Friday, 26 April 2013

போகப் போகத் தெரியும் - 49

   மீனா அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓக்காலித்து ஓக்காலித்து வாந்தி எடுத்தாள். வயிற்றில் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் வாய்  குமட்டி வாந்தி வருவது போலவே இருந்தது. வாயைக் கொப்பளித்து விட்டுத் திரும்பினாள். எதிரில் அகிலாண்டேசுவரி அம்மாள் என்ன என்பது போல் பார்த்தாள்.
   'உடம்பு சரியில்லையா..?"
   'இல்ல. நேத்துல்லாம் நல்லாத்தான் இருந்தேன். காலையில இருந்துத்தான் ஒரே கொமட்டலா வருது. ஏன்னே தெரியல."
   'குளிச்சி எத்தன நாளாவுது..?"
   'ஏன்.. நேத்துக்கூடக் குளிச்சேனே.. இன்னைக்கு ஒரே தலசுத்தலா இருக்குது. பொறுமையா குளி.."
   'ஏய்.. நா அத கேக்கல. வீட்டுக்கு தூரமானது எப்போ..?"
   மீனா யோசித்தாள்.. 'டெல்லியில இருந்து வந்த இந்த ரெண்டு மாசமா வரல.. ஆமா.. ஏன் வரல..?"
   மீனா யோசனையுடன் கேக்கவும் மாமியார் அதிர்ச்சியுடன் அவள் கையைப் பிடித்து இழுத்து வந்து அறையில் தள்ளித் தானும் நுழைந்து கதவைச் சாத்தினாள்.
   மீனா ஒன்றும் புரியாமல் நின்றிருந்தாள்.
   'மீனா.. நா சொல்லுறத கேளு. இந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம். முக்கியமா சக்திக்குத் தெரியாமல் பாத்துக்கோ."
   'என்ன தெரிய வேணாம்..? புரியலையே.."
   'புரியலையா..? பாவி. உனக்கு ஒன்னும் புரியாது தான். நா அவ்ளோ சொன்னேன். அதையும் மீறி நீ இப்ப கர்ப்பமா வந்து நிக்கற. இப்பத்தான் எல்லாப் பிரட்சனையும் முடிஞ்சிது. திரும்பவும் பிரச்சனையா..?"
   'என்ன.. நா கர்ப்;பமா..?" மீனாவின் முகத்தில் ஆயிரம் மின்னல்கள்.
   'ஆமா.. அதுக்கூடத் தெரியலையா..? தோ பாரு. இப்ப இது வேணாம். இன்னும் ரெண்N;ட மாசம் தான். தோசம் முடிஞ்சதும் அப்புறம் நல்லா இருப்ப. அதனால இத கலச்சிடலாம்மா.."
   'என்ன..?" மீனா அவளை நிமிர்ந்து பார்த்தாள். குருடனுக்குப் பார்வை கொடுத்துக் கொஞ்சம் நேரத்துலேயே மீண்டும் குருடாக்கியது போல இருந்தது அவளுடைய நிலைமை.
   'ஆமாம்மா.. தோசம் வெலகுற வரைக்கும் உண்டாகம இருக்கணும்ன்னு ஜோசியர் சொல்லி இருக்காரும்மா. அதுக்கு தான் சொல்லுறேன். யாருக்கும் தெரியாம நாம ரெண்டு பேரும் மட்டும் போயி டாக்டர பாக்கலாம்.. என்ன..? "
   'முடியாது" மீனா தீர்மானமாகச் சொன்னாள்.
   'மீனா புடிவாதம் புடிக்காத. சத்திவேலுக்கு இருவத்தியெட்டு வயசுக்குள்ள புள்ள பொறந்தா.. அது இந்த குடும்ப வாரிச அழிச்சிடும்ன்னு சொல்லியிருக்காரு. உன்னோட பொறக்காத புள்ளைக்காக என்னோட புள்ளையப் பலி குடுக்க மாட்டேன்." அதிகாரமாகச் சொன்னாள்.
   அதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள். 'மீனா.. இங்க நடந்தது வெளிய யாருக்கும் தெரிய வேணாம்." சொல்லிவிட்டுக் கதவைத் திறந்தாள். சக்திவேல் நின்றிருந்தான்.
   'மீனாவுக்கு உடம்பு சரியில்லன்னு கமலா சொன்னுச்சி. என்ன அவளுக்கு..?"
   மீனாவிடம் வந்தான். 'என்னாட்சி..?" கேட்டான். மீனா மாமியாரைப் பார்த்தாள்.
   'ஒன்னுமில்லப்பா.. வயறு சரியில்லையாம். அதான் என்னன்னு கேட்டேன். நீ போ. நா பாத்துக்கறேன்."
   அவன் மீனாவைத் திரும்பிப் பார்த்தான். அவளுடைய கண்களில் தெரிந்த கலக்கம் அவனை அங்கிருந்து போக விடாமல் தடுத்தது.
   'என்ன மீனா.. எதுவாயிருந்தாலும் சொல்லு. டாக்டர வேணும்ன்னா வீட்டுக்கு வர சொல்லவா..?"
   'வேணாம்.." என்று சொன்னவள்.. அவனருகில் வந்தாள்.
   'ஏங்க..? உங்களுக்கு ஜோசியம் ஜாதகத்து மேல நம்பிக்கை இருக்குதா..?"
   'இல்ல. ஏன்..? திடீருன்னு கேக்குற..?"
   'உங்க அம்மா உங்களுக்கு இருவத்தெட்டு வயசுக்குப் பிறகுத்தான் கொழந்த பொறக்கும்ன்னு சொல்றாங்க."
   'ஆமா.. அத எப்போ இருந்தே சொல்லுறாங்க. இப்ப அதுக்கென்ன..?"
   'அதனால.. இப்ப என் வயத்துல இருக்கிற உங்கக் கொழந்தைய கலைக்கணுமாம்." அழுத்தமாகச் சொன்னாள்.
   அவனுக்கு அனைத்தையும் மனத்தில் வாங்கி.. புரிந்து கொள்ளச் சில விநாடிகள் ஆனது. புரிந்ததும்..
   'என்ன சொல்லுற நீ..? அம்மா .. என்ன இதெல்லாம்..?"
   'ஆமாம்பா.. அலைச்சிடணும். எனக்கு எம்புள்ள உசிறு தான் முக்கியம்."
   'என்னம்மா சொல்லுற நீ..? அதுவும் ஒரு உயிருமா.. என்னோட உயிரு. அதப்போயி எப்படி மனசு வந்து அழிக்க சொல்லுற..?"
   'ஆமா. அழிக்கணும் தான்!" உறுதியாகச் சொன்னாள்.
   'முடியாது. என்னால முடியாது. இதுக்கு நா சம்மதிக்கவே மாட்டேன். எனக்கு இந்தக் கொழந்த வேணும். இத்தன நாள் எனக்கு இந்த எண்ணமே வந்தது கெடையாது. ஆனா.. என்னோட வயத்துக்குள்ளேயே ஒரு உயிர் வளருது. அது என்னோட கொழந்த. என்னோட ரத்தம். என்னோட உயிர். அத பெத்து நா அனாதை இல்லன்னு ஊர்பூரா சொல்லிக் காட்டணும். என்னத்தான் நீயும் உம்புள்ளையும் உறவுன்னாலும்.. இது தான் என்னோட உண்மையான ஒறவு. இனிமேல நா அனாத இல்ல.. அனாத இல்ல.." கத்தினாள்.
   'ஏய் மீனா.. நீ அனாத அனாதன்னு நாங்களா சொன்னோம்? நீ தான் உன்னையே அனாதன்னு சொல்லிக்கினு திரிஞ்ச. தோ பாருடி.. நீ உண்மையில அனாத கெடையாது. ஒன்னோட அப்பா என்னோட கூட பொறந்த தம்பி. நீ என்னோட தம்பியோட பொண்ணு தான். அதனால நீ இந்த புள்ளைய பெத்து தான் அனாத இல்லன்னு நிருபிக்கணும்ன்னு இல்ல."
   மீனா அதிர்ச்சியுடன் தன் மாமியாரைப் பார்த்தாள். சக்திவேலுவும் தான்!!
   'ஆமா மீனா. அவன் பேரு அன்பரசு. அவனத்தான் அறிவழகி விரும்புனா. ஆனா.. அவனுக்குப் புடிக்கல. அவன் இங்க இருந்தா கட்டாயப்படுத்தி அறிவழகிய தனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட போறாங்களோன்னு நெனச்சி.. என்னோட வைர நெக்கலச எடுத்துக்கினு போயி பட்டாளத்துல சேந்துட்டான். அவனுக்கு அங்கேயே ஒரு பொண்ணு புடிச்சிபோக.. அந்த பொண்ண கட்டிக்கிட்டான். அவ உன்ன பெத்துட்டு பிரசவத்துல இறந்துட்டா. கை கொழந்தையா இருந்த உன்ன எங்கிட்ட குடுக்கச் சொல்லி  ஆத்தங்கரையில யாருக்கும் தெரியாம அறிவழகிக்கிட்ட குடுத்து அடையாளத்துக்கு நெக்லசையும் கொடுத்திருக்கான். ஆனா.. அறிவழகி கொழந்தைய எங்கிட்ட குடுக்காம.. இந்த விசயத்த மறைச்சி உன்ன வளத்துட்டா.
   ஆனா.. நீ பெரிய பொண்ணானதும் வந்த பிரச்சனையில உன்ன எங்கிட்ட சேத்திடணும்ன்னு கொண்டு வந்து சேத்துட்டா. இந்த விசயம் தெரிஞ்சா ஒனக்கு அவ மேல இருக்கற பாசம் போயிடும்ன்னு உண்மைய யார்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி அழுதா. அதனால நானும் உண்மைய ஒங்கிட்ட சொல்லல.
   அதே சமயம் ரத்த சொந்தத்துல தான் சக்திவேலுவுக்கு பொண்ணு அமையும்ன்னு சொன்னதால ஒனக்கு பொருத்தம் பாத்தேன்.  ஒனக்கு மொதோ தாலி நெலைக்காதுன்னு சொல்லிட்டாரு ஜோசியர். எங்க ஒனக்கு எம்புள்ளைய கட்டுனா.. அவனோட உயிருக்கு ஆபத்து வருமோன்னு பயந்து தான் உன்ன வெறுக்கற மாதிரி பேசினேன். ஆனா.. ஒனக்கு வேந்தன் தாலிகட்டிட்டு அன்னைக்கே செத்துட்டான். உன்னோட தோஷம் வெலகிடுச்சி.
   அதனால தான் உன்ன கட்டிக்க போறேன்னு சக்திவேல் சொன்னதும் சரின்னு சொல்லிட்டேன். ஆனா அவனோட தோஷம் இன்னும் முடியல. யோசிச்சி பாரு. ஜோசியர் சொன்னது எல்லாமே நடந்து இருக்குது. அதுல இது மட்டும் எப்படி நடக்காதுன்னு சொல்லுவ..? சொல்லு. ஒனக்கு ஒம்புருஷன் முக்கியமா..? இல்ல.. வயத்துல இப்பத்தான் மொலச்சிருக்கற புள்ள முக்கியமா..? நல்லா யோசிச்சி பாரு."
   பேச்சில் முற்று புள்ளி வைத்தவிட்டாள். மீனா பிரம்மைப் பிடித்தவள் போல் அமர்ந்து விட்டாள்.

                         (தொடரும்)

Sunday, 21 April 2013

போகப் போகத் தெரியும் - 48

   கோபம் நெருப்பைப் போன்றது. அது மற்றவர்களையும் அழித்துத் தானும் அழிந்து போகும் தன்மை வாய்தது. நெருப்பை நீர் கொண்டு அணைப்பதைப் போலக் கோபத்தை அன்பு கொண்டு அணைக்கலாம்.
   ஒருவன் அதிகமான கோபத்துடன் இருக்கிறான் என்றால்.. அவன் மனத்தில் ஆற்றமுடியாத துயரம் இருக்கிறது என்பது தான் உண்மை!
   தேனப்பன் மனத்தை மீனா நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். அவனுக்கு முதலில் ஆறுதல் தேவை. ஆறுதல் மனக்காயத்தின் மருந்து! அதைக் காயத்தின் மீது பூசிக் கொள்ளப் பொறுமை வேண்டும். அவனிடம் அந்தப் பொறுமை இல்லை.
   தனக்கு ஏற்பட்ட வலி எதிரிக்கும் ஏற்பட்டால் தான் தன்னுடைய வலி அடங்கும் என்று நினைத்தான். அதனால் தான் இந்தப் பகை உணர்ச்சி. ஆனால் இயலாமை!
   அவனுக்கு மீனாவின் மீதிருந்த கோபத்தில் இரண்டு கைகளும் கால்களும் சரியாக இருந்திருந்தால்.. அவன் எப்பொழுதோ அவளைச்  சாகடித்து இருப்பான்;. பாவம்.!
   மீனாவிற்கு அவனது உணர்ச்சிகள் புரிந்தது. அவனுடைய அறியாமையால் தான் இப்படி நடந்து கொள்கிறான் என்பதும் புரிந்து தான் இருந்தது. ஆனால் அவளுக்கே அவள் மீது வெறுப்பு!
   மற்றவர்களின் இன்பம் தனது இறப்பில் தான் இருக்கிறது. இதைக் காலையிலேயே முடிவெடுத்து விட்டதால் தான் தேனப்பன் ஆத்தூருக்குப் போவதற்கு முன் அவனைச் சந்தித்து விட வேண்டும். ஒன்று அவன் திருந்த வேண்டும். அல்லது தான் சாக வேண்டும். ஒரு முடிவுடன் தான் மாமியாரின் தூக்க மாத்திரை அட்டையைக் கையுடன் கொண்டு வந்திருந்தாள்.
   தன்னைத் தானே சாகடித்துக் கொள்வது தவறு என்று சட்டமும் தர்மமும் சொல்கிறது. ஆனால் இங்கே இருக்கும் அவசியத்திற்குச் சட்டம் தெரியாது. அதனால் தான் சட்டென்று உயிரை மாய்த்துக் கொள்ள அந்த மாத்திரைகளை வாயில் கொட்டினாள்.. !!
   ஆனால் விழுங்குவதற்குள் சட்டென்று வெற்றிவேல் அவள் கழுத்தில் கையை வைத்து அழுத்தி 'மீனா துப்பு. எல்லாத்தையும் துப்பு.." என்று கத்தினான்.
   மீனா அவன் கையை விலக்க முயன்று முடியாமல் எல்லா மாத்திரைகளையும் துப்பினாள். டீக்கடையில் தண்ணீர் வாங்கி வாய் கொப்பளிக்க வைத்தன். தேனப்பன் ஆத்திரத்துடன் தன் மகனைப் பார்த்து முறைத்தான்.
   அவனுடைய பார்வை 'நமக்குத்தான் அவளைச் சாகடிக்க மனம் வரவில்லை. அவளே தானே செத்துப் போறேன்னு சொன்னாள்;. விட்டுவிட வேண்டியது தானே" என்று சொன்னது.
   மீனாவிற்கு வெற்றிவேலின் மீது கோபம்! தொண்டையைச் செருமிக் கொண்டாள்;. 'எதுக்காக என்ன காப்பாத்துன வெற்றிவேல்? நா சாகணும். இனிமேலும் என்னால யாரையும் எழக்க முடியாது" கத்தினாள்.
   'மீனா நீ எதுக்குச் சாகணும்? சொல்லப் போனா நா தான் தண்டன அடஞ்சிருக்கணும்." திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான்.
   'அப்பா.. நான் தான் வேந்தன சாகடிசேன். நானும் அவன சாகடிக்கணும்ன்னு நெனைக்கல. என்னை காப்பாத்தினவளை கத்தியாலக் குத்திட்டானே.. என்ற ஆத்திரத்துல தான்; கையில் இருந்த குத்து விளக்காலக் குத்தினேன். அது அவனோட நடு முதுகுலக் குத்திடுச்சி. நானும் எதிர்பாக்கல. இது ஒங்கள தவர எல்லாருக்குமே தெரியும். சக்திவேலுவுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல. அதே மாதிரி தான் லட்சுமணன் சாவும். அவுங்க மூனு பேரும் எதுக்கு சண்ட போட்டாங்க? ஏன் செத்தங்கன்னு தெரியல. ஆனா அதையும் மீனா மேலத்தான் பழியப் போட்டீங்க. உங்களுக்கும் அவுங்கக் குடும்பத்துக்கும் என்ன விரோதம்ன்னே தெரியல. தெரியாமலேயே விரோதத்த வளர்த்து விட்டிருக்கீங்க. இனிமே வர்ற தலைமுறையாவது நல்லா இருக்கட்டும்ன்னு நெனைக்கிறேன்;. ஏதாவது தண்டன தர்றதுன்னா எனக்கு தாங்க. தப்பு என்னோடது தான்!"
   நிதானமாகவும் தைரியமாகவும் சொன்னான். தேனப்பன் வாயடைத்தது போல் உட்கார்ந்து இருந்தான். எதிரி தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்.. என்று நினைத்த போது கொதித்தெழுந்த மனம்.. தன்னுடைய மகன் தான் காரணம் என்று தெரிந்த போது கவலையடைந்தது. எதிரியின் மேல் இருந்த கோபத்தை மகனின் மீது காட்ட மனம் வரவில்லை. ஏமாற்றமாக இருந்தது. ஏமாற்றியதும் எதிரிகள் இல்லை.
   தன்விரலாலேயே தன் கண்ணைக் குத்திக் கொண்ட வலி. அதற்காக விரலை வெட்டி எறிந்து விட முடியாது. தன்டனையும் கொடுக்க முடியாது. ஆனாலும் வேதனை இருக்கத்தான் செய்தது. யாரையும் எதுவுமே செய்ய முடியாத வேதனை. மன எரிச்சலுடன் தேனப்பன் ஒரு காலை ஊன்றி எழுந்தான். தன் மகனைத  தீர்க்கமாகப் பார்த்தான்.
   'உனக்கு எங்கையனோட பேர வச்சதால நா ஒரு நாள்கூட உன்னை பேர் சொல்லிக் கூட்டது கெடையாது. நானுன்னு இல்ல. என்னோட ஊர் காரங்க யாருமே உன்னை பேர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்க. அவ்ளோ மரியாதையா வாழ்ந்த மனுஷன சக்திவேலோட ஊர்க்காரன் எவனோ ஒருத்தன் சாகடிச்சான். அவரோட வழியில வந்தவன் நீ! அந்த ஊர் காரன் ஒவ்வொருத்தனையும் சாகடிப்பேன்னு நம்பிக்கையா இருந்தேன்; ஆனா நீ வேதம் ஓதுற. ஒனக்குச் சக்திவேல் கண்மணிய விட்டு கொடுத்திருக்கலன்னா.. அவன் மேல விரோதம் வந்திருக்கும். அவன் தந்தரக்காரன்;. தான் விரும்பனப் பொண்ணையே ஒனக்கு ஊருக்காக உட்டு குடுத்துட்டான். நீயும் பகைய மறந்துட்ட. மறந்ததுமில்லாம இப்ப ஒறவு கொண்டாடுறீயா..? வெக்கமாயில்ல ஒனக்கு..? தூ. " காறி உமிழ்ந்தான்.
   வெற்றிவேல் பேசாமலேயே நின்றிருந்தான். அவன் இதைவிட அதிகமாக எதிர் பார்த்திருப்பான் போலும்! கிடைத்த தண்டனை கொஞ்சம் தான். பரவாயில்லை. மனதுக்கு அமைதி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கும் முதலில் போராடத்தான் வேண்டி இருக்கிறது. கோபத்துடன் நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்தான்.
   'என்னை மன்னிச்சிடுங்கப்பா. தலைமுறை தலைமுறையா அடிச்சிக்கிட்டு சாவறத நா விரும்பல. இப்போ நாமா கொஞ்சம் பொறுமையா இருந்திட்டா நமக்குப் பின்னால வர்றவங்க நிம்மதியா இருப்பாங்க. என்னால காரணம் இல்லாத சண்டைக்கெல்லாம் உங்களுக்குத் தொணையா வர முடியாது. என்னோட ஆளுங்களும் உங்க கூட வர மாட்டாங்க." என்றான் முடிவாக.
   'யாரும் வரவேணாம். என்னோட உயிர் இருக்கிறவரைக்கும் ஆத்தூர் காரங்க எனக்கு எதிரித்தான். என்னோட ஒரு கையும் காலும் போனது சக்திவேலால தான். அவன் எனக்குப் பரம எதிரித்தான். நானே அவன பாத்துக்கிறேன். டேய்.. வண்டிய ஆத்தூருக்கு ஓட்டுங்கடா.. "
   அதிகாரமாகக் கத்தினார். யாரும் அவருக்கு உதவ முன் வாவில்லை. சுத்தி நின்றிருந்தவர்களைப் பார்த்தார். கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் போல்..!
   'அவர அழைச்சிக்கினு போய் நம்மூருல உடுங்க.." வெற்றிவேல் சொல்ல நான்கு பேர் வண்டியில் ஏற வண்டி நகர்ந்தது. தேனப்பனின் பார்வை மகனைச் சுட்டுவிடுவது போல் இருந்தது.
   பூக்களைத் தின்னாதே என்று புழுவிற்குக் கட்டளை இட முடியாது. பாவம் புழு. அதற்குப் பூ இல்லையென்றால் எதை சாப்பிடும்? பூவைத் தின்னாமல் இருக்க ஒன்று நசுக்கி எறிந்துவிட வேண்டும். அல்லது அப்புறப் படுத்திவிட வேண்டும்.
   பாவம். புழுவின் நிலைதான் இப்பொழுது தேனப்பனுக்கு!
   தேனப்பன் போனதும் துளசியைப் பிடித்திருந்த ஆட்கள் அவரை விட.. நேராக மீனாவிடம் ஓடிவந்தார்.
   'வா மீனாம்மா.. நாம போவலாம்.. " மீனாவின் கையைப் பிடித்து இழுத்தார். மீனா இவ்வளவு நேரம் தந்தைக்கும் மகனுக்கும் நடந்த சம்பாசனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் துளசியின் கையை உதறிவிட்டு வெற்றிவேலிடம் வந்தாள்.
  'தேங்ஸ் வெற்றிவேல்.." என்றாள்.
   'நான் தான் மீனா உனக்கு நன்றி சொல்லணும். ஒருத்தர தலைவரா ஏத்துகிட்டா அவர் செய்யச் சொல்லுற எல்லா விசயங்களையும் நாம ஏத்துக்கணும். நம்மோட மனசுக்குப் புடிக்குது புடிக்கல. அதெல்லாம் வேற விசயம். ஒரு வகையில செஞ்சோற்று கடன்னு சொல்லலாம். மகா பாரதத்துலக் கர்ணன் நல்லவன் தான். ஆனால் அவன் கூடி இருந்த இடம் அவனைக் கெட்டவன்னு தானே முத்திரை குத்துச்சி? நா என்ன கர்ணன்னு சொல்ல வரல. அதுக்காக துரியோதனனும் கெடையாது. தப்பு செய்யறது பாத்து அதுக்குத் தொணப்போவாம நகர்ந்து நின்னுடலாம்ன்னு நெனைக்கிறேன்.
   இது இன்னைக்கி நேத்து என் மனசுல வரல. ஊருக்காக கண்மணிய எனக்கு விட்டு குடுத்தானே சக்திவேல்.. அவனோட நல்ல கொணம் என்ன மாத்திடுச்சி. அன்னைக்கி ஊர்க்காரங்க எல்லாம் அவனத் திட்டுனாங்க. மொறப் பொண்ணு . நீ வுட்டு குடுக்காத. அவ ஒனக்கு தான் சொந்தம்ன்னு நல்லா உசுப்பி விட்டாங்க. ஆனா அவன் நிதானமா சொன்னான். 'என்னோட சந்தோஷத்துக்காக ஊருல கலவரம் வர்றத நா விரும்பல. கண்மணி என்ன கட்டிக்கிறத விட அவள விரும்புறவர கல்யாணம் பண்ணிக்கிட்டா.. ரொம்ப நல்லா இருப்பா..ன்னான் அவனுடைய அந்தப் பொருமை எனக்குப் புடிச்சது. ஏன் நானும் அப்படி இருக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். ஆனா.. அப்பாவுடைய வார்த்தைக்கும் கட்டுபடணும் என்ற கட்டாயத்துல இருந்தேன்.
   அதுவும் இன்னைக்கி போயிடுச்சி. உன்னோடத் துணிச்சலான செயல் என்னை பேச வச்சிது. இதுக்காக நாந்தான் ஒனக்கு நன்றி சொல்லணும்." என்றான்.
   மீனா பேசாமல் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். தந்தை சொல்லைக் காப்பது செஞ்சோற்றுக் கடனா..? சற்றுக் குழப்பமானது தான். ஆனால் தந்தைக்கே மந்திரம் சொன்னதாகக் குமரக் கடவுளும் இருக்கிறார் தானே.. ஏதோ ஒரு வகையில் நல்லது நடந்தால் சரி. சிரித்து கொண்டாள்.
   'என்ன மீனா..? நீயே சிரிக்கிற? என்ன பாத்தா உனக்குச் சிரிப்பு வருதா..? நானே என்ன நெனச்சி பல நேரம் சிரிச்சிருக்கிறேன். மீனா.. எனக்கோரு உதவி செய்வியா..? "
   'என்ன வெற்றிவேல்..?"
   'என்னை.. நீ உன்னோட ப்ரெண்டா ஏத்துக்குவியா..? "
   மீனா கண்கள் விரிய அவனைப் பார்த்தாள். 'என்ன அப்படி கேட்டுட்டீங்க? உங்கள ப்ரெண்டா அடைய நா கொடுத்து வச்சிருக்கணும். ரொம்ப சந்தோஷமா இருக்குது வெற்றிவேல்." அவன் கையைப்பிடித்துக் குலுக்கினாள்.
  

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   வெற்றிவேலின் வண்டியிலிருந்து மீனாவும் இறங்கியதை ஆத்தூர்க் காரர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்! ஒவ்வொருவரின் கண்களிலும் கோப வெறி இருந்தது.  மீனா அவர்களை முறைத்தபடி வெற்றிவேலுவுடன் சக்திவேலுவின் அருகில் வந்தாள்!
   அவன் புரியாமல் அவளை யோசனையுடன் பார்த்தான். கோபமாக வெற்றிவேலுவை முறைத்தான்.
   'சக்திவேல்.. இவர் என்னோட புது ப்ரெண்டு. இனிமேல இவர் நம்ம எல்லாருக்கும் பிரண்டு தான்." என்றாள்.
   சக்திவேல் புரியாதவனாக வெற்றிவேலைப் பார்த்தான்.
   'ஆமா சக்திவேல்.. எனக்கும் சண்ட கொல ரத்தம் இதெல்லாம் புடிக்காமலேயே போயிடுச்சி. இன்னைக்கி மட்டும் நா மீனாவ பாத்து இருக்கலன்னா.. நானும் என்னோட அப்பாக்கூட சேந்து சண்ட போட வந்திருப்பேன். இந்நேரம் குத்து வெட்டு கொலன்னு நடந்திருக்கும். ஆனா இதெல்லாம்; யாருக்காக.? என்ன காரணம்? புரியாமலேயே நாம விரோதிகளா வளந்துட்டோம். இனிமேல இந்த விரோதம் வேணாம். விட்டுடலாம். இந்தா.. மீனாவோட மோதரம். இனிமேல உங்கிட்ட தான் இது இருக்கணும்."
   அவன் கையைப்பிடித்துக் கொடுத்தான். 'மீனா.. நா கௌம்புறேம்மா.." கிளம்பினான்.
   'வெற்றிவேல்.. எப்போ என்ன பாக்க வருவீங்க..?" அவன் சிரித்தான். 'ஏ அசடு. இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது."
   'ஏன் பேசக்கூடாது. நீங்க என்னோட ப்ரெண்டு. யாரும் எதுவும் நெனைக்க மாட்டாங்க. அப்புறம் நீங்க திருவிழாவுக்கு வரணும். கண்மணியையும் கூப்பிடுங்க. அன்னைக்கி மாதிரி காளைய அடக்கணும். உங்க வீரத்தபாத்து கண்மணி மயங்கணும். அதை நா பாத்து ரசிக்கணும். என்ன சரியா..?"
   'சரி. வர்றேன். ஆனா நீ அன்னைக்கி மாதிரி என் கூடத்தான் இருக்கணும். சரியா..?" என்றான்.
   இவன் 'சரி" யென்று தலையாட்டக் கிளம்பிப் போனான். ஊர் ஒன்றும் புரியாமல் இவர்களை வேடிக்கை பார்த்தது.

                         (தொடரும்)

Tuesday, 9 April 2013

போகப் போகத் தெரியும் - 47
   தேனடையில் தேனீக்கள் மொய்க்கும் கூட்டமாக மருத்துவ மனையில் கூட்டம் வழிந்தது. அப்பாய்மெண்ட்டோட இருந்ததால்.. உடனே டாக்டரைப் பார்க்க முடிந்தது. ரசிதைக் கொடுத்து மருந்தகத்தில் மாத்திரையை வாங்கிக் கொண்டாள். கடிகாரம் பத்தடிக்க சில நிமிடங்களைக் காட்டியது.
   வெளியே வந்தாள். பேரூந்து நிறுத்துமிடத்தில் வந்து மறைவாக நின்று கொண்டாள். பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி இருக்கிறது. பதினைந்து நிமிடத்தில் கொண்டு போய்க் கொட்டிவிடும். மனத்தில் கணக்குப் போட்டுக் கொண்டாள். இந்த நேரம் பார்த்தா வண்டி இவ்வளவு தாமதமாக வர வேண்டும்? ஒரு பஸ்.. ஆரன் சப்தம் காதைக் கிழித்துக் கொண்டு வந்தது. அவள் ஊருக்கு எதிர்புறமாகப் போகும் வண்டி! மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.
   அவளுக்கு இது தேவையில்லை. தேவையானது இன்னும் வரவில்லை. நெடுஞ்சாலை ஆனதால் பஸ் மிகமிக வேகமாக.. அப்பொழுது தான் அவள் அந்த முதியவரைக் கவனித்தாள். ஒரு காலைச் சற்று ஊன்றினார் போலச் சாலையைக் கடந்து கொண்டிருந்தார்.
   எதிர் புறத்தில் பேரூந்து மிகமிக வேகமாக.. அவருக்கு மிக அருகில்.. மீனா நொடிப்பொழுதில் ஓடிப் போய் அவரைத் தள்ளிவிட்டு அவளும் அவர் மேலேயே விழுந்தாள்.
   தார் சாலையை அழுத்தித் தேய்த்து நின்ற வண்டியிலிருந்து ஓட்டுநர் கத்தினார்.
   'ஏன்யா.. பஸ் வருதுன்னு தெரியுதில்ல.. கொஞ்சம் காத்திருந்து ரோட்டக் க்ராஸ் பண்றது தான..? அந்தப் பொண்ணு மட்டும் வரலன்னா.. நீ இந்நேரம் கூழுயிருப்ப."
   'யோவ்.. நீ இவ்ளோ வேகமா வந்துட்டு.. எதுத்து வேற பேசுறியா..?" மீனாவும் கத்தினாள்.
   அவள் கத்தியதை யாரும் கேட்பதற்கு நிற்க வில்லை.  வண்டி கிளம்பிப் போய்க் கொண்டே இருந்தது.
   மீனா அந்தப் பெரியவரைக் கை பிடித்து தூக்கினாள். அவரால் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள் அவர்களைச் சுற்றி நிறையப் பேர்! இரண்டு பேர் அவரைத் தூக்கி விட்டார்கள். அவர் மேல் இருந்து விழுந்த ஓர் அடி நீண்ட பொருளை எடுத்து அவரிடம் கொடுத்து.. 'அப்படி என்ன அவசரம் உங்களுக்கு..? கொஞ்சம் பொருமையா நிதானமா நடக்கலாமே.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டா என்ன ஆயிருக்கும்..? " என்றாள்.
   'செத்து தொளஞ்சி இருப்பேன். உன்னால உயிர் பொழச்சத விட என்னோட உசிறு போயிருந்தா.. நிம்மதியா இருந்திருக்கும்."
   குரல் வக்கிரத்தின் உச்சில் இருந்து வந்தது. மீனா அதிர்ச்சியுடன் அந்தப் பெரியவரை உற்றுப் பார்த்தாள். உடல் பாதியாக இளைத்து இரண்டு வருடத்தில் பத்து வயது அதிகமானத் தோற்றத்தைப் பெற்றவிட்ட தேனப்பன் தான் அந்தப் பெரியவர்!!
   குரல் தான் தேனப்பன் என்பதை அவளுக்குத் தெரியப் படுத்தியது.
   அவள் தன்னைச் சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தாள். எல்லாருமே ஓடத்தூர் காரர்கள்! தேனப்பனின் ஆட்கள்! அவர்களுடன் வெற்றிவேலுவும் ஒருவன்.
   மீனா தன்னை ஒரு நிமிடத்தில் சுதாரித்து கொண்டாள். அதற்குள் அவளுடையக் கார் ஓட்டுநர் துளசி ஓடி வந்தார். 'மீனாம்மா.. வா போவலாம்.." அவளுடைய கையைப்பிடித்து இழுத்தார்.
   அவள் எதுவும் பேசுவதற்கு முன் வெற்றிவேலுவின் ஆட்கள் அவனை இழுத்துக் கொண்டு போனார்கள். கைபோனை பிடுங்கிக் கொண்டார்கள்.
   மீனா தேனப்பனை அமைதியாகப் பார்த்தாள். அவளைப் பொருத்தவரையில் தேடிப்போனத் தெய்வம் எதிரில் வந்து நின்றிருந்தது.
   'ஐயா.. எம்மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம்?" பொறுமையாகவும் நிதானமாகவும் கேட்டாள்.
   'கோவமா..? இல்ல. வெறி! உன்ன அப்படியே வெட்டி போட்டாத்தான் என்னோட மனத்தீ அடங்கும்." குரல் அழுத்தமாக வெளிவந்தது.
   'சரி. அப்படியே செய்யுங்க."
   முன்புறமாகக் கையைக் கட்டிகொண்டு சொன்னாள். அவள் நின்றிருந்த விதம் என்னை எப்படியாவது செய்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் என்பது போல் இருந்தது.
   எரிகிறத்தீயில் எண்ணையை ஊற்றினால் மேலும் ஆங்காரமாக எரியும். தண்ணீரை ஊற்றினால்.. ?
   தேனப்பன் கோபத்துடன் இருந்தாலும் சற்று நேரம் பேசாமல் நின்றிருந்தான் தான்.! 'ஏன் பேசாம இருக்கிறீங்க? என்னச் சாகடிக்க வேண்டியது தான..?" சொல்லிவிட்டுத் தன்னைச் சுற்றி இருந்தவர்களை நோக்கினாள். 'இங்க யாராவது கத்தி வச்சிருக்கிங்களா..? நீங்கள்லாம் இடுப்புலேயே கத்தி வச்சிருபீங்களே.. யாராவது தாங்க." கை நீட்டிக் கோட்டாள்.
   யாரும் கொடுக்கவில்லை. ஆனால் எல்லோரிடமும் கத்தி இருந்தது தான்! திரும்பித் தேனப்பனைப் பார்த்தாள். இவன் கையில் பட்டாக்கத்தி பளபளத்தது.
   ஓ.. உங்கக்கிட்டேயே இருக்குதா..? நல்லதா போச்சி. சரி. குத்துங்க. நா உங்கக் கவலையப் போக்கச் சாவத்தயாரா இருக்கேன். குத்துங்க. ஆனா.. எதுக்குச் சாவப் போறேன்ற காரணம் தான் தெரியல." என்றவளின் குரலில் ஒரு துளி வருத்தமும் இல்லை!
   காரணம் தெரியாதா..? பாவி. உன்னால தான எம்பையன் வேந்தன் செத்தான். உன்னால தான லட்சுமணன் செத்தான். அது மட்டுமா.. இன்னைக்கி ரெண்டு பேரு உசிறுக்கு போராடிக்கினு இருக்கானுங்க. அவனுங்கள பாத்துட்டு தான் வர்றேன். என்னோட ரெண்டு பையனுங்கள பலி குடுத்துட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் காரணம் நீ. உம்புருஷன். அந்தப் பசங்க. எல்லாரையும் போட்டு தள்ளணும். அது வரைக்கும் என்னோட மனசு ஆறாது." தேனப்பனின் குரல் கரகரத்தது. பிள்ளைகளை இழந்த தந்தையின் துயர் தெரிந்தது.
   மீனாவின் கண்களும் கலங்கியது. ஐயா நீங்க சொல்லுறதும் சரி தான்." பெருமூச்சுடன் அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில் போய் அமர்ந்தாள். தேனப்பன் கோபத்துடன் அவளைப் பார்த்தான்.
   ஐயா.. எனக்கு எல்லாரிடமும் அன்பா நடந்துக்கணும்ன்னு தான் ஆசை. லட்சியம். எனக்கு விரோதின்னு ஒருத்தர் கூட இருக்கக் கூடாதுன்னு நெனைக்கிறவ நான். வேந்தன கூட விரோதியா நெனைக்கல. அதுக்காக அவர என்னோட புருஷனா ஏத்துக்க மனசு வரல. அதுக்காகத் தான் அவர் கட்டுனக் கட்டாயத் தாலிய கழற்றி போட்டேன். ஆனா அவர் சாகணும்ன்னு கொஞ்சம் கூட நெனைக்கல. இதோ.. இன்னைக்கி நீங்க யாருன்னு தெரியாமத் தான் காப்பாத்தினேன். அது போலத்தான் ஒரு நாள் லட்சுமணன் வெற்றிவேல் சக்திவேல்.. இப்படி எந்த உயிருக்கும் ஆபத்து வரக்கூடாதுன்னு தான் மனசால உதவி செஞ்சேன். அவங்கக்கிட்ட எந்த ஒரு எதிர்பாப்பும் கெடையாது.
   அது மட்டுமில்ல.. அன்னைக்கி வேந்தனை கொலை செஞ்சது சக்திவேல் கெடையாது. எனக்கு யார் கொலை செஞ்சாங்கன்னு நல்லா தெரியும். அதே மாதிரி லட்சுமணனுக்கும் சரவணனுக்கும் மாதவனுக்கும் என்ன எதனால சண்டை வந்துச்சின்னு தெரியாது. மூனு பேருமே செத்து போய் இருக்காங்க. இருந்தாலும் நீங்க உங்க மகனுங்கள எழந்து இருக்கிறீங்க. உங்க மனசுல நான் தான் காரணம்ன்னு நல்லா பதிவாயிடுச்சி. அதனால தயவு செஞ்சி என்ன சாகடிச்சி உங்க ஆத்திரத்தைத் தீத்துக்கங்க.." கண்கலங்கச் சொன்னாள்.
   அங்கே அமைதி நிலவியது. தேனப்பன் கத்தியின் பிடியை அழுத்திப் பிடித்திருந்தான். ம்.. குத்துங்க." மீனா சொல்ல அவன் பேசாமல் நின்றிருந்தான். அவள் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அவர் கையைப் பிடித்துத் தன் அருகில் அமரவைத்தாள்.
   ஐயா நீங்க என்ன சாகடிக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். நீங்க மட்டுமில்ல. உங்க அடியாளுங்க.. உங்க மகன்.. யாருக்குமே என்னைக் கொலை பண்ண மனசு வராது. ஏன்னா.. உங்க எல்லாருக்குமே நா ஏதோ ஒரு விதத்துல ஒதவி பண்ணிருக்கேன். அதனால தான். ஆனா.. நா சாகணும். உண்மையச் சொன்னா எனக்கே நா வாழுறது புடிக்கல. என் ஒருத்தியால எத்தன பேருக்குப் பிரச்சனைன்னு பாருங்க. உங்களுக்குச் சக்திவேலுவுக்கு அவர் ஊர்காரங்களுக்கு.. இப்டி நெறையப் பேருக்கு பிரச்சனை. அதனால நா சாகணும்.."
   கை பையைத் திறந்து ஓர் அட்டைத் தூக்க மாத்திரையை எடுத்தாள். ஒரு காகிதத்தைப் பிரித்து மடியில் விரித்து மாத்திரைகளை ஒவ்வொன்றாகப் பிரித்துப் போட்டாள். அனைவரும் அவள் செய்கையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!
   ஐயா.. எனக்கு விரோதியே இருக்கக் கூடாதுன்னு இருந்தேன். ஆனா எப்படியோ.. எதிர்பாக்காம விரோதம் வளந்துடுச்சி. உங்கக் கோவத்துக்குக் காரணம் நான் மட்டுமாகத் தான் இருக்கணும். அது தான் உண்மையுங்கூட. இதோ இதெல்லாம் தூக்க மாத்திரைங்க. நீங்க என்ன சாகடிக்க வேணாம். நானே செத்துப் போறேன். ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்! என்னோட சாவுக்குபிறகு நீங்க ஆத்தூர் காரங்க மேல இருக்கிற விரோதத்த மறந்திடணும். அவுங்கள எதுவும் செய்யக்கூடாது."
   சொல்லிக் கொண்டே தாளில் இருந்த மாத்திரைகளைக் கையில் கொட்டி உடனே வாயில் போட்டு கொண்டாள்!!

                         (தொடரும்)