம்ப சந்தோசம்." சொல்லிக் கொண்டே ஒவ்வொருவர் கையையும் பிடித்துக் குலுக்கினாள்.
   சின்னதம்பியிடம் வந்து புன்னகையுடன் கையை நீட்டினாள். அவன் இவளிடம் கையைக் கொடுப்பது போல் கொண்டு வந்து சட்டென்று  இழுத்து கொண்டான். மீனா முறைத்தாள். அதில் ஏமாற்றமும் கலந்திருந்தது.
   'மீனா.... உங்கூட எனக்கு ப்ரெண்ஷிப் வச்சிக்கப் பிடிக்கல. நீ ரொம்பக் கெட்டப்பொண்ணு. உன்கூட ப்ரெண்ஷிப் வச்சிக்கினா என்னோட அம்மா என்னை திட்டுவாங்க." முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னான்.
   'என்ன... கெட்ட பொண்ணா....? எதை வச்சிச் சொல்லுற......?"
   'ம்..... இவ்வளவு பெரிய பொண்ணாயிருந்தாலும் பாவாடைச் சட்டைப் போடுறியே... அதுக்குத்தான்."
   அவன் அப்படிச் சொன்னதும் கோபமாக அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்;;.
   'பாவாடை சட்டை போட்டா கெட்ட பொண்ணு கெடையாது. அதைக்கூடப் போடலைன்னாத்தான் கெட்ட பெண்" என்று.
   அவள் மிக மெதுவாகவும் அதே சமயம் சற்று அழுத்தமாகவும் சொன்னதும் அவன் தன்னை மறந்து சிரித்தான்.
   மீனா திரும்பி தன் நண்பர்களைப் பார்த்தாள்;.
   'தோ பாருங்க. நான் உங்க எல்லாருக்கும் ப்ரெண்டு. ஆனா இவருக்கு இல்ல. உங்கக் கூட ஏதாவது பேசணுமின்னா இவர் இல்லாத சமயமா வந்து பேசுறேன்."
   சின்னதம்பி சிரித்துக் கொண்டே அவ்விடத்தைவிட்டு வெளியேறினான். அவன் போனதும் சேகரிடம் 'சேகர் நம்ம ஊருல நாளைக்குக் கூட்டம் கூடப்போவுது இல்லையா....? அது எத்தனை மணிக்கி....?" கேட்டாள்.
   'சாய்ந்தரம் ஆறுமணிக்க மேல. ஏன்.....?"
   'அந்தக் கூட்டத்துக்குச் சக்திவேல் வருவாரா....?"
   'அவர் வரலைன்னாலும் நம்ம சின்னத்தம்பி அண்ணன் நிச்சயமா அவருக்குப் பதிலா வருவாரு."
   'நான் அந்தக் கூட்டத்துல கலந்துக்கணும். எனக்கு ஒரு உதவி செய்வியா....?"
   'என்ன?"
   'எனக்கு வேலை ஆறு மணிக்குத் தான் முடியும். அப்பறம் பஸ் புடிச்சி வர ஏழுக்கு மேல ஆயிடும். நீயாவது வேற யாராவது என்ன அழைச்சிக்கினுப் போவ வருவீங்களா....?"
   'சரி நானே வர்றேன். ஆனா மீனா... நீ எதுக்கு வேலைக்கு போவணும்? நீ வேலைக்கிப் போறது எங்க யாருக்குமே புடிக்கலை தெரியுமா...."
   'என்ன சேகர் பேசுற.....? நான் வேலைக்கு போவலன்னா என்னோட தேவைங்கள யார் வாங்கித் தருவாங்க....? உங்கள மாதிரி அப்பா அம்மா சொத்துன்னு இருக்கிறவளா நான்....? நான் ஒரு அனாத. எனக்கு நானேதான் ஒதவி செஞ்சிக்கணும்."
   'மீனா.... இனிமே நீ அனாதைன்னு சொல்லக்கூடாது. உன்னுடைய ப்ரெண்ஸ் நாங்க ஆறு பேருமே உன்னோட ஒறவுத்தான். அதனால இனிமே நீ அனாதைன்னு சொல்லவே கூடாது." என்றான் கனிவானக் குரலில்.
   'சரி சேகர்" கண்கள் கலங்கத் தலையாட்டினாள்.
   'மீனா இனிமே நீ வேலைக்குப் போவக்கூடாது. உனக்கு வேண்டியதை எல்லாத்தையும் நாங்க செய்யிறோம்." மாதவன் சொன்னான்.
   'ரொம்பத் தேங்ஸ் மாதவா.... ஆனா வேணாம்.... நீங்க ஒதவி செய்யிறத நிறுத்திட்டா நம்ம நட்பே கெட்டுப் போயிடும். நான் எப்போதும் போல வேலைக்குப் போறேன். இதை நான் வேலையா நெனச்சி செய்யல. முடியாதவங்களுக்கு நான் உதவி செய்யிறேன்னுத் தான் நெனைக்கிறேன். அதுல கொஞ்சம் வருமானமும் வருது. என்னோட கால்ல நிக்கிறதால நான் தைரியமா இருக்கேன். என்னை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ்." என்றாள்.
   அவள் முடிவில் முடிவாக இருந்தாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   மீனாவும் சேகரும் அந்தக் கூட்டத்துக்கு வந்து சேர்ந்த பொழுது மணி ஏழடிக்க சில நிமிடங்கள்! மீனா இந்நேரம் எல்லாம் பேசி முடிவெடுத்து இருப்பார்கள் என்றே நினைத்தாள்.
   தான் காலம் தவறி வந்ததால் மௌனமாகவே அமர்ந்திருந்தாள். காலம் தவறி வருபவர்களும் ஒரு வகையில் குற்றவாளிகள் தான்!
   இருந்தாலும் அவள் மனம் உருத்தியது.  அவள் சொல்ல வந்த விசயம் நடக்காமல் போய்விடுமோ என்று! எப்பொழுதுமே...ஒரு காரியத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால் அந்தக் காரியம் பிறகு கடினமாகிவிடும். ஆனால் ஒரு கடினமான காரியத்தைத் தள்ளிப் போட்டால்.....அது நிச்சயம் முடியாத காரியமாகிவிடும்..... என்ன செய்யலாம்;;;......? என்ற குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.
   ஆனால் அவளை அதிகம் குழப்பவிடவில்லை அங்கே தலைமை வரிசையில் அமர்ந்திருந்த சின்னதம்பி.
   முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் சின்னதம்பி டாக்டர் கணேசன் இன்னும் ஊர்ப் பெரியவர்கள் இரண்டு பேர் தலைமையிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்த சின்னதம்பி தான் சொன்னான
   'மீனா.... இந்த வருஷம் சக்திவேல் தர்ர பணத்தை வச்சி  ரொம்ப வருஷமா ஓடாத நம்ம ஊர் தேரைப் புதுப்பிச்சி ஓட்டலாம்ன்னு முடிவெடுத்து இருக்கிறோம். இதுல உன் கருத்து எதாவது இருந்த நீ சொல்லலாம்......"
   'இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லைங்க."
   அழுத்தமாகச் சொன்ன மீனாவை எல்லோரும் பார்த்தார்கள்.
   'காரணம்....?"
   'போன வருஷம் தவிர  அதுக்கு முன் போன நாலு வருஷமும் சக்திவேல் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகவே செலவழிச்சி இருக்கீங்க. இப்படியெல்லாம் செலவழுச்சி ஆடித் திருவிழாவ நல்லா சிறப்பா கொண்டாடி இருக்கிறீங்க. அதுல வந்த வருமானத்தை வச்சே கோயிலோட தேவைகளப் பூர்த்திக் செஞ்சிடலாம். கடவுள் நம்மையெல்லாம் காப்பவர் தான். ஆனா கடவுளுக்காகவே நம்முடைய தேவைங்க எல்லாத்தையும் நிகாரிச்சிட்டா.... நம்முடைய தேவைகளுக்குக் காணாத கடவுளிடம் கையேந்த வேண்டியது தான்."
   கூட்டம் சிந்தனையுடன் அவளைப் பார்த்தது.
   'நமக்கு இப்போ என்ன தேவையின்னு எதிர் பார்க்கிறே.....?" கணேசன் கேட்டான்.
   'ஒரு ஆம்புலன்ஸ்!"
   'ஆம்புலன்ஸா......?"
   'ஆமாம். நம்ம ஊருல ஒரு பெரிய டாக்கர் இருக்கார். அவர் நம்ம ஊர் மக்களோட வியாதியப் பாத்து மருந்துக்குடுத்துக் கவனிக்கிறார். ஆனா ஏதாவது அவசரமான பெரிய பிரச்சனைகளுக்கு நாம பக்கத்துல இருக்கிற பெரிய ஊர்களுக்குத் தான் போவவேண்டி இருக்குது. அன்னைக்குப் பாருங்க. மாடு முட்டின மாடசாமி. அதுக்கு முன்னால மாரடைப்பு வந்து செத்துப்போன வீராசாமி.  மாலதியோட பிரசவ வேதனை. அதுக்கு முன்னாடி கெணத்துல விழுந்த கொழந்தயை காப்பாத்த முடியாத வேதனை....
   இப்படிப் பெரிய பிரச்சனைகளும் இருக்குது. இப்படியான அவசரத் தேவைக்கு நமக்கு அவசியமா ஒரு வண்டி தேவை. அது முழுக்க முழுக்க மருத்துவத்துக்கு மட்டும் உதவுற வண்டியா இருக்கணும். ஆம்புலன்ஸ்ன்னா அதிக செலவு. அதனால நோயாளி படுத்துக்கினே போற மாதிரி நல்ல ஓட்டத்துல இருக்கிற வேன் போதும். இது தான் இப்போது நம்முடையத் தேவை." சொல்லிவிட்டு அமர்ந்தாள்.
   'இந்த கோரிக்கையை நான் ஆமோதிக்கிறேன்." டாக்டர் மகேந்திரன் கையை உயர்த்திச் சொன்னார்.
   'சரி. வேற யார்யாரெல்லாம் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறீங்க.....?" சின்னதம்பி கேட்டான்.
   கூட்டத்தில் இருந்த அனைவருமே கையை உயர்த்தினார்கள்.
   சின்னதம்பி அனைவரையும் பார்த்தான். சரியான தலைவர்கள் இல்லை எனறால் மனிதர்கள் தானாகவே சிந்திக்க மாட்டார்களா.....? அல்லது சிந்திப்பது தலைவனின் வேலை. அதைச் செயல் படுத்துவதே தங்களுடைய கடமை என்று நினைத்து விடுவார்களா....?
   மீனாவைப் பார்த்தான். அவள் வேறு ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தாள். சின்னதம்பி கூட்டத்தைப் பார்த்து சொன்னான்.
   'சரி. இந்த வருஷம் இந்தக் கோரிக்கையையும் நிறைவேத்திடலாம். கோயில் தேர் புதுப்பிக்க வேண்டிய செலவை கோயில் நிர்வாகமே ஏத்துக்கொள்ளட்டும். என்ன சாஸ்த்திரி சொல்லுறீங்க....?"
   சாஸ்த்திரி எழுந்து நின்றார். கோவில் பொறுப்பு முழுவதும் அவரிடம் தான் இருந்தது.
   'நல்லது தம்பி. ஆனா... இருக்கும் தொகை தேரைப் புதுப்பிக்க போதுமானதாக இருக்குமான்னுத் தான் தெரியல." என்றார்.
   'முதல்ல இருக்கிறதைக்கொண்டு தொடங்குங்க. மேற்கொண்டு தேவைப்பட்டால் ஊருல கலேக்ஷன் பண்ணிக்கலாம்." கணேசன் சொன்னான்.
   'தேவையில்லை."
   குரல் வந்த திசையை நோக்கி எல்லோரும் பார்த்தார்கள். அப்படி அழுத்தமாகச் சொன்னது மீனா தான்!
   அவளின் முகம் சிந்தனையால் சிவந்து போய் இருந்தது. ஏதோ ஆழமான யோசனைக்கு நடுவில் வந்து விழுந்திருக்க வேண்டும் அந்த வார்த்தை!
   'ஏன் தேவையில்லை......?" சின்னதம்பி கேட்டான்.
   'தேவைப்படாது." கண்களை விரித்துக் குரலை அழுத்திச் சொன்னாள் மீனா.
                          

                              (தொடரும்)

  

No comments :

Post a Comment