Friday, 26 October 2012

போகப் போகத் தெரியும் - 28


   கூட்டம் கலை கட்டியது! ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாகப் பேச.. கடைசில் இந்த வருடம் எட்டாம் வகுப்புவரை இருந்த பள்ளியைப் பத்தாம் வகுப்பு வரையில் அதிகப்படுத்துவதாக முடிவானது.
   மீனா எதுவும் பேசாமலேயே அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள். கடைசியில் சக்திவேல் தான் கேட்டான்;
   'மீனா.. இந்த முடிவுக்கு நீ என்ன சொல்லுற?" என்று.
   'உங்க ஊருக்கு எது சரியோ.. அதன்படி செய்யிங்க." அவளின் இந்த அலட்சியப் பதில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
   'ஏன்.. இந்த ஊருமேல ஒனக்கு அக்கரை இல்லையா..?"
   'அக்கர எல்லாம் இருக்குத்தான். ஆனா என்னோட விருப்பத்த சொல்ல எனக்கு அறுகத இருக்குதான்னு தான் தெரியல."
   'மீனா.. இது பொதுக் கூட்டம். இங்க தனிப்பட்ட விசயம் எதுவும் பேசக்கூடாது. அறுகத இல்லாதவங்கள நாங்க கூட்டத்துக்கு கூப்பிட வேண்டிய அவசியம் கெடையாது. நீ இந்த ஊருல பல விசயங்கள எடுத்துக் காட்டி நல்லது நடக்க ஒதவியா இருந்திருக்கிற. அதுக்காகத்தான் ஒங்கிட்ட அபிப்பிராயம் கேட்டோம். இப்ப சொல்லு. இந்த முடிவு சரியா? இல்லையான்னு.."
   கணேசன் கோபமாகச் சொன்னான். சட்டம் பேச வேண்டிய நேரத்தில் பேசித்தானே ஆக வேண்டும்.
   'இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லைங்க." நிதானமாகச் சொன்னாள்.
   'ஏன்..?"
   'நீங்க ஆம்பளைங்க. உங்களோட பிரச்சனைங்க வேற. எங்களோட பிரச்சனைங்க வேற. எட்டாங்கிளாசு வர கிராமத்துல படிச்சாலும்.. பிறகு டவுனுக்குப் போய்ப் படிக்கும் போதே நெறைய மாற்றங்கள். படிப்பிலேயும் சரி. போய்வரும் பாதையிலும் சரி. சிறுவயசா இருக்கும் போது அது எங்களுக்குப் பெரிசா படாது. ஆனா.. பத்தங்கிளாசு முடிச்சிட்டுப் படிக்கக் கிராமத்த விட்டு டவுனுக்கு  போவும்போது வயசுவந்த பொண்ணுங்களுக்கு நெறைய சிரமங்கள் இருக்குது. தவர இந்த ஊருல ஒம்பது பத்துப் படிக்க நெறைய பேர் இல்ல. அதனால பத்தம் வகுப்பு வர பெரிசுபடுத்த அவசியம் இல்ல."
    அனைவரும் அவள் பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள். அவளே தொடர்ந்தாள்.
   'ஆனா.. இதையே வேற மாதிரி யோசிக்கலாம். சின்னதா ஒரு கம்பியூட்டர் சென்டர் தொறக்கலாம். இதனால மாணவர்கள் என்றில்லாமல் நம்ம ஊர்ல படிச்ச பொண்ணுங்களுக்கும் கத்துத் தரலாம். இதுக்குன்னு ஆளு வக்கவேண்டிய அவசியம் இல்ல. ஏற்கனவே கத்துக்கினு இருக்கிறவங்க மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கலாம். இன்டர்நெட் போட்டுட்டா.. கம்பியூட்டர் இருந்த எடத்திலேர்ந்தே உலகத்தைப் பாக்க முடிஞ்ச ஓரு அருமையான சாதனம்! இப்படி செஞ்சா மாணவர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருமே பயனடையலாம்."
   எழுந்து நின்று சொன்னவள் அமர்ந்தாள். ஒரு பெண் எழுந்தாள்.
   'ஆமாண்ணா.. நா டவுனுல தான் பத்தாவது படிக்கறேன். ரெண்டு வருஷமா பஸ்சுல போய்வரதால டவுன் எனக்குப் பழகி போயிடுச்சி. மீனா அக்கா சொன்னமாதிரி செஞ்சா எங்களுக்கும் வசதியா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சி அங்கேயே கத்துகறத விட இங்க இருந்தா எங்களுக்கு வசதியா இருக்கும். நேரமும் மிச்சம்." என்றாள்.
   'அப்போ பள்ளிக்கூடத்த பெரிசு படுத்த வேணாங்கிறிங்களா..?"
   'வேணாங்கில. இந்த வருஷம் வேணாம். பிறகு பாத்துக்கலாம்." மீனா சொல்ல எல்லோருமே இதையே ஆதரிக்க இதுவே முடிவானது.
   'சரி. வேற ஏதாவது சொல்லணும்ன்னா சொல்லலாம்." சக்திவேல் சொல்ல மீனா கை தூக்கினாள்.
   'என்ன சொல்லு?"
   'உங்க ஊருல ஆத்துக்கு வடபுறமா.. பக்கத்து கிராமத்துக்கு ஓரத்துல இருக்கிற நெலம் உங்களுக்கு சொந்த மானது தானே..?"
   அவள் இப்படி கேட்க.. அவள் அருகில் அமர்ந்திருந்த சேகர்.. 'உங்க ஊருன்னு ஏன் சொல்லுற. நம்ம ஊருன்னு சொல்லு." கடுகடுப்பாகச் சொன்னான்.
   'நம்ம  எடந்தான். அதுக்கென்ன..?" சக்திவேல் கேட்டான்.
   'ஏன் அந்த எடத்த தரிசாவே வச்சிருக்கீங்க?"
   'அது ஊருக்கு ரொம்ப தொலைவுல இருக்கு. அது மட்மில்ல பக்கத்தூருகாரனுவ ஏதாவது பிரச்சன பண்ணுவானுங்க. சரியா கவனிக்க முடியாது. ஆத்தோரத்துல இருக்குது. லேச செம்மண் கலந்த நெலம்." என்றார் ஒரு பெரியவர்.
   'இருந்தா என்ன? மண்ண கொஞ்சம் கொண்டு போயி மண்வள ஆராய்ச்சி காரங்க கிட்ட கொடுத்தா அவங்க ஆராஞ்சி பாத்து அந்த நெலத்துல என்ன உரம் சேத்தா என்ன தன்ம வரும். என்ன பயிர் செய்யலாம்ன்னு சரியா சொல்லிடுவாங்க. தரிசா தானே கெடக்குது. ஏதாவது மரம் வச்சா பிறகு பயனாவும் இல்லையா..? இப்போத்தான் விவசாயத்துக்கினு எவ்வளவோ நவீன கருவிங்க வந்திடுச்சே.. நீங்க ஏன் அந்த நெலத்த உங்க ஒழைப்பால மதிப்பாக்கக் கூடாது? தரிசா இருக்கிற வரைக்கும் அது வெறும் மண்ணு தான். உழைச்சா அதுக்கு மதிப்பு வந்திடும் இல்லையா..?" கேட்டாள்.
   அங்கிருந்தவர்கள் இதை அசை போட்டபடி சக்திவேலைப் பார்த்தார்கள்.
   'இதுவும் நல்ல விசயம் தான். இதுக்கான முயற்சிய நாங்க கூடிய சீக்கிரம் தொடங்கறோம். ரொம்ப நன்றி மீனா.' என்றான்.
   கூட்டம் கலைந்தது. மீனா யோகி ரத்தினத்திடம் பேசிக் கொண்டு இருந்தாள். ஒரு சிறுவன் வந்து அவளிடம் சொன்னான்.
   'அக்கா.. உன்னோட ப்ரென்சுங்க உன்ன வர சொன்னாங்க."
   'ம். தோ வர்றேன்னு சொல்லு."
   அவனை அனுப்பிவிட்டு ரத்தினத்திடம் பேச வேண்டியதைப் பேசிவிட்டு நண்பர்களைத் தேடிச் சென்றாள்.
   மனத்தில் சந்தோசத்தை உணர்ந்தாள். நண்பர்கள் சந்தோஷத்தை மட்டுமல்ல. துன்பத்தையும் பங்கு போட்டுக் கொள்பவர்கள் தானே..!
   உண்மையான நட்பு தன்னுடைய துன்பத்தைச் சொல்லி அவர்களையும் துன்பத்தில் தள்ளிவிடக் கூடாது என்று நினைப்பது தான்! 
   மீனாவும் நினைத்துக் கொண்டாள்.. தனது துன்பம் தன்னுடனே இருக்கட்டும் என்று!
   ஆனால்.. உடுக்கை இழந்தவன் கை போல தானாகவே வந்து உதவுவது தான் உண்மையான நட்பு என்பதை மறந்து விட்டாள் போலும்!!

  
   வானத்திற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் இன்;று குருடாகத்தான் இருந்தது. கழுவிவிட்ட கரும்பலகையைப் போல. ஒரு விமானம் மின்மினிப் பூச்சியாகப் பறந்து கொண்டிருந்தது.
   மீனா பள்ளிக்கூட வகுப்பில் நுழைந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். ஆறு பேரும் இருந்தார்கள். யார் முகத்திலும் சிரிப்பு மருந்துக்கும் இல்லை! அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கவும் இவளே பேச ஆரம்பித்தாள்.
   'என்ன..? எல்லாரும் நல்லா இருக்கிறீங்களா..?"
   'நாங்க நல்லா இருக்கிறது இருக்கட்டும். நீ ஏன் இப்படி மாறி போன?" சேகர் கேட்டான். கோபம் இருந்தாலும் நிதானமாகப் பேசினான்.
   'மீனா ஒனக்கு என்னப் பிரச்சனை..? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு." இது ஜுவானந்தம்.
   'ஏன் எங்கள விட்டு விலகிப்போக நெனைக்கிற..?" இது சசிதரன்.
   மீனா பேசாமலேயே அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் இலேசாகக் கலங்கத் துவங்கின.
   'மீனா இதுக்கெல்லாம் பதில் சொல்லலைன்னாலும் பரவாயில்ல. ஆனா இந்த ஒரேயொரு கேள்விக்கி மட்டும் பதில் சொல்லு. நீ சக்திவேலை விரும்புறியா..? இல்லையா..?" சரவனன் அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டான்.
   'இல்லை சரண். எனக்கு அந்தத் தகுதியில்ல!"
   நிதானமாகச் சொன்னாள். அனைவருக்கும் அதிர்ச்சி!!
   'என்ன சொல்லுற நீ..?" சிவா கோபத்தோடு கேட்டான்.
   'ஆமா சிவா. சக்திவேல் இந்த ஊருக்கே நிழல் தர்ற பெரிய மரம். நாமெல்லாம் அதோட நெழல்ல தங்கி இளைபாறிவிட்டு போயிடணுமே தவிர.. அங்கேயே தங்கிட நெனைக்கக்கூடாது. அந்த மரம் தர்ற நெழலுக்கும் பழத்துக்கும் நம்மால பதில் உதவி செய்ய முடியாது சிவா. அதுவும் நா அந்த நெழல்ல நின்னு அதுக்குக் கொடக்கூலி கேட்டுத் தரத் தகுதியில்லாததால என்ன வெளியில இல்லயில்ல. வெய்யிலுல தள்ளி விடுறவங்களும் இருக்காங்க சிவா.." குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
   'யார் உன்ன அப்படி செஞ்சது?" கோபமாகக் கேட்டான் சரவணன்.
   'யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு எல்லாருமே வேணும். ஆனா எனக்குத்தான் யாருமேயில்ல."
   'மீனா.. நீ இப்படிப் பேசக்கூடாது. நா இருக்கறேன். நீ சரின்னு ஒரு வார்த்தைச் சொல்லு. நா ஒன்ன என்னோட சகோதரியா சட்டபடி ஏத்துக்கறேன். நான்னு இல்ல. எங்க ஆறு பேரையும் உன்னோட உறவா ஏத்துக்கோ." அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சளாகச் சொன்னான்.
   மீனா அடக்கிய கண்ணீர் ஆறாக இறங்கியது. கையை அவன் கையிலிருந்து உருவினாள்.
   'வேணாம் சரண். ஒனக்கு ஒன்னு தெரியுமா? சின்ன வயசுல நா யாரையாவது அம்மான்னு கூப்பிட்டாக்கூட அனாத நாயே.. நானா ஒனக்கு அம்மா..ன்னு திட்டுவாங்கித் திட்டுவாங்கியே.. நா யாரையுமே அம்மா அண்ணன் அக்கா மாமான்னு ஒறவுமொற வச்சி கூப்பிடறது கெடையாது. அது பழகிடுச்சி! பெரிசா படல. ஆனா என்ன வளத்தவங்களே.. என்ன அனாதைன்னு சொன்ன அந்த நிமிஷமே நா செத்துப் போயிடN;டன் தெரியுமா..?
   ஆனா சரண்.. எனக்கு இந்த உறவு முறையவிட நீங்க ஆறு பேரும் பெருசா தெரியிறீங்க! உங்கள என்னோட அம்மா.. அப்புறம் சக்திவேலு இவங்களல்லாம் விட உயர்ந்த எடத்துல வச்சிறுக்கிறேன். உங்க ஆறுபேரோட நட்பு என்னோட கடைசி நிமிஷ உயிர் இருக்கிற வரைக்கும் நீடிச்சி இருக்கணும். நா எதையுமே மனசால ஆசப்பட்டது கெடையாது. ஆனா இந்த ஆசய நீங்க நிறைவேத்தணும்.
   என்ன பொருத்தவரைக்கும் தாய்பாசம் காதல் இதவிட நட்பு சிறந்தது. இன்னைய நிலையில நீங்க மட்டும் தான் எனக்கு இருக்கிறீங்க. உங்கள நா எந்த விதத்துலேயும் எழக்க விரும்பல."
   'எதுக்காக இழந்துடுவேன்னு நெனைக்கிற?"
   'நா காலேஜுப்ரோகிராம் முடிச்சிட்டு வந்த அன்னைக்கி அந்த வேந்தன் என்ன வழிமறிச்சிக் குடி போதையில என்னன்னமோ சொல்லித் திட்டினான். அவன் உங்க ஆறு பேரையும் சக்திவேலையும் சாகடிக்காமட விடமாட்டேன்னு சொன்னான். அவன நெனச்சாலே எனக்கு பயமா இருக்குது. அதனால தான் முடிவெடுத்தேன். என்னால இந்த ஊருல யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு.
   சக்திவேல் என்னை விரும்பரார்ன்னு எனக்குத் தெரியும். ஆனா வேந்தனும் என்னதான் கட்டிக்குவேன்னு சொல்லி மெறட்டுறான். இந்தப் பிரச்சனையில நா உங்களையோ சக்திவேலையோ எழக்க  முடியாது! அது மட்டுமில்ல. எனக்காக யாரும் எந்தப் பிரச்சனையிலும் தலையிடக் கூடாது. பிரச்சனைன்னு வந்தா.. நானே அத போக்கிக்க முயற்சி பண்ணுறேன்;. நா டவுனுல இருக்கிற வரைக்கும் அவனால எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஆனா இங்க வந்தாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு.
   அதனாலத்தான் சொல்றேன். எனக்காக யாரும் வராதீங்க. இது தான் நா உங்ககிட்ட வேண்டி கேட்டுக்கிற உதவி! தயவு செஞ்சி என்னோட வழியில என்னை விட்டுடுங்க." கைகூப்பி சொன்னாள்.
   ஆறு பேருமே அவள் செய்கையை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். மீனா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தாள்.
                           (தொடரும்)                     
      

2 comments :

  1. சக்திவேல் நிலைமை தான் சங்கடம்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete