Wednesday, 23 January 2013

போகப் போகத் தெரியும் -35                                    
  

   நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கும் நோயாளியை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாது. அவர்களின் நம்பிக்கையே அவர்களைக் குணப்படுத்திவிடும். அல்லது மரண பாதாளத்தில் தள்ளி விடும்.
   இதில் எது தேனப்பனுக்குப் பொருந்தும் என்று மீனாவிற்குத் விளங்கவில்லை. அவருடைய மன வலிமையைப் பார்த்து பல நேரங்களில் அதிசயப்பட்டிருக்கிறாள்.
   வலது காலையும் இடது கையையும் இழந்த ஒருவர்.. எப்படி இப்படியான உணர்ச்சி வேகத்துடன் பேசி நடந்து கொள்ள முடியும்? கொஞ்சம் கூடத் தனக்கு கையோ.. காலோ.. இல்லையே என்ற வருத்தம்.. தாழ்வு மனப்பான்மை.. எதுவும் கொஞ்சம் கூடக் கிடையாது.
   ஆனால் கோபம் மட்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை வந்து இரத்தத்தை அழுத்தியது. அதனால் தான் இரத்த அழுத்தம் வேகத்தில் எகிறியது. மீனா எப்பொழுது பல்ஸ் பார்த்தாலும் கண்கள் அகலப் பயத்துடன் அவரைப் பார்ப்பாள்! அவர் என்ன.. ஏது.. என்று எதையும் கேட்க மாட்டார். அவள் கொடுக்கும் மாத்திரைகளை எந்தக் கேள்வியையும் கேட்காமல் விழுங்கி விடுவார்.
   இவை அனைத்தும் உள்; குமறல்கள்! இதயத்திலேயே கழன்று கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைக் குழம்பு! என்றாவது உண்மை விளங்க வரும்பொழுது வெடித்து அழித்து விடும் ஆபத்து அதில் இருக்கிறது என்பதை மீனா அறியாமல் இல்லை!
   அவளுக்கு இப்பொழுது பயம் இல்லை! எதுவோ ஒன்று நடக்க இருக்கிறது. ஆனால் அது எப்பொழுது என்பது தான் தெரியவில்லை.
   நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்டதால் பயம் இல்லாமல் அதை எதிர் கொல்லும் தைரியம் நிதானம் மனத்தில் புகுந்து கொண்டது.
   சில நேரங்களில் அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். தன்னுடைய எதிரியை எதிரில் வைத்துக் கொண்டே மற்ற இடங்களில் தேடுகிறாரே..!
   ஆனால் அவர் எந்த விசயத்தையும் அவளெதிரில் யாருடனும் பேசியதில்லை. அவள் கல்லூரிக்குப் போனபிறகு பேசுவார்களோ..? இருக்கலாம்.
   தேனப்பனின் மனைவி பெயர் இவளுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றாலும்.. அவர் அவளைச்  ;சுகுமா ; என்றழைப்பதைக் கேட்டிருக்கிறாள். மற்றவர்கள்  ;ஆத்தா ; என்பார்கள்.
   சுகுமா.. பின் கொசுவ புடைவை கட்டிக் கொண்டு சந்தன நிற முகத்தை மஞ்சளால்  மஞ்சள் நிறமாக்கிக் கொண்டு பெரிய குங்குமப் பொட்டு நெற்றியில் பளிச்சிட.. சற்று ஓரமாக வகிடெடுத்து வழித்து வாரிய தலையில் பெரிய கொண்டை! அதைச் சுற்றி எப்பொழுதுமே வாடாத பூக்கள்!
   சுகுமா.. இளவயதில் மிகமிக அழகானவளாக இருந்திருப்பாள். பேச்சில் இன்னமும் இலங்கைத் தமிழர்களின் ராகம் ஒட்டியிருக்கும். அவர்களுக்கே உரிய பாணி! கேட்கச் சுகமாக இருக்கும். ஆனால்.. சில வார்த்தைகள் சட்டென்று விளங்கிவிடாது.
   மீனாவை அவள்  ;பாப்பா ; என்றழைத்ததாலும் மற்றவர்கள்  ;சிஸ்டர் ; என்று அழைத்ததாலும் பெயரால் பிரச்சனை இல்லாமல் போனது.
   மூன்று மாதங்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை! இதன் நடுவில் வெற்றிவேல் வந்து போனதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவள் அவனைப் பார்க்கவில்லை. வேந்தனின் ஆட்களும் வந்து போனார்கள். அவர்கள் கண்களில் தெரிவது ஆத்திரமா..? அனுதாபமா..?  புரிந்து கொள்ள முடியாத பார்வையாக இருக்கும்.
   இவர்களை நல்லவர்கள் என்றோ.. கெட்டவர்கள் என்றோ.. முத்திரை குத்திவிட முடியாது. படிக்காதவர்கள். கூடுமிடமாக மாறும் மழைநீரைப் போன்றவர்கள். இவர்களை எந்த விதத்திலும் குற்றம் சொல்ல முடியாது.
   ஆனால்.. ஏன்.. இவள் தான் மீனா என்பதைத் தேனப்பனிடம் மறைத்தார்கள்? என்பதைத்தான் அடிக்கடி நினைத்துக் குழம்புவாள்.
   அவர்களைப் பார்த்துக் கொண்டே படிப்பாள். படிப்பதை மட்டும் அவள் எந்த விதத்திலேயும் நிறுத்திவிட வில்லை. இதன் நடுவில் சக்திவேலின் ஞாபகம் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கும். நண்பர்கள் அறிவழகி அகிலாண்டேசுவரி.. என மனத்தில் தோன்றினாலும் அவர்களைப் பிரிந்திருப்பது.. அவர்களை முழுவதுமாகப் பிரிந்து விடாமல் இருக்கத்தானே!! என்று அவளுக்கே அவள் சமாதானம் செய்து கொள்வாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   கதவை பூட்டிவிட்டு எங்கே போய் இருப்பார்கள்? யோசனையுடன் நின்றிருந்தவளிடம் எதிர் வீட்டுக்காரர் வந்தார்!
   'சிஸ்டர்.. இங்க குடியிருந்தவங்க அவங்க சொந்த ஊருக்கு போயிட்டாங்க. இந்த வீட்டுக்கு ஓனர் நான் தான். இந்த மாச வாடகையை கொடுத்துட்டாங்க. உங்கள வேணுமின்னா இந்த மாசம் தங்கிக்க சொன்னாங்க. மாசக் கடைசில காலி பண்ணிட்டா கூட எனக்குப் பரவாயில்ல. இந்தாம்மா சாவி.." நீட்டினார்.
   வாங்கி வீட்டைத் திறந்தாள். அவள் மனம் போலவே வீடும் இருண்டிருந்தது. விளக்கைப் போட இருள் ஓடி மறைந்தது. ஆனால் அவள் மனத்தில் இருந்த இருள் மறையவில்லை.
   என்ன காரணமாக இருக்கும்? எதுக்காக இவ்வளவு அவசரம்? செயற்கை கை பொருத்தினாலும் அது சற்றுப் பொருந்தாமல் போனதால்.. அதனுடைய பட்டை வார் பிளாஸ்டிக்கில் செய்ய ஆர்டர் கொடுத்திருந்தார்களே.. அது கையில் கிடைத்ததும் கிளம்பிவிடுவதாக சுகுமா அம்மாள் சொல்லியிருந்தாள்.
   ஒரு சமயம் அந்தப் பட்டை வார் கிடைத்துவிட்டதா..? அதனால் தான் கிளம்பி விட்டார்களா..? இருந்தாலும் இத்தனை நாள் பழகிய தன்னிடம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் போய் விட்டது ஏமாற்றமாக இருந்தது.
   எதில் தான் தனக்கு ஏமாற்றமில்லை? இதைப் பெரியதாக எடுத்துக் கொள்வதற்கு? பெரு மூச்சு விட்டுவிட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.
  ஆனால் அவளுக்குத் தெரியாது! கூடிய சீக்கிரத்தில் அவர்கள் அனைவரையும் இக்கட்டான நிலைமையில் சந்திப்பாள் என்று!!

     பேரூந்து ஆற்றைத் தாண்டும் பொழுது அவளையும் அறியாமல் கண்கள் தேடியது யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா..? என்று! யாருமில்லாததால் கண்கள் வழியாக மனத்திக்கு ஏமாற்றம்!
   மூடிய மனத்தைத் திறக்கக் கண்கள் தான் காரணமாக இருக்கிறது. இன்று இந்த ஊரை அவளுடைய கண்கள் பார்க்காமல் இருந்திருந்தால்.. அவளுடைய மூடிய மனம் மூடியதாகவே இருந்திருக்கும்!
   எதற்காகப் பார்த்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தால்.. நிச்சயம் பதில் கிடைக்காது. பார்க்கவே கூடாது என்ற மனத்திற்குக் கட்டளையிட்டு கண் இமைகளை மூடிக் கொண்டாலும்.. நாம் கூடாது என்று நினைக்கும் உருவம் அல்லது காட்சி தான் வந்து கண்களைத் துளைக்கும்!
   மனம் தனக்கு அடிமையாக இருக்கும்.. அடிமையாகத் தான் இருக்கிறது.. என்று நினைத்தாலே அந்த வினாடியே அவர்கள் அவர்களின் மனத்தை இழந்து விட்டவர்கள் என்று ஆகி விடுகிறார்கள். மீனாவும் தன் மனத்தை அடக்கப் பார்த்து அடக்க முடியாமல் போக.. இழுந்து பெருமூச்சு விட்டாள்! காற்றில் கலந்து வந்த மண்வாசனை அவளது நாசிக்கு மட்டும் விருந்தளித்தது.
   ஓடத்தூர் வந்ததும் இறங்கினாள். பேரூந்து புகையைக் கக்கிவிட்டுச் சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லாதது நல்லதுக்குத்தான் என்று நினைத்து மகிழ்ந்தது மனம். தூரத்தில் ஓடிய பேரூந்து கானல் நீரில் கப்பல் போல் மிதந்து சென்றது.
   ஓடத்தூர் என்று எழுதியிருந்த சிமென்டு கல் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் வழியைக் காட்டியது. இக்கல் படித்தவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. படிக்காதவர்களுக்கு..? சில நேரங்களில் படித்தவர்கள் கூடப் படிக்காதவர்களிடம் வழி கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறதே..!
   மீனாவிற்கு ஊருக்குள் போக மனம் வரவில்லை. எப்படி மனம் வரும்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு போவது? இது வெற்றிவேல் இராஜ்ஜுயம் நடக்கும் ஊர்! தனக்குத் தாலி கட்டிவிட்டு அன்றே இறந்து போன வேந்தனுக்கு சொந்த ஊர்! தன்னைக் கொல்வதற்காக வெறியுடன் இருக்கும் தேனப்பன் வாழும் ஊர்!
   இங்கே வந்தது தப்போ..? தப்பு தான். ஆனால் இங்கே வந்துவிட்ட பிறகுதான் அதில் இருக்கும் ஆபத்து விளங்கியது. இனி என்ன என்ன பிரச்சனைகள் வருமோ..? நாம் வந்திருக்கவே கூடாது. ஆனால் இதெல்லாம் அந்த டாக்டர் பார்த்தசாரதிக்கு எப்படித் தெரியும்? தேனப்பனுக்கே அவளை இன்றுவரை யார் என்று தெரியாத பொழுது அவருக்கு எப்படித் தெரியும்?
   தேனப்பனுக்குச் செயற்கை கை பொறுத்தினதில்.. சற்றுப் பொருந்தாமல் போகவும் அதை இறுக்கக் கட்டும் பட்டை வார் பிளாஷ்டிக்கில் செய்யத் திரும்பவும் ஆர்டர் கொடுக்கப் பட்டது. அது இன்று காலையில் தான் டாக்டரிடம் கிடைத்தது. ஆனால் அதற்குள் தேனப்பனின் மகன் லட்சுமணன் சிறையில் இருந்து விடுதலையாகி வருவதால்.. தேனப்பனும் அவன் மனைவி மற்றவர்களும் நேற்றே டவுனில் இருந்த வீட்டைக் காலிப் பண்ணிக் கொண்டு கிராமத்துக்கு வந்து விட்டார்கள்! அதனால் இந்த அவசியமான பட்டைவாரை தேனப்பனிடம் கொடுத்துவிட்டு வருமாறு மீனாவை அனுப்பி வைத்தார் டாக்டர் பார்த்தசாரதி!
   இவளும் தைரியமாகத்தான் வந்தாள்! ஆனால் இங்கே வந்ததும் ஏதோ இனம் புரியாதப் பயம்!!
   திரும்பிப் போய் வடலாமா..? அதுவே சரியெனப் பட்டது. வழி தெரியவில்லை என்று சொல்லிவிடலாம். வேறு யாரையாவது அனுப்பிக் கொள்ளட்டும். அவளுக்குத் தெரியும்! யாரும் போகமாட்டோம் என்று சொன்னதால் தான் டாக்டர் அவளை அனுப்பினார். அவர் எது சொன்னாலும் தட்டாமல் செய்பவள் தான் மீனா!
   அவள் படிப்பதற்குப் பல விதங்களில் உதவிகள் செய்திருக்கிறார். பல இடங்களில் இவளுக்காக வேலைக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். ஆதலால் இவளுக்கு அவர் மீது ஏகமரியாதை உண்டு!
   அப்படிப் பட்டவரை ஏமாற்றுவதா..? யோசனையுடன் நின்றிருந்தவளின் கண்களில் அவர்கள் தென்பட்டார்கள்! ஒரு பெண். இரண்டு ஆண்கள்! அவர்கள் அவளை மிரட்டிக் கொண்டு போக.. அவள் பயந்து நடுங்கிக் கொண்டே போனாள்.
   அந்த பெண்..? ஆத்தூர்காரப் பெண்ணாயிற்றே..!! அதிலும் விதவை. மற்ற இருவரையும் அவள் வேந்தனுடன் பார்த்திருக்கிறாள்.
   ஏன்.. எதற்காக..? என்று பதில் தேடுவதற்கு முன்.. அவர்கள் வழியைவிட்டு மரஞ்செடி புதர்களுக்கு நடுவில் புகுந்து நடக்கவும்.. மீனாவும் அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தாள்.
   அவர்கள் மரங்கள் நிறைந்திருந்த ஒரு தனியாக இருந்த ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். மீனாவும் அவர்களுக்குத் தெரியாமல் நுழைந்து ஒரு மறைவான இடத்தில் நின்று கொண்டு எட்டிப் பார்த்தாள்.
   அங்கே லட்சுமணன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க.. அவனருகில் இரண்டு அடியாள் கை கட்டி நின்றிருந்தனர். இவர்கள் வந்ததும் அந்தப் பெண்ணைவிட்டுவிட்டு நால்வராக வெளியேறினர்.
   'வா ராதிகா.. வந்து ஒக்காரு." லட்சுமணன் அவளை ஆசையுடன் அழைத்தான்.
   'என்னைய எதுக்கு கூட்டியாற சொன்னீக? ஊருல எவ்ளோ கலாட்டா நடந்திருக்கு. இப்போ போய் இன்னாத்துக்கு இப்டி..?" கோபமாகக் கத்தினாள்.
   'ஊருல கலட்டான்னா எனக்கென்னவாம்? எனக்கு இப்போ நீ வேணும். ஜெயில்ல இருந்து வந்து நா இன்னும் என்னோட ஆயிஅப்பனக் கூட பாக்கப் போவல தெரியுமா..? ஆனா.. உன்னைய பாக்காம என்னால இருக்க முடியாது. வாடியிங்க.." அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் அமரவைத்தான்.
   'வேண்டாய்யா. எனக்கு இது கொஞ்சம் கூடப் புடிக்கல. எங்க ஊர்க்காரங்களுக்குத் தெரிஞ்சா.. அவ்ளோ தான். என்னைய அப்டியே வெட்டி போட்டுடுவாங்க. நா போயிடுறேன்." அவள் எழுந்தாள்.
   'என்னடி ஊர்காரங்க. நீயம் நானும் மனசார விரும்புனோம். ஆனா ரெண்டூரூக்கும் இருந்த பிரச்சனையால ஒன்னப்பன் உன்ன வேற ஒரு வக்கத்த பையனுக்கு கட்டிவச்சான். ஒரு சண்டையில ஓம்புருஷன் செத்துடான். அப்பறம் என்னா..? ஏங்கூட இருக்கலாம் தான.. ஊருஊருன்னு ஊருக்காக ஆசகள பொதச்சிட வேண்டியதா போச்சி. தோ பாரு புள்ள. நீ எனக்கு வேணும். நா இருக்கறேன் பயப்படாத.. "
   அவன் ஆசையுடன் அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் அவன் கையை உதறினாள்.
   'பயப்படாம.. ஒன்னைய ஆசையாவா கொஞ்ச முடியும்? ஏதோ ஏம்மனசும் வயசும் தறிகெட்டு போயிட்டதால ஒன்னாசக்கெல்லாம் சம்மதிச்சேன். ஆனா இனிமே இது வேணா. என்னைய கூட்டு ஆள் அனுப்பாத. நா போறேன்."
   அவள் சொல்லிவிட்டுக் கதவை நோக்கி நடக்கவுவும்.. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீனா அவள் எதிரில் வந்து நின்றாள். ராதிகா இவளைப் பார்த்தும் அதிர்ச்சியுடன் நின்றுவிட்டாள். அவளைத் தொடர்ந்துவந்த லட்சுமணனும் தான்!!
   மூவருமே எதையும் பேசுவதற்குள்.. சில பெண்கள் கதவைத் திறந்து கொண்டு நுழைய.. மீனா சட்டென்று ராதிகா கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே தப்பிக்க வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று தேட.. தோட்டத்து வாசல் திறந்திருக்க.. அதைப் பார்த்ததும்.. இருவரும் ஓட நினைக்க.. அதற்குள் அதில் ஒரு பெண் கிட்டேவந்து மீனாவின் கூந்தலை கெட்டியாகப் பிடித்து இழுக்கவும்.. ராதிகாவைத் தப்பி ஓட விட்டுவிட்டு அந்தப் பெண்களிடம் மீனா மட்டும் மாட்டிக் கொண்டாள்!!

                           (தொடரும்)                               

Tuesday, 15 January 2013

போகப் போகத் தெரியும் - 34
  
   பூமியில் செயற்கையாய்த் தோன்றிய நட்சத்திரங்கள்; வழி நெடுகிலும் மிசாரக் கம்பியில் தொங்கும் பாதரசப் பூக்களாகப் பளிச்சிட்டது.
   மீனா யோசனையுடன் முன்னே நடந்தவனைப் பின் தொடர்ந்தாள். அவன் ஒரு முறை திருவிழாவில் சக்திவேல் துரத்தி மீனாவால் காப்பாற்ற பட்ட வேந்தனின் கையாள் தான் அவன்!
   எதிரியின் ஆளாக இருந்தாலும் அவளைப் பார்த்ததும் அவன் முகத்தில் தெரிந்த பயம்.. வார்த்தையில் தெரிந்த பரபரப்பு.. நடையில் தெரிந்த வேகம்.. ஏதோ காரணம் இருக்கிறது என்று உள் மனது சொல்ல அவனை அவள் பின் தொடர்ந்தாள்.
   அவன் தெருமுனையில் திரும்பி ஓர் ஒதுக்குப் புறமாக நின்றான். அவளும் அவன் எதிரில் நின்றாள்.
   'மீனாம்மா.. நீ எதுக்கு அந்த வீட்டுக்கு வந்த?"
   'ஏங் கேக்குற..?"
   'காரணமாத்தான்! பதுல சொல்லு மொதல்ல."
   'அந்த வீட்டுல ஒரு பெரியவர் இருக்காரு. அவருக்கு ஆக்ஸீடண்டு ஆயிடுச்சாம். அவர கவனிச்சிக்க என்ன பணிப் பெண்ணா நியமிச்சிறுக்காரு டாக்டர்."
   அவன் கண்களில் அதிர்ச்சி! யோசித்தவன் தன் சட்டைப் பையில் கைவிட்டு எடுத்த பணத்தை மீனாவின் கையைப் பிடித்துத் திணித்தான்.
   'மீனாம்மா.. நா ஒன்னோட நன்மக்கித்தான் சொல்றேன். இந்த பணத்த வச்சிக்கினு மொதல்ல பஸ்ச புடிச்சி ஊரு போய் சேறு." என்றான். மீனா புரியாதவளாக அவனை முறைத்தாள்.
   'எதுக்கு என்ன தொறத்துற?"
   'காரணமாத்தான். பெரியவர்ன்னு சொன்னீயே.. அந்த ஆளுக்கு மட்டும் நீதான் மீனான்னு தெரிஞ்சா.. ஒடனே ஒன்ன சாவடிச்சிடுவாரு."
   மீனா அதிர்ச்சியாகக் கண்கள் அகல அவனைப் பார்த்தாள்!
   'என்ன சொல்லுற நீ? எதுக்காக என்ன அவர் சாகடிக்க நெனைக்கணும்? எனக்கும் அவருக்கும் அப்டி என்ன விரோதம் இருக்குது?" மீனா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
   'மீனாம்மா.. நெசம்மா நா அவ்ளோ சொல்லியும் ஒனக்கு அவுரு யாருன்னு தெரிலையா..?"
   'இல்ல."
   'அவுரு தான் தேனப்பன். வெற்றிவேல் வேந்தன் லச்சுமணன் இவங்களோட அப்பாரு".
   மீனா யோசனையுடன் தலையாட்டினாள். 'ஓ.. அப்படியா..? அது இருக்கட்டும். ஆனா எதுக்காக அவரு என்ன சாகடிக்க நெனைக்கணும்?"
   'இன்னா நீ.. ஒன்னும் தெரியாதவ மாதிரி பேசற? ஒன்னாலத்தான அவரோட புள்ளி செத்தான். இன்னொறு புள்ள ஜெயில இருக்கான். பின்ன.. உன்ன சும்மாவுடுவாரா..?"
   இந்த வார்த்தைகள் அவள் தலையில் ஓங்கி அடித்தது போல் இருந்தது. முகமெல்லாம் வியர்வைப் பூக்கள் பூக்க.. திருமணத்தன்று நடந்ததை கண்ணுக்கு முன் கொண்டு வந்தாள். லட்சுமனன் இரத்த வெல்லத்தில் கிடந்தது ஞாபகத்திற்கு வந்தது. வேந்தன் சிறையில் இருப்பதாக ரத்தினம் சொன்னது காதில் ஒலித்தது.
   அப்படியானால் லட்சுமணன் இறந்துவிட்டானா..? அதற்கெல்லாம் காரணம் நானா..? கடவுளே.. ஓர் உயிர் போக நான் காரணமாகி விட்டேனா..? எதற்காக இப்படி ஒரு சோதனையை எனக்குக் கொடுத்தாய்..?
   அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் எதிரில் நின்றிருந்தவனையும் கலங்க வைத்தது. இவள் மனத்தில் அவன் பேரில் இவ்வளவு ஆசை இருந்திருக்கிறதா..? ஐயோ.. இது அவருக்குத் தெரியாமலேயே போய் விட்டதே.. தெரிந்திருந்தால் சாகும் பொழுதாவது நிம்மதியாகச் செத்திருப்பாரே..
   அழுத மனம் அடுத்தவருக்கு ஆறுதல் சொல்லத் துடித்தது.
   'மீனாம்மா.. அழுவாத. ஐயா ஒம்மேல கொள்ள ஆச வச்சிருந்தாரு. கடெசில இப்டி ஆயிடுச்சி. அவுரு இருந்த வரைக்கும் நாங்களும் ராசாவூட்டு கன்னுகுட்டியாட்டம் இருந்தோம். இப்போ.. பெரியய்யா காலப்புடிச்சிக்கினு காலத்த ஓட்ட வேண்டியது தான்."
   அவன் பேச்சு மீனாவைக் குழப்பியது! என்ன சொல்கிறான் இவன்? உண்மையில் என்ன நடந்தது?
   'இதோ பாருங்க.. அன்னைக்கி என்னத்தான் நடந்துச்சி? எங்கிட்ட யாருமே.. எதையுமே சொல்லல. தயவுசெஞ்சி உண்மைய சொல்லுங்க."
   குரலில் அழுகையின் சாயல் இருந்தது. அங்கே போனவர்கள் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு போனது மேலும் வேதனையைத் தந்தது.
   'ஒனக்கு உம்ம தெரியாது தான். யாரும் சொல்லி இருக்க மாட்டானுங்க. நா சொல்றேன்;. அன்னிக்கி நடந்த கலவரத்துல வேந்தன கொல செஞ்சிட்டான் சத்திவேல். பழி லச்சுமணன் மேல விழுந்துட்டதால லச்சுமணன் ஜெயில இருக்கார். அது மட்டுமில்ல. விபத்துல கை போயிடுச்சின்னு இருக்காரே தேனப்பன்.. அவரோட கையி வெபத்துல போகல. சத்திவேலுத்தான் அவரோட கைய வெட்டிபுட்டான்."
   அவன் நிதானமாகச் சொல்ல.. மீனா கண்கள் அகலத்திறந்து.. வாயில் கைவைத்தபடி நின்றுவிட்டாள்.
   வேந்தன் இறந்துவிட்டான்! அவனை கொலை செய்தது சக்திவேல்!
   சக்திவேல் செய்த கொலைக்குத் தண்டனை அனுபவிப்பது லட்சுமணன்!
   தேனப்பன் கையை வெட்டியது சக்திவேல்!
   ஏன் இதெல்லாம் நடந்தது.? எதற்காக நடந்தது? யோசனையுடன் தேனப்பன் தங்கியிருந்த வீட்டை நோக்கி நடந்தாள். கூட இருந்தவன் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை!!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   சக்திவேல் வீட்டு அலுவலக அறை! அமர்ந்திருந்த சக்திவேலைச் சுற்றி ஐந்து நண்பர்கள்! சிவா இன்னும் மருத்துவமனையிலிருந்து வரவில்லை. ஒவ்வொரும் யோசனையில் இருந்தாலும்.. அதில் கோபமும் அதிகமாகத் தான் இருந்தது.
   'சத்திவேல்.. நீ மீனாகிட்ட என்ன சொன்ன? என்னத்தான் நடந்துச்சி..? அவ எதுக்காக சேகர்கிட்ட இப்டி சொல்லி அழணும்?" ஜீவா உரிமையுடன் கேட்டான்.
   'எனக்கு தெரியும். அவ இந்த வீட்டுக்கு வந்தாலே மூட்அவுட் ஆயிடுறா.. முந்தா நாள் ராத்திரி ஒன்வீட்டுல தான் தங்கினா.. பாம்புக்குப் பயந்து ஆஸ்டல்லேயே தங்கிக்கிறேன்னாலும் பரவாயில்ல. அதுவுமில்ல. காலையிலேயே டெலிபோன் பண்ணி காரணம் எதுவும் சொல்லாம இனிமே நான் அந்த ஊருக்கே வரமாட்டேன்னு ஏன் சொல்லணும்? அதுவும் அழுதுகினே சொன்னா.. என்னமோ நடந்திருக்க. ஒனக்குத் தெரியாம இருக்காது. என்னன்னு சொல்லு." சக்திவேலுவைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் சேகர்.
   சக்திவேல் யோசித்ததில் அன்று நடந்த அனைத்தும் ஞாபகத்தில் வந்து போனது. அனைத்தும் சந்தோசமான நிகழ்ச்சிகள் தான். அவளும் அனைத்தையும் சந்தோசமாகத்தான் எடுத்துக் கொண்டாள். பிறகு எதற்காக இப்படி பேச வேண்டும்?
   'சொல்லு. அன்னைக்கி என்ன நடந்துச்சி?"
   'எனக்கும் ஒன்னும் புரியலை சேகர். ஆஸ்டல் ரூமையும் காலி பண்ணிட்டாளாம். இப்போத்தான் அவளோட ரூம்மெட் டெலிபோன் பண்ணினாள். நைட்டெல்லாம் அழுதுக்கினே இருந்தாளாம். நேத்து டாக்டர் பார்த்தசாரதியோட எங்கேயோ போனாளாம். விசாரிச்சிதுல ப்யூன் சொன்னான். எங்க போனா..? என்ன ஆச்சி? ஒன்னுமே எனக்கும் புரியல."
   தலையை அழுத்தமாகக் கைகளால் பிடித்துக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்தான். கைபோன் அலரியது. எடுத்துப் பார்த்தான். பெயரில்லாத அழைப்பு! ஒரு சமயம் மீனாவாக இருக்குமோ..? இருக்கலாம். யோசனையுடன் எட்போனைக் காதில் மாட்டிக் கொண்டு அனைவருக்கும் கேட்கும்படி பட்டனை அழுத்திவிட்டு 'அலோ" என்றான்.
   அவன் யூகம் சரியாகத்தான் இருந்தது எதிர்முனையில் மீனா தான்!
   'என்ன மீனா.. எப்படி இருக்கே..?" சாதாரணமாகக் கேட்டான்.
   'நா இருக்கிறது இருக்கட்டும். நீ ஏன் இப்டி மிருகம் மாதிரி நடந்துக்கினே..?" வார்த்தைகள் ஒருமையில் ஒலித்ததால் மதிப்பிழக்கச் செய்தது.
   'ஏன்.. நா என்ன செஞ்சேன்..?" நண்பர்களைப் பார்த்தபடி கேட்டான். ஒரு சமயம் அன்றிரவு அவளைக் கட்டியணைத்தது அவளுக்கு பிடிக்கவில்லையோ..!
   'சக்திவேல்.. அன்னைக்கி வேந்தன் எனக்குத் தாலி கட்டினாலும் நானே அவன விட்டெரிஞ்சிட்டு வந்திருப்பேன். ஆனா நீயும் ஒன்னோட ஊர்காரங்களும் வந்ததால இப்போ எவ்ளோ பிரச்சனைங்க வந்திருக்குன்னு பாருங்க..? உன்னால ஒரு உயிரே போய் இருக்குது. சிவா தலையில அடிபட்டு இருக்குது. நான் தடுத்திருக்காட்டா.. வெற்றிவேல் குத்துவெளக்குல வுழுந்திருப்பாரு. உன்ன அந்த வேந்தன் கத்தியால குத்தியிருப்பான். இவ்வளவு முடிஞ்ச பெறகும்.. நீ என் வேந்தனோட அப்பா.. தேனப்பன் கைய வெட்டுன?"
   கோபத்தில் மூச்சிறைத்தது அவளுக்கு!
   'மீனா.. சண்டையில வேந்தன் செத்துட்டான். அதுக்காக லட்சுமணன் ஜெயில் இருக்கான். வேந்தன் செத்ததுக்குக் காரணம் நாங்க கெடையாது. ஆனா தேனப்பன் நான் தான் காரணம்ன்னு சொல்லி தனியா இருந்த சிவாவையும் கணேசனையும் தாக்கி இருக்கான். அவன சும்மாவா வுட சொல்லுற? அன்னைக்கி நான் அவனோட கழுத்த வெட்ட வேண்டியது.. கைய மட்டும் வெட்டுனேன்னு சந்தோஷப்பட்டுக்கோ." பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான்.
   'ஓ.. ரொம்ப சந்தோஷம் தான். வேந்தன குத்தினது வெற்றிவேல். அது எனக்கு தெரியும். எதுக்காக லட்சுமணன் ஜெயிலுக்கு போவணும்?"
   யோசித்துப் பார்த்ததில் தான் கத்தி குத்து பட்டிருக்கும் பொழுது வேந்தனின் முதுகுப்பின்னால் வெற்றிவேல் கையிலிருந்த குத்துவிளக்கால் குத்தியது ஞாபகத்தில் வந்தது. அதனால் தான் கேட்டாள்.
   'மீனா.. அது அவுங்க ஊர் பிரச்சனை. அதுல நாம தலையிடக்கூடாது. லட்சுமணனை எப்படியாவது வெளிய கொண்டாந்துடுவான் வெற்றிவேல். நீயும் இது பத்தி யார்கிட்டேயும் பேசாத. ஆமா.. இதெல்லாம் யார் ஒனக்குச் சொன்னாங்க..?"
   'யாரோ சொன்னாங்க. ஒனக்கு என்ன? எனக்கு உண்ம தெரியாமலேயே போயிடும்ன்ன நெனச்சியா..?" கோபம் வார்த்தையில் கொப்பளித்தது.
   'சரி. ஏதோ நடந்தது நடந்து போச்சி. நீ இப்ப எங்க இருக்கிற? ஆஸ்டல் ரூமைக் கூட க்காலிபண்ணிட்டியாம்..! ஏன்..?"
   'ஏனா..? இனிமேல ஓந்தயவு எனக்கு வேணாம். இவ்வளவு நாளா நீ செஞ்ச உதவிக்கி ரொம்ப நன்றி. இனிமேல நானு.. நீ எனக்காக செஞ்ச பாவத்துக் கெல்லாம் பிராயசித்தம் தேடப் போறேன். எப்படீன்னு பாக்குறியா..? நீ கைய வெட்டுனியே அந்த தேனப்பன்! அவருக்குத்தான் பணிப் பெண்ணா பணிவிடச் செய்யப் போறேன். அவருக்கு என்ன யார்ன்னு தெரியாது. அவரே தெரிஞ்சிக்கும் போது தெரிஞ்சிக்கட்டும். அப்போத்தான் என்னோட மனசு அமைதியாவும்."
   சக்திவேல் உடனே மறுத்தான்.
  'வேணாம் மீனா.. ஒனக்காகத்தான் இவ்வளவு பெரிய பிரச்சனை யெல்லாம் நடந்துச்சி. நீ மட்டும் யார்ன்னு தேனப்பனுக்குத் தெரிஞ்சா.. சும்மா வுடமாட்டான்."
   'எனக்காக நடந்த பாவங்கள் இது! நானே அவரோட பாதங்களக் கழுவிப் பாவமன்னிப்புக் கேக்கறேன். என்னை யார்ன்னு தெரிஞ்சிக்கும் போது.. முடிஞ்சா பாவமன்னிப்பு குடுக்கட்டும். இல்லன்னா என்ன வெட்டி அவரோட மன பாரத்த கொறச்சிக்கட்டும். எனக்கு எது நடந்தாலும் சந்தோஷம் தான். ஆனா.. ஒன்னே ஒன்னு சக்திவேல்.. நீ மட்டும் எந்த காரணத்துக் காகவும் எனக்காக பேச வரக் கூடாது. நீ மட்டுமில்ல. உன்னோட ஊர்க்காரங்க யாருமே எனக்காக வரக்கூடாது. மீனா ஒரு தனி மனுஷி. அனாதை! அவளுக்கு எதுவானாலும் அது அவளோட போவட்டும்ன்னு நீங்க எல்லாரும் நெனச்சிக்கணும். இதுல நீங்க யாருமே தலையிடக் கூடாது. என்னால இனிமேலும் யாரையுமே இழக்க முடியாது."
   சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள். இவர்கள் ஒருவர் முகத்தை ஒருவராக வேதனையுடன் பார்த்துக் கொண்டார்கள்

                             (தொடரும்)

Wednesday, 9 January 2013

போகப் போகத் தெரியும் - 33

   வெட்கம் சில நேரங்களில் பேச முடிந்தவர்களையும் ஊமையாக்கி விடுகிறது!                          
   ஒரு சில நிமிடங்கள் தான் கடந்திருக்கும்! மீனாவின் ;வீல் ; என்ற அலறல் சத்தம் சக்திவேல் மட்டுமல்ல அனைவருமே ஓடினார்கள். மீனா தெருவில் இறங்கியவள் சக்திவேலுவை இறுக்கப்பிடித்துக் கொண்டாள்.
   'மீனா.. என்ன ஆச்சி..? என்னன்னு சொல்லு..?" சக்திவேல் அதட்ட அவள் பதில் சொல்லாமல் ஒரு விரலை உயர்த்தி மாடியைக் காட்டினாள். அவள் உடல் நடுங்கியது.
   'மாடியில என்ன?"
   'பா.. பாம்பு."
   'பாம்பா? என்ன வுடு. நா போய்ப் பாக்குறேன்."
   'வேணா. நீங்க போவ வேணாம். எனக்குப் பயமா இருக்கு."
   'என்ன விடுன்னு சொல்றேன்னில்ல." அவன் அவளைச் சற்று அழுத்தி விலக்கிவிட்டு உள்ளே போனான். போனவன் ஒரு குட்டிப் பாம்பை அதிலும் செத்து போய் இருந்ததை ஒரு குச்சியில் பிடித்து தூக்கிக் கொண்டு வந்தான்.
   தெருவில் போட்டான். அழுகிப் போனப் புடலங்காய் பிஞ்சி போல வளைந்து நச்சென்று விழுந்தது அது. மீனா அதைப் பார்த்ததும் அருவருப்பு கலந்த பயத்துடன் சக்திவேலின் கையை இறுக்கப் பிடித்து கொண்டாள்.
   'பறவ ஏதாவது தூக்கிக்கினு வந்து போட்டிருக்கும்.." கணேசனின் தாத்தா சொன்னார்.
   'என்ன..? பாம்ப பறவ தூக்கினு வந்து போடுமா..?" அவளுக்குப் பயத்தில் முகம் வியர்த்தது.
   'வரவர ஊரக்குள்ள பாம்பு தொல்ல அதிகமாயிடுச்சி. காரணம் தான் தெரியல. சக்திவேல்  யோசனையுடன் சொன்னான்.
   'பாம்புக் குட்டி போட்டிருக்கும். இதுக்கு வேற யாரு காரணமா இருக்க முடியும்?" மீனா சொன்னாள்.
   'ஆமா.. ஒரு யானைக்கி பயந்தேன்னு ஆறு யானைகளைக் கொண்டாந்து நிறுத்திட்டானுங்க. ஆனா இப்ப எத்தன பாம்புகள விட்டானுங்களோ..?"
   சக்திவேல் சொல்ல மீனா மிரண்டவளாக அவன் மேல் கையைத் தனது இரண்டு கைகளாலும் இறுக்கினாள்.
   'அதுவரைக்கும் நல்லது தான் சக்திவேல். இல்லன்னா மீனா ஒன்ன இப்டி கட்டி புடிப்பாளா..?"
   கணேசன் சொன்னதும் அங்கே கூடியிருந்த அனைவரும் சிரித்தார்கள்.  மீனா அவனை விட்டு; விலகினாள். முகம் செந்தாமரையாகச் சிவந்தது.
   'ஏ கெழவி.. பாம்ப பாத்தா நீ பயப்பட மாட்டியா..?"
   கணேசனின் பாட்டியை வம்பிற்கிழுத்தாள். பாம்பு என்றால் அனைவருக்குமே பயம் தானே!
   'பாம்ப பாத்துப் பயந்து போயித்தான் அவளே என்ன கட்டிப்புடிச்சா.." தாத்தா குழந்தை வாயுடன் சிரித்துக் கொண்டே சொன்னார்.
   'அப்ப.. இந்த ஊருல எல்லா பொண்ணுங்களும் பாம்ப பாத்துத்தான் ஆம்பளைங்கள கட்டிபுடிப்பாங்களா..?" மீனா வெகுளியாகக் கேட்க..
   'ஐயே.. நாங்க ஒன்னும் இந்த மாதிரி சின்ன பாம்ப பாத்து ஆம்பளைங்களக் கட்டிப்புடிக்கல." என்றாள் அங்கிருந்த ஒருத்தி.
   'நானும் இந்த மாதிரி சின்ன பாம்பைச் சொல்லலை."
   மீனா சிரித்துக் கொண்டே சொல்ல.. 'அடிக் கழுதை" என்றபடி முதலில் பேசியவள் மீனாவைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   தொடமுடியாத இருட்டை வர்ணமாகப் பூசியிருந்தது ஊர்! சாப்பிட்டு விட்டு  பாயில் அமர்ந்திருந்தாள் மீனா. விளக்கு எறிந்து கொண்டிருந்தது. கையில் இருந்த புத்தகத்தில் மனம் அடிமையாகாமல் அதை அசட்டைச் செய்தது. மூடிவிட்டு படுத்துக் கண்களை மூடினாள்.
   மூடிய இமைக்குள் பாம்பு ஒன்று வந்து படமெடுத்தாடியது. சட்டென்று கண்களைத் திறந்தாள். ஏதோ கால் பக்கத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து போவது போன்ற உணர்வு! அதிர்ச்சியுடன் காலை நகர்த்தினாள். அவளின் பாவாடை விளிம்பு அது!
   பெருமூச்சு விட்டாள். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே.. ஒரு பாம்பைப் பார்த்துப் பயந்து இருந்தாலும் சக்திவேல் சொன்னது தான் அடிக்கடி காதில் வந்து விழுந்து பயமுறுத்தியது.
   பயம் என்பது ஒவ்வொருவருடனே கூடவே இருக்கும் நிழலைப் போன்றது தான். புத்திசாலி தன் நிழுலைப் பார்த்துச் சந்தோஷப்படுவான். காரணம் நிழல் என்று ஒன்று வழுந்தால் எங்கோ ஒளி இருக்கிறது என்று உணர்ந்து கொள்வான். ஆனால் கோழைகள் நிழலே விழாமலிருக்க இருட்டுக்குள் போய் நின்று கொண்டு மேலும் பயப்படுவான்.
   இதோ மீனாவும் இன்று கோழையாகத்தான் மனத்தை இருட்டாக்கி வைத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவழகி தன் அண்ணனைப் பார்க்கச் சென்று விட்டாள். தனியாக விடப்பட்ட மீனா விளக்கிருந்தும் அதனடியில் விழும் இருட்டில் வெளிச்சத்தைத் தேடினாள்.
   இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது. முடிவெடுத்ததும் விளக்கை அணைத்துவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டு ஒரே ஓட்டமாகச் சக்திவேல் வீட்டை நோக்கி ஓடினாள்.
   அகிலாண்டேசுவரி அம்மாள் முன் நின்ற பொழுது மூச்சு வாங்கியது. 'எனக்குப் பாம்புன்னா பயம்! இன்னிக்கி ராத்திரி மட்டும் இங்க தங்கிக்கிறேன். நாளையிலர்ந்து ஆஸ்டல்லயே தங்கிக்கிறேன். உங்க பர்மிஷன் வேணும்." என்றாள்.
   'ம்" என்ற ஒரு முணங்கள் தான் வந்தது. ;சரி ; என்ற வார்த்தைக்குப் பதிலாக.
   மீனா நிம்மதியாக மூச்சைவிட்டாள். அங்கிருந்து பக்கத்து அறைக்கு வந்தாள். சக்திவேல் தன்னையே பார்த்துக் கொண்டு சாப்பிடுவதைக் கவனித்தும் கவனிக்காதவள் போல அறைக்குள் சென்றாள்.
   மீனா கையிலிருந்த புத்தகத்தில் மனத்தைப் புகுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். முடியவில்லை. தான் நடந்து கொள்வது சரியா? தவறா? என்று  தெரியவில்லை. இந்த வீட்டிற்கு வர அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? சக்திவேலிடம் பழக என்ன அறுகதை இருக்கிறது? காலையில் பாம்பைப் பார்த்துச் சக்திவேலைப் பிடித்துக்கொண்டது நினைவுக்கு வந்ததும் மனம் கூசியது. பயத்தில் தப்பு செய்து விட்டோமோ..?
   ஊர்காரர்கள் அனைவரும் தன்னிடம் அன்பாகத்தான் நடந்து கொள்கிறார்கள். தான் செய்தது தவறு என்றால் அதில் ஒருத்தராவது கண்டித்து இருக்கமாட்டார்கள்?
   புரியவில்லை. குழப்பத்துடன் இருந்தவளின் முன் சக்திவேல் வந்து நிற்க மேலும் குழம்பியவளாகப் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து நின்றாள். எதற்காக வந்திருப்பார்? அவள் இந்த வீட்டில் தங்கியிருந்த வரையில் ஒரு நாள் கூட அவள் இருந்த அறைக்கு அவன் வந்ததில்லை.
   'மீனா.. அந்த வீட்டுல பாம்பு வரும்ன்னு தானே இங்க வந்த? ஏன்.. இங்க மட்டும் பாம்பு வராதா..?"
   மீனாவின் கண்களில் திரும்பவும் பயம்!
   'பயமா இருந்தா சொல்லு. நா வேணுமின்னா உங்கூடவே ஒன்னோட தொனைக்கி ஒம்பக்கத்துலேயே படுத்துக்கிறேன்." என்றான் குறும்புச் சிரிப்புடன்.
   அவன் சொன்னது சிரிக்கத் தூண்டினாலும்.. அவள் சிரிக்கவில்லை. பக்கத்து அறையில் தான் அகிலாண்டேசுவரி அம்மாள் இருக்கிறாள். மனது எச்சரித்தது.
   'ஐயோ.. நீங்க மொதல்ல வெளியே போங்க. உங்க அம்மா பாத்தாங்கன்னா.. என்ன பார்வையாலேயே சாம்பலாக்கிடுவாங்க." என்றாள் பதட்டத்துடன்.
   'நீ என்ன பாக்காததாலேயே நா சாம்பலாயிடுறேனே.. இது ஒனக்கு தெரியலயா மீனா..?" அவன் திடிரென்று பார்வையிலும் குரலிலும் கெஞ்சளுடனும் கொஞ்சளுடனும் அவள் அருகில் வர.. மீனா நகர்ந்தாள்.
   'சக்திவேல்.. தயவு செஞ்சி போயிடுங்க. யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்க."
   'நெனைச்சா நெனச்சிக்கட்டும்" என்றான். அவன் குரலில் காதல் போதை ததும்பி வழிந்தது.
   'அப்போ.. நா போறேன்.." சொல்லிவிட்டு நகர்ந்தவளைச் சட்டென்று இழுத்து அணைத்தான். உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.
   மீனா மதிமயங்கிப் போய் நின்றுவிட்டாள்! உணர்ச்சியின் வேகம் எதில் துவங்கி எதில் போய் முடிவது..?
   அவள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனம் சந்தோஷப் படுகிறதா..? வேதனை அடைகிறதா..? எது என்று சொல்முடியாத உணர்ச்சி!
   எத்தனையோ முறை அவள் அவனைத் தொட்டிருந்தாலும்.. இன்று நடந்த இந்த மாதிரியான உணர்வு மாற்றத்தை அவள் அனுபவித்தது இல்லை. அவன் கைகளை விலக்க முயன்றவள் தோற்றாள். அவன் மேலும் இறுக்க நகரமுடியாமல் தவித்தாள்.
   என்ன செய்வதென்று அறியாமல் அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவன் உதடுகளால் இவள் உதட்டைத் தேடினான்.
   சில நொடிகள் தான் சென்றிருக்கும்!
   'மீனாட்சி.. .."
   அகிலாண்டேசுவரியின் குரல் அறையின் மூலையெங்கும் சென்று எதிரொலித்தது. சட்டென்று இருவரும் விலகினார்கள்.
   கண்களில் அனல் பறக்க நின்றிருந்த தாயைக் கவனிக்காதவன் போல் சக்திவேல் அங்கிருந்து நழுவிவிட்டான்.
   மீனா.. மழையில் நனைந்த புறாவாய்.. பயம் ஒரு புறம்.. வெட்கம் ஒரு புறம்.. கூனிக் குறுகிப் போய் விட்டாள்!
   'மீனா.. நீ என்னோட அறையில பாயக் கொண்டாந்து போட்டு படு." அவள் கட்டளையிட இவள் தலையாட்டினாள்.


  --------------------------------------------------------------

   ;சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது ; என்ற வாக்கியம் மனிதருக்காக எழுதப்பட்டது என்றால் அது இவருக்குத் தான் பொருந்தும் என்று நினைத்து கொண்டாள் மீனா.
   மனிதனுக்கு உடல் வலிமையை விட மனவலிமைத் தான் வேண்டும். அது இருந்துவிட்டால் அவன் வெல்ல நினைத்த அனைத்தையும் வென்றுவிடுவான்.
   டாக்டர் பார்த்தசாரதி  'அந்த ஆளு கொஞ்சம் முன் கோபக் காரர். கிராமத்து ஆளு. ஏற்கனவே ஒரு விபத்துல ஒரு காலை இழந்துட்டார். இப்போ ஒரு கை. ஆனா தன்னம்பிக்கையை இழக்கல. நான் தான் காயம் ஆறினதும் செயற்கை கை பொறுத்தலாம்ன்னு சொல்லி இங்கேயே தங்கச் சொல்லி இருக்கேன். வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருக்கார். பொண்டாட்டி இருக்கறாங்க. வேலக்காரங்க நிறைய பேர் கூடவே இருப்பாங்க. ஆனா யாருமே படிக்காதவங்க. அவர கவனிச்சிக்கனும்மின்னா ரொம்ப பொறுமை அவசியம். அதனால தான் நான் உன்னைச் செலட் பண்ணேன். ஒன்னும் அதிகம் கெடையாது. டைமுக்கு மருந்து குடுத்து பல்ஸ் பாத்து எழுதிவச்சா போதும். மத்த வேலையெல்லாம் அவரோட வேலக்காரங்க கவனிச்சிக்குவாங்க.
   நீ காலேஜிக்குப் போயிக்கினே.. அவர் வீட்டுல தங்கிக்கினு வேலைய பாத்துக்கலாம். அவர் இங்க இருக்கிற ரெண்டு மூனு மாசத்துக்கு உன்னால உதவியா இருக்க முடியும்ன்னா.. இன்னையிலிருந்தே வேலையைத் தொடங்கிடலாம்" என்றார்.
   மீனா 'சரி டாக்டர்" என்றதும் அவளை அந்த ஓட்டு வீட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் 'உங்களுக்கு உதவியா இருக்கப் போற பொண்ணு இவங்க தான். பேரு மீனாச்சி." என்று அறிமுகப் படுத்தினார்.
   அவர் சரி என்றோ.. வேண்டாம் என்றோ.. சொல்லவில்லை. மீனா டாக்டரைப் பார்த்தாள். 'இது தான் இவரோட சுபாவம். ஜாக்கரதையா நடந்துக்கோ." என்றார்  மீனா அவரை யோசனையுடன் பார்த்தாள். அவர் மனசுல எதுவோ.. நீருபூத்த நெருப்பா கழன்று கொண்டு வெளியே தெரியாத மனத்தின் வலியோட ஊமை நாடகமாகத் தெரிந்தார்!
   டாக்டர் சொன்ன மருந்துகளைச் சரியாகக் குறித்துக் கொண்டு அவரை வெளிவாசல் வரையில் வந்து வழி அனுப்பி வைத்தாள். அப்பொழுது தான் ஒருவன் வீட்டினுள் நுழைந்தான். அவன் கண்களில் பயம் கலந்த ஆச்சர்யம்!
   'ஏய்.. நீ மீனா தான..? இங்க எதுக்கு வந்த..?" அதிர்ச்சியுடன் கத்தியக் குரலுக்குறியவனை விளக்கு வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தாள். இவன்.. இவன்.. அந்த வேந்தனுடைய ஆளாயிற்றே..
   முகத்தில் சட்டென்று வியர்வை பூக்க.. அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்!
   அவன் 'மீனா.. எதையும் பேசாத. என்னோட பின்னால தெரு மொனைக்கி வா.." சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி நடந்தான். மீனா யோசனையுடன் அவன் பின்னால் நடந்தாள்!

                               (தொடரும்)