Sunday 22 July 2012

போகப் போகத் தெரியும் - 18



   திருவிழாவிலேயே பிரட்சனை வரும் என்று அவளுக்கு அப்பொழுது தெரியாது.
   பிரச்சனை என்று ஒன்றை நாம் அனுபவிக்கும் வரை நாம் நம்முடைய துணிவைத்தானே நம்பியிருக்க வேண்டும்.

   யாரோ தன் பின்னால் கணைக்கும் குரலைக் கேட்டு சட்டென்று திரும்பிப்பார்த்தாள் மீனா.
   சக்திவேல் நின்று கொண்டிருந்தான்.
   அவனைப் பார்த்ததும் கட்டிலில் குப்புற படுத்திருந்தவள் சட்டென்று எழுந்து நின்றாள். இரவு எட்டுமணியாகும் இந்த நேரத்தில் இவர் எங்கே இங்கே..? மனம் கேள்வி கேட்டது. ஆனால் அவனைக் கேட்க வாய் வரவில்லை.
   பேசாமல் நின்று அவனைப் பார்த்தாள். அவன் அவளை உச்சிமுதல் பாதம் வரையில் ரசித்துப் பார்த்துச் சிரித்தான்.
   அவள் அன்று வீட்டில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் பழைய பள்ளி சீருடையை அணிந்திருந்தாள். அது காப்பி நிறத்தில் குட்டை பாவாடை (ஸ்கேட்) சந்தன நிறத்தில் காலர் வைத்த சட்டை. சட்டை சற்று சிறிய அளவு! அவள் அங்கங்களை அளவெடுத்து தைத்தது போல் இருந்தது.
   அவன் அவளைப் பார்த்த பார்வை வினோதமாகப் பட்டதால் தன் அருகில் கிடந்த சுரிதாரின் துப்பட்டாவை எடுத்து மார்புக்குக் குறுக்காகப் போர்த்தினாள். அவன் இவள் செய்கையை உணர்ந்து கண்களை தாழ்த்திச் சிரித்துக் கொண்டான். இதற்குப் பிறகும் சும்மா நிற்பது சரியில்லை!
   'நீங்க எங்க இங்க இந்த நேரத்துல?"
   'ம்.. கீழ கதவ தட்டித்தட்டிப் பாத்தேன். யாருமே பதில் தரல. வீட்ட தொறந்து போட்டுட்டு எங்கதான் போயிருப்பீங்கன்னு நெனச்சி உள்ளவந்தேன். யாரையும் காணாம். அதான் மாடிக்கு வந்தேன். இங்க நீ என்னடான்னா.. சக்திவேலுன்னு எழுதன தாள ரசிச்சி பாத்துக்கினு.. கண்ணனைப் பாக்க ராத ஏங்குன பாட்டக்கேட்டுக்கினு மெய் மறந்து போய் இருக்கற!" என்றான்.
   தன்னை உன்னிப்பாகப் பார்த்திருக்கிறான். அவளுக்கு வெட்கத்தில் கன்னம் சிவந்தது.
   'சரி என்ன விசயம்?" மெதுவாகக் கேட்டாள்.
   'நல்லா வெளையாடிக்கினு இருக்கிற பொண்ணுங்க திடீர்னு ஒருநாள் பெரிய மனுஷியாயிட்டான்னு வெளிய வராதுங்க. அந்த மாதிரி நீயும் பெரியமனுஷி ஆயிட்டியோன்னு நெனச்சி.. பச்ச ஓலகட்டிட்டு போலாம்ன்னு தான் வந்தேன்." என்றான் குறும்பாக. அவனின் கேலி புரிந்தது.
  'அதல்லாம் அஞ்சி வருஷத்துக்கு முந்தியே ஆயாச்சி. என்னோட மாமா பசங்க மூனு பேரும் எனக்குப் போட்டி போட்டுக்கினு ஓல கட்டினாங்க."  என்றாள் பெருமையாக. ஆனால் அதே சமயம் சக்திவேலுவின் முகம் மாறுவதையும் கண்டு ரசித்தாள்.
   'சரிசரி. அன்னைக்கு எதுக்காக மயங்கி விழுந்த? அத மொதல்ல சொல்லு." என்றான் குரலில் சற்றுக் கடுகடுப்பாக.
   'அது.. யானையப் பாத்துத்தான்;;.. பயந்துட்டன்.."
   'யானைய பாத்து பயந்தா.. கன்னம் ரெண்டும் ஏன் கன்னிபோவணும்? உன்னோட ஜாக்கெட் கிழிஞ்சி அதுல இருந்த ஊக்கு ஏன் உன்னோட தோள்பட்டையைக் குத்திக் கிழிச்சி இருக்கணும்? சொல்லு அங்க என்ன ஆச்சி?"
   அவன் அங்கே நடந்ததைச் சரியாக யூகித்து இருக்கிறான். அவனின் கேள்வி வேந்தனை நினைவுப்படுத்தியது. அந்த நிகழ்ச்சி பழைய காயத்தைக் கீறிவிட்ட வேதனையை ஏற்படுத்தியதால் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கத் துவங்கின.
   சட்டென்று திரும்பி கண்ணீரை அடக்கமுயன்றாள். முடியவில்லை. அவளின் செய்கையை உணர்ந்த சக்திவேல் அவளின் தோளில் கை வைத்துத் தன்பக்கமாகத் திருப்பினான். குனிந்திருந்தவளின் முகவாய்கட்டையை நிமிர்த்தினான்.
   அவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் ஆறாக கன்னத்தில் இறங்கியது.
   'சொல்லுமா.. உன்ன யார் என்ன செஞ்சாங்க? சொல்லு. பயப்படாம சொல்லு. ஒனக்கு நான் இருக்கறண்டா. சொல்லு."
   அவள் தோள்பட்டையை உலுக்கினான். அவன் அப்படி சொன்னதும் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.
   நமக்கு உதவியாக நம்மை நேசிப்பவர் அருகில் இருந்தால் சில நேரங்களில் கவலையை அதிகப்படுத்தி அதை வெளிக்காட்டவும் வைத்துவிடுகிறது!
   அவன் ஒன்றும் விளங்காமல் யோசனையுடன் நின்றிருந்தான்.
   சற்று நேரம்; தன்னை மறந்து அழுதவள் சட்டென்று அவனை விட்டு விலகி நின்று கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன் அவள் செய்கையை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
   'இதோ பாருங்க. நா அன்னைக்கி யானைய பாத்துத்தான் மயக்கடிச்சி விழுந்தேன். வேற ஒன்னும் காரணமில்ல." என்றாள்.
   அவன் அவளையே  பார்த்துக் கொண்டிருந்தான். அவளால் அவனுடைய கோபக்கனல் பொருந்திய கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாதவளாக தன் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பினாள்.
   'அப்போ.. என்ன காரணம்ன்னு எங்கிட்ட சொல்ல மாட்டயில்ல?"
   'வேற எதுவும் காரணம் இல்ல." என்றாள் திட்டவட்டமாக!
   'சரி. அத நானே கண்டுபுடிக்கிறேன்." என்று அழுத்தமாகச் சொன்னவன் சற்று நேரத்தில் குரலை மென்மையாக்கிக் கொண்டு  'மீனா.. நாளை காலையில ஒம்பதர மணிக்கி தேர் ஊர்வலம் பொறப்படும். நீ கண்டிப்பா அந்த ஊர்வலத்துல கலந்துக்கணும். என்ன..?" சற்றுக் கனிவாகச் சொன்னான்.
   'சரி" என்றாள் சற்றுத் தயக்கமாக.
   'இன்னும் என்ன? ஒனக்கு யானத்தான் பயம்ன்னா.. நாளைக்கி யானைங்கள ஊருக்கு வெளிய நிக்க வக்கிறேன் போதுமா..? ஆனா நீ ஊர்வலத்துல அவசியம் கலந்துக்கணும் புரியுதா..?"
   'சரி கலந்துகிறேன்." என்றாள். மனக்கண் முன் வேந்தன் வந்து நின்றான்.
   'சக்திவேல்.." முதன்முறையாக அவனைக் கூப்பிட்டாள்.
   'என்ன..?"
   'சக்திவேல். திருவிழா முடியிற வரைக்கும் நீங்க கொஞ்சம் பொறுமையா அமைதியா இருக்கணும். சரியா..?"
   'ஏன்..? என்ன விசயம்..?"
   'இல்ல. இப்போ திருவிழா நேரம்மின்னதால நெறைய வெளியூர் காரங்க வந்திருக்காங்க. அவங்க யாரும் நம்ம ஊர்காரங்க மாதிரி இருக்க மாட்டாங்க. ஏதாவது அப்படி இப்படின்னு தப்பு செஞ்சாலும் நீங்க நம்ம ஊர் நல்லதுக்காக பொறுத்து தான் போவணும். நமக்குத் திருவிழா நல்லபடியா முடியுணும். அதான் முக்கியம்."  என்றாள்.
   அவன் சற்று யோசித்துவிட்டுப் பிறகு 'சரி" என்று தலையாட்டி விட்டுக் கிளம்பினான்.
   மீனா அவன் போன வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் அவனை மீண்டும் பார்க்கத் துண்டியது. அவள் மனத்தைப் புரிந்தவனாகச் சில விநாடிகளில் திரும்பிவந்தான். அவன் கையில் ஒரு பை! அவள் என்ன என்பது போல் பார்த்தாள்.
   'மீனா.. இனிமேல நீ வீட்டுலக்கூட இந்த மாதிரி சின்னபாப்பா டிரெஸெல்லாம் போடாத. இதுல நீ கேட்ட மாதிரி டிரெஸ் வாங்கியிருக்கேன். இந்தா. கட்டிக்கோ." நீட்டினான்.
   'நீங்க எதுக்கு எனக்கு டிரெஸ் வாங்கித்தரணும்..?"
   தன்மான உணர்வு தலைதூக்கக் கேட்டாள்.
   'ம்.. இன்னைக்கி நான் உன்ன பாத்தமாதிரி வேற யாரும் அப்படி பாத்துடக் கூடாதுன்னுத்தான். பொண்ணுங்க போடுற டிரெஸ் ஆம்பளைங்கள அலப்பாய விடக்கூடாது. நீ போட்டிருக்கிற டிரெஸ்;.. யப்பா.. இன்னைக்கி எனக்குத் தூக்கமே வராது போ.."
   சொல்லிவிட்டு அந்த பையை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டான்.
   மீனா தான் உடுத்திருந்த விதம் குறித்துத் தன்னைத் தானே திட்டிக் கொண்டு.. வெட்கப்பட்டுக் கொண்டாள்.
                                                                                                                                               


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
  
   மறுநாள் காலை மணி ஒன்பது. காலை வெயில் கசக்கசப்பாக இருந்தது. மீனா சக்திவேல் வாங்கித்தந்த சிகப்புநிற பட்டுப் பாவாடை அதேநிற தாவணியில் அன்று மலர்ந்த செந்தாமரையாக இருந்தாள். அளவான ஒப்பனை. தன் சுறுண்டகூந்தலை விரித்து முன் பக்கமாகத் தூக்கி க்ளிப் வைத்திருந்தாள். முடி இன்னும் சரியாக காயாததால் மாடியிலிருந்த படி தெருவை வேடிக்கை பார்த்து கொண்டு தன் கை விரலால் கோதி சூரிய ஒளியில் காயவைத்து கொண்டிருந்தாள்.
   தெரு முழுவதும் ஒரே தலைகள்! கொஞ்சம் கூடத் தரை தெரியவில்லை. அவ்வளவு கூட்டம். சுற்று வட்டாரக் கிராமமக்கள் மட்டுமல்லாமல் சக்திவேல் திருவிழாவிற்காக பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்திருந்ததால் அன்று தேர்த் திருவிழாவிற்காக நகரப் புறங்களில் இருந்தும் மக்கள் அதிகமாக வந்திருந்தனர்.
   கூட்டம் நெறுக்கித் தள்ளியது. அதிலும் வீதிக்கு இருப்புறங்களிலும் கடைகள்! மக்கள் பேரம் பேசிப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
   இவ்வளவு நெரிச்சலான கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு யார் அது தலைத்தெரிக்க ஓடி வருவது..?
   மீனா கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள். யார் என்று தெரியவில்லை. ஆனால் அவனைத் துரத்திக்கொண்டு சக்திவேல் கையில் அரிவாலுடன்!!!
   இவளுக்கு மனது பக்கென்றது. என்ன இது குழப்பம்? இன்னும் சில நிமிடங்களில் தேர் ஓடப் போகிறது.;..! இந்த நேரத்தில் இவர் ஏன் கையில் அரிவாலுடன் அவனைத் துரத்த வேண்டும்?
   இப்பொழுது மீனா.. மின்னல் வேகத்தில் அவர்களைப் பிடிக்க ஓடினாள்.
   ஓரிடத்தில் அந்த ஆள் தரையில் அமர்ந்து கொண்டு கைகளைக் கூப்பி சக்திவேலுவைப் பார்த்து கும்பிட்டு கொண்டிருக்க..
   'ஏண்டா.. ஒனக்கு என்ன திமுறு இருந்தா எங்க ஊரு பொண்ணுமேல கைய வச்சியிருப்ப..? வச்ச கைய.."
   அவன் கத்திக்கொண்டே அரிவாலை ஓங்க..  'சக்திவேல்.." என்று கத்திக்கொண்டே மீனா அவன் கையைப் பிடித்தாள். அவன் இவளைப் பார்த்து முறைத்தான். கோபம் கண்களில் தெரிந்தது.
   'வுடு மீனா.. இந்த நாய வெட்டினாத்தான் என்னோட ஆத்தரம் அடங்கும். என்னவுடு நீ.." அவளைத் தள்ளினான். ஆனால் மீனா அவனை விடுவதாக இல்லை.!
   'சக்திவேல்.. மொதல்ல அருவாவ கீழ போடங்க. நேத்தே சொன்னேனே! கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர் கௌம்பணும். உங்க மொரட்டுத்தனத்தால திருவிழாவ நாசம் பண்ணிடாதீங்க. ப்ளீஸ். கத்திய கீழப்போடுங்க. நா சொல்லுறது நம்ம ஊரொட நன்மைக்குதான். கீழ போடுங்க."
   அதிகாரமாகவும் அதே சமயம் கொஞ்சம் கெஞ்சலாகவும் கேட்டாள்.
   அவன் சற்று கோபத்துடன் ஓங்கிக் கையைக் கீழே இறக்கினான். ஆனால் அதே சமயம் மீனாவும் கையை விடவும் அந்த அரிவாலின் கூரிய முனை அவளின் புறங்கையின் மேல் பக்கத்தில் இறங்கியது.
   இதையாரும் எதிர்பார்க்வில்லை. எதிர் பார்க்காமல் நடப்பது தானே விபத்து என்பது!
   சக்திவேல் அதிர்ச்சியாக மீனாவைப் பார்த்தான். கையிலிருந்து இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. அவள் அதை இலட்சியப் படுத்தவில்லை. லட்சியத்துடன் வாழ்பவர்களுக்கு நடுவி;ல் ஏற்படும் தடைகள் அனாவசியமானதே!
   அவள் கீழே விழுந்திருந்த அரிவாலை எடுத்தாள். தரையில் உட்கார்ந்து இருந்தவனைப் பார்த்துச் சொன்னாள்.
   'ஏய்.. ஓடிடு. திரும்பவும் அவர் இந்த ஊருக்குள்ள ஒன்ன பாத்தா ஓன் உசிறுக்கு நா கேரண்டி கொடுக்க முடியாது. ஓடிபோயிடு.." என்றாள் கண்களை அகலமாகத் திறந்து.
   அவன் பிழைத்தோம் சாமி என்றெண்ணியபடி எழுந்து ஓடினான்.
   சக்திவேல் மீனாவைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவள் தன் இடக்கையில் இருந்த காயத்தின் மீது தன் தாவணியின் முந்தானையால் அழுத்தி சுற்றி மூடினாள்.
   'சக்திவேல்.. நீங்க தேரடிக்கி போங்க." என்றாள்.
   'இல்ல மீனா.. நீ வா. டாக்டர் கிட்ட போவலாம்." அவன் அவள் கையைப் பிடித்தான். அவள் அவனை உதரினாள்.
   'இல்ல சக்திவேல். நீங்க ஒடனே தேரடிக்குப் போங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர் கௌம்பிடும். நீங்க இப்ப அங்கத்தான் இருக்கணும். எனக்கு சின்ன காயம் தான். நானே டாக்டர்கிட்ட போயிடுறேன். நீங்க கௌம்புங்க!"
   அதற்குள் ஒலிப்பெருக்கியில் ;சக்திவேல் ஐயா எங்கிருந்தாலும் உடனே தேரடிக்கு வரவும். ; என்று மூன்று முறை தொடர்ந்து அறிவுpப்பு வந்தது.
   'மொதல்ல நீங்க அங்க போங்க.." அவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு அரிவாலுடன் டாக்டர் வீட்டை நோக்கி நடந்தாள். அங்கே கூடியக் கூட்டம் கலைந்தது.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²



   அவள் கண்விழித்தபோது கையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. ஒரு கையில் குலுக்கோஸ் இறங்கிக்கொண்டிருந்தது. அவள் கட்டியிருந்த தாவணி ஜாக்கெட் கலைந்து ஓர் ஆணின் சட்டையைப் பாவாடைக்கு மேல் அணிந்திருந்தாள்.  டாக்டரின் மனைவிதான் அவளருகில் இருந்தாள்.
   'மீனா.. இப்ப எப்படிமா இருக்குது?"
   'ம்.. பரவாயில்ல. தேரு நல்லா ஊர்வலம் வந்துச்சா..?"
   'அதெல்லாம் நல்லவிதமா முடிஞ்சிதுமா. உன்னாலதான் அத பாக்கமுடியாம போயிடுச்சி. எனக்குத் தெரிஞ்சி இன்னைக்கி தேர் ஓடின காரணமே நீ தான்." என்றார்.
   'இருக்கலாம். என்ன செய்யிறது? வீடு கட்டுற கொத்தனார் அந்த வீட்டுலேயா வாழுறார்? துணிநெய்யிற நெசவாளி அவர் நெய்யிற துணியையா கட்டிக்கிறார்? வெத வெதச்சவன் அறுவட முழுசுமா சாப்பிடுறான்? அதே மாதிரித்தான் இதுவும். தனக்காக எதையும் செஞ்சிக்கினா அதுல தன்னலம் மட்டும் தான் இருக்கும். அடுத்தவனுக்காக வாழுறப்போ அதுல சொல்ல முடியாத அளவுக்கு நிம்மதி இருக்கும். அதை அனுபவிச்சாத்தான் தெரியும்." என்றாள் மீனா நிம்மதியாக.
   'நீ சொல்லுறதுலேயும் நியாயம் இருக்குது தான். ஆனா அந்த நிம்மதியப் பெற நம்மோட நிம்மதியையும் இழக்கவேண்டி இருக்குதே. உனக்கு மனநிம்மதி கெடைச்சிடுச்சி. ஆனா ஒடம்பு..? நீ மட்டும் சக்திவேலைத் தடுக்காம இருந்திருந்தா.. இன்னேரம் வெட்டு குத்துப் போலிசுன்னு அலைய வேண்டி இருந்திருக்கும். அதுவரைக்கும் நீ செஞ்சது எல்லாருக்குமே நல்லது தான்! ஆனா இந்த விசயம் யாருக்கும் தெரியாது. தெரிவிக்க வேண்டாம்ன்னு சக்திவேல் சொல்லிட்டு போனார்."
   'சக்திவேல் இங்க வந்தாரா..?"  ஆவலாகக் கேட்டாள்.
   'ம்.. அவர்தான் டாக்டர கூட்டிக்கினு வந்தார். நீ மயக்கமாயிட்ட. அவரோட சட்டய கழற்றி உனக்கு போடச்சொல்லி கொடுத்தார். தாவணியில ஒரே ரத்தக்கர! ஜாக்கெட்டையும் கட்டு போட்டிட்டா கழட்டமுடியாது இல்லையா..? அதனால தான்! நான் தான் சட்டைய போட்டுவிட்டேன்."
   டாக்டரின் மனைவி கனிவுடன் சொன்னார்.
   மீனா தான் அணிந்திருந்த சக்திவேலுவின் சட்டையைத் தொட்டு தடவிப் பார்த்துக் கொண்டாள். ஏதோ மனத்தில் அதிக தைரியம் வந்தது போல் இருந்தது.
   தனக்குப் பிடித்தவர் தன் அருகில் தான் இருக்கிறார் என்ற எண்ணமே சிலருக்குச் சில வகை மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
   கண்ணுக்குத் தெரியாத கடவுளை மனத்தில் கொண்டு வந்து நிறுத்தி தனக்கு வேண்டியதை கேட்டு கொள்வதில்லையா..? அதே நிலை தான் இதுவும்.
   அவளே அவளை நினைத்துச் சிரித்து கொண்டாள்.
   ஆனால் இந்தச் சிரிப்புச் சந்தோசம் இன்று முழுவதும் கூட நீடிக்காது என்பதை அவள் அப்பொழுது உணர்ந்திருக்கவில்லை.

                           (தொடரும்)


14 comments :

  1. முந்தைய பதிவைப் போலவே சுவாரஸ்யமாக செல்கிறது சகோ ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் வருகைக்கு
      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      Delete
  2. Replies
    1. தங்களின் வருகைக்கு
      மிக்க நன்றிங்க பிரதாப் சிங்.

      Delete
  3. வணக்கம் சொந்தமே!இது தான் தங்கள் தளத்தில் என் மதல் சந்திப்ப.முதல் வருகையே பிடித்துப்போய்விட்டது.வாழ்த்துக்கள்.சந்திப்போம்சொந்தமே!


    http://athisaya.blogspot.com/2012/07/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க அதிசயா.

      Delete
  4. கதையை முதலில் இருந்து முழுமையாய் மூச்சு விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தான் பன்னிரெண்டாம் பகுதி வாசித்திருக்கிறேன். இன்னும் சந்திப்போம். அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க. நாமளும் கதை எழுதுறோமில்ல?

    முதல் ஆறு இடுகைகளுக்கும் கருத்தளித்தும் விட்டேன்.

    http://newsigaram.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்தளிப்பிற்கும்
      மிக்க நன்றிங்க பாரதி.

      Delete
  5. Kadhai romba nalla irukku. Adhuththa paagam eppo varum?

    ReplyDelete
  6. இதோ... இன்றே போடுகிறேன் பாரதி.

    நன்றிங்க.

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_3.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனபாலன் ஐயா.

      வலைச்சரத்தை வாசித்துவிட்டேன் ஐயா.
      உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

      Delete
  8. வணக்கம் கதை சுவாரசியன்களோடு அழகாக நகர்கிறது .......

    ஆனாலும் வரிகளுக்கு இடையே கொஞ்சம் இடைவெளி விட்டு பிரசுரித்தால் படிக்க எதுவாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சரளா அவர்களே...
      உங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

      நீங்கள் சொன்னபடி இனி செய்ய முயற்சிக்கிறேன் கவிஞரே.

      Delete