Thursday, 5 April 2012

போகப் போகத் தெரியும் - 5தொடர்கதை பாகம் -5


    மீனா சக்திவேல் வீட்டு வாசல் படியிலேயே நின்றிருந்தாள். சேகர் தான் அவளை அங்கேயே நிற்கச் சொல்லி இருந்தான். இருள் கறுப்பு வண்ணத்தை ஊரெங்கும் பூசிவிட்டிருந்தது. வீட்டினுள் இருந்து ஓர் அம்மாவும் பையனும் வெளியேறியதும் மீனாவை உள்ளே அனுப்பினான்.
    மீனா உள்ளே நுழைந்ததும் அந்த இடத்தை நோட்டமிட்டாள். வீட்டின் பெரிய நடைப்பகுதி அலுவலகம் போல் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய பழங்கால மேசை. அதன் மேல் நிறைய காகிதக் கட்டுகள் ஓர் ஓரத்தில். இரண்டு பேப்பர் வெய்ட்டு அப்புறம் பென்சில் பேனா என்ற தேவையான பொருட்கள்..... மேசைக்கு முன்புறம் இரண்டு நாற்காலிகளும் அதற்கு எதிர்புறம் ஒரு சுழல் நாற்காலியும் இருந்தன.
    சுழல் நாற்காலியில் தான் சக்திவேல் அமர்ந்திருந்தார். ஆனால் இவளைப் பார்த்த விதமாக இல்லாமல் அவளுக்கு முதுகுப்புறத்தைக் காட்டிக் கொண்டு அங்கே இருந்த கணிணியில் ஏதோ வேலையாக இருந்தார்.
    அங்கே இவர்களைத் தவிர ஜீவா சரண் மாதவன் சேகர் என்று நால்வர் இருந்தார்கள். சசி சிவம் என்ற இருவரைக் காணவில்லை! இவர்கள் ஆறு பேரும் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள். சக்திவேலுவுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்று ஊருக்குள் பேசிக்கொள்வது இவளுக்கும் தெரிந்திருந்தது.
    கணேசன் சொன்ன நம்ம ஊர் பசங்க என்றது இந்த ஆறு பேரையும் தான். இவர்கள் இங்கே இப்பொழுது இருப்பது நல்லதுக்குத்தான் என்று நினைத்தாள்.
    'அண்ணே.... மீனா வந்திருக்குது." மாதவன் சொன்னான்.
'உட்கார் மீனா......"சக்திவேலின் குரல் மட்டும் வந்தது.
மீனா உட்கார்ந்தாள். 'சக்திவேல்...." கூப்பிட்டாள்.
'மீனா மரியாதையா கூப்பிடு." சேகர் அதட்டினான்.
    'ஏன்..... அவர் பேரைச் சொல்லித்தானே கூப்பிட்டேன்? இதில் என்ன மரியாதை குறைச்சல். அவர் சொல்லட்டும் அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு........" சொல்லிவிட்டுத் திரும்பவும்
    'சக்திவேல்..... நான் உங்கள பேர் சொல்லிக் கூப்பிடலாமா....? " கேட்டாள்.
    'கூப்பிடு மீனா. நீயாவது என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடு. என்னோட பேர் எனக்கு மறந்து போகாம இருக்கும். சரி... என்ன விசயமா என்னை நீ பாக்க வந்தே....?"
    குரல் சற்றுக் கரகரப்பாகச் சற்று அழுத்தமாக இருந்தது. மீனா இப்பொழுது சற்றுத் தயங்கினாள்.
    'சொல்லுமா.... தயங்காம சொல்லு."
    'வந்த.....நா...நான்.....உங்கள விரும்புறேன். உங்களையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். ஐ லவ் யூ."
    ஏற்கனவே பேசிப்பேசிப் பார்த்து விட்டு வந்த வார்த்தைகள் தான் என்றாலும் இங்கே திக்கித்திக்கி மெதுவாகத்தான் வெளியே வந்து விழுந்தது. அங்கே அமைதி நிலவியது. எல்லோருக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!
    மீனா யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. மனம் கூசியது. தான் செய்வது தவறு என்று தெரிந்தும் தவறு செய்வது மற்றவர்களை விட தனக்குத்தானே மனம் வேதனை அடையும்! இங்கே அவள் மனம் வெட்கப்பட்டது. இருந்தாலும் தனக்குத் தேவையென்று ஒன்றை நினைத்துச் செய்யும் தவறு தவறேயானாலும் தேவையை அடைந்தால் போதும் என்று சொல்லியது.
'மீனா...." சக்திவேல் அழைத்தார்.
    அவள் எச்சிலைக் கூட்டி விழுங்கி விட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
    'மீனா... நீ படிக்கிற பெண். உன் மனசுல இப்படியான எண்ணங்கள் வந்திருக்கக்கூடாது. ஆனால் வந்து விட்டது. காரணம் தெரியலை. இருந்தாலும் உன் மனசை மாத்திக்கோ. உன் படிப்புல கவனம் செலுத்து. இப்பொழுது இருக்கிற இதே மனசு எப்பவுமே இருக்காது. மாறுவது தானே மனம்! நான் மற்றவர்களுக்குச் செய்யிற உதவிகளைப் பார்த்து உனக்கு என் மேல் விருப்பம் வந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் காதலாகாது. இன்னும் காலம் இருக்குது. அதில் நீ இன்னும் நிறைய ஆண்களைச் சந்திக்க வேண்டி வரும். அப்பொழுது நீ இன்று என்னிடம் பேசின வார்த்தைகளை நினைத்து வருத்தப்படவும் நேரலாம். மனசை நிதானமாக வச்சிக்கோ. நீ போகலாம்."
    சொல்லிவிட்டுத் திரும்பவும் கணிணியில் எதையோ தேடினார். முகம் கொடுத்துப் பேசாத அந்த மனிதனின் வார்த்தைகள் அவர் மேல் அவள் வைத்திருந்த மதிப்பை மேலும் அதிகமாக்கியது. அவள் நினைத்தது போல் எல்லா ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது.
    ஆனால் தான் எதற்காக இங்கே வந்தாளோ.... எதைஎதையெல்லாம் சொல்ல வேண்டுமென்று நினைத்து வந்தாளோ..... அந்தத் தன்னுடைய விருப்பத்தை அவரிடம் சொல்லமலேயே கிளம்ப மனம் வராமல் அங்கேயே அமர்ந்திருந்தாள்.
    தான் பேசியதை வைத்துத் தன்னைத் தாழ்வான குணம் உள்ள பெண்ணாக நினைத்து விட்டாரோ.....? என்று நினைத்த பொழுது தான் பேசியதை நினைத்துத் தானே வருந்தினாள். ஆனால் காதலிப்பது தவறில்லையே என்றது அவளது பேதை மனம்!                       

    மீனா தன் காதலைச் சக்திவேலிடம் சொன்னதும் அதற்குப் பதிலாகச் சக்திவேல் அவளுக்கு அறிவுரை சொன்னதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    எத்தனையோ இளம் வாலிபர்கள் அவள் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று ஏக்கத்துடன் சுற்றிக்கொண்டிருக்க தனக்குப் பாதுகாவலாகச் சக்திவேல் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் மீனா அவரிடம் தன் காதலைச் சொன்னாள்! ஆனால் அவரை இன்னும் ஒரு முறைக்கூட பார்த்தது கிடையாது! இருந்தாலும் மற்றவர்கள் அவர் பெயரில் வைத்திருந்த நம்பிக்கை மரியாதை அன்பையும் அறிந்த போது இவளுக்கு அவர் மேல் அந்தப் பெயரின் மேல் ஒரு வித  ஈடுபாட்டை ஏற்படுத்தி விட்டது.
    அந்த ஈடுபாடு தான் காதலா.....?
    ஆமாம். அவள் அப்படித்தான் புரிந்து கொண்டாள்! ஆனால் அவன் அவளை இப்படி நிகாரிப்பான் என்று அவளுக்குத் தெரியாது. இருந்தாலும் அவளுக்கு அவனிடம் பேச வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன. அதைப் பேசி விட வேண்டும்.... தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். தைரியம் தானாக வருவது கிடையாது. நாமே வரவழைத்துக் கொள்வது தான்!
    'சக்திவேல்.... நான் உங்ககிட்ட தனியாக பேச வேண்டும்." என்றாள். அவர் மெல்லச் சிரித்தார்.
    'தனியா பேச வேண்டியதையே நீ எல்லாருடைய முன்னாலேயும் சொல்லிட்டியே....." என்றார்.
    அவர் சொன்னதின் பொருள் புரிந்தது. ஆனால் அவள் தான் சக்திவேலுவை விரும்புவது அந்த ஊர் இளைஞர்களுக்கு அவசியம் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவள் எல்லோர் முன்னிலையிலும் சொன்னாள்.
    ஆனால் 'இது வேற விசயம்" என்றாள்.
    'சரி" என்று அவர் சொன்னது தான் தாமதம். அங்கே இருந்த நான்கு ஆண்கள் ஜன்னலை ஒட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்..... யாரையும் காணேம்!
    அவர் சொல்லுக்குத்தான் எவ்வளவு மதிப்பு! சக்திவேல் மீதிருந்த மரியாதை இன்னும் அவளுக்கு அதிகமானது.
    'இப்போ சொல்லு மீனா. என்ன விசயம்...?"
    'சக்திவேல் என் பெயர் மீனாட்சி. மீனான்னு கூப்பிடுவாங்க. அ.மீனாட்சி. இதிலிருக்கிற அ என்ற இனிசியலுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னை எல்லாருமே அனாதை மீனான்னுத்தான் எங்க ஊருல சொல்லுவாங்க. என்னை வளர்த்த அம்மா பேர் அறிவழகி. நான் அவங்களுக்கு அனாதையா ஆத்தோரத்துல கெடைச்சதும் எனக்காகவே அவங்க கல்யாணமே பண்ணிக்கலை. அவங்க அண்ணன் இதைக் காரணம் காட்டியே என்னைத் திட்டுவாரு. அடிப்பாரு. ஆனா இது என்னோட தப்பான்னு எனக்குத்தெரியல.
    அவருக்கு மூனு ஆம்பளப்புள்ளைங்க. சின்னப் புள்ளையா இருந்தப்போ அண்ணன் தங்கையா பழகினவங்க..... நான் பெரிய பொண்ணானதும் என்னை அசிங்கமான பார்வையில பாக்க ஆரமிச்சிட்டாங்க. அந்த மூனுப் பேருமே என்ன அடையனுமின்னு ஆசப்பட்டாங்க. அவங்களால் என்னால நிம்மதியாவே இருக்க முடியல. அம்மாவிடம் சொல்லி அழுதேன்.
    பாவம் அவங்க. எனக்காகத் தன்னோட அண்ணனப் பிரிஞ்சி இந்த ஊருக்கு என்னை அழைச்சிக்கினு வந்தாங்க. அவங்களுக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்மந்தம்மின்னு எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஊருல இருக்கிறவங்க எல்லாருமே நல்லவங்க. இந்த ஊருல எனக்கு பாதுகாப்பு இருக்கும் தான். இருந்தாலும் ஒரு பயம்."
    சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
    'என்ன பயம்......?"
    'சக்திவேல் எனக்கு நிறைய படிக்கணுமின்னு ஆசை. இப்போ ப்ளஸ் டூ. இந்த வருஷம் ஒரு ஆசிரமத்துல தங்கி வேலை செய்துக்கினே வர்ர வருமானத்துல படிக்கிறேன். ஆனால் அடுத்த வருஷம் இது முடியாதுன்னு நெனைக்கிறேன். அதனால என் படிப்புக்கு நீங்கத்தான் உதவி செய்யணும்."
    'நிச்சயம் செய்யுறேன். இந்த வருஷமே உன் படிப்புச் செலவை நானே ஏத்துக்கறேன்னுத் தான் சொன்னேன். நீ வேண்டாம்ன்னு சொல்லிட்டதா உன் அம்மா சொன்னாங்க. ஆமா.... இது தான் உன் பயத்துக்குக் காரணமா....?"
    'இல்லயில்ல. நீங்க படிப்புக்காக நிச்சயம் உதவி செய்வீங்கன்னு எனக்குத் தெரியும். நான் கேக்கவந்தது இது மட்டுமில்ல. நான் படிக்கணும். படிச்சி முடிச்சதும் பொது சேவை செய்யணும். இதுக்கெல்லாம் என் மனசுக்கு ஒரு தைரியம் தேவை. என் கற்புக்கு ஒரு பாதுகாப்புத் தேவை. அதுக்காகத் தான் நான் உங்க பேரை யூஸ் பண்ணிக்கப் போறேன். மற்ற ஆண்களோட விசமமானப் பார்வையிலிருந்து நான் தப்பிக்க வேணுமின்னா உங்க பேர் எனக்கு ஒரு பாதுகாப்பா இருக்கும். அதனால.... நீங்கத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவர்ன்னு எல்லாரிடமும் சொல்லிக் கொள்ளப் போறேன். இதுக்கு நீங்க அனுமதி தரணும்." என்றாள் சற்றுக் கெஞ்சளாக.
    'அதுக்கு என் பேரைத்தான் சொல்ல வேணும்மின்னு இல்ல. ஆத்தூர் பொண்ணுன்னாலே உன்னை யாரும் விசமமாகப் பாக்க மாட்டார்கள்." என்றார்.
    'இல்ல. இந்த ஊர் பேரைவிட எனக்கு உங்கப் பேருத்தான் பாதுகாப்புன்னு தோனுது." அழுத்தமாகச் சொன்னாள்.
    'சரி. அப்புறம் உன்னிஷ்டம். ஆனா எனக்குன்னு வேற விருப்பங்கள் இருக்குது. அதை நீ மறந்திடாதே." என்றார்.
    மீனா சற்று நேரம் யோசித்தாள். அப்படீன்னா...... இவர் வேறயாரையாவது விரும்புகிறாரா.....? இருக்கலாம். இருந்தால் என்ன.....?
    'என்ன மீனா பேச்சையே காணோம்....?"
    'ம்.... என்னைப் பொருத்தவரைக்கும் நீங்க கடவுள். கடவுளுக்குப் பக்தையிடம் கருணையிருந்தால் போதுமே.... அதுக்காக நான் கடவுளோட உருவத்தைத் தூக்கிக்கினே நடக்க வேணாம் இல்லையா....?"
    'உண்மை தான். ஆனால் நான் உண்மையில் கடவுளாக இருந்தால் உன்னோட வாதத்தை ஏத்துக் கொள்ளலாம். நான் சாதாரண மனுஷன் தானே. உன் நல்லதுக்காக ஒரு பொய்யைச் சொல்லப்போய் நாளைக்கு அதே வார்த்தையே உன் வாழ்க்கைக்கு இடையூறு தந்தால் என்ன செய்யிறது?"
    'அப்படி எந்த இடையூறும் வராது. ஏன்னா நான் உண்மையிலேயே உங்களை விரும்புறேன். ஆனால் நீங்க வேற யாரைக் காதலிச்சாலும் எனக்கு கவலயில்ல." என்றாள்.
    அவர் பதிலெதுவும் சொல்லவில்லை.
    மீனா யோசித்தாள். தன் கதலை ஏற்றுக் கொள்ள எதையாவது இவர் எதிர்பார்க்கிறாரா....? கேட்டுவிடலாமா....? கேட்டாள்.
    'சக்திவேல்.... ஒரு ஆண் ஒருபெண்ணை கல்யாணம் பண்ணிக்க என்னன்ன எதிர்பாப்பாங்க?"
    'ஒரு பெண் பெண்ணாக இருந்தாலே போதும். வேற எந்தத் தகுதியும் ஒரு ஆண்பிள்ளையை திருப்திபடுத்தாது." என்றார்.
    அவர் சொன்ன பதில் அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் இவ்வளவு தெளிவாகப் பேசுகிறவர் ஒரு பெண்ணிடம் நேருக்கு நேராக பேசக் கூச்சப்படுகிறாரே........
    எழுந்து கொண்டாள். அவனைச் சீண்டிப்பார்க்க வேண்டும் போல் இருந்தது.
    'இருந்தாலும் ஒரு சிங்கம் மானைப் பார்க்க இப்படி கூச்சப்படக் கூடாது." என்றாள் பொதுவாக சொல்வது போல். நிச்சயம் இப்படி சொன்னதற்காக அவர் கோபப்படுவார் என்று நினைத்தாள். ஆனால் அவர் அமைதியாகவே சொன்னார்.
    'சிங்கம் மானைப் பாக்கக் கூச்சப்படலை. சிங்கத்தைப் பாத்து மான் மருண்டு விடக்கூடாது இல்லையா......?"
    தன்னுடைய கூச்ச சுபாவத்தைக் கூட எப்படி மாற்றிச் சொல்கிறார். இவர் அன்பானவர் மட்டுமல்ல. அறிவாளியும் கூடத்தான். மனம் அவர் முகத்தைக்கான ஆவல் கொண்டது. சற்று நகர்ந்து நின்று பார்த்தாள். அவர் சாய்ந்திருந்த நாற்காலியின் பின்புறம் மட்டும் மிக நன்றாகத் தெரிந்தது. தோற்ற மனம் துவண்டது.
    'சரி. நான் கிளம்புறேன் சக்திவேல்."
    'சரி." குரல் மட்டும் வந்தது.

(தொடரும்)

1 comment :

  1. #'உண்மை தான். ஆனால் நான் உண்மையில் கடவுளாக இருந்தால் உன்னோட வாதத்தை ஏத்துக் கொள்ளலாம். நான் சாதாரண மனுஷன் தானே. உன் நல்லதுக்காக ஒரு பொய்யைச் சொல்லப்போய் நாளைக்கு அதே வார்த்தையே உன் வாழ்க்கைக்கு இடையூறு தந்தால் என்ன செய்யிறது?"#
    ம்ம்ம்ம் .......... ஆர்வமாக இருக்கிறது.

    ReplyDelete