Friday, 15 March 2013

போகப் போகத் தெரியும் - 44




   சோதனைகள் வந்தால் தான் மனிதனின் குணங்களைப் புரிந்து கொள்ள முடியும். சந்தோசமான நேரங்களில் அவனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
   மீனா.. இந்தச் சோதனையான நிகழ்ச்சியால் அவள் தன் கணவனைப் புரிந்து கொண்டாள். ஆனால் இது அதிகப் படியான சோதனை! பட்டை தீட்டினால் தான் வைரத்தின் அழகு தெரியும். ஜொலி; ஜொலிப்புத் தெரியும். அதற்காக வைரமே தேயும் அளவிற்கா பட்டை தீட்ட வேண்டும்?
   அதிகமான மனத் தேய்மானம்.. அவனுடலையும் பாதியாகத் தேய்த்து விட்டிருந்தது. இத்தனைப் பேர் அவளுடன் பேசியதில் ஒன்று மட்டும் அவளுக்குச் சரியாகப் புரிந்திருந்தது. அவனுக்கு ஆறுதல் தேவை! அதைத் தன்னால் தான் தர முடியுமாம்!
   நினைத்ததும் சிரிப்பு வந்தது. கொலையைச் செய்தது யார்? என்ற கேள்விக்குச் சரியான பதிலைக் கொடுக்காமல்.. ;அது யார்ன்னுத் தெரியறது முக்கியம் இல்லை. முதலில் சக்திவேலுவைச் சமாதானப் படுத்தி அவனைப் பழைய நிலைக்குக் கொண்டு வா.. ; என்றார்கள்.
   என்ன சொல்லிச் சமாதானப் படுத்துவது? இவர்கள் போனால் என்ன? வேற ஒருத்தர் கிடைப்பார் என்றா..? இந்தச் சட்டை கிழிஞ்சிட்டா.. வேற சட்டை வாங்கிக்கலாம்.. என்பது போலவா..? அல்லது  ;நல்லவர்களைத் தன்னுடனே அழைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் நினைக்கின்றார். அவர்கள் சொர்க்கத்தில் நிம்மதியாக இருப்பார்கள் ; என்று பிரசாங்கம் பண்ணுவதைச் சொல்லிச் சமாதானம் படுத்த முடியுமா..?
   யோசனையுடன் மாடி ஏறி வந்தாள். சக்திவேல் தோட்டத்து பக்கப் பால்கனிச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எதையோ பார்த்துக் கொண்டு இருந்தான். சூரியன் மறைந்துவிட்டாலும் வானம் இன்னும் வெளிச்சமாகத் தான் இருந்தது.
   தோட்டத்து மரக்கிளையில் இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்திப் பின்பு சமாதானமாயின.  அவைகளின் சந்தோசத்திற்கு மரக்கிளை ஊஞ்சலாக ஆடியது.
   'என்னங்க.." இவள் கூப்பிடத் திரும்பினான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.
   'வா மீனா" என்றவனின் குரலில் சுரத்தை இல்லை.
   'என்னை மன்னிச்சிடுங்க."
   'எதுக்கு..?"
   'நா உங்கள தப்பா பேசிட்டேன்."
   'ப்ச்சி. விடு மீனா.. நா அத அப்பவே மறந்துட்டேன். கோபத்துலேயும் கவலையிலும் பேசும் வார்த்தைகள் உண்மையைத் தான் பேசும். என்னைப் பத்தி நீ புரிஞ்சிக்கினது இவ்வளவு தானான்ன நெனச்சி கவல பட்டேன். ஆனா நானும் அதுக்குக் காரணம் இல்லையா..? நிருஜா.. பெங்களூர்.. இதுபத்தி எல்லாத்தையும் நான் உங்கிட்ட சொல்லி இருக்கணும். ஆனா அதுக்கெல்லாம் அப்போ நேரம் கெடைக்கல. இப்போ நேரம் இருக்குது. ஆனா நிம்மதி இல்ல. விடுமா.." திரும்பவும் தோட்டத்தைப் பார்த்தான்.
   'என்னங்க.." திரும்பினான்.
   'நாம கொஞ்ச நாள் ஏதாவது வெளியூர் போயி இருந்துட்டு வரலாமா..?"
   அவன் அவளையே பார்த்தான்.
   'ஏன் மீனா.. அப்படி வெளியூர் போனா நம்மால சரணையும் மாதவனையும் மறக்க முடியும்ன்னு நெனைக்கிறியா..? நா இவ்ளோ நாளா வெளியூருல தான இருந்தேன். என்னால இன்னமும் மறக்க முடியலையே.."
   அவன் குரலுடைய சொல்ல மீனா கவலை தாங்காமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள். அவன் கண்ணீர் இவள் கன்னத்தில் விழுந்த போது தான் சுய நினைவுக்கு வர முடிந்தது.
   ஆறுதலாகப் பேச வந்தவள் அழலாமா..? அவனை விட்டு நகர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள். பேச்சை வேறு திசைக்கு மாற்ற வேண்டும். என்ன பேசுவது..? எதைப்பற்றிப் பேசுவது..?  அவளை அதிகம் யோசிக்கவிட வில்லை அவன்!
   'மீனா.. இன்னைக்கி நீ கல்யாணத்துல கலந்துக்கினது எனக்குத் திருப்தியா இருந்துச்சி. எங்க வராம இருந்துடுவியோன்னு நெனச்சிட்டேன். ஆமா.. அப்புறம் எங்க போயிட்ட?"
   'கோயிலுக்கு."
   'கோயிலுக்கா..? நீயா..? என்ன சாமிகிட்ட சண்ட போடப் போனியா..?"
   அவன் முகத்தில் சிரிப்பு படர்ந்தது. அதைப் பார்க்க அவளுக்கும் சந்தோசமாக இருந்தது. ஆனால் சிலவினாடிகள் தான்!
   'ப்ச்சு.. சண்ட போட்டா கூட அவனுங்க நமக்குக் கெடைக்க மாட்டானுங்க." பெருமூச்சு விட்டான். என்ன நினைத்தானோ.. தன் மனைவியைப் பார்த்தான்.
   'மீனா.. அந்தத் தேனப்பன் மட்டும் எங்கையில கெடச்சா.. அவன நா அப்டியே.. நசுக்கி சாறு புழிஞ்சி குடிச்சிடுவேன்." கண்கள் விரிய பற்களைக் கடித்து கொண்டு சொன்னான்.
   ஏற்கனவே சிவா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ;இந்தக் கோபத்த மாத்தணும் நீ. இந்த ஒன்னரை வருஷமா இந்த வெறியோடத்தான் இருக்கிறான். இத மாத்தணும். அவன் தனி ஆள் கெடையாது. அவனுக்காக நீ இருக்கிற. எங்களுக்கு அவன் வேணும். அவன் மனச எப்படியாவது மாத்தி அமைதி படுத்து. உனக்கு அப்பவே நாங்க தகவல் சொல்லி இருந்திருப்போம். அவன் கன்டீஷனா வேணாம்ன்னு சொல்லிட்டான். நீ இருந்த எடமும் எங்களுக்குத் தெரியாது. ஒனக்காகத் தான் நாங்க எல்லாரும் காத்துகினு இருந்தோம். உன்னால தான் முடியும். ; என்று சொல்லி இருந்தான்.
   'அதுதான் தேனப்பனோ.. வெற்றிவேலோ.. காரணம் கெடையாதுன்னு போலிசு சொல்லிடுச்சே.. அப்புறம் எதுக்கு அவன் மேல கோபப்படணும்?"
   'வெற்றிவேல் கெடையாது. எனக்கு நல்லா தெரியும். ஆனா தேனப்பன் சொல்லி தான் இது நடந்திருக்கும். இந்தத் துணிச்சல் தேனப்பனுக்கு மட்டும் தான் இருக்குது. உனக்குத் தெரியாது மீனா.. இந்த ரெண்டு ஊர் சண்டையும் இன்னைக்கி நேத்து தொடங்கல. பரம்பர பரம்பரையா வருது. காரணம் நாலு தலைமுறைக்கி அப்பால இருந்திருக்கும். ஆனா இன்னமும் தொடருது. படிப்பறிவு இல்லாததாலத் தான் இப்படியெல்லாம் நடக்குதுன்னு என்னோட ஊருல இருக்கிற எல்லா புள்ளைங்களையும் படிக்கவச்சேன். ஏன் வெற்றிவேல் கூடப் படிச்சவன் தான்! அதனாலத்தான் அவன் வீணான சண்டையில தலையிடாம நகர்ந்துகிறான்.
   ஆனா தேனப்பன் அப்படி கெடையாது. அவன சாகடிச்சிட்டா இனி வர்ற தலைமுறை பிரச்சனை இல்லாம இருக்கும். அவன் மட்டும் எங்கண்ணுல படட்டும். அப்பறம் இருக்குது." மூச்சிறைக்கக் கத்தினான்;.
   'சக்திவேல் நீங்க தேனப்பன சாகடிச்சிட்டா.. எப்படி பிரச்சனை வளராம போவும்..? நீ சாகடிச்சா.. உன்ன சாகடிக்க வெற்றிவேல் கத்திய தூக்குவான். அப்புறம் உங்க புள்ள. அவன் புள்ளை. இப்படியே அனுமார் வாலாட்டம் நீண்டுக்கினே தான் போவும். என்ன புரியாம பேசுறீங்க..?"
   'அப்ப என்னை என்னத்தான் பண்ண சொல்லற..?"
   'அமைதியா இருங்க. காலம் தான் நல்ல மருந்து. இந்தத் தலைமுறை விட்டுக் கொடுத்துட்டா.. அடுத்த தலைமுறையாவது அமைதியா வாழலாம் இல்லையா..?  இப்போ பொருமையும் அமைதியும் தான் முக்கியம்."
   இதை அவன் யோசித்தான். அவன் யோசிக்கட்டும..; நாம் வந்த வேலை முடிந்தது என்று நினைத்து நகரப் போனாள். 'மீனா இப்போ எங்க போர?" கோபமாகக் கேட்டான்.
   'ஏன்..? கீழத்தான். நா வந்து ரொம்ப நேரமாயிடுச்சி. இப்பவே கீழ போவலன்னா உங்க அம்மா என்ன நேரடியாவே திட்டுவாங்க.."
   'எதுக்குத் திட்டணும்..?" புரியாமல் கேட்டான்.
   'என்ன..? ஒன்னுந்தெரியாத மாதிரி கேக்குறீங்க? நா வந்த மறுநாளே..  ;இன்னும் நாலு மாசம் கழிச்சி வந்திருக்கக் கூடாது?  அவனோட ஜாதக தோஷம் முடிய இன்னும் நாலு மாசம் இருக்குதுன்னு ஜாட மாடையா சொன்னாங்க. இப்ப கூட நா மாடிக்கி வரும் போது ஒரு மாதிரியா பாத்தாங்க. எனக்கு அவங்கள பாத்தாலே பயம்! நா போறேன்பா.." நகரப் போனவளைச் சட்டென்று கையைப் பிடித்து இழுத்தான்.
   'என்ன இது? யாராவது பாத்தா தப்பா நெனைக்க போறாங்க..?" இவள் கையை இழுத்தாள். அவன் உடும்பாகப் பிடித்திருந்தான்.
   'ஏதாவது நெனைச்சிக்கினு போவட்டும். நீ இப்ப எங்கூடத்தான் இருக்கணும்." அவளை இழுத்து அணைத்தான்.
   'இந்த ஆச இவ்வளவு நாளா எங்க போச்சாம்..?" சிணுங்கினாள்.
   'ம்.. படிக்கப் போயிருந்துச்சி. உன்னோட ஆசைகள நிறைவேத்தணும்ன்னு மனச கட்டுபடுத்திக்கினு இருந்துச்சி. மத்தபடி யாருக்கும் பயந்தோ.. ஜாதகத்துக்குப் பயந்தோ.. உன்னையப் பிரிஞ்சி இருக்கல."
   'என்ன..? என்னோட ஆசையா..?" நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் கைகளைத் தளர்த்தினான்.
   'ஆமா மீனா.. நீ மொதோ மொதோ எங்கிட்ட வந்து 'சக்திவேல் நா உங்கள விரும்பறேன்"ன்னு மட்டும் சொன்னதோட நிறுத்தியிருந்தா.. எப்படி எப்படியோ போயிருக்கும். ஆனா நீ என்ன சொன்ன..? எனக்கு படிக்கணும். எப்படியாவது ஒரு டிகிரி வாங்கணும்ன்னு சொன்ன. ஒனக்கு ஞாபகம் இருக்குதா? இல்லையா?..ன்னு தெரியல. ஆனா எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது. உன்னோட ஆசைய எப்படியாவது நிறை வேத்தணும்ன்னு தான் நா உன்ன விட்டு வெலகியே இருந்தேன். இப்போ அந்த ஆசை நிறைவேறிடுச்சி. பிறகென்ன..?"
   அவள் கண்கலங்கத் தன் கணவனைப் பார்த்தாள். கண்ணீரைச் சுண்டிவிட்டான்.
   'அப்போ.. ஜாதகம் தோஷம் எல்லாம் பொய்யா..?"
   'அது பொய்யோ.. மெய்யோ.. எனக்குத் தெரியாது. எனக்கு ஜாதகத்து மேல நம்பிக்கை கெடையாது. என்னைப் பொருத்தவரைக்கும் ஜாதகம் ஜோசியம் இதெல்லாம் சுத்த பித்தலாட்டம். நா பொறந்ததும் எங்கப்பா ஒரு வருஷத்தல இறந்திடுவாருன்னு ஒரு ஜோசியர் சொன்னாராம். அதே மாதிரி நடந்திட்டதால எங்கம்மா அதையே புடிச்சிக்கினாங்க. எனக்கு இருவத்தெட்டு வயசுல தான் கல்யாணம் நடக்கும்ன்னு சொன்னாங்க. ஆனா இருவத்தஞ்சி வயசுலேயே ஆயிடுச்சி. ரத்த சொந்தத்துல தான் பொண்ணு அமையும்ன்னு சொன்னாங்க. ஆனா நீ எனக்கு மனைவியா அமைஞ்ச.. ஜாதகம் சரின்னா இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்..?
   எனக்கு அதெல்லாம் நம்பிக்க இல்ல. நா அம்மாவ மதிக்கறேன். அவங்க மனசு நோவக் கூடாதுன்னு தான் நெனைக்கிறேன். ஆனா.. எனக்கு நீயும் வேணும். இனிமேலும் உன்ன பிரிஞ்சிருக்க முடியாது. புரிஞ்சிக்கோம்மா.."
   கெஞ்சளாகச் சொன்னான். அவளுக்கு அவன் கையை விலக்கிவிட்டு நகர்ந்து போக மனம் வரவில்லை!
   இவர்களைக் கண்ட மல்லிகை மொட்டுக்கள் கொடியில் இதழ் விரித்துச் சிரித்துத் தலையசைத்து ரசித்தன!

                           (தொடரும்)

Friday, 8 March 2013

போகப் போகத் தெரியும் - 43




   என்றுமே வற்றாத குளம். பெண்களின் கண்ணீரைப் போல! சின்னக்கல்லை எறிந்தால் கூடப் பெரிய பெரிய வளையங்களை வரச்செய்து தன்னுடைய ஆதங்கத்தைக் காட்டியது. ஆனால் பின்பு அடங்கிப் போய் விடுகிறது மனிதர்களின் மனம் போலவே.. ஆனால் அதனுள் விழுந்த கல்..? இன்னும் அங்கேயே தானே இருக்கிறது?
   பாவம்! அந்தக் கல்லும் அகலிகைக் கல்லைப் போலத்தான்! தரையில் கிடக்க வேண்டியது. இப்போது தண்ணீரில்! சாப விமோர்சனம் தர எந்த இராமன் வருவானோ..?
   தன் அருகில் அசைவு தெரியத் திரும்பிப் பார்த்தாள். யோகி ரத்தினம்! அவர் மேல் அவளுக்கு அதிக மரியாதை உண்டு. எழப்போனவளைக் கையமர்த்தி விட்டு தானும் அவள் அருகிலேயே அமர்ந்தார். அவரிடம் பேசுவதற்கு அவளுக்கு எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை. தன் மீது அக்கரை உள்ளவரை பார்த்ததும் கண்கள் தானாகவே கலங்கி நீரை வடித்தது.
   'மீனா.. அழுவாதம்மா. துக்கங்கள் காலத்தின் கட்டாயங்கள். மரணம் நடக்காத வீடு எது? மரணம் வரணும். வந்தால் தான் மனிதனுக்கு நிரந்தரம் என்பது ஒன்றுமில்லைன்னு புரியும். யாரோ நமக்குத் தெரியாதவங்க இறந்து போயிட்டா.. அது நம்மள தாக்காது. ஆனா நமக்கு வேண்டியவங்கள இழந்துட்டா உலகமே வெறுமை தான்னு புரிஞ்சி போகும். ஆனால் அந்த வெறுமையான உலகத்துல தான் நாம வாழ்ந்தாக வேணும். அதுவும் சந்தோஷமா வாழணும். நமக்காக இல்லைன்னாலும் மத்தவங்களுக்காகச் சந்தோஷத்த வரவழைச்சிக்கணும்.
   மீனாம்மா.. உன்னோட துக்கத்த கொஞ்ச நேரம் ஒதுக்கி வச்சிட்டு ருக்மணி நல்லா இருக்கணும்ன்னு அவ புருஷங்கிட்ட பேசி அனுப்பி வச்சியே.. அந்த நேரம் தாம்மா நிரந்தரம். எல்லாருடைய மனசும் நிறைஞ்சி போச்சி. ஒவ்வொருத்தரோட மனசுலேயும் காலத்தால அழிக்கமுடியாத ஓவியமா நின்றுவிட்ட காட்சி அது. அது மாதிரித்தான் வாழணும். மனுஷாளா பொறக்கிறது மத்தவங்களுக்கு உதவி செய்யத்தான். கவலப்படாதம்மா.."
   'அப்படீன்னா எனக்குன்னு எந்த உணர்ச்சியும் இருக்கக் கூடாதுன்னு சொல்லுறீங்களா..? எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குதே.. அது மறுத்துப் போகலையே.." அழுதாள்.
   'உன் கண்களால பாக்குறது தான் மனசுல பதியுது. துக்கமான நிகழ்ச்சிகள பாக்கும் போது குருடா இருந்துடு. கேக்கும் போது செவிடா இருந்துடு. பிறவிக் குருடனுக்கு யானை எப்படி இருக்கும்ன்னு தெரியாது. அவனுக்கு விளக்கிச் சொல்லவும் முடியாது. அவனுக்கு யானை என்பது ஒரு மிருகம் என்பது மட்டும் புரிந்திருக்கும். இப்படித்தான் துக்கங்களை நாம் எடுத்து கொள்ளணும்.
   உனக்கு மனசு இருக்குதுன்னு சொன்னியே.. அது மத்தவங்க மனச எண்ணிப்பாத்துச்சா..? அதே விசயம் மத்தவங்களுக்கு எப்படி பட்ட வேதனையைக் கொடுத்திருக்கும்ன்னு நெனச்சி பாத்தியா..? அந்தச் சம்பவம் அன்னைக்கி தேவகி சரவணனை மடியில கெடத்திக்கினு அழுத அழுகை.. இன்னமும் ஒவ்வொருத்தர் காதுலயும் கேட்டுக்கினே இருக்குது. அன்னைக்கி சக்திவேல் அந்த அம்மாவைக் கட்டிபுடிச்சி 'அவன் போன என்னம்மா..? நா ஒங்களுக்கு மகனா இருப்பேன்" ன்னு சொன்ன ஒரு வார்த்தை தான் அவங்கள இன்னும் உயிரோட வச்சிருக்குது. அவஸ்த்தை படுபவர்களுக்கு ஆறுதல் தான் வேணும்.
   சக்திவேலுவுக்குக் கவலை இல்லையா..? அவன் அடுத்தவருக்கு ஆறுதல் சொல்லவில்லையா..? ஆனா எல்லாருக்கும் ஆறுதல் சொன்ன அவர் தான் ஆறுதல் அடையாம தவிக்கிறாரு. அவருக்கு ஆறுதல் வேணும். அதை எங்களால தர முடியாது. நீ தான் அவர் மனைவி. அவர் மனசுல இருக்கற காயத்த ஆத்தணும்ன்னா.. நீ தான் அன்பால மருந்து போடணும். நீ பெண் பிள்ளை. உங்கிட்ட நா விளக்கமா இதுக்கு மேல சொல்ல முடியாது. புரிஞ்சி நடந்துகோம்மா. நீ எப்ப வருவேன்னு நாங்க காத்துக்கினு இருந்தோம். உன்ன சுத்தி இருக்கிறவங்கள சந்தோஷமா வச்சிப் பாரு. உனக்குத் தானா சந்தோஷம் கிடைக்கும்." எழுந்து போனார்.


   கோவிலுக்கு வெளியே கிடந்த செருப்பைப் போடும் பொழுது.. முந்தானையை யாரோ இழுக்கத் திரும்பிப் பார்த்தாள். சின்னப் பெண்குழந்தை. ;அம்மா அம்மா ;.. என்றபடி தன்னைத் தூக்க வேண்டும் என்பதற்காகக் கைகளை விரித்துச் சிரித்தது.
   குழந்தையின் சிரிப்பு எல்லாத் துக்கங்களையும் மறக்க வைத்துவிடுகிறதே..! மீனா சட்டென்று தூக்கி அந்தக் குழந்தைக்கு முத்தமிட்டாள். யாரோட குழந்தையாக இருக்கும்..? அருகில் மாலதி நின்றிருந்தாள்.
   'மாலதி.. உங்கக் கொழந்தையா..? இவ என்ன போயி அம்மான்னு கூப்பிட்டா."
   'கூப்பிடட்டுமே.. இதுல என்ன தப்பு இருக்குது? நாளைக்கி எனக்கே ஒன்னுன்னா எங்கொழந்தைய ஒம்மகளா நெனைக்க மாட்டியா..?"
   'என்ன இது அர்த்தம் இல்லாத பேச்சி? நாம படுறதெல்லாம் போதாதா..?" கோபமாகக் கேட்டாள்.
   'மீனா.. நா ஒன்னும் அர்த்தம் இல்லாம சொல்லல. வாழ்க்கையில நாம ஒருத்தருக்கு ஒருத்தர் உறவுன்னு நெனச்சி தான் வாழணும். இன்னைக்கி மகன் போனாலும் சக்திவேல மகனா ஏத்துகினு அந்தம்மா வாழலையா..? இது தான் வாழ்க்க. இப்படி தான் வாழணுமின்னு கட்டாயம் இருக்குது. மீனா.. சரவணனையும் மாதவனையும் ஒனக்கு எத்தன நாளா தெரியும்? ஒரு மூனு நாலு வருஷம் இருக்குமா..? எனக்கு சின்ன கொழந்தையிலர்ந்து தெரியும்.
   தோ.. இந்தப் பசங்க குண்டு விளையாடுறாங்களே.. இதே மாதிரித்தான் அந்த ஏழு பேரும் வெளையாடுவாங்க. ஏழு பேருக்கும் ரெண்டு மூனு வயசு வித்தியாசங்கள் இருந்தாலும் இவங்க எப்பவுமே ஒத்துமையா தான் இருப்பாங்க. சக்திவேலுவுக்குப் பணக்காரன் என்ற கர்வமோ.. திமிரோ கொஞ்சம் கூட இருந்ததில்ல. ஊருல யாருக்காவது ஏதாவதுன்னா உயிர கொடுத்துக் காப்பாத்த முன் வருவாரு. ஆனா  அவருக்குன்னு எந்தச் சந்தோஷத்தையும் தானா தேடிக்கிட்டதில்ல. காதல் கூடத் தானா தான் கெடைச்சது. பாவம். நல்லவங்களுக்குத் தான் ஆண்டவன் சோதனையைக் கொடுப்பான். யார் கண்ணுபட்டுச்சோ..?
   அந்தச் சோகத்துல இருந்து எல்லாரும் மீண்டுட்டாங்க. ஆனா சக்திவேல் தான் இன்னும் மீளல. அவருக்கு ஆறுதல் சொல்ல எங்க யாராலும் முடியல. அதுக்கு நீ ஒருத்தி தான் இருக்கிற. ஆறுதலா பேசு. ஆறுதலா நடந்துக்கோ.. என்ன.. நா சொல்றது புரியுதா..?"
   புரிந்தது என்பதாகக் குனிந்து கொண்டே தலையாட்டினாள். ஒரு சிறுவன் வந்தான். 'மீனாக்கா.. உன்ன உன்னோட பிரன்ஸ்ங்க வரசொன்னாங்க." என்றான்.
   'ப்ரென்ஸ்ங்க.." முகத்தில் ஒரு வெறுமை!
   'மீனா.. முடிஞ்சி போனத மறக்க பாரு. போய் பேசு. கல்யாணத்துக்கு வந்தேன்;. காலையில கௌம்பிடுவேன்;. இன்னும் நாலு மாசம் இருக்குது தேருக்கு. அப்போ வர்றேன். சந்தோஷமா இரு. அவரையும் சந்தோஷமா வச்சிக்க."
   குழந்தையை வாங்கிக் கொண்டு போனாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²  ²²²

   மீனா வகுப்பறையில் நுழையும் பொழுது இரண்டு பேருடைய நாற்காலிகள் வெறுமையாக இருந்தது. கவலையாகப் பார்த்தாள். வந்த அழுகையை அடக்கினாள்.
   'சொல்லுங்க. என்ன நடந்துச்சி..? ஏன்..? எதுக்காக..? சொல்லுங்க."
   'மீனா.. ஏன்.. எதுக்குன்னு எங்களுக்கும் சரியா தெரியாது. அதுக்காக சக்திவேல நீ தப்பா பேசி இருக்ககூடாது. "
   நிமிர்ந்து சிவாவைப் பார்த்தாள்.
   'ஆமா மீனா.. அவரு நிருஜாவோட கல்யாணத்துக்குத் தான் போயிருந்தாரு. விசயத்த டெலிபோனுல சொன்னதும்.. அவர் அழுத அழுகைய பாத்துட்டு அந்த பொண்ணு நிருஜா.. கல்யாணம் முடிஞ்ச கையோட சாவுக்கு வந்திடுச்சி. சக்திவேலு வர்றதுக்குள்ள போலிசு கேசுன்னு போயி..  தேனப்பனுக்கும் வெற்றிவேலுவுக்கும் இதுல சம்மந்தமே இல்லன்னு முடிவாயிடுச்சி. ஆனா சக்திவேலு.. அவனுங்கள எப்படியாவது சாகடிக்காம விடமாட்டேன்னு கௌம்பிட்டாரு. அவர் இருந்த கோவத்துல எங்களால அவர கட்டப்படுத்தவே முடியல. ஆனா அந்தப் பொண்ணு நிருஜாத்தான் சண்ட போட்டு சமாதானம் படுத்தினா. ரொம்ப நல்ல பொண்ணு.
   சக்திவேல் இருந்த நெலைய பாத்து அந்த பொண்ணு தன்னோடவே கூட்டிக்கினு போயிட்டா. அவளுக்குக் காதல் கல்யாணம் தான். அவ புருஷனும் சக்திவேலுக்குப் பிரண்டுதான். அங்க போயி திரும்பவும் எம் பில் படிச்சாறு. நீ வந்துட்டன்னு தெரிஞ்சதும் ஓடி வந்துட்டாரு. நீ என்னன்னா அவர சந்தேக பட்டுட்ட." ஜுவா சொல்லி முடித்தான்.
   மீனா கேட்டாள்.
   'தேனப்பனோ.. வெற்றிவேலோ.. இல்லைன்னா.. இந்த கொலையை யார் செஞ்சியிருப்பா..?"
   யாருமே பதில் சொல்ல முன் வரவில்லை.

                          (தொடரும்) 

Friday, 1 March 2013

போகப் போகத் தெரியும் - 42





   'தம்பீ.. மீனா நேத்துலேர்ந்து ஒன்னும் சாப்டல. தூங்கவும் இல்ல. பிரம்மபுடிச்சவ மாதிரி உக்காந்துக்கினே இருக்குது. அப்பிடியெல்லாம் இருக்கக் கூடாதுப்பா. அழுதுட்டா கூடப் பரவாயில்ல. எனக்குப் பயமா இருக்குதுப்பா. "
   கமலா கவலையுடன் சொன்னாள். சோகம் மனத்திலேயே தங்கி விடக் கூடாது. அது வெடித்து வெளியே வந்துவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் அது நீருபூத்த நெருப்புத்தான்! கழன்று கொண்டே இருந்து கொண்டு மனிதனைத் தின்றுவிடும்.
   சக்திவேல் ஒரு டம்ளரில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு மீனா இருந்த அறைக்குள் நுழைந்தான். அவள் தரையில் அமர்ந்து கொண்டு சுவற்றை வெரிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
   இரண்டு மூன்று முறை அவளைக் கூப்பிட்டான். அவளின் காதில் விழுந்ததாகக் கூடத் தெரியவில்லை. டம்ளரை தரையில் வைத்துவிட்டு அவள் தோளைப்பிடித்து உலுக்கினான். அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்து கொண்டே இருந்தவள் சட்டென்று அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டாள்.
   'சக்திவேல்.. சரணையும் மாதவனையும் சாகடிச்சப்போ நீ என்ன பண்ணிக்கினு இருந்த? எப்டி அவனுங்க சாகறதுக்கு விட்ட..  சொல்லு.. சொல்லு." அவனை உலுக்கினாள்.
   சக்திவேல் அவள் கையைச் சட்டையிலிருந்து எடுத்துவிட்டான்.
   'எனக்கு எதுவும் தெரியாதுமா. எல்லாம் முடிஞ்ச பெறகுதான் தகவல் தெரிஞ்சது. நா ஊருல இல்ல. பெங்களூருல இருந்தேன்."
   'பெங்களூருலயா..? அந்த நிருஜா கூட சுத்திக்கினு இருந்தியா..? ஊருல இவ்ளோ கலவரம் இருக்கறப்ப ஒனக்கு அவதான் முக்கியமா தெரிஞ்சாளா..? அநியாயமா ரெண்டு பேர சாவடிச்சிட்டீயே.. பாவி..!"
   முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள். தேம்பித் தேம்பி அழுதாள். 'இதுக்குத்தான் என்ன அவசர அவசரமா படிக்க அனுப்பி வச்சியா..? எனக்கு என்னோட ப்ரென்ஸ் தான் முக்கியம்ன்னு நெனச்சேனே.. அநியாயமா செத்துப் போயிட்டாங்களே..  அழுதாள். அழுதாள். அழுது கொண்டே இருந்தாள்.
   தொண்டை வரண்டுவிட்டது. கண்கள் காய்ந்து சோர்ந்தன. என்ன நடந்தது.? ஏன்? எதனால்? எதுவும் புரியவில்லை.
   பகல் பொழுதில் சேகர் வந்தான். ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு அவளருகில் அமர்ந்தான். மீனா குடித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
   'மீனா கவலபடாத. நீ போன ரெண்டாவது மாசத்துலேயே நடந்து முடிஞ்சிபோன விசயம் இது. கிட்டதட்ட ஒன்ற வருஷமாயிடுச்சி. நாங்க ஓரளவு மனச தேத்திக்கிட்டோம். நீயும் மனச தேத்திக்கோ. ஆனா.. பாவம் ருக்மணி. அவளுக்கு அண்ணனும் போயிட்டான். சரணும் கெடைக்காம போயிட்டான். அவளுக்கு இன்னைக்கி நிச்சயதார்த்தம். நாளைக் காலையில கல்யாணம். அவள இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்க ரொம்ப கஷ்ட பட்டுட்டோம். அவளும் முழு மனசா சம்மதிக்கல. என்ன செய்யிறது. பொறந்துட்டா வாழ்ந்தாகனுமே.. மீனா.. நாம தான் இந்தக் கல்யாணத்த நடத்தி வக்கணும். இதுநம்ம பிரண்ஷ{ப்புக்காக. எழுந்து சாட்டு கௌம்பு மீனா.. நம்மோட துக்கம் நம்மோட போவட்டும்." சொல்லிவிட்டு போய்விட்டான்.
   உச்சி சாயும் பொழுது மாதவனின் தாய் வச்சலாவும் சரவணனின் தாய் தேவகியும் வந்தார்கள். தேவகிக்குச் சரவணன் ஒரே பிள்ளை! விதவை. இன்று அவனும் இல்லை. அவளைப் பார்த்ததும் மீனா துக்கம் மேலிட அவள் மடியில் தலை சாய்ந்து அழுதாள்.
   'போவுது வுடுமா. எல்லாருக்கும் சாவு வரத்தான் போவுது. என்ன அவனுங்களுக்குக் கொஞ்சம் சீக்கிரமா வந்துடுச்சி. வுடு. ஆறிப்போன காயத்த கீறிப் பாக்கக் கூடாது."
   தேவகி தைரியமாகப் பேசினாள். வேறு என்ன செய்யமுடியும் அவளால்? இறந்தவன் இனி வரப்போவது இல்லை. கிடைக்காது என்று மனசுக்குத் தெளிவாகப் புரிந்தவுடன் அதை ஒதுக்கிவிடுவது ஒருவகையில் ஆறுதல் தானே..
   'மீனாம்மா.. சத்திவேலு தம்பி எந்த தப்பும் பண்ணல. அன்னைக்கி அந்தப் பொண்ணு நிருஜா கல்யாணத்துக்குத் தான் போயிருந்துச்சி. ஆனா என்ன காரணம்ன்னே தெரியல. தேனப்பன் ஆளுங்க இப்டி நடந்துகிட்டாங்க. போலிசு கேசுன்னு நடந்துச்சி. என்ன நடந்து என்ன புரோஜனம்? எம்புள்ள போயி சேந்துட்டான்."
  கண்களையும் மூக்கையும் முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
  'அம்மாடி. நீ மனச தேத்திக்கோ. கல்யாணத்துக்கு வா. எங்களுக்கும் மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். வந்துடுமா. மாப்ளவூட்டுக்காரங்க வந்துடுவாங்க. நா போறேன்." இருவரும் கிளம்பிப் போனார்கள்.
   ஆறிப்போன சோறு பழைய சோறு. சாப்பிடப் பிடிக்காது. நல்லது நடக்க இருக்கக் கெட்டதையா பேசுவார்கள்?  ;கனியிருக்கக் காய் கவர்ந்தற்று ;தானே..!
   அவர்களுக்கு இது பழைய விசயம். ஏற்கனவே அனலில் வெந்து கொதித்துப் பிறகு மற்றவர்களால் ஆற்றி.. அதன் பிறகு தானாகவே ஆறிப்போன காயமாக இருக்கலாம். ஆனால் அதன் வடு மனத்தினுள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
   மீனாவிற்கு இது.. கொதித்துக் கொண்டிருந்த பாலை அப்படியே இறக்கி அவள் இதயத்தில் கொட்டிவிட்ட வலி. வேதனை. துடித்தாள். தன்னிடம் உடனே சொல்லவில்லையே என்ற கோபம். சொல்லி இருந்தால் அவர்களின் முகத்தையாவது கடைசியாகப் பார்த்து இருக்கலாமே என்ற ஏக்கம்.  இவை அனைத்தையும் இவ்வளவு நாட்களாக மறைத்துவிட்ட ஆத்திரம்..
   'இன்னும் கௌம்பலையா..?" பொறுமையாகக் கேட்ட சக்திவேலிடம் எரிந்து விழுந்தாள்.
   'நீங்க போங்க. நா வரல."
   'இல்லம்மா. உன்னோட ப்ரெண்ஸ்க்காகத்தான். நீ வரணும். அப்பத்தான் எல்லாருக்குமே ஆறுதலா இருக்கும்."
   'அவனுங்களே போயிட்டாங்க. அப்பறம் என்ன இருக்கு? எனக்கு இஷ்டமில்ல. நீங்க போங்க. நா வரல. என்னால சந்தோஷமா இருக்கற மாதிரி நடிக்க முடியாது."
   ஆத்திரத்தை வார்த்தைகளாகத் துப்பியவள் மறுநாள் திருமணத்திற்குக் கிளம்பி வந்துவிட்டாள்.
   நடிப்புத்தான் வாழ்க்கை. மற்றவர்களை மகிழ்விக்க.. நம்முடைய துக்கங்களைச் சில நேரங்களில் புதைத்துவிட வேண்டும்.
   துக்கம் மக்கிப் போகாத குப்பையாகி மனத்தில் தங்கிவிடுகிறது. மனமே ஒரு குப்பைத் தொட்டி தானே..! அதில் நல்லவைகளும் போடப்படும். கெட்டவைகளும் வந்த விழுந்துவிடும். நல்லவைகள் எளிதில் ஜுரணமாகி விடுகிறது. கெட்டவைகள் ஜுரணமும் ஆகாமல் மக்கியும் போகாமல் தங்கிவிடுகிறதே..
   மக்கிப்போகாத குப்பைகள் மனத்தைக் கவலை என்ற அழுக்கால் நாற்றமடித்துவிட வைக்கிறது.
   மீனா துக்கத்தை மறைத்து முகத்தில் சந்தோஷத்தைப் பூசிக்; கொண்டாள். முகத்தை அரிதாரம் பூசி மறைக்கலாம். ஆனால் உணர்ச்சிகளை மறைக்க முடியுமா..? எங்கே தன்னிடம் யாராவது வந்து பேச்சுக் கொடுத்தால்.. முகம் காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற பயத்தால் யாரிடமும் ஒட்டாமல் தனியாக இருந்து கொண்டாள்.
   ஆனாலும் அவள் அங்கே வந்தது மற்றவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
   கோவிலில் கல்யாணம். வீட்டில் தெருவடைக்கப் பந்தல் போடப்பட்டு விருந்து நடைபெற்றது. அங்கே மாப்பிள்ளை வீட்டாரைத் தவிர யார் முகத்திலும் உண்மையான சந்தோஷம் இல்லை.
   கல்யாணம் முடிந்து மதிய உணவு முடிந்ததும் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டார் வழக்கப்படி பெண்ணை அன்றே மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதாக முடிவு! மணமகள் ருக்மணி ஒவ்வொருவரிடமும் விடைபெற்று வந்தாள். கடைசியாக மீனாவின் எதிரில் வந்து நின்றாள்!
   மீனாவிற்கு அவளை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் போனது. ஆனால்.. நிமிர்ந்து பார்த்ததும்.. துக்கம் வெடித்துவிட.. இரண்டு பெண்களும் கட்டிப்பிடித்து அழுத அழுகையை அடக்க யாருமே முன் வரவில்லை.
   அவர்களின் அழுகைக்கான அர்த்தம் அனைவருக்கும் புரிந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
   'அது ஒன்னுமில்லப்பா.. சின்னதுலேர்ந்து ஒன்னாவே வளந்த புள்ளைங்க. கல்யாணம் ஆனதும் பிரிஞ்சி போறாளேன்னு துக்கம். பாவம் சின்ன புள்ளைங்க இல்லையா..?" கணேசனின் தாத்தா நிலைமையைச் சமாளித்தார். கிழவரின் கண்களிலும் கண்ணீர்!
   'இவ்வளவு அன்பா இருக்கிற புள்ளைய ஊருக்குள்ளயே கட்டி வச்சியிருக்கலாமே.. எதுக்கு வெளியூர்ல கொடுக்கணும்..?" மாப்பிள்ளையில் அப்பா நல்ல எண்ணத்தில் தான் சொன்னார்.
   'என்னப்பா செய்ய முடியும்? யாராருக்கு என்னன்னு அவங்கவங்க தலையில எழுதி இருக்கே.. அத நம்மால மாத்தவா முடியும்..?"
   'நீங்க சொல்றதும் வாஸ்த்தவம் தான். என்ன? எல்லாரும் வானத்துக்கு கீழ தான இருக்கோம். நெனச்சா ரெண்டு மணிநேர பிரயாணம் தான். வந்து வந்து பாத்துட்டுப் போனா போவுது. கௌம்பும்மா. நல்ல நேரம் போயிடப் போவுது.."
   மீனா ருக்மணியின் கண்களைத் துடைத்துவிட்டாள். இருக்கும் நிலையைப் புரிந்து கொண்டாள். மாப்பிள்ளை என்ன செய்வது என்றறியாமல் நின்றிருந்தான். சிறந்த உழைப்பாளி என்பதைக் கட்டான உடல் தெரிவித்தது. ருக்மணியின் கையைப்பிடித்து அவனருகில் அழைத்துக் கொண்டு போனாள்.
   அவன் மீனாவைப் பார்த்ததும் சினேகிதமாகச் சிரித்தான். இவள் சிரிப்பைக் கண்களில் வரவழித்தாள்.
   'இந்தாங்க உங்க பொண்டாட்டி. இவ அன்புக்கு மட்டும் தான் கட்டுப்படுவா. இனிமேல நீங்க உங்க அன்பால இவள கட்டிப் போட்டு வச்சுக்கங்க." அவள் கையைப்பிடித்து அவன் கையில் கொடுத்தாள்.
   அவன் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டே தலையாட்டினான். ருக்மணி கடைசியாகப் பேரூந்துவில் ஏறப் புறப்பட்டது. அனைவரும் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள்.
   மீனா கோவில் குளத்தை நோக்கி நடந்தாள்.

                          (தொடரும்)