Tuesday, 15 January 2013

போகப் போகத் தெரியும் - 34
  
   பூமியில் செயற்கையாய்த் தோன்றிய நட்சத்திரங்கள்; வழி நெடுகிலும் மிசாரக் கம்பியில் தொங்கும் பாதரசப் பூக்களாகப் பளிச்சிட்டது.
   மீனா யோசனையுடன் முன்னே நடந்தவனைப் பின் தொடர்ந்தாள். அவன் ஒரு முறை திருவிழாவில் சக்திவேல் துரத்தி மீனாவால் காப்பாற்ற பட்ட வேந்தனின் கையாள் தான் அவன்!
   எதிரியின் ஆளாக இருந்தாலும் அவளைப் பார்த்ததும் அவன் முகத்தில் தெரிந்த பயம்.. வார்த்தையில் தெரிந்த பரபரப்பு.. நடையில் தெரிந்த வேகம்.. ஏதோ காரணம் இருக்கிறது என்று உள் மனது சொல்ல அவனை அவள் பின் தொடர்ந்தாள்.
   அவன் தெருமுனையில் திரும்பி ஓர் ஒதுக்குப் புறமாக நின்றான். அவளும் அவன் எதிரில் நின்றாள்.
   'மீனாம்மா.. நீ எதுக்கு அந்த வீட்டுக்கு வந்த?"
   'ஏங் கேக்குற..?"
   'காரணமாத்தான்! பதுல சொல்லு மொதல்ல."
   'அந்த வீட்டுல ஒரு பெரியவர் இருக்காரு. அவருக்கு ஆக்ஸீடண்டு ஆயிடுச்சாம். அவர கவனிச்சிக்க என்ன பணிப் பெண்ணா நியமிச்சிறுக்காரு டாக்டர்."
   அவன் கண்களில் அதிர்ச்சி! யோசித்தவன் தன் சட்டைப் பையில் கைவிட்டு எடுத்த பணத்தை மீனாவின் கையைப் பிடித்துத் திணித்தான்.
   'மீனாம்மா.. நா ஒன்னோட நன்மக்கித்தான் சொல்றேன். இந்த பணத்த வச்சிக்கினு மொதல்ல பஸ்ச புடிச்சி ஊரு போய் சேறு." என்றான். மீனா புரியாதவளாக அவனை முறைத்தாள்.
   'எதுக்கு என்ன தொறத்துற?"
   'காரணமாத்தான். பெரியவர்ன்னு சொன்னீயே.. அந்த ஆளுக்கு மட்டும் நீதான் மீனான்னு தெரிஞ்சா.. ஒடனே ஒன்ன சாவடிச்சிடுவாரு."
   மீனா அதிர்ச்சியாகக் கண்கள் அகல அவனைப் பார்த்தாள்!
   'என்ன சொல்லுற நீ? எதுக்காக என்ன அவர் சாகடிக்க நெனைக்கணும்? எனக்கும் அவருக்கும் அப்டி என்ன விரோதம் இருக்குது?" மீனா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
   'மீனாம்மா.. நெசம்மா நா அவ்ளோ சொல்லியும் ஒனக்கு அவுரு யாருன்னு தெரிலையா..?"
   'இல்ல."
   'அவுரு தான் தேனப்பன். வெற்றிவேல் வேந்தன் லச்சுமணன் இவங்களோட அப்பாரு".
   மீனா யோசனையுடன் தலையாட்டினாள். 'ஓ.. அப்படியா..? அது இருக்கட்டும். ஆனா எதுக்காக அவரு என்ன சாகடிக்க நெனைக்கணும்?"
   'இன்னா நீ.. ஒன்னும் தெரியாதவ மாதிரி பேசற? ஒன்னாலத்தான அவரோட புள்ளி செத்தான். இன்னொறு புள்ள ஜெயில இருக்கான். பின்ன.. உன்ன சும்மாவுடுவாரா..?"
   இந்த வார்த்தைகள் அவள் தலையில் ஓங்கி அடித்தது போல் இருந்தது. முகமெல்லாம் வியர்வைப் பூக்கள் பூக்க.. திருமணத்தன்று நடந்ததை கண்ணுக்கு முன் கொண்டு வந்தாள். லட்சுமனன் இரத்த வெல்லத்தில் கிடந்தது ஞாபகத்திற்கு வந்தது. வேந்தன் சிறையில் இருப்பதாக ரத்தினம் சொன்னது காதில் ஒலித்தது.
   அப்படியானால் லட்சுமணன் இறந்துவிட்டானா..? அதற்கெல்லாம் காரணம் நானா..? கடவுளே.. ஓர் உயிர் போக நான் காரணமாகி விட்டேனா..? எதற்காக இப்படி ஒரு சோதனையை எனக்குக் கொடுத்தாய்..?
   அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் எதிரில் நின்றிருந்தவனையும் கலங்க வைத்தது. இவள் மனத்தில் அவன் பேரில் இவ்வளவு ஆசை இருந்திருக்கிறதா..? ஐயோ.. இது அவருக்குத் தெரியாமலேயே போய் விட்டதே.. தெரிந்திருந்தால் சாகும் பொழுதாவது நிம்மதியாகச் செத்திருப்பாரே..
   அழுத மனம் அடுத்தவருக்கு ஆறுதல் சொல்லத் துடித்தது.
   'மீனாம்மா.. அழுவாத. ஐயா ஒம்மேல கொள்ள ஆச வச்சிருந்தாரு. கடெசில இப்டி ஆயிடுச்சி. அவுரு இருந்த வரைக்கும் நாங்களும் ராசாவூட்டு கன்னுகுட்டியாட்டம் இருந்தோம். இப்போ.. பெரியய்யா காலப்புடிச்சிக்கினு காலத்த ஓட்ட வேண்டியது தான்."
   அவன் பேச்சு மீனாவைக் குழப்பியது! என்ன சொல்கிறான் இவன்? உண்மையில் என்ன நடந்தது?
   'இதோ பாருங்க.. அன்னைக்கி என்னத்தான் நடந்துச்சி? எங்கிட்ட யாருமே.. எதையுமே சொல்லல. தயவுசெஞ்சி உண்மைய சொல்லுங்க."
   குரலில் அழுகையின் சாயல் இருந்தது. அங்கே போனவர்கள் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு போனது மேலும் வேதனையைத் தந்தது.
   'ஒனக்கு உம்ம தெரியாது தான். யாரும் சொல்லி இருக்க மாட்டானுங்க. நா சொல்றேன்;. அன்னிக்கி நடந்த கலவரத்துல வேந்தன கொல செஞ்சிட்டான் சத்திவேல். பழி லச்சுமணன் மேல விழுந்துட்டதால லச்சுமணன் ஜெயில இருக்கார். அது மட்டுமில்ல. விபத்துல கை போயிடுச்சின்னு இருக்காரே தேனப்பன்.. அவரோட கையி வெபத்துல போகல. சத்திவேலுத்தான் அவரோட கைய வெட்டிபுட்டான்."
   அவன் நிதானமாகச் சொல்ல.. மீனா கண்கள் அகலத்திறந்து.. வாயில் கைவைத்தபடி நின்றுவிட்டாள்.
   வேந்தன் இறந்துவிட்டான்! அவனை கொலை செய்தது சக்திவேல்!
   சக்திவேல் செய்த கொலைக்குத் தண்டனை அனுபவிப்பது லட்சுமணன்!
   தேனப்பன் கையை வெட்டியது சக்திவேல்!
   ஏன் இதெல்லாம் நடந்தது.? எதற்காக நடந்தது? யோசனையுடன் தேனப்பன் தங்கியிருந்த வீட்டை நோக்கி நடந்தாள். கூட இருந்தவன் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை!!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   சக்திவேல் வீட்டு அலுவலக அறை! அமர்ந்திருந்த சக்திவேலைச் சுற்றி ஐந்து நண்பர்கள்! சிவா இன்னும் மருத்துவமனையிலிருந்து வரவில்லை. ஒவ்வொரும் யோசனையில் இருந்தாலும்.. அதில் கோபமும் அதிகமாகத் தான் இருந்தது.
   'சத்திவேல்.. நீ மீனாகிட்ட என்ன சொன்ன? என்னத்தான் நடந்துச்சி..? அவ எதுக்காக சேகர்கிட்ட இப்டி சொல்லி அழணும்?" ஜீவா உரிமையுடன் கேட்டான்.
   'எனக்கு தெரியும். அவ இந்த வீட்டுக்கு வந்தாலே மூட்அவுட் ஆயிடுறா.. முந்தா நாள் ராத்திரி ஒன்வீட்டுல தான் தங்கினா.. பாம்புக்குப் பயந்து ஆஸ்டல்லேயே தங்கிக்கிறேன்னாலும் பரவாயில்ல. அதுவுமில்ல. காலையிலேயே டெலிபோன் பண்ணி காரணம் எதுவும் சொல்லாம இனிமே நான் அந்த ஊருக்கே வரமாட்டேன்னு ஏன் சொல்லணும்? அதுவும் அழுதுகினே சொன்னா.. என்னமோ நடந்திருக்க. ஒனக்குத் தெரியாம இருக்காது. என்னன்னு சொல்லு." சக்திவேலுவைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் சேகர்.
   சக்திவேல் யோசித்ததில் அன்று நடந்த அனைத்தும் ஞாபகத்தில் வந்து போனது. அனைத்தும் சந்தோசமான நிகழ்ச்சிகள் தான். அவளும் அனைத்தையும் சந்தோசமாகத்தான் எடுத்துக் கொண்டாள். பிறகு எதற்காக இப்படி பேச வேண்டும்?
   'சொல்லு. அன்னைக்கி என்ன நடந்துச்சி?"
   'எனக்கும் ஒன்னும் புரியலை சேகர். ஆஸ்டல் ரூமையும் காலி பண்ணிட்டாளாம். இப்போத்தான் அவளோட ரூம்மெட் டெலிபோன் பண்ணினாள். நைட்டெல்லாம் அழுதுக்கினே இருந்தாளாம். நேத்து டாக்டர் பார்த்தசாரதியோட எங்கேயோ போனாளாம். விசாரிச்சிதுல ப்யூன் சொன்னான். எங்க போனா..? என்ன ஆச்சி? ஒன்னுமே எனக்கும் புரியல."
   தலையை அழுத்தமாகக் கைகளால் பிடித்துக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்தான். கைபோன் அலரியது. எடுத்துப் பார்த்தான். பெயரில்லாத அழைப்பு! ஒரு சமயம் மீனாவாக இருக்குமோ..? இருக்கலாம். யோசனையுடன் எட்போனைக் காதில் மாட்டிக் கொண்டு அனைவருக்கும் கேட்கும்படி பட்டனை அழுத்திவிட்டு 'அலோ" என்றான்.
   அவன் யூகம் சரியாகத்தான் இருந்தது எதிர்முனையில் மீனா தான்!
   'என்ன மீனா.. எப்படி இருக்கே..?" சாதாரணமாகக் கேட்டான்.
   'நா இருக்கிறது இருக்கட்டும். நீ ஏன் இப்டி மிருகம் மாதிரி நடந்துக்கினே..?" வார்த்தைகள் ஒருமையில் ஒலித்ததால் மதிப்பிழக்கச் செய்தது.
   'ஏன்.. நா என்ன செஞ்சேன்..?" நண்பர்களைப் பார்த்தபடி கேட்டான். ஒரு சமயம் அன்றிரவு அவளைக் கட்டியணைத்தது அவளுக்கு பிடிக்கவில்லையோ..!
   'சக்திவேல்.. அன்னைக்கி வேந்தன் எனக்குத் தாலி கட்டினாலும் நானே அவன விட்டெரிஞ்சிட்டு வந்திருப்பேன். ஆனா நீயும் ஒன்னோட ஊர்காரங்களும் வந்ததால இப்போ எவ்ளோ பிரச்சனைங்க வந்திருக்குன்னு பாருங்க..? உன்னால ஒரு உயிரே போய் இருக்குது. சிவா தலையில அடிபட்டு இருக்குது. நான் தடுத்திருக்காட்டா.. வெற்றிவேல் குத்துவெளக்குல வுழுந்திருப்பாரு. உன்ன அந்த வேந்தன் கத்தியால குத்தியிருப்பான். இவ்வளவு முடிஞ்ச பெறகும்.. நீ என் வேந்தனோட அப்பா.. தேனப்பன் கைய வெட்டுன?"
   கோபத்தில் மூச்சிறைத்தது அவளுக்கு!
   'மீனா.. சண்டையில வேந்தன் செத்துட்டான். அதுக்காக லட்சுமணன் ஜெயில் இருக்கான். வேந்தன் செத்ததுக்குக் காரணம் நாங்க கெடையாது. ஆனா தேனப்பன் நான் தான் காரணம்ன்னு சொல்லி தனியா இருந்த சிவாவையும் கணேசனையும் தாக்கி இருக்கான். அவன சும்மாவா வுட சொல்லுற? அன்னைக்கி நான் அவனோட கழுத்த வெட்ட வேண்டியது.. கைய மட்டும் வெட்டுனேன்னு சந்தோஷப்பட்டுக்கோ." பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான்.
   'ஓ.. ரொம்ப சந்தோஷம் தான். வேந்தன குத்தினது வெற்றிவேல். அது எனக்கு தெரியும். எதுக்காக லட்சுமணன் ஜெயிலுக்கு போவணும்?"
   யோசித்துப் பார்த்ததில் தான் கத்தி குத்து பட்டிருக்கும் பொழுது வேந்தனின் முதுகுப்பின்னால் வெற்றிவேல் கையிலிருந்த குத்துவிளக்கால் குத்தியது ஞாபகத்தில் வந்தது. அதனால் தான் கேட்டாள்.
   'மீனா.. அது அவுங்க ஊர் பிரச்சனை. அதுல நாம தலையிடக்கூடாது. லட்சுமணனை எப்படியாவது வெளிய கொண்டாந்துடுவான் வெற்றிவேல். நீயும் இது பத்தி யார்கிட்டேயும் பேசாத. ஆமா.. இதெல்லாம் யார் ஒனக்குச் சொன்னாங்க..?"
   'யாரோ சொன்னாங்க. ஒனக்கு என்ன? எனக்கு உண்ம தெரியாமலேயே போயிடும்ன்ன நெனச்சியா..?" கோபம் வார்த்தையில் கொப்பளித்தது.
   'சரி. ஏதோ நடந்தது நடந்து போச்சி. நீ இப்ப எங்க இருக்கிற? ஆஸ்டல் ரூமைக் கூட க்காலிபண்ணிட்டியாம்..! ஏன்..?"
   'ஏனா..? இனிமேல ஓந்தயவு எனக்கு வேணாம். இவ்வளவு நாளா நீ செஞ்ச உதவிக்கி ரொம்ப நன்றி. இனிமேல நானு.. நீ எனக்காக செஞ்ச பாவத்துக் கெல்லாம் பிராயசித்தம் தேடப் போறேன். எப்படீன்னு பாக்குறியா..? நீ கைய வெட்டுனியே அந்த தேனப்பன்! அவருக்குத்தான் பணிப் பெண்ணா பணிவிடச் செய்யப் போறேன். அவருக்கு என்ன யார்ன்னு தெரியாது. அவரே தெரிஞ்சிக்கும் போது தெரிஞ்சிக்கட்டும். அப்போத்தான் என்னோட மனசு அமைதியாவும்."
   சக்திவேல் உடனே மறுத்தான்.
  'வேணாம் மீனா.. ஒனக்காகத்தான் இவ்வளவு பெரிய பிரச்சனை யெல்லாம் நடந்துச்சி. நீ மட்டும் யார்ன்னு தேனப்பனுக்குத் தெரிஞ்சா.. சும்மா வுடமாட்டான்."
   'எனக்காக நடந்த பாவங்கள் இது! நானே அவரோட பாதங்களக் கழுவிப் பாவமன்னிப்புக் கேக்கறேன். என்னை யார்ன்னு தெரிஞ்சிக்கும் போது.. முடிஞ்சா பாவமன்னிப்பு குடுக்கட்டும். இல்லன்னா என்ன வெட்டி அவரோட மன பாரத்த கொறச்சிக்கட்டும். எனக்கு எது நடந்தாலும் சந்தோஷம் தான். ஆனா.. ஒன்னே ஒன்னு சக்திவேல்.. நீ மட்டும் எந்த காரணத்துக் காகவும் எனக்காக பேச வரக் கூடாது. நீ மட்டுமில்ல. உன்னோட ஊர்க்காரங்க யாருமே எனக்காக வரக்கூடாது. மீனா ஒரு தனி மனுஷி. அனாதை! அவளுக்கு எதுவானாலும் அது அவளோட போவட்டும்ன்னு நீங்க எல்லாரும் நெனச்சிக்கணும். இதுல நீங்க யாருமே தலையிடக் கூடாது. என்னால இனிமேலும் யாரையுமே இழக்க முடியாது."
   சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள். இவர்கள் ஒருவர் முகத்தை ஒருவராக வேதனையுடன் பார்த்துக் கொண்டார்கள்

                             (தொடரும்)

No comments :

Post a Comment