Friday, 8 March 2013

போகப் போகத் தெரியும் - 43
   என்றுமே வற்றாத குளம். பெண்களின் கண்ணீரைப் போல! சின்னக்கல்லை எறிந்தால் கூடப் பெரிய பெரிய வளையங்களை வரச்செய்து தன்னுடைய ஆதங்கத்தைக் காட்டியது. ஆனால் பின்பு அடங்கிப் போய் விடுகிறது மனிதர்களின் மனம் போலவே.. ஆனால் அதனுள் விழுந்த கல்..? இன்னும் அங்கேயே தானே இருக்கிறது?
   பாவம்! அந்தக் கல்லும் அகலிகைக் கல்லைப் போலத்தான்! தரையில் கிடக்க வேண்டியது. இப்போது தண்ணீரில்! சாப விமோர்சனம் தர எந்த இராமன் வருவானோ..?
   தன் அருகில் அசைவு தெரியத் திரும்பிப் பார்த்தாள். யோகி ரத்தினம்! அவர் மேல் அவளுக்கு அதிக மரியாதை உண்டு. எழப்போனவளைக் கையமர்த்தி விட்டு தானும் அவள் அருகிலேயே அமர்ந்தார். அவரிடம் பேசுவதற்கு அவளுக்கு எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை. தன் மீது அக்கரை உள்ளவரை பார்த்ததும் கண்கள் தானாகவே கலங்கி நீரை வடித்தது.
   'மீனா.. அழுவாதம்மா. துக்கங்கள் காலத்தின் கட்டாயங்கள். மரணம் நடக்காத வீடு எது? மரணம் வரணும். வந்தால் தான் மனிதனுக்கு நிரந்தரம் என்பது ஒன்றுமில்லைன்னு புரியும். யாரோ நமக்குத் தெரியாதவங்க இறந்து போயிட்டா.. அது நம்மள தாக்காது. ஆனா நமக்கு வேண்டியவங்கள இழந்துட்டா உலகமே வெறுமை தான்னு புரிஞ்சி போகும். ஆனால் அந்த வெறுமையான உலகத்துல தான் நாம வாழ்ந்தாக வேணும். அதுவும் சந்தோஷமா வாழணும். நமக்காக இல்லைன்னாலும் மத்தவங்களுக்காகச் சந்தோஷத்த வரவழைச்சிக்கணும்.
   மீனாம்மா.. உன்னோட துக்கத்த கொஞ்ச நேரம் ஒதுக்கி வச்சிட்டு ருக்மணி நல்லா இருக்கணும்ன்னு அவ புருஷங்கிட்ட பேசி அனுப்பி வச்சியே.. அந்த நேரம் தாம்மா நிரந்தரம். எல்லாருடைய மனசும் நிறைஞ்சி போச்சி. ஒவ்வொருத்தரோட மனசுலேயும் காலத்தால அழிக்கமுடியாத ஓவியமா நின்றுவிட்ட காட்சி அது. அது மாதிரித்தான் வாழணும். மனுஷாளா பொறக்கிறது மத்தவங்களுக்கு உதவி செய்யத்தான். கவலப்படாதம்மா.."
   'அப்படீன்னா எனக்குன்னு எந்த உணர்ச்சியும் இருக்கக் கூடாதுன்னு சொல்லுறீங்களா..? எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குதே.. அது மறுத்துப் போகலையே.." அழுதாள்.
   'உன் கண்களால பாக்குறது தான் மனசுல பதியுது. துக்கமான நிகழ்ச்சிகள பாக்கும் போது குருடா இருந்துடு. கேக்கும் போது செவிடா இருந்துடு. பிறவிக் குருடனுக்கு யானை எப்படி இருக்கும்ன்னு தெரியாது. அவனுக்கு விளக்கிச் சொல்லவும் முடியாது. அவனுக்கு யானை என்பது ஒரு மிருகம் என்பது மட்டும் புரிந்திருக்கும். இப்படித்தான் துக்கங்களை நாம் எடுத்து கொள்ளணும்.
   உனக்கு மனசு இருக்குதுன்னு சொன்னியே.. அது மத்தவங்க மனச எண்ணிப்பாத்துச்சா..? அதே விசயம் மத்தவங்களுக்கு எப்படி பட்ட வேதனையைக் கொடுத்திருக்கும்ன்னு நெனச்சி பாத்தியா..? அந்தச் சம்பவம் அன்னைக்கி தேவகி சரவணனை மடியில கெடத்திக்கினு அழுத அழுகை.. இன்னமும் ஒவ்வொருத்தர் காதுலயும் கேட்டுக்கினே இருக்குது. அன்னைக்கி சக்திவேல் அந்த அம்மாவைக் கட்டிபுடிச்சி 'அவன் போன என்னம்மா..? நா ஒங்களுக்கு மகனா இருப்பேன்" ன்னு சொன்ன ஒரு வார்த்தை தான் அவங்கள இன்னும் உயிரோட வச்சிருக்குது. அவஸ்த்தை படுபவர்களுக்கு ஆறுதல் தான் வேணும்.
   சக்திவேலுவுக்குக் கவலை இல்லையா..? அவன் அடுத்தவருக்கு ஆறுதல் சொல்லவில்லையா..? ஆனா எல்லாருக்கும் ஆறுதல் சொன்ன அவர் தான் ஆறுதல் அடையாம தவிக்கிறாரு. அவருக்கு ஆறுதல் வேணும். அதை எங்களால தர முடியாது. நீ தான் அவர் மனைவி. அவர் மனசுல இருக்கற காயத்த ஆத்தணும்ன்னா.. நீ தான் அன்பால மருந்து போடணும். நீ பெண் பிள்ளை. உங்கிட்ட நா விளக்கமா இதுக்கு மேல சொல்ல முடியாது. புரிஞ்சி நடந்துகோம்மா. நீ எப்ப வருவேன்னு நாங்க காத்துக்கினு இருந்தோம். உன்ன சுத்தி இருக்கிறவங்கள சந்தோஷமா வச்சிப் பாரு. உனக்குத் தானா சந்தோஷம் கிடைக்கும்." எழுந்து போனார்.


   கோவிலுக்கு வெளியே கிடந்த செருப்பைப் போடும் பொழுது.. முந்தானையை யாரோ இழுக்கத் திரும்பிப் பார்த்தாள். சின்னப் பெண்குழந்தை. ;அம்மா அம்மா ;.. என்றபடி தன்னைத் தூக்க வேண்டும் என்பதற்காகக் கைகளை விரித்துச் சிரித்தது.
   குழந்தையின் சிரிப்பு எல்லாத் துக்கங்களையும் மறக்க வைத்துவிடுகிறதே..! மீனா சட்டென்று தூக்கி அந்தக் குழந்தைக்கு முத்தமிட்டாள். யாரோட குழந்தையாக இருக்கும்..? அருகில் மாலதி நின்றிருந்தாள்.
   'மாலதி.. உங்கக் கொழந்தையா..? இவ என்ன போயி அம்மான்னு கூப்பிட்டா."
   'கூப்பிடட்டுமே.. இதுல என்ன தப்பு இருக்குது? நாளைக்கி எனக்கே ஒன்னுன்னா எங்கொழந்தைய ஒம்மகளா நெனைக்க மாட்டியா..?"
   'என்ன இது அர்த்தம் இல்லாத பேச்சி? நாம படுறதெல்லாம் போதாதா..?" கோபமாகக் கேட்டாள்.
   'மீனா.. நா ஒன்னும் அர்த்தம் இல்லாம சொல்லல. வாழ்க்கையில நாம ஒருத்தருக்கு ஒருத்தர் உறவுன்னு நெனச்சி தான் வாழணும். இன்னைக்கி மகன் போனாலும் சக்திவேல மகனா ஏத்துகினு அந்தம்மா வாழலையா..? இது தான் வாழ்க்க. இப்படி தான் வாழணுமின்னு கட்டாயம் இருக்குது. மீனா.. சரவணனையும் மாதவனையும் ஒனக்கு எத்தன நாளா தெரியும்? ஒரு மூனு நாலு வருஷம் இருக்குமா..? எனக்கு சின்ன கொழந்தையிலர்ந்து தெரியும்.
   தோ.. இந்தப் பசங்க குண்டு விளையாடுறாங்களே.. இதே மாதிரித்தான் அந்த ஏழு பேரும் வெளையாடுவாங்க. ஏழு பேருக்கும் ரெண்டு மூனு வயசு வித்தியாசங்கள் இருந்தாலும் இவங்க எப்பவுமே ஒத்துமையா தான் இருப்பாங்க. சக்திவேலுவுக்குப் பணக்காரன் என்ற கர்வமோ.. திமிரோ கொஞ்சம் கூட இருந்ததில்ல. ஊருல யாருக்காவது ஏதாவதுன்னா உயிர கொடுத்துக் காப்பாத்த முன் வருவாரு. ஆனா  அவருக்குன்னு எந்தச் சந்தோஷத்தையும் தானா தேடிக்கிட்டதில்ல. காதல் கூடத் தானா தான் கெடைச்சது. பாவம். நல்லவங்களுக்குத் தான் ஆண்டவன் சோதனையைக் கொடுப்பான். யார் கண்ணுபட்டுச்சோ..?
   அந்தச் சோகத்துல இருந்து எல்லாரும் மீண்டுட்டாங்க. ஆனா சக்திவேல் தான் இன்னும் மீளல. அவருக்கு ஆறுதல் சொல்ல எங்க யாராலும் முடியல. அதுக்கு நீ ஒருத்தி தான் இருக்கிற. ஆறுதலா பேசு. ஆறுதலா நடந்துக்கோ.. என்ன.. நா சொல்றது புரியுதா..?"
   புரிந்தது என்பதாகக் குனிந்து கொண்டே தலையாட்டினாள். ஒரு சிறுவன் வந்தான். 'மீனாக்கா.. உன்ன உன்னோட பிரன்ஸ்ங்க வரசொன்னாங்க." என்றான்.
   'ப்ரென்ஸ்ங்க.." முகத்தில் ஒரு வெறுமை!
   'மீனா.. முடிஞ்சி போனத மறக்க பாரு. போய் பேசு. கல்யாணத்துக்கு வந்தேன்;. காலையில கௌம்பிடுவேன்;. இன்னும் நாலு மாசம் இருக்குது தேருக்கு. அப்போ வர்றேன். சந்தோஷமா இரு. அவரையும் சந்தோஷமா வச்சிக்க."
   குழந்தையை வாங்கிக் கொண்டு போனாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²  ²²²

   மீனா வகுப்பறையில் நுழையும் பொழுது இரண்டு பேருடைய நாற்காலிகள் வெறுமையாக இருந்தது. கவலையாகப் பார்த்தாள். வந்த அழுகையை அடக்கினாள்.
   'சொல்லுங்க. என்ன நடந்துச்சி..? ஏன்..? எதுக்காக..? சொல்லுங்க."
   'மீனா.. ஏன்.. எதுக்குன்னு எங்களுக்கும் சரியா தெரியாது. அதுக்காக சக்திவேல நீ தப்பா பேசி இருக்ககூடாது. "
   நிமிர்ந்து சிவாவைப் பார்த்தாள்.
   'ஆமா மீனா.. அவரு நிருஜாவோட கல்யாணத்துக்குத் தான் போயிருந்தாரு. விசயத்த டெலிபோனுல சொன்னதும்.. அவர் அழுத அழுகைய பாத்துட்டு அந்த பொண்ணு நிருஜா.. கல்யாணம் முடிஞ்ச கையோட சாவுக்கு வந்திடுச்சி. சக்திவேலு வர்றதுக்குள்ள போலிசு கேசுன்னு போயி..  தேனப்பனுக்கும் வெற்றிவேலுவுக்கும் இதுல சம்மந்தமே இல்லன்னு முடிவாயிடுச்சி. ஆனா சக்திவேலு.. அவனுங்கள எப்படியாவது சாகடிக்காம விடமாட்டேன்னு கௌம்பிட்டாரு. அவர் இருந்த கோவத்துல எங்களால அவர கட்டப்படுத்தவே முடியல. ஆனா அந்தப் பொண்ணு நிருஜாத்தான் சண்ட போட்டு சமாதானம் படுத்தினா. ரொம்ப நல்ல பொண்ணு.
   சக்திவேல் இருந்த நெலைய பாத்து அந்த பொண்ணு தன்னோடவே கூட்டிக்கினு போயிட்டா. அவளுக்குக் காதல் கல்யாணம் தான். அவ புருஷனும் சக்திவேலுக்குப் பிரண்டுதான். அங்க போயி திரும்பவும் எம் பில் படிச்சாறு. நீ வந்துட்டன்னு தெரிஞ்சதும் ஓடி வந்துட்டாரு. நீ என்னன்னா அவர சந்தேக பட்டுட்ட." ஜுவா சொல்லி முடித்தான்.
   மீனா கேட்டாள்.
   'தேனப்பனோ.. வெற்றிவேலோ.. இல்லைன்னா.. இந்த கொலையை யார் செஞ்சியிருப்பா..?"
   யாருமே பதில் சொல்ல முன் வரவில்லை.

                          (தொடரும்) 

2 comments :

 1. கல்லையும் குளத்தையும் கொண்டு என்ன அற்புதமாக வர்ணித்திருக்கிறீர்கள்...
  அற்புதமான தத்துவமாகவும் கூறியுள்ளீர்கள்...
  உங்களின் அனுபவம் மீண்டும் பளிச்சிடுகிறது...

  ReplyDelete
 2. உன் கண்களால பாக்குறது தான் மனசுல பதியுது. துக்கமான நிகழ்ச்சிகள பாக்கும் போது குருடா இருந்துடு. கேக்கும் போது செவிடா இருந்துடு. பிறவிக் குருடனுக்கு யானை எப்படி இருக்கும்ன்னு தெரியாது. அவனுக்கு விளக்கிச் சொல்லவும் முடியாது. அவனுக்கு யானை என்பது ஒரு மிருகம் என்பது மட்டும் புரிந்திருக்கும். இப்படித்தான் துக்கங்களை நாம் எடுத்து கொள்ளணும்.

  அருமையான படிப்பினை. எதுவோ எனக்கு புரிவது போன்று உள்ளது.
  குருவின் முன் சீடனாக உணர்கிறேன்.

  ReplyDelete