Friday, 31 August 2012

போகப் போகத் தெரியும் – 23

    மீனாவும் அறிவழகியும் சக்திவேல் வீட்டில் நுழையும் பொழுது அவன் காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
    சூரியன் உச்சி சிம்மாசனத்தை நோக்கி உறுதியுடன் நகர்வதால் அதன் கோபக்கனல் உயிர்களின் உடலை வியர்வையாக்கி நனைத்தது. காலையிலேயே அதற்கு இத்தனை கோபமா...?
    நெற்றியில் வழிந்த வியர்வையைத் தாவணி முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் முகம் மலர “வா மீனா... வந்து கொஞ்சம் சாப்பிடு...என்றான்.
    “இல்லை. நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க.“
    மீனா சொல்ல... அவன் அறிவழகியைப் பார்த்தான். “என்ன அத்தை.. காரணம் இல்லாம வரமாட்டீங்களே...!
    ஆமாப்பா... எங்கண்ணனுக்கு ஒடம்பு சரியில்லையாம். காலையில ஆள் வந்து சொன்னான். நான் ஒடனே கௌம்பலாம்னு இருக்கேன். இவ வரமாட்டேங்கிறா. அதுவும் நல்லதாத்தான் படுது. அதனால ஒங்கிட்ட சொல்லிவிட்டு ஒன்னோட பாதுகாப்புல வுட்டுட்டு போலாமேன்னு தான் வந்தேன். நீ என்னப்பா சொல்லுற?“
    அறிவழகி அடக்கமாகக் கேட்டாள்.
    “எனக்கு ஒன்னும் ஆட்சேபண இல்ல, அம்மாகிட்ட விசயத்த சொல்லிடுங்க!என்றான் மீனாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
    “மீனா.. நீ இங்கேயே இரு. நான் போயி அவங்க்கிட்ட பேசிட்டு வந்துடறேன்  சொல்லிவிட்டு அறிவழகி அந்த அம்மாள் இருந்த அரையை நோக்கி நடந்தாள். மீனா அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். அதே நேரம் சக்திவேலின் கைபோன் பாட அதை எடுத்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டான்.
    மீனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். கல்லூரி தொடங்கி இந்த மூன்று மாதத்தில் அவள் அவனை இன்று தான் சற்று அருகில் பார்க்கிறாள்! மனம் எதையாவது பேசிடத் துடித்தாலும்... அவளுக்கு எதையும் பேச வார்த்தை வரவில்லை. அவனும் இவளை எதிரில் பார்த்தாலும் இலேசான புன்முறுவலுடன் சென்று விடுகிறான்.
    ஏன் அப்படி...? தன் மீது காதல் என்பதால் வெட்கமா...? அப்படி இருக்க முடியாது! எதையும் தைரியமாகப் பேசக்கூடிய ஆளாயிற்றே இவர்! பிறகு ஏன் நம்மிடம் பேசுவது கிடையாது? ஒரு சமயம் உண்மையில் அவருக்குத் தன் மீது விருப்பம் இல்லையோ...! வெற்றிவேல் அன்று சொன்னது போல யாரோ ஒரு பெங்களுர்ப் பெண்ணை விரும்புகிறாரா...?
    இருக்கலாம். அதனால் தான் இவர் படிப்பு முடிந்த பிறகும் அடிக்கடி பெங்களுர் போகிறார்.! அன்றொருநாள் “நீங்கள் ஏன் கண்மணியைக் கைவிட்டீங்க?“ என்று கேட்டதற்கு “என் மனசுல வேற ஒரு பெண் இருக்கிறாள்“ என்று தன்னிடமே சொல்லி இருக்கிறார் தானே... அப்படியானால் அவர் மனத்தில் இருக்கும் பெண்.. அந்தப் பெங்களுர் பெண்ணாகத்தான் இருக்கும்!
    இப்படி நினைக்கும் பொழுது அவளுக்கு இலேசான கவலை கலந்த பெருமூச்சு வந்தது. தன் விரலில் இருந்த மோதிரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.
    காரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கவலைப்படுவது தானே மனித மனம்!
    “தம்பி... சாப்டியாப்பா...? அம்மா ஒன்னையும் மீனாவையும் கூட்டியார சொன்னாங்கப்பா...அங்கே வந்த அறிவழகி சொன்னாள்.

    மீனாவும் சக்திவேலும் அந்த அறையில் நுழையும் பொழுது அந்த அம்மாள் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். மீனாவைப் பார்த்ததும் அவர் கண்கள் இலேசாக்க் கலங்க... அன்புடன் அவளைக் கைநீட்டி அழைத்தார்.
    அவள் அவர்ருகில் சென்றதும் அவள் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தார். சற்று நேரம் பேசாமல் அவளை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டே இருந்தார்.
    அவளுக்கு வயது ஐம்பதுக்குள் தான் இருக்கும். பருமனான தேகம். திடமாகத் தெரிந்தாலும் நோயாளியைப் போல் படுக்கையில் இருந்தார்!
    மீனா கேட்டாள், “சக்தியம்மா... உங்களுக்கு உடம்பு சரியில்லையா...?“
    மீனா அவளைச் “சத்தியம்மா“ என்று கூப்பிட்டதை நினைத்து தன்னையும் அறியாமல் சிரித்துக் கொண்டாள்.
    “உடம்பு நல்லா தான் இருக்கும்மா... கால் முட்டிதான் தேஞ்சி போச்சாம்... கொஞ்ச நேரம் கூட நிக்க முடியாது. கால் வீங்கிப் போயிடும் என்றாள்.
   “அச்சோ... ஏன் சக்திவேல், இப்போல்லாம் கால் முட்டியில ஆபரேஷன் செஞ்சி பிளாஸ்டிக் மூட்டு கோப்பைன்னு பொருத்துறாங்களே... நீங்க ஏன் உங்க அம்மாவுக்குச் செய்யலை...? சக்திவேலிடம் கேட்டாள்.
    “அவங்க ஆஸ்பிட்டல், ஆப்ரேஷன்னா ரொம்ப பயப்படுறாங்க மீனா...
    “பயந்தா அப்படியே விட்டுடுறதா? நீங்க தான் தைரியம் சொல்லி இதையெல்லாம் செய்திருக்கணும். இப்போல்லாம் இது ரொம்ப சாதாரண விசயமா போயிடுச்சி தானே...?“
    “சாதாரண விசயம் தான். இவ்வளவு நாள் நான் சொல்லி அவங்க கேக்கலை. இப்போத்தான் நீ வந்திட்டியே... நீயாவது சொல்லு. பயம் போகுதான்னு பாக்கலாம்என்றான்.
    மீனா அந்த அம்மாவைப் பார்த்தாள். “சக்தியம்மா... நீங்க பயப்படாதீங்க. இந்த லீவுல உங்கக் காலைச் சரிப்பண்ணிடலாம். நான் உங்கக்கூடவே இருக்கிறேன். எதுக்கும் கவலைப் படாதீங்க.என்றாள்.
    பயம் என்பது சில நேரங்களில் தானாகப் போகும். சில நேரங்களில் வேறு யாராவது பயத்தைப் போக்க தைரியம் சொல்ல வேண்டும். ஆனால் ஒருவன் எதற்காகப் பயப்படுகிறானோ அதனுள் சென்று பார்த்தால் தான் உண்மையில் அந்தப் பயம் தெளியும்!
    அந்த அகிலாண்டேசுவரி அம்மாளுக்குப் பயத்தைப் போக்க மீனா தைரியமூட்டி பேசினதும் முகம் சந்திரனைக் கண்ட அல்லி போல் மலர்ந்தது.
    குழந்தையின் சிரிப்பையும் நோயாளியின் சிரிப்பையும் அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.
    அந்த அம்மாள் “என் ராசாத்தி“ என்று சொல்லிவிட்டு மீனாவின் முகத்தை வழித்து நெட்டி முறித்தாள்.
    சக்திவேலுக்கு உள்ளம் இன்பத்தால் நிறைந்ததை முகம் காட்டிக் கொடுத்தது.
    ஆனால் மீனாவிற்கு ஒன்று தான் புரியவில்லை. கோவில் பூசை முடிந்து காரில் இந்த அம்மாளுடன் இருந்த பொழுது அந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னை ஓர் அனுதாபத்துடன் கூடப் பார்க்காமல் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்ட இவருக்கு இன்று மட்டும் எப்படி வந்தது இந்தக் கரிசனம்?
    யோசித்தாள். முடிவு தெரியவில்லை! முடிவு என்பது ஏதாவது ஒன்றின் தொடக்கம் தான் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

    மீனா சொன்னது போலவே செய்து முடித்துவிட்டாள். அகிலாண்டேசுவரி இப்பொழுது சற்று நடக்கத் தொடங்கி இருந்தாள். இரண்டு கால்களிலும் அடுத்தடுத்து அறுவை சிகிட்சை முடிந்து விட்டதால் தனியாகவே எழுந்து அவளால் நடக்க முடிந்த்து. மீனா அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்தாள்.
    அறிவழகி போய் மூன்று மாதங்கள் கரைந்து விட்டு இருந்தாலும்... மீனாவிற்கு அறிவழகியின் ஞாபகமே வரவில்லை! அந்த அளவிற்கு அகிலாண்டேசுவரி அம்மாள் இவளிடம் அன்பு காட்டினாள். அவள் மட்டுமா...? அந்த ஊர் மக்கள் அனைவரும் அவளிடம் அன்பாகவும் அந்நியோன்யமாகவும் பழகினார்கள்!
   ஆனால் சக்திவேல்...!!!
    அவன் மீனா என்றொரு பெண் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல் தான் நடந்து கொண்டான்.!

             (தொடரும்)

6 comments :

  1. கதை எப்படி சென்று முடியுமோ... என்னும் ஆவலைத் தூண்டுகிறது...

    ReplyDelete
  2. Vaalththukkal ullame. Kadhai arumaiyaagap pogiradhu. Namma thalam varuvadhillaiye???

    ReplyDelete
  3. கதை விருவிருப்பாக போகிறது.

    ReplyDelete