Tuesday, 28 August 2012

போகப் போகத் தெரியும் - 22



       மீனா சக்திவேலின் அலுவலக அறையில் அவன் எதிரில் அமர்ந்திருந்தாள். அவர்களுடன் எப்பொழுதும் போல் ஆறு நண்பர்களும்!
   அந்த மோதிர நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து இன்று தான் அவள் சக்திவேலுவைப் பார்க்கிறாள்! இதுவும் அவன் ஆளைவிட்டு அவளை அழைத்திருந்தான். எதற்காகக் கூப்பிட்டிருப்பான்? அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள்.
   'மீனா.. ப்ளஸ்டூல்ல ப்பஸ்ட் கிளாசுல பாஸ்பண்ணி இருக்கே. கங்கிராஜிலேஷன்! மேல என்ன படிக்கபோற?"
   சக்திவேல் ஏதோ தாள்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
   'எனக்கு அக்ரிகல்சர் படிக்கணும்ன்னு ஆச." என்றாள்.
   'மீனா.. அதெல்லாம் நமக்கு அனுபவத்திலேயே வரும். தவர அதுக்கின்னே நிறையப் பேர் இருக்காங்க. நீ வாங்கியிருக்க மார்க்குக்கு கம்பியுட்டர் சென்சு இல்லன்னா இம்பெர்மேஷன் டெக்னாலேஜின்னு இருக்கிற புதுசா ஏதாவது கோர்ஸ் எடுத்துப் படியேன்.."
   'ம்.. படிக்கலாம் தான்! ஆனா ஏர்பிடிப்பவனெல்லாம் எழுத்தாணி பிடிக்கப் போய்விட்டால் சோறு போடுபவன் யாருன்னு ஒரு கவிதை படிச்சேன். அதுல எந்த அளவு உண்மை இருக்குதுன்னு யோசிக்க வேண்டாமா..?"
   'நல்ல யோசனத்தான்! ஆனா உலகம் எவ்வளவோ மாறிடுச்சி. மாற்றங்கள் வேண்டாம்ன்னு ஒவ்வொரு மனுஷனும் நெனச்சாலும் உலகம் இன்னைக்கி முன்னேற்ற பாதையிலத் தான் போயிக்கினு இருக்குது என்பதை நாம ஏத்துக்கினு தான் ஆகணும்! பழைமையைத்தான் நாம புதுமையான கோணங்கள்ல கையாலுறோம். நம்மோட இன்றைய புதுமைகள் நளைய சந்ததியினருக்கு பழைமையாத்தான் மாறப்போவுது. அதனால நாம எப்போதும் புதுமையைத்தான் விரும்பணும் மீனா.." என்றான்.
   மீனா அவன் பேச்சை உன்னிப்பாகக் கேட்டாள். அதிலும் உண்மை ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.
   'சரி. உங்க விருப்பம் போல படிக்கிறேன்."
   'படிப்பை யார் மேலேயும் திணிக்க முடியாது. நீயா விரும்பி படிக்கணும்."
   'சரி. நான் கம்பியுட்டர் சைன்சு எடுத்துக்கிறேன்."
   'குட். இதுதான் கரேக்ட்! மீனா ஒனக்குக் காலேஜுல அட்மிஷன் வாங்கிட்டுப் பக்கத்துல இருக்கிற லேடீஸ் ஆஸ்டல்ல சேத்து விடுறேன். நீ லீவுக்கு வந்தால் மட்டும் போதும்." என்றான்.
   'என்ன லீவுக்கு மட்டுமா..? நா மாட்டேன். எனக்கு ஆஸ்டலே வேணாம். பஸ்சுலே காலேஜுக்குப் போயிட்டு வந்திடுறேன். என்ன போவ ஒருமணி நேரம். வர்ற ஒரு மணிநேரம். அவ்வளவு தான்." என்றாள் அவசரமாக!
   'ஏன்? என்ன காரணம்?"
   'காரணம்.. .. எதுக்கு வீண் செலவு? அதான்."
   'செலவபத்தி நீ கவலப்படாத. வேற காரணம் இருந்தா சொல்லு."
   அவன் அதிகாரமாகச் சொல்ல மீனா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பிறகு திரும்பித் தன் நண்பர்களைப் பார்த்தாள். எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
   'ம்.. சொல்லு." சக்திவேல் அவசரப் படுத்தினான்.
   'வந்து.. வந்து.. உண்மைய சொல்லட்டுமா..? பொய் சொல்லட்டுமா..?"
   மெதுவாகக் கேட்டவளை நிமிர்ந்து நோக்கினான். வந்த சிரிப்பை அடக்கினான்.
   'உண்மைய சொல்லு."
   'ஆஸ்டல்ல தங்கி படிச்சா.. ரூம் மெட்ஸ் இருப்பாங்க. ஒழுங்கா படிக்கமுடியாது."
   'சரி. இப்போ உண்மைய சொல்லு."
   'இதான் உண்ம!"
   'இது பொய்! எனக்குத் தெரியும். போன வருஷம் நீ ஆஸ்டல்ல தங்கிகினே.. வேல வேற செஞ்சிகினே.. படிச்சி பஸ்ட் கிளாசுல பாஸ் பண்ணியிருக்கே. நிச்சயமா இது காரணம் இல்ல. அதனாலத் தான் கேக்குறேன். உண்மைய சொல்லு." என்றான்.
   'சொல்லவா..?"
   'சொல்லு."
   'எனக்கு இனிமே ஒரு நாள் கூட உங்கள பாக்காம இருக்க முடியாது. இது தான் உண்ம. போதுமா..?" என்றாள் அழுத்தமாக!
   அங்கே அமைதி நிலவியது. யாரும் எதுவும் பேசாததால் நிமிர்ந்து சக்திவேலுவைப் பார்த்தாள். அவன் தன் முகத்தில் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் காட்டவில்லை! எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்கமுடியும்? தான் இப்படி சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லையோ.. அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
   'மீனா.. இப்போ ஒனக்குப் படிக்கிற வயசு. வீணா மனச அலைபாயவிடாத. ஆஸ்டல்ல தங்கிக்கினு படிச்சிக்கினே வீக்கெண்டுக்கு வந்தா போதும்." என்றான் மிக சாதாரணமாக!
   மீனா கவலையாக எழுந்தாள். அவன் மனத்தில் தன்னைப்பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லையோ.. .. என்ற குழப்பம் மனத்தை அரித்தது.
   'சரி சக்திவேல். ரொம்ப நன்றி! ஆனா.. இந்தக் கடனையெல்லாம் உங்களுக்கு எப்போ எப்படித் தரப் போறேனோ.. தெரியலை." என்றாள் கவலையுடன்.
   தன்னுடையவன் இல்லை என்றால் அவனுடையதை அவனிடமே திருப்பித் தந்து விடுவது தானே முறை!
   'என்ன..? கடன திருப்பித்தரப்போறியா..? ஏற்கனவே எனக்குக் கொடுக்கிறேன்னு சொன்ன பரிசையே இன்னும் நீ எனக்கு தரல! அது என்ன காசா? பணமா..?"
   அவன் அப்படி சொன்னதும் இவளின் முகம் சட்டென்று வெட்கத்தால் சிவந்தது. சற்று முன்பிருந்த கவலை தோய்ந்த துடிப்பு இப்பொழுது மறைந்து விட்டிருந்தது. மனம் சட்டென்று இலேசாகிவிட்டது போன்ற உணர்வு!
   'பொய் சொல்லி ஜெயிச்சவருக்குப் பரிசு கெடைக்காது." சொல்லிவிட்டு நகரப்போனவளை
   'அம்மணி ஒரு நிமிஷம் இருங்க. யார் பொய் சொன்னது? சக்திவேல் ஜெயிக்கணும்ன்னு சொன்னது நீங்க. அதே மாதிரி சக்திவேல் ஜெயிச்சாச்சி. பரிசைக் கொடுக்க வேண்டியது தானே..?"
   அவன் நாற்காலியை விட்டு எழுந்தான்.
   'அண்ணா.. நாங்க அப்புறம் வர்றோம்.." என்று சொல்லி நகரப்போன சேகரைக் கண்களால் தடுத்தான்.
   மீனாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வெட்கமாக இருந்தது. நண்பர்களின் மத்தியில் இப்படியா பேசுவது?
   'என்ன பதிலையே காணோம்..?"
   'ம்.. இல்லாத சின்னதம்பிய வேணும்ன்னா கூட்டிக்கினு வாங்க. அவருக்கு வேணா.."
   அதற்கு மேல் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. வெட்கம் அவளைப் பிடுங்கி தின்றது. ;களுக்" கென்று சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள்.
   அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து அங்கே எல்லோரும் சிரித்துக்கொண்டார்கள்.
   இப்படியே வாழ்க்கை சந்தோஷத்துடனே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அமைதியான கடலைப் போல!
   கடல் அமைதியாக இருக்கும் வரையில் அழகு தான்! மனத்திற்கு அதைப் பார்க்க ஆறுதல் தான்! ஆனால் அதன் கோபமுகத்தைக் காட்டினால் தானே அதில் இருக்கும் ஆபத்து நமக்கு புரியும்?
   எந்த ஆபத்திலும் தன் வாழ்க்கை கப்பலை தைரியமாக கரை சேர்க்கிறவன் தானே சிறந்த மாலுமி! அமைதியான கடலால் சிறந்த மாலுமியை உருவாக்க முடியாது தானே..
   இதோ இங்கே சிறந்த மாலுமி யார்?
   சக்திவேலா..?
   வெற்றிவேலா..? வேந்தனா..? இல்லை.. வேறு ஒருத்தரா..?
   இங்கே அனைவரும் தன் கப்பலைச் சூராவளிக் கடலில் கூட நன்றாகத்தான் ஓட்டி செல்கிறார்கள்!
   ஆனால்.. கடலில் விழுந்து தத்தளிக்கப் போறவள் மீனா தானே..!

                          (தொடரும்)

4 comments :

  1. தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. கதை விரு விருப்பாக போகிறது. தொடருங்கள்.

    ReplyDelete