Monday, 10 June 2013

போகப் போகத் தெரியும் - 59

   மீனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். தான் காண்பது கனவா..? நினைவா..? நினைவுதான்! குழந்தை தன் சின்ன உடலை முறுக்கி  ங்ஙே..“ என்று குரல் கொடுத்தது.
   நினைவு தான்! கண்மணி இவளைப் பார்த்து முறைத்தபடி நின்றிருந்தாள். கோபத்தில் மார்பு எழுந்து தாழ்ந்தது. அவளைப் பார்க்க மீனாவிற்குப் பயமாக இருந்தது.
   சக்திவேலுவின் படத்தைப் பார்த்து தான் அழுத்தை இவள் பார்த்திருப்பாளோ..? பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பாள்? ஏற்கனவே அவர்களுக்குள் பிரச்சினை வேறு இருக்கிறது. இப்பொழுது இதையும் பார்த்திருந்தால்.. கடவுளே.. இப்பொழுது என்ன செய்யலாம்..? அவள் முடிவெடுப்பதற்கு முன்..
   வந்தவங்கள வா.. ன்னு கூப்ட மாட்டியா..? அந்த மரியாத கூட மறந்து போயிடுச்சா ஒனக்கு..?" கண்மணி கேட்டாள்.
   அதுக்கில்ல கண்மணி.. நா.. படத்த பாத்துக்கினு.. நீ என்ன நெனச்சிட்டியோன்னு.."
   வார்த்தைகள் கோர்வையாக வர மறுத்தது.
   நா என்ன நெனைக்கிறது? உம்புருஷனோட படத்த தானே பாத்த? அதுக்கெதுக்கு இவ்ளோ பதட்டம்?"
   மீனா குழப்பமாகப் பார்த்தாள். நெற்றியில் பயத்தில் விளைந்த நீர் முத்துக்கள் ஈரப்பசையை உண்டு பண்ணியது.
   மீனா.. நீ என்னை உட்கார சொல்ல்லைன்னாலும் பரவாயில்ல. என்னால இதுக்கு மேல நிக்கமுடியாது."
   சொல்லிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தாள். மீனாவிற்கு அப்பொழுது தான் உரைத்தது. கண்மணிக்கு நேற்று தான் பிரசவம் ஆனது. முழுசாக இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை.  ஐயோ.. குழந்தை பெற்ற பச்சை உடம்பாயிற்றே..!
   அருகில் வந்தாள். மன்னிச்சிடு கண்மணி. ஏதோ யோசனையில இருந்துட்டேன். என்ன அவசரம் ஒனக்கு? எதுக்காக இந்த ஒடம்போட நீ வரணுமா..?"
   காரணமாத்தான். நா இப்போ வரலைன்னா.. உன்னோட பொருள உங்கிட்ட சேக்கமுடியாம போயிடுமே.. அதனால தான் அவசர அவசரமா ஓடியாந்தேன். இங்க வந்து உக்காரு." தன்னருகில் அவளை அமர வைத்தாள்.
   மீனா.. இது சக்திவேல் மாமாவோட கொழந்த."
   குழந்தையைத் தூக்கிக் காட்டினாள். குழந்தை மைதா நிறத்தில் நிறைய முடியுடன் கண்களை மூடிக் கொண்டு பூச்செண்டு போல் இருந்தது. மீனா ஆசையாக அதன் கன்னத்தைத் தொட்டாள். அது காய்ச்சியப் பாலின் மேலிருக்கும் ஆடையைத் தொட்டது போல் மென்மையாகவும் மிருதுவாகவும் இருந்தது.
   சந்தோசத்துடன் கண்மணியைப் பார்த்தாள். கண்மணி யோசனையுடன் மீனாயைப் பார்த்துக் கொண்டே.. இந்தா புடி"  சட்டென்று மீனாவின் மடியில் கிடத்தினாள். மீனா பிடித்துக் கொண்டாள்.
   மீனா.. இனிமேல இந்த கொழந்தைக்கி நீ தான் அம்மா. இத நீ உங்கொழந்தையா வளக்கிறியோ.. இல்ல எனக்கு வேணாம்ன்னு விட்டுட்டு போறியோ.. அது உன்னோட இஷ்டம். நா அதுல தலையிட மாட்டேன். என்ன பொருத்த வரைக்கும் இத பெத்து குடுக்கிற கடமை பெத்ததோட முடிஞ்சிடுச்சி. இனிமே இந்தக் கொழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கெடையாது. இனி நீயாச்சி. ஒங்கொழந்தையாச்சி. நா கௌம்புறேன்." எழுந்தாள்.
   மீனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். கடவுளே.. இது என்ன புதுக் குழப்பம்? இவள் பேசுவதைப் பார்த்தால் குழந்தையைப் பெத்து என்னோட கையிலக் கொடுக்கறதுக்காகத் தான் சக்திவேலுவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டது போல் அல்லவா இருக்கிறது?
   ஐயோ.. இது சரியில்லையே.. என்னோட மனசும் இதை எதிர் பார்க்கவில்லையே..
   கண்மணியின் கையைப்பிடித்து தன் அருகில் அமர வைத்தாள்.
   கண்மணி.. நீ என்னைத் தப்பா புரிஞ்சிக்கினு இருக்க. நீ சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் நா இப்பவும் நெனைக்கிறேன். உன்னோட சந்தோஷமான வாழ்க்கையில நா எப்பவும் குறுக்க நிக்க மாட்டேன். பயப்படாத. நா இப்ப கௌம்பிடுவேன். எனக்கு நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். நான் இங்க இல்ல என்ற எண்ணம் ஒவ்வொருத்தர் மனசுலேயும் இருக்கணும். அப்போத்தான் நாம் ஒன்றை ஏற்கனவே இழந்து இருக்கிறோம். அதனால எந்த தவறும் நடக்காம இருக்கணும்ன்னு இந்த ஊர்க்காரங்க மனசுல இருக்கும்.
   அன்னைக்கி அந்த மாடு வெற்றிவேலை முட்டியிருந்தா எவ்வளவு கலவரம் நடந்திருக்கும்ன்னு நெனச்சி பாரு. அந்த தேனப்பன்.. ரெண்டு புள்ளைங்கள இழந்தவரு. அவரோட மனசு எவ்ளோ வேதன பட்டிருக்கும்?
   கண்மணி.. எனக்குக் குழந்தையே பொறக்காது என்ற உண்மையை விட அந்த அற்பமான மனங்களை உடைய மனிதர்களின் பழிக்கு பழி என்ற உணர்ச்சி.. இன்னும் மாறாமல் இருக்குதே.. அந்த வேதனை தான் அதிகமா இருந்துச்சி.
   அந்தக் குறுகிய மனம் உள்ளவர்களை மாத்தணும். என்னைக் காரணம் காட்டி இந்தப் பிரச்சினை துளுக்காமல் இருக்கணுன்னு தான் நா நெனைச்சேன். சக்திவேல வுட்டு பிரிஞ்சி போன காரணம் இது தான். நிச்சயமா அவரு என்ன புரிஞ்சிக்குவாரு. ஒரு நல்ல விசயத்துக்காக வேற ஒரு நல்ல சந்தோஷத்த விட்டுக் கொடுக்கறது நல்லது தானே.. இப்ப சொல்லு. நான் செய்தது தப்பா..?"
   கண்மணி அவளை ஆழ்ந்து பார்த்தாள். பிறகு சொன்னாள்.
   நீ செஞ்சது தப்பு தான் மீனா. என்னோட பார்வைக்கிப் பிரச்சனைகளைப் பாத்துப் பயந்து ஓடிப் போன கோழை நீ. தைரியமா எதையும் சந்திக்க முடியாம ஓடிப் போன நம்பிக்கை துரோகி நீ. உன்னோட பக்கத்தை மட்டுமே யோசிச்சியே.. உன்னால எவ்வளவு பேருக்கு மன வருத்தம்? மன உளைச்சல்..?
   நீ ஊரவிட்டு போனதை நெனச்சி ரொம்ப சந்தோஷப்பட்டவரு தேனப்பன் மட்டும் தான். உன்னத் தெரிஞ்ச மத்த எல்லாருக்குமே.. ஒம்மேல கோவம்! வெறுப்பு! கொழந்தைக்காகத் தான் நா போகிறேன்னு நீ எழுதியிருந்த லட்டர் ஓரளவுக்கு அவங்கள சமாதானப் படுத்தினாலும்.. உம்மேல ஆசையும் அன்பும் நம்பிக்கையும் வச்சியிருந்த எல்லாருக்கும் நீ துரோகம் தான் செஞ்சியிருக்க. அவங்களோட நிம்மதிய திருடியிருக்க.." வார்த்தைகள் உஷ்ணத்துடன் வந்ததால்.. அவளுக்கு மூச்சுவாங்கியது.
   போவட்டும். வுடு கண்மணி. அப்ப எல்லாரும் வருத்தப்பட்டாலும் இப்ப நிம்மதியா சந்தோஷமாத் தான இருக்காங்க. நா இதைத்தான் எதிர் பாத்தேன். எனக்குத் தெரியும் கண்மணி. இந்தப் பிரச்சனைங்க எல்லாம் வரும். எல்லாருக்கும் எம்மேல வெறுப்பு வரும்ன்னு தெரியும். எல்லாரும் என்னை வெறுக்கணும். அதனால தான நா உங்க எல்லாரையும் விட்டுட்டுப் போனேன். கண்மணி.. முழிச்சிக்கினே நடக்கப் போறத கனவு காணுறது தான் நம்பிக்கை. என்னோட நம்பிக்கை வீண் போவல. அதுக்குச் சாட்சி இந்த ஊரோட அமைதி. அப்புறம் இந்தக் கொழந்த. போதுமா..?"
   குழந்தையைக் கண்மணியின் கையில் கொடுத்து விட்டு மீனா எழுந்தாள்.
   அமைதியைத் தேடித் தேடித்தான் ஒவ்வொருத்தரும் அலையிறோம். ஆனா.. அந்த அமைதி கெடைக்க தொடக்கத்துல போராட வேண்டி தான் இருக்குது. தொடக்கத்துல போராடினாலும் இப்ப என்னோட மனசு சந்தோஷமா அமைதியா இருக்குது. என்னைச் சந்தோஷமா வழி அனுப்பு கண்மணி.." என்றாள்.
   நீ போயிட்டா இங்க யார் யாரெல்லாம் சந்தோஷமா இருப்பாங்கன்னு நெனைக்கிற..? " கண்மணி கோபத்துடன் கேட்டாள்.
   ஏன்..? ஒனக்கு தெரியாதா..? இந்த ஊரு. நீ.. ஒங்குடும்பம்.. எல்லாருக்குமே சந்தோஷமாத்தான் இருக்கும்."
   அப்போ.. உன்னையே நெனச்சிக்கினு வாழுற சக்திவேல் மாமா சந்தோஷமா இருக்கணும்ன்னு நெனைக்க மாட்டியா..?"
   என்ன இது கேள்வி? நீயெல்லாம் இருக்கும் போது அவரோட சந்தோஷத்துக்கு என்ன குறைவாரப் போவுது?"
   மீனா.. புரிஞ்சி தான் பேசுறியா..? புரியாம பேசுறியா..? என்னத்தான் நாங்க எல்லாரும் இருந்தாலும் அது ஒன்னோட தொணைக்கி ஈடாவுமா..? கொஞ்சம் பிராட்டிக்கலா யோசனை பண்ணிப் பாரு." கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
   நா.. நல்லா யோசனை பண்ணிப் பாத்துட்டுத் தான் சொல்றேன். நா இல்லன்னாலும் அவர் சந்தோஷமாத்தான் இருப்பார். ஏன் இந்த ரெண்டு வருஷமா சந்தோஷமா இல்ல? ஒரு கொழந்தைய பெத்துக்கல?"
   கண்மணி அவளைக் கோபத்துடன் முறைத்தாள்.
   மீனா.. தூங்கறவங்கள எழுப்பிடலாம். ஆனால் தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்ப முடியாது. எனக்குப் புரிஞ்சி போச்சி. நீ ஒரு முடிவோட தான் இருக்கறன்ன தெரிஞ்சி போச்சி. சரி. எப்படியாவது போய் தொலை. ஆனா இது உன்னோட புருஷனோட கொழந்த. ஒனக்காக சொமந்து பெத்தேன். நீ வேணும்ன்னா வச்சிக்கோ. வேணாம்ன்னா தூக்கி யார் கையிலயாவது குடு. எங்கடமை முடிஞ்சிடுச்சி. நா கௌம்புறேன்." குழந்தையைக் கட்டிலில் கிடத்திவிட்டுக் கிளம்பினாள்.
   கண்மணி நில்லு. எங்க போற..?"
   ஏன்.. என்னோட வீட்டுக்கு. இனிமே எனக்கு இங்க என்ன இருக்குது.?"
   கண்மணி நீ இந்த மாதிரி பேசறது சரியில்ல. நீ மட்டும் சக்திவேல விட்டுப் பிரிஞ்சி போனா.. நா.. இந்த ஒலகத்தை விட்டே போயிடுவேன்."
   கண்மணி அதிர்ச்சியுடன் நின்று திரும்பினாள். சற்று நேரம் அவள் மீனாவையே உற்றுப் பார்த்தாள். மீனா கோபத்துடன் இருந்தாள்.
   ஆனால் கண்மணியைப் போகவிடாமல் நிறுத்திவிட்ட மகிழ்ச்சி திருப்தி அவள் முகத்தில் இருந்தது!
   மீனா.. எனக்கும் சக்திவேலு மாமாவுக்கும் என்ன உறவுன்னு நெனச்ச..? ஒனக்கு என்னோட புருஷன் யாருன்னு தெரியுமா..?" மெதுவாக அதே சமயம் அழுத்தமாகவும் கேட்டாள் கண்மணி.
   ஏன் தெரியாது? ஒனக்கும் சக்திவேலுக்கும் கல்யாணம் ஆன பத்திரிக்கை கூட எங்கிட்ட பத்திரமா இருக்குது." என்றாள் மீனா அலட்சியமாக.
   ஓ.. அதனால தான் நீ இப்படியெல்லாம் பேசுறியா..? இப்பத்தான் எனக்கு புரியுது. சக்திவேலு மாமாவோட கொழந்த இதுன்னு நா காட்டினதும் அதை நீ பாத்த விதத்தையும் நா பாத்ததும் ஒனக்கு உண்மை தெரிஞ்சிருக்கும்ன்னு நெனச்சேன். ஆனா ஒனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு புரியுது. மீனா.. இந்த கொழந்த சக்திவேலு மாமாவோடது தான். இத பெத்தது நான் தான். ஆனா என்னோட புருஷன் சக்திவேலு கெடையாது. வெற்றிவேல்!" என்றாள்.


                             (தொடரும்) 

No comments :

Post a Comment