Wednesday 9 January 2013

போகப் போகத் தெரியும் - 33





   வெட்கம் சில நேரங்களில் பேச முடிந்தவர்களையும் ஊமையாக்கி விடுகிறது!                          
   ஒரு சில நிமிடங்கள் தான் கடந்திருக்கும்! மீனாவின் ;வீல் ; என்ற அலறல் சத்தம் சக்திவேல் மட்டுமல்ல அனைவருமே ஓடினார்கள். மீனா தெருவில் இறங்கியவள் சக்திவேலுவை இறுக்கப்பிடித்துக் கொண்டாள்.
   'மீனா.. என்ன ஆச்சி..? என்னன்னு சொல்லு..?" சக்திவேல் அதட்ட அவள் பதில் சொல்லாமல் ஒரு விரலை உயர்த்தி மாடியைக் காட்டினாள். அவள் உடல் நடுங்கியது.
   'மாடியில என்ன?"
   'பா.. பாம்பு."
   'பாம்பா? என்ன வுடு. நா போய்ப் பாக்குறேன்."
   'வேணா. நீங்க போவ வேணாம். எனக்குப் பயமா இருக்கு."
   'என்ன விடுன்னு சொல்றேன்னில்ல." அவன் அவளைச் சற்று அழுத்தி விலக்கிவிட்டு உள்ளே போனான். போனவன் ஒரு குட்டிப் பாம்பை அதிலும் செத்து போய் இருந்ததை ஒரு குச்சியில் பிடித்து தூக்கிக் கொண்டு வந்தான்.
   தெருவில் போட்டான். அழுகிப் போனப் புடலங்காய் பிஞ்சி போல வளைந்து நச்சென்று விழுந்தது அது. மீனா அதைப் பார்த்ததும் அருவருப்பு கலந்த பயத்துடன் சக்திவேலின் கையை இறுக்கப் பிடித்து கொண்டாள்.
   'பறவ ஏதாவது தூக்கிக்கினு வந்து போட்டிருக்கும்.." கணேசனின் தாத்தா சொன்னார்.
   'என்ன..? பாம்ப பறவ தூக்கினு வந்து போடுமா..?" அவளுக்குப் பயத்தில் முகம் வியர்த்தது.
   'வரவர ஊரக்குள்ள பாம்பு தொல்ல அதிகமாயிடுச்சி. காரணம் தான் தெரியல. சக்திவேல்  யோசனையுடன் சொன்னான்.
   'பாம்புக் குட்டி போட்டிருக்கும். இதுக்கு வேற யாரு காரணமா இருக்க முடியும்?" மீனா சொன்னாள்.
   'ஆமா.. ஒரு யானைக்கி பயந்தேன்னு ஆறு யானைகளைக் கொண்டாந்து நிறுத்திட்டானுங்க. ஆனா இப்ப எத்தன பாம்புகள விட்டானுங்களோ..?"
   சக்திவேல் சொல்ல மீனா மிரண்டவளாக அவன் மேல் கையைத் தனது இரண்டு கைகளாலும் இறுக்கினாள்.
   'அதுவரைக்கும் நல்லது தான் சக்திவேல். இல்லன்னா மீனா ஒன்ன இப்டி கட்டி புடிப்பாளா..?"
   கணேசன் சொன்னதும் அங்கே கூடியிருந்த அனைவரும் சிரித்தார்கள்.  மீனா அவனை விட்டு; விலகினாள். முகம் செந்தாமரையாகச் சிவந்தது.
   'ஏ கெழவி.. பாம்ப பாத்தா நீ பயப்பட மாட்டியா..?"
   கணேசனின் பாட்டியை வம்பிற்கிழுத்தாள். பாம்பு என்றால் அனைவருக்குமே பயம் தானே!
   'பாம்ப பாத்துப் பயந்து போயித்தான் அவளே என்ன கட்டிப்புடிச்சா.." தாத்தா குழந்தை வாயுடன் சிரித்துக் கொண்டே சொன்னார்.
   'அப்ப.. இந்த ஊருல எல்லா பொண்ணுங்களும் பாம்ப பாத்துத்தான் ஆம்பளைங்கள கட்டிபுடிப்பாங்களா..?" மீனா வெகுளியாகக் கேட்க..
   'ஐயே.. நாங்க ஒன்னும் இந்த மாதிரி சின்ன பாம்ப பாத்து ஆம்பளைங்களக் கட்டிப்புடிக்கல." என்றாள் அங்கிருந்த ஒருத்தி.
   'நானும் இந்த மாதிரி சின்ன பாம்பைச் சொல்லலை."
   மீனா சிரித்துக் கொண்டே சொல்ல.. 'அடிக் கழுதை" என்றபடி முதலில் பேசியவள் மீனாவைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   தொடமுடியாத இருட்டை வர்ணமாகப் பூசியிருந்தது ஊர்! சாப்பிட்டு விட்டு  பாயில் அமர்ந்திருந்தாள் மீனா. விளக்கு எறிந்து கொண்டிருந்தது. கையில் இருந்த புத்தகத்தில் மனம் அடிமையாகாமல் அதை அசட்டைச் செய்தது. மூடிவிட்டு படுத்துக் கண்களை மூடினாள்.
   மூடிய இமைக்குள் பாம்பு ஒன்று வந்து படமெடுத்தாடியது. சட்டென்று கண்களைத் திறந்தாள். ஏதோ கால் பக்கத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து போவது போன்ற உணர்வு! அதிர்ச்சியுடன் காலை நகர்த்தினாள். அவளின் பாவாடை விளிம்பு அது!
   பெருமூச்சு விட்டாள். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே.. ஒரு பாம்பைப் பார்த்துப் பயந்து இருந்தாலும் சக்திவேல் சொன்னது தான் அடிக்கடி காதில் வந்து விழுந்து பயமுறுத்தியது.
   பயம் என்பது ஒவ்வொருவருடனே கூடவே இருக்கும் நிழலைப் போன்றது தான். புத்திசாலி தன் நிழுலைப் பார்த்துச் சந்தோஷப்படுவான். காரணம் நிழல் என்று ஒன்று வழுந்தால் எங்கோ ஒளி இருக்கிறது என்று உணர்ந்து கொள்வான். ஆனால் கோழைகள் நிழலே விழாமலிருக்க இருட்டுக்குள் போய் நின்று கொண்டு மேலும் பயப்படுவான்.
   இதோ மீனாவும் இன்று கோழையாகத்தான் மனத்தை இருட்டாக்கி வைத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவழகி தன் அண்ணனைப் பார்க்கச் சென்று விட்டாள். தனியாக விடப்பட்ட மீனா விளக்கிருந்தும் அதனடியில் விழும் இருட்டில் வெளிச்சத்தைத் தேடினாள்.
   இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது. முடிவெடுத்ததும் விளக்கை அணைத்துவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டு ஒரே ஓட்டமாகச் சக்திவேல் வீட்டை நோக்கி ஓடினாள்.
   அகிலாண்டேசுவரி அம்மாள் முன் நின்ற பொழுது மூச்சு வாங்கியது. 'எனக்குப் பாம்புன்னா பயம்! இன்னிக்கி ராத்திரி மட்டும் இங்க தங்கிக்கிறேன். நாளையிலர்ந்து ஆஸ்டல்லயே தங்கிக்கிறேன். உங்க பர்மிஷன் வேணும்." என்றாள்.
   'ம்" என்ற ஒரு முணங்கள் தான் வந்தது. ;சரி ; என்ற வார்த்தைக்குப் பதிலாக.
   மீனா நிம்மதியாக மூச்சைவிட்டாள். அங்கிருந்து பக்கத்து அறைக்கு வந்தாள். சக்திவேல் தன்னையே பார்த்துக் கொண்டு சாப்பிடுவதைக் கவனித்தும் கவனிக்காதவள் போல அறைக்குள் சென்றாள்.
   மீனா கையிலிருந்த புத்தகத்தில் மனத்தைப் புகுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். முடியவில்லை. தான் நடந்து கொள்வது சரியா? தவறா? என்று  தெரியவில்லை. இந்த வீட்டிற்கு வர அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? சக்திவேலிடம் பழக என்ன அறுகதை இருக்கிறது? காலையில் பாம்பைப் பார்த்துச் சக்திவேலைப் பிடித்துக்கொண்டது நினைவுக்கு வந்ததும் மனம் கூசியது. பயத்தில் தப்பு செய்து விட்டோமோ..?
   ஊர்காரர்கள் அனைவரும் தன்னிடம் அன்பாகத்தான் நடந்து கொள்கிறார்கள். தான் செய்தது தவறு என்றால் அதில் ஒருத்தராவது கண்டித்து இருக்கமாட்டார்கள்?
   புரியவில்லை. குழப்பத்துடன் இருந்தவளின் முன் சக்திவேல் வந்து நிற்க மேலும் குழம்பியவளாகப் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து நின்றாள். எதற்காக வந்திருப்பார்? அவள் இந்த வீட்டில் தங்கியிருந்த வரையில் ஒரு நாள் கூட அவள் இருந்த அறைக்கு அவன் வந்ததில்லை.
   'மீனா.. அந்த வீட்டுல பாம்பு வரும்ன்னு தானே இங்க வந்த? ஏன்.. இங்க மட்டும் பாம்பு வராதா..?"
   மீனாவின் கண்களில் திரும்பவும் பயம்!
   'பயமா இருந்தா சொல்லு. நா வேணுமின்னா உங்கூடவே ஒன்னோட தொனைக்கி ஒம்பக்கத்துலேயே படுத்துக்கிறேன்." என்றான் குறும்புச் சிரிப்புடன்.
   அவன் சொன்னது சிரிக்கத் தூண்டினாலும்.. அவள் சிரிக்கவில்லை. பக்கத்து அறையில் தான் அகிலாண்டேசுவரி அம்மாள் இருக்கிறாள். மனது எச்சரித்தது.
   'ஐயோ.. நீங்க மொதல்ல வெளியே போங்க. உங்க அம்மா பாத்தாங்கன்னா.. என்ன பார்வையாலேயே சாம்பலாக்கிடுவாங்க." என்றாள் பதட்டத்துடன்.
   'நீ என்ன பாக்காததாலேயே நா சாம்பலாயிடுறேனே.. இது ஒனக்கு தெரியலயா மீனா..?" அவன் திடிரென்று பார்வையிலும் குரலிலும் கெஞ்சளுடனும் கொஞ்சளுடனும் அவள் அருகில் வர.. மீனா நகர்ந்தாள்.
   'சக்திவேல்.. தயவு செஞ்சி போயிடுங்க. யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்க."
   'நெனைச்சா நெனச்சிக்கட்டும்" என்றான். அவன் குரலில் காதல் போதை ததும்பி வழிந்தது.
   'அப்போ.. நா போறேன்.." சொல்லிவிட்டு நகர்ந்தவளைச் சட்டென்று இழுத்து அணைத்தான். உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.
   மீனா மதிமயங்கிப் போய் நின்றுவிட்டாள்! உணர்ச்சியின் வேகம் எதில் துவங்கி எதில் போய் முடிவது..?
   அவள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனம் சந்தோஷப் படுகிறதா..? வேதனை அடைகிறதா..? எது என்று சொல்முடியாத உணர்ச்சி!
   எத்தனையோ முறை அவள் அவனைத் தொட்டிருந்தாலும்.. இன்று நடந்த இந்த மாதிரியான உணர்வு மாற்றத்தை அவள் அனுபவித்தது இல்லை. அவன் கைகளை விலக்க முயன்றவள் தோற்றாள். அவன் மேலும் இறுக்க நகரமுடியாமல் தவித்தாள்.
   என்ன செய்வதென்று அறியாமல் அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவன் உதடுகளால் இவள் உதட்டைத் தேடினான்.
   சில நொடிகள் தான் சென்றிருக்கும்!
   'மீனாட்சி.. .."
   அகிலாண்டேசுவரியின் குரல் அறையின் மூலையெங்கும் சென்று எதிரொலித்தது. சட்டென்று இருவரும் விலகினார்கள்.
   கண்களில் அனல் பறக்க நின்றிருந்த தாயைக் கவனிக்காதவன் போல் சக்திவேல் அங்கிருந்து நழுவிவிட்டான்.
   மீனா.. மழையில் நனைந்த புறாவாய்.. பயம் ஒரு புறம்.. வெட்கம் ஒரு புறம்.. கூனிக் குறுகிப் போய் விட்டாள்!
   'மீனா.. நீ என்னோட அறையில பாயக் கொண்டாந்து போட்டு படு." அவள் கட்டளையிட இவள் தலையாட்டினாள்.


  --------------------------------------------------------------

   ;சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது ; என்ற வாக்கியம் மனிதருக்காக எழுதப்பட்டது என்றால் அது இவருக்குத் தான் பொருந்தும் என்று நினைத்து கொண்டாள் மீனா.
   மனிதனுக்கு உடல் வலிமையை விட மனவலிமைத் தான் வேண்டும். அது இருந்துவிட்டால் அவன் வெல்ல நினைத்த அனைத்தையும் வென்றுவிடுவான்.
   டாக்டர் பார்த்தசாரதி  'அந்த ஆளு கொஞ்சம் முன் கோபக் காரர். கிராமத்து ஆளு. ஏற்கனவே ஒரு விபத்துல ஒரு காலை இழந்துட்டார். இப்போ ஒரு கை. ஆனா தன்னம்பிக்கையை இழக்கல. நான் தான் காயம் ஆறினதும் செயற்கை கை பொறுத்தலாம்ன்னு சொல்லி இங்கேயே தங்கச் சொல்லி இருக்கேன். வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருக்கார். பொண்டாட்டி இருக்கறாங்க. வேலக்காரங்க நிறைய பேர் கூடவே இருப்பாங்க. ஆனா யாருமே படிக்காதவங்க. அவர கவனிச்சிக்கனும்மின்னா ரொம்ப பொறுமை அவசியம். அதனால தான் நான் உன்னைச் செலட் பண்ணேன். ஒன்னும் அதிகம் கெடையாது. டைமுக்கு மருந்து குடுத்து பல்ஸ் பாத்து எழுதிவச்சா போதும். மத்த வேலையெல்லாம் அவரோட வேலக்காரங்க கவனிச்சிக்குவாங்க.
   நீ காலேஜிக்குப் போயிக்கினே.. அவர் வீட்டுல தங்கிக்கினு வேலைய பாத்துக்கலாம். அவர் இங்க இருக்கிற ரெண்டு மூனு மாசத்துக்கு உன்னால உதவியா இருக்க முடியும்ன்னா.. இன்னையிலிருந்தே வேலையைத் தொடங்கிடலாம்" என்றார்.
   மீனா 'சரி டாக்டர்" என்றதும் அவளை அந்த ஓட்டு வீட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் 'உங்களுக்கு உதவியா இருக்கப் போற பொண்ணு இவங்க தான். பேரு மீனாச்சி." என்று அறிமுகப் படுத்தினார்.
   அவர் சரி என்றோ.. வேண்டாம் என்றோ.. சொல்லவில்லை. மீனா டாக்டரைப் பார்த்தாள். 'இது தான் இவரோட சுபாவம். ஜாக்கரதையா நடந்துக்கோ." என்றார்  மீனா அவரை யோசனையுடன் பார்த்தாள். அவர் மனசுல எதுவோ.. நீருபூத்த நெருப்பா கழன்று கொண்டு வெளியே தெரியாத மனத்தின் வலியோட ஊமை நாடகமாகத் தெரிந்தார்!
   டாக்டர் சொன்ன மருந்துகளைச் சரியாகக் குறித்துக் கொண்டு அவரை வெளிவாசல் வரையில் வந்து வழி அனுப்பி வைத்தாள். அப்பொழுது தான் ஒருவன் வீட்டினுள் நுழைந்தான். அவன் கண்களில் பயம் கலந்த ஆச்சர்யம்!
   'ஏய்.. நீ மீனா தான..? இங்க எதுக்கு வந்த..?" அதிர்ச்சியுடன் கத்தியக் குரலுக்குறியவனை விளக்கு வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தாள். இவன்.. இவன்.. அந்த வேந்தனுடைய ஆளாயிற்றே..
   முகத்தில் சட்டென்று வியர்வை பூக்க.. அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்!
   அவன் 'மீனா.. எதையும் பேசாத. என்னோட பின்னால தெரு மொனைக்கி வா.." சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி நடந்தான். மீனா யோசனையுடன் அவன் பின்னால் நடந்தாள்!

                               (தொடரும்)

2 comments :

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கடந்த வாரம் துவங்கி, இன்றோடு அனைத்து பாகங்களையும் படித்துவிட்டேன்.
    இனி நீங்கள் பதிவேற்றும் வரைக் காத்திருக்க வேண்டும்.
    உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினருக்கும் இனிதான பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete