Tuesday 20 November 2012

போகப் போகத் தெரியும் - 29



   சாலை விளக்குகள் இருட்டுக்கு வர்ணம் பூச முயன்று தோற்று போயின. விளக்கிற்கு அடியில் மட்டும் வெளிச்சத் தீவுகள்!
   வழியில் சக்திவேல் தன் வண்டியில் சாய்ந்த படி நின்றிருந்தான். மணி பத்துக்கு மேல் இருக்கும். இந்த நேரத்தில் இவர் இங்கே எதற்காக..? மீனா யோசனையுடன் அவனைத்தாண்டி நடக்க.. அவன் அவளின் எதிரில் வந்து வழி மறித்து நின்றான்.
   'மீனா.. நா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்."
   'மணியாயிடுச்சி. காலையில பேசலாமே.." வார்த்தைகள் சாதாரணமாக வர மிகவும் முயற்சி செய்திருந்தாள்.
   'ஏன்.. அவனுங்ககிட்ட மட்டும் பேசுவ. எங்கிட்ட பேசக்கூடாதா..?"
   'அவங்க எல்லாம் என்னோட ப்ரென்ஸ்"
   'அப்ப நானு..?"
   'நீங்க எனக்குப் படிக்க ஒதவி செய்றவரு. அவ்வளவு தான்." அவளின் பதில் அவனை கோபமாக முறைக்கச் செய்யவும் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். அவன் ஒரு பெருமூச்சு விட்டான்.
   'மீனா.. என்ன பாரு.." அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
   'மீனா.. நான் உன்ன விரும்புறேன்.. ஐ லவ் யுமா" என்றான் குரலை மென்மையாக்கிக் கொண்டு.
   மீனாவின் முகத்தில் விரத்தியான புன்னகைப் பூத்தது. அவன் கையை எடுத்துவிட்டு எச்சிலைக் கூட்டி விழுங்கினாள். பிறகு சொன்னாள்..
   'சக்திவேல்.. நீங்க ஒருநாள் சொன்னீங்க. அழுகைக்கூட ஆறுதல் கிடைக்கிற இடத்துல அழுதால் தான் அதற்கு மரியாதைன்னு. அதே மாதிரித்தான் காதலும்! உங்க தகுதிக்குத் தகுந்தவளா பாத்துக் காதலியுங்க. உங்க காதல் நிச்சயம் கைகூடும். என்னை மாதிரியான அனாதை எல்லாம் அதுக்குத் தகுதியில்லதவள் சக்திவேல்." என்றாள்.
   'அப்போ.. சக்திவேலத்தான் கட்டிக்குவேன்னு ஊரெல்லாம் சொன்னது காதல் இல்லையா..?"
   'அது காதல் இல்லை. மத்தவங்ககிட்டர்ந்து என்ன காப்பாத்திக்க நானே எனக்குப் போட்டுக்கின வேலி."
   'ஆனா நா ஒங்கிட்ட அப்படி நெனச்சி பழகுலையே.. உன்னை என்னுடையவள்ன்னு நெனச்சித்தானே ஆசய வளத்து வச்சிருக்கேன். என்ன புரிஞ்சிக்கோ மீனா." குரலில் கெஞ்சலின் சாயல் ஒலித்தது.
   'மன்னிச்சிடுங்க சக்திவேல். எனக்கு அந்த மாதிரியான எண்ணம் என்னோட மனசுல வரல. நா கௌம்புறேன்." கிளம்பினாள்.
   'நில்லு." அவன் கோபமாகச் சொல்ல நின்றாள்.
   'மீனா.. ஒனக்கு நான் வேணான்னா.. நான் போட்ட மோதிரத்தை திருப்பிக் குடுத்துடு. " கையை நீட்டினான்.
   மீனா அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள். இவ்வளவு நேரம் மனத்தில் பேசி வைத்ததைப் பேசியாகிவிட்டது. ஆனால் அவன் மோதிரத்தைத் திருப்பிக் கேட்பான் என்று கொஞ்சமும் அவள் எதிர்பார்க்கவில்லை.  என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றுவிட்டாள்.
   அவளின் மௌனம் அவனை யோசிக்க வைத்தது.
   'மீனா.. கற்பனையில் சாப்பிட்டால் பசி போவாது. நான் போட்ட மோதிரம் ஒனக்குத் தாலியாவாது. நிஜத்துக்கு வா மீனா.." என்றான்.
   மீனா வெறுமையாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்.
   'சக்திவேல் நிஜவாழ்க்கையில நா நெனச்சத சாப்பிட முடியாது. மோதிரம் தாலி இல்லத்தான். சில நாடுகள்ல தாலிக்கி பதில் மோதிரம் தான் அணியிறாங்க. எனக்கு இந்த மோதிரமே போதும். இத மட்டும் கேக்காதீங்க. இதையும் இழுந்தா.. என்னோட உயிரே போயிடும். என்ன புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்.."
   கண்கலங்கச் சொன்னவள் அவனைத் தாண்டி நடந்தாள்!

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   பூக்களில் படிந்திருந்த பனித்துளியைச் சூரியன் யாருக்கும் தெரியாமல் உரிஞ்சினான்!
   'தம்பி.. எழுந்திரிப்பா.. மீனாவ காணோம். எங்கப் போனான்னு தெரியல.."
   கமலா பதட்டத்துடன் எழுப்ப சக்திவேல் சட்டென்று எழுந்தான். இரவு வெகு நேரம் வரை தூங்காமல் படுத்திருந்தவன் விடிந்த பிறகு தான் கண்ணயர்ந்து இருப்பான். கண்களைக் கசக்கிக் கொண்டு கேட்டான்.
   'என்ன சொல்ற நீ?"
   'மீனா எப்பவும் காலையிலேயே எந்திரிச்சிடும். காபிய குடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கும். ஆனா இப்ப காணோம். நேத்துக் கொண்டாந்த பைக் கூட இங்கத்தான் இருக்குது." என்றாள்.
   'சரி. நல்லா தேடி பாரு தோ வர்றேன்."
   அவன் மாடியிலிருந்து இறங்கும் பொழுது யோகி ரத்தினம் அவசரமாக வந்தார். தலையில் கைலித்துணியால் கட்டுப் போடப்பட்டு இருந்தது. அவர் யார் வீட்டிற்கும் போவது கிடையாது. சக்திவேல் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் பார்த்தான்!
   'தம்பி. நேத்து கூட்டம் முடிஞ்சதும் மீனா எங்கிட் வந்து மனசு சரியில்ல. மனம் அமைதியா இருக்க எனக்கு யோகாசனம் கத்துத் தர்றீங்களான்னு கேட்டா. நானும் இன்னைக்கி காலையில வா. சொல்லித் தர்றேன்னு சொன்னேன். அதே மாதிரி அஞ்சி மணிக்கெல்லாம் வந்துட்டா. நானும் சில மூச்சி பயிற்சி சொல்லி குடுத்தேன். அப்போ வேந்தனும் வெற்றிவேலோட ஆளுங்களும் வந்து என்ன அடிச்சி போட்டுட்டு மீனாவ தூக்கிக்கினு போயிட்டங்கப்பா. நா மயக்கமாயிட்டேன். கோயிலுக்கு வந்தவுங்க தண்ணித்தெளிச்ச பிறகுத்தான் விழிப்பு வந்துச்சி. அதாம்பா ஓடியாந்தேன். என்னால தடுக்க முடியலப்பா.." பதட்டத்துடனும் கவலையுடனும் சொன்னார்.
   சக்திவேல் ஒருநிமிடம் யோசித்தான். போனை எடுத்து எண்களை அழுத்தினான்.
   பேசினதில்.. 'இன்று வேந்தனுக்கும் மீனான்னுற பொண்ணுக்கும் ஓடத்தூர் எல்ல காளியம்மன் கோயில் மண்டபத்துல கல்யாணம் நடக்க இருக்குது. அவசர கல்யாணம். ஆம்பளைங்க மட்டும் தான் கல்யாணத்திற்கு போய் இருக்காங்க. இந்நேரம் கல்யாணம் முடிஞ்சி இருக்கும்" ஓடத்தூர் பெண் தகவல் சொன்னாள்.
   இந்தச் செய்தியைக் கேட்டதும் கண்கள் சிகப்பேற அரிவாலுடன் புறப்பட்டான் சக்திவேல்.
   அவன் பின்னால் அவனூர் மக்கள்!
                              
  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   எது எது எந்தெந்த நேரத்தில் நடக்கவேண்டுமோ அது அது அந்தந்த நேரத்தில் நடந்து விடும்! இது காலத்தின் அவசரமா..? காலத்தின் கட்டாயமா..?
   அவசரமோ.. கட்டாயமோ.. நடப்பது நடந்தே தான் தீரும் என்பதை விதியின் மேல் பழியைப் போட்டு விடலாம்!
   சக்திவேலுவும் அவன் ஊர்காரர்களும் அந்தக் கல்யாண மண்டபத்தில் நுழையும் பொழுது.. கைகளைப் பின்புறம் கட்டப்பட்டு.. வாயைத் துணியால் கட்டி.. இரண்டு பேர் பிடித்திருக்க.. மீனாவின் கழுத்தில் வேந்தன் தாலியுடன் இருந்த தங்கச் சங்கிலியை மாலை போல் அணிவித்தான்!
   வந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் செய்வதறியாது நின்று விட்டார்கள். எல்லோருடைய கண்களிலும் மனத்திலும் அதிர்ச்சி!

                            (தொடரும்)

3 comments :

  1. அதிர்ச்சியுடன் முடித்து விட்டீர்கள்.... அடுத்த பகிர்வு எப்போது...?

    ReplyDelete
  2. என்னங்க இது? இருந்தாலும் மீனாவுக்கு ரொம்பக் கொடுமைங்க. காத்திருக்கிறேன். தொடருங்கள். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வரலாமே?

    http://newsigaram.blogspot.com/2012/11/nee-naan-kaadhal-46-16.html#.UKuiN-S-olc

    ReplyDelete
  3. தொடரை எழுதி முடித்ததும் முழுப்பதிவையும் PDF-வில் பதிவேற்றி முடிந்தால் எனக்கு ஒரு காப்பி மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள்...

    #கவனிக்க, PDF-வில் பதிவேற்றி வைப்பது பல்வேறு வகையில் மிகுந்த பயனளிக்கும் அதுமட்டுமின்றி இதுபோல் வேறு யாரேனும் கேட்டாலும் நொடியில் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கலாம் :)

    ReplyDelete