Thursday, 21 June 2012

போகப் போகத் தெரியும் - 14


  பிற்பகல் மணி மூன்று.
   ஊரே அமைதியாக இருந்தது போலிருந்தது. மீனா காலையில் ஊருக்குள் வந்த போது திருவிழாவிற்காகப் போடப்பட்ட தோரணங்கள். மின் விளக்கு அலங்காரங்கள் எல்லாமே திருவிழா களைக்கட்டி இருந்ததை பறைசாற்றியது. திருவிழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிநாடாவில் சீர்;காழி கோவிந்தராஜனின் ;நடந்தால் வாழி காவேரி..... ; என்று தன் கானக் குரலால் எல்லோர் மனங்களையும் கரையவைத்துக் கொண்டிருந்தார்!
   அதன் பிறகும் ஒலித்த அவரது பாடல்கள் அனைத்தும் கானமழையில் ஒவ்வொருவரையும் நனைய வைத்தது.
   ஆனால் காலையில் இருந்த சந்தோசம் பரபரப்பு எதுவுமே இப்பொழுது இல்லை. ஏன்....?
   ஒரு சிறுவன் இரண்டு பட்டு ஜாக்கெட்டை மீனாவிடம் கொண்டு வந்து நீட்டி ;தையக்காரர் குடுக்கசொன்னார் ; என்றான். வாங்கிக் கொண்டு அவனைப்பிடித்துப் 'பெரிய வீட்டில் சக்திவேல் ஐயா இருக்காரான்னு பாத்துக்கினு வா...." என்றாள்.
   அவன் கையை மோட்டார் வண்டியாக்கிக் கொண்டு வாயால் வண்டியின் சத்தத்தைக் கொடுத்துக் கொண்டு ஓடியவன் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தான்.
   'அவர் வெளியே போய் இருக்காராம். ஆறுமணிக்கி மேலத்தான் வருவாராம்...." சொல்லிவிட்டு இல்லாத வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான். அவள் ஏமாற்றமாகத் தன் தாயிடம் வந்தாள்.
   'அம்மா... ஏதிது பட்டு ஜாக்கெட்....?"
   'திருவிழாவுக்காகச் சத்திவேல் தம்பி ரெண்டு பட்டு பொடவ வாங்கித் தந்துச்சி. ஒனக்கொன்னு எனக்கொன்னு..... எனக்கெதுக்கு பட்டுபொடவல்லாம்.....? அதான் ஒன்அளவுக்கே தச்சிட சொல்லிட்டன்...." என்றாள்.
   'சக்திவேல் நமக்கெதுக்குப் பொடவை வாங்கித்தரணும்....?"
   'நமக்கு மட்டுமில்ல. ஊருல எல்லா பொண்ணுகளுக்கந்தான். அவரோட மனசு யாருக்கு வரும்....?"
   புடைவையைக் கொண்டு வந்து மகளிடம் காட்டினாள். ஒன்று சிகப்பு. ஒன்று கரும்பச்சை. குறுக்கும் நெடுக்குமாக ஜரிகை கோடு போட்டு மிக அழகாக இருந்தது.
   'அம்மா எனக்கெதுக்குப் பட்டுபொடவ? எனக்கென்ன பொடவ கட்டிக்கிற வயசா ஆயிடுச்சி....? இதுக்கு மேட்சான கலர்ல ஒங்கிட்ட ஜாக்கெட் இருக்குது..... இந்தா நீயே கட்டிக்கோ....." தாயிடமே நீட்டினாள்.
   'இல்லம்மா. சத்திவேலு மொதோ மொதோ பொடவ வாங்கித் தந்திருக்கு. இத நீ தான் கட்டிக்கணும்."
   'இந்தப் பொடவ வாங்கின பணத்துக்குச் சுரிதாரோ... பாவாடை தாவணி.... இல்லைன்னா... செல்வார் கமிசோ... வாங்கித்தந்தா எனக்கு ஒதவியா இருந்திருக்கும். இந்தப் பட்டுப் பொடவைய கட்டிக்கினா நா காலேஜிக்குப் போவ முடியும்.....?"
   இவள் இப்படி சொல்லி கொண்டிருக்கும் பொழுதே மாதவனின் தங்கை ருக்மணி வந்தாள்.
   'என்ன மீனா நீ.... ஒனக்கு என்ன வேணுமோ அத சத்திவேல் அண்ணங்கிட்ட சொன்னா.... ஒடனே வங்கித்தரப் போறாரு. அவருக்குத்தான் நீன்னா உசிராச்சே......!"
   சொல்லிவிட்டுக் குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தாள். ஆனால் மீனா சிரிக்கவில்லை. காலையில் நடந்த நிகழ்ச்சி மனக்கண்முன் வர மனது இலேசாக வலிப்பது போல் இருந்தது. ஏதோ தெரிந்தே தவறு செய்துவிட்ட உணர்வு அவளைக் கவலைக் கொள்ளச் செய்தது.
   'மீனா..... இன்னைக்கி மஞ்சள் நீராட்டுவிழா. வா வெளியே போய்ப் பாக்கலாம். நீ வேணுமின்னா இந்த வெள்ளக்கலர் டிரஷ்சை மாத்திக்கினு வேற ஏதாவது கலரா டிரஸ்பண்ணிக்கினு வா." என்றாள் ருக்மணி.
   'க்கும்..... இந்த ஊருல ஏம்மேல மஞ்சத்தண்ணி ஊத்துர ஆம்பள யார் இருக்கா? எனக்கொன்னும் பயமில்ல. வா போவலாம்."
   வீம்பாக அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். அங்கே ஒவ்வொரு வீட்டின் வாசல்லேயும் பெரியப் பெரிய அண்டா குண்டான்களில் மஞ்சள் நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
   ஒவ்வொரு வீட்டிலேயும் பெண்கள் தங்களுக்கு முறையான ஆண்கள் யாராவது வருகிறார்களா என்று பார்த்த வண்ணம் மறைந்து இருந்தார்கள்.
   ஆனால் தெருவில் எந்த ஓர் ஆணையும் காணோம்! பெண்களின் சுட்டித்தனம் தெரிந்தே யாரும் வெளியே வரவில்லையா......? என்ன ஆண்கள் இவர்கள்...? மீனா இப்படி யோசித்தபடியே ருக்மணியுடன் நடந்தாள்.
   இந்த விளையாட்டில் ஆண்கள் அக்கரை காட்டவில்லையா....? அல்லது அவர்களுக்கு இந்த ஊர் பெண்களின் மேல் எந்த ஒரு ஈடுபாடும் இல்லையா....? மனது கேட்டக் கேள்வியை ருக்மணியிடம் கேட்டாள் மீனா. 
   'எல்லா ஈடுபாடும்  இருக்குது தான். ஆனா தைரியம் தான் வரமாட்டுது. இப்பக்கூட அதோ பாறேன். ரெண்டு ஆம்பளைங்க நிக்கிறாங்க. எனக்கு அந்த பேண்டு சட்டப் போட்டவர் மேல மஞ்சத்தண்ணிய ஊத்தணும்ன்னுதான் ஆச. ஆனா தைரியம் வர மாட்டுது.....!" ஒரு பெரிய பெருமூச்சியுடன் சொன்னாள்; ருக்மணி.
   மீனா அவள் சுட்டிக்காட்டின ஆண்களைப் பார்த்தாள். ஒருவன் பளீச்சென்ற வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில்! மற்றொருவன் கருநீல பேண்ட் இலநீல சட்டை. இரண்டு பேருமே இவர்களுக்கு முதுகைக் காட்டி கொண்டு அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் ஏதோ முக்கியமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
   'மீனா.... நீதான் தைரியமான பொண்ணாச்சே..... இந்தா இந்த மஞ்சத்தண்ணிய கொண்டு போயி அந்த வெள்ளவேட்டிக் காரர் மேல ஊத்தேன் பாக்கலாம்......?" சவாலாகச் சொன்னாள்.
   'நா எதுக்கு ஊத்தணும்? அவரு எவரோ.... யாரோ....?"
   'பாத்தியா....? ஒனக்கே தைரியம் வர மாட்டுது. நீ இந்த ஊருக்கே செல்ல பொண்ணு. உன்ன யாருமே எதுவுமே கேக்கப்போறதில்ல. இருந்தாலும் நீயே பயப்படுற பாத்தியா....?"
   மீனா யோசனையுடன் ருக்மணியைப் பார்த்தாள்.
   'மீனா... நீமட்டும் இந்த மஞ்சத்தண்ணிய அவர் மேல ஊத்திட்டன்னா.... நா ஒடனே எனக்கு புடிச்ச அந்த பேண்டு போட்டவர் மேல மஞ்சத்தண்ணிய ஊத்திடுவென். உன்னால என்னோட ஆசை நிறைவேறும். ப்ளீஸ் மீனா....."
   கெஞ்சளாக மீனாவிடம் செம்பை நீட்டினாள். மீனாவும் வாங்கிக் கொண்டாள். தன்னை யாரும் எதுவும் செய்து விட மாட்டார்கள் என்ற தைரியம்! ருக்மணியும் அதைத்தானே சொன்னாள். தனக்காக இல்லைன்னாலும் ருக்மணி ஆசையாவது நிறைவேரட்டுமே என்ற நல்ல எண்ணம்!
   கையில் செம்புடன் மெதுவாகச் சென்றவள் அவன் அருகில் சென்றதும் மஞ்சள் நீரை அவனுக்குப் பின்புறமாகச் சட்டென்று கொட்டினாள்;.


   அவன்மீது தண்ணீர் பட்டது தான் தாமதம். அவன் சடேரென்றுத் திரும்பினான். அவனைப் பார்த்ததும் மீனா அதிர்ந்துவிட்டாள்! காரணம் திரும்பியவன் வேறு யாருமில்லை. சின்னதம்பி தான்! அவள் இவனைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை. இதுவரையில் சின்னதம்பி வேட்டிக்கட்டி பார்த்ததே இல்லை என்பதும் ஒரு காரணம்.
   அவன் அவளை முறைத்ததும் மீனா தன் பின்னால் வந்த ருக்மணியைத் தேடினாள். அவள் அங்கு இல்லை! திரும்பவும் சின்னதம்பியைக் கவலையாகப் பார்த்தாள். அவன்.....
   'ஒனக்கு என்ன திமிர் இருந்தா...... ஏமேல மஞ்சத்தண்ணிய ஊத்துவ......? உன்ன......" சொல்லிக் கொண்டே அவன் கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டினான்
   அதற்குள் அவனருகில் இருந்த சரவணன் 'மீனா.... ஓடிடு. மாட்டுன இன்னைக்கி அவ்வளவுதான். ஓடிடு....." அவன் கிசுகிசுப்பாகச் சொல்ல மீனா மெல்லப் பின்னால் நடந்து சட்டென்று ஓடத்துவங்கினாள்.
   அவன் துரத்துகிறான் என்று தெரிந்ததும் அதிவேகம் எடுத்து ஓடினாள். ஒருவீடு இரண்டு வீடு என்றில்லை. ஐந்தாறு வீட்டினுள் நுழைந்து கொல்லைபுறத்தில் வெளிவந்து திரும்பவும் வேறு வீட்டில் நுழைந்து.....
   எப்படி ஓடினால் என்ன....? மான்குட்டியைப் பிடிக்கச் சிங்கத்திற்கு சிரமமாக இருக்குமா என்ன....?
   இரண்டு கையையும் தன் ஒரே கையால் பிடித்து இழுத்து கொண்டு வந்தான்.
   'தோ பாருங்க.... எனக்கு நீங்கன்னு தெரியாது. ருக்மணி சொன்னதாலத்தான அப்டி செஞ்சேன். ப்ளீஸ் என்ன விட்டுடுங்க......" அவள் கெஞ்சளாகக் கெஞ்சிக் கொண்டு அவனுடன் வந்தாள். அவன் விடவில்லை. கை இரும்புப்பிடியாகப் பிடித்திருந்தது.
   அவளை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தினான். அந்தத் தெருவே வேடிக்கை பார்த்தது.
   'என்ன பாத்துகினே நிக்கிறீங்க? மஞ்சத்தண்ணிய கொண்டு வாங்க......." அவன் கட்டளையிட அங்கிருந்த அனைவருமே.... அண்டா குண்டானில் இருந்தத்தண்ணிரை கொண்டு வந்தார்கள்.
   'தோ பாருங்க.... எனக்கு மஞ்சள்ன்னா அலர்ஜி. வேணாம். ப்ளீஸ் என்ன விட்டுடுங்க. என் டிரஷ்செல்லாம் வீணாயிடும்...... ப்ளீஸ்.... வேணாம்.... வேணா...."
   அவள் சொல்லச் சொல்ல அண்டாத்தண்ணீரை அவள் மீது கொட்டினான். அதுமட்டுமா....? அந்தத்தெருவில் கரைத்துவைத்திருந்த மஞ்சள் தண்ணீர் முழுவதும் மீனாவிற்கே அபிஷேகமாக்கப் பட்டது. அவளுக்கு மூச்சித் திணறியது. இருந்தாலும் அவளால் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியவில்லை.
   எல்லாம் காலியானதும் சின்னதம்பி தன் மெல்லிய மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு சிரித்தான். மீனா தன் சிவந்தக் கண்களால் அவனைப் பார்த்து முறைத்துவிட்டுப் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் போவதைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள்.
   'மீனா.... நீ ஒரு வாரத்துக்கு குளிக்கவேணாம். தவிர இப்படியே போயி ஆத்துல எறங்கிடாத! அப்புறம் ஆத்துத்தண்ணீயே மஞ்சளாறா மாறிடும்."
   ருக்மணி கை கொட்டிச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
   'என்ன சொன்ன.....? இந்த ஊருல ஆம்பளைங்களே இல்லியான்னுத் தானக் கேட்ட....? ஒரு ஆம்பளைக்கி உன்னால பதில் சொல்ல முடிஞ்சிதா....? பாத்தியா....?"
   மேலும் சொல்லிச் சிரித்தாள்.
   'என்ன.....? அப்படி வேற சொன்னாளா.....? புடி அவள..... இன்னும் கொஞ்சம் குளிப்பாட்டலாம்......." என்று சொல்லிக் கொண்டே அவன் கிட்டே வர மீனா ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தாள்.

     மணி ஆறேகால்!
   மின்விளக்கின் வெளிச்சம் இருளை விரட்டி விட்டிருந்தது. மின்விளக்குகள் செயற்கை சூரியன்களோ..!
   மீனா சக்திவேல் வீட்டின் கூடத்தில் சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டிருந்தாள். கமலா ப+ கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்திருந்தாள்.
   மீனாவிற்குக் கோபமாக வந்தது. ஆறுமணிக்கு வந்தவள் கமலாவிடம் 'சக்திவேலைப் பாக்க வேணும்" என்று சொன்னதற்கு 'உக்காரும்மா வருவார்" என்று சொல்லிச் சோபாவைக் காட்டியவள் ப+ கட்டத் தொடங்கினாள். இதோ பதினைந்து நிமிடம் ஓடிவிட்டது. இன்னும் சக்திவேலைக் காணோம்.
   ஒரு பெருமூச்சுடன் வீட்டை நோட்டமிட்டாள்.
   நான்கு துர்ண்கள் தாங்கிய பெரிய கூடம். தரை பளிங்குக் கற்கள் பதித்துப் பளபளப்பாக இருந்தது. பெரிய டி.வி. சோபா செட் டி.வி;.டி என்று எல்லாம் நவீன பொருட்கள்! வெளியே இருந்து பார்க்கும் பொழுது ஏதோ பழையக் கால பங்களா என்று நினைக்கத் தோன்றினாலும் உள்ளே உள்ளது அனைத்தும் நவநாகரீகப் பொருட்களாகத் தான் இருந்தது.
   அவள் இதற்கு முன் இங்கே ஒரே ஒரு முறை வந்திருக்கிறாள். முதன்முதலில் அறிவழகியுடன் இந்த ஊருக்கு வந்த போழுது இந்த வீட்டிற்கு வந்து ஒரு அம்மாளின் காலில் விழுந்து வணங்கச் சொன்னாள் அறிவழகி! மீனாவும் விழுந்து வணங்கினாள்.
   'மனம் போல மாங்கல்யம் கிடைக்க வேணும்" என்று அந்த அம்மாளும் ஆசிர்வாதம் செய்தாள்.
   அந்த அம்மாள் யார்......? என்ன உறவு...? என்று அவள் அறிவழகியிடம் கேட்கவில்லை.
   ஆனால் இன்று யோசித்தாள்! அந்த அம்மாள் யாராக இருக்கும்? ஒரு சமயம் அவங்கத்தான் சக்திவேலோட அம்மாவா.....? இருக்கலாம்! அவளே பதிலைத் தேடிக் கொண்டாள். ஆமாம்.... இப்போ அவங்க எங்க? அன்று அந்த அறையில் இருந்தார்களே....
   அந்த அறை திறந்து இருந்தது. எழுந்து போய்ப் பார்க்கலாமா....? வேண்டாம். ஏதாவது தவறாக நினைத்துக் கொண்டால்.....? சற்று பெரிய இடத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும் என மனது எச்சரித்தது.
   கடிகாரத்தைப் பார்த்தாள். மேலும் பதினைந்து நிமிடங்கள் கரைந்துவிட்டிருந்தன. கண்கள் தொலைக்காட்சியைப் பார்க்க விரும்பவில்லை. காரணம் மஞ்சள் நீர் பட்டுக் கண்கள் மிளகாய்ப்பழம் போல் சிவந்து இருந்தது மட்டுமல்லாமல் எறிச்சலாகவும் இருந்தன. தொலைக்காட்சியைப் பார்த்தால் கண்களில் இருந்து நீர் ஒழுகத் தொடங்கியது.
   டாக்டர் கொடுத்த சொட்டுமருந்து வேலை செய்தாலும்.... மருந்தை இட்டு கொண்டு பேசாமல் கண்மூடி படுத்திருந்தால் சரியாகிவிடும் என்று சொல்லி இருந்தார். ஆனால் இப்பொழுது அப்படி கண்மூடிக் கொண்டு படுத்துவிட முடியுமா....?
   மனம் திரும்பவும் கடிகாரத்தைப் பார்க்க வைத்தது. செய்ய நினைத்து வந்த காரியம் முடியவில்லை என்றால் காலத்தைக் கண்கள் பார்க்க மனம் கட்டளையிட்டு விடுகிறதே! மேலும் பத்து நிமிடங்கள் எங்கே ஓடியது?
   கால்களே இல்லாத காலம் எப்படித்தான் யாரிடமும் பிடிபடாமல் ஓடிவிடுகிறதோ.....!
   மீனா சிரித்து கொண்டாள். மாடியிலிருந்து சின்னதம்பி இலேசாக விசிலடித்தபடி இறங்கி வந்தான்.
   'தம்பி...... மீனா வந்திருக்குது." என்றாள் கமலா.
   சின்னதம்பி ஆச்சர்ய ஓசையாக விசிலடித்தபடி மீனாவைப் பார்த்துச் சிரித்தான். ஒரேயொரு நொடித்தான்! அவள் கண்களைப் பார்த்தும் 'ஏய்..... மீனா என்ன ஆச்சி....? ஏன் அழுவுற?"
   குரலில் உண்மையான அக்கரையிருந்தது.
   'கேக்க மாட்டீங்க......? நா மஞ்சள் எனக்கு அலர்ஜின்னு சொன்ன பெறகும் அவ்வளவு தண்ணிய ஏம்மேல ஊத்திட்டு.... இப்போ நடிக்கிறீங்களா....?"
   கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.
   'ஐயோ மன்னிச்சிடு மீனா. வெளியப்போவ கௌம்பியிருந்த நேரத்துல நீ என் டிரஸ்சுல மஞ்சத்தண்ணியக் கொட்டனதும் எனக்குக் கோவம் வந்துடுச்சி. அதனாலத்தான்...."
   'என்னோட புது டிரெஸ்சும் தான் உங்களால வீணாயிடுச்சி. எனக்கு கண்மணி ஆசையா வாங்கிதந்த டிரெஸ் அது." என்று சொன்னவள் காலையில் சின்னதம்பி தன்னிடம் நடந்து கொண்ட விதம் ஞாபகத்தில் வர அவனிடம் பேச விரும்பாதவளாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
   அவனும் அதைப் புரிந்து கொண்டான்.
   'சரி. என்ன விசயமா வந்த?" கேட்டான்.
   'அத உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல எனக்கு. சக்திவேல கூப்பிடுங்க. அவர்கிட்ட தான் சொல்லுவேன்." என்றாள்.
   கமலா நிமிர்ந்து அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள். சின்னதம்பி தன்னையும் மீறிவந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு
   'அவர் வெளியே போய் இருக்கார். வர்ற லேட்டாகும். நான் இப்போ அவர பாக்கத்தான் போறேன். என்ன விசயமோ அத எங்கிட்ட சொல்லு. நானே அவர்கிட்ட சொல்லிடுறேன்." என்றான்.
   'இல்ல. நா அவர்கிட்டத்தான் சொல்லுவேன். எவ்ளோ நேரமானாலும் பரவாயில்ல. நா காத்துக்கினு இருக்கேன்." சொல்லிவிட்டுச் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
   சற்று நேரம் யோசித்தவன் 'சரி அப்பறம் உன்னிஷ்டம்" என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டான்.

                              (தொடரும்)

  

No comments :

Post a Comment