Wednesday, 28 March 2012

போகப் போகத் தெரியும் - 4தொடர்கதை பாகம் -4

   
    அழுது கொண்டிருந்த சிறுவனைச் சமாதானப் படுத்தத் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த கணேசனைக் கை தட்டிக் கூப்பிட்டாள் மீனா.
    'அலோ... தத்துவஞானி....உங்களைத்தான்... இங்க கொஞ்சம் வாங்களேன்......’
    அந்த உயரமான ஒல்லியான தேகத்தை உடைய கணேசன் தனக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தான். யாருமில்லை!
    'அலோ... உங்களைத் தான். " மீனா திரும்பவும் அவனைப் பார்த்துக் கூப்பிட்டதும் தன்னைத்தான் கூப்பிடுகிறாள் என்று தெரிந்ததும் அவளைப் பார்த்து முறைத்தவாறு அவளருகில் வந்தான்.
    'நீங்கத்தானே லா படிக்கிறவர்?"
    'அது இருக்கட்டும். நீ மொதல்ல என்னை என்னன்னு சொல்லிக்  கூப்பிட்ட?"
'ஏன்? தத்துவஞானின்னு."
'நான் சொன்னேனா......? என்னைத் தத்துவஞானின்னு?"
    'தத்துவஞானிகள் யாரும் தன்னைத் தத்துவஞானின்னு சொல்லிக்கிறதில்லை. மற்றவர்கள் சொன்னால் தான் உண்டு."
'அப்படி என்ன தத்துவம் சொன்னேன்?"
    'நேத்து அந்த ராமு கிட்ட என்ன சொன்னீங்க? சட்டங்கள் மக்களால உருவாக்கப்பட்டன. அதற்கு ஏழை எளியவர் என்ற பாகுபாடு கிடையாதுன்னு சொன்னீங்களா இல்லையா?"
'ஆமாம் சொன்னேன். இதுல என்ன தத்துவம் இருக்குது?"
    'சட்டம் ஒர் இருட்டரை. அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு. அது ஏழைக்கு எட்டாத விளக்குன்னு அறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். அந்த தத்துவத்தையே நீங்க மாத்தி சொல்லிட்டீங்களே..... அதனாலத் தான் நான் உங்கள தத்துவஞானின்னு சொன்னேன்."
'உண்மையைச் சொன்னால் அது தத்துவமாகிடுமா.......?"
    'உண்மையைக் கூட சொல்லுறவங்க சொல்லுற விதமா சொன்னால் தான் அது மக்களைப் போய் அடைய முடியும். மக்களை யோசிக்கத் தூண்டச் செய்யும் ஒவ்வொரு வாரத்தைகளுமே தத்துவங்கள் தான்."
    அவன் அவள் வார்த்தைக்குப் பதில் பேச முடியாமல் சிரித்துக் கொண்டான். உண்மையை எதிர்த்து வாதாட முடியாது.
'சரிசரி. இப்போ எதுக்கு என்னை கூப்பிட்ட...?"
    'நீங்க சட்டம் படிக்கிறவர். நீங்களே சொல்லுங்க. ஒரு பத்து வயசு பையனை ஜெயில்ல போட முடியும்ன்னு எந்த சட்டமாவது சொல்லுதா..?"
    'அப்படி எந்த சட்டமும் சொல்லலை. ஆனால் தன்னுடையத் தந்தையின் பேச்சிக்கு கீழ் படிஞ்சி நடக்கணுமின்னு எல்லா வேத நூல்களும் சொல்லுதே!"
    'தவறான செயல்களுக்குப் பயத்தினால் வேண்டுமானால் கீழ் படியலாம். ஆனால் நல்லவர்கள் உண்மைக்கும் அன்புக்கும் நல்லவைகளுக்கும் மட்டும் தான் கீழ் படிவார்கள் இல்லையா....?"
'ஆமாம்"
    'அப்போ வேத நூல்கள் சிறுப்பிள்ளைகளைப் பயமுறுத்துகிறதா....?"
    நிதானமாகக் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டாள்.
அவன் அவள் கேள்வியைச் சிரித்துக் கொண்டே சிந்தித்தான்.
    'டேய் ரவி. நீ போய் விளையாடுடா. தப்பு செய்யிறவங்க தனியாவே செஞ்சிக்கட்டும். நீ தொனப் போவாத...."
ரவி தலையாட்டி விட்டு ஓடினான்.
    மீனா கையிலிருந்த புத்தகத்தை உயரே தூக்கிப்  போட்டுப் பிடித்துத் திரும்பவும் அதே போல் செய்து கொண்டே நடந்தாள். இது அவளுடைய வழக்கம். கையில் எந்தப்பொருள் இருந்தாலும் இப்படித்தான் தூக்கிப் போட்டு பிடித்தபடி நடப்பாள்.
'மீனா...." கணேசன் கூப்பிட்டான்.
    'என்ன தத்துவஞானி?" கேட்டுக் கொண்டே அங்கே இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தாள். நேற்று காலில் பட்ட காயம் வலித்தது. அந்த வீட்டெதிரில் அன்று பார்த்த மோட்டார் பைக் நின்றிருந்தது.
    'மீனா யோசிச்சிப் பாத்தா நீ சொன்னது உண்மைத்தான். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது மீனா." என்றான் சினேகிதமாக.
    மீனா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். எல்லா ஆண்களுமே இப்படித்தானா...? ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்துத்தான் பெண்களிடம் பேசுவார்களா....? இலேசாகக் கோபம் வந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது.
    'இதோ பாருங்க.... இதோட நிறுத்திக்கோங்க. அதுக்கு மேலே எதையும் சொல்லிடாதீங்க....." சிரித்துக் கொண்டே சொன்னாள்.
'அதுக்கு மேலேயா....அப்படீன்னா...?" புரியாமல் கேட்டான்.
    'ஏதாவது காதல் கீதல்ன்னு....." அவள் இழுத்தாள். அவன் புரிந்துக் கொண்டு அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்தான்.
    'ஏன் சொல்லக் கூடாதா....? சொன்னா எதுவும் தப்பில்லையே.......?"
    'தப்பில்லைத் தான். ஆனால் நான் வேற ஒருத்தர காதலிக்கிறேனே......" மிகச் சாதாரணமாகச் சொன்னாள்.
    'என்ன.... நீ காதலிக்கிறியா.....? அப்படிப் பட்ட அதிஷ்டக்காரன் யார்?" கிசுகிசுப்பாகக் கேட்டான். காதல் ஒரு கிசுகிசுத்தானே!
'சக்திவேல்" அவள் சத்தமாகச் சொன்னாள்.
    'என்ன சக்திவேலா.....? நம்ம ஊர் சக்திவேலா....?" அவனின் கண்களிலும் குரலிலும் ஆச்சர்யம்!
'ஆமாம். நம்ம ஊர் சக்திவேலேத்தான்."
'அதுக்கு அவர் சம்மதிச்சிட்டாரா.....?"
'தெரியாது."
'தெரியாதா....? பிறகெப்படி....?"
'இனி மேலத்தான் என் காதலை அவர்கிட்ட சொல்லப் போறேன்."
    அவன் அவளை யோசனையுடன் பார்த்தான்.
'மீனா நீ அவரைப் பாத்து இருக்கியா...?"
    'பாத்ததுமில்ல. பேசினதுமில்ல. இனிமேலத் தான் பாத்துப் பேசணும்."
    'ரொம்ப நல்லதா போச்சி. மீனா எங்கிட்ட சொன்ன மாதிறி யார்கிட்டேயும் இப்படி ஒளறிடாத."
'ஏன்.....?"
'சக்திவேலப்பத்தி உனக்கு என்ன தெரியும்...?"
    'ரொம்ப நல்லவர். ஊரோட நல்லதுக்காக உண்மையான மனசோட உழைக்கிறவர். படிக்கிறார்ன்னு அம்மா சொன்னாங்க."
    'இவ்வளவு சொன்னாங்களே..... அவருக்கு வயசு என்னன்னு சொன்னாங்களா...?"
    'ஏன்.....? எம் ஏ கடைசி வருஷம். இருவத்தஞ்சிக் குள்ளத் தான் இருக்கும்."
'அதான் இல்ல. அவருக்கு வயசு முப்பத்திரெண்டு."
'என்ன.....? எப்படி.... பெயிலாயி பெயிலாயி படிச்சாறா.....?"
அவன் வந்த சிரிப்பை அடக்கினான்.
    'அப்படியில்ல. அவருக்கு நிறைய படிக்கணும்மின்னு ஆசை. ஆனா சின்ன வயசுல முடியல. தன் ஊருல எல்லாப் பிள்ளைகளையும் படிக்க வச்சார். அப்புறம் தான் நங்களெல்லாம் சொல்லி அவரை வறுப்புறுத்தினதால விட்ட படிப்பைத் தொடர்ந்தார். அதனாலத் தான் படிக்கும் போதே இவ்வளவு வயசாயிடுச்சி."
முகத்தைக் கவலையாக வைத்து கொண்டுக் சொன்னான்.
'ப்ச்சி.... ஆமா அவரோட கொணம் எப்படி?"
அவளின் குரல் கவலையுடம் வந்தது.
    'மகா முரட்டுக்குணம். முன்கோபி. தப்புன்னு யாராவது செஞ்சா உடனே அருவா அவர் கைக்கு வந்துடும். தைரியசாளி. ஆனாலும் அன்பானவர்."
'ம்.....பாக்க எப்படி இருப்பாரு?"
    'ஒரு சுத்த வீரனுக்கு உரிய எல்லா அம்சமும் அவர்கிட்ட இருக்குது. பாக்க அவ்வளவு வயசுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. ஆனா ஒரே ஒரு விசயத்துல அவர் ரொம்ப பலகீனமானவர்."
'என்ன அது?"
'பெண்கள்."
'என்னது......பெண்கள் விசயத்துல பலகீனமா....?"
    'ஏய்....ஏய்.....தப்பா புரிஞ்சிக்காத. பொண்ணுங்களப் பாத்தால் ரொம்ப கூச்சப்படுவார். எந்தப் பொண்ணையும் நேருக்கு நேர் நின்னு பாத்து பேசமாட்டார். அதிலும் நம்ம ஊர் பொண்ணுகன்னா அவருக்கு தெய்வங்க மாதிரி! ஆமா.... நீ ஏன் இதையெல்லாம் கேக்கிற?"
எல்லாவற்றையும் சொல்லிவிட்டுக் கேள்வி கேட்டான்.
    'இன்னைக்குத்தான் என்னோட காதலை அவர் கிட்ட சொல்லப் போறேன். அதனுல தான் அவரைப் பத்தி தெரிஞ்சிக்கிலாமேன்னு....."
    'இவ்வளவும் தெரிஞ்சப் பிறகுமா உன் காதலைச் சொல்லப் போறே.....?"
'ஆமாம்."
'அறிவிருக்குதா உனக்கு?" கோபமாகக் கேட்டான்.
    'நிறைய இருக்குது. அதனாலத்தான் நான் அவரை காதலிக்கப் போறேன்."
'மீனா யோசிச்சிப் பாரு. உனக்கு அந்தத் தகுதி இருக்குதா....?"
இப்பொழுது அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
'தகுதின்னு நீங்க எதை சொல்லுறீங்க?"
    'எல்லாத்தையும் தான் சொல்லுறேன். நெனைச்சிப் பாரு. நீ இன்னைக்குப் படிக்கிறதே அவரோட தயவுலத்தான்."
    'இருக்கட்டும். நாளைக்குச் சம்பாதிச்சா திருப்பிக் கொடுத்திட போறேன்." கோபமாகச் சொன்னாள்.
    'பணத்தை உன்னால கொடுக்க  முடியும். ஆனால் நீ படித்த அந்த அறிவு அவர் போட்டப் பிச்சையில்லையா.......?"
கோபப்படாமல் சிரித்தாள்.
    'இந்த மாதிரி நீங்க யோசிக்கிறதாலத்தான் நான் உங்கள தத்துவஞானின்னு சொன்னேன். ஆனால்.....உங்களுக்கு ஒன்னுத் தெரியுமா....? என்னால என்னோட படிப்பையும் அவருக்கு திருப்பித் தர முடியும்."
'எப்படி....?"
    'அப்படி கேளுங்க. நீங்க சட்டம் படிக்கிறவர். படிச்சி முடிச்சதும் ஏதாவது ஒரு பெரிய ஊருக்குப் போய் அந்த மக்களுக்காக வாதாடுவீங்க. உழைப்பீங்க. காசு சம்பாதிப்பீங்க. ஆனா நான் கல்லூரியில சேர்ந்து விவசாயம் படிக்கப் போறேன். இன்றைய டெக்னாலேஜீயில நிறைய மாற்றங்கள் முன்னேற்றங்கள் வந்திருக்கு. படிப்பு முடிஞ்சதும் நம்ம ஊர் விவசாயத்திற்கு உதவப் போறேன். அதனுல என்னோட படிப்பு அறிவையும் அவருக்குத் திருப்பித் தர முடியும். அவ்வளவு தான்."
    தோள்களை உயர்த்திச் சிரித்துக் கொண்டே சொன்னாள். அவன் அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான். தத்துவங்கள் எல்லோருடைய வார்த்தையிலும் ஓடி விளையாடுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் சொல்லுவதே தத்துவமாகி விடுகிறது. அப்படிப் பார்த்தால் கணேசனின் பார்வைக்கு இதோ ஒரு தத்துவஞானி நின்று கொண்டு சிரிக்கின்றாள்;.
    'என்ன யோசிக்கிறீங்க? இவளை எப்படி தடுக்கலாம் என்றா....? வேண்டாம். வீண்யோசனை. ஆமாம்..... இன்னைக்குத் தானே பொது விசயமாக சக்திவேலை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்....? நான் போனால் பேசுவாரா....?"
சற்று தயக்கமாகக் கேட்டாள்.
'போய் பாரு."
    'ஆமா.... காதலைச் சொல்ல சிகப்பு ரோஜாவைத் தானே கொடுக்கணும்?"
    'அப்படித்தான் நெனைக்கிறேன். காலேஜில பேசிக்குவாங்க. ஆனா மீனா.... நீ ரோஜான்னு சொல்லி ஒரு இலைய பறிச்சி கொடுத்தா கூட நம்ம ஊர் பசங்க வாங்கிக்குவாங்க." அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.
    மீனா சிரிக்கவில்லை. சிந்தித்தாள். இந்த ஊர் இளைஞர்களுமா இப்படி? ஆனால் இதுவரை யாரும் தன்னிடம் தவறாகப் பேசியதோ.... நடந்து கொண்டதோ...இல்லையே... யோசிக்கும் பொழுது நேற்று நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெருமூச்சி விட்டாள்.
    'சரி தத்துவஞானி. நான் கிளம்புறேன். இன்னைக்கு எப்படியாவது சக்திவேலைப் பார்த்துப் பேசிடணும். அம்மா வேறத்தேடுவாங்க."
    சொல்;லிக் கொண்டே கையிலிருந்த புத்தகத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்தபடி நடந்தாள். அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கணேசன் சொன்னான்.
'சக்திவேல் நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா......" என்று.
    கணேசன் சொன்னதும் 'ரொம்ப தாங்ஸ்ண்ணா......" ஜன்னலில் இருந்து குரல் வந்தது.
கணேசன் சிரித்துக் கொண்டே கிளம்பினான்.

-தொடரும-

3 comments :

 1. வந்தது முழுவதும் படித்தேன்-இனி
  வருவதை அறியத் துடித்தேன்
  தந்தது முற்றும் தேனே-நடைத்
  தாவிக் குதிக்கும் மானே
  எந்தனைக் கவர்ந்த கதையே-என்
  இதயத்தில் முளைக்கும் விதையே
  சிந்தனை வரிகள் எங்கும்-நம்
  செந்தமிழ் சுவைமிக பொங்கும்

  சா இராமாநுசம்

  ReplyDelete
 2. வணக்கம் புலவர் சா இராமாநுசம் ஐயா!

  செந்தமிழ்ச் சுவையில் சொல்ல
  சிலந்தியாய் அமைத்தேன் வலையை!
  வந்தவர் படிப்பார் இல்லை!
  வளர்த்தாமல் நிறுத்தும் நிலையில்
  எந்தமிழ் படித்தேன் என்றே
  இதயத்தில் விதைத்தீர் விதையை!
  வந்தனைச் செய்தே நானும்
  வடிவுடன் தருவேன் கதையை!

  நன்றி.

  ReplyDelete
 3. நன்றாக இருக்கிறது. சொல் சரி பார்ப்பை நீக்கி விடுங்களேன். கருத்திட கடினமாக இருக்கிறது.

  ReplyDelete