Tuesday, 4 December 2012

போகப் போகத் தெரியும- 31


      சக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து வந்து காத்திருந்தாள்.
   அவன் வருவதற்கு முன் அவளுடைய நண்பர்கள் வந்து நலம் விசாரித்தார்கள். சக்திவேல் மாடியிலிருந்து இறங்கி வந்தான். மீனாவைப் பார்த்து இலேசாகப் புன்முறுவல்!
   'என்ன மீனா.. இப்போ எப்படி இருக்குது?"
   'ம்.. பரவாயில்லை."
   'நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. வெளியில கொஞ்சம் வேல இருக்குது. நா போயிட்டு வர்றேன்." கிளம்பினான்.
   'சக்திவேல்.. ஒரு நிமிஷம் இருங்க." மீனா சொல்ல நின்றான்.
   'எனக்கு கை வீக்கம் இப்போ நல்லா கொரஞ்சிடுச்சி. அதனால என்னோட மோதரத்த குடுக்கிறீங்களா..?" மெதுவாகக் கேட்டாள்.
   ஏற்கனவே மருத்துவமனையிலிருந்து வரும் போழுது ஒரு முறை கேட்டாள். 'கை காயம் ஆறட்டும்" என்றான். இன்று..
   சற்று யோசித்தவன் தன் பாக்கெட்டிலிருந்து ஊதா நிற காகிதம் சுற்றின மோதிரத்தை எடுத்து நீட்ட அவள் அதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள். அதை பார்த்தது தான் தாமதம்! அவன் முகத்திலேயே அதை விட்டெரிந்தாள்.
   அவளுக்கு எப்படி அப்படியானதொரு கோபம் வந்தது? அன்பு அதிகமாக உள்ளவர்கள் மீது தான் அதிகமாகக் கோபித்துக் கொள்ள உரிமை வருமாம். அப்படியான கோபமா..? அல்லது தன்னை ஏமாற்றியதால் தன்னையும் மீறி எழுந்த ஆத்திரத்தின் எல்லையா..? துவக்கமா..?
   துவக்கம் தான். கோபமாக எழுந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து கொண்டாள்.
   'சக்திவேல்.. என்னோட மோதரத்த குடத்துடு. என்னோட உயிரே அதுதான்னு ஒனக்கு நல்லா தெரியுமில்ல. தயவுசெஞ்சி குடுத்துடு. நா ஒனக்கு கெடைக்கலன்னதால.. எனனோட மோதரத்த மறச்சி வச்சி என்ன பழிவாங்காத. என்னோட மோதரத்த குடு.. .."
   உலுக்கினாள். அவன் கல்போல் நின்றிருந்தான். மற்றவர்கள் என்ன செய்வது என்றறியாமல் நின்றிருந்தார்கள்! அகிலாண்டேசுவரி தான் கோபத்துடன் மீனாவின் அருகில் வந்தார்!
   'மீனா.. சட்டைய வுடு மொதல்ல. ஒரு பொண்ணுமாதிரி நடந்துக்கோ." சத்தமாகச் சொன்னாள்.
   மீனா இப்பொழுது அவனை விட்டுவிட்டு இவளை முறைத்தாள்!
   'என்ன சொன்ன நீ..? பொண்ணு மாதிரி நடந்துக்கணுமா? அப்ப நா என்னா பேயா..? ஆமா. பேய் தான். அனாத பேய். என்னோட மோதரம் மட்டும் கெடைக்கலன்னா நா யாரையும் சும்மா வுட மாட்டன். ஏய் கெழவி;;.. நீதான சொன்ன? உம்புள்ளகிட்ட.. அந்த மோதரத்த எங்கிட்டர்ந்து புடுங்க சொல்லி? சொல்லு. ஏன் சொன்ன..? ஒனக்கு நா என்ன பாவம் செஞ்சேன்..? சொல்லு. சொல்லு.. .."
   வழிகள் இரண்டும் பிதுங்க இவளை அழுத்தி உலுக்கினாள். அவள் இடுப்பில் இருந்த வெள்ளை நிற கட்டு சிகப்பானது! அவள் அணிந்திருந்தச் சட்டையை மீறி வெளியே தெரிந்தது. இதை நர்ஸ் கவனித்துச் சக்திவேலிடம் சொல்ல.. அவன் அதிர்ச்சியாகத் தன் நண்பர்களைப் பார்த்தான். அவன் பார்வையில் புரிந்து கொண்ட மாதவனும் சேகரும் மீனாவைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போய் நாற்காலியில் அமர வைத்தார்கள்.
   மீனா மேஜையில் முகத்தைக் கவிழ்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். யாரோ தன் தலையை மெதுவாகத் தடவ நிமிர்ந்து பார்த்தாள். யோகி ரத்தினம்! அவளருகில் அமர்ந்திருந்தார்.
   அன்பானவர்கள் அருகில் வந்ததும் அழுகை அதிகமானது. கண்களைத் துடைத்துக் கொண்டு தேம்பலுடன் அவரைப் பார்த்தாள்.
   'ஐயா.. நா எதுக்காக ஒலகத்துல உயிர் வாழணும்? அனாதையா கெடந்தது என்னோட தப்பா? அம்மான்னு ஒருத்தர் கெடச்சாலும் அனாதயாத்தான வளந்தேன். ;அ ;ன்னுற இனிஜியலுக்கு அனாதைன்னு தான் அர்த்தம்ன்னு சொன்னப்பக் கூட நா கவலப் படல. அப்டி மறுத்து போயிடுச்சி என்னோட மனசு. இருக்கிற வரைக்கும் எல்லாருக்கும் நல்லது செஞ்சே வாழ்ந்திடலாம்ன்னு நெனச்சாலும் அனாதைங்க நல்லது செஞ்சாக் கூட குற்றம்ன்னு நெனைக்கிற ஜென்மங்களும் இருக்காங்களே.. நா என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க. எனக்குன்னு என்னோட பிரண்ஸத் தவர யார் இருக்கா..? நட்புக்காக மட்டும் உயிர் வாழணுமா.. புரியலங்க?"
   மனம் அழ வாய் பேசியது.
   'ஏம்மா இப்படி சொல்லுற? உனக்குன்னு தன்னோட உயிரையும் தர்றதுக்கு உன்னோட சக்திவேல் இருக்காரே.."
   சட்டென்று நிமிர்ந்து முறைத்தாள்.
   'உயிர்? யாருக்கு வேணும் அவரோட உயிர்? ஆஸ்பத்திரியில முடியாம மயங்கி உழப்போனவள தூக்கி பிடிச்சது யாரு..? தலை சுத்தி வாந்தி எடுத்தப்போ.. கையால புடிச்சி தொடச்சிவுட்டது யாரு..? எல்லாமே என்னோட நண்பர்கள் ஆறு பேரும் தான்! அந்த ஆறு பேரும் இல்லன்னா.. இன்னிக்கி நான்.. .."
    பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு அந்த யோசனை!! நிமிர்ந்து தன் நண்பர்களைப் பார்த்தாள். அதில் சிவாவைக் காணோம்! இத்தனை நாளும் அவள் அவனைப் பார்க்கவில்லை. கேட்டதற்கு  ;நீ மயக்கத்தில் இருக்கும் பொழுது வந்தான். முக்கியமான விசயமா வெளியூர் போய் இருக்கிறான் ; என்று சொன்னார்கள். ஆனால்.. அவளுக்கு அந்த யோசனை..!!
   எழுந்து சேகரிடம் வந்தாள். 'சேகர் சிவா எங்க? எங்கிட்ட மறைக்காம உண்மையச் சொல்லு." அதட்டினாள். இரத்தம் கட்டையும் மீறி ஒழுக ஆரம்பித்தது.
   சேகர் கவலையாக ரத்தினத்தை பார்த்தான்.
   'மீனா இங்க வா. நான் சொல்லுறேன்." ரத்தினம் அழைக்க யோசனையுடன் சென்றாள்.
   'மீனா.. அந்தச் சண்டையில சிவாவோட தலையில அடிபட்டுடுச்சி. சின்ன ஆபிரேஷன் செஞ்சி இருக்காங்க. ஆஸ்பத்திரியில இருக்கான். இன்னும் ரெண்டு மூனு நாள்ல வந்திடுவான் " என்றார்.
   நின்றிருந்த மீனா விரத்தியாகச் சிரித்தாள்.
   இது தான் துன்பம் வரும் வேலையில் சிரிப்பது என்பதா..?
   'இன்னும் யார்யாருக்கு என்னன்ன ஆச்சி?.. சொல்லுங்க? "
   'வேற யாருக்கும் எதுவும் இல்லம்மா.." என்றார்.
   மீனா வேதனையுடன் அமர்ந்தாள்.
   'நா அன்னைக்கே சொன்னேன். என்னோட விசயத்துல யாரும் தலையிடாதீங்கன்னு. பாத்தீங்களா..? சிவா இப்ப ஆஸ்பத்திரியில! அந்த வேந்தன் நாய் சொன்னமாதிரி செஞ்சிட்டான்.. அவன.. .." பற்களைக் கடித்துக் கொண்டு எழுந்தாள்.
   'அவன உன்னால எதுவும் செய்ய முடியாதும்மா.."
   யோகி ரத்தினம் அழுத்தமாகச் சொல்ல.. மீனா மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் அவரைப் பயத்துடன் பார்த்தார்கள்.
   'ஏன்..?" மீனா கேட்டாள்.
   'அவன் ஜெயில்ல இருக்கான்."
   அனைவரும் நிதானமாக மூச்சுவிட்டார்கள்.
   'எதுக்கு?"
   'உன்ன கடத்திக்கினு போய்க் கட்டாயத் தாலி கட்டினதுக்காக."
   மீனா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். அவன் தனக்கு தாலி கட்டியிருக்கிறான். அப்படியானால் அவன் தான் தன் கணவனா..? அப்படித்தானே சமுதாயம் சொல்லும். நினைக்கவே சிரிப்பு  வந்தது. ஆனால் வேதனை கலந்து வந்தது.
   'ஐயா.. " நிமிர்ந்து ரத்தினத்தை நோக்கினாள்.
   'என்னம்மா..?"
   'நான் விதவையா..?"
   அவள் மிகச் சாதாரணமாகக் கேட்க.. அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர். யோகிக்கூடச் சற்று யோசித்தார்.
   'ஐயா.. அந்த வேந்தன் தாலின்னு சொல்லி மஞ்ச கயிற் இல்லாத தங்க செயின மந்திரம் ஓத என் கழுத்துல போட்டான். அத அப்பவே கழற்றி எரியிற நெருப்புல போட்டுட்டன். ஆனா சக்திவேல் போட்ட மோதிரத்த தாலியாவே நெனச்சி வாழ்ந்தேன்.  இப்போ அவரே அத கயற்றிக்கினாரு. அடுத்தவன் பொண்டாட்டி கையில தான் போட்ட மோதரமான்னு.. ஆனா நா இப்ப ரெண்டையும் எழந்து நிக்கிறன். அப்படீன்னா நா ஒரு விதவத்தானே..?" என்றாள்.
   'இல்லம்மா. நீ தப்பா புரிஞ்சிக்கினு இருக்கே.. கட்டாயப்படுத்தி கட்டினாக்கா அது தாலி கெடையாது. அது அடிமக் கயிறு. அத நீ அப்பவே அறுத்தெரிஞ்சிட்ட. உனக்கு ஆசையா போட்ட மோதிரத்துக்குச் சொந்தக் காரன் சக்திவேல் இருக்கும் போது நீ எப்படி விதவன்னு சொல்லமுடியும்? "
   'இல்லிங்கையா.. என்னோட மோதிரத்த அவரு திருப்பித்தர்ற வரைக்கும் நா விதவையாத்தான் வளைய வரப்போறேன். இனிமே நா பொட்டோ பூவோ மஞ்சளோ போடப் போறது கெடையாது. "
   கோபமாகச் சக்திவேலை முறைத்தபடிச் சொன்னாள்.
   யோகி ரத்தினம் யோசித்தார். காலத்தின் கட்டாயம் விதிவடிவில் நடப்பதுத் தானே..! எந்தெந்த நேரத்தில் எதுவெது நடக்க வேண்டுமோ.. அதுஅது அந்தந்த நேரத்தில் நடத்திவிடுவது தானே விதியின் சாமார்த்தியம்?
   பயிரைப் பாதுகாக்க வேலி போடலாம். ஆனால் பறவை வந்து கொத்திக் கொண்டு செல்வதில்லையா..? ஆனால் இது மாயப் பறவை! தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்ற உணர்வை மெய்பிக்க வந்த விதிவடிவப் பறவை!
   விதியின் வேகத்தை வேதனையுடன் விழுங்கிவிட்டுத் திரும்பிச் சக்திவேலைப் பார்த்தார்.
   'ஏம்பா..சக்திவேல்! அந்த மோதரத்த கொடுத்திடேன்!" குரலில் கெஞ்சளின் சாயல்!
   வேதனை என்ற புண்ணுக்கு மருந்து போட முடியவில்லை என்றாலும் மேலும் கோபம் என்ற ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்கலாம் என்ற உணர்வுடன் சொன்னார்!
   'என்னங்கையா..? நீங்களே இப்படிக் கேக்குறீங்க? எங்கிட்ட இருந்திருந்தா நா இவள இப்படியா அழ வச்சி வேடிக்கப் பாத்துக்கினு இருப்பேன்? அந்த மோதரம் வெற்றிவேல்கிட்ட இருக்குது. கேட்டதுக்கு.. மோதரத்துக்குண்டான பணத்த தந்துடறேன்னு சொல்றான். அதுமட்டுமில்ல. மீனா அவன் தம்பி பொண்டாட்டியாம். அவள அவன் வீட்டுக்கு அனுப்பிட வேணுமாம்." சக்திவேல் கோபமாகச் சொன்னான்.
   இதைக் கேட்ட மீனா வாயில் கைவைத்து கொண்டு அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவளுக்கு அதற்கு மேல் யாரிடமும் பேசவிருப்பமில்லை என்பது போல் எழவும்.. நர்ஸ் அவளை மெதுவாக அழைத்துச் சென்றாள்.


  (தொடரும்)