Monday, 9 July 2012

போகப் போகத் தெரியும் - 16   தன்னை நாசம் செய்ய வந்தவனைச்  ;சக்திவேல் ; என்ற பெயர் மட்டுமே அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் மீனாவிற்கு அந்தப் பெயரின் மீது ஒரு மரியாதை!
   மரியாதையா.....? அல்லது மற்ற ஆண்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவளே அவளைச் சுற்றிப் போட்டுக் கொண்ட வேலியா......?
   சக்திவேல் என்ற பெயரின் மீது மரியாதை மட்டுமா....? அன்பும் அல்லவா ஒட்டியிருந்தது. ஒருவரைப் பிடித்துவிட்டால் அவர் மீது அன்பும் மரியாதையும் கலந்தே ஏற்படும். இதில் ஒன்றைத் தவிர்த்து ஒன்றைமட்டும் வைக்கமுடியுமா.....?
   அப்படியானால் அந்த அன்பு தான் காதலா....?
   இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்!
   ஆனால் காதலுக்கென்று எந்த ஒரு வரைமுறையும் கிடையாதே! இளம் வயதில் யாருக்கு யார்மீது வருவது காதல்? எப்படி வருகிறது? எதனால் வருகிறது? ஏன் வருகிறது? இதை யாரால் பிரித்து வகுத்துச் சொல்லிவிட முடியும்?
   அப்படி வகுத்துப் பிரித்துச் சொல்லிவிட்டால்.... அது காதலாக இருக்க முடியாது அல்லவா.....?
   ஏதோ ஒரு மன ஈர்ப்பு தான் அது!
   அந்த மன ஈர்ப்பு அன்பு பண்பு பாசம் அழகு அறிவு வீரம் என்று இப்படி எதில் வேண்டுமானாலும் வருவது தானே.......! ஆனால் இது நிச்சயம் காதலாகாது!
   இதோ மீனாவிற்குச் சக்திவேல் என்ற பெயரின் மீதிருந்தது ஒருவித ஈர்ப்பு தான்! அந்த ஈர்ப்புத் தன்மையைத் தான் அவள் காதல் என்று நினைத்திருந்தாள்.
   அப்படியானால் சின்னதம்பி தான் அவள் காதலிப்பவனா.......? ஆனால் இதைப் புரிந்து கொள்ள அவள் தன் மனத்துடனே சற்றுப் போராட வேண்டியிருந்தது.
   எப்பொழுதுமே தன் மனதுக்கு அமைதி உண்மை கிடைக்க வேண்டும் என்றால் அந்த மனத்துடனே போராட்டம் நடத்தியாகத் தான் வேண்டும்.
   இப்பொழுது மீனா தன் மனத்துடனே போராடித் தெளிந்திருந்தாள். இருந்தாலும் அவளுக்குச் சின்னதம்பி தான் சக்திவேல் என்று தெரியாது!
   கடவுளைச் கற்சிலையாகவே நினைத்து வணங்குகிறவனின் முன் உண்மையான கடவுளே தோன்றினாலும் நம்ப மாட்டான். அது அவனது நம்பிக்கை!
   அப்படித்தான் மீனாவின் எண்ணத்திலும் சக்திவேல் என்ற பெயர் மட்டுமே உயர்ந்த உன்னதமான சக்தியாக இருந்தது!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   சின்னதம்பியைப் போட்டியின் ஆபத்திலிருந்து காப்பாற்ற மனம் துடித்தது. தன் கைபோனை எடுத்துச் சின்னதம்பியின் எண்களை அழுத்தினாள்.
   காத்திருந்த சக்திவேல் போனை எடுத்துப் பார்த்தான். மீனாவின் பெயர்! முகம் முழுவதும் சந்தோஷம் பரவியது.
   தன் நண்பர்களைப் பார்த்துச் சொன்னான்.
   'பாத்திங்களா.....? அம்மணி தான் போனுல! யாரும் பேசாதிங்க...." சொல்லிவிட்டுப் பட்டனை அழுத்தி காது கொடுத்தான்.
   'அலோ...."
   'நான் மீனா பேசுறேன்."
   'ம்.... சொல்லு. என்ன விசயம்?" குரலை மாற்றியிருந்தான்.
   'நாளைக்கி நீங்க மாட்டுவண்டி போட்டியில கலந்துக்க கூடாது."
   'ஏன்....?"
   'காரணம் சொல்ல முடியாது."
   'நீ சொல்லலைன்னாலும் எனக்குக் காரணம் தெரியும்."
   'எப்டி.....?"
   'சக்திவேலுவுக்கு ஆயிரம் கண்கள்ன்னா எனக்கு ஆயிரம் காதுகள்!"
   'தோ பாருங்க. நீங்க சக்திவேலுவுக்குச் சமமான ஆளு தான்! ஆனா நீங்க அவரோட போட்டி போடக் கூடாது."
   'அதான். ஏன்.....?"
   'ஒரே உரையில ரெண்டு கத்தி இருந்தா அது ஒன்னை ஒன்னு வெட்டிக்கொல்லும்ன்னு உங்களுக்குத் தெரியாதா....?"
   'ஏன்.... வெட்டிக்கொல்லும்ன்னு நெனைக்கிற..? ஒன்றை ஒன்று உராய்ந்து தீட்டி இன்னும் கூர்மையாகும்ன்னு ஏன் சொல்லக் கூடாது....?"
   'அப்பா. உங்ககிட்ட என்னால பேசி ஜெயிக்க முடியாது. இதோ பாருங்க.. சக்திவேல் இந்த ஊருக்கே நெழல் தர்ர பெரிய மரம். அதன் நிழல்ல இருந்துக்கினு அதோட கெளைகள வெட்ட நெனைக்ககூடாது."
   'மீனா.... சக்திவேல் இந்த ஊருக்கே நிழல் தரும் மரம் தான். நான் இல்லைன்னலை. ஆனா ஒரு பெரிய மரத்து நெழலுல எந்த ஒரு செடியும் பசுமையா வளர முடியாது. என்னால ஒரு புல்லு ப+ண்டு மாதிரி வாழ முடியாது. எனக்குன்னு சுயமறியாதை இருக்குது. அதுமட்டுமில்ல சக்திவேல் தான் எல்லாத்திலேயும் உயர்ந்தவர்ன்னு நீ நெனைக்கிற......! அதனால தான் என்ன ஒனக்குப் புடிக்கல. இது எனக்கு அவமானமா இருக்குது. அவரோட பேர் மேல நீ வச்சிருக்கிற மரியாதை உன்னோட எதிரிலேயே இருக்கிற என் மேல வைக்கமாட்டுறே..... அதனால நாளைக்கி நடக்கிற போட்டியில நான் கலந்து போட்டியில அவர தோக்கடிச்சி வெற்றியோட வருவேன். இது நிச்சயம்."
   அழுத்தமாகச் சொல்லி முடித்தான். அவள் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசாமல் இருந்தாள். அவனே திரும்பவும் தொடர்ந்தான்.
   'மீனா...."
   'ம்....."
   'நாளைக்கி நான் போட்டியில ஜெயிச்சா நீ எனக்கு பரிசு தர காத்திருக்கணும். அந்தப் பரிசு சக்திவேலுவுக்கு நீ தர்ரதா சொன்ன ப+ மாலையோ.... இல்ல..... வெற்றிவேலுவுக்கு நீ தந்த ஒத்தை ரோஜாவோவா இருக்கக் கூடாது. என்னோட வெற்றிக்கு நீ எனக்கொரு முத்தம் தரணும். அதுதான் எனக்குக் கெடைக்கப் போற மிகப் பெரிய பரிசு. வெற்றி."
   அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் போனின் இணைப்பைத் துண்டித்தான். இல்லையில்லை. இனித் தொடர்பு கொள்ளமுடியாதவாறு இணைப்பு முழுவதையும் நிறுத்திவைத்தான்.
   நண்பர்கள் அனைவரும் அவனை வைத்தகண் வாங்காமல் புன்னகையுடன் பார்த்தார்கள்! சக்திவேல் குறும்பாகச் சிரித்துக் கொண்டான்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   மீனா அன்று முழுவதும் தூங்கவேயில்லை. சக்திவேலுவையும் சின்னதம்பியையும் நினைத்து மனப் போராட்டத்தின் உச்சிக்கே போய் இருந்தாள். பலமுறை சின்னதம்பியுடன் பேசுவதற்காகத் தொலைபேசியில் முயன்றும் பலனில்லை. இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது ஏமாற்றமாக இருந்தது.
   போட்டி துவங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஊரில் இருந்த முக்கால்வாசி ஆண்கள் சக்திவேலுவுடன் போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டு இருந்தார்கள். மீனா யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாகச் சக்திவேலுவின் கைபோனுக்கு எண்களை அழுத்தினாள்.
   சக்திவேல் மீனாவின் பெயரைப் பார்த்ததும் சந்தோசத்துடன் எழுந்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்து பேச ஆரம்பித்தான். ஆனால் அவ்விடத்தின் அருகிலேயே வெற்றிவேலுவும் அவனுடைய தம்பிகளும் இருந்ததைக் கவனிக்கவில்லை. காதல் அவன் கண்களை மறைத்துவிட்டிருந்தது.
   'என்ன மீனா.... என்ன விசயம்?"
   'நா உங்க தம்பிகிட்ட கொஞ்சம் பேசணும்."
   'தம்பியா....? எந்தத் தம்பி......?"
   அவள் பதில் சொல்லவில்லை. அவள் இதுவரை சின்னதம்பியைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது கிடையாது. அதனால் பேசாமல் இருந்தாள். அவன் புரிந்து கொண்டான்.
   'மீனா... சின்னதம்பிய சொல்லுறீயா....? ஆமா... அவன்கிட்ட என்ன சொன்னே....? ரொம்ப சுறுசுறுப்பா இருக்கான்......! போற போக்குல அவன் என்ன ஜெயிச்சிடுவான் போல இருக்குது." என்றான்.
   'போனை முதல்ல அவர்கிட்ட கொடுங்க நான் பேசணும்."
   'ம்.... தர்றேன்....."
   சற்று நேரம் பொறுத்து 'மீனா.... நீதான் போலிசுக்கு தகவல் சொன்னியா....? மாடுங்களுக்கு மயக்கஊசி போடப் போறதைப் பத்தி..... எதுக்கப்படி செஞ்சே.....? இப்போ பாரு இங்க ஒரே போலிசு கெடுபிடியா ஆயிடுச்சி. நீ சும்மா இருக்க மாட்டியா....?" என்றான் அவனே சற்றுக் கடுமையான குரலில்.
   அங்கே இருந்த வெற்றிவேல் இலேசாகச் சிரித்துக் கொண்டான். ஆனால் அவனருகில் இருந்த வேந்தன்...... அதிர்ச்சியாகச் சக்திவேலுவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சிவந்தன. இதையெதையும் சக்திவேல் கவனிக்கவில்லை!
   'நீங்க மட்டும் நல்லா இருந்தா போதுமா...? மத்தவங்களையும் காப்பாத்த வேணாமா...? அதனால தான் நான் காலையிலேயே போலிசுக்குப் போன் பண்ணிச் சொல்லிட்டேன்." என்றாள்.
   'இது உன்னோட வேலையாத்தான் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். சரிசரி இப்போ எதுக்குப் போன் செஞ்சே.....?"
   'நீங்க இந்தப் போட்டியில கலந்துக்க கூடாதுன்னு சொல்லத்தான்."
   'அது முடியாது. இந்தப் போட்டியில நா ஜெயிச்சி நீ தரப்போற பரிசை நான் வாங்கியே ஆகணும். இது என்னோட லட்சியம்."
   'நீங்க இந்தப் போட்டியில கலந்துக்கலன்னாலும் நீங்க கேட்ட பரிசை நான் தர்றேன். போதுமா....?"
   'என்ன சொல்லுற நீ........!!!"
   'ஆமாம் உண்மையைத்தான் சொல்லுறேன்! எனக்கு உங்களத்தான் புடிச்சிறுக்கு. ஆனா உங்களச் சக்திவேலுவுக்கு எதிரியா என்னால நெனச்சிகூடப் பாக்கமுடியாது. நீங்க எப்போதும் போல அவருக்குப் பிரண்டாவும் நெழலாவும் இருக்கணும். இது என்னோட ஆச. நீங்க இந்தப் போட்டியில கலந்துக்கினா நீங்கத்தான் நிச்சயம் ஜெயிப்பிங்க. எனக்குத் தெரியும். ஆனா சக்திவேல் தான் ஜெயிக்கணும். அதே சமயம் நீங்களும் தோக்கக்கூடாது. அதனால நீங்க போட்டியில கலந்துக்ககூடாது." என்றாள்.
   சக்திவேல் சற்று நேரம் பேசாமல் இருந்தான்.
   'சரி. இந்தப் போட்டியில சக்திவேல் தானே ஜெயிக்கணும்..? சரி நீ சொன்னது போலவே சக்திவேல் ஜெயிப்பார். போதுமா....? மாலையோட காத்திரு. ஆனா என்னோட பரிசை எனக்கு நிச்சயமா கொடுத்திடணும்... என்ன.....?"
   இங்கே இவள் கன்னம் சிவக்க 'சரி" என்றாள்.
   அங்கே சக்திவேல் போனை அழுத்தி ஒரு முத்தமிட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்தான். அவனின் செய்கையை வெற்றிவேல் சந்தோசத்துடன் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டான். ஆனால் வேந்தனோ..... கண்கள் சிகப்பேற அவ்விடத்தைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தான்.


                             (தொடரும்)

3 comments :

 1. Replies
  1. நன்றிங்க தனபாலன் ஐயா.

   Delete
 2. தேர்ந்த மன உளவியலாளர் போன்றே நாயகியின் எண்ணங்களை அலசி உள்ளீர்கள்.
  மேலும் உங்களது வருணனைகள், காட்சிகளாய் கண் முன் நிறுத்துகின்றது.
  தங்களின் எழுத்துக்கள், நெடுங்காலம் எழுத்துப்பணியில் அனுபவம் உள்ளது போல் தோன்றுகிறது.

  ReplyDelete