Thursday 12 April 2012

போகப் போகத் தெரியும் 7


தொடரகதை பாகம் - 7

     பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பார்கள். ஆனால் பயம் வந்துவிட்டால்......!
    பாம்பிற்குப் பயந்து என்ன செய்வது என்று அறியாமல் அருகில் இருந்த அவனைக் கட்டிப்பிடித்தாள் மீனா....! ஆனால் அவனோ.... ‘சக்திவேலைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு.... என்னை இப்படி கட்டிப்புடிச்சியே.... இது உனக்கே அசிங்கமா இல்லையா’  என்று கேட்டான்.
    உண்மையில் அவளுடைய செயல் அவளுக்கே வெட்கமாகவும் அசிங்கமாகவும் இருந்தாலும் அதை முகம் வெளியே காட்டிக் கொள்ள மறுத்தது.
    'தோ.. பாருங்க நான் ஒன்னும் உங்கள ஆசையா கட்டிப்புடிக்கல. பாம்புக்குப் பயந்துத்தான் அப்படி நடந்துக்கினேன். அதுவும் அதோ தெரியுதே....கொடிமரம்! அதே மாதிரியான கல்லுன்னு நெனச்சித் தான் கட்டிப்புடிச்சேன்." சற்றுக் கோபமான குரலாகச் சொன்னள்.
    'ஓ.....கோயில் கொடிமரம்ன்னு நெனச்சியா....?" அவன் அவளைப் பார்த்து ஏளனமாகச் சொல்லிச் சிரித்தான்.
    'ஏன்.... அதுக்கென்ன...?"
    'இல்ல.... எங்க ஊரு பொண்ணுங்க கொடிமரத்தைக் கட்டிப் புடிச்சி விளையாடினா..... அவளுக்குக் கல்யாண ஆச வந்துடுச்சின்னு சொல்லுவாங்க." அவன் மேலும் சிரித்தான்.
    'ஏன்..... இந்த ஊருல பொண்ணுங்க கட்டிப் புடிக்க ஆம்பளைங்களே இல்லியா....?"
    அவள் சொன்னதைக் கேட்டதும் அவன் சட்டென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு முறைத்தான். மீனா அவனை அலட்சியமாகப் பார்த்தாள்.
    'இன்னைக்கு நீ நடந்துக்கின மொறைக்கு நானும் என்னோட ஆம்பளத்தன்மைய காட்டியிருக்க வேணும். உன் திமிரு அடங்கியிருக்கும். என்ன செய்யிறது? இந்த ஊரு ஆம்பளைங்க எல்லாருமே பொண்ணுங்கள மதிச்சி நடக்கிறதால ஒரு சில நேரத்துல இப்படி அவமானப் படுறதும் நேருது." கோபமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.
    மீனா அவன் வார்த்தைக்குப் பதில் பேசாமல் நின்றிருந்தாள். அவனே சற்றுப் பொறுத்துச் சொன்னான்.
    'மீனா நீ வேணுமின்னா என்னோட உடம்ப அந்தக் கல்லுக்குச் சமமா நெனச்சியிருக்கலாம். ஆனா நா கல்லு கெடையாது. உணர்ச்சி உள்ள மனுஷன். உன்னையும் நான் ஜடப்போருலா நெனைக்கல. சக்திவேல் சொன்னது போல ;மாறுவது தானே மனம்; ;உன் மனசு மாறுச்சின்னா அதுல இருக்கிற மொதோ ஆண் நானாத்தான் இருக்க முடியும். என்னை நீ மறக்கவே முடியாது."
    சொல்லிவிட்டு வண்டியை வேகமாகக் கிளப்பிக் கொண்டு போனான். மீனா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் சஞ்சலம் அடையும் பொழுது அதை அடக்கி ஆள்பவனை ஞானின்னு சொல்லலாம். ஆனால் அதையேச் சவாலாகக் கூறுபவனை... என்ன என்று சொல்வது?
    இருந்தாலும் அவன்மீது மதிப்புச் சற்று அதிகமாகியது. எந்த ஒரு மனிதனும் பெரிய பெரிய காரியங்கள் செய்து மதிப்பைப் பெற்றுவிடுவது இல்லை. ரொம்ப சிறிய காரியத்தை மிகச் சரியாக நல்ல முறையில் செய்து விட்டாலே மிகச் சிறந்த மதிப்பைப் பெற்றுவிடுகிறார்கள்.
    மீனா இப்பொழுது அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
    அவளால் அந்த இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. கண்களை மூடினால் அவன் தான் வந்து நின்று சிரித்தான். அவன் பேசிய வார்த்தைகள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
    மீனா யோசித்தாள்! தனது பருவ வயது தன்னுடைய லட்சியங்களை அடிமை படுத்திவிடுமோ...... என்ற பயம் மனத்தில் ஒட்டிக் கொண்டது.
    மனத்தில் பயம் என்று வந்தாலே ஏதோ தவறு நடந்திருக்கிறது  அதற்குக் காரணம் தான்தான் என்ற எண்ணம் பயத்தை மேலும் பயமுறுத்தியது.
    இனி இங்கிருக்க வேண்டாம். விடுமுறையில் ஒரு வாரமாவது உன் அம்மாவுடன் சந்தோசமாக இருந்து விட்டு வேலைக்கு வந்தால் போதும் என்று டாக்டர் பார்த்தசாரதி சொல்லி இருந்தார் தான். ஆனால் அது முடியாது. உடனே கிளம்பி விட வேண்டும்.
    முடிவெடுத்ததும் மறுநாள் காலையிலேயே கிளம்பத் தயாரானாள்.


           0      0      0      0      0      0      0


    அன்று காலையிலேயே ஊர் ஒரே பரபரப்பாக இருந்தது. இரண்டு மாட்டு வண்டியில் மாலை பழங்கள் பாக்கு வெற்றிலை என்று சக்திவேல் வீட்டு வாசலில் நின்றிருந்தது. மீனா இதைப் பார்த்ததும் மனம் உருத்தத் தன் தாயிடம் கேட்டாள்.
    'சக்திவேலோட மொறப் பொண்ணு கண்மணி. பக்கத்து ஊருத்தான். அவ பெரிய மனுஷியாயி அஞ்சி வருஷமாகுதாம். இன்னைக்குத்தான் அவ அப்பா சடங்கு வச்சிருக்காரு. அந்த சடங்குக்குப் போவத்தான் எல்லாப் பொருளும் வந்திருக்குது." என்றாள் அறிவழகி.
    'ஏம்மா.... சக்திவேல் அந்தப் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்குவாரா......?"
    அவள் குரலில் இலேசான கவலையின் சாயல் தெரிந்தது.
    'அப்படித்தான் ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க. இந்தச் சடங்கு அனேகமா நிச்சயத்தார்தத்துல தான் முடியும்ன்னு நெனைக்கிறேன். சக்திவேலுவுக்கும் இன்னும் மூனு நாலு மாசத்துல படிப்பு முடியுதாம். அதான் இப்பவே இந்த ஏற்பாடுன்னு நெனைக்கிறேன்."
    புடவையை அலசிக் கொண்டே சொன்னாள். மீனா கலங்கின விழிகளை மறைத்தபடி வேலைக்குக் கிளம்பினாள்.

      0      0      0      0      0      0
   

    'சிஸ்டர்.... அந்த மாடு முட்டினவருக்கு வலி என்னன்னு கெட்டு குறிச்சிட்டுக் கிளம்புங்க."என்றார் டாக்டர்.
    'எஸ் டாக்டர்".
    என்று சொல்லிவிட்டு கையில் வலிப் பட்டையை வைத்து கொண்டு வெள்ளையில் நீல பார்டர் போட்ட நூல்சேலையில் தேவதையாக வந்த மீனாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சேகர். அவனை அங்கே பார்த்ததும் அவளுக்கும் ஆச்சர்யம்!
    'சேகர்.... நீயா....? நீ.... நீங்க எங்க இங்க....?"
    அவனுடன் இன்னும் மூன்று பேர்!
    'யாருக்கு என்னவாச்சி.....? " யோசனையுடன் கேட்டாள்.
    'நம்ம ஊரு பால்காரர் இல்ல.... பாலமுருகன். அவரோட புள்ளைய மாடு முட்டிடுச்சி. அதான் கொண்டாந்து சேத்திருக்கோம்."
    'ஓ.... அந்த மாடு முட்டின கேசு நம்ம ஊரு கேசுத்தானா.....? டாக்டர் சொன்னார் எதுவும் பயமில்லைன்னு. ஆனா நிறைய ரத்தம் போயிருக்காம். ஆமா... மாடுமுட்டினதும் கொண்டு வந்திருக்கலாம் இல்ல. ஏன்... இவ்ளோ ரத்தம் வீணாவுற வரைக்கும் என்ன செஞ்சிக்கினு இருந்தீங்க.....?"
    'ஆம்புலன்சுக்குப் போன் செஞ்சோம். ரொம்ப நேரமா வரல. அப்புறம் நாங்களே வண்டியில கொண்டாந்தோம்....." என்றான் கவலையாக.
    அவள் நோயாளியின் அறைக்குள் நுழைந்தாள். அவருக்கு வயிற்றில் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. கையில் குளுக்கோஸ் இறங்கிக் கொண்டிருந்தது.
    குளுக்கோசும் அதன் குழாயும் பிறந்த பின்னும் உணவு ஊட்டும் தொப்புள் கொடியோ.....!
    அவருக்கு அருகில் இரண்டு ஆண்கள். அதில் ஒருவன் மோட்டார் வண்டிக்காரன். அவன் இவளைப் பார்த்ததும் கண்களைச் சுருக்கினான். அவனுடைய பார்வை அவளுக்குப் புரிந்தது.
    'நான் இங்கத்தான் இந்த லீவுக்கு வேலைச் செய்யுறன். காலை ஒன்பதிலிருந்து சாய்ந்தரம ;ஆறு வரைக்கும்....."
    அவள் சொல்லிவிட்டு நோயாளியை எழுப்பினாள்.
    'ஐயா..... ஐயா.... இங்க பாருங்க...... ஐயா.... தோ பாருங்க. கண்ணத்தொறங்க.....ஐயா....மாடு;;;...."
    'ஏய். மரியாதையா கூப்பிடு...." அவன் கோபமாகச் சொன்னான்.
    அவனை இவள் முறைத்து விட்டுத் திரும்பவும் அவரை எழுப்பினாள்.
    'ஐயா... இதோ பாருங்க....."
    அவர் மிகவும் சிரமமாகக் கண்விழித்தார்.
    'இந்தாங்க. இந்தப் பட்டையில வலி எவ்வளவு இருக்குதுன்னு காட்டுங்க..."
    அவர் நடுவாக ஐம்பதைத் தொட்டார். மீனா கட்டிலில் மாட்டியிருந்த காகிதத்தில் குறித்தாள்.
    சேகரிடம் வந்தாள். 'சேகர் நீங்கலெல்லாம் எப்போ கௌம்புவீங்க?"
    'அவருக்கு ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். இனிமே கௌம்ப வேண்டியது தான்."
    'கொஞ்சம் எனக்காகக் காத்துக்கினு இருக்கியா....? நா இந்த டிரஸ்சை மாத்திக்கினு உங்கக்கூடவே வந்துடறேன்....."
    அவன் 'சரி" என்றதும் ஓடினாள். பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள்.
    அங்கிருந்த மூன்று பைக்குகளில் இரண்டில் இரண்டிரண்டு பேர் ஏறிக்கொள்ள அவன் வண்டியில் மட்டும் ஒரு இடம்! திரும்பவும் இவன் வண்டியிலேயா........? வேற வழி......? என்ன செய்வது? கையில் இருந்த குச்சி மிட்டாயை வாயில் வைத்துக் கொண்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
    நெடுஞ்சாலையில் போகும் போது ஒரு போக்குவரத்து கண்காணிப்பாளர் கையைக் காட்டி வண்டியை நிறுத்தினார். இவன் தான் அணிந்திருந்த குளிர்க் கண்ணாடியைக் கழற்றியதும்.....
    'தம்பீ.... நீயாப்பா.... கௌம்புப்பா....." என்றார் பவ்வியமாக. அவன் பின்னால் இருந்த மீனாவையையும் ஆச்சர்யமாகப் பார்த்தார்.
    'என்ன சார்.... நானும் இவரோட ஊர்க்காரித்தான். சக்திவேலைக் கட்டிக்கப் போற பொண்ணாக்கும் நான்....."என்றாள்.
    'அப்படியாம்மா... ரொம்ப சந்தோசம்." என்றார்.
    வண்டி கிளம்பியது. கொஞ்சம் தூரம் போனதும் அவன் கேட்டான்.
    'நீ சக்திவேலைக் கட்டிக்கப் போறேன்னு அவர்கிட்ட சொன்னது அவசியம் தானா....?"
    'ஆமா. இனிமேல என்னை எதுக்கும் மடக்க மாட்டார் இல்லையா....?"
    'எதை வச்சி சொல்லுற?"
    'போன வாரம் என்னோட பிரண்டோடக் காரை நான் ஓட்டிப் பாத்தப்போ புடிச்சிட்டாரரு. எங்கிட்ட லைசன்சு இல்ல. ரொம்ப வாட்டிட்டார். அப்புறம் பிரண்டோட அப்பா போன் பண்ணப்பிறகு தான்விட்டார். இனிமே நிச்சயமா என்ன கண்டுக்கவே மாட்டார்."
    'நீ செய்யிற தப்புக்குச் சக்திவேலோட பேரை யூஸ் பண்ணுறியா?"
    அவன் கேட்க அவள் பேசாமலிருந்தாள். ஒருவர் ஏதாவது தப்புச் செய்துவிட்டால் அந்தத் தவற்றால் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்ளலாம். ஆனால் தவறு என்று தெரிந்தே ஒரு தவறைச் செய்தால் பழைய தவறையே புதுப்பித்துக் கொள்வது போல் தானே......!
    முதலில் தவறு செய்தாயிற்று. பிறகு அதை திருத்திக் கொள்வது தானே முறை?
    'மீனா....." அவன் இவள் சிந்தனையைக் கலைத்தான்.
    'ம்....."
    'இனி மேல நான் சக்திவேலைக் கட்டிக்கப் போறேன்னு யார்கிட்டேயும் சொல்லாத."
    'ஏன்.....?"
    'ஏன்னா.... கடவுள் பக்தனுக்குக் கருணையைத்தான் கொடுக்கும். காதலைக் கொடுக்காது."
    'ஏன்...? கடவுள் பணமிருக்கும் பக்தை கண்மணிக்குத்தான் தன் காதலைக் கொடுக்குமா...?"
    அவள் அப்படி சொன்னதும் அவன் சட்டென்று வண்டியைப் பிரேக் பிடித்து நிறுத்தினான். மற்ற இரண்டு வண்டியும் நின்றது. அவன் மீனாவை யோசனையுடன் பார்த்தான்.
    சேகர் 'என்ன" என்று கேட்க இவன் எதையோ அவளிடம் சொல்ல வந்ததைச் சொல்லாமல் ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டி விட்டுக் கிளம்பினான்.


    0      0      0      0      0      0      0


    ஊருக்குள் வந்ததும் கோவிலுக்கு எதிரில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்தவர்கள் அனைவரும் இவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.
    'டாக்டர் எந்தப் பயமுமில்லைன்னு சொல்லிட்டார். தையல் போட்டிருக்குது. காயம் ஆறினதும் இன்னும் ஒரு வாரத்துல வீட்டுக்குப் போயிடலாம்ன்னு சொன்னார்." சேகர் சொன்னான்.
    'ஓ...... இதுக்காகத் தான் இங்க எல்லாரும் கூடி இருக்கிறீங்களா....? ஏன் சேகர் ஒரு டெலிபோன் பண்ணிச் சொல்லியிருக்கக் கூடாது? உங்க யார்கிட்டேயும் செல்போன் இல்லையா......?" மீனா கேட்டாள்.
    'அண்ணன்கிட்ட இருக்குது. ஆனா ஆஸ்பத்திரியில டவர் கெடைக்கல." என்றான்.
    அப்போது மீனா மோட்டார் வண்டிக்காரனை யோசனையுடன் பார்த்தாள். சேகர் இவரைத்தான் அண்ணன் என்றான். எப்படி? யார் இவர்? எந்த வீட்டுல இருக்கிறார்? இந்த ஊர் தானா....? விளங்கவில்லை. கேட்டுவிடலாமா....? மெதுவாகக் கேட்டாள்.
    'சேகர் யாரு இவர்? இவரோட பேரு என்ன....?"
    அவள் இப்படிக் கேட்க அங்கே எல்லோருடையப் பார்வையும் இவள் மேல் படிந்தன. ஆனால் யாருமே பதில் சொல்லவில்லை.
    'என்ன மீனா... என்னைப்பத்தி தெரிஞ்சிக்கணுமா...?"
    அவனே கேட்டான். இவள் 'ஆமாம்" என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
    'என் பேரு சின்னதம்பி. எல்லாரும் என்னை தம்பீன்னு செல்லமா கூப்பிடுவாங்க. நான் சக்திவேலோட வீட்டுலத்தான் தங்கி அவரோட தயவுலத்தான் படிக்கிறேன். அவரோட வலது கையே நான்தான். என்னைக் கேக்காம அவர் எதையும் தனியா செய்ய மாட்டார். போதுமா?"
    பார்வையிலும் வார்த்தையிலும் அலட்சியம் இருந்தது. அப்படின்னா இந்தக் கல்யாண ஏற்பாடும் இவரோடதுத்தானா...?
    மனம் அவளுடைய கவலையைச் சுட்டிக்காட்டியது. அவன் மீது இலேசாகக் கோபம் வந்தது.
    'ம்.... சரி. இனிமே நீங்க என்னை அக்கான்னுத்தான் கூப்படணும்." வேண்டுமென்றே அவனை வம்புக்கிழுத்தாள்.
    'என்ன......?"
    'ஆமா. நா உங்கள தம்பீன்னுக் கூப்பிட்டா.... நீங்க என்னை அக்கான்னுத்தானே கூப்பிடணும்?"
    'நான் மரியாதை கொடுப்பவர்களுக்குத் தான் மரியாதைக் குடுப்பேன். மரியாதைத் தெரியாதவங்களோட எனக்குப் பேசக்கூட விருப்பம் கெடையாது." என்றான் கோபமாக.
    'ஏன் நா எப்போ அப்படி நடந்துக்கினேன்......?"
    'ம்..... உன்னை விட எத்தன வயசு பெரியவர் அவர்? அவர் பேரைச் சொல்லி மாடசாமின்னு கூப்பிட்டு இருந்தா கூடப் பரவாயில்ல. மாடுன்னு கூப்பிடுறே.... இது மரியாதையா...?"
    மருத்துவமனையில் நடந்தது. நினைத்ததும் அவளுக்குச் சிரிப்பு!
    'ஐயோ.... எனக்கு அவர் பேர் மாடசாமின்னுத் தெரியாது. ஐயா..... மாடுமுட்டினவரேன்னுத் தான் கூப்பிட வந்தேன். நீங்க அதட்டினதும் மாடு என்ற வார்த்தையோட நிறுத்திட்டேன்." என்றாள்.
    இதைக் கேட்டதம் அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அவன் சிரிக்கவில்லை. அவனின் இறுகிய முகத்தைப் பார்த்தாள்.
    'டேய் தம்பீ......."
    இவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அங்கே நின்றிருந்த ஒரு பையனை அழைத்தாள். இவன் முறைத்தான்.
    'என்னக்கா......" பையன் கேட்டான்.
    'டேய் தம்பீ..... உன்னோட தம்பியில்ல..... சின்னத்தம்பி. அவன் காலையில ஒன்னோட அம்மாக்கிட்ட குச்சிமிட்டாய் வாங்கித்தரச் சொல்லி அழுதான். இந்தா.... இந்தக் குச்சிமிட்டாயை உன்னோட சின்னத்தம்பி கிட்ட குடுத்துடு." மிட்டாயைக் கொடுத்தாள். வார்த்தையில் சின்னத்தம்பியை அழுத்தி உச்சரித்ததால் அவனைப் பார்த்தாள். அவன் இவளை முறைத்துக் கொண்டிருந்தான்;.
    'தோ... பாருங்க. அந்தப் பையனோட சின்னத்தம்பி காலையில முட்டாய் கேட்டு அழுதான். நான் சாய்ந்தரம் வாங்கியாறேன்னு சொன்னேன். அதத்தான் அந்தச் சின்னத்தம்பிகிட்ட குடுக்கச் சொன்னேன். நான் என்னவோ உங்கள மரியாதை கொறைவா பேசிட்டதா நெனச்சிடாதீங்க."
    சொல்லிவிட்டுக் கையிலிருந்த சில்வர் டிபன் பாக்ஸை தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.
    அவள் போவதையே அந்த ஊர் மக்கள் அனைவரும் சிரிப்புக் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சின்னதம்பியும் தான்!

(தொடரும்)

No comments :

Post a Comment