Wednesday, 15 August 2012

போகப் போகத் தெரியும் - 21


     மீனா இருந்த காரை மறித்து அவளை வெற்றி வேலுவின் ஆள் ஒருத்தன் வெற்றிவேல் அவளை அழைத்து வரச் சொன்னதாக சொன்னதும் அவளுக்குப் பயத்தில் சுட்ட இரத்தம் வியர்வையாகி உடலை நனைத்தது.
    காரைத்திறந்து சக்திவேல் இறங்கச் சொன்னதும் தயங்கித் தயங்கி இறங்கினாள்.
    வெற்றிவேலைக் கண்களால் தேடினாள். அவன் சற்று தூரத்தில் தன் டாடாசுமோ மீது சாய்ந்த கொண்டு இவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவனருகில் இன்னொரு வண்டி! அங்கே வேந்தனும் அவன் கூட்டாளிகளும் இருந்தார்கள்.
    அவள் வேந்தனைப் பார்த்ததும் தன் உடல் நடுங்குவதை உணர்ந்தாள்! தன் நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளைத் தன் புடைவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
    சக்திவேல் அவளின் செய்கையைப் பார்த்து இலேசாகச் சிரித்தான்.
'என்ன மீனா..? என்னமோ அவ்வளவு தைரியமா பேசுன.. இப்போ இப்படி பயந்து நடுங்கிறியே.. எல்லாம் வாய் பேச்சித்தானா..?"
    மீனா கவலையுடன் அவனைப் பார்த்தாள். எப்படி இவனால் இந்த நேரத்திலும் சிரிக்க முடிகிறது? துணிச்சல் காரர்கள் எப்பொழுதுமே வெற்றியடைவோம் என்ற எண்ணத்திலேயே இருப்பார்களோ.. நாம் இப்படி பயப்படுறோமே!
    என்ன செய்வது? எதன் மீதும் ஏறாதவன் எப்போழுதும் கீழே விழமாட்டான். அதனால் ஏறுகிறவன் தானே பார்த்து ஏறணும்?
பிரச்சனை இப்பொழுது அவனுக்கா நமக்கா..?
    நமக்குத்தான். காப்பாற்ற சக்திவேல் இருக்கிறான் என்ற நமபிக்கை மனத்தில் இருந்தாலும் அதுவே பயத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை வந்துவிடுமோ..
    அவளின் சிவந்த முகத்தைப் பார்த்த சக்திவேல் சொன்னான்.
'மீனா பயப்படாத..! தைரியமா போய்ப் பேசு. ஒனக்கு நா இருக்கறேன்." என்று.
    'எனக்கு அது தான் பயமா இருக்குது." என்றாள் சட்டென்று.
    'என்ன..?" கோபமாக முறைத்தவன் சட்டென்று நிலைமையை உணர்ந்து 'உன்ன அப்படியே விட்டுட்டுப் போயிடட்டுமா..? ஆனா ஆதுவும் முடியாது. நீ இப்ப போய் அவங்கிட்ட பேசலைன்னா இங்கிருந்து யாருமே இந்த ஊரவிட்டு போவ முடியாது. அங்க பாரு.." கண்களால் காட்டினான்.
    மீனா பார்த்தாள். அங்கே யானைகள் எந்த வண்டியையும் போக முடியாதவாறு வழி மறித்து நின்று கொண்டிருந்தன!
    'மீனா போய் பேசு. எந்தக் காரணம் கொண்டும் அவன கோவப்பட வைக்காத. சிரிச்சிக்கினே பேசு. அதுக்குள்ள நம்ம ஊருகாரங்க எல்லாரும் போயிடுடட்டும். அப்புறம் எதுவாயிருந்தாலும் பாத்துக்கலாம்! ம்.. போ.." என்றான்.
    மீனா ஒரு பெருமூச்சு விட்டு விட்டு வெற்றிவேல் அருகில் போனாள். அவன் 'வா மீனா" என்றான் புன்முறுவலுடன்!
    'என்ன வெற்றிவேல். கூப்பிட்டிங்களா..? என்ன விசயம்..?" முகத்தில் சிரிப்பைக் கட்டாயமாக வரவழைத்து கொண்டு கேட்டாள்.
    'ஆமா மீனா. உன்ன பத்தி நெறைய கேள்விபட்டேன். நீ நெறைய நல்லது செஞ்சிறுக்காப்பல இருக்கு! ஆத்தூருல நெறைய போர் பேசிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு மீனா. நீ ஏன் எங்கூட வந்து இதே மாதிரி ஒதவிகள என்னோட வூருக்காரர்களுக்குச் செய்யக் கூடாது?" கேட்டான் தலைக்கும் வாலுக்கும் இடையில் உடல் இல்லாதது போல!
    உதவி என்று இவன் எதைச் சொல்கிறான்? அறியாமையை அகற்றினால் அது ஓர் உதவியா..? அதுவும் எந்த உரிமையில்..? புரியாமல் அவனைப்பார்த்துக் கேட்டாள்.
    'எந்த உரிமையில நா உங்க ஊருக்கு வர முடியும்..?"
    'இப்ப எந்த உரிமையில ஆத்தூருல இருக்கியோ.. அதே உரிமையில வாயேன்.." என்றான்.
    என்ன இவன் குழப்புகிறான்? புரியாமல் அவனைப் பார்த்தாள்.
    'என்ன மீனா..? புரியலையா..? வெளக்கமா சொல்றேன். கேட்டுக்கோ! அதோ நிக்கிறானே வேந்தன். அவன் என் தம்பிதான்."
    அவன் வேந்தனைச் சுட்டிக்காட்ட அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
    'என்ன.. அவர் உங்க தம்பியா..?"
    'ஆமா.. வேந்தன். இலங்கை வேந்தன்! அவனுக்குப் பக்கத்துல இருப்பவனும் என் தம்பி தான்! பேர் லட்சுமணன்!"
    அதிர்ச்சியுடன் இருந்த மீனா இதைக் கேட்டதும் சிரித்தாள்.
    'இலங்கை வேந்தனுக்கு லட்சுமணன் தம்பியா..?" மேலும் சிரித்தாள்.
'மீனா சிரிக்காத. இங்க யாரும் ராமாயணத்த படிச்சிட்டு வந்து பேர் வக்கல! என்னோட சின்னம்மா ஒரு இலங்கை காரங்க. அதனால என்னோட அப்பா அவனுக்கு அந்த பேர வச்சார். இப்போ அது பிரச்சனை இல்ல. என்னோட தம்பி வேந்தன் இதுவரைக்கும் எங்கிட்ட பேசனது கெடையாது. இன்னைக்கி தான் மொதோ மொறையா எங்கிட்ட பேசினான். அதுவும் என்ன தெரியுமா? உன்ன அவனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணுமாம்.."
    அவன் முடிப்பதற்குள் மீனா குறுக்கிட்டாள்.
    'என்ன.. என்னையா..?" குரலில் அதிர்ச்சி கலந்த கோபம்!
    'ஆமா. உன்னத்தான். அவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சிறுக்காம். காலையில எங்கிட்ட வந்து சொன்னான். என்னதான் இருந்தாலும் அவன் என்னோட தம்பி. அதுவும் மொதோ முறையா எங்கிட்ட உதவின்னு கேட்டு இருக்கான். அவனும் ஒன்னும் கெட்டவனில்ல. சந்தர்பம் சூழ்நெல அவன கெட்டவன் போல காட்டுது. அதனால நீ நா சொல்லுறத நல்லா கேட்டுகோ. நீ போய்ப் பேசாம எங்காருல ஏறி ஒக்காந்துடு. மேல எது நடந்தாலும் நா பாத்துகிறேன்." என்றான்.
    மீனா அவன் பேச்சை நம்ப முடியாதவளாகக் கேட்டாள். என்ன சொல்கிறான் இவன்? தன் தம்பியைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்கிறானா..? அல்லது.. கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று கட்டளை இடுகிறானா..?
    ஆனால் இரண்டுமே தன்னால் முடியாதே! திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவன் தன் ஊர்காரர்களைப் பாலத்தைத்தாண்டி அனுப்பிவைப்பதிலேயே குறியாக இருந்தான். பெண்கள் அவசர அவசரமாகக் குழந்தைகளை இழுத்துக்கொண்டு நடந்தார்கள். விழாவில் எதையும் விளையாடவில்லையே.. எதையும் வாங்கி சாப்பிட முடியவில்லையே.. என்ற ஏக்கம் சிறுபிள்ளைகளின் கண்களில் தெரிந்தது!
பெருமூச்சுடன் வெற்றிவேலின் பக்கம் திரும்பினாள்.
    'என்ன மீனா.. இன்னும் யோசனை? தோ பாருமா.. எங்கிட்ட சக்திவேலோட சொத்தவிட நாலு மடங்கு அதிகமா இருக்குது. நீ சம்மதிச்சா அதுல ஒனக்குப் பாதி எழுதி வச்சிடுறேன். வா.. போலாம்.." அவன் கையைப் பிடிக்கப் போனான். அவளுக்கு மனத்தில் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட முடியவில்லை. அதை மனத்தில் நிறுத்தி அசடாகச் சிரித்தாள். அவன் முறைத்தான்.
    'வெற்றிவேல் நா எதுக்காக ஒந்தம்பிய கல்யாணம் பண்ணிக்கணும்? பேசாம நீயே என்ன கல்யாணம் பண்ணிக்கோ. ஒம்பொண்டாட்டியா வந்து உன்னோட ஊருல இருக்கேன். ஆனா நீ கண்மணிய சக்திவேலுவுக்கு விட்டுகொடுத்திடணும். சரியா..?" மெதுவாகச் சென்னாள்.
    'ஏய்.. வாய அடக்கி பேசு. உன்ன மாதிரி அனாதைய கட்டிக்க எனக்கொன்னும் தலையெழுத்து இல்ல. நீயே என்னோட பேசாம வந்துட்டா ஒனக்கும் அவனுக்கும் ஊரறிய கல்யாணம்! இல்லன்னா கூக்கினு போய்த் தாலிகட்ட வைப்பேன்." என்றான் கோபமாக.
    'நீ மட்டும் அப்படி செஞ்சா அன்னைக்கே ஓந்தம்பிய கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர ஒந்தம்பி மாதிரியான மிருகத்துக் கூட வாழ மாட்டேன்." கோபமாகச் சொன்னாள்.
    'என்ன சொன்ன?" அவள் கன்னத்தில் அறைந்தான். மீனா நிலை தடுமாறி விழ அங்கே காரின் கைபிடியில் அவள் நெற்றிமோதி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அவள் தன்னைச் சுதாரித்து எழுவதற்குள் சக்திவேல் அங்கே பறந்து வந்துவிட்டான்.
    அவன் இவனை முறைத்துவிட்டு மீனாவைக் கைத்தாங்களாகப் பிடித்துத் தூக்கி 'வா மீனா போலாம்" என்றான்.
    'அவ ஒங்கூட வரமாட்டா.. நீ ஒன்வழிய பாத்துக்கினு போ." வெற்றிவேல் கர்ஜுக்க 'அத சொல்ல நீ யாரு..? வா மீனா போலாம்." சக்திவேல் மீனாவை அவன் பக்கமாக இழுத்தான். மீனா என்ன செய்வது என்றரியாமல் நின்றிருந்தாள்.
    'ஏய்.. சக்தி.. நீ எந்த உரிமையில அவள கூப்புடுற?"
    'அவ என்னோட அத்த பொண்ணு."
    'அத்த பொண்ணா..? அனாத பொண்ணுன்னு சொல்லு. அதுமட்டுமில்ல. அறிவழகி எனக்கும் ஒரு வகையில அத்தை முறத்தான். அந்த வகையில இவ எனக்கும் சொந்தமானவத்தான்."
    'அப்படிபாத்தா கண்மணி எனக்குச் சொந்தமானவன்னா ஒத்துக்குவியா..?"
    இந்தப் பதில் வெற்றிவேலுவின் கண்களைச் சிவக்கவைத்தது.
    'கண்மணிய பத்தி பேசாத! அவள நான் ஊரறிய பரிசம் போட்டு எனக்குன்னு நிச்சயம் பண்ணியிருக்கேன். நீ என்ன இவள ஒனக்குன்னு நிச்சயமா பண்ணியிருக்க? ஒனக்குதான் இருக்காளே அந்தப் பெங்களூர் காரி! அவ போதாதா? ஊருக்கு ஒருத்தி வேணுமா..? பேசாம இவள வுட்டுடு." என்றான் வெற்றிவேல்.
    சக்திவேலின் கண்களில் அதிர்ச்சி! திரும்பி மீனாவின் முகத்தைப் பார்த்தான். அவளும் இவனைக் குழப்பமாகப் பார்ப்பது புரிந்தது. வெற்றி வேலுவைப் பார்த்தான். அவன் சரியான நேரத்தில் சரியான விசயத்தைச் சொல்லிவிட்டோம் என்றத் திருப்தியில் இருந்தான்.
    போட்டி முடியாத பொழுதே ஒரு சிலர் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மாமதையில் தோல்வியைத் தெரியாமல் தழுவிவிடுவார்கள். சக்திவேல் சற்று யோசித்தான். பிறகு
    'வெற்றிவேல்.. மீனா எனக்குத்தான் சொந்தம். அச்சாரம் தானே போடணும்? இதோ பார் உன்னோட எதிரிலேயே போடுறேன். நல்லா பாத்துக்கோ."
    சொல்லிகொண்டே தன் பாக்கெட்டிலிருந்தப் பெட்டியை எடுத்து திறந்து அதிலிருந்த மோதிரத்தை எடுத்தான்;
    'மீனா கையைக் காட்டு." அவள் எதுவும் சொல்லாமல் உடனே கையை நீட்ட அந்த மோதிரத்தை அவள் வெண்டைவிரலில் அணிவித்தான்!
    இதை யாரும் எதிர் பார்த்திக்கவில்லை! 'வா.. மீனா போலாம்.." அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.
    வெற்றிவேல் எதுவும் பேசாமல் செய்யாமல் நின்றிருந்தது வேந்தனை வேதனைப்படுத்திக் கண்களில் இரத்தச் சிகப்பேறச் செய்தது.


²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


    சூரியனை மேற்கின் இமை மூட வெளியுலகம் இருளைப் பூசத்துவங்கியது!
    'சக்திவேல்.. வீட்டுக்குப் போனதும் இந்த மோதிரத்தைத் திருப்பி வாங்கிக்கிவீங்களா..?"
    மோட்டார் வண்டியின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தவள் தன் விரலில் இருந்த மோதிரத்தை ஆசையுடன் தடவியபடி சக்திவேலுவிடம் கேட்டாள்.
    அவன் அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தி திரும்பி இவளைப் பார்த்துப் புரியாமல் கேட்டான்.
    'என்ன கேட்ட?"
    'இல்ல.. வீட்டுக்குப் போனதும் இந்த மோதிரத்த திருப்பி வாங்கிக்குவீங்களான்னு தான் கேட்டேன்.."
    'ஏன் இப்படி கேக்கிற?"
    'நீங்க இந்த மோதரத்த எத நெனச்சி போட்டீங்களோ எனக்குத் தெரியாது. ஒரு சமயம் வெற்றிவேலுகிட்டர்ந்து என்ன அந்த நேரத்துல காப்பாத்த கூடப் போட்டிருக்கலாம். இல்ல.. என்னோட அம்மாகிட் சொன்ன மாதிரி கொண்டு போயி வீட்டுல விடணுமேன்னு கடமையில கூடப் போட்டிருக்கலாம். ஆனா நா அதையெல்லாம் நெனைக்கில. இந்த மோதிரத்த நீங்க எனக்குக் கட்டின தாலிக்கி சமமா நெனச்சிட்டேன். அதனால தான்.."
    அவள் கண்களை அகலத்திறந்து கொண்டு வார்த்தையை இழுத்தாள்.
    அவன் இவளை யோசனையுடன் அழுத்தமாகப் பார்த்தான்.
    'அப்படியே நெனச்சிக்கோ. நா கேக்கமாட்டேன்." சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.
    மீனா மோதிரத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்.


                                (தொடரும்)

7 comments :

  1. அடுத்த பதிவில் "என்ன நடக்குமோ...?" என்று நினைக்கத் தோன்றுகிறது...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      Delete
  2. இப்பொழுது தான் பார்த்தேன் சொந்தமே!தொடருங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அதிசயா.

      Delete