Friday, 6 April 2012

போகப் போகத் தெரியும் - 6



தொடர்கதை பாகம் - 6

    வானம் மையைத் தன் உடல் முழுவதும் பூசி கொண்டது போல் இருந்தது. அதில் லேசான கீறல்களாக மின்னல்கள். இடி எங்கோ இடித்தது. மழைத்துளி அங்கொன்றும் இங்கொன்றுமாக நச் நச்நென்று விழுந்தது.
    மழை பலமாக வருவதற்குள் வீடுபோய்ச் சேர்ந்து விட வேண்டும். இவ்வளவு நேரமாக மற்றப் பெண்களுடன் ஆற்றில் குதித்து விளையாடிய மீனாவும் அவசர அவசரமாக வரப்பின் மீது நடந்தாள். பின்னாலிருந்து ஒரு குரல்!
    'மீனா.... உன்ன சக்திவேல் அண்ணன் கூப்பிடுறார்....."
    சேகர் அவளைக் கத்திக் கூப்பிட்டான்.
    'என்னையா....? சக்திவேலா......? எங்க இருக்கிறார்......?"
    'அதோ.... அந்த குடோனுல......."
    மற்றப் பெண்களைப் பிரிந்து மீனா சேகர் காட்டிய குடோனை நோக்கி நடந்தாள். சேகர் மற்றப் பெண்களுடன் சென்று விட்டான்.  மழை இலேசாகத் தூவத் துவங்கியது.
    குடோன் ஓட்டு வீடு போலத்தான் இருந்தது. பழைய வீட்டை மூட்டைகள் அடுக்கிவைக்கும் குடோனாக்கப் பட்டிருந்தது. கதவு திறந்திருந்தது. மீனா உள்ளே எட்டிப்  பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. நிறைய நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
    தலையை மட்டும் உள்ளே நுழைத்து 'சக்திவேல்.... சக்திவேல்...." என்று கூப்பிட்டாள். குடோன் அவள் சொன்னதை எதிரொலித்தது. பதில் எதுவும் வரவில்லை. உள்ளே செல்ல முயன்றவளின் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
    மோட்டார் வண்டிக்காரன் கையில் ட்டார்ச் லைட்டுடன் நின்று கொண்டிருந்தான்.
    'ஓ...... நீங்களா....? சக்திவேல் எங்க? என்ன அவரு கூட்டதாக சேகர் சொன்னான்."
    'சக்திவேலா......." சற்று யோசித்தவன் 'அவர் போய்ட்டார். நீ கௌம்பு" சொல்லிவிட்டு அவளைத் தாண்டி கிடங்கினுள் நுழைந்து டார்ச் லைட் உதவியுடன் எதையோ தேடினான்.
    அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா. ;என்னத் தேடுகிறான் இவன்.......?; ; புரியவில்லை. அவன் மூட்டைகளின் இண்டு இடுக்கெல்லாம் தேடினான்.
    மழை பலமாகப் பெய்யத் துவங்கியது. மீனாவின் மீது சில்லென்று சாரல் படவும் அவள் குடோனில் நுழைந்து வெளியே பார்த்தாள். மழை சடசடவெனப் பெய்தது. பூமி ஷவர் பாத் எடுக்கிறதோ என நினைத்துச் சிரித்துக் கொண்டாள். இடி இடித்தது. மின்னல் கண்களைக் கூசியது.
    மழை உலகத்தைச் சட்டென்று இருள வைத்து விட்டது.
    'மீனா கதவை சாத்து. சாரலடிச்சா மூட்டையெல்லாம் பாழாயிடும்."
    அவன் சொல்லிக் கொண்டே தேடிக் கொண்டிருந்தான். ;நல்ல வேலை நாம் அவர்களுடன் போகவில்லை. போயிருந்தால் இந்நேரம் நல்லா மழையில நனைஞ்சிருப்போம். ; யோசித்துக் கொண்டே கதவை இலேசாக சாத்தி விட்டு அவனைப் பார்த்தாள்.
    அவன் இன்னமும் தேடிக்கொண்டே தான் இருந்தான். ஒரே ஒரு பல்ப் மட்டும் எரிந்தாலும் அந்த வெளிச்சம் போதாமல்  டார்ச் லைட்டை அடித்து வெளிச்சத்தை வீசியபடி இன்னொறு கையில் ஒருதடியை வைத்து கொண்டு அதை மூட்டைகளின் மேல் தட்டித்தட்டிச் சந்துகளில் குத்தித் தேடினான்.
    மீனா ஆர்வம் பொறுக்காமல் கேட்டாள்.
    'என்னத்தை தான் இப்படித்; தேடுறீங்க? சொன்னா நானும் உங்களுக்கு உதவுவேன் இல்லையா.....?"
    'ஒன்னுமில்ல. ஒரு பாம்பு. சாரை மாதிரி இருந்துச்சி. இடிக்கு பயந்து இங்க வந்து பூந்திடுச்சி. அதத்தான் தேடுறேன்."
    சொல்லிக் கொண்டே தேடினான். மீனாவிற்கு அவன் பேச்சை ஜீரணிக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. புரிந்ததும் என்ன செய்வதென்று அறியாமல் சட்டென்று பாய்ந்து அவனை முதுகு பக்கமாகக் கட்டிப் பிடித்து கொண்டாள்.
    அவன் ஒரு வினாடி அதிர்ச்சியானான்.
    'மீனா.... என்னை விடு." அவள் கையை விலக்க முயன்றான். அவள் உடும்பாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
    'நா மாட்டேன். எனக்கு பாம்புன்னா பயம். நா மாட்டேன்."
    கண்களை இறுக்கி மூடிக் கொண்டு அவனை மேலும் இறுக்கினாள்.
    'பயமாயிருந்தா வெளியப் போ.... என்ன தொந்தரவு பண்ணாத."
    அவள் விடவில்லை.
    'மீனா...." அவன் சற்றுக் கோபமாகக் கத்த.... மீனா கையை எடுத்து விட்டு மிரட்சியாக அவனைப் பார்த்தாள். அவளைப் பார்க்க அவனுக்கே பாவமாக இருந்திருக்க வேண்டும்.
    'மீனா.... ஒனக்கு பயமாயிருந்தா... நீ அந்த மேச மேல ஏறிக்கோ." என்றான்.
    மீனா அவசர அவசரமாக ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். அவன் மீண்டும் தன் பாம்பு வேட்டையைக் துவங்கினான். அவள் அவனையே பார்த்தபடி கால்களைக் கட்டிக் கொண்டு மேசையின் மேல் அமர்ந்திருந்தாள். பயத்தில் வியர்வை ஆறாக ஓடியது. கைகள் இலேசாக நடுங்கின.
    பதினைந்து நிமிடங்கள் தேடியிருப்பான். கிடைக்கவில்லை.
    'ப்ச்சு......எங்க போச்சின்னுத் தெரியல. வயிறு வேற பெருசா இருந்துச்சி. இங்க நமக்குத் தான் ஆபத்து. நெல்லு மூட்டைய எடுக்க வர்ரவங்கள போட்டுத் தள்ளிடும். எங்க போயிருக்கும்.....?"
    அவன் சொல்லிக் கொண்டே பார்வையை எல்லா இடங்களிலும் சுழலவிட்டான். மீனா எச்சிலைக கூட்டி விழுங்கினாள். பாம்பு குட்டி போடப் போவுதா.....? அது எத்தனையோ.......? பயத்தில் உடல் இலேசாக நடுங்கியது. இவன் எப்படித்தான் இவ்வளவு தைரியமாக இருக்கிறானோ.... பாம்பென்றால் படையே நடுங்கும் என்று சொல்வது இவன் விசயத்தில் பொய்யாகி விட்டதே.....
    அவன் தேடியது கிடைக்காத ஏமாற்றத்துடன் வந்து அங்கே ஆணியில் மாட்டியிருந்தச் சட்டையை எடுத்து தன் முண்டா பனியனின் மேல் போட்டு கொண்டான். அவன் பார்வை மீனாயிருந்த இடத்திற்குப் பின்புறம் யோசனையுடன் நிலைத்திருந்தது.
    மெதுவாக மீனாவின் அருகில் வந்தான். கையை நீட்டி அவளை அழைத்தான். அவன் பார்வையைப் புரிந்து கொண்டவளாக மீனாவும் திரும்பி அந்த இடத்தைப் பார்த்தாள். ஏதேதோ தாள்கள் அடுக்காக வைத்துக் கட்டப்பட்டதர்க்கு மேல் மீனாவின் மிக அருகில் அது சுருண்டு படுத்திருந்தது.
    மீனா பாம்பை தன் அருகில் பார்த்தது தான் தாமதம். சட்டென்று மேசையிலிருந்து குதித்து அவனை இறுக்கக் கட்டிப்பிடித்துக்  கொண்டாள்.
    அவன் அருகில் இருந்த கழியை எடுத்து அதன் மீது பாம்பை ஏற்றி வெளியே எறிந்தான். பாம்பு போய் மறைந்தது.
    மீனா இன்னமும் அவனைக் கட்டிப் பிடித்தபடியே இருந்தாள். அவன் அவளை விளக்கினான். ஏற்கனவே மயக்கமாகி விட்டவள் தரையில் சரிந்தாள்.
    அவன் மழைநீரைக் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான். விழித்தவள் திருத்திருவென முழித்தாள்.
    'மீனா.... பயப்படாத. பாம்பு போயிடுச்சி. வா.. நாம போகலாம்."
    கதவைப் பூட்டிக் கொண்டு வந்தவனைப் பின் தொடர்ந்தாள்.
    'மீனா... மழையால ஒரே சேறா இருக்குது. வண்டி சிக்கும். சுத்துப் பாதையிலத் தான் ஊருக்கு போவ முடியும். வா...." என்றான்.
    மீனாவிற்குத் தரையில் கால் வைக்கக்கூடப் பயமாக இருந்தது. எங்கேயாவது பாம்பு படுத்திருக்குமோ....... பயம்.
    அவளுக்குத் தெரியாது. யாரும் துன்புறுத்தாமல் இருந்தால் பாம்பு அதன் வழியிலேயே போகும் என்பது.
    அச்சம் அறியாமையிலிருந்து தானே வருகிறது.
    அவன் வண்டியைக் கிளப்பியதும் சட்டென்று ஏறி அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவ்வளவு பயம். அவளுடைய இதயத்துடிப்பு அவளுக்கே கேட்பது போல் இருந்தது.
    வண்டி தேங்கியிருந்த மழை நீரை வாரி இறைத்தபடி சீறிப்பாய்ந்தது.


0      0      0      0       0      0      0      0


    ஊர் கோவில் அருகில் வண்டியை நிறுத்தினான். கோவில் கோபுரக் கலசத்துக்கருகில் இருந்த விளக்கு மஞ்சள் நட்சத்திரமாக மின்னியது. கோவில் வாசல்படியில் பலகைக்கு மேல் இருந்த ட்டியூப் லைட் இரவில் நான் தான் சூரியன் என்று கர்வப்பட்டுக் கொண்டது.
    'மீனா.... இறங்கி நடந்து போ...." என்றான்.
    அவள் இறங்கிக் கொண்டாள். தன் ஊருக்குள் வந்து விட்டோம் என்று நினைத்ததும் சற்று நிம்மதியான மூச்சு வெளிவந்தது. அவள் 'தேங்ஸ்ங்க" என்றுச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
    'மீனா........" அவனழைத்தான்.
    'என்ன....?"
    அவன் அவளை ஊடுருவிப் பார்த்தான்.
    'சக்திவேலுவத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு என்னை இப்படி கட்டிப்புடிச்சியே.....இது உனக்கே அசிங்கமாயில்ல.....?"
    அழுத்தமான பார்வையுடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
                               
                  
                                (தொடரும்)
   

2 comments :

  1. சக்திவேலுவத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு என்னை இப்படி கட்டிப்புடிச்சியே.....இது உனக்கே அசிங்கமாயில்ல.....?"
    அழுத்தமான பார்வையுடன் அவளைப் பார்த்துக் கேட்டான். nalla aakkam

    ReplyDelete
  2. வணக்கம் மாலதி அவர்களே!
    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நவில்கிறேன்.
    இந்த கவிமனம் வலையை அவ்வளவாக யாரும் படிப்பதில்லையோ என்ற சந்தேகம் இன்றுடன் தங்களின் கருத்துரை போக்கியது. நன்றி.
    கதையைப் படித்துவிட்டால் தயவுசெய்து படித்ததற்கான கருத்துரையை இட்டுச் சென்றால் எனக்கும் அடுத்த பாகத்தை வெளியிட வசதியாக இருக்கும்.
    இது உங்களுக்கு மட்டுமல்ல கதையை விரும்பிப் படிப்பவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோல். நன்றி.

    ReplyDelete