Tuesday 7 August 2012

போகப் போகத் தெரியும் - 20



   மீனா தன் கோபத்தை வெளியே காட்ட வழியில்லாமல் வார்த்தைகளை நெருப்புத் துண்டுகளாகக் கொட்டினாள். எழுந்தவள் என்ன நினைத்தாளோ சக்திவேலின் அருகில் வந்தாள்.
   'சக்திவேல் இந்த கொலுசுக்கு ஆசப்பட்டோ.. உங்கிட்ட இருக்கிற பணத்து மேல ஆசப்பட்டோ.. நா அந்தக் காளைய அடக்க சொல்லல. இருந்தாலும் என்ன அந்தக் கூட்டத்துல அவமானப்படுத்தாம இந்த கொலுச எடுத்து தந்ததுக்கு ரொம்ப நன்றி. இந்தாங்க உங்க கொலுசு!"
   அவன் கையைப் பிடித்துக் கொலுசுவை அவன் கையில் திணித்தாள். கொலுசெல்லாம் ஒரே இரத்தம்! சக்திவேல் அதிர்ச்சியாக அவள் கையைப்பார்த்தான். காயம் அவளின் துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்தது.
   'யார் அந்த கழுகு..?" சசிதரன் கேட்டான். அவன் இவளின் காயத்தையோ கட்டையோ கவனிக்கவில்லை.
   'எனக்கு அவன் யாருன்னே தெரியாது சசி. ஆனா அவன பாத்தாலே எனக்குப் பயமா இருக்குது. என்னை எப்படியாவது தூக்கிகினுப் போயி தாலி கட்டுவேன்னு சவால் விட்டு இருக்கான்." என்றாள் கவலையாக!
   திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவனும் யோசனையுடன் இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதிர்ச்சி சில நேரங்களில் பேச விடாது! அவனைப் பார்த்துச் சொன்னாள்.
   'அவன் மட்டும் அப்படி செஞ்சான்னா.. நடக்கப்போற ஓடத்தூர் தீமிதி திருவிழாவுல அப்படியே அந்த நெருப்புல எறங்கிடுவேன்.." என்று.
   அவள் இப்படி கோபமாகவும் அழுத்தமாகவும் சொன்னது சக்திவேலுவுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
   'நா கௌம்புறேன். அனாதைங்க யார் மேலேயும் அன்பு வைக்கக்கூடாது. அதெல்லாம் அவுங்களுக்கு அருகதையே இல்லன்னு நீங்க எல்லாரும் சேந்து புரியவச்சிட்டிங்க. ரொம்ப நன்றி!"
   சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் பாரக்;காமல் நடந்தாள். அவள் போவதை அவர்கள் கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   மீனா கையில் இருந்த கொலுசுவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெள்ளியில் நிறைய சலங்கை கொத்துகள் சேர்த்துச் செய்யப்பட்டிருந்த அது மிக அழகான ஓசையைக் கொடுத்தது.
   நேற்று தன் நண்பர்களைத் திட்டிவிட்டு நேராக டாக்டர் வீட்டிற்குச் சென்று கட்டை மாற்றி ஒரு பேண்டேஜ் மட்டும் போட்டு கொண்டு அவர் கொடுத்த மாத்திரையை விழுங்கிவிட்டு படுத்தவள்தான்! காலையில் தான் கண்விழித்தாள்.
   கண்விழித்ததும் முதலில் தென்பட்டது இந்தக் கொலுசுத்தான்! அவளுக்கு ஆச்சர்யம்! அதே சமையம் சந்தோசம். எடுத்துக் கொண்டு ஓடிப் போய் அறிவழகியிடம் கேட்டாள். 
   'நேத்து ராத்திரி நீ தூங்கிட்ட பொறவு சத்திவேலுவும் அதோட அக்காவும் வந்தாங்க. கூட அந்த ஆறு பசங்களும் தான். நீ நல்லா தூங்கினு இருந்த. சத்திவேல் தம்பிதான் இந்த கொலுச ஒன் தலமாட்டுல வச்சிட்டு போச்சி." என்றாள் அறிவழகி.
   மீனாவிற்குச் சட்டென்று முகம் பூவாகப் பூத்தது.
   'அம்மா.. சக்திவேலுவுக்கு அக்காவா..? அது யாரு..? "
   'அதாமா.. அவருவுட்டுல இருக்குதே கமலா. அந்த பொண்ணுதான். அவருக்கு தூரத்து சொந்தம். பாவம். வெதவ!"
  'என்ன விதவையா..? " கண்கள் அகலக் கேட்டாள்.
   'ஆமா மீனா.. அந்தப் பொண்ணுக்குச் சத்திவேலேட அம்மா தான் கல்யாணம் செஞ்சி வச்சாங்க. ஆனா அந்தத் தேனப்பன்.. அதான் வெற்றிவேலோட அப்பா.. அவன் இந்தப் பொண்ணோட புருஷன ஒரு சண்டையில வெட்டிட்டான். அதுல கோவமான நம்ம சத்திவேலுதம்பி அந்த தேனப்பனோட கால வெட்டிட்டாரு."
   'என்ன சக்திவேலா அப்படி செஞ்சாரு?"
   'ஆமாம்மா. இது ஒரு ஆறேழுவருசத்துக்கு முந்தி நடந்த கத. அப்பெல்லாம் ஒரே வெட்டுகுத்துன்னு தான் இருக்கும். அதுவும் வெற்றிவேலும் சத்திவேலும் நேரா சந்திச்சா ஒரே சண்டத்தான் வரும். இப்போத்தான் மூனு வருஷமா நாம வந்த பொறகு சண்ட சச்சரவு இல்லாம இருக்குதுன்னு ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க."
   'ஏம்மா.. கால வெட்டினாரே.. போலிசு கேசு ஜெயிலுன்னு போவலையா..?"
   மீனா மிரண்டவளாகக் கேட்டாள்.
   'அதெல்லாம் பெரிய எடத்து வௌகாரம். ஊருக்குள்ளேயே பேசி தீத்துக்குவாங்க. வெளிய அவ்வளவா விசயம் போவாது. ஆனா இப்ப அப்டியில்ல. நம்ம சத்திவேலு தம்பி தலையெடுத்துதலேர்ந்து எல்லா புள்ளைங்களையும் படிக்கவச்சி எல்லாரையும் முன்னுக்குக் கொண்டாருது. அவரால இந்த கிராமம் இப்போ எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கு. இந்தக் கிராமத்துல அவரோட பேச்சிக்கி அவ்வளவு மரியாத இருக்குது." சொல்லிவிட்டுத் தன் வேலையைக் கவனித்தாள்.
  
   மீனா இதையெல்லாம் அசைபோட்டவளாய்க் காலையிலிருந்து அந்தக் கொலுசை கையில் வைத்துக் கொண்டே இருந்தாள்.
   எப்படிபட்ட ஆள் அவர்? அவரைப் போய் நேற்று அப்படி திட்டிவிட்டோமே! நம் நிலமை அவருக்கு எப்படி தெரிந்திருக்கும்? சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. யோசித்தாவது இருந்திருப்பார். பாவம் அவர்! அவரைக் கோபமாக நாம் பேசியிருக்கக் கூடாது. கவலை பட்டாள்.
   துப்பிய வார்த்தைகளை ஒரு பொழுதும் விழுங்கிவிட முடியாது தானே..! இனிக் கவலை பட்டு என்ன பயன்? வேண்டுமானால் மன்னிப்பு கேக்கலாம். ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?
   மனிதர்கள் தவறு செய்வது சகஜம் தானே! அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்டுவிட்டால்.. செய்த தவறு இல்லை என்று ஆகிவிடுமா..? இல்லையே..! மன்னிப்பு என்பதால் மறக்கலாம். அவ்வளவு தான்!
   'மீனா.." சேகர் கூப்பிட நிமிர்ந்து பார்த்தாள்.
   'எங்கள மன்னிச்சிடு மீனா.. நேத்து ஒன் நெலமத் தெரியாம நாங்க கோபப்பட்டுடோம்.." கெஞ்சலாகச் சொன்னான்.
   தவறே செய்யாவிட்டாலும் உரிமையுடன் மன்னிப்பு கேட்பது நட்பில் மட்டுமே சாத்தியமாக முடியும் போலும்!
   'பரவாயில்ல சேகர். நானும் தான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன். நீங்களும் என்னைய மன்னிச்சிடுங்க."
   மன்னிக்கும் மனத்தில் கோபம் கரைந்து காணாமல் போய்விடுகிறது. தண்ணீரில் கரைந்த சர்க்கரையைப் போல!
   'மீனா.. ஓடத்தூர்த் திருவிழாவுக்கு வரலையா..? நம்ம ஊருல முக்காவாசி பேர் போயிட்டாங்க. நீ இன்னும் வரலையேன்னு தான் கூப்பிட வந்தேன்."
   'நா வரல சேகர். நீங்க போயிட்டுவாங்க."
   'இல்ல மீனா நீயும் வா. நம்மூர் மட்டுமில்ல. இன்னிக்கி நாலஞ்சி ஊர்காரங்க ஓடத்தூருக்கு வந்து அம்மனுக்குப் பொங்க வச்சிப் படைப்பாங்க. அதுல நம்ம சத்திவேலு அண்ணனுக்குத் தான் மொதல் மரியாத நடக்கும். அதனாலத்தான். நீயும் வா."
   'இல்ல சேகர். எனக்குச் சாமி கும்புடுற பழக்கமே இல்ல. நா எதுக்கு அங்கெல்லாம்? எனக்கு இப்பல்லாம் வீட்டவுட்டு வெளியவரவே பயமா இருக்கு! நீங்கல்லாம் போயிவாங்க. நா வரல." முடிவாகச் சொல்லிவிட்டாள்.
   அவன் போய்விட்டான். அவன் போன ஐந்தாவது நிமிடத்தில் சக்திவேல் அங்கே வந்தான்.
   'என்ன மீனா.. இன்னுமா நீ கௌம்புல? கடைசியா ஒரு வண்டிதான் இருக்குது. அதுல ஒங்கூட வெளையாடுற சின்னபசங்கத்தான் இருக்கானுங்க. சீக்கிறமா கௌம்பு. அத்த இவள சீக்கிறமா கௌப்பிவுடுங்க" என்றான் அதிகாரமாக!
   மீனா பேசாமல் நின்றிருந்தாள்.
   'தம்பி.. அவ வூட்டுலேயே இருக்கட்டும்பா. கையில வேற காயம். சின்னவயசுலேர்ந்து ஏதாவது காயம் பட்டா அவ கொஞ்சம் கோவப்பட்டாலும் காயம் ஆராம ரத்தம் வடியும். அதனால தாம்பா." அறிவழகி தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
   'நா பாத்துகறேங்க. மீனா கௌம்பு. ஊருல யாரும் ஒனக்குத் தொணையாயில்ல. எல்லாம் வயசானவங்கத்தான் இருக்காங்க. உன்ன தனியாவுட்டுட்டு என்னால போவ முடியாது." என்றான்.
   மீனா யோசித்தாள். வேந்தனின் ஞாபகம் வந்தது.
   'சரி நா வர்றேன். ஆனா ஒரு கண்டீஷன்!"
   'என்ன..?"
   'எனக்கு ஏதாவது பிரச்சினைன்னா நீங்க அதுல தலையிட்டு பிரச்சனைய பெரிசு பண்ணக்கூடாது."
   அவன் முறைத்தான். பிறகு சொன்னான்.
   'பிரச்சனை வாய் பேச்சி அளவுல இருந்தா சரி." என்று.
   அறிவழகியிடம் திரும்பினான். 'அத்தை சீக்கிறமா கௌப்பி அனுப்புங்க. உங்க பொண்ண நானே கொண்டாந்து சேக்கறேன். போதுமா..? கோயிலுக்குப் போறோம். பொடவை கட்டி அனுப்புங்க. உங்க பொண்ணு இன்னும் சின்ன பாப்பா இல்ல."
   அதிகாரமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். எந்த நேரத்திலும் எப்படித்தான் சிலரால் அதிகாரமாகப் பேசமுடிகிறதோ..! ஒரு சமயம் இது தான் தைரியம் என்பதா? ஒருவர் தைரியசாளி என்பதால் அவர் குரல் எப்பொழுதுமே ஓங்கி ஒலிக்குமா..?
   யோசனையுடன் இருந்த மகளின் அழகுக்கு மேலும் மெருகூட்டி அனுப்பிவைத்தாள் அறிவழகி.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   குளத்தில் நிற்கும் ஒற்றைத் தாமரையாய் பிரம்புக் கூடையில் பொங்கல் பானை இருந்தது. அதைச் சுற்றி மாவிளக்கையும் தேங்காய் பூ பழம் வெற்றிலை பாக்கு இலை என்று ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே 'தம்பி.. பொங்க வச்சி மாவெளக்கும் செஞ்சாச்சி. கோயிலுக்குள்ள போலாமாப்பா..?" கமலா கேட்டாள்.
   யோசனையுடன் நின்றிருந்த சக்திவேல் 'நீங்க உள்ள போங்க. தோ வர்றேன்" சொல்லிவிட்டுப் பக்கத்தில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தப் பெண்ணிடம் வந்தான்.
   'உங்க வண்டியில தானே மீனா வந்துச்சி?"
   'ஆமாம்பா.. ஏன்..?"
   'எங்க அது?"
   'வண்டிய பாலத்துக்கு அந்தாண்டேயே வுட்டுட சொன்னாகப்பா. நாங்களும் நிறுத்திட்டு நடந்து வந்தோம். மீனா அந்தச் சின்னபசங்க கூடத்தான் இருந்துச்சி. எங்க இன்னும் காணாம்? நா.. பொங்க வைக்கணுன்னு அவசர அவசரமா வந்துட்டன்." யோசனையுடன் சொன்னாள் அவள்.
   சக்திவேல் திரும்பி கண்களைச் சுழலவிட்டான். சற்று தூரத்திலேயே வெற்றிவேல் அவன் குடும்பத்தார் அனைவரும் இருந்தார்கள். அவன் வீட்டு பெண்கள் கும்பலாக பொங்கல் வைத்து கொண்டு கலகலப்பாக இருந்தார்கள்.
   எதிரிகளைக் கண்ணுக்கெட்டிய தூரத்திலேயே வைத்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுது தான் பிரட்சனை பெரியதாக வராது!
   ஆனால் யார் எதிரி என்பதைத் தெரிந்திருக்க வேண்டுமே..! சக்திவேல் சற்றுக் குழம்பிப் பின் அருகிலிருந்த ஜீவானந்தத்தை அழைத்து அவன் காதில் எதையோ சொல்ல அவன் தலையாட்டிவிட்டுச் சென்றான். அவனை அடுத்து மாதவன் சேகர் சிவா சசி சரண் அனைவரும் ஒவ்வொரு பக்கமாகச் சென்றார்கள்!
   அடுத்த பத்தாவது நிமிடத்தில் சக்திவேலின் கைபோன் சிணுங்க எடுத்து பேசினான்.
   'மீனா பாலத்துக்கு பக்கத்துல சின்ன பசங்களோட வெளையாடிக்கினு இருக்குது." சரண் தகவல் சொன்னான். 'சரி நீ அங்கேயே இரு. நா வர்றேன்." என்றுச் சொன்னவன் தன் தாயிடம் திரும்பி 'அம்மா.. நீங்க எல்லாரும் கோயிலுக்குள்ள போங்க. நா ஒடனே வந்துடறேன்." என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திருக்காமல் நகர்ந்தான்.
 
   தன் ஈரோவோண்டாவை மீனாவின் பக்கத்தில் நிறுத்தினான்.
   'மீனா கோயிலுக்கு வந்திட்டு இங்க சின்னபசங்களோட வெளையாடுறியா..? வா போலாம்.." முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு சொன்னான்.
   'இல்ல. நா வரல." அவசரமாக மறுத்தாள்.
   'ஏன்..?"
   அவன் கேட்டதும் அவள் கைவிரலால் ஒர் இடத்தைச் சுட்டிக்காட்டினாள். அங்கே பாலத்தின் மறுமுனையில் ஆறுயானைகள்! ஒவ்வொறு பக்கமாக மூன்று மூன்றாக நின்றிருந்தன! அவனுக்குப் புரிந்தது.
   'சரி. தண்ணியில எறங்கி வரவேண்டியது தானே. ஆழம் ஒன்னும் அதிகமா இல்லையே..!"
   'ஆழமில்லத்தான். ஆனா பாம்பு இருக்குமாம். சொன்னாங்க. அப்படியே தண்ணியில எறங்கி தாண்டி போனாலும் வழியிலத்தான் யானைங்க இருக்குது. நா வரலப்பா! எனக்குப் பயமாயிருக்கு. நீங்கல்லாம் சாமிகும்பிட்டு திரும்பி இந்த வழியாத்தானே வரணும்? நா காத்துகினு இருக்கேன். நீங்க போங்க." என்றவளின் கண்களில் பயம் தெரிந்தது.
   பெண்கள் என்றால்.. பல்லி கரப்பான்பூச்சி போன்ற சின்ன சின்ன ஜந்துக்களுக்குத்தான் பயப்படுவார்கள் என்று இல்லாமல்.. யானை பாம்பு போன்றவற்றிர்க்கும் பயந்தால்.. பின்பு எதற்குத்தான் பயப்பட மாட்டார்கள்?
   ஒரு சமயம் ஆண்களுக்கு மட்டும் தான் பெண்கள் பயப்பட மாட்டார்களோ..? சக்திவேல் மனத்துள் சிரித்தது அவன் கண்களில் தெரிந்தது. மீனா அவனை யோசனையுடன் பார்த்தாள்.
   'மீனா.. வந்து வண்டியில ஏறு. நல்லா கண்ணை மூடிக்கோ! நான் அழைச்சிக்கினு போறேன். ம்.. வா" என்றழைத்தான்.
   மீனாவும் அதே போலத்தான் செய்தாள். ஆனால் கிளம்பிய வண்டி சற்று தூரத்திலேயே நின்றுவிட்டது. மனது பக் பக் கென்று அடிக்க மீனா கண்களைத் திறக்காமல் சக்திவேலை இறுக்கக் கட்டிபிடித்துக் கொண்டாள்.
   'டேய்.. யானைகள நகர்த்துங்க.." சக்திவேலின் குரலை யாரும் லட்சியப்படுத்தவில்லை. யானைகள் அவனை வழிமறைத்து நின்று கொண்டிருந்தன.
   சக்திவேல் தன் கைபோனை எடுத்து எண்களை அழுத்த மறுமுனையில் வெற்றிவேல் 'அலோ" என்றான்.
   'வெற்றிவேல்.. உன்னோட ஆளுங்க யானைய வச்சி என்ன வழிமறைக்கிறாங்க. நீ சொல்லி அவனுங்கள வழிவுட சொல்லு." என்றான்.
   'என்னோட ஆளுங்களா..? இருக்காதே.. நா அப்படி செய்யல. எனக்கும் அதுக்கும் சம்மந்தம் கெடையாது." என்றவன் குரலில் அதிக யோசனை இருந்தது.
   'நீ இல்லாட்டி பின்ன யாராம்..?"
   'எனக்குத் தெரியாது. ஆனா.. அந்த யானைங்கள தாண்டி உன்னால வரவா முடியாது?"
   ஒருவனின் பலம் அவனுடைய எதிரிக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கும்.
   'நா மட்டும்ன்னா இந்நேரம் வந்திருப்பேன். எங்கூட மீனா இருக்குது."
   'மீனாவா..?" வெற்றிவேல் திரும்பி வேந்தனைப் பார்த்தான். அவன் இன்று காலையில் வந்து அவனிடம் பேசியது ஞாபகத்தில் வந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக அவன் இவனிடம் பேசினான்.
   எப்பொழுதும் பேசுபவரைவிட எப்பொழுதாவது பேசினால் அதற்கு அதிக மதிப்பிருக்கும்.
   வெற்றிவேல் தன் கைபோனை வேந்தனிடம் நீட்டினான்.
   'உன்னோட ஆளுங்கள சக்திவேலுவுக்கு வழிவுட சொல்லு. மொதல்ல பூச முடியட்டும். பெறகு பாத்துக்கலாம்." என்றான்.
   வேந்தன் சற்று முறைப்புடனே போனை வாங்கி யாரிடமோ பேச.. சற்று நேரத்தில் யானைகள் சக்திவேலுவுக்கு வழிவிட்டன.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   பூஜைக்காக நின்றிருந்த நான்கு ஊர் பெரியமனிதர்களும் பார்க்கச் சக்திவேல் மீனாவின் கையைப் பிடித்து கோவிலுக்குள் அழைத்து வந்தான்.
   அவளைத் தன் தாயின் அருகில் நிறுத்திவிட்டு அவனும் அவளுடன் நின்று கொண்டான். எதிர்வரிசையில் நின்றிருந்த வெற்றிவேலுவும் வேந்தனும் மீனாவை வைத்தகண் வாங்காமல் பார்த்தார்கள்!
   ஐயரிடம் சக்திவேல் தன் பாக்கெட்டிலிருந்து சிறிய பெட்டியைக் கொடுத்து அவர் காதில் எதையோ கிசுகிசுத்தான். அவர் தலையாட்டிவிட்டு வாங்கிக்கொண்டு போனார். மீனா நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை. அவளின் பார்வை கவனம் முழுவதும் அம்மனுக்குப் படையலிட வைத்திருந்தப் பொங்கல் கூடையில் இருந்தது.
   காரணம் வெற்றிவேலுவின் பக்கம் கூடையில் இருந்த மாவிலக்கின் தீபம் காற்றால் நன்றாக ஆடி சட்டென்று நின்றுவிட்டது.
   இதைக் கவலையுடன் பார்த்து கொண்டிருந்த மீனா உடனே சென்று திரியை எடுத்து சக்திவேல் வீட்டுக்கூடையில் எறிந்த தீபத்தில் காட்டி தீபமேற்றி அது இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்து காற்று திரும்பவும் அதை அணைத்து விடாதவாறு திருப்பி ஓரமாக வைத்தாள்.
   இந்தச் செய்கையை அனைவருமே பார்த்தார்கள். ஆனால் கமலா தான் திட்டினாள்.
   'ஏய் மீனா.. நீ சும்மா இருக்க மாட்ட? அவுக வூட்டு தீபம் அணைஞ்சாக்கா ஒனக்கென்ன?"
   'அவுங்க வீட்டுதா இருந்தா என்னவாம்? அங்க நம்ம கண்மணிதான் வாழப்போறா..?"
   வெற்றிவேலின் முகத்தில் புன்னகை பூத்தது.
   சக்திவேலுவின் கைபோன் சிணுங்க அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போய் பட்டனை அழுத்தினான். எதிர் முனையில் ஒரு பெண் குரல்!
   'யாரு..? சத்திவேலா..?"
   'ஆமா.. சொல்லு."
   'உங்க ஊருல மீனான்னு ஒரு பொண்ணு இருக்காளாம். அவள இன்னைக்கி கோயில் பூச முடிஞ்சதும் வெற்றிவேல் அவனோட ஆளுங்கள வச்சி கடத்தபோறதா பேச்சி அடிப்படுது. பாத்து நடந்துகோங்க."
    தொடர்பு உடனே அறுந்தது. சக்திவேல் யோசனையுடன் மீனா இருந்த இடத்தை பார்த்தான். அவள் அங்கே இல்லை!
   சற்று தூரத்தில் கோவில் மணியடிக்கும் ஒரு முதியவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
   சக்திவேல் அருகில் இருந்த மாதவனிடம் 'அம்மனுக்கு படையல் முடிஞ்சதும் நம்மூர் காரங்கள ஒடனே ஊருக்கு கௌம்பசொல்லு. கொஞ்ச நேரம் கூட தாமதிக்ககூடாது. எல்லாருக்கும் ஒடனே தெரியபடுத்து." என்றான். மாதவன் யோசனையுடன் தலையாட்டிவிட்டு சென்றான்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   பூஜை முடிந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். கோவில் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டு நின்றிருந்த மீனாவிடம் வெற்றிவேல் வந்தான்.
   'மீனா.. குங்குமம் வச்சிக்கோ." உள்ளங்கையில் இருந்த குங்குமத்தை அவளிடம் நீட்டினான்.
   'வேண்டாம் வெற்றிவேல். எனக்குச் சாமி கும்புடுற பழக்கமே கெடையாது. நமக்கு ஏதாவது தேவைன்னு கேட்டுச் சாமி கும்புடுறதும்.. கெடைச்சா.. சாமிதான் தந்ததுன்றதும்.. கெடைக்கலன்னா நமக்கு அதிஷ்டமில்லன்னு சொல்லுறதும்.. எனக்குப் புடிக்கல வெற்றிவேல்." என்றாள்.
   'ஒனக்குப் புடிக்கலன்னாலும் பரவாயில்ல. எனக்காக வச்சிக்கோ."
   'வேண்டாம் வெற்றிவேல். நம்பிக்கயில்லாம வச்சா அதுக்கு மதிப்பு போயிடும்." அவள் மறுத்தாள்.
   'ஏன்..? என்ன அந்நிய ஆம்பளையா நெனைக்கிறியா..?"
   அவன் தன்னை வேண்டுமென்றே வம்பிற்கு இழப்பது புரிந்தது.
   'அப்படி பாத்தா ஐயரும் அந்நிய ஆம்பளத்தானே..! என்ன இப்படி பேசுறீங்க?" முகத்தில் சிரிப்பை வரவழித்தாள்.
   அதற்குள் அங்கே வந்த சக்திவேல் தன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியிலிட்டான்!
   'மீனா.. ஒனக்கு வேணும்ன்னா சாமி நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு நெறைய இருக்குது." என்றவன் 'வா.. போலாம்." என்று சொல்லிக் கொண்டே அவளின் கையைப்பிடித்து அழைத்து கொண்டு சென்றான்.
   வெற்றிவேல் கோபத்துடன் பற்களைக் கடித்தான்.
   வெளியே வந்ததும் அவன் அம்மா இருந்த காரில் ஏறச் சொன்னான். அவளும் உடனே ஏறிக்கொண்டாள். இன்னும் இரண்டு பெண்கள் ஏறக் கார் புறப்பட்டது.
   கொஞ்சம் தூரம் தான் சென்றிருக்கும். அதற்குள் காரின் எதிரில் ஒருவன் வந்து நின்றான். இன்னொருவன் மீனா இருந்த கதவு பக்கமாக வந்து 'மீனா ஒங்கிட்ட வெற்றிவேல் ஐயா பேசணுமாம். வரச் சொல்லி சொல்ல சொன்னார்." என்றான்.
   மீனா என்ன செய்வது என்றறியாமல் சக்திவேலுவின் தாயைப் பார்த்தாள். அவர் காந்தாரியைப் போலக் கண்களை கட்டிக் கொள்ளா விட்டாலும் கண்களை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டாள். மீனா திருதிருவென விழித்தாள். அவளுக்குக் கோவிலில் வேந்தனைப் பார்த்ததிலிருந்து உள்ளம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
   அதற்குள் சக்திவேல் அங்கே வந்தது மனத்துக்குச் சற்று ஆறுதல் அளித்தது. அங்கே இருந்தவன் மீனாவிடம் சொன்னதையே சக்திவேலிடம் சொன்னான்.
   'சரி. நீ போ. மீனா வருவா." அவனை அனுப்பிவிட்டு கார் கதவைத்திறந்து 'இறங்கி போய்ப் பேசு மீனா" என்றான்.

                               (தொடரும்)

9 comments :

  1. மனம் என்னவெல்லாம் நினைக்கிறது...

    /// துப்பிய வார்த்தைகளை ஒரு பொழுதும் விழுங்கிவிட முடியாது தானே..! இனிக் கவலை பட்டு என்ன பயன்? வேண்டுமானால் மன்னிப்பு கேக்கலாம். ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?

    மனிதர்கள் தவறு செய்வது சகஜம் தானே! அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்டுவிட்டால்.. செய்த தவறு இல்லை என்று ஆகிவிடுமா..? இல்லையே..! மன்னிப்பு என்பதால் மறக்கலாம். அவ்வளவு தான்! ///

    பகிர்வுக்கு நன்றி… தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      Delete
  2. கதை அருமையாகப் போகிறது. வாழ்த்துக்கள் உள்ளமே. ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோவொரு எதிர்பார்ப்புடனேயே நகர்கிறது. நன்றி.
    எனது தளத்தில்:
    http://newsigaram.blogspot.com/2012/08/ulagaalivu-02.html

    ReplyDelete
  3. சிறப்பாக நகர்த்திச் செல்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க ஐயா.

      Delete
  4. வணக்கம் சொந்தமே!!மன்னிப்பதும் மன்னிப்பு கொடுப்பதும் சலபம்.மறப்பது மிகக்கடினம்.அருமையாக தொடாடகிறது.வாழ்த்துக்கள் சொந்தமே!

    பி.கு.சிறியவள் உன் கருத்தில் தவறிருப்பின் பொறுத்தருள்க.கதை அருமை.சற்று பதிவு நீளமாகிவிட்டதோ எனத்தோன்றுகிறது சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிசயா.

      நீங்கள் சொன்னது போல் கதையின் நீளத்தைக் குறைக்கிறேன்.
      நன்றிங்க.

      Delete