சோதனைகள்
வந்தால் தான் மனிதனின் குணங்களைப் புரிந்து கொள்ள முடியும். சந்தோசமான நேரங்களில்
அவனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
மீனா..
இந்தச் சோதனையான நிகழ்ச்சியால் அவள் தன் கணவனைப் புரிந்து கொண்டாள். ஆனால் இது
அதிகப் படியான சோதனை! பட்டை தீட்டினால் தான் வைரத்தின் அழகு தெரியும். ஜொலி;
ஜொலிப்புத்
தெரியும். அதற்காக வைரமே தேயும் அளவிற்கா பட்டை தீட்ட வேண்டும்?
அதிகமான
மனத் தேய்மானம்.. அவனுடலையும் பாதியாகத் தேய்த்து விட்டிருந்தது. இத்தனைப் பேர்
அவளுடன் பேசியதில் ஒன்று மட்டும் அவளுக்குச் சரியாகப் புரிந்திருந்தது. அவனுக்கு
ஆறுதல் தேவை! அதைத் தன்னால் தான் தர முடியுமாம்!
நினைத்ததும் சிரிப்பு வந்தது. கொலையைச் செய்தது யார்? என்ற கேள்விக்குச் சரியான
பதிலைக் கொடுக்காமல்.. ;அது யார்ன்னுத் தெரியறது முக்கியம் இல்லை. முதலில்
சக்திவேலுவைச் சமாதானப் படுத்தி அவனைப் பழைய நிலைக்குக் கொண்டு வா.. ; என்றார்கள்.
என்ன
சொல்லிச் சமாதானப் படுத்துவது? இவர்கள் போனால் என்ன? வேற ஒருத்தர் கிடைப்பார் என்றா..?
இந்தச் சட்டை
கிழிஞ்சிட்டா.. வேற சட்டை வாங்கிக்கலாம்.. என்பது போலவா..? அல்லது ;நல்லவர்களைத் தன்னுடனே அழைத்து வைத்துக் கொள்ள
வேண்டும் என்று ஆண்டவர் நினைக்கின்றார். அவர்கள் சொர்க்கத்தில் நிம்மதியாக
இருப்பார்கள் ; என்று பிரசாங்கம் பண்ணுவதைச் சொல்லிச் சமாதானம் படுத்த முடியுமா..?
யோசனையுடன்
மாடி ஏறி வந்தாள். சக்திவேல் தோட்டத்து பக்கப் பால்கனிச் சுவரில் சாய்ந்து நின்று
கொண்டு எதையோ பார்த்துக் கொண்டு இருந்தான். சூரியன் மறைந்துவிட்டாலும் வானம்
இன்னும் வெளிச்சமாகத் தான் இருந்தது.
தோட்டத்து
மரக்கிளையில் இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்திப் பின்பு சமாதானமாயின. அவைகளின் சந்தோசத்திற்கு மரக்கிளை ஊஞ்சலாக
ஆடியது.
'என்னங்க.."
இவள் கூப்பிடத் திரும்பினான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.
'வா
மீனா" என்றவனின் குரலில் சுரத்தை இல்லை.
'என்னை
மன்னிச்சிடுங்க."
'எதுக்கு..?"
'நா உங்கள
தப்பா பேசிட்டேன்."
'ப்ச்சி.
விடு மீனா.. நா அத அப்பவே மறந்துட்டேன். கோபத்துலேயும் கவலையிலும் பேசும்
வார்த்தைகள் உண்மையைத் தான் பேசும். என்னைப் பத்தி நீ புரிஞ்சிக்கினது இவ்வளவு
தானான்ன நெனச்சி கவல பட்டேன். ஆனா நானும் அதுக்குக் காரணம் இல்லையா..? நிருஜா.. பெங்களூர்..
இதுபத்தி எல்லாத்தையும் நான் உங்கிட்ட சொல்லி இருக்கணும். ஆனா அதுக்கெல்லாம் அப்போ
நேரம் கெடைக்கல. இப்போ நேரம் இருக்குது. ஆனா நிம்மதி இல்ல. விடுமா.."
திரும்பவும் தோட்டத்தைப் பார்த்தான்.
'என்னங்க.."
திரும்பினான்.
'நாம கொஞ்ச
நாள் ஏதாவது வெளியூர் போயி இருந்துட்டு வரலாமா..?"
அவன்
அவளையே பார்த்தான்.
'ஏன் மீனா..
அப்படி வெளியூர் போனா நம்மால சரணையும் மாதவனையும் மறக்க முடியும்ன்னு
நெனைக்கிறியா..? நா இவ்ளோ நாளா வெளியூருல தான இருந்தேன். என்னால இன்னமும் மறக்க முடியலையே.."
அவன்
குரலுடைய சொல்ல மீனா கவலை தாங்காமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள். அவன்
கண்ணீர் இவள் கன்னத்தில் விழுந்த போது தான் சுய நினைவுக்கு வர முடிந்தது.
ஆறுதலாகப்
பேச வந்தவள் அழலாமா..? அவனை விட்டு நகர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள். பேச்சை வேறு திசைக்கு
மாற்ற வேண்டும். என்ன பேசுவது..? எதைப்பற்றிப் பேசுவது..? அவளை அதிகம் யோசிக்கவிட வில்லை அவன்!
'மீனா..
இன்னைக்கி நீ கல்யாணத்துல கலந்துக்கினது எனக்குத் திருப்தியா இருந்துச்சி. எங்க
வராம இருந்துடுவியோன்னு நெனச்சிட்டேன். ஆமா.. அப்புறம் எங்க போயிட்ட?"
'கோயிலுக்கு."
'கோயிலுக்கா..?
நீயா..? என்ன சாமிகிட்ட சண்ட
போடப் போனியா..?"
அவன்
முகத்தில் சிரிப்பு படர்ந்தது. அதைப் பார்க்க அவளுக்கும் சந்தோசமாக இருந்தது.
ஆனால் சிலவினாடிகள் தான்!
'ப்ச்சு..
சண்ட போட்டா கூட அவனுங்க நமக்குக் கெடைக்க மாட்டானுங்க." பெருமூச்சு
விட்டான். என்ன நினைத்தானோ.. தன் மனைவியைப் பார்த்தான்.
'மீனா..
அந்தத் தேனப்பன் மட்டும் எங்கையில கெடச்சா.. அவன நா அப்டியே.. நசுக்கி சாறு
புழிஞ்சி குடிச்சிடுவேன்." கண்கள் விரிய பற்களைக் கடித்து கொண்டு சொன்னான்.
ஏற்கனவே
சிவா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ;இந்தக் கோபத்த மாத்தணும் நீ. இந்த ஒன்னரை வருஷமா இந்த
வெறியோடத்தான் இருக்கிறான். இத மாத்தணும். அவன் தனி ஆள் கெடையாது. அவனுக்காக நீ
இருக்கிற. எங்களுக்கு அவன் வேணும். அவன் மனச எப்படியாவது மாத்தி அமைதி படுத்து.
உனக்கு அப்பவே நாங்க தகவல் சொல்லி இருந்திருப்போம். அவன் கன்டீஷனா வேணாம்ன்னு
சொல்லிட்டான். நீ இருந்த எடமும் எங்களுக்குத் தெரியாது. ஒனக்காகத் தான் நாங்க
எல்லாரும் காத்துகினு இருந்தோம். உன்னால தான் முடியும். ; என்று சொல்லி இருந்தான்.
'அதுதான்
தேனப்பனோ.. வெற்றிவேலோ.. காரணம் கெடையாதுன்னு போலிசு சொல்லிடுச்சே.. அப்புறம்
எதுக்கு அவன் மேல கோபப்படணும்?"
'வெற்றிவேல்
கெடையாது. எனக்கு நல்லா தெரியும். ஆனா தேனப்பன் சொல்லி தான் இது நடந்திருக்கும்.
இந்தத் துணிச்சல் தேனப்பனுக்கு மட்டும் தான் இருக்குது. உனக்குத் தெரியாது மீனா..
இந்த ரெண்டு ஊர் சண்டையும் இன்னைக்கி நேத்து தொடங்கல. பரம்பர பரம்பரையா வருது.
காரணம் நாலு தலைமுறைக்கி அப்பால இருந்திருக்கும். ஆனா இன்னமும் தொடருது.
படிப்பறிவு இல்லாததாலத் தான் இப்படியெல்லாம் நடக்குதுன்னு என்னோட ஊருல இருக்கிற
எல்லா புள்ளைங்களையும் படிக்கவச்சேன். ஏன் வெற்றிவேல் கூடப் படிச்சவன் தான்!
அதனாலத்தான் அவன் வீணான சண்டையில தலையிடாம நகர்ந்துகிறான்.
ஆனா
தேனப்பன் அப்படி கெடையாது. அவன சாகடிச்சிட்டா இனி வர்ற தலைமுறை பிரச்சனை இல்லாம
இருக்கும். அவன் மட்டும் எங்கண்ணுல படட்டும். அப்பறம் இருக்குது."
மூச்சிறைக்கக் கத்தினான்;.
'சக்திவேல்
நீங்க தேனப்பன சாகடிச்சிட்டா.. எப்படி பிரச்சனை வளராம போவும்..? நீ சாகடிச்சா.. உன்ன
சாகடிக்க வெற்றிவேல் கத்திய தூக்குவான். அப்புறம் உங்க புள்ள. அவன் புள்ளை.
இப்படியே அனுமார் வாலாட்டம் நீண்டுக்கினே தான் போவும். என்ன புரியாம பேசுறீங்க..?"
'அப்ப என்னை
என்னத்தான் பண்ண சொல்லற..?"
'அமைதியா
இருங்க. காலம் தான் நல்ல மருந்து. இந்தத் தலைமுறை விட்டுக் கொடுத்துட்டா.. அடுத்த
தலைமுறையாவது அமைதியா வாழலாம் இல்லையா..?
இப்போ
பொருமையும் அமைதியும் தான் முக்கியம்."
இதை அவன்
யோசித்தான். அவன் யோசிக்கட்டும..; நாம் வந்த வேலை முடிந்தது என்று நினைத்து நகரப் போனாள். 'மீனா இப்போ எங்க போர?"
கோபமாகக் கேட்டான்.
'ஏன்..?
கீழத்தான். நா
வந்து ரொம்ப நேரமாயிடுச்சி. இப்பவே கீழ போவலன்னா உங்க அம்மா என்ன நேரடியாவே
திட்டுவாங்க.."
'எதுக்குத்
திட்டணும்..?" புரியாமல் கேட்டான்.
'என்ன..?
ஒன்னுந்தெரியாத
மாதிரி கேக்குறீங்க? நா வந்த மறுநாளே.. ;இன்னும் நாலு மாசம்
கழிச்சி வந்திருக்கக் கூடாது? அவனோட ஜாதக தோஷம் முடிய
இன்னும் நாலு மாசம் இருக்குதுன்னு ஜாட மாடையா சொன்னாங்க. இப்ப கூட நா மாடிக்கி
வரும் போது ஒரு மாதிரியா பாத்தாங்க. எனக்கு அவங்கள பாத்தாலே பயம்! நா
போறேன்பா.." நகரப் போனவளைச் சட்டென்று கையைப் பிடித்து இழுத்தான்.
'என்ன இது?
யாராவது பாத்தா
தப்பா நெனைக்க போறாங்க..?" இவள் கையை இழுத்தாள். அவன் உடும்பாகப் பிடித்திருந்தான்.
'ஏதாவது
நெனைச்சிக்கினு போவட்டும். நீ இப்ப எங்கூடத்தான் இருக்கணும்." அவளை இழுத்து
அணைத்தான்.
'இந்த ஆச
இவ்வளவு நாளா எங்க போச்சாம்..?" சிணுங்கினாள்.
'ம்..
படிக்கப் போயிருந்துச்சி. உன்னோட ஆசைகள நிறைவேத்தணும்ன்னு மனச கட்டுபடுத்திக்கினு
இருந்துச்சி. மத்தபடி யாருக்கும் பயந்தோ.. ஜாதகத்துக்குப் பயந்தோ.. உன்னையப்
பிரிஞ்சி இருக்கல."
'என்ன..?
என்னோட ஆசையா..?"
நிமிர்ந்து அவன்
முகத்தைப் பார்த்தாள். அவன் கைகளைத் தளர்த்தினான்.
'ஆமா மீனா..
நீ மொதோ மொதோ எங்கிட்ட வந்து 'சக்திவேல் நா உங்கள விரும்பறேன்"ன்னு மட்டும் சொன்னதோட
நிறுத்தியிருந்தா.. எப்படி எப்படியோ போயிருக்கும். ஆனா நீ என்ன சொன்ன..? எனக்கு படிக்கணும்.
எப்படியாவது ஒரு டிகிரி வாங்கணும்ன்னு சொன்ன. ஒனக்கு ஞாபகம் இருக்குதா? இல்லையா?..ன்னு தெரியல. ஆனா எனக்கு
நல்லா ஞாபகம் இருக்குது. உன்னோட ஆசைய எப்படியாவது நிறை வேத்தணும்ன்னு தான் நா உன்ன
விட்டு வெலகியே இருந்தேன். இப்போ அந்த ஆசை நிறைவேறிடுச்சி. பிறகென்ன..?"
அவள்
கண்கலங்கத் தன் கணவனைப் பார்த்தாள். கண்ணீரைச் சுண்டிவிட்டான்.
'அப்போ..
ஜாதகம் தோஷம் எல்லாம் பொய்யா..?"
'அது
பொய்யோ.. மெய்யோ.. எனக்குத் தெரியாது. எனக்கு ஜாதகத்து மேல நம்பிக்கை கெடையாது.
என்னைப் பொருத்தவரைக்கும் ஜாதகம் ஜோசியம் இதெல்லாம் சுத்த பித்தலாட்டம். நா
பொறந்ததும் எங்கப்பா ஒரு வருஷத்தல இறந்திடுவாருன்னு ஒரு ஜோசியர் சொன்னாராம். அதே
மாதிரி நடந்திட்டதால எங்கம்மா அதையே புடிச்சிக்கினாங்க. எனக்கு இருவத்தெட்டு வயசுல
தான் கல்யாணம் நடக்கும்ன்னு சொன்னாங்க. ஆனா இருவத்தஞ்சி வயசுலேயே ஆயிடுச்சி. ரத்த
சொந்தத்துல தான் பொண்ணு அமையும்ன்னு சொன்னாங்க. ஆனா நீ எனக்கு மனைவியா அமைஞ்ச..
ஜாதகம் சரின்னா இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்..?
எனக்கு
அதெல்லாம் நம்பிக்க இல்ல. நா அம்மாவ மதிக்கறேன். அவங்க மனசு நோவக் கூடாதுன்னு தான்
நெனைக்கிறேன். ஆனா.. எனக்கு நீயும் வேணும். இனிமேலும் உன்ன பிரிஞ்சிருக்க
முடியாது. புரிஞ்சிக்கோம்மா.."
கெஞ்சளாகச்
சொன்னான். அவளுக்கு அவன் கையை விலக்கிவிட்டு நகர்ந்து போக மனம் வரவில்லை!
இவர்களைக்
கண்ட மல்லிகை மொட்டுக்கள் கொடியில் இதழ் விரித்துச் சிரித்துத் தலையசைத்து
ரசித்தன!
(தொடரும்)
சோதனைகள் வந்தால் தான் மனிதனின் குணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்