Friday, 16 March 2012

போகப் போகத் தெரியும் - 2


   
        'நான் சக்திவேலுவுக்கு வேண்டியப் பெண்"  என்று.
    இப்பொழுது அவன் முகத்தில் அதிர்ச்சி! போட்டிருந்த குளிர்க் கண்ணாடியைக் கழற்றிவிட்டு அவளை நோக்கினான்.
   
-    தொடரும் -


  

தொடர் கதை பாகம் - 2

   பதினெட்டு வயது பருவ மங்கை. வட்ட முகம். கண்கள் இரண்டும் கருவண்டுகள் போல் சுழன்று இரப்பையை ஒருமுறை அடித்தது. எடுப்பான நாசி. மெல்லிய உதடுகள். சுருண்ட கற்றையான முடியை இரண்டாக வகுத்து இரண்டு சடையாகப் பின்னி முன் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
    தலையில் ஒற்றை ரோசா வாடிப்போய் இருந்தது. நெற்றியில் இருந்த சிகப்பு நிற சாந்துப்பொட்டு வியர்வையில் கலைந்து இருந்தது. பால் வண்ண நிறம் ஓடிவந்ததில் சிவந்த நிறமாக மாறி இருந்தது.
    உடல் செதுக்கி வைத்த செப்புச்சிலையை நினைவுப்படுத்தியது. ப+ப்போட்ட பச்சைப் பாவாடையும் அதே நிறத்தில் காலர் வைத்தச் சட்டை வியர்வையில் முக்கால் பாகம் நனைந்திருந்தது.
    அவன் அப்படித் தன்னை அளந்து பார்த்தது அவளுக்குச் சற்றுக் கூச்சமாக இருந்ததால் கையில் இருந்த புத்தகத்தை மார்புக்குக் குறுக்காகப்பிடித்து மறைத்தது போல் அணைத்தாள். அவன் அவளின் செய்கையைப் புரிந்துக்கொண்டான்.
    'யாரும்மா நீ.......? நான் இதுக்கு முன்னாடி இந்த ஊருல உன்னைப் பாத்ததில்லையே........" என்றான்.
    'நானும் தான் உன்னைப் பாத்ததில்லை. நான் உன்னைக் கேட்டேனா........?"
    ஒருமையில் பதிலளித்தாள்.
    அவனுக்குச் சற்று அதிர்ச்சி!
    'உனக்கு இந்த ஊரைப்பத்தி என்னத்தெரியும்? இப்படிப் பதில் பேசுறியே......."
    'என்னப் பெரிய ஊர்? ஊருக்கு முன்னாடி பெரிய அகிலாண்டேசுவரி கோயில். அது உள்ள ஒரு கொளம். பதினாறு தெரு. தெருவுக்கு முப்பது நாப்பது வீடுங்க. ஒரு வீட்டுக்கு ஆறுக்குக் குறைவான நபர். ஒரு மிடில் ஸ்கூல். ரெண்டு டீச்சர். ஊருல முக்கால் வாசிப்பேர் விவசாயிங்க. ஒரு தூர்வாராத சின்ன ஏரி. ஊரைத்தாண்டி ஒரு ஆறு. ஆத்தூர்ன்னு இந்த ஊருக்குப்பேரு."
    கடகடவென்று சொல்லிவிட்டு நிறுத்தினாள். அந்த ஆண் இவளை மென்மையாகப் பார்த்துப் புன்னகைத்தான்.
    'இவ்வளவு சொல்லுற......... இதை விட என்ன இருக்கனும்ன்னு எதிர்பார்க்கிற ஒரு நல்ல ஊருக்கு........?"
    'நிறைய இருக்குது. இந்த ஊருல எல்லாருமே நல்லவங்களா இருக்கிறாங்க. புத்திசாளிகளாகவும் இருக்கிறாங்க. அவங்க முன்னேற்றத்துக்குப் பணம் மட்டும் இருந்தால் இந்தக் கிராமத்தை எவ்வளவோ வழியில முன்னேத்தலாம்."
    அவள் சொல்லும் பொழுதே கண்களில் ஒளி தெரிந்தது. அந்த வாலிபன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
    மீனாவிற்கு அவன் அப்படிப் பார்ப்பது என்னவோ போல் இருந்தது.
    புதிய நடவடிக்கைகள் எடுக்கவும் புதிய வார்த்தைகள் சொல்லவும் பயப்படும் இந்த நாட்களில் அவள் சொன்ன புதிய வார்த்தைகள் அவனை யோசிக்கத் தூண்டியிருந்தது.
    ஆனால் மீனா வேறு மாதிரியாக நினைத்தாள்.
    எல்லா ஆண்களுமே பெண்களிடம் எதையோ எதிர்பார்த்துத்தான் பார்வையைச் செலுத்துகிறார்களோ......? ஆனால் இவனுடைய பார்வை எந்த வகை...... புரியவில்லை.
    'இதோபாரு.... நானு சக்திவேலுவைக் கட்டிக்கப்போறவ. எங்கிட்ட கண்ணியமா நடந்துக்கோ."
    சற்று அழுத்தமாகச் சொன்னாள்.
    இப்பொழுது அவன் கண்களில் மிகப் பெரிய அதிர்ச்சித்தெரிந்தது. இப்பொழுது இன்னும் அவளை அழுத்தமாகப் பார்த்தான்.
    மீனாவிற்கு அவனுடைய அதிர்ச்சிப்பார்வையின்; விளக்கம் புரியவில்லை. தவறாகச் சொல்லி விட்டோமோ....... யார் இவன்? இவனிடம் நாம் எதற்காக இப்படிச் சொன்னோம்? ஒரு சமயம் இவனுக்குச் சக்திவேலைத் தெரிந்திருக்குமோ......
    பேசியது பேசியாகி விட்டது. சொன்ன வார்த்தைகளை ஒருபொழுதும் திரும்ப விழுங்க முடியாது.
    என்ன செய்யலாம்.....? பேசாமல் நம் வழியில் நடப்போம். அதுவே சரியெனப்பட நடக்க ஆரம்பித்தாள். நடக்கும் பொழுது பாவாடை காயத்தில் பட்டு மேலும் எரிச்சலை அதிகமாக்கியதால் கையால் பாவாடையை இலேசாகத் தூக்கிக்கொண்டு தங்கித்தாங்கி நடக்க ஆரம்பித்தாள்.
    மோட்டார் வண்டிக்காரன் இதை பார்த்திருப்பான் போலும். வண்டியை அவள் அருகில் தள்ளிக்கொண்டு வந்து நின்று கேட்டான்.
    'காலில் என்ன காயம்? செருப்புப் போடுவது இல்லையா.....?"
    'கல்லுதடுக்கிடுச்சி. அதே நேரம் செருப்பும் அறுந்துடுச்சி".
    'சரிசரி வண்டியில ஏறு. ஊருக்குள்ள விடுறேன். நீ வேற சக்திவேலுவுக்கு வேண்டிய பொண்ணுன்னு சொல்லுறே....."
    சொல்லியபடியே தன் முதுகில் இருந்த தோள்பையை முன் பக்கம் எடுத்து வைத்துவிட்டு அவள் அமருவதற்கு ஏதுவாகச் சற்று முன் தள்ளி அமர்ந்தான்.
    மீனா உடனே ஏறிக்கொண்டாள். அவளுக்கே ஏன் என்று தெரியவில்லை. வண்டி புறப்பட்டது.
    அந்த ஊர் டாக்டர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி விட்டு 'இது டாக்டர் வீடு. போயி காயத்தக் காட்டி முதல்ல மருந்து போட்டுக்கினு வீட்டுக்குப் போ." என்றான்.
    அவள் இறங்கிக்கொண்டாள்.
    இது டாக்டர் வீடு என்பது அவளுக்கு அப்பொழுதுத்தான் தெரியும். ஆனால் இவருக்குத் தெரிந்திருக்கிறதே..... அப்படியானால் இவர் இந்த ஊர்க்காரரா? யார் இவர்.......?
    யோசித்து விட்டுத் திரும்பி அவனைப் பார்ப்பதற்குள் அவன் மோட்டார் வண்டியில் கிளம்பிப்  போய்க் கொண்டிருந்தான்.
    'ஐயோ.......ஒரு நன்றி கூடச் சொல்லவில்லையே......." என்று ஏங்கியது மனம்.
    நன்றியை எதிர்பார்த்து நல்ல உள்ளங்கள் உதவி செய்வது இல்லையே........
    கவலையுடன் டாக்டர் வீட்டின் கதவைத் தட்டினாள்.                         

   டாக்டர் மகேந்திரன் மீனாவின் கால் கட்டை விரலைச்சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் எந்த ஓர் அருவெருப்பும் இல்லை. கடமையே கண்ணாகச் செய்து கொண்டிருந்தார்.
   எவ்வளவு பெரிய மனிதர் இவர்! எவ்வளவு நோயாளிகளுக்கு வைத்தியம் செய்திருப்பார்! இவர் போய் நம் கால்களைத் தொடுவதா?
   பஞ்சியில் டின்சர் நனைத்துக் காயத்தில் வைக்கப்போன அவருடைய கையைத் தடுத்தாள் மீனா
   ‘ஏம்மா..... வலிக்காது. கொஞ்சம் பொறுத்துக்கோ. இல்லைன்னா காயம் சீழ் கோத்துப் புரையோடிப் போயிடும்."
அவர் அன்புடன் சொன்னார்.
   'இல்லை டாக்டர். அதுக்காக நான் தடுக்கலை. நீங்க எவ்வளவு பெரிய டாக்டர்! நீங்க போய் இந்தக் கிராமத்துல இப்படி சாதாரண நோய்களைப் பாத்துக்கினு..... எப்படி          முடியுது உங்களால? கஷ்டமா இல்லையா.....?"
   அவர் அவளைக் கனிவாகவும் அதே சமயம் சற்று உள்நோக்கியும் பார்த்தார்.
   'ஏன்மா மீனா...... நோய்களில் சாதாரணம் அசாதரணம் கூட உண்டா என்ன? நோய் சாதாரணமா இருக்கும் போதே அதுக்குத் தகுந்த மருத்துவம் செய்யலைன்னா அசாதரணமாகத்தான் போயிடும்."
   புன்னகையுடன் சொல்லிவிட்டு அவர் தன் வேலையைக் கவனித்தார். உதவி செய்வது எப்படி என்று தெரிந்தவர்களுக்கு அதை எப்படித் திட்டமாகச் செய்வது என்றும் தெரிந்திருக்குமாம். ஆனால்...... இவருக்குத் தன்னுடையப் பெயர் எப்படித்  தெரிந்திருக்கும். அவளுக்கு ஆச்சர்யம்! நேரடியாகவே கேட்டாள்.
   'டாக்டர் நான் தான் மீனான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"
   'ரொம்ப சுலபம். நான் இங்க வந்த இத்தனை மாசத்துல இன்னைக்குத்தான் முதல் முறையா உன்னைப் பாக்குறேன். உன்னால தான் நான் இந்த ஊருக்கே வந்தேன்னு உன்னைப்பத்தியே இந்த ஊர் மக்கள் பெருமையாப் பேசுறாங்க. அது மட்டுமில்ல. என்னைப்பத்தி நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு நீ தான் மீனா என்பதைத் தெரியப்படுத்திடுச்சி. அவ்வளவு தான்."
   அவர் சொன்ன அவ்வளவு தான் என்பதில்        பேச்சும் முடிந்து விட்டது. காயத்திற்குக் கட்டும் போட்டாகிவிட்டது என்பதற்கும் பொதுப்படையாக இருந்தது. மீனா அவர் கொடுத்த மருந்தை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பும்போது
   'மீனா........" டாக்டர் அழைத்தார்.
   'என்ன டாக்டர்?"
   'மீனா..... நானும் உனக்கு நன்றி சொல்லனும்மா.....’ மீனா அவih நிமிர்ந்து பார்த்தாள்.
                        (தொடரும்)

1 comment :

  1. # 'நிறைய இருக்குது. இந்த ஊருல எல்லாருமே நல்லவங்களா இருக்கிறாங்க. புத்திசாளிகளாகவும் இருக்கிறாங்க. அவங்க முன்னேற்றத்துக்குப் பணம் மட்டும் இருந்தால் இந்தக் கிராமத்தை எவ்வளவோ வழியில முன்னேத்தலாம்."
    அவள் சொல்லும் பொழுதே கண்களில் ஒளி தெரிந்தது. அந்த வாலிபன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.#
    நல்லா போகுது. நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க.
    http://newsigaram.blogspot.com

    ReplyDelete