Wednesday 27 March 2013

போகப் போகத் தெரியும் - 45





   கடிகாரம் அதிகாலை நான்கரை மணிக்குக் குயில் போல் கூவியது. கணவனின் அரவணைப்பில் படுத்திருந்த மீனா.. அவன் கையை மெதுவாக விலக்கிவிட்டு எழப்போனாள். ஆனால் முடியவில்லை! சக்திவேலுவின் முரட்டு கை மீண்டும் அவளை இழுத்து உடம்போடு சேர்த்து அணைத்தது.
   'ஐயோ.. என்ன இது? விடுங்க. மணி நாலரை ஆவுது. நா இப்பவே கீழப் போனால் தான் நல்லது. இல்லன்னா யார் கண்ணுலயாவது மாட்டிக்குவேன்." என்றாள் சிணுங்களாக. அவளுக்கும் அவனை விட்டு போக மனம் இல்லை தான். ஆனால் போய்தானே ஆக வேண்டும்!
   இந்த ஒரு வாரமாக.. அவனுடைய(?) ஆசைக்காக நடு ஜாமத்தில் எழுந்து வந்து அதிகலையில் திரும்பவும் தன்னறைக்கே போய் படுத்து விடுவதால் யார் கண்களிலும் படாமல் பிரச்சனை இல்லாமல் இருந்தாள்.
   ஆனால் ஒவ்வொரு நாளும் அவனிடம் சின்னதாகச் சண்டைப் போட்டு விட்டுதான் வர வேண்டி இருந்தது. இன்றும் அப்படித்தான்! அவளை விட அவனுக்கு மனம் இல்லை. ஆனால் போக வேண்டுமே..!
   'இதோ பாருங்க.. நீங்க இந்த மாதிரியே நடந்துகிறதா இருந்தா நாளையில இருந்து நா வரமாட்டேன்." கோபத்தை வார்த்தையில் காட்டினாள்.
   'ஏய்.. நாம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கிறத நம்மோட எதிரிங்க பாத்தக்கூடத் தப்பா சொல்ல மாட்டாங்க. நீ என்னன்னா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறியே.."
   'ஆமா. எதிரிங்க பாத்தா தப்பா நெனைக்க மாட்டாங்க. ஆனா உங்க அம்மா பாத்துட்டா அவ்வளவு தான். நா போறன் பா."
   அவன் கையை நகர்த்திவிட்டு எழுந்து கீழே கிடந்த புடவை ஜாக்கெட்டை உடுத்தினாள். அவனைப் பார்த்தாள். அவள் உடுத்துவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் இவளை பொய் கோபத்துடன் முறைத்துவிட்டு 'சீ.. போடி" என்று சொல்லிக் குப்புறப் படுத்துக் கொண்டான். மீனா சிரித்து கொண்டே மாடியை விட்டு கீழிறங்கினாள்.
   எதிரில் அகிலாண்டேசுவரி அம்மாள்! இவளை எரித்து விடுவது போல் பார்த்தாள்!
   மீனா.. இதைக் கொஞ்சமும் எதிர் பார்த்திருக்கவில்லை! பயமும் வெட்கமும் மாறிமாறி வந்தாலும் பயமே ஜெயித்தது. சட்டென்று தனதறைக்குள் புகுந்து கொண்டாள். ஆனால் பின்னாலேயே அந்த அம்மாளும் வருவாள் என்று நினைக்கவில்லை.
   'என்னோட வார்த்தைக்கு நீ தர்ற மறியாத இதானா..?" காலை வேலையிலும் குரல் கடுமையாகத் தான் இருந்தது.
   'அது.. வந்து.. உங்கபுள்ள..தான்.." வார்த்தைகளைத் தேடினாள்.
   'ஆம்பளைங்கன்னா.. அப்படித் தான் அவசரக் காரங்களா இருப்பாங்க. பொண்ணுங்க நாம தான் பெரியவங்க பேச்சிக்கி கட்டுபட்டு அடங்கி நடக்கணும். இத்தன நாளா நீ ஊருல இல்லாம நா நிம்மதியா இருந்தேன். இப்போ தொல்ல தொடங்கிடுச்சி. வந்ததே வந்த. இன்னும் நாலு மாசம் கழிச்சி வந்திருக்கக் கூடாது? "
   மீனா தலைகுனிந்து நின்றிருந்தாள். கோபமாகப் பேசியவள் என்ன நினைத்தாளோ..? அவளருகில் வந்தாள்.
   'ஏய் மீனா.. இங்க பாரு." திரும்பி இருந்தவளை தன் பக்கமாகத் திருப்பினாள். 'தோ பாரு மீனா.. நா ஒங்க ரெண்டு பேரோட நன்மைக்கி தான் சொல்றேன். நாளைக்கே ஏதாவது பொம்பள டாக்டர பாத்து கர்ப்பத்தட மாத்தர வாங்கி சாப்பிடு. இந்த மாதிரி மாத்தரையெல்லாம் சாட்டு ஒடம்ப கெடுத்துக்க கூடாதுன்னு தான் நா தோஷம் முடிஞ்சதும் கல்யாணத்த வக்கலாம்ன்னு சொல்லிட்டு இருந்தேன். ஆனா விதி யார விட்டது? ம்.. இனிமேல நீ கொஞ்சம் ஜாக்கரதையா நடந்துக்கோ. என்ன நா சொல்றது புரியுதா..?"
   மீனா தலையாட்டினாள். அதுவரைக்கும் ஏதோ இந்த அளவுக்கு பொறுமையாகப் பேசினாங்களே..! அவர் சொன்னதை யோசித்தாள். என்ன தோஷமாக இருக்கும்? அதுக்கு இவங்க எதுக்கு இவ்வளவு பயப்படணும்? ஏற்கனவே பட்டு இருக்கிறாங்க. அனுபவசாளி. அதனால தான் இவ்வளவு ஜாக்கிறதை! இவ்வளவு பயம் அதன் மேல்!!
   ஜோதிடம் சில நேரங்களில் சில மனிதர்களை நம்பிக்கையடையச் செய்வதைவிட அடிமை படுத்திவிடுகிறது. இந்த அடிமைத்தனம் சிலரைத் திருப்தியடையச் செய்வதுடன் பயப்படவும் வைக்கிறது.
   மீனாவிற்கு இப்பொழுது இந்தப் பயம் தொத்திக் கொண்டது. மாமியார் நமது நன்மைக்குத்தானே சொல்கிறாள்! ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது. அதைத் தடுக்க இது ஒரு முயற்சி போலும். நாளைக்கே டாக்டரிடம் அப்பாய்மண்ட் வாங்க வேண்டும். முடிவெடுத்தாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   தட்டில் குட்டிக் குட்டி நிலவுகளாக மூன்று இட்டிலிகளை வைத்து அதனருகில் புதினா சட்டினியையும் வெங்காயச் சட்டினியையும் ஊற்றிவிட்டுக் கணவனின் எதிரில் அமர்ந்தாள். தட்டினுள் தேசியக் கொடியின் வண்ணத்தில் சிரித்தது.
   ஆரஞ்சு வெள்ளை பச்சை நிறங்கள். இன்னும் சற்று நேரத்தில் வயிற்றுக்குள் போய் எல்லாம் கலந்துவிடும்! அதனதன் குணத்திற்கு ஒவ்வொரு நிறங்கள்! ஒவ்வொரு வடிவங்கள்! ஒவ்வொரு சுவைகள்! இப்படி தனித்தனியாக மாறுபாடாக படைக்கப் பட்டிருந்தாலும் கடைசியில் அனைத்தும் ஒன்றாகக் கலந்து மடிந்து மக்கிப் போகிறது. மனிதர்களைப் போலவே..!
   அதற்காகப் பிறக்காமலேயே  இருந்து விடுவதில்லையே.. பிறந்து விட்டால் விதியின் கால்களில் மதியைப் படுக்க வைத்து விடுவதும்.. கடைசி வரை அதன் கால்களைப் பிடித்துக் கொண்டே வாழ்ந்தாகவும் வேண்டும். இது தான் உலக நியதி. இதில் மாற்றத்தை யாராலும் செய்ய முடியாது. இப்படி வாழ்வதற்குப் பிறக்காமலேயே இருந்து விடலாம்!
   'என்ன மீனா.. தட்ட பாத்து யோசனைப் பண்ணுற..? புதுசா ஏதாவது கண்டுபிடிக்க போறியா..?"
   'புதுசா இல்லைங்க. எல்லாம் பழசு தான். காலையில நா மாடியிலேர்ந்து வந்தப்போ உங்கம்மா பாத்துட்டாங்க."
   'பாத்துட்டாங்களா..? அப்பா.. ரொம்ப நல்லதா போச்சி. இனிமேல நீ மறஞ்சி மறஞ்சி நடு ஜாமத்துல வரவேண்டியது இல்லை." திருப்தியாகச் சொன்னான்.
   'ம்.. ஆசத்தான் உங்களுக்கு. அவுங்க திட்டினாங்க. இனிமே மேல போவக்கூடாதுன்னு சொன்னாங்க. "
   'இன்னாது..?"
   'ஆமா.. டாக்டர் கிட்ட போயி கருத்தட மாத்தர வாங்கி சாப்ட சொன்னாங்க. இன்னம் நாலு மாசம் தான் அப்புறம் உங்க இஷ்டம் போல இருங்கன்னாங்க."
   'ஓ.. மாத்தர சாப்ட சொன்னாங்களா..? அப்புறம் எதுக்கு விரதம்? அப்பாய்மெண்ட் வாங்கு. நானும் ஒங்கூட வர்றேன்."
   தட்டிலேயே கையலம்பிவிட்டு எழுந்து போனான்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   அப்பொழுது போனவன் தான். இருட்டினப் பிறகு வந்தான். அவன் தலையில் பெரிய கட்டு! தோள்பட்டையில் பெரிய பேண்டேஜ்! மீனா பதறிவிட்டாள்.
   அவன் சிறிய விபத்து நடந்துவிட்டது என்று சொன்னாலும் அவளால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் ஊரில் இருந்த நிறைய ஆண்கள் வந்துவிட்டார்கள்!
   ஆனால் வந்தவர்கள் அவனை எந்தக் கேள்வியையும் கேட்காமல் இருந்தது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
   தொலைபேசி கூப்பிட்டது. அவள் எடுக்கப்போவதற்குள் அவன் சட்டென்று பாய்ந்து தடுத்தான். மீனா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். அவன் தன் பாக்கெட்டிலிருந்தப் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டி..

  'நா கலையில வெளியப் போவக்குள்ள சாஸ்திரி பணம் கேட்டாரு. வந்து தர்றேன்னு சொன்னேன். பாவம். என்ன அவசரமோ.. நீ போய் இந்தப் பணத்த குடுத்திட்டு.. பார்வதி அம்மா ஒங்கிட்ட என்னமோ பேசணுமாம்.. அதையும் என்னன்னு கேட்டுக்கினு வா.." என்றான்.
   'இவ்வளவு பேர் இருக்காங்க இல்ல? அவங்கள்ல ஒருத்தர அனுப்புங்களேன்."
   'பார்வதியம்மா ஒங்கிட்ட தான் பேசணுமாம்.. போ.." என்றான்.
   அவனை யோசனையுடன் பார்த்தபடி பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினாள்!
   அவள் போனதும் அலறிக்கொண்டிருந்த போனை எடுத்துக் காதில்  வைத்தான். எதிர்முனையில் தேனப்பன்!!
   'நீ தான்னு நெனச்சேன்! ஒனக்கு அறிவிருக்குதா..? நீயெல்லாம் உண்மையான ஆம்பளையா..? துர்.. ஏன்யா..? ஆளா அனுப்புற? அதுவும் பின்னாடி இருந்து அடிக்கச்சொல்லி? போ. போயி.. அவனுங்கள ஆஸ்பத்திரியில பாரு. குத்துயிரும் கொலைவுயிருமா இருப்பானுங்க. டேய்ய்.. நீ உண்மையான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேரா வா.. நீயா..? நானான்னு பாத்துக்கலாம்."
   'வர்றேன்டா.. வர்றேன். நாளை காலையில சரியா பத்து மணிக்கெல்லாம் வர்றேன். உன்னோட ஊருக்கே வந்து உன்னையும் அந்தப் பசங்களையும் ஒம்பொண்டாட்டியையும் கொலப் பண்ணி போட்டாத்தான் என்னோட மனசு ஆறும். காலையில சுடுகாடு போவ தயாரா இரு."
   'வாய்யா..வா.. சுடுகாட்டுக்கு யார் போறான்னு நாளைக்கி தெரிஞ்சிடும் வா.."
   அவன் பேசிக் கொண்டிருக்கும் போழுதே 'அண்ணே.. மீனா வருது." சேகர் சொல்லச் சட்டென்று தொலைபேசியை அதனிடத்தில் வைத்தான். கோபத்தில் மூச்சிரைத்தது. அதே கோபத்துடன் கேட்டான்.
   'நா என்ன சொன்னன்? நீ ஏன் இவ்ளோ சீக்கிரம் வந்த..?" மீனா அவனை விநோதமாகப் பார்த்தாள்.
   'கொஞ்சம் தூரம் போனேன். சாஸ்திரியே எதுருல வந்தாரு. பணத்த குடுத்துட்டு உங்க வீட்டுக்குத்தான் போறேன்னு சொன்னேன். அவர் பார்வதி காலையில பொறந்த வீட்டுக்கு போயிருக்கான்னு சொன்னார். அதான் திரும்பி வந்துட்டேன். ஏன்..? என்ன விசயத்த எங்கிட்ட மறைக்கப் பாக்குறீங்க?"
   சந்தேகத்துடன் கேட்க.. அதே சமயம் தொலைபேசி அழைக்க.. சட்டென்று எடுத்து பேசிய சேகர் ரிசிவரை மீனாவிடம் நீட்டினான்.
   வாங்கி பேசியவள்  ;நாளை காலை ஒன்பதரை மணிக்கு அப்பாய்ட்மெண்ட் ; என்பதைக்  குறித்து கொண்டு திரும்பினாள்.
   ஆனால்.. அங்கே இருந்த ஆண்கள் அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர்! ஏமாற்றமாகத் தன் மாமியாரைப் பார்த்தாள்.
   'நான் படிச்சிப் படிச்சி சொன்னேன். நீ அவங்கிட்ட நெருங்காதன்னு. இப்போ பாத்தியா..? யார் அனுபவிக்கிறாங்கன்னு.. ஏய் தோ பாரு. ஊருல எந்தப் பிரச்சன வந்தாலும் சரி. நீ போயி டாக்டர பாத்து நா சொன்னபடி செய்யி." என்றார் மாமியார் கோபமாக.
   எதற்காகவோ.. எதைஎதையோ.. சேர்த்து முடித்துப் போட்டுப் பேசியது போல் இருந்தது. குழப்பத்துடன் 'சரி" என்று தலையசைத்தாள்.

                           (தொடரும்)

1 comment :

  1. தொடர்கதையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது சரி, நீங்களே படங்களும் வரைகிறீர்களா?

    ReplyDelete