Wednesday, 2 January 2013

போகப் போகத் தெரியும் - 32





       இரண்டு தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டுப் படுத்தாலும் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது மீனாவிற்கு! அருகில் தனக்கு உதவியாகப் படுத்திருந்த நர்ஸிடமிருந்து மெல்லியக் குரட்டை ஒலி! எழுந்து தோட்டத்துக் கதவைத் திறந்து கொண்டு கிணற்றடியில் அமர்ந்தாள்!
   விடிந்தும் விடியாதக் காலைப் பொழுது. எங்கோ சேவல் ஒன்று சத்தமிட்டுக் கூவிச் சூரியனை எழுப்பியது. தூக்கக் கலக்கத்தில் சூரியன் பகலெல்லாம் இமைக்காமல் கண்விழித்துக் கொண்டிருக்க வேண்டுமே.. என்று தன் இமையை மிகமிக மெதுவாகத் திறக்க.. சிகப்பு நிறம் ஆரஞ்சு நிறமாகி.. ஆரஞ்சி நிறம் மஞ்சளாகி.. வானத்தில் வர்ணஜாலம் காட்டியது.
   கரக்கப்பட்ட பசு ஒன்று மீதியைக் கன்றுக்குக் கொடுக்க தாய்மைக் குரலில் அழைத்தது. வாசல் பெருக்கிச் சாணித் தெளிக்கும் ஓசை.. இசை கருவிகளுக்குள் அடங்காத ஓசை நயம்!
   தோட்டத்து கனங்கா மரப்பூக்கள் மணமில்லாமல் இதழ் விரித்துச் சிரித்தன.
   இப்படி காலைக் காட்சிகள் அற்புதமாக இருக்க மீனா இவை எதிலும் நாட்டம் கொள்ளாமல்.. வாளியில் இருந்த தண்ணீரைத் தொட்டுத் தொட்டுச் சிமெண்டு தரையில் கோலம் வரைந்து கொண்டிருந்தாள்.
   இந்த நான்கு நாட்களில் அவள் அதிகமாகத் தன்னைப் பற்றி யோசித்து இருந்தாள்! சிவாவைப் பாரக்க வேண்டும் என்று விரும்பியவளுக்கு அனுமதியில்லை. தொலைபேசியில் பேசக் கொடுத்தான் சக்திவேல். சிவாவின் குரல் மிகவும் பலகீனமாகத் தெரிந்தது. தனக்கு ஒன்றுமில்லை. சின்னக் காயம் தான். சீக்கிரமா சரியாயிடும். நீ கவலை படாதே. உடம்ப நல்லா கவனிச்சிக்கோ.. ; இப்படி அவன் இவளுக்கு ஆறுதல் சொன்னான்.
   மனது வலித்தது. இந்த வேதனைகள் அனைத்தும் தன்னால் வந்தது தான்!
   யார் மீது குற்றம்? இதற்கு என்னச் செய்யலாம்?
   பதில் கூற முடியாத கேள்விகள்!
   அவள் மனத்தில் கடைசியான பதில்! தான் இந்த ஊருக்கே வந்திருக்கக் கூடாது. ஆமாம். இது தான் உண்மை. வேண்டாம். இனி நாம் இந்த ஊரில் இருக்கக் கூடாது.
   முடிவெடுத்ததும்.. சக்திவேல் எதிரில் வந்து நின்றாள்.
   'சக்திவேல்.. எனக்கு இப்போ பரவாயில்ல. என்ன ஆஸ்டல்ல கொண்டு போயி விட்டுடுங்க."
   சக்திவேல் நிதானமாக பதில் சொன்னான்.
   'விடுறேன். ஆனா இப்ப கெடையாது. காயம் நல்லா ஆறட்டும். லீவு முடிஞ்சதும் நானே கொண்டு போய் விடுறேன். ஆனா அது வரைக்கும் நீ இந்த ஊரைவிட்டு ப்போவ முடியாது."
   குரலில் அழுத்தம். ஒருவகையில் கட்டளை! மீனா யோசித்தாள்.
   'சரி. ஆனா நா அதுவரைக்கும் இந்த வீட்டுல தங்க மாட்டேன். நா மொதல்ல தங்கியிருந்த வீட்டுலேயே அம்மாக்கூட தங்கிக்கிறேன். அந்தச் சின்ன வீட்டுல இருந்த சந்தோஷம் இந்த வீட்டுல இல்ல." என்றாள்.
   அவன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு 'சரி. உன்னிஷ்டம்" எனக்கூற அன்றே தன் தாயுடன் கிளம்பிவிட்டாள்.     

  
   மீனா கையில் இருந்த புத்தகத்தைத் தூக்கிப் போட்டு  பிடித்துக் கொண்டே நடந்தாள். இது அவளின் வழக்கமான செயல் தான்! ஆனால் இப்பொழுது அப்படிச் செய்தால் கை வலித்தது. இருந்தாலும் இதுவும் ஒரு பயிற்சி தானே.. தொடர்ந்து செய்து கொண்டே நடந்தாள்.
   அவள் தெளிந்து இருந்தாள்! இடுப்பில் இருந்த காயமும் கையில் இருந்த காயமும் ஆறிவிட்டிருந்தாலும் உடம்பில் அசதி இருக்கத்தான் செய்தது. காலிப் பெருங்காய டப்பாவைப் போல.!
   இன்று விடுமுறை முடிந்து முதல் நாள் கல்லுரிக்குப் போய் கொண்டிருந்தாள். அசதியை அலட்சியப்படுத்தினாள்.  காரணம் கல்வி பணம் போன்றதாயிற்றே.. அதை அதிகம் பெறப் பெறப் புத்திசாலிகள் ஏங்கத்தான் செய்வார்கள்!
   கிழக்கிலே சூரியன் இருந்ததால் கோபுரத்தின் நிழல் மேற்கே நீண்டு கிடந்தது. வாசலில் கோலங்கள் புள்ளிகளைக் கோர்த்துப் பூக்களும் இலைகளுமாக இளமையாக இருந்தன. சில வீட்டு வாசல்களில் சிக்குக் கோலம் புள்ளிகளைச் சிறையிட்டுக் கொண்டு சிக்கில்லாமல் சிந்தனைக்கு விருந்தாயின!
   மீனா ஏழு மணி வண்டியைப் பிடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் நடையை எட்டிப் போட்டாள்.
   'ஐயோ.. அம்மா.. " ஒரு பெண்ணின் அலறல்!
   சட்டென்று குரல் வந்த திசையை நோக்கினாள். சற்று தொலைவில் ஒற்றையடிப் பாதையில் ஒரு பெண் காலைப் பிடித்து கொண்டு கத்தினாள். மீனா அவசரமாக அவளிடம் ஓடினாள்.
   'ஐயோ.. பாம்பு கடிச்சிடுச்சே.." அவள் செம்மண் தரையில் அமர்ந்து கொண்டாள்.
   அவளருகில் கூடை நிறையப் பூக்கள்! சாய்ந்து கிடந்த கூடையில் பூப்பந்துகள் கூடையில் பாதியும் தரையில் பாதியுமாகக் கிடந்தன. கட்டாத கனங்காமரம் காற்றில் பறந்தது.
   'ஐயோ.. கடவுளே.. இப்ப நா இன்னா பண்ணுவேன்..?"
   கோவில் வாசலில் பூ விற்கும் பூக்காரி அவள்! செய்வதறியாது கடவுளை உதவிக்கழைத்தாள்.
   மீனா பார்த்தாள். ஒரே நிமிடம் யோசித்தாள். பூக்கூடையில் இருந்த நார் வெட்ட வைத்திருந்த  ;பிளேடை ; எடுத்தாள். பூக்காரியின் காலை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கடிபட்ட இடத்தில் கீறி தன் வாயை வைத்து இரத்தத்தை உரிஞ்சித் துப்பினாள்.
   அதற்குள் கூட்டம் கூடி விட்டது. மாதவன் தண்ணீரைக் கொடுத்து மீனாவின் வாயைக் கழுவச் சொல்லி கடிந்தான்.
   பூக்காரியை ஆம்பிலன்ஸில் ஏற்ற.. மாதவனும் மீனாவை அழைத்து கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தான்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   ஆலமரத்தடியில் ஊர்கூடி அவர்கள் வருவதை எதிர்ப்பார்த்திருந்து காத்திருந்தது. ஆலமரம் இலவசமாக அனைவருக்கும் சாமரம் வீசியது.  மீனாவைப் பார்த்ததும் தான் அனைவருக்கும் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள்.
   'ரொம்ப நன்றி மீனா.." சக்திவேல் சொன்னான்.
   'என்ன நன்றி வேண்டி கெடக்குது? உன்ன யார் இப்படி செய்யச் சொன்னாங்க? ஒனக்கு ஏதாவது ஆயி இருந்தா என்ன செஞ்சிருக்க முடியும்? " சரவணன் கோபமாகக் கேட்டான்.
   'ஒரு அனாதையோட வாழ்வு முடிஞ்சி இருக்கும். நா அப்படி செய்யலன்னா.. அந்த அம்மாவோட மூனு புள்ளைங்களும் அனுதையா ஆயி இருப்பாங்க. என்னோட கண்னெதிருல மூனு அனாதைங்க உருவாவதா..? விடு சரண்.." மீனா அலட்சியமாகச் சொல்லிவிட்டு வீடு நோக்கி நடந்தாள்.
   முதல் நாளே அவளால் கல்லூரிக்குப் போக முடியவில்லை!
   அறிவு கல்லூரிக்குப் போனால் வளரலாம். ஆனால் அடுத்தவருக்கு உதவி செய்யும் உள்ளம்.. எந்த இடத்திற்குப் போனால் வரும்?
   அதிலும் உதவி செய்ய வருபவர்கள் அவதிப்படும் பொழுது ஆறுதல் கூறினால் தானே.. ஓர் அளவாவது நிம்மதியாக இருக்க முடியும்? யோசனையுடன் கணேசனின் வீட்டினுள்  நுழைந்தாள். கணேசனின் பாட்டி காலை நீட்டிக் கொண்டு வெற்றிலை பாக்கை இடித்துக் கொண்டிருந்தாள்.
   கணேசன் ஏனோ கொஞ்ச நாட்களாகவே அவளிடம் கோபமாக இருப்பது போல் அவளுக்கே தெரிந்தது. அவன் அவளிடம் அதிகமாகப் பேச மாட்டான் என்றாலும் அவளைப் பார்த்தால் உண்மையான புன் முறுவல் அவன் முகத்தில் பூக்கும். ஆனால் கொஞ்சம் நாட்களாகவே அவனை இவள் பார்க்கவே முடியவில்லை!
   அவள் அவன் அறையில் நுழைந்த பொழுது கையில் பெரிய மாவுக்கட்டுடன் படித்துக் கொண்டிருந்தான்.
   'அலோ பிலோசோப்.. எப்டி இருக்கிறீங்க? கையில ஏதோ அடிபட்டுடுச்சின்னு அம்மா சொன்னாங்க. என்ன ஆச்சி?  எங்கையாவது வழுக்கி வுழுந்துட்டீங்களா..?" முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
   'இப்ப ஒனக்கு என்ன வேணும்?" கடுகடுப்பாக வந்தது அவனது குரல்!
   'எனக்கு ஒடம்பு சரியில்லாதப்போ நீங்க வந்து பாக்கல. அதுக்காக உங்களுக்கு ஒடம்பு சரியில்லாதப்போ நா வராம இருப்பேனா..? ஆமா இந்த வருஷம் லாஸ்ட் இயர் இல்ல..?"
    'ம்.."
   'சரி. கல்யாணமே வேணான்னு சொல்லிட்டு.. பொண்டாட்டிய கட்டிப் புடிச்சிக்கினு தூங்குறீங்க. ஆமா.. முழுசா அனுபவிச்சிட்டீங்களா..?" ஒரு கண்ணை இலேசாக அடித்து கேட்டாள்.
   'ஏய்.. என்ன சொல்லுற நீ..?"
   'கோவப்படாதீங்க. காலையில போவும் போது பாத்தேன். இந்தப் புக்க நல்லா கட்டிபுடிச்சிக்கினு தூங்குனீங்க. லாஸ்ட்டியராச்சே.. புக்க முழுசா படிச்சிட்டீங்களான்னு கேட்டேன்." என்றாள்.
   அவன் இலேசாகச் சிரித்துக் கொண்டான்.
   'அப்பா. சிரிப்பு வந்துச்சே.. தோ பாருங்க தத்துவஞானி. இத யாரு வேணும்மின்னாலும் அனுபவிக்கலாம். ஐ மீன் புக்கை சொன்னேன். அதனால உங்களுக்குன்னு தனியா ஒரு புக்க வாங்கிடுங்க. முடியலைன்னா நானே உங்களுக்குச் செலட் பண்ணித் தர்றேன்." வீராப்பாய்ச் சொன்னாள் குரலை உயர்த்தி!
   'அத செய்யி" என்றான் பற்கள் தெரிய.
   'ஆனா ஒரு கண்டீஷன்! அதன் பிறகு நீங்க இந்தப் புக்சையெல்லாம் கட்டிப் புடிச்சிக்கினு தூங்கக் கூடாது. என்ன..?" சுட்டுவிரலைக் காட்டி எச்சரித்தாள்.
   'அப்படித் தூங்க நா ஒன்னும் சக்திவேல் கெடையாது." சட்டென்று சொன்னான்;.
   'என்ன சொன்னீங்க..?" புரியாமல் கேட்டாள்.
   'பின்ன என்னவாம்? மோதரம் போட்டுக் கூட்டிக்கினு வந்த வாயாடிய.. பேசவுடாம வாய அடைக்காம  உட்டுப் புடிக்கிறானாம்.."
   இதைக் கேட்டதும் அவள் முகம் குங்குமத்தைப் பூசிக் கொண்டது.
   'மோதிரம் மட்டும் போட்டாக்கா கைய மட்டும் தான் புடிக்கமுடியும்! வாயையெல்லாம் அடக்க முடியாது."
   நாணம் அவளை அங்கே நிற்க விடாமல் விரட்டியது. ஓடினாள்.
   'ஏண்டி.. நடந்து போவ மாட்டியா..? குதர. இப்டி குதிச்சா.. பையி எறங்கிடும்டீ.." கணேசனின் பாட்டி திட்டினாள். அந்தக் காலத்தவர்களுக்குப் பெண்கள் அதிர்ந்து கூட நடக்கக் கூடாது. அது மகா பெரிய தப்பு!
   'ஏ கெழவி.. ஒம்பையில காசு நெறைய போட்டு பையி லூசா போயியிருக்கும். என்னோட பை காலியா நல்லா ஸ்டிராங்கா இருக்குதாக்கும்.."
   கிழவிக்கு அழகு காட்டிவிட்டு கொல்லென்று சிரித்துக் கொண்டு நகர்ந்தாள். வாசலைத் தாண்ட நினைக்க.. எதிரில் சக்திவேல் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் முகம் தரையைப் பார்க்க நின்றுவிட்டாள்.
   'மீனா.. காலி பையி நிமிர்ந்து நிக்காது. தெரியுமில்ல?" அவன் கேட்க மீனா யோசித்தாள். எப்படித்தான் சிலருக்குச் சட்டென்று கேள்விகள் பிறக்கின்றதோ..?
   பதில் சொல்லாமல் நின்றிருந்தவளின் அருகில் வந்து அவள் காதருகில் 'நா வேணும்மின்னா காசு போடட்டுமா..?" என்று கேட்டதும்.. அதன் அர்த்தம் புரிந்து வேறு வார்த்தை பேச வராதவளாக அவனை இலேசாகப் பிடித்து நகர்த்தி விட்டுத் தன் வீட்டிற்கு ஓடினாள்.
   வெட்கம் சில நேரங்களில் பேச முடிந்தவர்களையும் ஊமையாக்கி விடுகிறது!
                              

                                     (தொடரும்)

No comments :

Post a Comment